மனித பிரச்சினைகள் விரைவில் ஒழியும்!
“சண்டை சச்சரவுகளுக்கான அடிப்படை காரணங்கள் மீது கவனம் செலுத்தும் நோக்குடன் பரந்தளவில் திட்டமிடப்பட்டு அரசியல் ஆதரவுடன் செயல்படுத்தப்படவில்லையென்றால் மனிதாபிமான முயற்சிகளுக்கு அதிக பலன் கிடைக்காது. அடிப்படையில் அரசியல் சார்ந்த பிரச்சினைகளை மனிதாபிமான முயற்சிகள் மட்டுமே தீர்த்துவிடாது என அடிக்கடி அனுபவம் காட்டியிருக்கிறது.”—உலகிலுள்ள அகதிகளின் நிலை 2000 (ஆங்கிலம்).
மனிதாபிமான முயற்சிகள் அதிகரிக்கிறபோதிலும் மனிதரின் பிரச்சினைகள் குறைந்தபாடில்லை. அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வுக்கு சாத்தியம் உள்ளதா? உண்மையை சொன்னால், சாத்தியம் மிகவும் குறைவுதான். அப்படியானால், நாம் வேறு எங்கு நோக்கலாம்? மனிதரின் எல்லா பிரச்சினைகளுக்கும் கடவுள் எவ்வாறு முடிவு கட்டுவார் என்பதை எபேசுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் தன் கடிதத்தின் ஆரம்பத்தில் அருமையாக விளக்குகிறார். இதைச் செய்வதற்கு கடவுள் பயன்படுத்தும் ஏஜன்சியையும்—இன்று நம்மை ஆட்டிப்படைக்கும் எல்லா பிரச்சினைகளுக்கான அடிப்படை காரணங்கள் மீது கவனம் செலுத்தும் ஏஜன்சியையும்—அவர் குறிப்பிடுகிறார். பவுல் சொல்வதை நாமும் ஆராய்ந்து பார்க்கலாமே! அந்தப் பகுதி எபேசியர் 1:3-10-ல் காணப்படுகிறது.
‘சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே மீண்டும் கூட்டுவதற்கு’
கடவுளுடைய நோக்கம் ‘காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தைப் [“நிர்வாகத்தைப்,” NW]’ பற்றியது என இந்த அப்போஸ்தலன் கூறுகிறார். இது எதை அர்த்தப்படுத்துகிறது? அதற்கென்று ஒரு நேரத்தை கடவுள் குறித்திருக்கிறார்; அந்த நேரம் வரும்போது ‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலத்தையும் கிறிஸ்துவுக்குள்ளே [“மீண்டும்,” NW] கூட்டுவதற்கு’ அவர் செயல்படுவார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. (எபேசியர் 1:9) பரலோகத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் ஒத்திசைவுடன் தமது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதற்கான ஏற்பாட்டை கடவுள் ஆரம்பித்துவிட்டார். ‘மீண்டும் கூட்டுவது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள பதத்தை பைபிள் அறிஞர் ஜெ. எச். தாயர் இவ்வாறு குறிப்பிடுவது அக்கறைக்குரியது: “(இதுவரை பாவத்தால் பிளவுற்றிருந்த) எல்லாவற்றையும் எல்லாரையும் . . . தமக்காக மீண்டும் ஒன்றுகூட்டி, கிறிஸ்துவுக்குள் ஒன்றுபட்ட நிலைக்குள் கொண்டுவருகிறார்.”
கடவுள் இதைச் செய்வதற்கான அவசியத்தை அறிந்துகொள்வதற்கு, இந்தப் பிளவு முதலில் எப்படி ஏற்பட்டது என்பதை நாம் ஆராய வேண்டும். மனித சரித்திரத்தின் ஆரம்பத்தில் நம்முடைய ஆதி பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு விரோதமாக கலகம் செய்து பிசாசாகிய சாத்தானை பின்பற்றினர். எது நல்லது எது கெட்டது என்பதை தாங்களே தீர்மானிக்கும் உரிமை என்ற உருவில் சுதந்திரத்தைப் பெற விரும்பினர். (ஆதியாகமம் 3:1-5) தெய்வீக நீதியின்படி, அவர்கள் கடவுளுடைய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர், அவருடைய கூட்டுறவையும் இழந்தனர். அவர்கள் மனிதகுலத்தை அபூரணத்திற்குள் தள்ளிவிட்டனர், இதுவே இன்று நாம் அனுபவிக்கும் பயங்கரமான விளைவுகள் அனைத்திற்கும் காரணம்.—ரோமர் 5:12.
