முதியோரை கவனித்தல்—கிறிஸ்தவ கடமை
“உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரைவயது வரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்.”—ஏசாயா 46:4, பொது மொழிபெயர்ப்பு.
1, 2. மனித பெற்றோர்கள் தரும் கவனிப்பிலிருந்து நமது பரலோக தகப்பன் தரும் கவனிப்பு எவ்வாறு வேறுபடுகிறது?
குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், இளமைப் பருவம் என எல்லா பருவத்திலும் பொறுப்புள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார்கள். பிள்ளைகள் வாலிப வயதிலிருந்து வயதுவந்த பருவத்தை அடைந்து தங்களுடைய சொந்த குடும்பத்தை பராமரிக்கும் நிலைக்கு வந்த பிறகும்கூட, அவர்களுடைய தாயும் தகப்பனும் தொடர்ந்து அன்பையும் ஆதரவையும் வழங்குகிறார்கள்.
2 மனிதர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு ஓரளவுக்குத்தான் செய்ய முடியும்; ஆனால் நம்முடைய பரலோக தகப்பனோ எப்பொழுதும் தமது உண்மையுள்ள ஊழியர்களுக்கு அன்பான கவனிப்பையும் ஆதரவையும் அளிக்க வல்லவராக இருக்கிறார். தமது பூர்வ கால ஜனங்களிடம் பேசும்போது யெகோவா இவ்வாறு குறிப்பிட்டார்: “உங்கள் முதுமை வரைக்கும் நான் அப்படியே இருப்பேன்; நரைவயது வரைக்கும் நான் உங்களைச் சுமப்பேன்.” (ஏசாயா 46:4, பொ.மொ.) முதிர்வயது கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு உறுதியளிக்கும் வார்த்தைகள் இவை! தமக்கு உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பவர்களை யெகோவா கைவிட்டுவிடுவதில்லை. மாறாக, வாழ்நாட்காலம் பூராவும், முதுமையிலும் அவர்களை தாங்கி, ஆதரித்து வழிநடத்துவதாக வாக்குறுதி அளிக்கிறார்.—சங்கீதம் 48:14.
3. இந்தக் கட்டுரையில் எது சிந்திக்கப்படும்?
3 வயோதிபர் மீது யெகோவா காட்டும் அன்பான அக்கறையை நாம் எவ்வாறு பின்பற்றலாம்? (எபேசியர் 5:1, 2) வயதுவந்த பிள்ளைகள், சபை கண்காணிகள், தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆகியோர் நமது உலகளாவிய சகோதரத்துவத்தின் மூத்த அங்கத்தினர்களை என்னென்ன வழிகளில் கவனித்துக்கொள்ளலாம் என்பதை நாம் சிந்திக்கலாம்.
பிள்ளைகளாக நமது கடமை
4. பெற்றோர்களிடம் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு இருக்கும் உத்தரவாதம் என்ன?
4 “உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.” (எபேசியர் 6:3; யாத்திராகமம் 20:12) எபிரெய வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த எளிய, ஆனால் கருத்துச் செறிவுமிக்க மேற்கோளை காண்பித்து, பெற்றோர்களிடம் பிள்ளைகளுக்கு இருக்கும் உத்தரவாதத்தை அப்போஸ்தலன் பவுல் நினைப்பூட்டினார். முதியோரை கவனிப்பதில் இந்த வார்த்தைகள் எவ்வாறு பொருந்துகின்றன? கிறிஸ்தவத்திற்கு முன்னான காலத்தில் வாழ்ந்த ஒருவரின் நல் உதாரணம் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும்.
5. (அ) யோசேப்பு தனது குடும்ப உத்தரவாதத்தை மறந்துவிடவில்லை என்பதை எது சுட்டிக்காட்டுகிறது? (ஆ) நமது பெற்றோரை கனப்படுத்துவது என்றால் என்ன, இதன் சம்பந்தமாக யோசேப்பு வைத்திருக்கும் சிறந்த முன்மாதிரி என்ன?
