உங்கள் விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக்கொள்ளுங்கள்
“நீ கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.”—2 தீமோத்தேயு 1:13.
1. நல்ல சரீர ஆரோக்கியம் ஏன் காத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒரு மதிப்புவாய்ந்த உடைமையாயிருக்கிறது?
நல்ல சரீர ஆரோக்கியம் ஒரு விலைமதிப்புள்ள உடைமையாயிருக்கிறது. நாம் ஆரோக்கியத்துடன் இருக்கும் போது, அநேக காரியங்களை செய்யலாம், வாழ்க்கையை அதிகமாக அனுபவிக்கலாம். ஆனால் நாம் நாட்பட நோயுற்றோ அல்லது பலம் குறைந்தோ இருக்கும் போது, வாழ்க்கை இன்னுமதிக கடினமாக இருக்கும். நல்ல ஆரோக்கியம் காத்துக் கொள்ளப்பட வேண்டும். அநேகர் தங்கள் ஆரோக்கியத்தை புறக்கணிக்கின்றனர் அல்லது நோயை உண்டாக்கும் காரியங்களைச் செய்கின்றனர். என்றபோதிலும், தங்களையே கவனித்துக் கொள்பவர்கள் சாதாரணமாக ஓரளவு நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் தங்களுடைய வாழ்நாளின் பெரும்பாலான பகுதி முழுவதிலும் கொண்டிருக்கின்றனர்.
2. (எ) சரீர ஆரோக்கியத்தைவிட ஆவிக்குரிய ஆரோக்கியம் ஏன் அதிக மதிப்புவாய்ந்ததாக இருக்கிறது? (பி) விசுவாசத்தில் ஆரோக்கியமாக நிலைத்திருக்க தேவைப்படுவது என்ன?
2 சரீரப்பிரகாரமான ஆரோக்கியத்தைவிட ஆவிக்குரிய ஆரோக்கியம் அதிமுக்கியமானது. சிறந்த சரீரப்பிரகாரமான ஆரோக்கியம் கடவுளின் பரிசாகிய நித்திய ஜீவனை கொண்டு வர முடியாது. நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியம் மெய் வணக்கத்திலிருந்தும், திருத்தமான அறிவின் பேரில் சார்ந்த விசுவாசத்திலிருந்தும் வருகிறது. (யோவான் 17:3; எபிரெயர் 11:6; யாக்கோபு 1:27) அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு சொன்னார்: “முதிர் வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்தி சொல்லு.” (தீத்து 2:2) விசுவாசத்தில் ஆரோக்கியமாயிருக்க விரும்பும் எவரும் ஊக்கமான முயற்சி செய்து, நிலையான விழிப்பு நிலையைக் காத்துக் கொள்ள வேண்டும். முழுமையான ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல்கள் நமக்கு உள்ளேயிருந்தோ அல்லது வெளியே இருந்தோ வரலாம். இந்த நோயுற்ற உலகத்தில் விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் நாம் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் இப்படிப்பட்ட அச்சுறுத்தல்களைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்.
இந்த உலகம் எந்தளவுக்கு நோய்ப்பட்டிருக்கிறது?
3, 4. ஒழுக்கப்பிரகாரமான நோய் எவ்விதமாக இந்த உலகத்திலும் மக்களின் செயல்களிலும் பிரதிபலிக்கப்படுகிறது?
