கிறிஸ்தவர்களும் உலக மக்களும்
“புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து . . . கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 4:5.
1. தம்மைப் பின்பற்றினவர்களையும் இந்த உலகத்தையும் குறித்து இயேசு என்ன சொன்னார்?
இயேசு, தம்முடைய பரலோக தகப்பனிடம் செய்த ஒரு ஜெபத்தில், தம்மைப் பின்பற்றினோரைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “உலகம் அவர்களைப் பகைத்தது, ஏனெனில் நான் இந்த உலகத்தின் பாகமானவனாக இல்லாததுபோல், அவர்களும் இந்த உலகத்தின் பாகமானோராக இல்லை.” பின்பு அவர் மேலும் தொடர்ந்து சொன்னார்: “உலகத்திலிருந்து அவர்களை எடுத்துவிடும்படியல்ல, ஆனால் பொல்லாங்கனின் நிமித்தமாக அவர்கள்மீது கவனம் வைக்கும்படியே நான் உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.” (யோவான் 17:14, 15, NW) சரீரப்பிரகாரமாய் கிறிஸ்தவர்கள் இந்த உலகத்திலிருந்து பிரிந்து—உதாரணமாக, துறவி மடங்களில்—தனித்து வாழவேண்டியதில்லை. மாறாக, அவர்கள், ‘பூமியின் மிகத் தொலைதூர பாகமளவாகவும்’ தம்முடைய சாட்சிகளாக இருக்கும்படி, கிறிஸ்து அவர்களை ‘உலகத்திற்குள் அனுப்பினார்.’ (யோவான் 17:18; அப்போஸ்தலர் 1:8, NW) இருப்பினும், கிறிஸ்துவின் பெயரின் நிமித்தம் அவர்களுக்கு விரோதமாக பகையைத் தூண்டிவிடப்போகிற ‘இந்த உலகத்தின் அதிபதியாகிய’ சாத்தானின் காரணமாக அவர்கள்மீது கவனம் கொள்ளும்படி கடவுளிடம் விண்ணப்பித்தார்.—யோவான் 12:31; மத்தேயு 24:9.
2. (அ) “உலகம்” என்ற இந்தச் சொல்லை பைபிள் எவ்வாறு பயன்படுத்துகிறது? (ஆ) சமநிலையான என்ன மனப்பான்மையை யெகோவா இந்த உலகத்தினிடமாக காட்டுகிறார்?
2 பைபிளில் “உலகம்” (கிரேக்கில், காஸ்மாஸ்), என்ற சொல், “பொல்லாங்கனுக்குள் கிடக்கிற” அநீதியுள்ள மனித சமுதாயத்தை அடிக்கடி குறிப்பிடுகிறது. (1 யோவான் 5:19) கிறிஸ்தவர்கள், யெகோவாவின் தராதரங்களுக்கு உட்பட்டு நடப்பதாலும், மேலும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை உலகத்திற்குப் பிரசங்கிக்கும்படியான கட்டளைக்குக் கீழ்ப்படிவதாலும், சில சமயங்களில் அவர்களுக்கும் உலகத்திற்கும் இடையேயுள்ள உறவில் சிக்கல் இருந்து வந்திருக்கிறது. (2 தீமோத்தேயு 3:12; 1 யோவான் 3:1, 13) எனினும், காஸ்மாஸ், பொதுவில் மனித குடும்பத்தைக் குறிப்பிடுவதற்கும் வேதவசனத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தில் உலகத்தைக் குறித்து பேசுபவராய், இயேசு இவ்வாறு சொன்னார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.” (யோவான் 3:16, 17; 2 கொரிந்தியர் 5:19; 1 யோவான் 4:14) ஆகையால், சாத்தானின் பொல்லாத ஒழுங்குமுறையை அடையாளப்படுத்திக் காண்பிக்கும் அம்சங்களை வெறுக்கிறபோதிலும், ‘மனந்திரும்புகிற’ எல்லாரையும் இரட்சிக்கும்படி தம்முடைய குமாரனை பூமிக்கு அனுப்பினதன் மூலம் யெகோவா மனிதவர்க்கத்திற்கு தம்முடைய அன்பைக் காட்டினார். (2 பேதுரு 3:9; நீதிமொழிகள் 6:16-19) உலகத்தினிடமாக யெகோவா கொண்டுள்ள சமநிலையான மனப்பான்மை அவருடைய வணக்கத்தாரை வழிநடத்த வேண்டும்.
