பிலேமோனும் ஒநேசிமுவும்—கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் ஒன்றுசேர்ந்தனர்
தேவனால் ஏவப்பட்டு அப்போஸ்தலன் பவுல் எழுதின கடிதங்களில் ஒன்று, இரண்டு நபர்களுக்கு மத்தியில் இருந்த, ஜாக்கிரதையாகத் தீர்க்கப்படவேண்டிய ஒரு பிரச்சினையை கையாளுகிறது. ஒருவர் பிலேமோன், மற்றவர் ஒநேசிமு. இவர்கள் யார்? பவுல் அவர்களுடைய விவகாரத்தில் ஆர்வம் காட்டக் காரணம் என்ன?
ஆசியா மைனரிலுள்ள கொலோசெ என்ற பட்டணத்தில், கடிதத்தின் பெறுநர் பிலேமோன் வாழ்ந்தார். பிலேமோனுக்கு பவுலை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும். அப்பகுதியில் இருந்த மற்ற கிறிஸ்தவர்களைப்போல் அல்லாமல், இவர் அப்போஸ்தலனுடைய பிரசங்க வேலையின் நிமித்தம் நற்செய்தியை ஏற்றுக் கொண்டவர். (கொலோசெயர் 1:1; 2:1) அவர் ஒரு ‘பிரியமுள்ள உடன் வேலையாள்’ என்று பவுல் அறிந்திருந்தார். பிலேமோன் விசுவாசத்திற்கும் அன்பிற்கும் முன்மாதிரியாக இருந்தார். அவர் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார், உடன் கிறிஸ்தவர்கள் புத்துணர்ச்சி பெறும் ஊற்றாகவும் இருந்தார். அவர் பணக்காரராகவும் இருந்திருக்க வேண்டும், ஏனென்றால் அவர் வீடு, உள்ளூர் சபை கூட்டங்கள் நடத்துமளவுக்கு பெரியதாக இருந்தது. பவுலுடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட அப்பியாளும் அர்க்கிப்புவும் அவருடைய மனைவியாகவும் மகனாகவும் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிலேமோனுக்கு குறைந்தது ஒரு அடிமையாவது இருந்திருக்க வேண்டும், அவர்தான் ஒநேசிமு.—பிலேமோன் 1, 2, 4, 7, 19ஆ, 22.
ரோமாபுரிக்கு தப்பி ஓடியவர்
சுமார் பொ.ச. 61-ல் அக்கடிதம் பிலேமோனுக்கு எழுதப்பட்ட சமயத்தில் ஒநேசிமு ஏன் வீட்டை விட்டு 1,400 கிலோமீட்டருக்கும் அதிக தூரம் வந்து ரோமாபுரியில் பவுலுடன் இருந்தார் என்பது வேத எழுத்துக்களில் குறிப்பிடவில்லை. ஆனால், பிலேமோனுக்கு பவுல் பின்வருமாறு குறிப்பிட்டார்: “அவன் [ஒநேசிமு] உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக் கொள்ளும்.” (பிலேமோன் 18) இந்த வார்த்தைகள், ஒநேசிமுவுக்குத் தன் எஜமானருடன் ஏதோ பிரச்சினை இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன. பவுலுடைய கடிதம் இந்த இருவரையும் சமரசப்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது.
ஒநேசிமு ரோமாபுரிக்கு தப்பி ஓடுவதற்காக பிலேமோனிடத்தில் திருடி, பிறகு அகதியாக அலைந்தார் என்பதாகக் கருதப்படுகிறது. அங்கே ஜனக்கூட்டத்தில் ஒளிந்து வாழவேண்டும் என்பது அவருடைய எண்ணம். a இந்தக் கிரேக்க-ரோம உலகில், தப்பி ஓடிவந்தவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு மாத்திரம் அல்ல பொது நிர்வாகத்திற்கும் பெரிய பிரச்சினையாக இருந்தார்கள். ஓடிவந்த அடிமைகளுக்கு “வழக்கமான புகலிடம் அளிப்பதில் கெட்டப்பெயர் பெற்றதாக” ரோமாபுரி இருந்தது.
