மத்தேயு எழுதியது
11 இயேசு தன்னுடைய 12 சீஷர்களுக்கு அறிவுரைகளைக் கொடுத்து முடித்த பின்பு, சுற்றியுள்ள நகரங்களில்+ கற்பிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும் அங்கிருந்து புறப்பட்டுப் போனார்.
2 கிறிஸ்து செய்ததையெல்லாம் சிறையிலிருந்த யோவான்+ கேள்விப்பட்டார்; அதனால், தன்னுடைய சீஷர்களை அவரிடம் அனுப்பி,+ 3 “வரவேண்டியவர் நீங்கள்தானா அல்லது வேறொருவரையும் நாங்கள் எதிர்பார்க்க வேண்டுமா?”+ என்று கேட்டார். 4 அதற்கு இயேசு அந்தச் சீஷர்களிடம், “நீங்கள் கேட்பதையும் பார்ப்பதையும் யோவானிடம் போய்ச் சொல்லுங்கள்:+ 5 பார்வை இல்லாதவர்கள் பார்க்கிறார்கள்,+ நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள், தொழுநோயாளிகள் சுத்தமாகிறார்கள்,+ காது கேட்காதவர்கள் கேட்கிறார்கள், இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நல்ல செய்தி சொல்லப்படுகிறது;+ 6 எந்தச் சந்தேகத்துக்கும் இடம் கொடுக்காமல் என்னை நம்புகிறவன்*+ சந்தோஷமானவன்” என்று சொன்னார்.
7 அவர்கள் திரும்பிப் போன பின்பு, இயேசு அந்தக் கூட்டத்தாரிடம் யோவானைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்; அவர்களிடம், “எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்?+ காற்றில் அசைந்தாடும் நாணலையா?+ 8 இல்லையென்றால், வேறு எதைப் பார்க்கப் போனீர்கள்? விலை உயர்ந்த* உடை உடுத்திய மனுஷனையா? விலை உயர்ந்த உடை உடுத்தியவர்கள் ராஜாக்களுடைய அரண்மனைகளில்தானே இருக்கிறார்கள்! 9 இல்லையென்றால், வேறு எதற்காகப் போனீர்கள்? ஒரு தீர்க்கதரிசியைப் பார்ப்பதற்காகவா? ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு தீர்க்கதரிசியைவிட மேலானவரைப் பார்க்கவே போனீர்கள்.+ 10 ‘இதோ! நான் என்னுடைய தூதுவரை* உனக்கு* முன்னால் அனுப்புகிறேன், அவர் உனக்கு முன்னால் போய் உன் பாதையைத் தயார்படுத்துவார்!’+ என்று இவரைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது. 11 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷராகப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகரைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை; ஆனால், பரலோக அரசாங்கத்தில் தாழ்ந்தவராக இருக்கிறவர் அவரைவிட உயர்ந்தவராக இருக்கிறார்.+ 12 யோவான் ஸ்நானகரின் காலத்திலிருந்து இன்றுவரை, பரலோக அரசாங்கமே மக்கள் தீவிரமாக அடைய முயலுகிற லட்சியமாக இருக்கிறது; அப்படித் தீவிரமாக அடைய முயலுகிறவர்கள் அதை அடைகிறார்கள்.*+ 13 ஏனென்றால், தீர்க்கதரிசனப் புத்தகங்களும் சரி, திருச்சட்டமும் சரி, யோவானின் காலம்வரை தீர்க்கதரிசனங்களை அறிவித்தன.+ 14 ‘வரவேண்டிய எலியா’+ அவர்தான் என்பதை ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். 15 காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்.+
16 இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்?+ சந்தையில் உட்கார்ந்திருக்கிற பிள்ளைகளுக்கு ஒப்பிடுவேன்; அவர்கள் தங்களோடு விளையாடுகிற பிள்ளைகளைப் பார்த்து, 17 ‘உங்களுக்காகக் குழல் ஊதினோம், ஆனால் நீங்கள் நடனம் ஆடவில்லை; புலம்பி அழுதோம், ஆனால் நீங்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு அழவில்லை’ என்று சொல்கிறார்கள். 18 அதேபோல், யோவான் சாப்பிடவும் இல்லை, குடிக்கவும் இல்லை;+ ஆனாலும், அவருக்கு ‘பேய் பிடித்திருக்கிறது’ என்று மக்கள் சொல்கிறார்கள்; 19 மனிதகுமாரனோ சாப்பிடுகிறார், குடிக்கிறார்;+ இருந்தாலும் மக்கள் அவரை, ‘பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’+ என்று சொல்கிறார்கள். ஆனால், ஒருவர் செய்கிற நீதியான செயல்கள்* அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்”+ என்றார்.
20 அவர் எந்த நகரங்களில் பெரும்பாலான அற்புதங்களைச் செய்திருந்தாரோ அந்த நகரங்களில் இருந்தவர்கள் திருந்தவில்லை,+ அதனால் அவர்களை அவர் கண்டித்து, 21 “கோராசினே, உனக்குக் கேடுதான் வரும்! பெத்சாயிதாவே, உனக்குக் கேடுதான் வரும்! உங்களுடைய நகரங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அங்கிருக்கிறவர்கள் எப்போதோ துக்கத் துணியை* உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனம் திருந்தியிருப்பார்கள்.+ 22 அதனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் தீருவுக்கும் சீதோனுக்கும்+ கிடைக்கும் தண்டனையைவிட உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும்.+ 23 கப்பர்நகூமே,+ நீ வானம்வரை உயர்த்தப்படுவாய் என்றா நினைக்கிறாய்? நீ கல்லறைவரை தாழ்த்தப்படுவாய்;+ உன்னுடைய நகரத்தில் செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமில் செய்யப்பட்டிருந்தால், அந்த நகரம் இன்றுவரை இருந்திருக்கும். 24 அதனால், நியாயத்தீர்ப்பு நாளில், சோதோம் நகரத்துக்குக் கிடைக்கும் தண்டனையைவிட உனக்குக் கிடைக்கும் தண்டனை பயங்கரமாக இருக்கும் என்று நான் உனக்குச் சொல்கிறேன்”+ என்றார்.
25 பின்பு இயேசு, “தகப்பனே, பரலோகத்துக்கும் பூமிக்கும் எஜமானே, எல்லார் முன்னாலும் நான் உங்களைப் புகழ்கிறேன்; ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் ஞானிகளுக்கும் அறிவாளிகளுக்கும் மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.+ 26 தகப்பனே, அப்படிச் செய்வதுதான் உங்களுடைய விருப்பமாக இருந்தது” என்று சொன்னார். 27 பின்பு அவர், “என் தகப்பன் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்;+ தகப்பனைத் தவிர வேறு யாருக்கும் மகனை முழுமையாகத் தெரியாது;+ மகனுக்கும், மகன் யாருக்கு அவரை வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தவிர வேறு யாருக்கும் தகப்பனை முழுமையாகத் தெரியாது.+ 28 உழைத்துக் களைத்துப்போனவர்களே,* பாரமான சுமையைச் சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுப்பேன். 29 நான் சாந்தமும்+ மனத்தாழ்மையுமாக+ இருக்கிறேன்; அதனால் என் நுகத்தடியை* உங்கள் தோள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்;* அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். 30 ஏனென்றால், என்னுடைய நுகத்தடி மென்மையாகவும்* என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று சொன்னார்.