அதிகாரம் 25
இரண்டு சாட்சிகளை உயிருக்கு மீண்டெழச்செய்வது
1. அந்தப் பலமுள்ள தூதன் என்ன செய்யும்படி யோவானை அழைக்கிறார்?
இரண்டாவது ஆபத்து கடைசியாக கடந்துபோவதற்கு முன்பு அந்தப் பலமுள்ள தூதன் யோவானை மற்றொரு தீர்க்கதரிசன அளிப்பில் பங்குக்கொள்ள அழைக்கிறார், இது ஆலயத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 9:12; 10:1) யோவான் இதையே அறிக்கையிடுகிறார்: “பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, . . . என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார் [என்றார்].”—வெளிப்படுத்துதல் 11:1.
ஆலயம்
2. (அ) நம் நாள் வரையாக எந்த ஆலயம் நிலைத்திருக்கும்? (ஆ) அந்த ஆலயத்தின் பிரதான ஆசாரியர் யார், அதனுடைய மகா பரிசுத்த ஸ்தலம் எது?
2 இங்கு சொல்லப்பட்டிருக்கிற ஆலயம் எருசலேமிலுள்ள எந்த ஒரு சொல்லர்த்தமான ஆலயமாகவும் இருக்க முடியாது, ஏனெனில் பொ.ச. 70-ல் அங்கிருந்த கடைசியாக விட்டுவைக்கப்பட்டிருந்த ஆலயத்தை ரோமர்கள் அழித்துப்போட்டனர். என்றபோதிலும், அந்த அழிவுக்கு முன்பாகவே, நம் நாள் வரையாக நிலைத்திருக்கிற மற்றொரு ஆலயம் தோன்றியுள்ளதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எடுத்துக்காட்டினார். கூடாரத்தினாலும் பிறகு எருசலேமில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களினாலும் அளிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசன மாதிரிப்படிவங்களை நிறைவேற்றிய பெரிய ஆவிக்குரிய ஆலயமாக இது இருந்தது. “மனுஷரால் அல்ல, கர்த்தரால் [யெகோவாவால், NW] ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடார”மாக இருக்கிறது, இதற்கு பிரதான ஆசாரியர் இயேசு, இவர் ஏற்கெனவே “பரலோகத்திலுள்ள மகத்துவ [மகத்துவமுள்ளவருடைய, NW] ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கி”றார் என்று பவுல் விவரிக்கிறார். அதனுடைய மகா பரிசுத்த ஸ்தலம் பரலோகத்திலேயே உள்ள யெகோவாவுடைய சமுகமாக இருக்கிறது.—எபிரெயர் 8:1, 2; 9:11, 24.
3. கூடாரத்தில், பின்வருபவை எதை படமாகக் குறித்துக்காட்டின: (அ) மகா பரிசுத்த ஸ்தலத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் பிரிக்கும் அந்தத் திரை? (ஆ) மிருக பலிகள்? (இ) பலிபீடம்?
3 மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் பரிசுத்த அறைக்கும் பிரிவுண்டுபண்ணுகிற கூடாரத்தின் திரை இயேசுவின் மாம்சத்தை படமாக குறித்துக்காட்டுகிறது என்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்குகிறான். இயேசு தன் ஜீவனை பலியாக செலுத்தினபோது, அந்தத் திரை இரண்டாகக் கிழிந்தது, இப்படியாக பரலோகத்திலே யெகோவாவுடைய சமுகத்தில் இயேசு உட்பிரவேசிப்பதற்கு அவருடைய மாம்சம் இனிமேலும் ஒரு தடையாக இல்லை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியது. இயேசுவினுடைய பலியின் அடிப்படையில், உண்மையுள்ளவர்களாக மரித்த அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட துணை ஆசாரியர்களுங்கூட காலப்போக்கில் பரலோகத்தை சென்றடைவர். (மத்தேயு 27:50, 51; எபிரெயர் 9:3; 10:19, 20 ) மேலும் கூடாரத்தில் தொடர்ந்து செலுத்தப்பட்டுவந்த மிருக பலிகளுங்கூட இயேசுவுடைய பரிபூரண மனித உயிரை அவர் ஒரே தடவை செலுத்தினதை முன்குறித்துக் காட்டின என்பதையுங்கூட பவுல் குறிப்பிடுகிறார்.பிராகாரத்தில் உள்ள பலிபீடம், ‘தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருள’ இருந்த “அநேகருடைய”—அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய அதற்கு பிற்பாடு மற்ற செம்மறியாடுகளுடைய—சார்பில் அவருடைய சித்தத்துக்கு இசைவாக செலுத்தப்பட்ட இயேசுவின் பலியை ஏற்றுக்கொள்வதற்கான யெகோவாவுடைய ஏற்பாட்டைக் குறித்தது.—எபிரெயர் 9:28; 10:9, 10; யோவான் 10:16.
4. இந்த இடங்கள் எதை அடையாளப்படுத்தின: (அ) பரிசுத்த ஸ்தலம்? (ஆ) உட்பிராகாரம்?
4 கூடாரத்தில் உள்ள பரிசுத்த ஸ்தலம், முதலில் கிறிஸ்துவாலும் பின்னர் ‘அந்தத் திரைக்குள்’ பிரவேசிக்கும் முன்பு 1,44,000 பேர் அடங்கிய ராஜரீக கூட்டத்தின் அபிஷேகம் செய்யப்பட்ட அங்கத்தினர்களாலும் இன்னும் பூமியிலிருக்கையில் அனுபவிக்கப்படும் பரிசுத்த நிலையை அடையாளப்படுத்துகிறது என்ற முடிவுக்கு பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட இந்தச் செய்தியிலிருந்து நம்மால் வரமுடிகிறது. (எபிரெயர் 6:19, 20; 1 பேதுரு 2:9) பொ.ச. 29-ல் இயேசு யோர்தானில் முழுக்காட்டப்பட்ட பிறகு கடவுள் எப்படி அவரை தம்முடைய குமாரனாக அங்கீகரித்தாரோ அப்படியே இவர்களும் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதை இது நன்றாகவே குறித்துக் காட்டுகிறது. (லூக்கா 3:22; ரோமர் 8:15) ஆசாரியரல்லாத இஸ்ரவேலருக்கு காணப்படுகிறதும், பலிகள் செலுத்தப்படும் இடமாகவும்கூட இருக்கும் கூடாரத்தின் ஒரு பகுதியாகிய உட்பிராகாரத்தைப் பற்றியதென்ன? இது மனிதவர்க்கத்துக்காக தம் ஜீவனை அளிக்குமாறு அந்த மனிதராகிய இயேசுவை தகுதிபெற வைத்த அவருடைய பரிபூரண நிலைநிற்கையை படமாகக் காட்டுகிறது. பூமியிலிருக்கையில் அவருடைய அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்கள் இயேசுவுடைய பலியின் அடிப்படையில் பரிசுத்தவான்களாக அவர்கள் அனுபவிக்கும் நீதியான நிலைநிற்கையையுங்கூட இது குறிக்கிறது.a—ரோமர் 1:7; 5:1.
ஆலயத்தை அளந்துபார்த்தல்
5. எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களில் இவை எதை குறிப்பிட்டுக் காட்டின: (அ) எருசலேமை அளந்துபார்ப்பது? (ஆ) எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட ஆலயத்தை அளப்பது?