பவுல் எவ்விதம் ஒநேசிமுவை சந்தித்தார்? பைபிள் பதில் சொல்லவில்லை. புதிதாகக் கிடைத்த சுதந்திரத்தின் வேகம் கொஞ்சநாட்களில் குறைந்த பிறகு, தான் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதை ஒநேசிமு உணர்ந்திருக்கலாம். ரோமாபுரி நகரத்தில் ஒரு தனி போலீஸ் படை ஓடிவந்த அடிமைகளை பிடிப்பதற்கு தேடி அலைந்தது. அந்தக் காலச் சட்டத்தின்படி எஜமானரை விட்டு ஓடி வருவது மிகப்பெரிய குற்றங்களில் ஒன்று. கெர்ஹொர்ட் ஃபிரிட்ரிக் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஓடிவந்த அடிமைகள் பிடிபட்டவுடன், பழுக்க சூடேற்றிய இரும்பால் அவர்கள் நெற்றியில் குறியிடுவார்கள். அவர்கள் அடிக்கடி சித்திரவதை செய்யப்பட்டார்கள் . . . , அரங்குகளில் கொடிய மிருகங்களிடத்தில் வீசி எறியப்பட்டனர், மற்ற அடிமைகளும் அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றக் கூடாது என்பதற்காக கழுமரத்தில் அறையப்பட்டார்கள்.” அநேகமாக ஒநேசிமு திருடிய பணத்தை செலவழித்தப்பின், ஒளிந்துகொள்ள இடம் தேடி அல்லது ஒரு வேலைக்காக முயற்சி செய்து தோல்வி அடைந்து, பாதுகாப்பிற்காகவும் தனக்காகப் பரிந்துபேசுவதற்காகவும் பவுலை அணுகியிருக்கலாம்; பவுலைப் பற்றி பிலேமோன் வீட்டில் கேள்விப்பட்டிருக்க வேண்டும் என்று ஃபிரிட்ரிக் குறிப்பிடுகிறார்.
எஜமானுடைய நண்பர்களில் ஒருவரிடத்திற்கு சென்று, அவர் செல்வாக்கின் மூலம், தன்மீது நியாயமான காரணத்தால் கோபமாக இருக்கும் எஜமானுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் ஒநேசிமு வேண்டுமென்றே ஓடினார் என்று மற்றவர்கள் நம்புகின்றனர். “பிரச்சினையில் இருக்கும் அடிமைகள் மற்றவர்களிடம் உதவியை நாடுவது சர்வசாதாரணமாகவும் பரவலாகவும் இருந்தது” என்று சரித்திர ஆதாரங்கள் காட்டுகின்றன. அப்படியென்றால், ஒநேசிமு, “ஒருவேளை மத்தியஸ்தராகிய பவுலிடம் வருவதற்காகவே திருடினார், திட்டமிட்டு ஓடுவதற்காக அல்ல” என்று பிரைன் ரப்ஸ்கி என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.
பவுல் உதவிக்கரம் நீட்டுகிறார்
தப்பி ஓடிவந்த காரணம் என்னவாக இருந்தாலும் சரி, ஒநேசிமு கோபத்தில் இருக்கும் தன் எஜமானிடம் சமரசமாவதற்கு பவுலின் உதவியை நாடியிருக்க வேண்டும். இதுவே பவுலை இக்கட்டான நிலைக்குள்ளாக்கியது. முன்பு அவிசுவாசியான அடிமையாக இருந்த அவர், இப்பொழுது இங்கே தண்டனைக்கு தகுதிவாய்ந்த அகதியாக இருந்தார். இவருக்கு உதவுவதற்காக, அப்போஸ்தலன், தன்னுடைய கிறிஸ்தவ நண்பர் தனது சட்ட உரிமையைப் பயன்படுத்தி கொடிய தண்டனை வழங்க வேண்டாம் என்று கட்டாயப்படுத்த முடியுமா? பவுல் என்ன செய்ய வேண்டும்?