5 வயதான தனது தகப்பனாகிய யாக்கோபுடன் இருபது வருஷத்திற்கும் மேல் யோசேப்புக்கு எந்தத் தொடர்புமில்லை. என்றாலும், யாக்கோபு மீது யோசேப்புக்கு இருந்த குடும்பப் பாசம் போய்விடவில்லை என்பதில் சந்தேகமில்லை. சொல்லப்போனால், தான் யார் என்பதை சகோதரர்களிடம் யோசேப்பு வெளிப்படுத்தியபோது, “என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா”? என கேட்டார். (ஆதியாகமம் 43:7, 27; 45:3) அந்தச் சமயத்தில், கானான் தேசத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. எனவே, “என்னிடத்தில் வாரும், தாமதிக்க வேண்டாம். . . . கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். . . . அங்கே உம்மைப் [“உணவளித்துப்,” NW] பராமரிப்பேன்” என யோசேப்பு தனது தகப்பனுக்கு சொல்லி அனுப்பினார். (ஆதி. 45:9-11; 47:12) ஆம், வயதான பெற்றோரால் தங்களையே கவனித்துக்கொள்ள முடியாதபோது அவர்களை பாதுகாத்து பொருளாதார ரீதியில் பராமரிப்பது அவர்களை கனப்படுத்துவதில் உட்பட்டுள்ளது. (1 சாமுவேல் 22:1-4; யோவான் 19:25-27) யோசேப்பு இந்த உத்தரவாதத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
6. தனது தகப்பன் மீதிருந்த உள்ளப்பூர்வமான அன்பை யோசேப்பு எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார், அவருடைய முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
6 யெகோவாவின் ஆசீர்வாதத்தால், யோசேப்பு எகிப்தில் மிகப் பெரிய செல்வந்தராகவும் அதிகாரமிக்கவராகவும் ஆனார். (ஆதியாகமம் 41:10) ஆனால் 130 வயதுடைய தனது தகப்பனை கனப்படுத்த முடியாத அளவுக்கு தான் அதிமுக்கியமானவர் என்றோ தனக்கு அதிக வேலையிருப்பதாகவோ அவர் நினைக்கவில்லை. யாக்கோபு (அல்லது இஸ்ரவேல்) வருவதை கேள்விப்பட்டவுடன், யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவரைக் கண்டு, அவருடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவர் கழுத்தை விடாமல் அழுதார். (ஆதியாகமம் 46:28, 29) இந்த வரவேற்பு, சம்பிரதாயத்திற்கு காட்டப்படும் மரியாதையைவிட அதிக அர்த்தமுடையது. வயதான தனது தகப்பனை யோசேப்பு நெஞ்சார நேசித்தார், தனது அன்பை காட்டுவதில் வெட்கப்படவில்லை. வயதுசென்ற பெற்றோர்கள் நமக்கு இருந்தால், நாமும் தாராளமாக அவர்கள் மீது பாசத்தை பொழிகிறோமா?
7. கானானில் அடக்கம் செய்யப்படுவதற்கு யாக்கோபு ஏன் விரும்பினார்?
7 யெகோவா மீது யாக்கோபு வைத்திருந்த பக்தி அவரது மரணம் வரை பலமாக இருந்தது. (எபிரெயர் 11:21) கடவுளுடைய வாக்குறுதிகள் மீது வைத்திருந்த விசுவாசத்தின் காரணமாக கானானில் தனது உடலை அடக்கம் பண்ணும்படி யாக்கோபு கேட்டுக்கொண்டார். பெரும் செலவும் முயற்சியும் உட்பட்டிருந்தபோதிலும், இந்த வேண்டுகோளுக்கு இசைவாக செயல்படுவதன் மூலம் யோசேப்பு தனது தகப்பனை கனப்படுத்தினார்.—ஆதியாகமம் 47:29-31; 50:7-14.