இயேசுவின் முன்மாதிரி
3, 4. (அ) ஆளுகையைக் குறித்ததில் இயேசு என்ன நிலையை ஏற்றார்? (ஆ) உலக மக்களை இயேசு எவ்வாறு கருதினார்?
3 இயேசு, தம்முடைய மரணத்திற்குச் சிறிது முன்பு, பொந்தியு பிலாத்துவினிடம்: “என் ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமானதல்ல” என்று சொன்னார். (யோவான் 18:36, NW) இந்த வார்த்தைகளுக்கு ஒத்திசைவாக, அதற்கு முன்னால் இயேசு, உலக ராஜ்யங்களின்மீது அதிகாரத்தைக் கொடுப்பதற்கு முன்வந்த சாத்தானின் அளிப்பை ஏற்காது தள்ளிவிட்டிருந்தார். மேலும் யூதர் தம்மை அரசராக்குவதற்கும் அனுமதிக்கவில்லை. (லூக்கா 4:5-8; யோவான் 6:14, 15) எனினும், உலக மக்கள்மீது இயேசு மிகுதியான அன்பு காட்டினார். இதற்கு ஓர் உதாரணம் அப்போஸ்தலனாகிய மத்தேயுவினால் அறிக்கை செய்யப்பட்டது: “அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி[னார்].” அவர் அன்பினால் தூண்டப்பட்டு, ஜனங்களுக்கு, அவர்களுடைய பட்டணங்களிலும் கிராமங்களிலும் பிரசங்கித்தார். அவர்களுக்குப் போதித்து அவர்களுடைய நோய்களைச் சுகப்படுத்தினார். (மத்தேயு 9:36) தம்மிடம் கற்றுக்கொள்ள வந்தவர்களின் சரீரப்பிரகாரமான தேவைகளுக்கும்கூட உணர்வுள்ளவராக இருந்தார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார்.” (மத்தேயு 15:32) எத்தகைய அன்புள்ள அக்கறை!
4 சமாரியர்களுக்கு எதிராக யூதர் மிகுந்த தப்பெண்ணமுடையோராக இருந்தனர். ஆனால் இயேசு, ஒரு சமாரிய பெண்ணிடம் நெடுநேரம் பேசினார், மற்றும் ஒரு சமாரிய பட்டணத்தில் முழுமையான சாட்சி பகர்வதில் இரண்டு நாட்கள் செலவிட்டார். (யோவான் 4:5-42) “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு” கடவுள் அவரை அனுப்பியிருந்தபோதிலும், யூதரல்லாத மற்றவர்கள் விசுவாசம் காட்டின சில சந்தர்ப்பங்களில் அவர்களுக்கும் உதவிசெய்தார். (மத்தேயு 8:5-13; 15:21-28) ஆம், ‘உலகத்தின் பாகமல்லாதவர்களாக’ இருந்து, அதே சமயத்தில் உலக மக்களுக்கு அதாவது ஆட்களுக்கு, அன்பு காட்டமுடியும் என்பதை இயேசு மெய்ப்பித்துக் காட்டினார். நாம் வசிக்கும் இடத்தில், வேலை செய்யும் இடத்தில், அல்லது பொருட்கள் வாங்க செல்லுமிடத்தில் இருக்கும் ஆட்களுக்கு அதைப்போன்ற அன்பை நாம் காண்பிக்கிறோமா? அவர்களுடைய நலனில் நாம் அக்கறை காண்பிக்கிறோமா? அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளுக்கு மட்டுமல்லாமல், மற்ற தேவைகளுக்கும்கூட, உதவி செய்யத்தக்க நிலையில் நாம் இருக்கையில், அக்கறை காட்டுகிறோமா? இயேசு அவ்வாறு அக்கறை காட்டினார். அவ்வாறு செய்ததன்மூலம், ராஜ்யத்தைப் பற்றி ஜனங்களுக்கு போதிக்க வழிதிறந்தார். உண்மைதான், இயேசு செய்ததைப்போல் சொல்லர்த்தமான அற்புதங்களை நாம் நடப்பிக்க முடியாது. ஆனால், தயவுள்ள ஒரு செயல், தப்பெண்ணத்தைப் போக்குவதில் அற்புதங்களை அடிக்கடி நடப்பிக்கிறது என்று சொல்லலாம்.