பிலேமோனுக்கு பவுல் எழுதிய சமயத்தில், ஓடிவந்த ஒநேசிமு அப்போஸ்தலனோடு கொஞ்சகாலம் ஏற்கெனவே இருந்திருக்க வேண்டும். பவுல் ஒநேசிமுவைக் குறித்து, ‘பிரியமுள்ள சகோதரன்’ என்று குறிப்பிடும் அளவுக்குப் போதிய அவகாசம் இருந்தது. (கொலோசெயர் 4:9) ஒநேசிமுவுடன் தனக்கு இருக்கும் ஆவிக்குரிய பந்தத்தைக் குறித்து, “என் மகனுக்காக உம்மிடம் மன்றாடுகிறேன், சிறைக்கட்டுகளில் இருக்கும்போது அவனுக்கு தகப்பனாக இருந்தேன்” என்று பவுல் குறிப்பிடுகிறார். அநேக விஷயங்களை பவுலிடமிருந்து எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இப்படி ஒரு செய்தியை பிலேமோன் அவரிடமிருந்து சற்றேனும் எதிர்பார்த்திருக்கவேமாட்டார். முன்பு ‘பிரயோஜனமில்லாதவனாக’ இருந்த அடிமை, கிறிஸ்தவ சகோதரனாக மாறி திரும்புவதாக அப்போஸ்தலன் குறிப்பிட்டார். இனி ஒநேசிமு தன் பெயரின் அர்த்தத்திற்கு ஏற்ப வாழ்பவராக ‘பிரயோஜனம்’ அல்லது “இலாபம்” உள்ளவராக இருப்பார்.—பிலேமோன் 1, 10-12, NW.
சிறைப்பட்ட அப்போஸ்தலனுக்கு ஒநேசிமு மிகவும் பிரயோஜனமுள்ளவரானார். உண்மையில் பவுல் அவரை அங்கேயே வைத்திருந்திருக்கலாம், ஆனால், அது சட்டவிரோதமாக இருப்பதோடு, பிலேமோனுடைய உரிமையைப் பறிப்பதாகவும் இருந்திருக்கும். (பிலேமோன் 13, 14) கிட்டத்தட்ட அதே காலப்பகுதியில் பிலேமோன் வீட்டில் கூடிய சபைக்கு எழுதிய இன்னொரு கடிதத்தில், பவுல் ஒநேசிமுவை, ‘உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரன்’ என்று குறிப்பிடுகிறார். தான் நம்பத்தகுந்தவன் என்பதை ஒநேசிமு நிரூபித்துவிட்டதை இது சுட்டிக்காட்டுகிறது.—கொலோசெயர் 4:7-9. b
பவுல், ஒநேசிமுவை அன்போடு ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை ஊக்கமூட்டினார், ஆனால், தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ்விதம் செய்யவோ அல்லது விடுதலை செய்யவோ கட்டளையிடவில்லை. அவர்களுக்கு இடையே இருந்த நட்பினாலும் பரஸ்பர அன்பினாலும், பிலேமோன் தான் கேட்டதைவிட ‘அதிகமாய்ச் செய்வார்’ என்று பவுல் குறிப்பிட்டார். (பிலேமோன் 21) ‘அதிகம் செய்வது’ என்றால் என்ன என்பது தெளிவற்றதாக விடப்பட்டிருக்கிறது, ஏனென்றால் ஒநேசிமுவைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்பதை பிலேமோன் மட்டுமே சரியாக முடிவு செய்ய முடியும். ஓடிவந்தவனை ‘திரும்பவும் அனுப்பி வைத்தால், அவர் முன்பு பவுலுக்கு உதவியதைப்போல தொடர்ந்து உதவலாம்’ என்பதை மறைமுகமாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று சிலர் பவுலின் வார்த்தைக்கு அர்த்தம் கற்பிக்கிறார்கள்.
ஒநேசிமுவின் சார்பாக பவுல் செய்த வேண்டுதல்களை பிலேமோன் ஏற்றுக்கொண்டாரா? ஏற்றுக்கொண்டதைப் பற்றி சந்தேகப்பட வேண்டியதில்லை, ஆனால், இது கொலோசெயில் இருந்த மற்ற அடிமைகளை வைத்திருந்த எஜமானர்களை எரிச்சலடைய செய்திருக்கும்; தங்களுடைய அடிமைகள் அவருடைய முன்மாதிரியை பின்பற்றாமல் இருப்பதற்காக அவர்கள், ஒநேசிமு மோசமான தண்டனை அடைவதை விரும்பி இருப்பார்கள்.