8. (அ) வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதில் நமது முக்கிய நோக்கமென்ன? (ஆ) தனது வயதான பெற்றோர்களை கவனிப்பதற்கு முழுநேர ஊழியர் ஒருவர் என்ன செய்தார்? (17-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
8 தனது தகப்பனை கவனித்துக்கொள்ளும்படி யோசேப்பை தூண்டியது எது? உயிரைத் தந்து தன்னை பேணி வளர்த்தவர் மீது அவருக்கு அன்பும் கடமையுணர்வும் இருந்தபோதிலும், யெகோவாவை பிரியப்படுத்த வேண்டுமென்ற ஊக்கமான ஆசையும் உண்மையில் இருந்தது. நமக்கும் இதேபோன்ற ஆசை இருக்க வேண்டும். பவுல் இவ்வாறு எழுதினார்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேத்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக் கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:4) சொல்லப்போனால், யெகோவா மீதுள்ள அன்பும் அவர் மீதுள்ள பயபக்தியும் வயதான பெற்றோரை கவனித்துக்கொள்வதற்கு நம்மை உந்துவிக்கும், அதற்காக எப்பேர்ப்பட்ட சவால்களையும் சந்திக்கத் தூண்டும்.a
மூப்பர்கள் எவ்வாறு தங்கள் அக்கறையை காண்பிக்கலாம்
9. வயதான கிறிஸ்தவர்கள் உட்பட, தமது மந்தையை கவனித்துக்கொள்வதற்கு யெகோவா யாரை நியமித்திருக்கிறார்?
9 யாக்கோபு தனது நீண்டகால வாழ்க்கை முடியும் தறுவாயில், ‘நான் பிறந்த நாள்முதல் இந்நாள் வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவன்’ என யெகோவாவை குறிப்பிட்டார். (ஆதியாகமம் 48:15) இன்று, ‘பிரதான மேய்ப்பராகிய’ தமது குமாரன் இயேசு கிறிஸ்துவின் தலைமையில் கிறிஸ்தவ கண்காணிகளான மூப்பர்கள் மூலம் யெகோவா தமது பூமிக்குரிய ஊழியர்களை வழிநடத்தி வருகிறார். (1 பேதுரு 5:2-4) மந்தையின் மூத்த அங்கத்தினர்களை கவனிக்கும் விஷயத்தில் கண்காணிகள் எவ்வாறு யெகோவாவை பின்பற்றலாம்?
10. வயதான கிறிஸ்தவர்களுக்கு பொருளாதார உதவியளிக்க என்ன செய்யப்பட்டுள்ளது? (19-ம் பக்கத்திலுள்ள பெட்டியைக் காண்க.)
10 கிறிஸ்தவ சபை ஆரம்பமான சில காலத்திற்குள், ஏழை கிறிஸ்தவ விதவைகளுக்கு “அன்றாட” உணவு வழங்குவதை மேற்பார்வை செய்வதற்கு “பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை” அப்போஸ்தலர் நியமித்தார்கள். (அப்போஸ்தலர் 6:1-6) பிற்பாடு, பொருளாதார உதவி பெறத் தகுதிவாய்ந்த முன்மாதிரியுள்ள வயதான விதவைகளின் பெயர்களைப் பட்டியலில் சேர்க்கும்படி கண்காணியாகிய தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுரை கூறினார். (1 தீமோத்தேயு 5:3, 9, 10) அதைப் போலவே, அவசியப்படும்போது வயதான கிறிஸ்தவர்களுக்கு நடைமுறையான உதவியளிக்க இன்றும் சபை கண்காணிகள் மனப்பூர்வமாக ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். என்றாலும், உண்மையுள்ள முதியோரை கவனித்துக்கொள்வதில் அதிக காரியங்கள் உட்பட்டுள்ளன.
11. சிறிய தொகையை காணிக்கையாக போட்ட ஏழை விதவையைப் பற்றி இயேசு என்ன கூறினார்?