“புறம்பே இருக்கிற” ஆட்களிடமாக பவுலின் மனப்பான்மை
5, 6. ‘‘புறம்பே இருந்தவர்களான’ யூதரை அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு நடத்தினார்?
5 யூதர்களிலும் புறஜாதியார்களிலும் கிறிஸ்தவர்களாக இல்லாதவர்களை, “புறம்பே இருக்கிறவர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல், தன் நிருபங்கள் பலவற்றில் குறிப்பிடுகிறார். (1 கொரிந்தியர் 5:12; 1 தெசலோனிக்கேயர் 4:11; 1 தீமோத்தேயு 3:7) அத்தகையோரை அவர் எவ்வாறு நடத்தினார்? ‘எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு அவர் எல்லாருக்கும் எல்லாமானார்.’ (1 கொரிந்தியர் 9:20-22) ஒரு பட்டணத்திற்கு அவர் போய்ச் சேர்ந்தவுடன், அங்கு குடியிருந்த யூதரிடம் முதலாவதாகச் செல்வதே அவருடைய பிரசங்க ஊழியத்தின் வழக்கமாக இருந்தது. அவருடைய அணுகுமுறை என்னவாக இருந்தது? மேசியா வந்துவிட்டதையும் பலிக்குரிய மரணத்தில் மரித்ததையும் உயிர்த்தெழுப்பப்பட்டதையும் நம்பும்படியான பைபிள் நிரூபணங்களைச் சாதுரியத்துடனும் பணிவுடனும் எடுத்துக் கூறினார்.—அப்போஸ்தலர் 13:5, 14-16, 43; 17:1-3, 10.
6 இவ்வகையில், மேசியாவையும் கடவுளுடைய ராஜ்யத்தையும் பற்றி யூதருக்குப் போதிக்கும்படி, நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசனங்களிலும் யூதருக்கு இருந்த அறிவை அடிப்படையாகக்கொண்டு அவர் பேசினார். சிலரை விசுவாசிகளாக்கும்படி செய்ய அவரால் முடிந்தது. (அப்போஸ்தலர் 14:1; 17:4) யூதத் தலைவர்களின் எதிர்ப்பின் மத்தியிலும், பவுல் இவ்வாறு எழுதினபோது, உடன் யூதர்களிடமாக தனக்கிருந்த அன்பான உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்: “சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சிச்சொல்லுகிறேன்; ஆகிலும் அது [“திருத்தமான,” NW] அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல.”—ரோமர் 10:1, 2.
யூதரல்லாத விசுவாசிகளுக்கு உதவி செய்தல்
7. பவுல் பிரசங்கித்த நற்செய்திக்கு யூத மதத்தை தழுவியவர்களில் பலர் எவ்வாறு பிரதிபலித்தனர்?
7 யூத மதத்தைத் தழுவியவர்கள் யார் என்றால், விருத்தசேதனம் செய்துகொண்டு, யூதமத கோட்பாடுகளைக் கடைப்பிடித்த யூதரல்லாதவர்களே. ரோமிலும், சீரிய அந்தியோகியாவிலும், எத்தியோப்பியாவிலும், பிசீதியாவிலுள்ள அந்தியோகியாவிலும்—நிச்சயமாகவே, யூதர்கள் சிதறிச் சென்றிருந்த எல்லா இடங்களிலும்—யூத மதம் மாறியவர்கள் இருந்தனர். (அப்போஸ்தலர் 2:8-10; 6:5; 8:27; 13:14, 43; ஒப்பிடுக: மத்தேயு 23:15.) யூத மதத்தை ஏற்ற இவர்கள், யூத அரசர்கள் பலரைப்போல் அகந்தையுள்ளவர்களாக இல்லையெனத் தோன்றுகிறது. ஆபிரகாமின் சந்ததியினரென அவர்கள் பெருமை பேச முடியாது. (மத்தேயு 3:9; யோவான் 8:33) மாறாக, அவர்கள், யெகோவாவையும் அவருடைய சட்டங்களையும் பற்றி ஓரளவு அறிவைப் பெற்று, புறமத தெய்வங்களை விட்டொழித்து, மனத்தாழ்மையுடன் யெகோவாவிடம் திரும்பியிருந்தார்கள். வரவிருந்த மேசியாவைப் பற்றிய யூத நம்பிக்கையை அவர்கள் ஏற்றிருந்தனர். சத்தியத்திற்காக நாடித் தேடி, ஏற்கெனவே தங்கள் வாழ்க்கையில் மாற்றம் செய்ய விருப்பமுள்ளவர்களாய் இருந்த இவர்களில் பெரும்பான்மையர் அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்ததற்குச் சாதகமாகப் பிரதிபலித்து மேலும் அதிக மாற்றங்களைச் செய்ய ஆயத்தமாக இருந்தனர். (அப்போஸ்தலர் 13:42, 43) ஒரு காலத்தில் புறமத தெய்வங்களை வணங்கிவந்திருந்து யூத மதத்தை ஏற்ற ஒருவர், கிறிஸ்தவத்திற்கு மதம் மாறியபோது, அந்தத் தெய்வங்களை இன்னும் வணங்கிவந்த மற்ற புறஜாதியாருக்குச் சாட்சிபகர தனிப்பட்ட முறையில் தகுதிபெற்றவராக இருந்தார்.
