நீங்கள் நிஜமாகவே பொறுத்துப் போகிறீர்களா?
ஒருவருடைய தவறான நடத்தையைக் கண்டு எப்போதாவது உங்கள் மனம் பொருமியிருக்கிறதா? உங்கள் நெருங்கிய கூட்டாளிகளை கெட்ட செல்வாக்குகள் கடுமையாக பாதிக்கையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா?
மோசமான பாவம் பரவுவதை நிறுத்த சிலநேரங்களில் உடனடியாகவும் உறுதியாகவும் நடவடிக்கை எடுப்பது அவசியம். உதாரணமாக, பொ.ச.மு. 15-ம் நூற்றாண்டில், இஸ்ரவேலர் துணிந்து தவறுகளை செய்து தங்களை கறைப்படுத்தும் அபாயத்தில் இருந்தனர். தவறானதை தங்கள் மத்தியிலிருந்து எடுத்துப்போட ஆரோனின் பேரனாகிய பினெகாஸ் உடனடியாக தீர்வான நடவடிக்கை எடுத்தார். யெகோவா தேவன் அவர் செய்ததை அங்கீகரித்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.”—எண்ணாகமம் 25:1-11.
அந்த பாவம் பரவுவதைத் தடுக்க பினெகாஸ் தக்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் மற்றவர்களுடைய சிறுசிறு தவறுகளைக் கண்டு கட்டுப்பாடின்றி பொங்கி எழுவதைப் பற்றியென்ன? நாம் அவசரப்பட்டோ நியாயமான காரணம் இல்லாமலோ செயல்பட்டால், நீதியைக் கட்டிக்காப்பவர் என்று அறியப்படுவதற்கு மாறாக, மற்றவர்களுடைய அபூரணங்களுக்கு கொஞ்சமும் இடங்கொடுக்காத சகிப்புத்தன்மையற்ற நபர் என்ற பெயரெடுப்போம். இந்த வலையில் சிக்குவதை எப்படி தவிர்க்கலாம்?
யெகோவா ‘உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார்’
யெகோவா “வைராக்கியமுள்ள (பற்றார்வமுள்ள) கடவுள்; தம்முடன் போட்டியிடுவதைப் பொறுக்காத கடவுள்.” (யாத்திராகமம் 20:5, NW அடிக்குறிப்பு) சிருஷ்டிகராய் இருக்கிற காரணத்தால், நம்மிடமிருந்து தனிப்பட்ட பக்தியைக் கேட்க அவருக்கு உரிமை உண்டு. (வெளிப்படுத்துதல் 4:11) அப்படியிருந்தும், யெகோவா மனித பலவீனங்களைப் பொறுத்துக்கொள்கிறார். அதனால்தான் சங்கீதக்காரன் தாவீது அவரைப் பற்றி இவ்வாறு பாடினார்: “கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்து கொள்ளார் [“குறை கண்டுகொண்டே இருக்க மாட்டார்,” NW]; . . . அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.” நாம் மனந்திரும்பினால், கடவுள் ‘நம் அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிறார்.’—சங்கீதம் 103:3, 8-10.
மனிதருடைய பாவமுள்ள இயல்பை அவர் புரிந்துகொள்வதால், தவறுசெய்தவர்கள் மனந்திரும்பும்போது யெகோவா “குறை கண்டுகொண்டே” இருப்பதில்லை. (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) சொல்லப்போனால், பாவத்தையும் அபூரணத்தையும் ஒழிப்பதே அவருடைய நோக்கம். அது நிறைவேறும் வரையிலும், ‘நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமல்,’ இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் அடிப்படையில் கடவுள் தயவாக மன்னிக்கிறார். பொருத்தமான சந்தர்ப்பங்களில் யெகோவா இரக்கம் காட்டாவிட்டால் ஒருவருமே தப்பிப்பிழைக்க தகுதி பெற மாட்டோம். (சங்கீதம் 130:3) உரிமையுடன் தனிப்பட்ட பக்தியைக் கேட்கும் நம் பரலோக தகப்பன் இரக்கமுள்ள கடவுளாய் இருப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்!