3 இந்த உலகம் ஒழுக்கப்பிரகாரமாக அதிக நோயுற்று இருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இந்த உலகின் எல்லா “உறுப்புகளிலும்” கொடிய வியாதியை நாம் காண்கிறோம்—அதனுடைய மதங்கள், அதனுடைய அரசியல் அமைப்புகள், அதனுடைய வியாபார நிறுவனங்கள், அதனுடைய பொழுதுபோக்குகள். கடவுளுக்கும், மனிதவர்க்கத்தின் நலனுக்காக அவர் கொடுத்திருக்கும் சட்டங்களுக்கும் வெகு சிலரே மரியாதை கொண்டிருக்கின்றனர். சரித்திரம் காண்பிக்கிறபடி, ஒழுக்க சீர்கேடு, சரீரப்பிரகாரமான நோய்களும் கஷ்டங்களும் அதிகரிக்க வழிநடத்துகிறது. வஞ்சப்புகழ்ச்சியாக சொன்னால், இந்த நோயுற்ற ஒழுக்க நிலையை குணப்படுத்துவதைப் பற்றி எதையும் செய்ய அநேகர் விரும்புவதில்லை, ஏனென்றால் அதை உண்டாக்கும் காரியங்களை அவர்கள் நேசிக்கின்றனர்.
4 இந்த உலகம் எவ்வளவு நோயுற்றிருக்கிறது! கிளர்ச்சிகளை நாடுவதிலும் அல்லது மெய்மையிலிருந்து தப்பியோடுவதற்கு முயற்சி செய்வதிலும் மதுபானம், போதை மருந்து துர்ப்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் அநேகர் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொண்டனர். வன்முறை எங்கும் இருக்கிறது, வாழ்க்கை மலிவாக இருக்கிறது, சிறைகள் குற்றவாளிகளால் நிரம்பி வழிகிறது. அநேக தேசங்களில் திருமணங்களில் பாதி திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகிறது. பெற்றோர்களின் சரியான கண்காணிப்பு இல்லாத பிள்ளைகள் குற்றவாளிகளாக வளர்கின்றனர். பால் சம்பந்தமான ஒழுக்கக்கேடு மட்டுக்கு மீறி இருப்பதால், எய்ட்ஸ் மற்றும் பால் சம்பந்தமாக கடத்தப்படும் நோய்கள் விரைவாக பரவிக் கொண்டிருக்கின்றன.
5. பண்டைய யூதாவின் நிலைமைகளை ஏசாயா எவ்வாறு விவரித்தார்?
5 தன்னிச்சையாக சென்ற யூதாவைப் பற்றி அறிவிக்க கடவுள் ஏசாயாவை ஏவிய அதே காரியத்தையே நோயுற்ற இந்த உலகத்தைக் குறித்தும் சொல்லக்கூடும்: “ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப் போனார்கள். இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்பட வேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப் போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.”—ஏசாயா 1:4–6.
6. பண்டைய யூதாவிலும் நம்முடைய நாளிலும், நன்மை செய்ய படிக்கும்படியாக யெகோவாவின் வேண்டுகோளுக்கு என்ன பிரதிபலிப்பு இருந்திருக்கிறது?
6 மனந்திரும்பி, “நன்மை செய்யப் படியுங்கள்” என்ற யெகோவாவின் வேண்டுகோள் யூதாவில் பொதுவாக கேட்கப்படாமலேயே போனது. (ஏசாயா 1:16–20) இது இறுதியில் எருசலேமின் அழிவுக்கும், பாபிலோனில் யூதர்களின் சிறையிருப்புக்கும் வழிநடத்தியது. நோயுற்ற தேசத்தின் மத்தியில் வெகுசில உண்மையுள்ள ஆட்கள் மட்டுமே கடவுளின் ஆசீர்வாதத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்தனர். அதே போன்று இன்று, தலையிலிருந்து கால்விரல் வரை நோயுற்றிருக்கும் இந்த உலகத்தில், நன்மையானதைச் செய்ய கற்றறிய விரும்புகிறவர்கள் வெகு சிலரே இருக்கின்றனர். இப்படிப்பட்ட யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்வதற்கு இப்போது ஊக்கமான முயற்சிகளை செய்கின்றனர், கடவுளின் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் பூரண சரீர ஆரோக்கியமும் நித்திய ஜீவனும் பெறும் நம்பிக்கையையும் கொண்டிருக்கின்றனர்—2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:1–4.