5 ‘தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார்க்க’ யோவான் சொல்லப்படுகிறார். இது எதை குறிப்பிட்டுக் காட்டுகிறது? எபிரெய வேதாகம தீர்க்கதரிசனங்களில், இப்படி அளந்துபார்ப்பது யெகோவாவுடைய பரிபூரண தராதரங்களின் அடிப்படையில் நீதி வழங்கப்படும் என்பதற்கான ஓர் உறுதியை அளித்தது. பொல்லாத அரசனாகிய மனாசேயின் காலத்தில், எருசலேமை தீர்க்கதரிசனமாக அளப்பது அந்நகரத்துக்கு வந்துதீரவேண்டிய நியாயத்தீர்ப்புக்கு அத்தாட்சியைப் பகிர்ந்தது. (2 இராஜாக்கள் 21:13; புலம்பல் 2:8) இருந்தபோதிலும், பின்னர், எருசலேம் அளக்கப்படுவதை எரேமியா கண்டபோது, அந்நகரம் திரும்பக் கட்டப்படும் என்பதை இது உறுதிப்படுத்தினது. (எரேமியா 31:39; சகரியா 2:2-8-ஐயும் காண்க.) இதைப்போலவே, எசேக்கியேல் தரிசனத்தில் கண்ட ஆலயம் விரிவாகவும் நுணுக்க விவரங்களோடும் அளக்கப்படுவது பாபிலோனிலிருந்த நாடு கடத்தப்பட்ட யூதர்களுக்கு மெய் வணக்கம் தங்களுடைய தாய்நாட்டிலேயே திரும்ப ஸ்தாபிக்கப்படும் என்பதை உறுதியளித்தது. இஸ்ரவேல் செய்த குற்றங்களை மனதில்கொண்டு, இனிமேலும் கடவுளுடைய பரிசுத்த தராதரங்களை அடைய முயற்சிசெய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நினைப்பூட்டுதலாகவுங்கூட இருந்தது.—எசேக்கியேல் 40:3, 4; 43:10.
6. யோவான் ஆலயத்தையும் அதில் வணங்கிவருகிற ஆசாரியர்களையும் அளந்துபார்க்க கட்டளையிடுவது எதற்கான அடையாளமாக இருக்கிறது? விளக்குக.
6 ஆகவே, யோவான் ஆலயத்தையும் அதில் வணங்கிவருகிற ஆசாரியர்களையும் அளந்துபார்க்க கட்டளையிடப்படுவது ஆலய ஏற்பாடு சம்பந்தப்பட்ட யெகோவாவுடைய நோக்கங்களும் அதோடு சம்பந்தப்பட்ட காரியங்களும் நிறைவேறுவதிலிருந்து எதுவும் தடுக்க முடியாது என்பதற்கும் அந்த நோக்கங்கள் அதனுடைய உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்டன என்பதற்கும் ஓர் அடையாளமாக இருந்தது. இப்போது யெகோவாவுடைய பலமுள்ள தூதனுடைய பாதங்களின் கீழே எல்லா காரியங்களும் வைக்கப்பட்டிருப்பதால், “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் [உறுதியாக, NW] ஸ்தாபிக்கப்ப”டுவதற்கான காலமாக இது இருக்கிறது. (ஏசாயா 2:2-4) கிறிஸ்தவமண்டலத்தின் நூற்றாண்டுக்கணக்கான விசுவாசதுரோகத்துக்குப் பிற்பாடு, யெகோவாவுடைய தூய்மையான வணக்கம் இப்போது உயர்த்தப்பட வேண்டும். மரித்துப்போன இயேசுவின் உண்மையுள்ள சகோதரர்கள் “மகா பரிசுத்தமுள்ளவ”ருடைய இடத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவதற்கான காலமாகவும் இது இருக்கிறது. (தானியேல் 9:24; 1 தெசலோனிக்கேயர் 4:14-16; வெளிப்படுத்துதல் 6:11; 14:4) மேலும் பூமியில் கடைசியாக முத்திரைப்போடப்பட்ட “நமது தேவனுடைய ஊழியக்கார”ரும் கடவுளுடைய ஆவியால் பிறப்பிக்கப்பட்ட குமாரர்களாக ஆலய ஏற்பாட்டில் தங்களுடைய நிரந்தரமான இடத்துக்கு தகுதிபெற தெய்வீக தராதரங்களுக்கிணங்க அளந்துபார்க்கப்பட வேண்டும். இன்றுள்ள யோவான் வகுப்பார் அந்தப் பரிசுத்த தராதரங்களை முழுதும் அறிந்தவர்களாக, அவற்றிற்கு இணங்க வாழ தீர்மானித்திருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:1-3; மத்தேயு 13:41, 42; எபேசியர் 1:13, 14; ரோமர் 11:20-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
பிராகாரம் மிதித்துப்போடப்படுவது
7. (அ) பிராகாரத்தை அளப்பதிலிருந்து யோவான் தடைசெய்யப்படுவதேன்? (ஆ) பரிசுத்த நகரம் எப்போது 42 மாதங்களுக்குக் கால்களால் மிதித்துப்போடப்பட்டது? (இ) யெகோவாவுடைய நீதியான தராதரங்களை 42 மாதங்களுக்குக் கடைப்பிடித்திருக்க கிறிஸ்தவமண்டலம் எப்படித் தவறினது?
7 பிராகாரத்தை அளந்துபார்ப்பதிலிருந்து யோவான் ஏன் தடைசெய்யப்பட்டார்? அவர் இவ்வார்த்தைகளில் நமக்கு சொல்கிறார்: “ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:2) நாம் பார்த்தப்பிரகாரம் உட்பிராகாரம் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் பூமியிலிருக்கையில் கொண்டிருக்கும் நீதியான நிலைநிற்கையைப் படமாகக் குறிக்கிறது. நாம் பார்க்கப்போகிற பிரகாரம், இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாதங்கள், டிசம்பர் 1914 முதல் ஜூன் 1918 வரை நீடித்திருக்கும் சொல்லர்த்தமான 42 மாதங்களாக இருக்கின்றன, அப்போதுதானே கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் அனைவரும் கடுமையான சோதனைக்குட்பட்டனர். அந்த யுத்த ஆண்டுகளினூடே யெகோவாவுடைய நீதியான தராதரங்களை அவர்கள் கடைப்பிடித்திருப்பார்களா? அநேகர் அவ்வாறு செய்யவில்லை. தொகுதியாக கிறிஸ்தவமண்டல குருமார் தேசாபிமானத்தை, தெய்வீக சட்டத்துக்கு கீழ்ப்படிவதற்கு முன்பாக வைத்தனர். முக்கியமாக கிறிஸ்தவமண்டல ஆட்கள் போரிட்ட இந்த யுத்தத்திலே, மதகுருமார் இரண்டு பக்கங்களிலும் இருந்துகொண்டு இளைஞரை வெட்டித்தள்ளுவதில் ஈடுபடும்படி பிரசங்கித்தனர். இலட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கடவுளுடைய வீட்டில், 1918-ல் நியாயத்தீர்ப்பு தொடங்குவதற்குள்ளாக, ஐக்கிய மாகாணங்களுங்கூட அந்த இரத்தஞ்சிந்துதலில் ஈடுபட்டிருந்தது, தெய்வீக பழிவாங்குதலுக்காக இப்போதும் சத்தமிட்டுக்கொண்டிருக்கும் இரத்தப்பழிக்குக் கிறிஸ்தவமண்டலத்தில் உள்ள எல்லா மதகுருமாரும் உடந்தையானார்கள். (1 பேதுரு 4:17) அவர்கள் புறம்பே தள்ளப்படுவது நிரந்தரமானதாக, மாற்ற முடியாததாக ஆகிவிட்டிருக்கிறது.—ஏசாயா 59:1-3, 7, 8; எரேமியா 19:3, 4.
8. முதல் உலக யுத்தத்தின்போது, எதை அநேக பைபிள் மாணாக்கர்கள் கண்டுணர்ந்துகொண்டனர், ஆனால் எதை அவர்கள் முழுமையாக மதித்துணர தவறினர்?
8 என்றாலும், இந்தச் சிறிய பைபிள் மாணாக்கர்களடங்கிய தொகுதியைக் குறித்ததிலென்ன? தெய்வீக தராதரங்களைப் பற்றியிருப்பதைப் பொருத்து உடனடியாக 1914-லேயே அவர்களை அளந்துபார்க்க வேண்டுமா? இல்லை. கிறிஸ்தவர்கள் என்று கிறிஸ்தவமண்டலத்தில் உரிமைபாராட்டியவர்களைப் போன்று அவர்களும் சோதிக்கப்பட வேண்டும். அவர்கள் துன்புறுத்தப்பட்டு, கடுமையாக சோதிக்கப்பட ‘புறம்பாக்கிப்போடப்பட்டு புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டார்கள்.’ அநேகர் அயலானைக் கொன்றுபோடுவதில் ஈடுபடக்கூடாது என்று கண்டுணர்ந்தனர், ஆனாலும் அவர்கள் கிறிஸ்தவ நடுநிலைமையை இதுவரை முழுவதும் மதித்துணரவில்லை. (மீகா 4:3; யோவான் 17:14, 16; 1 யோவான் 3:15) தேசத்தாரிடமிருந்து வந்த அழுத்தத்தின்கீழ் சிலர் ஒத்திணங்கிச் சென்றனர்.