11 தமது பூமிக்குரிய ஊழியம் முடியும் தறுவாயில், இயேசு ஆலயத்தில் உட்கார்ந்து, “ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக் கொண்டிருந்தார்.” அப்பொழுது ஒருவர் அவருடைய கண்ணில் தட்டுப்பட்டார். அந்த விவரப்பதிவு இவ்வாறு சொல்கிறது: “ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள்.” இயேசு தமது சீஷர்களை அழைத்து அவர்களிடம் இவ்வாறு கூறினார்: “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துப் போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்.” (மாற்கு 12:41-44) விதவை போட்ட காணிக்கையின் தொகையோ சிறியது, ஆனால் முழு இருதயத்துடன் காட்டப்படும் இத்தகைய பக்தியை தமது பரலோகப் பிதா எவ்வளவு உயர்வாய் மதிக்கிறார் என்பதை இயேசு அறிந்திருந்தார். அந்த ஏழை விதவையின் வயது என்னவாக இருந்தபோதிலும், அவள் செய்ததை இயேசு கவனிக்கத் தவறவில்லை.
12. வயதான கிறிஸ்தவர்களுடைய சேவைக்கு மூப்பர்கள் எவ்வாறு பாராட்டு தெரிவிக்கலாம்?
12 இயேசுவைப் போல, மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு வயதானவர்கள் எடுக்கும் முயற்சிகளை கிறிஸ்தவ கண்காணிகள் கவனிக்காமல் இருந்துவிடுவதில்லை. வயதானவர்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்காகவும், கூட்டங்களில் பங்கெடுப்பதற்காகவும், சபையில் சிறந்த பாதிப்பை ஏற்படுத்துவதற்காகவும், சகிப்புத்தன்மை காட்டுவதற்காகவும் அவர்களை மூப்பர்கள் பாராட்டுவது தகும். உள்ளப்பூர்வமாக சொல்லப்படும் உற்சாக வார்த்தைகள், பரிசுத்த சேவையில் ‘களிகூர’ அவர்களுக்கு உதவும். இவ்வாறு, அவர்கள் பிற கிறிஸ்தவர்களுடன் தங்களை ஒப்பிட்டு அல்லது கடந்த காலத்தில் தாங்கள் செய்ததை தற்போது செய்வதோடு ஒப்பிட்டு வருத்தப்படுவதைத் தவிர்க்க உதவுகிறது.—கலாத்தியர் 6:4, NW.
13. வயதானவர்களுடைய திறமைகள் மற்றும் அனுபவத்தை மூப்பர்கள் எந்த வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்?
13 வயதான கிறிஸ்தவர்களுடைய அனுபவத்தையும் திறமைகளையும் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்கள் வகிக்கும் மதிப்புமிக்க பங்கை மூப்பர்கள் போற்றலாம். நடிப்புகள் அல்லது பேட்டிகளுக்கு முன்மாதிரியான முதியோர்களை எப்பொழுதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். “பிள்ளைகளை சத்தியத்தில் வளர்த்திருக்கிற வயதான சகோதரரையோ சகோதரியையோ நான் பேட்டி காணும்போது சபையார் உண்மையிலேயே கூர்ந்து கவனம் செலுத்துகிறார்கள்” என மூப்பர் ஒருவர் கூறுகிறார். பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்வதற்கு 71 வயது பயனியர் சகோதரி ஒருவர் வெற்றிகரமாக உதவி செய்திருப்பதாக மற்றொரு சபையிலுள்ள மூப்பர்கள் அறிவிக்கிறார்கள். பைபிள் வாசிப்பது, தினவசனம் வாசிப்பது, வாசித்தவற்றை தியானிப்பது போன்ற “அடிப்படை காரியங்களை” செய்வதற்கும்கூட அந்தச் சகோதரி அவர்களுக்கு உற்சாகமளிக்கிறார்.
14. வயதான சக கண்காணிக்கு எவ்வாறு ஒரு மூப்பர் குழுவினர் போற்றுதல் காண்பித்தார்கள்?