பொல்லாங்குக்கு தற்கால அனுமதி
‘அப்படி செய்ய அவர்களை ஏன் கடவுள் அனுமதித்தார்?’ என சிலர் கேட்கலாம். ‘அவருடைய மகா வல்லமையை பயன்படுத்தியும் அவருடைய சித்தத்தை அமல்படுத்தியும் இன்றைக்கு நாம் அனுபவிக்கும் எல்லா கஷ்டங்களையும் ஏன் தடுக்கவில்லை?’ இப்படி சிந்திப்பது இயல்பாக இருக்கலாம். ஆனால் அவ்வாறு மாபெரும் வல்லமையை உபயோகிப்பது உண்மையில் எதை நிரூபிக்கும்? அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதிர்ப்பு தலைதூக்கும் மறு விநாடியே அதை ஒழித்துக் கட்டுகிற ஒருவரை நீங்கள் பாராட்டுவீர்களா அல்லது ஏற்றுக்கொள்வீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள்.
அந்தக் கலகக்காரர்கள் உண்மையில் கடவுளுடைய சர்வ வல்லமைக்கு எதிராக சவால்விடவில்லை. மிக முக்கியமாக, அவருடைய ஆளும் உரிமையையும் ஆளும் விதத்தையும் குறித்தே சவால்விட்டார்கள். இந்த அடிப்படை விவாதங்களுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு, தம்முடைய கட்டுப்பாடின்றி மனிதரே ஆட்சி செய்ய யெகோவா ஒரு குறுகிய காலத்தை அவர்களுக்கு அனுமதித்திருக்கிறார். (பிரசங்கி 3:1; லூக்கா 21:24) அந்தக் காலம் முடிவுறும்போது, இந்தப் பூமியை மீண்டும் தமது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார். அதற்குள், கடவுளுடைய ஆட்சிமுறையே பூமியின் குடிமக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும் சந்தோஷத்தையும் செழிப்பையும் தரும் என்பது தெள்ளத் தெளிவாகிவிடும். அப்போது ஒடுக்குகிறவர்கள் அனைவரும் பூமியிலிருந்து என்றென்றும் நீக்கப்படுவர்.—சங்கீதம் 72:12-14; தானியேல் 2:44.
“உலகத் தோற்றத்துக்கு முன்னே”
இவை எல்லாவற்றையும் செய்ய அவர் வெகு காலத்திற்கு முன்பே தீர்மானித்தார். இதைக் குறித்து பவுல், “உலகத் தோற்றத்துக்கு முன்னே” என குறிப்பிடுகிறார். (எபேசியர் 1:4) அவர் தீர்மானித்தது பூமியையோ ஆதாம் ஏவாளையோ படைப்பதற்கு முன்பு அல்ல. அப்போதிருந்த உலகம் “மிகவும் நன்றாயிருந்தது,” கலகமும் அப்போது தலைதூக்கவில்லை. (ஆதியாகமம் 1:31) அப்படியானால், அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட ‘உலகம்’ எது? ஆதாம் ஏவாளின் பிள்ளைகளாலான உலகம்—மீட்பை எதிர்நோக்கியிருக்கும் பாவிகளும் அபூரணருமான மனித உலகம். ஆதாமுக்கு பிள்ளைகள் பிறப்பதற்கு முன்பே, மீட்கப்படத்தக்க அவனுடைய சந்ததியாருக்கு எப்படி விடுதலை அளிப்பது என்பதை யெகோவா அறிந்திருந்தார்.—ரோமர் 8:21.