9. புறஜாதியாரின் கால்களால் மிதித்துப்போடப்பட்ட அந்தப் பரிசுத்த நகரம் எது, பூமியில் இந்நகரத்தை பிரதிநிதித்துவம் செய்வது யார்?
9 எனினும், பரிசுத்த நகரத்தை அந்தப் புறஜாதியார் எப்படி கால்களின் கீழ் மிதித்துப்போட்டனர்? தெளிவாகவே, வெளிப்படுத்துதல் புத்தகம் எழுதப்படுவதற்கு 25-ற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட எருசலேமை இது குறிப்பிடவில்லை. மாறாக, இந்தப் பரிசுத்த நகரம் வெளிப்படுத்துதலில் பின்னர் விவரிக்கப்பட்டிருக்கிற புதிய எருசலேமாக இருக்கிறது, ஆலயத்தின் உட்பிராகாரத்தில் இருக்கிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகிய மீந்தவர்களைக்கொண்டு இப்போது பூமியில் இது பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிறது. காலப்போக்கில், இவர்களுங்கூட அந்தப் பரிசுத்த நகரத்தின் பாகமாக ஆவார்கள். ஆகவே அவர்களை மிதித்துப்போடுவது அந்த நகரத்தையே மிதித்துப்போடுவதற்கு சமமாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 21:2, 9-21.
இரண்டு சாட்சிகள்
10. மிதித்துப்போடப்படுகையில் யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகள் என்ன செய்யவேண்டும்?
10 இந்த உண்மையுள்ள ஆட்கள் மிதிக்கப்படுகையிலுங்கூட யெகோவாவுடைய உண்மையுள்ள சாட்சிகளாகவே இருக்கிறார்கள். ஆகவே, இந்தத் தீர்க்கதரிசனம் தொடருகிறது: “என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே.”-வெளிப்படுத்துதல் 11:3, 4.
11. ‘இரட்டு வஸ்திரத்தோடு’ தீர்க்கதரிசனஞ்சொல்லுவது உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எதை குறித்தது?
11 இந்த உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு சகிப்புத்தன்மை தேவைப்பட்டது, ஏனெனில் அவர்கள் ‘இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டு’ தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டும். இது எதை குறித்துக்காட்டியது? பைபிள் காலங்களில் இரட்டு வஸ்திரம் துக்கத்தோடு இருப்பதை அடையாளப்படுத்தினது. இதை அணிந்துகொள்வது ஓர் ஆள் துயரமான அல்லது துன்பமான, தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரப்பட்டான் என்பதற்கான அடையாளமாக இருந்தது. (ஆதியாகமம் 37:34; யோபு 16:15, 16; எசேக்கியேல் 27:31) இரட்டு வஸ்திரம் கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அறிவிக்க வேண்டிய அழிவு சம்பந்தப்பட்ட செய்திகளோடு அல்லது வருத்தத்தை உண்டாக்கும் துக்ககரமான செய்திகளோடு சம்பந்தப்படுத்தி பேசப்பட்டது. (ஏசாயா 3:8, 24-26; எரேமியா 48:37; 49:3) இரட்டு வஸ்திரம் அணிந்துகொள்வது தெய்வீக எச்சரிக்கையைக் கருத்தில்கொண்டு தாழ்த்தப்படுவதை அல்லது மனந்திரும்புவதைக் குறிப்பதாக இருக்கும். (யோனா 3:5) இந்த இரண்டு சாட்சிகள் அணிந்திருக்கும் இரட்டு வஸ்திரம் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதில் அவர்கள் தாழ்மையோடு சகித்திருப்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. தேசங்களுக்கும்கூட துக்கத்தைக் கொண்டுவரும் அவருடைய பழிவாங்கும் நாளை அறிவிக்கும் சாட்சிகளாயும் அவர்கள் இருந்தனர்.—உபாகமம் 32:41-43.
12. பரிசுத்த நகரம் கால்களால் மிதித்துப்போடப்படுவதன் காலப்பகுதி ஏன் சொல்லர்த்தமாக தோன்றுகிறது?
12 இந்தச் செய்தியை யோவான் வகுப்பார் திட்டமாக சொல்லப்பட்டிருக்கிற காலம் வரையாக பிரசங்கிக்க வேண்டும்: 1,260 நாட்கள், அல்லது 42 மாதங்கள், பரிசுத்த நகரம் கால்களின் கீழ் மிதித்துப்போடப்படுவதற்கிருந்த அதே காலப்பகுதி ஆகும். இந்தக் காலம், இரண்டு வித்தியாசப்பட்ட முறைகளில், முதலில் மாதங்களிலும் பின்னர் நாட்களிலும் சொல்லப்பட்டிருப்பதன் காரணமாக சொல்லர்த்தத்தில் பேசப்படுவதாக தோன்றுகிறது. மேலும், கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில், குறிக்கப்பட்ட காலப்பகுதியாகிய மூன்றரையாண்டுகள் இருந்தன, அப்போதுதானே இங்கு தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சம்பவங்களோடு கடவுளுடைய ஜனங்கள் பட்ட கடினமான அனுபவங்களும் ஒத்திருந்தன—டிசம்பர் 1914-ல் தொடங்கி ஜூன் 1918 வரை நீடித்திருந்த சம்பவங்களே ஆகும். (வெளிப்படுத்துதல் 1:10 ) அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் மீதும் உலகத்தின் மீதும் யெகோவா கொண்டுவரும் நியாயத்தீர்ப்பைப் பற்றிய “இரட்டு வஸ்திர” செய்தியைப் பிரசங்கித்தனர்.
13. (அ) இரண்டு சாட்சிகள் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை அடையாளப்படுத்தினது எதை குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) யோவான் “இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும்” என்று அந்த இரண்டு சாட்சிகளை அழைப்பது சகரியா சொன்ன எந்தத் தீர்க்கதரிசனத்தை நினைவுபடுத்துகிறது?
13 இரண்டு சாட்சிகளாக அடையாளப்படுத்தி பேசப்படுவது அவர்களுடைய செய்தி திருத்தமாகவும் சரியான மூலத்தையும் உடையதாயிருந்தது என்ற உறுதியை நமக்குத் தருகிறது. (ஒப்பிடுக: உபாகமம் 17:6; யோவான் 8:17, 18.) யோவான் அவர்களை “இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளு”மாக அழைத்து அவர்கள் “பூலோகத்தின் ஆண்டவருக்குமுன் நிற்கி”றார்கள் என்று சொல்லுகிறார். இது ஏழு கிளைகள்கொண்ட குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவமரங்களையும் கண்ட சகரியாவுடைய தீர்க்கதரிசனத்தையே குறிப்பிடுகிறதென்று நன்றாய் தெரிகிறது. இந்த ஒலிவமரங்கள் ‘இரண்டு அபிஷேகம் செய்யப்பட்டவர்களை,’ அதாவது ஆளுநராகிய செருபாபேலையும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவையும் படமாகக் குறிப்பதாக சொல்லப்பட்டன, இவர்கள் “சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கி”றார்கள்.—சகரியா 4:1-3, 14.
14. (அ) சகரியாவின் தரிசனத்தில் குறிப்பிடப்பட்ட இவை எதை குறித்துக்காட்டின, இரண்டு ஒலிவமரங்கள்? குத்துவிளக்கு? (ஆ) முதல் உலக யுத்தத்தின்போது அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எதை அனுபவிக்க இருந்தனர்?
