பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!
‘எவரும், உங்களுக்குப் பரிசு கிடைக்காமல் செய்துவிட அனுமதிக்காதீர்கள்.’—கொலோ. 2:18.
1, 2. (அ) கடவுளுடைய ஊழியர்கள் என்ன பரிசைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள்? (ஆ) பரிசின் மீது நம் கண்களைப் பதிய வைக்க எது நமக்கு உதவும்? (ஆரம்பப் படம்)
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு அருமையான எதிர்பார்ப்பு இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, ‘கடவுள் கொடுக்கிற பரலோக அழைப்பு என்ற பரிசைப் பெற்றுக்கொள்ள’ அவர்கள் காத்திருக்கிறார்கள்; அதாவது, பரலோக வாழ்க்கைக்காகக் காத்திருக்கிறார்கள். (பிலி. 3:14) இயேசு கிறிஸ்துவோடு சேர்ந்து அவர்கள் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார்கள். மனிதர்கள் பரிபூரணமாவதற்கு அவர்கள் இயேசுவோடு சேர்ந்து உதவி செய்வார்கள். (வெளி. 20:6) இது எப்பேர்ப்பட்ட அருமையான எதிர்பார்ப்பு! வேறே ஆடுகளோ வேறொரு பரிசைப் பெறுவதற்காகக் காத்திருக்கிறார்கள். பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இது எவ்வளவு சந்தோஷமான ஒரு எதிர்பார்ப்பு!—2 பே. 3:13.
2 உண்மையோடு இருக்கவும் பரிசைப் பெறவும் பரலோக நம்பிக்கையுள்ள சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்ய பவுல் விரும்பினார். அதனால், “பரலோகத்துக்குரிய காரியங்கள் மீதே உங்கள் மனதைப் பதிய வையுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (கொலோ. 3:2) பரலோகத்தில் வாழும் அருமையான எதிர்பார்ப்பின் மீதே அவர்கள் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. (கொலோ. 1:4, 5) பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே யெகோவா தரும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். பரிசின் மீது தங்கள் கண்களைப் பதிய வைக்க அது உதவும்.—1 கொ. 9:24.
3. பவுல் எதைப் பற்றி கிறிஸ்தவர்களை எச்சரித்தார்?
3 பரிசைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் சில ஆபத்துகளைப் பற்றியும் பவுல் கிறிஸ்தவர்களை எச்சரித்தார். உதாரணத்துக்கு, போலி கிறிஸ்தவர்களைப் பற்றி கொலோசெயில் இருந்தவர்களுக்கு அவர் எழுதினார். அந்தப் போலி கிறிஸ்தவர்கள், கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதற்குப் பதிலாக, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் கடவுளைப் பிரியப்படுத்த முயற்சி செய்தார்கள். (கொலோ. 2:16-18) இன்றும், பரிசைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் ஆபத்துகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் பவுல் சொன்னார். ஒழுக்கக்கேடான ஆசைகளை எப்படித் தவிர்ப்பது, நம் குடும்பத்தாரோடு அல்லது சபையிலுள்ள சகோதர சகோதரிகளோடு பிரச்சினைகள் வரும்போது என்ன செய்வது என்றெல்லாம் அவர் விளக்கினார். பவுல் தந்த மதிப்புமிக்க அறிவுரைகள் இன்று நமக்கு உதவும். அதனால், கொலோசெ கிறிஸ்தவர்களுக்கு அன்போடு அவர் தந்த எச்சரிப்புகள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
ஒழுக்கக்கேடான ஆசைகளை அழித்துப்போடுங்கள்
4. நாம் பரிசைப் பெறுவதற்கு ஒழுக்கக்கேடான ஆசைகள் எப்படித் தடையாக இருக்கலாம்?