8, 9. (அ) யூத மார்க்கத்தைத் தழுவினவர்கள் மட்டுமல்லாமல், வேறு எந்த புறஜாதி வகுப்பார் யூத மதத்தினிடமாக மனம் கவரப்பட்டார்கள்? (ஆ) விருத்தசேதனம் செய்யப்படாத, கடவுள் பயமுள்ளோர் பலர் நற்செய்திக்கு எவ்வாறு பிரதிபலித்தனர்?
8 விருத்தசேதனம் செய்யப்பட்டு யூத மதத்தைத் தழுவின இவர்கள் மட்டுமல்லாமல், யூதரல்லாத மற்றவர்களும்கூட யூத மதத்தினிடமாக மனம் கவரப்பட்டார்கள். இவர்களில் முதலாவதாக கிறிஸ்தவரானவர் கொர்நேலியு. இவர் யூத மதத்தைத் தழுவினவராக இராதபோதிலும், ‘தேவபக்தியுள்ளவரும், தேவனுக்குப் பயந்தவருமாயிருந்தார்.’ (அப்போஸ்தலர் 10:2) அப்போஸ்தலருடைய நடபடிகளின்பேரில் எழுதின தன் விளக்கவுரையில், பேராசிரியர் எஃப். எஃப். புரூஸ் இவ்வாறு எழுதினார்: “அத்தகைய புறஜாதியார் ‘கடவுள் பயமுள்ளவர்கள்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறார்கள்; இது குறிப்பிட்ட ஒரு தனி பெயராக இராதபோதிலும், பயன்படுத்துவதற்கு வசதியான ஒன்றாக இருக்கிறது. அந்நாட்களில் வாழ்ந்த புறஜாதியார் பலர், (விருத்தசேதனம் செய்யவேண்டுமென்பது ஆண்களுக்கு இடறலாக இருந்ததனால்) யூத மதத்திற்கு முழுமையாக மாற தயாராய் இல்லை; ஆனாலும், ஒரே கடவுள் என்ற எளிய நம்பிக்கையின் அடிப்படையிலான யூத ஜெபாலயத்தின் எளிய முறையான வணக்கமுறையாலும், யூத வாழ்க்கை முறையின் நன்னெறி பண்பாடுகளாலும் மனம் கவரப்பட்டார்கள். அவர்களில் சிலர் ஜெபாலயங்களுக்கு வந்து ஜெபங்களிலும், கிரேக்க மொழிபெயர்ப்பில் வாசிக்கப்பட்ட வேத பாடங்களிலும் ஓரளவு அறிவுபெற்றவர்களாக ஆனார்கள்.”
9 அப்போஸ்தலன் பவுல், ஆசிய மைனரிலும் கிரீஸிலும் இருந்த ஜெபாலயங்களில் பிரசங்கித்தபோது, கடவுள் பயமுள்ளோரான பலரைச் சந்தித்தார். பிசீதியா அந்தியோகியாவிலிருந்த ஜெபாலயத்தில் கூடிவந்திருந்தவர்களை, “சகோதரரே, இஸ்ரவேலர்களே, கடவுளுக்குப் பயந்து நடக்கிற மற்றவர்களே” என்று குறிப்பிட்டு பேசினார். (அப்போஸ்தலர் 13:16, 26, NW) தெசலோனிக்கேயில் இருந்த ஜெபாலயத்தில் பவுல் மூன்று ஓய்வுநாட்கள் பிரசங்கித்தப் பின்பு, “அவர்களில் [யூதரில்] சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்துகொண்டார்கள்” என்று லூக்கா எழுதுகிறார். (அப்போஸ்தலர் 17:4) அந்த கிரேக்கரில் சிலர், விருத்தசேதனம் செய்யப்படாத, கடவுள் பயமுள்ளவர்களாக இருந்திருக்கலாம். அத்தகைய புறஜாதியார் பலர், யூத சமுதாயத்தினருடன் தங்களை இணைத்துக் கொண்டார்கள் என்பதற்கு அத்தாட்சி உள்ளது.