மனிதர் பிரச்சினைகளை கையாளும் விதமாகவே இப்பிரபஞ்சத்தின் பேரரசரும் கையாளுகிறார் என இது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதர்கள் நெருக்கடியான சூழ்நிலை எழலாம் என்பதை அறிந்து அதை மேற்கொள்வதற்கு என்னென்ன செய்யலாம் என நுணுக்கமாக திட்டமிடுகிறார்கள். சர்வ வல்லமையுள்ள கடவுளோ தம் நோக்கத்தை நேரடியாக அறிவித்து அதை நிறைவேற்றுகிறார். இருந்தாலும், மனிதகுலத்திற்கு நித்திய விடுதலையை அளிப்பதற்கு காரியங்களை சரிக்கட்ட யெகோவா எப்படி தீர்மானித்தார் என்பதை பவுல் விளக்குகிறார். அவை யாவை?
விடுதலை அளிப்பவர் யார்?
ஆதாமின் பாவத்தால் விளைந்த தீமையை ஒழித்துக்கட்டுவதில் கிறிஸ்துவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்களுக்கு விசேஷித்த பங்கு உண்டு என பவுல் விளக்குகிறார். இயேசுவோடு பரலோக ராஜ்யத்தில் ஆட்சி செய்ய ‘கிறிஸ்துவுக்குள் [யெகோவா] நம்மைத் தெரிந்துகொண்டார்’ என பவுல் கூறுகிறார். இதை இன்னும் விளக்கமாக, ‘நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகார புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்’ என பவுல் கூறுகிறார். (எபேசியர் 1:4, 6) உண்மையில், தனிநபர்களாக அவர்களை யெகோவா தேர்ந்தெடுக்கவுமில்லை, முன்குறிக்கவுமில்லை. இருந்தாலும், பிசாசாகிய சாத்தானும் அவனோடுகூட ஆதாம் ஏவாளும் மனித குடும்பத்திற்கு வருவித்த தீமையை ஒழித்துக்கட்டுவதில் கிறிஸ்துவுடன் சேர்ந்துகொள்ளும் உண்மையும் தெய்வ பயமுமுள்ள ஓர் வகுப்பாரை அவர் முன்குறித்தார்.—லூக்கா 12:32; எபிரெயர் 2:14-18.
இது எத்தகைய வியப்பூட்டும் விஷயம்! கடவுளுடைய அரசுரிமைக்கு எதிராக ஆரம்பத்தில் சாத்தான் விடுத்த சவாலில், கடவுளுடைய மானிட படைப்புகள் குறைபாடுள்ளவர்கள் என்பதை மறைமுகமாய் சுட்டிக்காட்டினான்; அதாவது துன்புறுத்துதலோ சோதனைகளோ வரும்போது அவர்கள் அனைவரும் கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்வார்கள் என தெரிவித்தான். (யோபு 1:7-12; 2:2-5) யெகோவா தேவன் ‘தமது மகிமையான தகுதியற்ற தயவிற்கு’ (NW) மாபெரும் வெளிக்காட்டாக, காலப்போக்கில், பாவமுள்ள ஆதாமின் குடும்பத்திலிருந்து சிலரை தம்முடைய ஆவிக்குரிய பிள்ளைகளாக தத்தெடுத்து தம் பூமிக்குரிய படைப்பின்மீது நம்பிக்கையை காட்டினார். இந்தச் சிறு வகுப்பைச் சேர்ந்தவர்கள் பரலோகத்தில் சேவை செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்படுவர். என்ன நோக்கத்திற்காக?—எபேசியர் 1:3-6; யோவான் 14:2, 3; 1 தெசலோனிக்கேயர் 4:15-17; 1 பேதுரு 1:3, 4.