இந்த நோயுற்ற உலகில் ஆவிக்குரிய அபாயங்கள்
7. (எ) என்ன ஆபத்துகள் நம்முடைய விசுவாசத்துக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் இடர் உண்டாக்கும்? (பி) நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தை ஆபத்துக்குள்ளாக்கும் மூன்று முக்கிய காரியங்களை மேற்கொள்வது குறித்து வேத வசனங்கள் என்ன சொல்லுகின்றன?
7 இந்த உலகின் ஒழுக்க நோய் தொற்றும் தன்மை உடையதாய் இருப்பதால், விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்வது ஒரு சவாலாயிருக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தோடும்கூட போராட வேண்டியிருக்கிறது. (ரோமர் 7:21–25) மேலும் சாத்தான், “உலகத்தின் அதிபதி,” மாம்சத்தின் பெலவீனங்களை அறிந்திருக்கிறான், சோதனை செய்வதில் கைத்தேர்ந்தவனாக இருக்கிறான். (யோவான் 14:30; 1 யோவான் 5:19) விசுவாசத்துக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் இடர் உண்டாக்கும் இந்த மூன்று முக்கிய அபாயங்கள்—மாம்சம், உலகம், சாத்தான்—ஆகியவை வல்லமை மிக்கவையாய் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்த போதிலும், “உலகத்தின் பாகமாக” இல்லாமல் இருக்க சாத்தியமிருக்கிறது. நாம் ‘ஆவிக்கேற்றபடி நடந்து கொண்டு, மாம்ச இச்சையை நிறைவேற்றாமல்’ இருக்கலாம். தெய்வீக உதவியோடு ‘பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கலாம்.’ (யோவான் 17:15, 16; கலாத்தியர் 5:16; எபேசியர் 6:11; 2 கொரிந்தியர் 2:11) விசுவாசத்துக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் இடர் உண்டாக்கும் இந்த மூன்று முக்கிய காரியங்களை நாம் எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை நாம் இப்போது சிந்திக்கலாம்.
8. நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு எதிராக செயல்படுகிற நமக்குள்ளே இருக்கும் சக்திகளை இயேசு எவ்வாறு விவரிக்கிறார்?
8 நம்முடைய அபூரண மானிட தன்மைக்குள்ளே பாவத்தில் விளைவடையக்கூடிய சக்திகள் இருக்கின்றன, அவைகள் நம்மை ஆவிக்குரிய விதத்தில் நோயுறச் செய்யலாம். (யாக்கோபு 1:14, 15) அடையாளப்பூர்வமான இருதயத்துக்குள்ளே இது முக்கியமாக உண்மையாயிருக்கிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டு வரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.”—மாற்கு 7:21–23.
9. (எ) அடையாள அர்த்தமுள்ள இருதயத்தில் என்ன ஆசைகள் வேர் கொண்டிருக்கின்றன? (பி) நீதிமொழிகள் 4:20–23-ன் பிரகாரம் நாம் எவ்வாறு இருதயத்தைக் காத்துக் கொள்ள முடியும்?
9 இருதயம் கெட்ட ஆசைகளின் ஊற்றுமூலமாய் இருந்த போதிலும், தெய்வீக நபர்களில் யெகோவாவுக்கான பயபக்தியும் சரியான காரியங்களுக்கான அன்பின் இருப்பிடமாகவும் இருக்கிறது. (மத்தேயு 22:37; எபேசியர் 4:20–24) நம்முடைய விஷயத்தில் நல்லதா அல்லது கெட்டதா எது மேலோங்கியிருக்கும் என்பது நாம் நம்முடைய இருதயங்களுக்குள் எதை எடுத்துக் கொள்கிறோம் என்பதன் பேரில் சார்ந்திருக்கிறது. கடவுளுடைய வார்த்தை இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக் கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள், அதனிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:20–23.
10. நம்முடைய மாம்ச பெலவீனங்கள் நம்முடைய உணர்ச்சிகளையும் விருப்பங்களையும் எவ்வாறு பாதிக்கிறது?