‘அவிசுவாசிகளின்’ மத்தியில் பிரசங்கிப்பது
10. வேதவாக்கியங்களைப் பற்றியதில் எந்த அறிவும் இல்லாத புறஜாதியாருக்கு பவுல் எவ்வாறு பிரசங்கித்தார், பலன் என்னவாக இருந்தது?
10 கிறிஸ்தவ கிரேக்க வேத வாக்கியங்களில், ‘அவிசுவாசிகள்’ என்ற இந்தச் சொல், கிறிஸ்தவ சபைக்குப் புறம்பேயிருந்த பொதுவான ஜனங்களைக் குறிக்கலாம். புறமதத்தினரை இது அடிக்கடி குறிப்பிடுகிறது. (ரோமர் 15:31; 1 கொரிந்தியர் 14:22, 23; 2 கொரிந்தியர் 4:4; 6:14) அத்தேனே பட்டணத்தில், அவிசுவாசிகள் பலர், கிரேக்க தத்துவ ஞானத்தில் கல்வி பயின்றவர்களாயிருந்தனர், வேதாகமத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாதவர்களாக இருந்தனர். இது, அவர்களுக்குச் சாட்சி கொடுப்பதிலிருந்து பின்வாங்கும்படி பவுலைச் செய்ததா? இல்லை. எனினும், அவர் தன் அணுகுமுறையை ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொண்டார். அந்த அத்தேனியர் அறியாதிருந்த எபிரெய வேதவாக்கியங்களிலிருந்து நேரடியாக மேற்கோள்கள் எடுத்துக் குறிப்பிடாமல், பைபிள் கருத்துக்களைத் திறமையுடன் அவர்களுக்கு அறிவித்தார். பைபிள் சத்தியத்திற்கும் பூர்வ ஸ்தோயிக் கவிஞர்கள் வெளிப்படுத்திக் கூறின சில கருத்துகளுக்கும் இடையே இருந்த ஒப்புமையை அவர் சாதுரியத்துடன் எடுத்துக் காட்டினார். மேலும், மனிதவர்க்கம் முழுவதற்கும் ஒரே உண்மையான கடவுள் இருக்கிறார் என்ற கோட்பாட்டை அவர் குறிப்பிட்டு, மரித்து உயிர்த்தெழுப்பப்பட்ட ஒரு மனிதரைக்கொண்டு நீதியுடன் நியாயந்தீர்க்கப்போகிற கடவுளாக அவர் இருப்பதை விளக்கிக் கூறினார். பவுல், இவ்வாறு கிறிஸ்துவைப் பற்றி அந்த அத்தேனியருக்கு சாதுரியத்துடன் பிரசங்கித்தார். இதன் பலன்? பெரும்பான்மையர் நேரடியாக ஏளனம் செய்தபோதிலும் அல்லது நம்பாதபோதிலும், “சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியோனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.”—அப்போஸ்தலர் 17:18, 21-34.
11. கொரிந்து எப்படிப்பட்ட பட்டணமாக இருந்தது, அங்கே பவுல் செய்த பிரசங்கத்தின் பலன் என்ன?