4 பவுல் தன் சகோதரர்களுக்கு இருந்த அருமையான எதிர்பார்ப்பைப் பற்றி ஞாபகப்படுத்திய பிறகு, “அதனால், பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி, கெட்ட ஆசை, . . . பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை அழித்துப்போடுங்கள்” என்று எழுதினார். (கொலோ. 3:5) ஒழுக்கக்கேடான ஆசைகள், யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தையும் எதிர்கால நம்பிக்கையையும் இழந்துவிடச் செய்யும் அளவுக்குப் பலமானவையாக இருக்கலாம். ஒழுக்கக்கேடான ஆசைகளுக்கு இணங்கிவிட்ட ஒரு சகோதரர், பிற்பாடு சபைக்குத் திரும்பிய பிறகு இப்படிச் சொன்னார்: ‘ரொம்ப காலம் கழிச்சுதான் எனக்கு புத்தி வந்துச்சு. ஒழுக்கக்கேடான ஆசை அந்தளவுக்கு பலமா இருந்துச்சு.’
5. ஆபத்தான சூழ்நிலைகளில் நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
5 யெகோவாவின் ஒழுக்கத் தராதரங்களை மீறும்படி செய்யும் சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்ளாதபடி நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, கல்யாணம் செய்துகொள்ளும் நோக்கத்தோடு பழகும் ஆணும் பெண்ணும், தொடுவது, முத்தம் கொடுப்பது, தனியாக இருப்பது போன்ற விஷயங்களில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்க வேண்டும்; ஒருபோதும் எல்லைமீறக் கூடாது. (நீதி. 22:3) வேலை விஷயமாக வெளியூர் போகும்போது அல்லது எதிர்பாலார் ஒருவரோடு வேலை செய்யும்போது, ஆபத்தான சூழ்நிலைகளில் சிக்க வாய்ப்பு இருக்கிறது. (நீதி. 2:10-12, 16) அதுபோன்ற சமயங்களில் உங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? நீங்கள் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதை மற்றவர்களிடம் சொல்லுங்கள். கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். காதல் உணர்வுகளை வெளிக்காட்டுவதுபோல் நடந்துகொள்வது ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதை மறந்துவிடாதீர்கள். சோகமாக அல்லது மனச்சோர்வாக இருக்கும்போது நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதுபோன்ற சமயங்களில் யாராவது நம்மீது அக்கறை காட்ட மாட்டார்களா என்று நாம் ஏங்கலாம்; யார் நம்மீது அக்கறை காட்டினாலும் அவரிடம் ஈர்க்கப்படும் நிலைமையில் நாம் இருக்கலாம். இது மிகவும் ஆபத்தானது. இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க யெகோவாவிடமும் சகோதர சகோதரிகளிடமும் உதவி கேளுங்கள். நீங்கள் பரிசைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் எந்தச் சூழ்நிலையையும் தவிர்த்துவிடுங்கள்.—சங்கீதம் 34:18-ஐயும் நீதிமொழிகள் 13:20-ஐயும் வாசியுங்கள்.
6. பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் நாம் எதை ஞாபகத்தில் வைக்க வேண்டும்?
6 ஒழுக்கக்கேடான ஆசைகளை அழித்துப்போட, ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்கை நாம் தவிர்க்க வேண்டும். இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான பொழுதுபோக்குகள், சோதோம் கொமோராவில் இருந்த மோசமான நிலைமையைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. (யூ. 7) இன்றைய பொழுதுபோக்குத் துறை, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதுபோல் காட்டுகிறது. அதனால், நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் இருக்கும் எல்லா பொழுதுபோக்கையும் நம்மால் அனுபவிக்க முடியாது. வாழ்வெனும் பரிசைப் பெறுவதற்குத் தடையாக இருக்கும் எந்தப் பொழுதுபோக்கையும் நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது.—நீதி. 4:23.
அன்பையும் கருணையையும் காட்டுங்கள்
7. கிறிஸ்தவ சபையில் எப்படிப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்கலாம்?