சமநிலை தேவை
இப்பிரபஞ்சத்தின் ஈடற்ற பேரரசர், அபூரண மனிதரிடம் சகிப்புத்தன்மையைக் காண்பிக்கும்போது, நாமும் அதேபோல் நடந்துகொள்ள வேண்டாமா? சகிப்புத்தன்மை என்பது, மற்றவர்களுடைய கருத்துக்கள் அல்லது பழக்கவழக்கங்களை பொறுத்துக்கொள்ளும் மனநிலை என்பதாக விளக்கப்படுகிறது. தனிப்பட்டவர்களாக நமக்கு அப்படிப்பட்ட மனநிலை இருக்கிறதா? பெரிய பாவத்துக்குரிய செயல்களாக இல்லையென்றாலும் ஒருவேளை சொல்லில் அல்லது செயலில் பொருத்தமற்ற எதையாவது மற்றவர்கள் சொல்லும்போதும் செய்யும்போதும் அவற்றை தாங்கிக்கொண்டு பொறுத்துப்போகும் மனச்சாய்வு நமக்கு இருக்கிறதா?
அளவுக்கு அதிகமாக பொறுத்துக்கொள்வதையும் நாம் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, சிறுவர் சிறுமியருக்கு தொடர்ந்து பாலின தொல்லைகளை கொடுத்து துர்ப்பிரயோகம் செய்யும் பாதிரிமார்களை மத அதிகாரிகள் பொறுத்துக்கொள்வதால் பெரும் கேடு விளைகிறது. “இந்த பிள்ளைகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை தற்செயலாக நிகழ்ந்துவிட்ட பாவச் செயல்களாக கருதி, சர்ச் அதிகாரிகள், தவறு செய்த பாதிரியை வெறுமனே [மற்றொரு இடத்துக்கு] மாற்றம் செய்தார்கள்” என்பதாக அயர்லாந்திலுள்ள ஒரு நிருபர் குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட ஒரு மனிதனை இடமாற்றம் செய்வது சரியான சகிப்புத்தன்மைக்கு எடுத்துக்காட்டாகவா இருக்கிறது? நிச்சயமாக இல்லை! நோயாளிகள் உயிரிழக்கவோ ஊனமடையவோ காரணமாக இருக்கும் பொறுப்புணர்ச்சியற்ற அறுவை மருத்துவரை ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொன்றுக்கு என மாற்றம் செய்து மருத்துவ குழு அவரை தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்ய அனுமதித்து வருவதாக வைத்துக்கொள்வோம். இப்படி தவறான வகையில் தொழில் பற்றுறுதியை காத்துக்கொள்வதால் தவறான “சகிப்புத்தன்மையை” அது காண்பிக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட அசட்டையான பழக்கங்களின் காரணமாகவோ குற்றங்களின் காரணமாகவோ உயிரிழந்தவர்கள் அல்லது மோசமாக பாதிக்கப்பட்டவர்களின் நிலை?
மிகக் குறைந்தளவு சகிப்புத்தன்மையை காண்பிக்கும் அபாயமும் இருக்கிறது. இயேசு பூமியில் இருந்தபோது, ஸெலட்டுகள் எனப்பட்ட யூத மத வெறியர்கள் சிலர் தங்களுடைய நடவடிக்கைகளை சரியென நியாயப்படுத்த பினெகாஸின் உதாரணத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றனர். ஸெலட்டுகளின் வெறித்தனமான செயல்களில் ஒன்று: “எருசலேமில் பண்டிகைகளும் அதுபோன்ற மற்ற நிகழ்ச்சிகளும் நடக்கும்போது கூட்டத்தோடு கூட்டமாக புகுந்து தங்கள் விரோதிகளை திடீரென கத்திகளால் குத்திவிடுவது.”
நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதால், ஸெலட்டுகளைப் போல நமக்குப் பிடிக்காதவர்களை சரீரப்பிரகாரமாய் தாக்கும் அளவுக்கு சென்றுவிடமாட்டோம். ஆனாலும் சற்று பொறுத்துக்கொள்ள முடியாததால் அவர்களை வேறு வழிகளில் தாக்குகிறோமா? ஒருவேளை அவர்களைப் பற்றி பழிதூற்றிப் பேசுகிறோமா? உண்மையிலேயே சகிப்புத்தன்மை உள்ளவர்களாய் இருந்தால், அவ்வாறு புண்படுத்தும் விதத்தில் பேச மாட்டோம்.