14 சகரியா ஆலயம் திரும்பக் கட்டப்படும் காலத்தில் வாழ்ந்துவந்தார், இந்தக் கட்டட வேலையைச் செய்வதற்கு ஜனங்களைப் பலப்படுத்த செருபாபேலும் யோசுவாவும் யெகோவாவுடைய ஆவியைக்கொண்டு ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதை அவர் தரிசனத்தில் கண்ட இந்த இரண்டு ஒலிவமரங்களும் அர்த்தப்படுத்தின. இந்தக் குத்துவிளக்கைப் பற்றிய தரிசனம் யெகோவாவுடைய நோக்கங்கள் நிறைவேற்றப்படுவது—“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் [யெகோவா, NW] சொல்லு”வதன் காரணமாக—‘அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைபண்ணக்கூடாது’ என்பதைச் சகரியாவுக்கு நினைவுபடுத்தியது. (சகரியா 4:6, 10; 8:9) இதைப்போலவே, முதல் உலக யுத்தத்தின்போது தொடர்ந்து சத்திய ஒளியை மனிதவர்க்கத்துக்கு எடுத்துச்செல்பவர்களாகிய கிறிஸ்தவர்களடங்கிய இந்தச் சிறிய தொகுதியினர் திரும்பக் கட்டிடும் ஒரு வேலையில் பயன்படுத்தப்படுவார்கள். இவர்களுங்கூட உற்சாகத்துக்கு ஊற்றுமூலராயிருந்து, அற்பமான ஆரம்பத்தின் நாளை அசட்டைசெய்யாது, சிறுபான்மையான ஆட்களாயிருந்தாலும் யெகோவாவுடைய பலத்தின் மீது சார்ந்திருக்க கற்றுக்கொள்வார்கள்.
15. (அ) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இரண்டு சாட்சிகளாக விவரிக்கப்பட்டுள்ளது எதையும் நமக்கு நினைப்பூட்டுகிறது? விளக்குக. (ஆ) அந்த இரண்டு சாட்சிகள் என்ன வகையான அடையாளங்களை நடப்பிக்க அதிகாரம் கொடுக்கப்படுகின்றனர்?
15 இவர்கள் இரண்டு சாட்சிகளாக விவரிக்கப்படும் உண்மை மறுரூபக் காட்சியையும் நமக்கு நினைப்பூட்டுகிறது. அந்தத் தரிசனத்திலே, இயேசுவை மோசேயுடனும் எலியாவுடனும் ராஜ்ய மகிமையில் அவருடைய மூன்று அப்போஸ்தலரும் கண்டனர். இது அந்த இரண்டு தீர்க்கதரிசிகளைக்கொண்டு முன்குறிக்கப்பட்ட ஒரு வேலையை செய்துமுடிக்க இயேசு 1914-ல் தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் அமருவதை முன்நிழலாகக் குறிப்பிட்டது. (மத்தேயு 17:1-3 ) பொருத்தமாகவே, மோசேயும் எலியாவும் செய்ததைப்போன்றே இந்த இரண்டு சாட்சிகள் இப்போது அடையாளங்களை நடப்பிக்கிறதாக காணப்படுகிறார்கள். உதாரணமாக, அவர்களைக் குறித்து யோவான் சொல்கிறார்: “ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு.”—வெளிப்படுத்துதல் 11:5, 6அ.
16. (அ) அக்கினியை உட்படுத்திய அடையாளம் எப்படி இஸ்ரவேலில் மோசேயின் அதிகாரம் கேள்விக்கிடமான சமயத்தை நம்முடைய நினைவுக்குக் கொண்டுவருகிறது? (ஆ) முதல் உலக யுத்தத்தின்போது கிறிஸ்தவமண்டல குருமார் எப்படி பைபிள் மாணாக்கர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சச்சரவை கிளப்பிவிட்டனர், எப்படி அதற்கு பதில்-சண்டையாக இவர்கள் போராடினர்?
16 இஸ்ரவேலில் மோசேயின் அதிகாரம் கேள்விக்கிடமாகிய சமயத்தை இது நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. அந்தத் தீர்க்கதரிசி ஆக்கினைத்தீர்ப்புக்குரிய வார்த்தைகளை உரைத்தார், வானத்திலிருந்து வந்த சொல்லர்த்தமான அக்கினி 250 பேரை பட்சித்துப்போடச் செய்வதன் மூலம் யெகோவா அந்தக் கலகக்காரரை அழித்துப்போட்டார். (எண்ணாகமம் 16:1-7, 28-35) அதேவிதமாகவே, கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள் பைபிள் மாணாக்கர்கள் இறையியல் கல்லூரிகளிலிருந்து பட்டம்பெற்று வரவில்லை என்று சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் கடவுளுடைய சாட்சிகள் ஊழியர்களாக அதிக நற்சாட்சி பெற்றிருந்தார்கள்: அவர்களுடைய வேதப்பூர்வ செய்திக்குச் செவிகொடுத்த சாந்தகுணமுள்ள ஆட்கள். (2 கொரிந்தியர் 3:2, 3) 1917-ல் இந்தப் பைபிள் மாணாக்கர்கள் நிறைவேறித்தீர்ந்த இரகசியம் என்ற புத்தகத்தை வெளியிட்டனர், வெளிப்படுத்துதல் மற்றும் எசேக்கியேல் புத்தகங்களின் பேரில் வலிமையான விளக்கவுரையை இது அளித்தது. இதைத் தொடர்ந்து பைபிள் மாணாக்கர்களின் மாதாந்திரம் (ஆங்கிலம்) நான்கு-பக்க துண்டுப்பிரதி, “பாபிலோனின் வீழ்ச்சி—கிறிஸ்தவமண்டலம் இப்போது ஏன் கஷ்டப்படவேண்டும்—முடிவான விளைவு” என்ற இந்த முனைப்பான கட்டுரையுடன் வெளியிடப்பட்டது, 1,00,00,000 பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. ஐக்கிய மாகாணங்களில், கோபாவேசங்கொண்ட மதகுருமார் புத்தகத்தைத் தடைசெய்ய யுத்த பீதியைச் சாக்காக பயன்படுத்தினர். மற்ற நாடுகளில் இப்புத்தகம் தணிக்கைச் செய்யப்பட்டது. என்றாலும், கடவுளுடைய ஊழியர்கள் ராஜ்ய செய்தி (ஆங்கிலம்) என்ற நான்கு-பக்க துண்டுப்பிரதியிலுள்ள உக்கிரமான விவாதங்களைக்கொண்டு பதில்-சண்டையிட்டு வந்தனர். கர்த்தருடைய நாள் தொடருகையில், மற்ற பிரசுரங்கள் ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்தவமண்டலமிருக்கும் மரித்த நிலையை தெளிவாக எடுத்துக்காட்டும்.—எரேமியா 5:14-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
17. (அ) வறட்சியையும் அக்கினியையும் உட்படுத்திய என்ன சம்பவங்கள் எலியா காலத்தில் நடந்தன? (ஆ) அந்த இரண்டு சாட்சிகளுடைய வாய்களிலிருந்து எப்படி அக்கினி புறப்பட்டது, என்ன வறட்சி உட்பட்டிருந்தது?
17 எலியாவைப் பற்றி என்ன? இஸ்ரவேல் ராஜாக்களுடைய நாட்களிலே, இந்தத் தீர்க்கதரிசி பாகாலை வணங்கும் இஸ்ரவேலர்களின் மீது யெகோவாவுடைய எரிச்சலின் வெளிக்காட்டாக வறட்சியை அறிவித்தார். இது மூன்றரை ஆண்டுகள் நீடித்தது. (1 இராஜாக்கள் 17:1; 18:41-45; லூக்கா 4:25; யாக்கோபு 5:17) பிற்பாடு, அவிசுவாசியான அரசனாகிய அகசியா எலியாவைக் கட்டாயப்படுத்தி, தான் ராஜ்யபாரம் பண்ணும் இடத்துக்கு அவரை அழைத்துவரும்படியாக சேவகரை அனுப்பியபோது இந்தத் தீர்க்கதரிசி, வானத்திலிருந்து அக்கினி வந்து அந்தச் சேவகரை பட்சித்துப்போடும்படி செய்தார். தீர்க்கதரிசியாக அவன் இருக்கும் ஸ்தானத்துக்கு தகுந்த மரியாதையை ஓர் இராணுவ தலைவன் காட்டியபோதுதானே ராஜாவினிடத்திற்கு அவனோடேகூட போக எலியா சம்மதித்தார். (2 இராஜாக்கள் 1:5-16) அதைப்போலவே, கிறிஸ்தவமண்டலத்தில் இருக்கும் ஆவிக்குரிய வறட்சியைக் குறித்து அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் 1914-1918-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தைரியத்தோடு அவர்களுடைய கவனத்துக்கு கொண்டுவந்தார்கள், மேலும் ‘யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வரும்போது’ கொண்டுவரப்படும் ஆக்கினைத் தீர்ப்பைக் குறித்தும் எச்சரித்தார்கள்.—மல்கியா 4:1, 5, NW; ஆமோஸ் 8:11.