கடவுள் தத்தெடுத்த இந்தக் குமாரர்கள் பரலோக ராஜ்யத்தில் ‘கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரராக’ ஆகிறார்கள் என அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (ரோமர் 8:14-17) இப்போது அனுபவிக்கும் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் மனித குடும்பத்தை விடுவிப்பதில் அரசர்களும் ஆசாரியர்களுமாக அவர்களுக்கும் ஒரு பங்கு இருக்கும். (வெளிப்படுத்துதல் 5:10) “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவ வேதனைப்படு”வது உண்மையே. இருந்தாலும், விசேஷமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுளுடைய இந்தக் குமாரர்கள் விரைவில் இயேசு கிறிஸ்துவுடன் செயலில் இறங்குவார்கள்; அப்போது கீழ்ப்படிதலுள்ள மனிதர் யாவரும் “அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு,” மறுபடியும் “தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்”வார்கள்.—ரோமர் 8:18-22.
‘மீட்கும் பொருளாலே விடுதலை’
கடவுள் தம்முடைய தகுதியற்ற தயவின் மிகச் சிறந்ததும் மேன்மையானதுமான வெளிக்காட்டின் மூலம்—இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் மூலம்—மீட்கப்படத்தக்க மனிதராலான இந்த உலகத்திற்கு இவை அனைத்தையும் வாய்க்கச் செய்திருக்கிறார். பவுல் இவ்வாறு எழுதுகிறார்: “அவருடைய தகுதியற்ற தயவின் ஐசுவரியத்தின்படியே இவருடைய [இயேசு கிறிஸ்துவுடைய] இரத்தத்தின் வாயிலாக மீட்கும் பொருளாலே விடுதலை, ஆம், பாவமன்னிப்பு இவரால் நமக்கு உண்டாயிருக்கிறது.”—எபேசியர் 1:7, NW.
கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு கிறிஸ்து முக்கிய பங்கு வகிக்கிறார். (எபிரெயர் 2:10) அவருடைய மீட்கும் பலி ஆதாமின் சந்ததியாரில் சிலரை தமது பரலோக குடும்பத்திற்கு தத்தெடுக்க யெகோவாவுக்கு சட்டப்பூர்வ ஆதாரத்தை அளித்தது. அதோடு, தமது சட்டங்கள் மற்றும் நியமங்கள் பேரிலுள்ள நம்பிக்கையை விட்டுக்கொடுக்காமல், ஆதாமின் பாவத்தால் வந்த விளைவுகளிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்கவும் முடிந்தது. (மத்தேயு 20:28; 1 தீமோத்தேயு 2:6) யெகோவா தமது நீதி வழுவாமல் இருக்கும் விதத்திலும் பரிபூரண நியாயத்தை நிறைவேற்றும் விதத்திலும் காரியங்களை செய்திருக்கிறார்.—ரோமர் 3:22-26.
கடவுளுடைய ‘பரிசுத்த இரகசியம்’
பூமியைக் குறித்த தம் நோக்கத்தை எப்படி துல்லியமாக நிறைவேற்றுவார் என்பதை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு கடவுள் வெளிப்படுத்தவில்லை. பொ.ச. முதல் நூற்றாண்டில் “அவர் தம்முடைய சித்தத்தின் பரிசுத்த இரகசியத்தை [கிறிஸ்தவர்களுக்குத்] தெரியப்படுத்தினார்.” (எபேசியர் 1:9, NW) கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு கிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டுள்ள மகத்தான பங்கை பவுலும் அபிஷேகம் பண்ணப்பட்ட சக கிறிஸ்தவர்களும் தெளிவாக புரிந்துகொண்டார்கள். கிறிஸ்துவோடு பரலோக ராஜ்யத்தில் தாங்கள் உடன் சுதந்திரராக விசேஷித்த பங்கை கொண்டிருப்பார்கள் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள். (எபேசியர் 3:3, 6, 8-11) இயேசு கிறிஸ்துவாலும் அவரது உடன் ஆட்சியாளர்களாலும் ஆளப்படும் ராஜ்ய அரசாங்கமே கடவுள் பயன்படுத்தும் ஏஜன்சி. பரலோகத்தில் மட்டுமல்ல, பூமியிலும் நித்திய சமாதானத்தைக் கொண்டுவர கடவுள் அதையே பயன்படுத்துவார். (மத்தேயு 6:9, 10) இதன் மூலம், பூமியைக் குறித்த தம்முடைய ஆதி நோக்கத்தை யெகோவா மீண்டும் நிலைநாட்டுவார்.—ஏசாயா 45:18; 65:21-23; அப்போஸ்தலர் 3:21.