14 வயதான சக கண்காணிகளின் சேவையையும் மூப்பர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். சுமார் 70 வயதுடைய ஷோஸே பல பத்தாண்டுகளாக மூப்பராக சேவை செய்திருக்கிறார், சமீபத்தில் அவருக்கு பெரிய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. குணமாக அதிக காலம் எடுக்கும் என்பதால், நடத்தும் கண்காணியாக சேவை செய்யும் சிலாக்கியத்தை விட்டுவிடுவதைப் பற்றியும் யோசித்தார். “மற்ற மூப்பர்கள் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என ஷோஸே கூறுகிறார். “என்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, என் உத்தரவாதங்களைத் தொடர்ந்து செய்வதற்கு நடைமுறையான என்ன உதவி எனக்கு தேவை என அவர்கள் கேட்டார்கள்.” இளம் மூப்பர் ஒருவருடைய உதவியால், ஷோஸே தொடர்ந்து நடத்தும் கண்காணியாக சேவிக்க முடிந்தது, இது சபைக்கு ஓர் ஆசீர்வாதமாகவும் இருந்திருக்கிறது. சக மூப்பர் ஒருவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஷோஸே மூப்பராக பணியாற்றுவதை சபையிலுள்ள சகோதரர்கள் உயர்வாக மதிக்கிறார்கள். அவர் பெற்றிருக்கும் அனுபவத்திற்காகவும் விசுவாசத்தில் வைக்கும் முன்மாதிரிக்காகவும் அவரை நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள். அவர் எங்கள் சபைக்கு வளம் சேர்க்கிறார்.”
ஒருவரையொருவர் கவனித்தல்
15. கிறிஸ்தவர்கள் அனைவரும் ஏன் தங்கள் மத்தியிலுள்ள வயதானவர்களின் நலனில் அக்கறை காட்ட வேண்டும்?
15 வயதான பெற்றோர்களை உடையவர்களும் நியமிக்கப்பட்ட ஊழியர்களும் மட்டுமே முதியோர் மீது அக்கறை காட்டினால் போதாது. மானிட உடலுக்கு கிறிஸ்தவ சபையை ஒப்பிட்டு பேசுகையில், பவுல் இவ்வாறு எழுதினார்: “சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக் குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார்.” (1 கொரிந்தியர் 12:25) மற்றொரு மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது: “அவயவங்கள் ஒவ்வொன்றும் மற்றொன்றின் நலனை கவனிப்பதை தங்கள் பொது நலனாக கருத வேண்டும்.” (நாக்ஸ்) கிறிஸ்தவ சபை ஒத்திசைவுடன் செயல்படுவதற்கு, ஒவ்வொரு அங்கத்தினரும் சக விசுவாசிகளுடைய நலனில் அக்கறை காட்ட வேண்டும், சக விசுவாசிகள் என்பதில் வயதானவர்களும் உட்பட்டுள்ளார்கள்.—கலாத்தியர் 6:2.
16. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகும்போது எவ்வாறு வயதானவர்கள் மீது நாம் அக்கறை காட்டலாம்?
16 வயதானவர்கள் மீது அக்கறை காட்டுவதற்கு கிறிஸ்தவ கூட்டங்கள் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. (பிலிப்பியர் 2:4; எபிரெயர் 10:24, 25) இத்தகைய சந்தர்ப்பங்களில் வயதானவர்களிடம் பேசுவதற்கு நாம் நேரம் செலவழிக்கிறோமா? அவர்களுடைய சுகநலத்தைப் பற்றி விசாரிப்பது பொருத்தமாக இருக்கும் என்றாலும், அவர்களுக்கு ஏதேனும் ‘ஆவிக்குரிய வரத்தைக் கொடுக்க’ நம்மால் முடியுமா? அதாவது, கட்டியெழுப்பும் ஓர் அனுபவத்தையோ வேதப்பூர்வ குறிப்பையோ அவர்களோடு பகிர்ந்துகொள்ள முடியுமா? வயதானவர்கள் சிலருக்கு அங்குமிங்கும் செல்வது சிரமமாக இருக்குமென்பதால், அவர்கள் நம்மைத் தேடி வரவேண்டுமென எதிர்பார்ப்பதற்குப் பதிலாக நாம் அவர்களைத் தேடிப் போவது கரிசனைமிக்க செயலாக இருக்கும். கேட்பதில் அவர்களுக்கு பிரச்சினை இருந்தால், நாம் அவர்களிடம் மெதுவாகவும் தெளிவாகவும் பேசுவது அவசியமாக இருக்கலாம். உண்மையிலேயே “பரஸ்பர உற்சாகம்” பெறுவதற்கு, வயதானவர்கள் சொல்வதை நாம் உன்னிப்பாக கேட்க வேண்டும்.—ரோமர் 1:11, 12; NW.