7 கிறிஸ்தவ சபையில் இருப்பதை நினைத்து நாம் சந்தோஷப்படுகிறோம். சபைக் கூட்டங்களில், நாம் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கிறோம்; ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறோம். பரிசின் மீது கண்களைப் பதியவைக்க இது உதவுகிறது. ஆனால், சகோதர சகோதரிகளுக்கு இடையில் ஏற்படும் கருத்துவேறுபாடுகளால் பிரச்சினைகள் வரலாம். அதுபோன்ற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், அது மனக்கசப்பில் போய் முடியலாம்.—1 பேதுரு 3:8, 9-ஐ வாசியுங்கள்.
8, 9. (அ) பரிசைப் பெற எந்தக் குணங்கள் நமக்கு உதவும்? (ஆ) சக கிறிஸ்தவர் ஒருவர் நம் மனதைக் காயப்படுத்திவிட்டால், நாம் எப்படி சமாதானத்தைக் காத்துக்கொள்ளலாம்?
8 நாம் பரிசைப் பெறுவதற்கு மனக்கசப்பு ஒரு தடையாக இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? கிறிஸ்தவர்களுக்கு பவுல் இப்படி ஆலோசனை கொடுத்தார்: “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்குப் பரிசுத்தமானவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்கிற நீங்கள், கனிவான பாசத்தையும் கரிசனையையும் கருணையையும் மனத்தாழ்மையையும் சாந்தத்தையும் பொறுமையையும் காட்டுங்கள். ஒருவர்மேல் ஒருவருக்கு ஏதாவது மனக்குறை இருந்தால், ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள், தாராளமாக மன்னியுங்கள். யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அன்பைக் காட்டுங்கள். எல்லாரையும் பரிபூரணமாக இணைப்பது அன்புதான்.”—கொலோ. 3:12-14.
9 அன்பு, கருணை போன்ற குணங்கள் மற்றவர்களை மன்னிப்பதற்கு நமக்கு உதவும். ஒருவேளை, சொல்லாலோ செயலாலோ ஒருவர் நம்மைக் காயப்படுத்திவிட்டால் என்ன செய்வது? அதுபோன்ற சமயங்களில், நாம் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்கலாம். அதாவது, நம்முடைய சொல்லாலோ செயலாலோ நாமும் பல தடவை மற்றவர்களைக் காயப்படுத்தியிருக்கிறோம் என்பதையும், அப்போதெல்லாம் அவர்கள் நம்மை மன்னித்திருக்கிறார்கள் என்பதையும் நினைத்துப் பார்க்கலாம். அவர்கள் நம்மிடம் காட்டிய அன்புக்காகவும் கருணைக்காகவும் நாம் நன்றியோடு இருந்தோம், இல்லையா? (பிரசங்கி 7:21, 22-ஐ வாசியுங்கள்.) உண்மை வணக்கத்தாரை ஒன்றாக இணைத்திருப்பதற்காக கிறிஸ்துவுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! (கொலோ. 3:15) நாம் எல்லாரும் ஒரே கடவுளை நேசிக்கிறோம், ஒரே செய்தியைப் பிரசங்கிக்கிறோம், கிட்டத்தட்ட ஒரே விதமான பிரச்சினைகளை எதிர்ப்படுகிறோம். நாம் ஒருவருக்கொருவர் அன்பும் கருணையும் காட்டினால்... ஒருவரை ஒருவர் மன்னித்தால்... சபையின் ஒற்றுமை அதிகமாகும். அதோடு, பரிசின் மீது கவனமாக இருக்கவும் நம்மால் முடியும்.
10, 11. (அ) பொறாமை ஏன் ஆபத்தானது? (ஆ) பரிசைப் பெறுவதற்குப் பொறாமை ஒரு தடையாக இல்லாதபடி எப்படிப் பார்த்துக்கொள்ளலாம்?