11 கொரிந்துவில், ஓரளவு பெரும் எண்ணிக்கையிலான யூத சமுதாயம் இருந்தது. ஆகையால் அங்கு ஜெபாலயத்தில் பிரசங்கிப்பதன்மூலம் பவுல் தன்னுடைய ஊழியத்தை தொடங்கினார். ஆனால் யூதர்கள் எதிர்த்து நின்றதால், பவுல் புறஜாதி ஜனங்களிடம் சென்றார். (அப்போஸ்தலர் 18:1-6) எவ்வளவு அதிகமான ஜனத்தொகை! கொரிந்து மிக அமளியானதும், பல தேசத்து ஜனங்கள் வாழ்வதும், வாணிகத் தொடர்புடையதுமான பட்டணமாக இருந்தது. கிரேக்க-ரோம உலகம் முழுவதிலும் அதன் ஒழுக்கக்கேட்டு வாழ்க்கைக்குப் பேர்போனதாக அது இருந்தது. “கொரிந்திய மயமாவது” என்பதானது, ஒழுக்கங்கெட்டு நடப்பதைக் குறித்தது. எனினும், பவுலின் பிரசங்கிப்பை யூதர்கள் ஏற்காது தள்ளிவிட்ட பின்பே, கிறிஸ்து அவருக்குத் தோன்றி: “நீ பயப்படாமல் பேசு, . . . இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு” என்று சொன்னார். (அப்போஸ்தலர் 18:9, 10) அவ்வாறே நடந்தது; கொரிந்துவில் ஒரு சபையையும் பவுல் ஸ்தாபித்தார். இதன் உறுப்பினரில் சிலர், “கொரிந்திய” வாழ்க்கைப் பாணியை ஒரு காலத்தில் பின்பற்றினவர்களாக இருந்தார்கள்.—1 கொரிந்தியர் 6:9-11.
இன்று ‘எல்லா வகையான ஆட்களும்’ இரட்சிப்படைய முயற்சி செய்தல்
12, 13. (அ) நம்முடைய பிராந்தியம் எவ்வாறு பவுலின் நாளில் இருந்ததற்கு ஒப்பாக உள்ளது? (ஆ) கிறிஸ்தவமண்டல மதங்கள் நெடுங்காலமாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் பிராந்தியங்களில் அல்லது மத அமைப்பில் நம்பிக்கையிழந்திருக்கும் பலர் இருக்கிற பிராந்தியங்களில் எப்படிப்பட்ட மனப்பான்மையை நாம் காட்டுகிறோம்?
12 இன்று, முதல் நூற்றாண்டில் இருந்ததுபோல், ‘கடவுளுடைய தகுதியற்ற தயவு . . . எல்லா வகையான ஆட்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருகிறது.’ (தீத்து 2:11, NW) நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கான பிராந்தியம், எல்லா கண்டங்களையும் தீவுகளில் பெரும்பான்மையானவற்றையும் எட்டும்படி விரிவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், பவுலின் நாளில் இருந்ததைப்போல், ‘எல்லா வகையான ஆட்களும்’ உண்மையில் சந்திக்கப்படுகின்றனர். உதாரணமாக, பல நூற்றாண்டுகளாக கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள், இருந்துவருகிற நாடுகளில் நம்மில் சிலர் பிரசங்க ஊழியம் செய்கிறோம். முதல் நூற்றாண்டு யூதர்களைப்போல், அவற்றின் சர்ச் உறுப்பினர் மத பாரம்பரியங்களால் உறுதியாய்க் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருக்கலாம். எனினும், நல்ல இருதய நிலையில் இருப்போரைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களுக்கு எந்தளவு பைபிள் அறிவு இருந்தாலும் அதை அடிப்படையாகக்கொண்டு பேசுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடைய மதத் தலைவர்கள் சில சமயங்களில் நம்மை எதிர்த்து, துன்புறுத்தினாலும்கூட நாம் அவர்களை மட்டம்தட்டி அல்லது இகழ்ச்சியாகப் பேசுவதில்லை. மாறாக, அவர்களில் சிலர் திருத்தமான அறிவைப் பெறாதவர்களாக இருக்கிறபோதிலும், ‘தேவனைப்பற்றிய வைராக்கியம்’ உடையோராக இருக்கலாம் என்று நாம் உணர்ந்துகொள்கிறோம். இயேசுவையும் பவுலையும் போல், ஆட்களிடமாக நாம் உண்மையான அன்பு காண்பித்து அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்ற மிகுந்த ஆவலையுடையோராக இருக்கிறோம்.—ரோமர் 10:2.
13 பிரசங்க ஊழியம் செய்கையில், மத அமைப்பில் நம்பிக்கை இழந்திருக்கும் நபர்களை நம்மில் பலர் சந்திக்கிறோம். எனினும், அவர்கள் இன்னும் கடவுள் பயமுள்ளோராக, ஓரளவு கடவுள் நம்பிக்கை வைத்து, நேர்மையான வாழ்க்கை நடத்த பிரயாசப்படுவோராக இருக்கலாம். மேலும், கடவுளே இல்லை என்று சொல்கிற இந்தக் கோணலும் மாறுபாடுமான சந்ததியில், கடவுளில் ஓரளவு நம்பிக்கையுள்ள ஆட்களைச் சந்திப்பதில் நாம் களிகூர வேண்டுமல்லவா? பாசாங்குத்தனமும் பொய்ம்மையும் இராத வணக்கமுறைக்கு அவர்களை வழிநடத்த நாம் ஆவலுடையோராக இருக்கிறோம் அல்லவா?—பிலிப்பியர் 2:15.