17. வீட்டில் அடைபட்டுக் கிடக்கிற வயதான கிறிஸ்தவர்கள் மீது நாம் எவ்வாறு அக்கறை காட்டலாம்?
17 வயதானவர்கள் சிலர் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராக முடியாமலிருந்தால் என்ன செய்யலாம்? “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது” நம்முடைய கடமை என்பதை யாக்கோபு 1:27 காட்டுகிறது. ‘விசாரிப்பது’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொல்லின் ஓர் அர்த்தம் ‘போய்ப் பார்ப்பது’ என்பதாகும். (அப்போஸ்தலர் 15:36) நம்முடைய சந்திப்புகளை வயதானோர் எவ்வளவாய் அனுபவித்து மகிழ்கிறார்கள்! சுமார் பொ.ச. 65-ல் ரோம சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயத்தில், “முதிர்வயதுள்ள” பவுல்தாமே தனிமையில் இருந்தார். தன்னுடைய சக ஊழியக்காரனாகிய தீமோத்தேயுவைக் காண வாஞ்சையுடன் இருந்தார், அதனால் “விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்” என அவர் எழுதினார். (பிலேமோன் 8; 2 தீமோத்தேயு 1:3, 4; 4:9, NW) இன்று வயதானோர் சிலர் பவுலைப் போல சொல்லர்த்தமாகவே சிறையில் அடைக்கப்படவில்லை என்றாலும், உடல்நிலை காரணமாக வீட்டில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அதனால், ‘தயவுசெய்து விரைவில் என்னிடம் வர முழு முயற்சி செய்’ என சொல்லாமல் சொல்லும் நிலையிலிருக்கிறார்கள். இத்தகைய வேண்டுகோள்களுக்கு நாம் செவிசாய்க்கிறோமா?
18. வயதானவர்களை சந்திப்பதால் வரும் பலன்கள் யாவை?
18 வயதான ஆவிக்குரிய சகோதரரை அல்லது சகோதரியை சந்திப்பதால் வரும் நல்ல பலன்களை குறைவாக மதிப்பிடாதீர்கள். ஒநேசிப்போரு என்ற கிறிஸ்தவர் ரோமில் இருந்தபோது, பவுலை ஊக்கமாய் தேடிக் கண்டுபிடித்தார், அதற்குப்பின் ‘அநேகந்தரம் அவருக்கு இளைப்பாறுதல் அளித்தார்.’ (2 தீமோத்தேயு 1:16, 17) “இளைஞர்களோடு நேரம் செலவழிப்பதென்றால் எனக்கு கொள்ளை இன்பம்” என வயதான சகோதரி ஒருவர் கூறுகிறார். “அவர்களுடைய குடும்பத்தாரில் ஒருவரைப் போல என்னை நடத்துவது எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அது என்னை உற்சாகப்படுத்துகிறது.” மற்றொரு வயதான கிறிஸ்தவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “யாராவது எனக்கு ஒரு கார்டு அனுப்பும்போது, சில நிமிடங்களுக்கு போன் பண்ணிப் பேசும்போது, அல்லது சிறிது நேரத்திற்கு என்னை வந்து சந்திக்கும்போது, அதை நான் உண்மையிலேயே வெகுவாக மதிக்கிறேன். அது புத்துணர்ச்சி அளிக்கிறது.”
அக்கறையுடன் கவனிப்பவர்களுக்கு யெகோவா பலனளிக்கிறார்
19. வயதானவர்களை கவனிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் யாவை?