10 பொறாமை என்ற குணமும் நாம் பரிசைப் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம். அந்தக் குணம் எவ்வளவு ஆபத்தானது என்பதை பைபிள் உதாரணங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. உதாரணத்துக்கு, ஆபேல்மீது இருந்த பொறாமையால் காயீன் அவரைக் கொன்றுபோட்டான். மோசேமீது இருந்த பொறாமையால் கோராகுவும் தாத்தானும் அபிராமும் அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். தாவீதுமீது இருந்த பொறாமையால் சவுல் ராஜா அவரைக் கொலை செய்ய முயற்சி செய்தார். “பொறாமையும் பகையும் எங்கேயோ, அங்கே கலகங்களும் கீழ்த்தரமான எல்லா செயல்களும் இருக்கும்” என்று பைபிள் சொல்வது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!—யாக். 3:16.
11 உண்மையான அன்பையும் கருணையையும் காட்ட நாம் கடினமாக முயற்சி செய்தால், அவ்வளவு சீக்கிரத்தில் நாம் பொறாமைப்பட மாட்டோம். “அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 13:4) பொறாமை நமக்குள் வேர்விடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும். நம் சகோதர சகோதரிகளை சபை என்ற ஒரே உடலின் பாகங்களாகப் பார்க்க வேண்டும். “ஓர் உறுப்புக்கு மதிப்புக் கிடைத்தால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து சந்தோஷப்படும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 12:16-18, 26) அதனால், நம் சகோதரர்களில் யாருக்காவது நல்லது நடந்தால் நாமும் அவரோடு சேர்ந்து சந்தோஷப்பட வேண்டும்; அவரைப் பார்த்துப் பொறாமைப்படக் கூடாது. இந்த விஷயத்தில் சவுல் ராஜாவின் மகனான யோனத்தானுடைய அருமையான முன்மாதிரியை யோசித்துப் பாருங்கள். தனக்குப் பதிலாக தாவீதை ராஜாவாகக் கடவுள் தேர்ந்தெடுத்தபோது அவர் பொறாமைப்படவில்லை. சொல்லப்போனால், அவர் தாவீதை உற்சாகப்படுத்தினார்; அவருக்கு முழு ஆதரவு காட்டினார். (1 சா. 23:16-18) நம்மாலும் யோனத்தானைப் போலவே அன்பும் கருணையும் காட்ட முடியுமா?
குடும்பமாகப் பரிசைப் பெற்றுக்கொள்ளுங்கள்
12. குடும்பமாகப் பரிசை பெற எந்த பைபிள் ஆலோசனை உங்களுக்கு உதவும்?
12 குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் பைபிள் நியமங்களின்படி வாழ்ந்தால் சமாதானத்துக்கும் சந்தோஷத்துக்கும் பஞ்சமே இருக்காது. அதோடு, அப்படிப்பட்ட ஒரு குடும்பம் நிச்சயம் பரிசைப் பெற்றுக்கொள்ளும். குடும்பங்களுக்கு இந்த ஞானமான ஆலோசனையை பவுல் கொடுத்தார்: “மனைவிகளே, உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; இதுவே நம் எஜமானைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஏற்றது. கணவர்களே, உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள், அவளிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள். பிள்ளைகளே, உங்கள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எல்லா விஷயத்திலும் கீழ்ப்படிந்து நடங்கள். இதுதான் நம் எஜமானுக்குப் பிரியமானது. அப்பாக்களே, உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் உண்டாக்காதீர்கள்; அவர்கள் சோர்ந்துபோவார்கள்.” (கொலோ. 3:18-21) பவுல் கொடுத்த இந்த ஆலோசனை உங்கள் குடும்பத்துக்குப் பிரயோஜனமாக இருக்கிறதா?
13. தன் கணவர் யெகோவாவை வணங்குவதற்கு ஒரு கிறிஸ்தவ சகோதரி எப்படி உதவலாம்?