ஒநேசிமு—திருந்திய மனிதன்
எவ்விதம் இருந்தாலும், ஒநேசிமு கொலோசெயிக்கு ஒரு புது மனிதனாக திரும்பினார். நற்செய்தியின் சக்தி அவருடைய சிந்தனையை மாற்றியதால், அந்தப் பட்டணத்தில் இருந்த கிறிஸ்தவ சபையில் உண்மையுள்ள ஒரு அங்கத்தினரானார் என்பதில் சந்தேகமில்லை. கடைசியாக பிலேமோன் அடிமைத்தனத்திலிருந்து ஒநேசிமுவை விடுதலை செய்தாரா, இல்லையா என்பது வேதாகமத்தில் விவரிக்கப்படவில்லை. ஆனால் ஆவிக்குரிய கண்ணோட்டத்தில், முன்பு ஓடிப்போனவன் ஒரு விடுதலையாக்கப்பட்ட மனிதரானார். (1 கொரிந்தியர் 7:22-ஐ ஒப்பிடுக.) இன்றும் அதேவிதமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. பைபிள் நியமங்களைத் தங்களுடைய வாழ்க்கையில் பொருத்தும்போது, சூழ்நிலைகளும் ஆள்தன்மையும் மாற்றமடைகின்றன. முன்பு சமுதாயத்திற்கு பிரயோஜனமற்றவர்கள் என்று கருதப்பட்டவர்கள்கூட ஒரு முன்மாதிரியான பிரஜைகளாவதற்கு உதவி அளிக்கப்பட்டிருக்கிறார்கள். c
உண்மை விசுவாசத்திற்கு மாறுவது எப்பேர்ப்பட்ட ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது! முன்பிருந்த ஒநேசிமு பிலேமோனுக்கு ‘பிரயோஜனமற்றவனாக’ இருந்தாலும், புதிய ஒநேசிமு தன் பெயருக்கு ஏற்ப ‘இலாபமுள்ளவராக’ வாழ்ந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாகவே பிலேமோனும் ஒநேசிமுவும் கிறிஸ்தவ சகோதரத்துவத்தில் ஒன்றுசேர்க்கப்பட்டது ஒரு பெரிய ஆசீர்வாதம்.
[அடிக்குறிப்புகள்]
a ரோமச் சட்டம் ஒரு செர்வஸ் ஃபுஜிடீவஸ்ஸை (தப்பி ஓடிய அடிமை) ‘தன் எஜமானிடம் திரும்ப வேண்டும் என்ற எண்ணமின்றி ஓடியவன்’ என்று விளக்குகிறது.
b இப்பொழுது பைபிள் புத்தகப் பட்டியலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு இடம் பெற்றுள்ள பவுலின் மூன்று கடிதங்களை கொலோசெயிக்குத் திரும்பும் பயணத்தின் போது ஒநேசிமுவிடமும் தீதிகுவிடமும் கொடுத்தனுப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பிலேமோனுக்கு எழுதப்பட்ட கடிதத்தோடுகூட, எபேசியருக்கும் கொலோசெயருக்கும் எழுதப்பட்ட கடிதங்களே அவை.
c உதாரணங்களுக்கு, விழித்தெழு!, ஜூன் 22, 1996, பக்கங்கள் 18-23; மார்ச் 8, 1997, பக்கங்கள் 11-13; காவற்கோபுரம், ஆகஸ்ட் 1, 1989, (ஆங்கிலம்) பக்கங்கள் 30-1; பிப்ரவரி 15, 1997, பக்கங்கள் 21-4, ஆகியவற்றை தயவுசெய்து பார்க்கவும்.