10 நம்முடைய மாம்ச பெலவீனங்கள் நம்முடைய உணர்ச்சிகளையும், விருப்பங்களையும் பாதிக்கிறது. உற்சாகமிழத்தல், பொறுமையின்மை, உணர்ச்சி புண்படுதல் ஆகியவற்றால் யார் தான் தொல்லைக்குள்ளானதில்லை? இப்படிப்பட்ட மாம்சப் பிரகாரமான மனச்சாய்வுகளை நாம் உடனடியாக திருத்தினால், ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்ளலாம். ஆனால் பெருமையும், பேராவலும் இருதயத்தில் விரைவில் வேர் கொள்ளக்கூடும். பேராசை, மட்டுக்கு மீறிய இன்பங்கள், களியாட்டங்கள் மேற்கொண்டு விடலாம். கடவுள் நம்மை உண்டாக்கியிருக்கும் விதத்தினால் பால் சம்பந்தமான ஆசைகள் இயல்பானதாக இருந்தாலும், தந்திரமாக வழிதவறிப் போக நம்மை நடத்தக்கூடும். அப்படிப்பட்ட ஆவிக்குரிய நோய் நமக்குள் தோன்றுவதைத் தடுப்பதற்கு, கடவுளுடைய ஆவியின் கனிகளை நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நாம் வளர்ப்பது அவசியமாகும். “தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக் கொண்டிருப்பதற்கு” நம்மையே பயிற்றுவித்துக் கொள்ள வேண்டும்.—ரோமர் 12:9; கலாத்தியர் 5:22, 23.
ஆவிக்குரிய நோயின் வெளிப்புற ஊற்றுமூலங்கள்
11. (எ) உலகப்பிரகாரமான எந்த மனநிலைகளும் செயல்களும் தொற்றும் தன்மை உடையதாயிருக்கிறது? (பி) இயேசுவின் பிரகாரம், என்ன விதங்களில் நாம் நம்முடைய இருதயங்களுக்கு கவனம் செலுத்த வேண்டும்?
11 ஆவிக்குரிய தொற்றுநோய் வெளிப்புற ஊற்று மூலங்களிலிருந்து வரலாம். இது ஆவிக்குரிய பிரகாரமாய் மரித்துப் போனவர்களிடமிருந்து நமக்குப் பரவலாம். (எபேசியர் 2:1–3) அவர்களோடு நாம் அதிக நெருக்கமாக இருந்தால், அவர்களுடைய மனச்சாய்வுகளையும் வாழ்க்கைப் பாணியையும் நாம் கற்றுக்கொண்டுவிடலாம். உலகப்பிரகாரமான வேலையில் முன்னேறுவது, பண ஆசை, பொருள் உடைமைகளில் சிறந்ததை அனுபவிப்பது, நல்ல நேரத்தை கொண்டிருப்பது ஆகியவை இந்த உலகத்து ஜனங்களின் வாழ்க்கையில் பெரிய காரியங்களாக இருக்கின்றன. அப்படிப்பட்ட காரியங்களுக்கான ஆசை தொற்றும் தன்மை உடையதாயிருக்கிறது, மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதன் செல்வாக்குக்கு நம்மை உட்படுத்துவதும்கூட ஆவிக்குரிய விதத்தில் நம்மை மந்தமாக்கும். இயேசு இவ்வாறு எச்சரித்தார்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும்.”—லூக்கா 21:34, 35.
12. தவறான எண்ணங்களும் போதனைகளும் எவ்விதமாக நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்?