19 வயதானவர்களை கவனிப்பது அநேக ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது. முதியோருடன் கூட்டுறவுகொண்டு அவர்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்திக்கொள்வதே ஒரு பாக்கியமாக இருக்கிறது. வயதானவர்களை பார்த்துக்கொள்கிறவர்கள் கொடுப்பதால் வரும் பெரும் மகிழ்ச்சியையும், வேதப்பூர்வ கடமையை நிறைவேற்றுவதால் வரும் சாதனை உணர்வையும், மனநிம்மதியையும் அனுபவிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:35) அதோடு, வயதானவர்களை கவனிப்பவர்கள் பிற்காலத்தில் தாங்கள் கைவிட்டுவிடப்படுவோம் என பயப்பட வேண்டிய அவசியமில்லை. கடவுளுடைய வார்த்தை இவ்வாறு உறுதியளிக்கிறது: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25.
20, 21. வயதானோரை கவனிப்பவர்களை கடவுள் எவ்வாறு நோக்குகிறார், நமது தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
20 வயதான சக விசுவாசிகளுடைய தேவைகளை சுயநலமின்றி கவனித்துக்கொள்கிற தேவபயமுடைய பிள்ளைகளுக்கும் கண்காணிகளுக்கும் அக்கறையுள்ள பிற கிறிஸ்தவர்களுக்கும் யெகோவா பலனளிக்கிறார். இத்தகைய மனப்பான்மை பின்வரும் நீதிமொழிக்கு இசைவாக இருக்கிறது: “ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.” (நீதிமொழிகள் 19:17) சாமானியருக்கும் ஏழைகளுக்கும் தயவு காட்டுவதற்கு அன்பு நம்மை உந்துவித்தால், இத்தகைய கொடுத்தலை யெகோவா கடனாக கருதுகிறார், அதற்குரிய பலனை ஆசீர்வாதங்களுடன் அவர் திருப்பித் தருகிறார். ‘உலகின் பார்வையில் ஏழைகளாயும், ஆனால் விசுவாசத்தில் செல்வந்தர்களாயும் இருக்கிற’ பெரும்பாலோரைக் கொண்ட வயதான சக வணக்கத்தாரை அன்பாக கவனிப்பதற்காகவும் அவர் நமக்கு திருப்பித் தருகிறார்.—யாக்கோபு 2:5, NW.
21 திருப்பித் தருவதில் கடவுள் எவ்வளவு தாராளமாக இருக்கிறார்! இதில் நித்திய ஜீவனும் அடங்கியுள்ளது. யெகோவாவின் ஊழியர்களில் பெரும்பான்மையருக்கு, பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் பாக்கியம் இருக்கும்; சுதந்தரிக்கப்பட்ட பாவத்தின் விளைவுகள் அங்கே சுவடு தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கும், உண்மையுள்ள வயதானோர் வாலிபத்திற்கு திரும்புவதை அனுபவித்து மகிழ்வார்கள். (வெளிப்படுத்துதல் 21:3-5) அத்தகைய ஆசீர்வாதங்கள் நிறைந்த காலத்திற்காக நாம் காத்திருக்கையில், முதியோரை கவனிக்கும் நமது கிறிஸ்தவ கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவோமாக.
[அடிக்குறிப்பு]
a வயதான பெற்றோர்களை எவ்வாறு கவனிப்பது என்பதன் பேரில் நடைமுறையான தகவல்களைப் பெறுவதற்கு, ஆங்கில விழித்தெழு! பிப்ரவரி 8, 1994, பக்கங்கள் 3-10-ஐக் காண்க.
உங்களுடைய பதில் என்ன?
• வயதான பெற்றோர்களை பிள்ளைகள் எவ்வாறு கனப்படுத்தலாம்?
• தங்கள் மந்தையிலுள்ள வயதான அங்கத்தினர்களுக்கு மூப்பர்கள் எவ்வாறு போற்றுதல் காட்டலாம்?
• வயதானவர்கள் மீது உள்ளப்பூர்வமான அக்கறை காட்டுவதற்கு தனிப்பட்ட கிறிஸ்தவர்கள் என்ன செய்யலாம்?
• வயதான கிறிஸ்தவர்களை கவனிப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் என்ன?