எல்லாவித ஒடுக்குதலையும் அநீதியையும் பூமியிலிருந்து நீக்கிப்போடுவதற்கு அவர் நேரடியாக நடவடிக்கை எடுப்பதற்கான குறிக்கப்பட்ட காலம் வெகு சமீபம். சொல்லப்போனால், பொ.ச. 33 பெந்தெகொஸ்தே முதற்கொண்டே திரும்ப நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை யெகோவா ஆரம்பித்து விட்டார். எப்படி? அது முதற்கொண்டு, ‘பரலோகத்திலிருக்கிறவைகளை’ அதாவது, பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்யப் போகிறவர்களை கூட்டிச் சேர்க்க ஆரம்பித்தார். எபேசிய கிறிஸ்தவர்களும் அதன் பாகமாக இருந்தனர். (எபேசியர் 2:4-7) நம்முடைய காலத்தில், ‘பூலோகத்திலிருக்கிறவைகளை’ யெகோவா கூட்டிச் சேர்த்து வருகிறார். (எபேசியர் 1:9) உலகளாவிய பிரசங்கிப்பு ஏற்பாட்டின் மூலமாக, இயேசு கிறிஸ்துவினால் ஆளப்படும் தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றிய நற்செய்தியை எல்லா தேசத்தாருக்கும் அவர் தெரியப்படுத்துகிறார். அதை ஏற்றுக்கொள்பவர்கள் ஆவிக்குரிய பாதுகாப்பும் சுகப்படுத்தலும் கிடைக்கும் ஓர் இடத்திற்கு இப்பொழுதும்கூட கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். (யோவான் 10:16) வெகு விரைவில், சுத்தமாக்கப்பட்ட ஒரு பரதீஸிய பூமியில் எல்லாவித அநீதியிலிருந்தும் துயரத்திலிருந்தும் விடுபட்ட வாழ்க்கையை அவர்கள் அனுபவிப்பார்கள்.—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 11:18.
ஒடுக்கப்படும் மனிதருக்கு உதவ எடுக்கப்படும் மனிதாபிமான முயற்சிகளில் “மலைக்க வைக்கும் அளவுக்கு முன்னேற்றம்” செய்யப்பட்டுள்ளது. (உலகிலுள்ள பிள்ளைகளின் நிலை 2000 [ஆங்கிலம்]) ஆனால் கிறிஸ்து இயேசுவும் பரலோக ராஜ்ய அரசாங்கத்தில் அவருடன் ஆளுகை செய்யும் ஆட்சியாளர்களும் வெகு விரைவில் எடுக்கும் நடவடிக்கையே அதைவிட மலைக்கவைக்கும் நடவடிக்கையாகும். சண்டை சச்சரவுகளுக்கும் நம்மை ஆட்டிப்படைக்கும் மற்ற எல்லா பொல்லாங்குகளுக்கும் அடிப்படையான எல்லா காரணங்களுக்கும் அவர்கள் முற்றிலும் முடிவு கட்டுவார்கள். மனிதரின் எல்லா பிரச்சினைகளையும் அவர்கள் ஒழித்துக்கட்டுவார்கள்.—வெளிப்படுத்துதல் 21:1-4.
[பக்கம் 4-ன் படங்கள்]
மனிதாபிமான முயற்சிகள் மனிதரின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை
[பக்கம் 6-ன் படம்]
கிறிஸ்துவின் மீட்கும் பலி மனிதகுலத்திற்கு ஆதாமின் பாவத்திலிருந்து விடுதலையை அளித்தது
[பக்கம் 7-ன் படம்]
இன்று ஆவிக்குரிய பாதுகாப்பையும் சுகப்படுத்தலையும் பெறுவது சாத்தியமே
[பக்கம் 7-ன் படங்கள்]
விரைவில், மேசியானிய ராஜ்யத்தின் மூலம் பிரச்சினைகளிலிருந்து முழு விடுதலை