13 உங்கள் கணவர் யெகோவாவை வணங்காதவரா? உங்களுக்குத் தர வேண்டிய மரியாதையை அவர் தரவில்லை என்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை, நீங்கள் கோபப்பட்டு அவரோடு வாக்குவாதம் செய்யலாம். அப்படிச் செய்தால் நிலைமை சரியாகிவிடுமா? அந்த வாக்குவாதத்தில் வேண்டுமானால் நீங்கள் ஜெயிக்கலாம்; ஆனால் நீங்கள் அப்படி நடந்துகொள்வது சரியாக இருக்குமா? யெகோவாவை வணங்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு வருமா? கஷ்டம்தான்! குடும்பத்துக்கு அவர்தான் தலைவர் என்பதால் அவருக்கு மதிப்புக் கொடுங்கள். அப்படிச் செய்தால், நீங்கள் யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பீர்கள்; உங்கள் குடும்பத்திலும் சமாதானம் பெருகும். உங்கள் நல்ல நடத்தையைப் பார்த்து அவரும் யெகோவாவை வணங்க ஆசைப்படலாம். அப்போது, நீங்கள் இருவரும் சேர்ந்தே பரிசைப் பெற்றுக்கொள்ளலாம்!—1 பேதுரு 3:1, 2-வாசியுங்கள்.
14. யெகோவாவை வணங்காத தன்னுடைய மனைவி தனக்கு மரியாதை தரவில்லை என்றால் ஒரு கிறிஸ்தவ கணவர் என்ன செய்ய வேண்டும்?
14 உங்கள் மனைவி யெகோவாவை வணங்காதவரா? அவர் உங்களுக்குத் தர வேண்டிய மரியாதையைத் தருவதில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? குடும்பத்துக்கு யார் தலைவர் என்பதைக் காட்டுவதற்காக உங்கள் மனைவியிடம் கூச்சல் போடுவீர்களா? நீங்கள் அப்படிச் செய்தால் அவர் உங்களுக்கு மரியாதை தந்துவிடுவாரா? நிச்சயம் தர மாட்டார்! இயேசுவைப் பின்பற்றும் ஒரு அன்பான கணவராக நீங்கள் இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார். (எபே. 5:23) சபையின் தலைவரான இயேசு எப்போதுமே அன்பாகவும் பொறுமையாகவும் நடந்துகொள்கிறார். (லூக். 9:46-48) நீங்கள் அவரைப் பின்பற்றினால் நாட்கள் போகப்போக உங்கள் மனைவியும் யெகோவாவை வணங்க ஆசைப்படலாம்.
15. தன் மனைவியை நேசிப்பதை ஒரு கிறிஸ்தவ கணவர் எப்படிக் காட்டலாம்?
15 “உங்கள் மனைவிமேல் எப்போதும் அன்பு காட்டுங்கள், அவளிடம் கடுகடுப்பாக நடந்துகொள்ளாதீர்கள்” என்ற அறிவுரையை யெகோவா கணவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (கொலோ. 3:19) ஒரு அன்பான கணவர் தன் மனைவிக்கு மரியாதை கொடுக்கிறார். எப்படி? மனைவி சொல்வதை அவர் காதுகொடுத்துக் கேட்கிறார். அதோடு, அவளுடைய கருத்தை அவர் மதிக்கிறார் என்பதையும் காட்டுகிறார். (1 பே. 3:7) எல்லா சமயத்திலும் தன் மனைவியின் விருப்பப்படி செய்ய முடியாவிட்டாலும், அவளுடைய கருத்தைக் கேட்பது நல்ல தீர்மானங்களை எடுக்க அவருக்கு உதவும். (நீதி. 15:22) ஒரு அன்பான கணவர், தன் மனைவியிடம் மரியாதையைக் கேட்டு வாங்க மாட்டார். அதற்குப் பதிலாக, தன் மனைவியே தன்னை மதிக்கும்படி நடந்துகொள்வார். ஒரு கணவர் தன் மனைவியையும் பிள்ளைகளையும் நேசிக்கும்போது, அவர்கள் யெகோவாவை சந்தோஷமாக வணங்குவார்கள்; வாழ்வெனும் பரிசையும் பெற்றுக்கொள்வார்கள்.