[பக்கம் 17-ன் பெட்டி]
பெற்றோருக்கு உதவி தேவைப்பட்டபோது
லைபீரியாவில் 1999-ல் நடந்த கட்டுமான வேலையில் பிலிப் என்பவர் வாலண்டியராக சேவை செய்துவந்தார். அப்போதுதான் அவரது அப்பாவின் உடல்நிலை மிக மோசமாய் இருந்ததாக செய்தி கிடைத்தது. அம்மாவால் தனியாக ஒன்றும் செய்ய முடியாது என்று அவருக்கு உறுதியாக தெரிந்தது; அதனால் வீட்டிற்குத் திரும்பிப் போய், அப்பாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடு செய்ய தீர்மானித்தார்.
“வீட்டுக்குத் திரும்பிப் போவதா வேண்டாமா என முடிவெடுப்பது கஷ்டமாக இருந்தது, ஆனால் அம்மா, அப்பாவை கவனிப்பதுதான் என்னுடைய முதல் கடமை என்று உணர்ந்தேன்” என பிலிப் கூறுகிறார். அடுத்த மூன்று வருடங்களில், முன்பைவிட அதிக சௌகரியமான ஒரு வீட்டிற்கு தன் பெற்றோரை குடிமாற்றினார். அங்கிருந்த சக கிறிஸ்தவர்களின் உதவியோடு, அப்பாவுடைய பிரத்தியேக தேவைகளுக்கு ஏற்ப அந்த வீட்டை மாற்றியமைத்தார்.
பிலிப்புடைய அப்பாவின் மோசமான உடல்நல பிரச்சினைகளை இப்போது அவருடைய அம்மாவால் நன்கு சமாளிக்க முடிகிறது. ஆகவே சமீபத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய மாசிடோனியா கிளை அலுவலகத்தில் வாலண்டியராக வேலை செய்வதற்கு கிடைத்த அழைப்பை பிலிப்பு ஏற்றுக்கொண்டார்.
[பக்கம் 19-ன் பெட்டி]
அவருடைய தேவைகளை சபையார் அலட்சியம் செய்யவில்லை
ஆஸ்திரேலியாவில் ஏடா என்ற 85 வயது சகோதரி, உடல் பலவீனத்தின் காரணமாக வீட்டிலே முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. அவருக்கு உதவ சபையிலுள்ள சில சகோதர சகோதரிகளை மூப்பர்கள் ஏற்பாடு செய்தார்கள். சுத்தம் செய்வது, துணிமணிகளை துவைப்பது, சமைப்பது, கடைக்குப் போய் வருவது போன்ற வேலைகளை இந்த சகோதர சகோதரிகள் அவருக்கு மகிழ்ச்சியோடு செய்து கொடுத்தார்கள்.
இந்த உதவி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவரை 30-க்கும் அதிகமான யெகோவாவின் சாட்சிகள் ஏடாவுக்கு உதவி செய்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து வருகிறார்கள், பைபிள் பிரசுரங்களை வாசித்து காட்டுகிறார்கள், சபையில் உள்ளவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பற்றி சொல்கிறார்கள், தவறாமல் அவருடன் சேர்ந்து ஜெபிக்கிறார்கள்.
அந்த சபையின் மூப்பர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஏடாவின் தேவைகளை கவனித்துக் கொள்பவர்கள் அதை ஒரு பாக்கியமாக கருதுகிறார்கள். பல பத்தாண்டுகளாக அவர் செய்திருக்கும் உண்மையான சேவையால் பலரும் உற்சாகத்தைப் பெற்றிருக்கிறார்கள். அதனால் அவருடைய தேவைகளை அலட்சியம் செய்வது அவர்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.”
[பக்கம் 16-ன் படம்]
வயதான பெற்றோர்கள் மீது தாராளமாக பாசம் காட்டுகிறோமா?
[பக்கம் 18-ன் படங்கள்]
சபையிலுள்ள அனைவரும் வயதான சக விசுவாசிகளை நேசிப்பதை வெளிப்படுத்திக் காட்டலாம்