சகிப்புத்தன்மையற்றவர்களுக்கு இன்னுமொரு உதாரணம் முதல் நூற்றாண்டு பரிசேயர். அவர்கள் எப்போதும் மற்றவர்களை கண்டனம் செய்தனர்; மனித அபூரணத்திற்கு கொஞ்சமும் இடம்கொடுக்கவில்லை. அகம்பாவமுள்ள பரிசேயர் சாதாரண மக்களை தாழ்வாக நோக்கினார்கள். “சபிக்கப்பட்டவர்கள்” என அவர்களை இழிவாக பேசினார்கள். (யோவான் 7:49) நல்ல காரணத்துடன்தான் இயேசு இந்த சுயநீதிமான்களை இவ்வாறு கண்டித்துப் பேசினார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்ய வேண்டும், அவைகளையும் விடாதிருக்க வேண்டுமே.”—மத்தேயு 23:23.
இதைச் சொன்னபோது, மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இயேசு குறைத்து பேசவில்லை. நியாயத்தன்மையுடனும் இரக்கத்துடனும் நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிக்கும்படி அதன் “விசேஷித்த” அல்லது அதிமுக்கியமான அம்சங்கள் தேவைப்படுத்தின என்பதையே அவர்களுக்கு தெளிவாக்கினார். சகிப்புத்தன்மையற்ற பரிசேயர் மத்தியிலும் ஸெலட்டுகளின் மத்தியிலும் இயேசுவும் அவருடைய சீஷர்களும் எவ்வளவு வித்தியாசப்பட்டவர்களாய் விளங்கினர்!
யெகோவா தேவனோ இயேசு கிறிஸ்துவோ தவறை பொறுத்துக்கொள்வதில்லை. விரைவில், ‘தேவனை அறியாதவர்களுக்கும் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினை செலுத்தப்படும்.’ (2 தெசலோனிக்கேயர் 1:6-10) இயேசு நீதியினிமித்தம் வைராக்கியமாக இருக்கிறார். என்றாலும், சரியானதை செய்ய விரும்புவோரிடம் தம்முடைய தந்தைக்கு இருக்கும் அன்பும் பொறுமையும் இரக்கமும் கலந்த கரிசனையை இவரும் காட்ட ஒருபோதும் தவறுவதில்லை. (ஏசாயா 42:1-3; மத்தேயு 11:28-30; 12:18-21) இயேசு நமக்கு என்னே சிறந்த முன்மாதிரி!
பொறுமையுடன் ஒருவரையொருவர் தாங்கிக்கொள்ளுங்கள்
சரியானதை செய்ய நமக்கு மிகுந்த வைராக்கியம் இருந்தாலும் அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையை பின்பற்றுவோமாக: “ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (கொலோசெயர் 3:13; மத்தேயு 6:14, 15) இந்த அபூரண உலகில் மற்றவர்களுடைய குற்றங்குறைகளையும் தவறுகளையும் பொறுத்துக்கொள்வதையே சகிப்புத்தன்மை தேவைப்படுத்துகிறது. நாம் மற்றவர்களிடம் நியாயமான எதிர்பார்ப்புகளை வைத்திருக்க வேண்டும்.—பிலிப்பியர் 4:5, NW.
பொறுத்துக்கொள்வது என்பது தவறு செய்வதை ஏற்றுக்கொள்வதையோ தவறுகளைக் கண்டும்காணாமல் விட்டுவிடுவதையோ எவ்விதத்திலும் அர்த்தப்படுத்துவதில்லை. உடன் விசுவாசி ஒருவரின் சிந்தனையிலோ நடத்தையிலோ ஏதோவொரு சிறிய அம்சம் யெகோவாவின் தராதரங்களுக்கு இசைவாக இல்லாமற்போகலாம். கடவுளால் ஏற்கப்படாமல் போகும் அளவுக்கு அவ்வளவு கடுமையானதாக அது இருக்காது. சிறிய பிழையாகவே இருக்கலாம். இருந்தாலும் ஏதோ சரிப்படுத்துதல் தேவை என்ற எச்சரிப்பின் அறிகுறியாக அது அமையக்கூடும். (ஆதியாகமம் 4:6, 7) ஆவிக்குரிய தகுதி உடையவர்கள் தவறுசெய்பவரை சாந்தமாக சரிப்படுத்த முயல்வது எவ்வளவு அன்பான செயலாக இருக்கும்! (கலாத்தியர் 6:1) என்றாலும் இந்த முயற்சியில் வெற்றிபெற, குறைகாணும் மனநிலையுடன் செயல்படுவதற்கு மாறாக அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.
“சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்”
வித்தியாசப்பட்ட மத கருத்துகளை உடையவர்களிடம் பொறுமையாய் நடந்துகொள்வதெப்படி? 1831-ல் அயர்லாந்தில் நிறுவப்பட்ட அனைத்து தேசிய பள்ளிகளிலும் மாட்டிவைக்கப்பட்ட “பொது பாடம்” ஒன்று இவ்வாறு வாசிக்கிறது: “வன்முறையான முறைகளால் தன் மதத்தை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும் என்று இயேசு கிறிஸ்து உத்தேசிக்கவில்லை. . . . நம்முடையதே சரி என்றும் அவர்களுடையது தவறு என்றும் உணர்த்த அயலாரிடம் சண்டைபோட்டு கடுமையாக வாக்குவாதம் செய்வதில் பயனில்லை. அவ்வாறு செய்வது நம்மிடம் கிறிஸ்தவ தன்மை இல்லை என்றே அவர்களுக்கு உணர்த்தக்கூடும்.”
இயேசு, மக்களை கடவுளுடைய வார்த்தையிடமாக ஈர்க்கும் வகையில் போதித்தார், நடந்துகொண்டார். நாமும் அவ்விதமே செயல்பட வேண்டும். (மாற்கு 6:34; லூக்கா 4:22, 32; 1 பேதுரு 2:21) விசேஷித்த உட்பார்வையை கடவுளிடமிருந்து பெற்றிருந்த பரிபூரண மனிதனாக இருந்ததன் காரணமாக, மற்றவர்களின் இருதயங்களில் என்ன இருந்தது என்பதை அவரால் உணர முடிந்தது. எனவேதான், தேவைப்பட்டபோதெல்லாம், யெகோவாவின் சத்துருக்களிடம் இயேசுவால் கடுமையான கண்டனங்களை அறிவிக்க முடிந்தது. (மத்தேயு 23:13-33) அதற்காக அவரை சகிப்புத்தன்மையற்றவர் என்று சொல்லிவிட முடியாது.
நாமோ இயேசுவைப் போலில்லை. மற்றவர்களுடைய இருதயத்தின் நினைவுகளை நம்மால் தெரிந்துகொள்ள முடியாது. ஆகவே நாம் அப்போஸ்தலன் பேதுருவின் அறிவுரையைப் பின்பற்ற வேண்டும்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் [“ஆழ்ந்த மரியாதையோடும்,” NW] உத்தரவுசொல்ல [“அதை ஆதரித்து பேச,” NW] எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) யெகோவாவின் ஊழியர்களாக இருக்கும் நாம், நம் நம்பிக்கையை ஆதரித்து பேசுவது அவசியம். ஏனென்றால், நம் நம்பிக்கை முழுமையாக கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாக கொண்டதே. ஆனாலும், மற்றவர்களையும் அவர்கள் உண்மையில் நம்புகிறவற்றையும் அவமதிக்காமல் இதைச் செய்ய வேண்டும். பவுல் இவ்வாறு எழுதினார்: “அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.”—கொலோசெயர் 4:6.
பிரபலமான மலைப் பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) ஆகவே நாம் பொறுமையுடன் ஒருவரையொருவர் தாங்கிக் கொண்டு, நற்செய்தியை யாரிடம் பிரசங்கிக்கிறோமோ அவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வோமாக. நீதிக்கான வைராக்கியத்தை பைபிள் அடிப்படையிலான சகிப்புத்தன்மையோடு சமநிலையாக காட்டுவதன் மூலம் நாம் யெகோவாவை மகிழ்வித்து நிஜமாகவே பொறுத்துப்போகிறவர்களாய் இருப்போம்.
[பக்கம் 23-ன் படம்]
பரிசேயரின் சகிப்புத்தன்மையற்ற மனநிலையை தவிர்த்துவிடுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
இயேசு தம் தந்தையின் சகிப்புத்தன்மையை பிரதிபலித்தார். நீங்கள்?