12 இந்த உலகத்தின் தவறான எண்ணங்களும் போதனைகளும்கூட நம்மைத் தொற்றிக் கொள்ளலாம். பவுல் இவ்வாறு எச்சரித்தார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக் கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக் கதைகளுக்குச் சாய்ந்து போகுங் காலம் வரும்.” (2 தீமோத்தேயு 4:3, 4) பொய் போதகங்கள் தசையழுகல் நோய்க்கு ஒப்பாயிருக்கிறது. (2 தீமோத்தேயு 2:16, 17) அது தோன்றும் போது, உங்களுடைய உடலின் ஒரு பாகம் மரித்துப் போகிறது, ஏனென்றால் ஜீவனை–அளிக்கும் இரத்தம் உடலில் அந்தப் பாகத்துக்கு செல்லாமல் நின்று விடுகிறது.
13. தசையழுகும் நோயைப் போன்று, ஆவிக்குரிய நோய் ஏற்பட்டுவிட்டதேயானால், என்ன செய்யப்பட வேண்டும்?
13 தசையழுகல் நோய் எவ்வளவு விரைவாக பரவுகிறது! மரணத்தை தவிர்ப்பதற்கு மருத்துவர் உடலின் ஒரு பகுதியை வெட்டியெடுக்க வேண்டியிருக்கலாம். ஆகையால், சந்தேகங்கள், குறைகள் அல்லது விசுவாச துரோகம் ஆகியவை உங்களை ஆவிக்குரிய பிரகாரமாய் மாசுபடுத்த அச்சுறுத்தினால், அவைகளை விரைவாக துண்டித்து விடுங்கள். (மத்தேயு 5:29, 30 ஒப்பிடுக.) சபை மூப்பர்களிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். “தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய் கொண்டவர்கள்” என்று பவுல் விவரித்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள், ஏனென்றால் அவர்கள் ‘ஆரோக்கியமான வசனங்களை ஒப்புக்கொள்ளவில்லை.’—1 தீமோத்தேயு 6:3, 4.
14. சபையின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு மூப்பர்கள் என்ன செய்வது அவசியமாயிருப்பதாக காணலாம்?
14 சபையின் ஆவிக்குரிய ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு, மூப்பர்கள் “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்தி சொல்லவும், எதிர் பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும்” வேண்டும். (தீத்து 1:9, 13, 16; 2:1) அப்படிப்பட்ட நபர்கள் ஒருவேளை ஆவிக்குரிய பிரகாரமாய் ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பவும் கொண்டுவரப்படலாம். (2 தீமோத்தேயு 2:23–26) ஆனால் அவர்கள் மனந்திரும்பாமல் பொய் போதகங்களை முன்னேற்றுவித்தால் அப்போது என்ன? அப்போது அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். அவர்கள் சபை நீக்கம் செய்யப்படுகின்றனர், நாம் அவர்களை விட்டு பிரிந்து இருக்கிறோம், ஏனென்றால் அவர்களுடைய ஆவிக்குரிய தொற்றுநோய் நமக்கும் பரவாமல் இருப்பதற்காக.—ரோமர் 16:17, 18; 1 கொரிந்தியர் 5:9–13; தீத்து 3:9–11.
15. கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு தீங்கு செய்ய முயற்சி செய்கையில், பிசாசு என்ன இரண்டு முக்கிய அணுகுமுறைகளை பயன்படுத்தியிருக்கிறான்?
15 விசுவாசத்துக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் அபாயகரமாய் இருக்கும் மூன்றாவது ஊற்றுமூலம் சாத்தான். (எபேசியர் 6:11, 12) துன்புறுத்தல், மக்கட் கும்பல் வன்முறை, அடிகள், சிறையிருப்புகள், மரண பயமுறுத்தல்கள் ஆகியவற்றின் மூலம் யெகோவாவின் ஜனங்களின் விசுவாசத்தை பெலவீனப்படுத்த நம்முடைய நாள் வரை அவன் முயற்சி செய்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 2:10) இப்படிப்பட்ட சூழ்ச்சிமுறைகளைக் கொண்டு கடவுளுடைய ஊழியர்களில் ஒருவரின் உத்தமத்தன்மையை முறிப்பதில் எப்போதாவது மட்டுமே வெற்றியடைவதால், இந்த உலகத்தின் கடவுளாயிருக்கும் அவன் சிலரை விழுந்து போகும்படி செய்வதற்கு இந்த உலகத்தின் கவர்ச்சிகளை உபயோகப்படுத்துகிறான்.—2 கொரிந்தியர் 4:4; 11:3, 14.