14, 15. நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு பேரளவான பிராந்தியம் எவ்வாறு கிடைக்கிறது?
14 வாரிக்கொள்ளும் வலையைப் பற்றிய தம்முடைய உவமையில் இயேசு, பிரசங்கிப்பதற்கு பேரளவான பிராந்தியம் இருக்குமென்று முன்னறிவித்தார். (மத்தேயு 13:47-49) இந்த உவமையை விளக்கி, செப்டம்பர் 15, 1992 காவற்கோபுரம் பக்கம் 20-ல் இவ்வாறு சொல்லப்பட்டது: “கடவுளுடைய வார்த்தையை மொழிபெயர்ப்பது, நகல் எடுப்பது, விநியோகிப்பது ஆகியவற்றில் கிறிஸ்தவமண்டல அங்கத்தினர்கள் பல நூற்றாண்டுகளாக ஒரு முக்கிய பங்கை வகித்தனர். பின்னர் சர்ச்சுகள் பைபிள் சங்கங்களை ஏற்படுத்தின அல்லது அவைகளை ஆதரித்தன. தொலைக்கோடியான தேசங்களின் மொழிகளில் பைபிளை அந்தச் சங்கங்கள் மொழிபெயர்த்தன. அவர்கள் மருத்துவ மிஷனரிகளையும், ஆசிரியர்களையும்கூட அனுப்பினர். உணவு, பொருள் சம்பந்தமான அனுகூலங்களின் காரணமாக கிறிஸ்தவர்களாக ஆகும் ஆட்களை அவர்கள் உண்டுபண்ணினர். இது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றிராத தகுதியற்ற மீன்களை பெரும் எண்ணிக்கையில் கூட்டிச் சேர்த்தது. ஆனால் கிறிஸ்தவர்கள் அல்லாத ஆயிரக்கணக்கானோரை இது பைபிளுக்கும் மாசுப்பட்ட ஒரு வகையான கிறிஸ்தவத்துக்கும் அறிமுகம் செய்தது.”
15 கிறிஸ்தவமண்டலம் ஆட்களை மதம் மாற்றி வந்ததானது, முக்கியமாய் தென் அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் தீவுகள் சிலவற்றிலும் பலன் தந்தது. நம்முடைய நாளில், இந்தப் பகுதிகளில் சாந்தமுள்ள ஆட்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனர். மதம் மாறிய யூதரிடமாக பவுலுக்கு இருந்ததைப்போன்ற, உடன்பாடான அன்புள்ள மனப்பான்மை, இத்தகைய மனத்தாழ்மையுள்ள ஆட்களினிடமாக நாம் கொண்டிருந்தால், மிகுந்த நன்மையை நாம் தொடர்ந்து செய்துவர முடியும். நம்முடைய உதவி தேவைப்படுவோரில், யெகோவாவின் சாட்சிகளோடு “ஒத்துணர்வு” காட்டுவோர் என்று சொல்லக்கூடிய லட்சக்கணக்கான ஆட்களும் இருக்கின்றனர். நாம் அவர்களைச் சந்திக்கையில் நம்மைக் காண்பதில் அவர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியடைகின்றனர். சிலர் நம்முடன் பைபிளைப் படித்திருக்கின்றனர்; கூட்டங்களுக்கு, முக்கியமாய் வருடந்தோறும் வரும் கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்புக்கு ஆஜராகியிருக்கின்றனர். ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு இத்தகையோர் ஒரு பெரிய பிராந்தியத்தைக் குறிப்போராக இருக்கிறார்கள் அல்லவா?
16, 17. (அ) எந்த பலதரப்பட்ட ஆட்களை நாம் நற்செய்தியுடன் அணுகுகிறோம்? (ஆ) பல்வேறு வகையினரான ஆட்களுக்குப் பிரசங்கிப்பதில் பவுலின் மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றுகிறோம்?