[பக்கம் 30-ன் பெட்டி]
ரோமச் சட்டத்தின் பிடியில் அடிமைகள்
பொ.ச. முதல் நூற்றாண்டில் அமலில் இருந்த ரோமச் சட்டத்தின்படி, ஒரு அடிமை, தன் எஜமானுடைய இஷ்டத்திற்கும், காமவெறிகளுக்கும், கடுங்கோபத்திற்கும் முழுவதும் ஆளாகும் நிலையில் இருந்தான். விளக்கவுரையாளர் கெர்ஹொர்ட் ஃபிரிட்ரிக், “அடிப்படையிலும் சட்டப்படியும், அடிமை ஒரு நபரல்ல, மாறாக அவன் எஜமான் இஷ்டப்படி உபயோகிக்கும் ஒரு சொத்து. . . . சமுதாயச் சட்டத்தில் அவனுக்கு எந்தச் சலுகையும் கிடையாது, வீட்டு விலங்குகள் மற்றும் கருவிகளுக்கு இணையாகக் கருதப்பட்டான்” என்று குறிப்பிடுகிறார். ஒரு அடிமை தான் அனுபவித்த அநியாயங்களுக்கு எவ்விதச் சட்டப்பரிகாரத்தையும் நாட முடியாது. அடிப்படையில் அவன் வெறுமனே தன் எஜமானுடைய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும். கோபம் கொண்ட எஜமான் அளிக்கக்கூடிய தண்டனைகளுக்கு அளவே கிடையாது. ஒரு சிறு குற்றத்திற்குக்கூட, வாழ்வா சாவா என்னும் உரிமையை எஜமான் பயன்படுத்தினான். *
பணக்காரர்கள் நூற்றுக்கணக்கான அடிமைகளை வைத்திருந்த அதே சமயத்தில், ஓரளவிற்கு வசதியான குடும்பத்திலும் இரண்டு அல்லது மூன்று அடிமைகள் இருந்திருக்க வேண்டும். ஜான் பர்க்லே என்ற அறிஞர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “வீட்டு அடிமைகள் வெகு வித்தியாசப்பட்ட வேலைகளைச் செய்தார்கள். அடிமைகள் காவலாளிகளாக, சமையல்காரர்களாக, பரிமாறுபவர்களாக, சுத்தம் செய்பவர்களாக, ஓடிச்சென்று தூது உரைப்பவர்களாக, குழந்தையை கவனிப்பவர்களாக, செவிலித்தாய்களாக, எல்லாவிதமான வேலைகளைச் செய்யும் வேலைக்காரர்களாக பணியாற்றியதோடு, தொழில் திறம்பெற்றவர்களாக பெரிய, பெரிய பணக்கார வீடுகளில் அவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை. . . . நடைமுறையில் சொல்லப்போனால், ஒரு வீட்டு அடிமையின் வாழ்க்கைத் தரம் மிக அதிகமாக, அவனுடைய எஜமானுடைய மனநிலையையே சார்ந்திருந்தது; அது நன்மையிலோ தீமையிலோ போய் முடிவடையலாம்: கொடுமையான எஜமானிடம் இருந்தால் துன்பப்படவும் அநேக ஏராளமான கொடுமைகளை அனுபவிக்கவும் வேண்டியிருக்கும், ஆனால், அன்பும் தயவும் உள்ள ஓர் எஜமான் அவனுடைய வாழ்க்கையை இலகுவாக்க முடியும்; அவனுக்கு நம்பிக்கை ஊட்டவும் முடியும். பண்டைய இலக்கியங்களில் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டதற்கு பெயர்பெற்ற உதாரணங்களும், ஆனால், அதே சமயம் அடிமைகளுக்கும் எஜமானர்களுக்கும் இடையேயிருந்த கனிவான உறவுகள் பற்றி பறைசாற்றும் எண்ணற்ற எழுதப்பட்ட ஆதாரங்களும் இருக்கின்றன.”
*பூர்வ காலங்களில் தேவனுடைய ஜனங்களுக்கு மத்தியில் இருந்த அடிமைமுறையைப் பற்றித் தெரிந்துகொள்ள, உவாட்ச்டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமங்களின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், தொகுதி 2, பக்கங்கள் 977-9-ஐப் பார்க்கவும்.