இளைஞர்களே, பரிசைப் பெறத் தடையாக இருக்கும் எதையும் அனுமதிக்காதீர்கள்
16, 17. ஒரு இளைஞராக நீங்கள் எப்படி உங்கள் அப்பா அம்மாமீது வெறுப்படையாமல் இருக்கலாம்?
16 நீங்கள் ஒரு டீனேஜரா? உங்கள் அப்பா அம்மா உங்களைப் புரிந்துகொள்வதில்லை என்றும், ரொம்பவே கறாராக நடந்துகொள்கிறார்கள் என்றும் நினைக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவை வணங்குவதா வேண்டாமா என்று யோசிக்கும் அளவுக்கு நீங்கள் போய்விடலாம். ஆனால், நீங்கள் யெகோவாவைவிட்டுப் போனால் ஒரு விஷயத்தைச் சீக்கிரத்தில் புரிந்துகொள்வீர்கள். அதாவது, உங்கள் அப்பா அம்மாவோ கிறிஸ்தவ சபையில் இருக்கும் நண்பர்களோ உங்களை நேசிக்கும் அளவுக்கு இந்த உலகத்தில் யாருமே உங்களை நேசிக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
17 உங்கள் அப்பா அம்மா உங்களைத் திருத்தவே இல்லையென்றால், அவர்களுக்கு உங்கள்மீது அக்கறை இருக்கிறது என்று நீங்கள் நினைப்பீர்களா? (எபி. 12:8) ஒருவேளை, அவர்கள் உங்களைத் திருத்தும் விதம் உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். ஆனால் அதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காதீர்கள். அவர்கள் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும், ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்றும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். நிதானமாக இருங்கள்; உணர்ச்சிவசப்படாதீர்கள்! “அறிவுள்ளவன் அளவோடு பேசுவான். பகுத்தறிவு உள்ளவன் அமைதியாக இருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 17:27) ஆலோசனை எப்படிக் கொடுக்கப்பட்டாலும் சரி, அதை ஏற்றுக்கொள்ளவும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் பழகிக்கொள்ளுங்கள். இப்படி, முதிர்ச்சியுள்ள ஒரு நபராக ஆவதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும்! (நீதி. 1:8) யெகோவாவை நேசிக்கும் அப்பா அம்மா கிடைத்தது ஒரு பெரிய பாக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள். வாழ்வெனும் பரிசு உங்களுக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள்; அதற்கு உதவ விரும்புகிறார்கள்.
18. பரிசின் மீது உங்கள் கண்களைப் பதிய வைக்க நீங்கள் ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்?
18 நமக்குப் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, பூஞ்சோலை பூமியில் வாழும் நம்பிக்கை இருந்தாலும் சரி, நாம் எல்லாரும் ஒரு அருமையான எதிர்காலத்துக்காகக் காத்திருக்கிறோம். நம் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறும். இதை எப்படிச் சொல்லலாம்? “பூமி முழுவதும் யெகோவாவைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும்” என்று இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளரே நமக்கு வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 11:9) சீக்கிரத்தில், பூமியில் வாழும் எல்லாரும் கடவுளால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள். இந்தப் பரிசைப் பெறுவதற்காக உழைப்பது ஒருபோதும் வீண்போகாது! அதனால் யெகோவா உங்களுக்குத் தந்திருக்கும் வாக்குறுதியை மறந்துவிடாதீர்கள்; பரிசைப் பெறுவதிலிருந்து உங்களைத் தடுக்க எதையும் அனுமதிக்காதீர்கள்!