18. (அ) அந்த இரண்டு சாட்சிகளுக்கு என்ன அதிகாரம் கொடுக்கப்படுகிறது, மோசேக்கு கொடுக்கப்பட்டதோடு இது எவ்வாறு ஒத்திருக்கிறது? (ஆ) அந்த இரண்டு சாட்சிகள் எப்படி கிறிஸ்தவமண்டலத்தை அம்பலப்படுத்தினர்?
18 யோவான் அந்த இரண்டு சாட்சிகளைக் குறித்து தொடர்ந்து சொல்லுகிறார்: “அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு.” (வெளிப்படுத்துதல் 11:6ஆ) இஸ்ரவேலை விடுவிப்பதற்கு பார்வோனை சம்மதிக்கச் செய்ய தண்ணீர்களை இரத்தமாக மாற்றும் வாதையை உட்பட யெகோவா வாதைகளால் கொடுமையான எகிப்தை தண்டிக்க மோசேயைப் பயன்படுத்தினார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரவேலில் இருந்த பெலிஸ்திய சத்துருக்கள் எகிப்துக்கு விரோதமாக யெகோவா எடுத்த நடவடிக்கைகளை நினைவிற்கொண்டவர்களாக இப்படியாக ஆர்ப்பரித்தார்கள்: “அந்த மகத்துவமான தேவர்களின் [கடவுளின், NW] கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே [கடவுள் இவரே, NW].” (1 சாமுவேல் 4:8; சங்கீதம் 105:29) மோசே இயேசுவுக்குப் படமாக இருக்கிறார், அவருடைய நாட்களிலிருந்த மதத் தலைவர்களுக்குக் கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை உரைப்பதற்கான அதிகாரத்தையுடையவராய் இவர் இருந்தார். (மத்தேயு 23:13; 28:18; அப்போஸ்தலர் 3:22) முதல் உலக யுத்தத்தின்போது கிறிஸ்துவின் சகோதரர்களாகிய அந்த இரண்டு சாட்சிகள் கிறிஸ்தவமண்டலம் அதன் மந்தைக்குக் கொடுத்துவரும் “தண்ணீர்க”ளின் மரணத்தை விளைவிக்கும் தன்மையை அம்பலப்படுத்தினார்கள்.
இரண்டு சாட்சிகள் கொன்றுபோடப்படுகிறார்கள்
19. வெளிப்படுத்துதல் பதிவின் பிரகாரம் அந்த இரண்டு சாட்சிகள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது என்ன நடைபெறுகிறது?
19 இந்த வாதை கிறிஸ்தவமண்டலத்தின்மீது அவ்வளவு கடுமையாக இருந்ததன் காரணமாக, இந்த இரண்டு சாட்சிகள் இரட்டு வஸ்திரந்தரித்துக்கொண்டு 42 மாதங்கள் தீர்க்கதரிசனமுரைத்தப் பிற்பாடு, இவர்களைக் ‘கொலைசெய்ய’ கிறிஸ்தவமண்டலம் அவளுடைய உலக செல்வாக்கைப் பயன்படுத்தினது. யோவான் எழுதுகிறார்: “அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற [அபிஸிலிருந்தேறுகிற, NW] மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே [கழுமரத்திலே, NW] அறையப்பட்டார். ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரைநாள் வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள்.”—வெளிப்படுத்துதல் 11:7-10.
20. “அபிஸிலிருந்தேறுகிற மிருகம்” என்ன?
20 வெளிப்படுத்துதலில் மிருகத்தைக் குறித்துப் பேசப்படும் 37 இடங்களில் இதுவே முதல் முறையாக இருக்கிறது. நாம் போகப்போக இந்த மிருகத்தைக் குறித்தும் மற்ற மிருகங்களைக் குறித்தும் விளக்கமாக ஆராயப்போகிறோம். “அபிஸிலிருந்தேறுகிற மிருகம்” சாத்தானால் வடிவமைக்கப்பட்டதாக இருக்கிறது என்று சொல்வது தற்போது போதுமானது, இது உயிருடனிருக்கும் ஓர் அரசியல் ஒழுங்குமுறையாகும்.b—வெளிப்படுத்துதல் 13:1; தானியேல் 7:2, 3, 17.
21. (அ) அந்த இரண்டு சாட்சிகளுடைய மத விரோதிகள் எப்படி யுத்த சூழ்நிலையை அனுகூலப்படுத்தினர்? (ஆ) அந்த இரண்டு சாட்சிகளுடைய உடல்கள் அடக்கம்பண்ணப்படாமல் விடப்படுவது எதை குறித்துக்காட்டியது? (இ) மூன்றரை நாட்களடங்கிய காலப்பகுதி எப்படி கருதப்படவேண்டும்? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)
21 தேசங்கள் முதல் உலக யுத்தத்தில் 1914-லிருந்து 1918 வரை ஈடுபட்டிருந்தன. தேசாபிமான உணர்ச்சிகள் மிக அதிகமாக இருந்தது, 1918-ன் இளவேனிற் காலத்தில் அந்த இரண்டு சாட்சிகளுடைய மத விரோதிகள் சூழ்நிலைமையை அனுகூலப்படுத்திக் கொண்டனர். பைபிள் மாணாக்கர்களின் பொறுப்புள்ள ஊழியர்கள் மீது தேசத்துரோகச்செயலின் பேரில் பொய் குற்றஞ்சாட்டி நாட்டின் சட்டப்பூர்வ பிரிவை சூழ்த்திறனோடு பயன்படுத்தி அவர்களை சிறையிலிடச் செய்தனர். உண்மையுள்ள உடன்வேலையாட்கள் திகைத்துப்போனார்கள். ராஜ்ய வேலை பெரும்பாலும் நிறுத்தப்பட்டது. இது பிரசங்க வேலை ஏதோ மரித்துக்கிடந்ததுபோல இருந்தது. பைபிள் காலங்களில் கல்லறையில் பிணத்தை அடக்கம் பண்ணாதிருப்பது அதிக அவமதிப்பாக இருந்தது. (சங்கீதம் 79:1-3; 1 இராஜாக்கள் 13:21, 22) ஆகவே, இந்த இரண்டு சாட்சிகளை அடக்கம் பண்ணாமல் விடுவது பெரும் இழுக்கை கொண்டுவரும். பலஸ்தீனாவில் உள்ள வெப்பமான சீதோஷ்ணநிலைக்கு தெருவில் அப்படியே கிடப்பதற்கு விடப்பட்ட பிணம் சொல்லர்த்தமான மூன்றரை நாட்களுக்கு பிறகு நாற்றமெடுக்க ஆரம்பிக்கும்.c (யோவான் 11:39-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.) இப்படியாக தீர்க்கதரிசனத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த விளக்கம் அந்த இரண்டு சாட்சிகள் பொறுத்துக்கொள்ளவேண்டிய அவமானத்தை எடுத்துக் காண்பிக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட சிறையிருப்பிலிருந்த ஆட்களுடைய வழக்கு நீதிமன்றத்தில் மேலும் வழக்காடுவதற்கென இருந்தபோதிலும் பிணையமளித்து விடுதலை செய்யப்படுவதிலிருந்துங்கூட மறுக்கப்பட்டனர். அவர்கள் ‘மகா நகரத்துக்’ குடிகளுக்கு நாற்றமெடுக்கம் வரையாக பலர் பார்த்துவிட்டுச் செல்ல நீண்ட சமயம் வெளியிலே கிடக்கவிடப்பட்டார்கள். ஆனால் இந்த ‘மகா நகரம்’ என்னவாக இருந்தது?
22. (அ) மகா நகரம் என்ன? (ஆ) அந்த இரண்டு சாட்சிகளைத் தடைசெய்வதில் பொது செய்தித்தாள்களும் மதகுருமாரோடு எப்படி சேர்ந்துகொண்டன? (பெட்டியைப் பார்க்கவும்.)