16. நம்முடைய விசுவாசம் மற்றும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தின் மீது பிசாசின் தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு என்ன பாதுகாப்பு முறைகள் நமக்கு இருக்கின்றன?
16 சாத்தானின் மூலம் வரும் தாக்குதல்களை நாம் எவ்வாறு எதிர்த்து நிற்கலாம்? கடவுளிடமிருந்து வரும் எல்லா ஆவிக்குரிய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக் கொள்வதன் மூலம். சாத்தான் நம்மீது எறியும் ‘அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப் போடத்தக்கதாய், விசுவாசமென்னும் கேடகத்தை’ விசேஷமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாய் நாம் ஜெபிக்கவும் வேண்டும்: “எங்களைச் சோதனைக்குள் கொண்டுவராமல், தீயவனிடமிருந்து எங்களை மீட்டருளும்.” (எபேசியர் 6:11–18; மத்தேயு 6:13, NW) அந்த விதத்தில் நாம் ஜெபித்து, நம்முடைய ஜெபங்களுக்கு இசைவாக செயல்பட்டோமென்றால், சாத்தானின் எல்லா அக்கினியாஸ்திரங்களையும் அவித்துப் போடுவதற்கு நம்முடைய பரலோக தகப்பனின் உதவியை நாம் எதிர்பார்க்கலாம்.
விசுவாசத்தில் ஆரோக்கியமாக நிலைத்திருத்தல்
17. ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வதில், “ஏற்ற வேளையிலே உணவு” எடுப்பதும் கிறிஸ்தவ வேலைகளில் ஒழுங்காக பங்குகெள்வதும் எவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
17 நல்ல உடல் ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வதில் நோயை வருமுன் காப்பது ஒரு பெரிய அம்சமாகும். ஊட்டமிக்க உணவு, சரியான பயிற்சி, மனம் மற்றும் உடலின் பொதுவான கவனிப்பு ஆகியவை முக்கியமானதாகும். ஓர் ஆரோக்கியமான உடலில் நோய்க்கு எதிராக இயற்கையாக இருக்கும் எதிர்ப்புச் சக்திகள் அதிக பலமானதாக இருக்கின்றன. அதே போன்று, ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக் கொள்வதற்கு கடவுள் குறித்துக் கொடுக்கும் திட்ட உணவை பின்பற்றுவதும், “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாய் “ஏற்ற வேளையிலே” கொடுக்கப்படும் ஊட்டமான ஆவிக்குரிய உணவை மதித்துணர்வதும் இன்றியமையாததாகும். இந்த உலகத்தின் குப்பையான ஆவிக்குரிய உணவை தள்ளிவிட்டு, நாம் பைபிளையும், கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிக்க வேண்டும், கடவுளுடைய ஜனங்களோடு ஒழுங்காக கூடிவர வேண்டும். (மத்தேயு 24:45–47; எபிரெயர் 10:24, 25) ஊழியத்திலும், மற்ற கிறிஸ்தவ வேலைகளிலும் “கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும்” இருப்பதிலிருந்து விளைவடையும் பயிற்சியும் நமக்குத் தேவை.—1 கொரிந்தியர் 15:58.
18. “ஆரோக்கியமான வசனங்களின் சட்டம்” என்ன? அதை நாம் ஏன் இருதயத்திலும் மனதிலும் வைக்க வேண்டும்?