16 மேலும், கிறிஸ்தவமண்டலத்திற்குப் புறம்பேயுள்ள கலாச்சாரங்களிலிருந்து வருவோரைப் பற்றியதென்ன? அவர்களுடைய தாய்நாடுகளில் நாம் அவர்களை சந்தித்தாலும் அல்லது அவர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு வந்து குடியேறினவர்களாக இருந்தாலும் அவர்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்? மேலும், தங்கள் மதத்தை முற்றிலுமாய்த் தள்ளிவிட்டு நாத்திகராக அல்லது அறியொணாமைக் கொள்கையினராக ஆகிய பல கோடிக்கணக்கானோரைப் பற்றியதென்ன? இன்னும், புத்தகக் கடைகளில் காணப்படுகிற ஏராளமான சுயஉதவி புத்தகங்களில் பிரசுரிக்கப்படுகிற நவீன தத்துவஞானம் சம்பந்தப்பட்டவற்றை வெறித்தனமாய் பின்பற்றுவோரைப் பற்றியதென்ன? இத்தகைய ஆட்களை, மீட்க முடியாத நிலையில் இருப்போராகக் கருதி தவிர்த்து ஒதுக்கிவிட வேண்டுமா? அப்போஸ்தலன் பவுலின் மாதிரியைப் பின்பற்றுவோமானால் அவ்வாறு செய்யமாட்டோம்.
17 அத்தேனே பட்டணத்தில் பவுல் பிரசங்கித்தபோது, தனக்குச் செவிகொடுத்துக் கேட்டவர்களுடன் தத்துவஞானத்தைப் பற்றி வாதாடும் கண்ணியில் சிக்கவில்லை. எனினும், தான் பேசிக்கொண்டிருந்த ஆட்களுக்கு தக்கவாறு தன் சிந்திப்பை மாற்றி அமைத்துக்கொண்டு பைபிள் சத்தியங்களைத் தெளிவாக, நியாய முறைப்படி எடுத்துரைத்தார். இவ்வாறே, நாம் பிரசங்கிக்கும் ஆட்களின் மதங்களில் அல்லது தத்துவஞானங்களில் நாம் நிபுணர்களாக ஆகவேண்டியதில்லை. எனினும், நம்முடைய சாட்சிகொடுத்தல் பலன்தரத்தக்கதாக இருக்கும்படி செய்வதற்கு நம்முடைய அணுகுமுறையை பொருத்தமாக மாற்றி அமைத்துக்கொள்கிறோம்; இவ்வாறு, ‘எல்லாருக்கும் எல்லாமுமாகிறோம்.’ (1 கொரிந்தியர் 9:22) கொலோசெயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், பவுல் இவ்வாறு கூறினார்: ‘புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.’—கொலோசெயர் 4:5, 6.
18. என்ன பொறுப்பு நமக்கு இருக்கிறது, எதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது?
18 இயேசுவையும் அப்போஸ்தலன் பவுலையும் போல், எல்லா வகையினரான ஆட்களிடமும் நாம் அன்பு காண்பிப்போமாக. முக்கியமாய், ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நாம் ஊக்கமாய் பிரயாசப்படுவோமாக. மறுபட்சத்தில், தம்முடைய சீஷர்கள், “இந்த உலகத்தின் பாகமானோராக இல்லை” என்று இயேசு சொன்னதை ஒருபோதும் மறவாதீர்கள். (யோவான் 17:16, NW) இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பது பின்வரும் கட்டுரையில் மேலுமாகச் சிந்திக்கப்படும்.
மறுபார்வையிடுதல்
◻ இந்த உலகத்தினிடமாக இயேசுவின் சமநிலையான மனப்பான்மையை விவரியுங்கள்.
◻ யூதருக்கும் யூத மதத்தைத் தழுவினோருக்கும் அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு பிரசங்கித்தார்?
◻ கடவுள் பயமுள்ளோரிடமும் அவிசுவாசிகளிடமும் பவுல் எவ்வாறு அணுகினார்?
◻ நம்முடைய பிரசங்க ஊழியத்தில் நாம் எவ்வாறு, ‘எல்லாருக்கும் எல்லாமாக’ இருக்கலாம்?
[பக்கம் 10-ன் படம்]
கிறிஸ்தவர்கள், தங்கள் அயலாருக்கு அன்பான செயல்களை செய்வதன்மூலம் தப்பெண்ணத்தைப் பெரும்பாலும் போக்கமுடியும்