22 யோவான் நமக்கு சில குறிப்புகளை கொடுக்கிறார். இயேசு அங்கு கழுமரத்திலறையப்பட்டதாக சொல்கிறார். எனவே நாம் உடனே எருசலேமை நினைத்துப்பார்க்கிறோம். மேலும் அந்த மகா நகரம் சோதோம், எகிப்து என்றும் அழைக்கப்படுவதாக சொல்கிறார். அவளுடைய அசுத்தமான செயல்களின் காரணமாக சொல்லர்த்தமான எருசலேம் ஒருகாலத்தில் சோதோம் என்று அழைக்கப்பட்டிருந்தது. (ஒப்பிடுக: ஏசாயா 1:8-10; எசேக்கியேல் 16:49, 53-58.) மேலும் முதல் உலக வல்லரசாகிய எகிப்து சில சமயங்களில் இந்த உலக ஒழுங்குமுறையை படமாகக் குறிப்பிடுவதாய் தோன்றுகிறது. (ஏசாயா 19:1, 19; யோவேல் 3:19) ஆகவே, இந்த மகா நகரம் சோதோமைப் போல அசுத்தமாகவும் பாவம்நிறைந்ததாகவும் கடவுளை வணங்குவதாகவும் உரிமைபாராட்டுகிற கறைப்படுத்தப்பட்ட “எருசலே”மைப் படமாகக் குறிப்பிடுகிறது, மேலும் எகிப்தைப் போல இது இந்தச் சாத்தானிய உலக ஒழுங்குமுறையின் பாகமாகவும் இருக்கிறது. நவீன நாளில், அவிசுவாசமுள்ள எருசலேமுக்கு இணையாக உள்ள கிறிஸ்தவமண்டலத்தை இது படமாகக் குறித்துக்காட்டுகிறது, அந்த இரண்டு சாட்சிகளுடைய கலக்கமுண்டாக்கும் பிரசங்க வேலையை தடைசெய்தபோது இந்த அமைப்பிலுள்ள அங்கத்தினர்களே மிகவும் களிகூர்ந்தார்கள்.
திரும்பவும் உயிருக்கு கொண்டுவருதல்!
23. (அ) மூன்றரை நாட்களுக்குப் பிற்பாடு அந்த இரண்டு சாட்சிகளுக்கு என்ன நடக்கிறது, இவர்களுடைய சத்துருக்களின் மீது என்ன பாதிப்பை இது உண்டாக்குகிறது? (ஆ) வெளிப்படுத்துதல் 11:11, 12 வசனங்களும் பள்ளத்தாக்கில் உள்ள உலர்ந்துபோன எலும்புகளின் மேல் யெகோவா தன்னுடைய ஆவியைப் பிரவேசிக்கச்செய்த எசேக்கியேல் தீர்க்கதரிசனமும் எப்போது நவீன நாளைய நிறைவேற்றத்தை உடையவையாயிருந்தன?
23 கடவுளுடைய ஜனங்களை நிந்திப்பதில் பொது செய்தித்தாள்களும் மதகுருவர்க்கத்தோடு சேர்ந்துகொண்டன, ஒரு செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “நிறைவேறித்தீர்ந்த இரகசியத்தின் முடிவு கொடுக்கப்பட்டது.” என்றாலும், சத்தியத்தை தவிர வேறு எதுவும் உண்மையாயிருக்க முடியாது! அந்த இரண்டு சாட்சிகள் மரித்தவர்களாகவே இல்லை. நாம் வாசிக்கிறோம்: “மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:11, 12) எனவே, இவர்கள் எசேக்கியேல் அவனுடைய தரிசனத்தில் விஜயம்செய்த பள்ளத்தாக்கிலிருந்த உலர்ந்துபோன எலும்புகளின் அனுபவத்தைப்போன்ற ஓர் அனுபவத்தைப் பெற்றார்கள். யெகோவா அந்த உலர்ந்த எலும்புகளில் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணினார், அவைகள் உயிரடைந்தன, இஸ்ரவேல் தேசம் பாபிலோனில் 70 ஆண்டுகளுக்கு பிற்பாடு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மறுபடியும் பிறந்ததை இது படமாகக் குறித்துக் காட்டுகிறது. (எசேக்கியேல் 37:1-14)) யெகோவா அவருடைய “மரித்த” சாட்சிகளை உணர்ச்சிக்கொண்ட ஜீவனுக்குத் திரும்பக் கொண்டுவந்தபோது எசேக்கியேல் மற்றும் வெளிப்படுத்துதல் புத்தகங்களிலுள்ள இந்த இரண்டு தீர்க்கதரிசனங்களும் 1919-ல் முனைப்பான விதத்தில் அதனுடைய நவீன நாளைய நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தன.
24. அந்த இரண்டு சாட்சிகள் உயிருக்கு வந்தது மதச் சார்பாக அவர்களை துன்புறுத்தின ஆட்கள் மீது என்ன பாதிப்பை கொண்டிருந்தது?
24 அவர்களை துன்புறுத்தின ஆட்களுக்கு என்னே ஓர் அதிர்ச்சியை கொடுத்தது! இரண்டு சாட்சிகளுடைய உடல்கள் திடீரென உயிர்பெற்று மறுபடியும் செயல்படத் தொடங்கின. அந்த மதகுருமாருக்கு இது விழுங்குவதற்கு ஒரு கசப்பான மருந்தாக இருந்தது, அவர்கள் சதிசெய்து சிறையிலிடப்படும்படி செய்த அந்தக் கிறிஸ்தவ ஊழியர்கள் மறுபடியும் விடுவிக்கப்பட்டு பின்னர் குற்றச்சாட்டிலிருந்து முழுவதும் விடுவிக்கப்பட இருந்ததன் காரணமாக அவர்களுக்கு அது இன்னும் அதிக கசப்பாக இருந்தது பைபிள் மாணாக்கர்கள் செப்டம்பர் 1919-ல் அ.ஐ.மா., ஒஹையோ, சீடர் பாய்ன்ட்டில் ஒரு மாநாட்டை நடத்தியது இன்னும் அதிக அதிர்ச்சியை அவர்களுக்கு உண்டாக்கியது. இம்மாநாட்டில் வெளிப்படுத்துதல் 15:2 மற்றும் ஏசாயா 52:7 ஆகிய வசனங்களை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட J. F. ரதர்ஃபர்டு “ராஜ்யத்தை அறிவித்தல்” என்ற பேச்சைக் கொடுத்து மாநாட்டில் கூடியிருந்தவர்களை கிளர்ச்சியடையச் செய்தார். யோவான் வகுப்பாரைச் சேர்ந்தவர்கள் மறுபடியும் “தீர்க்கதரிசனஞ்சொல்ல” அல்லது வெளியரங்கமாக பிரசங்கிக்க ஆரம்பித்தனர். அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் மாயத்தைப் பயமில்லாது, மேன்மேலும் தைரியங்கொண்டு அம்பலப்படுத்தி வந்தார்கள்.
25. (அ) “இங்கு ஏறிவாருங்கள்” என்று அந்த இரண்டு சாட்சிகளுக்கு எப்போது சொல்லப்பட்டது, இது எப்படி நடந்தது? (ஆ) அந்த இரண்டு சாட்சிகளைத் திரும்ப உயிருக்கு கொண்டுவந்தது மகா நகரத்தின் மீது என்ன அதிர்ச்சிதரும் பாதிப்பைக் கொண்டிருந்தது?
25 கிறிஸ்தவமண்டலம் 1918-ல் கண்ட அவளுடைய வெற்றியை மறுபடியும் கண்டடைய திரும்பத் திரும்ப முயற்சி செய்தது. கும்பலாகக்கூடி தாக்குவது, சட்டத்திற்கு உட்பட்ட சூழ்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்வது, சிறையிலடைப்பது, மேலும் கொன்றுபோடுவதையுங்கூட அவள் மேற்கொண்டாள்—எல்லாமே ஒரு பயனுமில்லாமற்போயிற்று! 1919-க்குப் பிற்பாடு இந்த இரண்டு சாட்சிகளுடைய ஆவிக்குரிய எல்லையை அவளால் சென்றெட்ட முடியவில்லை. அந்த ஆண்டிலேயே, யெகோவா அவர்களிடம் “இங்கே ஏறிவாருங்கள்” என்று சொன்னார், சத்துருக்கள் அவர்களை பார்த்தாலும் தொடமுடியாத அளவுக்கு மேலோங்கிய ஆவிக்குரிய நிலைக்கு உயர அவர்கள் சென்றிருந்தனர். அந்த நகரத்தில் அவர்கள் திரும்ப உயிருக்கு கொண்டுவரப்பட்டது உண்டாக்கிய அதிர்ச்சியான பாதிப்பை யோவான் விவரிக்கிறார்: “அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:13) மத வட்டாரத்தில் உண்மையில் பெரிய கொந்தளிப்புகள் உண்டாயின. இந்த உயிர்த்தெழுப்பப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய குழு செயல்பட ஆரம்பித்தவுடன் ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சுகளுடைய தலைவர்களின் கீழிருந்த நிலம் அசையப்பண்ணப்பட்டதாக தோன்றியது. அவர்களுடைய நகரத்தில் பத்திலொருபங்கு, அடையாள அர்த்தமுள்ள விதத்தில் 7,000 பேர் மிக அதிகமாக பாதிக்கப்பட்டதால் கொன்றுபோடப்பட்டதாகப் பேசப்படுகிறார்கள்.