18 விசுவாசத்தில் ஆரோக்கியமாக நிலைத்திருப்பதற்கு, கடவுளுடைய ஆவிக்குரிய ஏற்பாடுகளை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்னபடி: “நீ கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம் பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக் கொள்.” (2 தீமோத்தேயு 1:13, 14) ஒரு மொழி வார்த்தைகளின் சட்டத்தைக் கொண்டிருக்கின்றது. அதே போன்று ராஜ்யத்தின் மூலம் யெகோவா நியாயநிரூபணஞ் செய்யப்படும் பொருளை முக்கிய அடிப்படையாகக் கொண்ட பைபிள் சத்தியமாகிய “சுத்தமான பாஷை” ஒரு சட்டத்தைக் கொண்டிருக்கிறது. (செப்பனியா 3:9) நம்முடைய விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக் கொள்ள வேண்டுமென்றால் இந்த ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தை நாம் மனதிலும் இருதயத்திலும் வைக்க வேண்டும். இல்லையென்றால், அது நமக்கு முக்கியமற்றதாய் மறைந்து விடும். இது கொரிந்துவில் இருந்த சபையில் ஏற்பட்டது, ஆவிக்குரிய புரிந்து கொள்ளும் திறன் குறைவுபட்டதால் அங்கிருந்த சிலர் “பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாய்” இருந்தனர்.—1 கொரிந்தியர் 11:29–32.
19. (எ) ஆவிக்குரிய நோய் பற்றியிருந்தால், என்ன செய்யப்பட வேண்டும்? (பி) ஒரு நபர் ஆவிக்குரிய வகையில் நோயுற்றிருந்தால் மூப்பர்கள் என்ன செய்யலாம்?
19 ஆவிக்குரிய நோய் உங்களை பற்றியிருந்தால் என்ன செய்யப்பட வேண்டும்? அன்பான உதவி நிச்சயமாகவே தேவைப்படுகிறது, அது கிடைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. இதை யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்.” (யாக்கோபு 5:14) ஆம், மூப்பர்களை வரவழையுங்கள் ஆவிக்குரிய மருத்துவர்களாக ஆவிக்குரிய நோயின் வேருக்கு சென்று அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். கடவுளுடைய வார்த்தையின் குணமாக்கும் எண்ணெயை அவர்கள் மென்மையாக ஆனால் திறம்பட்டவிதமாக பூசுவர். நீங்கள் பாவங்கள் செய்து, மனந்திரும்பியிருப்பீர்களானால் யெகோவா உண்மையிலேயே மன்னிப்பார் என்று உறுதி கொண்டிருங்கள். (சங்கீதம் 103:8–14) மூப்பர்கள் உங்களோடும், உங்கள் சார்பாகவும் ஜெபிக்கையில், என்ன எதிர்பார்க்கப்படலாம்? யாக்கோபு பின்வருமாறு பதிலளிக்கிறார்: “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் [யெகோவா, NW] அவனை எழுப்புவார்; அவன் பாவஞ் செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்.”—யாக்கோபு 5:15.
ஆவிக்குரிய ஆரோக்கியம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது
20. (எ) ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்வது குறித்து முதல் நூற்றாண்டு ஆளும் குழு என்ன புத்திமதியைக் கொடுத்தது? (பி) புதிய உலகத்து ஆசீர்வாதங்களுக்காக நாம் காத்துக்கொண்டிருக்கையில் நமக்கு எது உதவி செய்யும்?
20 “சுகமாயிருப்பீர்களாக.” யெகோவாவின் ஜனங்களின் முதல் நூற்றாண்டு ஆளும் குழு, கிறிஸ்தவர்களிடமிருந்து கேட்கப்படும் ‘அவசியமான காரியங்களைக்’ குறிப்பிட்டு அதனுடைய கடிதத்தை மேலே கூறப்பட்டிருக்கும் வார்த்தைகளோடு முடித்தது. அவர்கள் “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும் விலகியிருக்க” வேண்டியிருந்தது. (அப்போஸ்தலர் 15:28, 29) நல்ல ஆரோக்கியத்துக்கு அந்த அறிவுரைகள் இன்னும் செல்லுபடியானதாயிருக்கிறது. புதிய உலகத்து ஆசீர்வாதங்களுக்காக நாம் காத்துக் கொண்டிருக்கையில், இந்த நோயுற்ற உலகத்தில் யெகோவாவின் நாமத்தை உயர்த்தி, வைராக்கியத்தோடு ராஜ்ய நற்செய்தியை நாம் தொடர்ந்து பிரசங்கித்தோமானால், நம்முடைய விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் நாம் காத்துக் கொள்ளலாம். இந்த விதத்தில் அதிக வேலையுள்ளவர்களாக நிலைத்திருப்பது மிகவும் அருகாமையில் இருக்கும் புதிய உலகத்து ஆசீர்வாதங்களுக்காக பொறுமையற்றவர்களாக ஆகிவிடாமல் இருக்க நம்மை வைக்கும். உண்மைதான், “நெடுங்காலமாய்க் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்.”—நீதிமொழிகள் 13:12.
21. நோயுற்ற இந்த உலகில் தங்கள் விசுவாசத்தையும் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் வெற்றிகரமாக காத்துக்கொள்பவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன?
21 தன்னை நேசிப்பவர்களுக்காக யெகோவா வைத்திருக்கும் மகத்தான ஆசீர்வாதங்களை தவறவிடாதீர்கள். உலகப்பிரகாரமான செல்வாக்குகளை எதிர்த்ததும், உங்களுடைய சரீரப்பிரகாரமான பெலவீனங்களோடு போராடியதும், சாத்தானின் எரியும் அக்கினியாஸ்திரங்களை அவித்துப்போட்டதும் வீணானவைகளாக இருந்திருக்காது. யெகோவாவின் புதிய உலகில், “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை” என்ற காலத்தை நீங்கள் உங்கள் சொந்த கண்களிலேயே காண்பீர்கள். (ஏசாயா 33:24) “நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்த” இயேசு கிறிஸ்துவின் மீட்பின் பலியின் மூலம் கடவுளுடைய ஏற்பாட்டின் காரணமாக இது உண்மையாயிருக்கும். (மத்தேயு 8:17; ஏசாயா 53:4) “ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி”யிலிருந்து நீங்கள் பருக முடியும், “ஜனங்கள் ஆரோக்கியமடைவதற்கு ஏதுவான” இலைகளையுடைய “ஜீவ விருட்சத்”திலிருந்து சாப்பிட முடியும். (வெளிப்படுத்துதல் 22:1, 2) இந்த நோயுற்ற உலகில் உங்களுடைய விசுவாசத்தையும், ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் காத்துக் கொண்டதற்கு உங்களுடைய வெகுமதி பரிபூரணமும் சந்தோஷமுமான முடிவில்லா வாழ்வாக இருக்கும். (w89 10/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ நல்ல சரீர ஆரோக்கியத்துடன் இருப்பதைக் காட்டிலும் விசுவாசத்தில் ஆரோக்கியமாக இருப்பது ஏன் அதிமுக்கியமானது?
◻ விசுவாசத்துக்கும் ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் கேடு உண்டாக்கும் மூன்று முக்கிய அபாயங்கள் யாவை?
◻ அடையாளப்பூர்வமான இருதயத்துக்கும் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
◻ ஒருவர் ஆவிக்குரிய பிரகாரமாய் நோயுற்றிருந்தால், என்ன செய்யப்பட வேண்டும்?
[பக்கம் 24-ன் படம்]
நோயுற்ற ஓர் உலகிலும்கூட, பலமான விசுவாசத்தையும் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும் கொண்டிருப்பது சாத்தியமாகும்
[பக்கம் 26-ன் படம்]
நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியம் வைராக்கியமான கிறிஸ்தவ நடவடிக்கைகளையும் ஏற்ற வேளையில் ஒழுங்காக ஆவிக்குரிய உணவை எடுத்துக்கொள்வதையும் சார்ந்திருக்கிறது