26. வெளிப்படுத்துதல் 11:13-ல் சொல்லப்பட்டுள்ள “நகரத்தில் பத்திலொருபங்கு” மற்றும் “ஏழாயிரம்” என்பவை யாரை குறித்துக் காட்டுகின்றன? விளக்குக.
26 “நகரத்தில் பத்திலொருபங்கு” என்ற வார்த்தை பூர்வ எருசலேமின் அழிவை பரிசுத்த வித்தாக பத்தில் ஒரு பங்கு தப்பிப்பிழைக்கும் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக சொன்னதை ஞாபகப்படுத்துகிறது. (ஏசாயா 6:13) அதைப்போன்றே, இஸ்ரவேலில் தான் மட்டும் உண்மையுள்ளவராக நிலைத்திருப்பதாக எலியா நினைத்தபோது பாகாலை வணங்கிவராத 7,000 ஆட்கள் இன்னும் இருப்பதாக யெகோவா அவரிடம் சொன்னதை இந்த 7,000 என்ற எண் ஞாபகப்படுத்துகிறது. (1 இராஜாக்கள் 19:14, 18) அப்போஸ்தலனாகிய பவுல் முதல் நூற்றாண்டிலே இந்த 7,000 பேர் கிறிஸ்துவைப் பற்றிய சுவிசேஷத்துக்குச் செவிகொடுத்த யூதர்களில் இருக்கிற மீதியானோரை படமாக குறிப்பதாக சொன்னார். (ரோமர் 11:1-5) வெளிப்படுத்துதல் 11:13-ல் சொல்லப்பட்ட “ஏழாயிரம்” மற்றும் “நகரத்தில் பத்திலொருபங்கு” என்பவை புத்துயிரளிக்கப்பட்ட அந்த இரண்டு சாட்சிகளுக்குச் செவிகொடுத்து பாவம் நிறைந்த அந்த மகா நகரத்தை நிராகரித்தவர்களாக இருக்கிறார்கள் என்று நாம் புரிந்துகொள்ள இந்த வசனங்கள் உதவுகின்றன. அவர்கள் சொல்லப்போனால், கிறிஸ்தவமண்டலத்துக்கு மரிக்கிறார்கள். அவர்களுடைய பெயர்கள் அவளுடைய உறுப்பினர்களாக இருப்பதன் பதிவிலிருந்து நீக்கப்படுகின்றன. அவளுக்கு, அவர்கள் இனிமேலும் உயிரோடு இல்லை.d
27, 28. (அ) எப்படி ‘மீதியானவர்கள் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்?’ (ஆ) கிறிஸ்தவமண்டல குருமார் எவற்றை ஒப்புக்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்?
27 ஆனால் எப்படி ‘[கிறிஸ்தவமண்டலத்திலுள்ள] மீதியானவர்கள் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்’? நிச்சயமாகவே, அவர்களுடைய விசுவாசதுரோக மதத்தை விட்டுவிட்டு கடவுளுடைய ஊழியர்களாக ஆவதினால் அல்ல. மாறாக, இது வின்சன்ட் எழுதிய புதிய ஏற்பாட்டிலுள்ள வார்த்தைகளுடைய ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற புத்தகம் விளக்கிய கருத்தையே கொண்டிருக்கிறது, இதில் “பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்” என்ற சொற்றொடர் கலந்தாராயப்பட்டுள்ளது. அங்கு இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது: “அந்தச் சொற்றொடர் மாற்றத்தையோ மனந்திரும்புதலையோ நன்றியறிதலையோ குறிப்பிடாமல் ஏற்றுக்கொள்வதையே குறிக்கிறது, இதுவே எப்போதும் வேதவசனங்கள் கொண்டுள்ள கருத்தாகும். யோசு vii. 19 (செப்ட்.). யோவா. ix. 24; அப். xii. 23; ரோ. iv. 20 வசனங்களை ஒப்பிடவும்.” அவளுடைய பெரும் ஏமாற்றத்துக்கு, கிறிஸ்தவமண்டலம் அந்தப் பைபிள் மாணாக்கர்களுடைய கடவுள் திரும்பவும் இவர்களை கிறிஸ்தவ நடவடிக்கையில் ஈடுபடச் செய்த மகத்தான செயலை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது.
28 ஒருவேளை தாங்கள் ஒப்புக்கொள்வதை இந்த மதகுருமார் வெறுமனே தங்களுடைய மனதிலேயே அல்லது தங்களுக்குள்ளாகவே கொண்டிருந்திருக்கலாம். நிச்சயமாக, அந்த இரண்டு சாட்சிகளுடைய கடவுளை அவர்கள் வெளிப்படையாக எடுத்துச்சொன்னதாக பதிவில்லை. ஆனால் யோவானின் மூலம் கொடுக்கப்பட்ட யெகோவாவுடைய தீர்க்கதரிசனம் அவர்களுடைய இருதயங்களில் என்ன இருந்தது என்பதைப் பகுத்துணரவும் 1919-ல் அவர்கள் அனுபவித்த இழிவான அதிர்ச்சியை உணரவும் நமக்கு உதவுகிறது. கிறிஸ்தவமண்டலம் அவளுடைய ஆடுகளைப் பிடித்துவைத்திருக்க உறுதியோடு முயற்சிசெய்தபோதிலும் அந்த ஆண்டு முதற்கொண்டு “ஏழாயிரம்” பேர் அவளை விட்டு வெளியேறினார்கள், இப்படியாக மதகுருமார், யோவான் வகுப்பார் வழிபடும் கடவுள் அவர்களுடைய கடவுளைவிட பலமுள்ளவராக இருக்கிறார் என்பதை கட்டாயமாக உணரச்செய்யப்பட்டார்கள். பிற்பட்ட ஆண்டுகளில் அவர்களுடைய மந்தையிலிருந்து இன்னும் அநேக ஆட்கள் விட்டுச்செல்லுகையில் இதை அவர்கள் இன்னும் அதிக தெளிவாக கண்டுணர்ந்து கொள்ளுவார்கள், இந்த ஆட்கள் கர்மேல் மலையில் இருந்த பாகால் வணக்கத்தார் மீது எலியா வெற்றிபெறுகையில் அவர்கள் சொன்ன வார்த்தைகளை எதிரொலிக்கிறவர்களாயிருப்பார்கள்: “யெகோவாவே மெய்யான கடவுள்! யெகோவாவே மெய்யான கடவுள்!”—1 இராஜாக்கள் 18:39, NW.
29. எது சீக்கிரமாய் வருகிறதாக யோவான் சொல்லுகிறார், கிறிஸ்தவமண்டலத்துக்கு மேலும் என்ன ஓர் அசையப்பண்ணுதல் வரக் காத்திருக்கிறது?
29 ஆனால் கேளுங்கள்! யோவான் நமக்கு சொல்லுகிறார்: “இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது.” (வெளிப்படுத்துதல் 11:14) கிறிஸ்தவமண்டம் இதுவரை நடந்த காரியங்களால் அசையப்பண்ணப்பட்டதென்றால், மூன்றாம் ஆபத்து அறிவிக்கப்படுகையிலும், ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதுகையிலும், மேலும் கடவுளுடைய பரிசுத்த இரகசியம் இறுதியாக நிறைவேறும்போதும் அவள் என்ன செய்வாள்?—வெளிப்படுத்துதல் 10:7.
[அடிக்குறிப்புகள்]
a இந்தப் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தைப் பற்றிய முழு விளக்கத்துக்கு, ஜூலை 1, 1996 தேதியிட்ட காவற்கோபுரத்தில், “யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயம்” என்ற தலைப்பிலும், டிசம்பர் 1, 1972 ஆங்கில காவற்கோபுரத்தில், “வணங்குவதற்குரிய ஒரே மெய்யான ஆலயம்” என்ற தலைப்பிலும் உள்ள கட்டுரைகளைப் பார்க்கவும்.
b “அபிஸ்” (கிரேக்கில், அபிஸ்ஸாஸ் [aʹbys·sos] எபிரெயுவில், டெஹோம் [tehohmʹ]) என்ற வார்த்தையானது செயற்பட முடியாத உள்ள இடத்தை அடையாளப்பூர்வமாக குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 9:2-ஐ காண்க.) என்றாலும், சொல்லர்த்தமான கருத்தில், அது பரந்த சமுத்திரத்தையும் குறிக்கலாம். அதற்கான எபிரெய வார்த்தை எப்போதும் “ஆழங்கள்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (சங்கீதம் 71:20; 106:9; யோனா 2:5) எனவே, “அபிஸிலிருந்தேறுகிற மிருகம்,” ‘சமுத்திரத்திலிருந்து எழும்பிவருகிற மிருகத்தோடு’ அடையாளப்படுத்தப்படலாம்.—வெளிப்படுத்துதல் 11:7; 13:1.
c இந்தக் காலத்தில் கடவுளுடைய ஜனங்களின் அனுபவங்களை ஆராய்ந்துபார்க்கும்போது, அந்த 42 மாதங்கள் சொல்லர்த்தமான மூன்றரையாண்டுகளை குறிக்கிறதென்றாலும் அந்த மூன்றரை நாட்கள் சொல்லர்த்தமான 84 மணிநேர காலப்பகுதியை குறிப்பதில்லை எனத் தோன்றுகிறது. மூன்றரை நாட்களடங்கிய திட்டமான காலப்பகுதியானது இருமுறை (9 மற்றும் 11 வசனங்களில்) குறிப்பிடப்பட்டிருக்கிறதேனெனில், அதற்கு முன்பு இருக்கும் மூன்றரை ஆண்டு காலப்பகுதி நடவடிக்கையோடு ஒப்பிடும்போது அது ஒரு குறுகியக் காலப்பகுதியை முக்கியப்படுத்தவே இருக்கலாம்.
d ரோமர் 6:2, 10, 11; 7:4, 6, 9; கலாத்தியர் 2:19; கொலோசெயர் 2:20; 3:3 போன்ற வசனங்களில், “மரித்த,” “மரித்தது,” மற்றும் “பிழைப்பது” ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கவும்.
பக்கம் 168-ன் பெட்டி]
வெளிப்படுத்துதல் 11:10 சம்பந்தப்பட்ட களிகூருதல்
ரே H. ஏப்ராம்ஸ் எழுதிய பிரீச்சர்ஸ் பிரசன்ட் ஆர்ம்ஸ் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் அவர் பைபிள் மாணாக்கர்கள் பிரசுரித்த நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்துக்கு மதகுருமாரின் வெறுக்கத்தக்க எதிர்ப்பை குறிப்பிடுகிறார். பைபிள் மாணாக்கர்களையும் “பெருவாரியாக தீங்கிழைக்கும் சமயக்கோட்பாட்டையும்” ஒழித்துவிடுவதற்கு மதகுருமாருடைய முயற்சிகளையும் விமர்சிக்கிறார். இது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுவதிலும் J. F. ரதர்ஃபர்டுக்கும் ஏழு கூட்டாளிகளுக்கும் அநேக ஆண்டு சிறையிருப்பு தீர்ப்புக் கொடுப்பதிலும் முடிவடைந்தது. டாக்டர் ஏப்ராம்ஸ் மேலும் சொல்கிறார்: “வழக்கை முழுமையாக தீர ஆராய்ந்துபார்ப்பது இந்த இயக்கத்துக்குப் பின் சர்ச்சுகளும் மதகுருமாரும் ரசலேயர்களை அறவே ஒழித்துவிடுவதற்கு மூலக்காரணராயிருந்தனர் என்ற ஒரு முடிவுக்கு வரச்செய்கிறது. பிப்ரவரி 1918-ல், கனடாவில் இந்தப் பிரசங்கிமார்கள் தங்களுக்கும் தங்களுடைய பிரசுரங்களுக்கும் எதிராக, விசேஷமாக நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற பிரசுரத்துக்கு எதிராக, ஒரு திட்டமிட்ட வேலையைத் தொடங்கினர். வின்னிபெக் எழுதிய டிரிப்யூன்படி . . . அவர்களுடைய புத்தகத்தை வெளியிடாமல் தடைவிதித்தது ‘மதகுருமாரின் பிரதிநிதித்துவங்களாலேயே’ நேரடியாகச் செய்யப்பட்டதாகும் என்று நம்பப்படுகிறது.”
டாக்டர் ஏப்ராம்ஸ் தொடர்ந்து சொல்லுகிறார்: “மத சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை அச்சடிக்கிற பதிப்பாசிரியர்களுக்கு இந்த 20-வருட தீர்ப்புகளைக் குறித்த செய்தியானது எட்டினபோது உண்மையில் ஒவ்வொரு வெளியீடுகளும், சிறிய மற்றும் பெரிய வெளியீடுகள் யாவும் அதைக் குறித்து மகிழ்ச்சியடைந்தன. எந்தவொரு வைதீக மதவாத பத்திரிகைகளிலும் என்னால் பரிவிரக்க வார்த்தைகளையே கண்டுபிடிக்க முடியவில்லை. ‘சந்தேகமேயில்லை துன்புறுத்தல் . . . பகுதியாக, அவர்கள் “வைதீக” மத குழுக்களுடைய வெறுப்பை சம்பாதித்துக்கொண்டதன் நிமித்தமே எழும்பியிருக்க வேண்டும்’ என்ற ஒரு முடிவுக்கு அப்டான் சின்க்லேர் வந்தார். சர்ச்சுகள் கூட்டுமுயற்சியெடுத்து அவை எதை செய்ய முடியவில்லையோ அதையே அரசாங்கம் இப்போது அவர்களுக்காக செய்து தீர்த்து வெற்றிபெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.” அநேக மதஞ்சார்ந்த வெளியீடுகளுடைய மதிப்புக்குறைவாக்கும் குறிப்புகளை மேற்கோள் காண்பித்தப் பிறகு புலன் விசாரணை வழக்குமன்றம் தீர்மானத்தை முற்றிலும் மாற்றியதை எடுத்துச்சொல்பவராய் அவர் குறிப்பிடுகிறார்: “சர்ச்சுகளில் இந்தத் தீர்ப்பு மெளனத்துடன் வரவேற்கப்பட்டது.”
[பக்கம் 163-ன் படம்]
யோவான் ஆவிக்குரிய ஆலயத்தை அளந்துபார்க்கிறார்—அபிஷேகம் செய்யப்பட்ட ஆசாரியத்துவத்தில் உள்ளவர்கள் அடைய வேண்டிய தராதரங்கள்
[பக்கம் 165-ன் படம்]
செருபாபேலும் யோசுவாவும் மறுபடியும் செய்த கட்டுவிப்பு வேலையானது, கர்த்தருடைய நாளில் யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உண்டாகும் அற்ப ஆரம்பங்கள் பெரிய அதிகரிப்பைக்கொண்டு முடியும் என்பதை குறிப்பிட்டுக் காட்டியது. மேலே படத்தில் காட்டப்பட்டிருக்கிற நியூ யார்க், புரூக்லினிலிருக்கும் கட்டட வசதிகள் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்ய இன்னும் அதிகம் விரிவாக்கப்பட வேண்டியிருந்திருக்கின்றன
[பக்கம் 166-ன் படம்]
மோசேயும் எலியாவும் செய்த தீர்க்கதரிசன வேலையானது அந்த இரண்டு சாட்சிகள் அறிவித்த ஆக்கினைத்தீர்ப்புக்குரிய செய்திகளுக்கு முன்நிழலாக இருந்தன
[பக்கம் 169-ன் படம்]
எசேக்கியேல் 37-ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட உலர்ந்துபோன எலும்புகளைப் போல அந்த இரண்டு சாட்சிகள் நவீன நாளைய பிரசங்க வேலைக்காக திரும்பவும் செயற்படுத்தப்படுகிறார்கள்