கிறிஸ்தவர்கள் சேவை செய்வதில் மகிழ்ச்சி காண்பவர்கள்
‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி.’—அப்போஸ்தலர் 20:35, NW.
1. இன்று நிலவும் தவறான மனப்பான்மை என்ன, அது ஏன் ஆபத்தானது?
எடுத்ததற்கு எல்லாம் “நான்/எனக்கு” என்ற வார்த்தைகள்தான் 1900-களின் பிற்பகுதியில் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. “நான்/எனக்கு” என்றால் எப்போதும் தான்தான் ‘நம்பர் 1’-ஆக திகழ வேண்டும் என்று நினைப்பது. இதில் சுயநலமும் பேராசையும் கலந்திருக்கிறது, இது மற்றவர்களைப் பற்றி சிறிதும் அக்கறையில்லாமல் இருக்கும் ஒரு மனநிலை. இந்த மனநிலை 2000-ஆம் ஆண்டிலும் நீடிக்கத்தான் செய்கிறது. “இதில் எனக்கு என்ன கிடைக்கும்?” அல்லது “இதில் எனக்கு என்ன லாபம்?” என்ற கேள்விகளை நீங்கள் எத்தனை தடவை கேட்டிருப்பீர்கள். இப்படிப்பட்ட சுயநல மனப்பான்மையால் மகிழ்ச்சி கிடைக்கவே கிடைக்காது. இது, ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி’ என்று இயேசு சொன்ன நியமத்திற்கு நேர் எதிராக உள்ளது.—அப்போஸ்தலர் 20:35, NW.
2. கொடுப்பது சந்தோஷம் என்பதை எப்படி காணலாம்?
2 வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக மகிழ்ச்சி என்பது உண்மையா? ஆம், யெகோவா தேவனைப் பற்றி எண்ணிப்பாருங்கள். அவரிடத்தில்தான் “ஜீவஊற்று” இருக்கிறது. (சங்கீதம் 36:9) நம்மை மகிழ்ச்சியுள்ளவர்களாகவும் பலனுள்ளவர்களாகவும் செய்வதற்குத் தேவையான அனைத்தையும் அவர் நமக்கு கொடுக்கிறார். ஆம், அவரிடமிருந்துதான் “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும்” கிடைக்கிறது. (யாக்கோபு 1:17) “நித்தியானந்த தேவன்” யெகோவா எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:11) தாம் படைத்த மனிதர்களை மிகவும் நேசிப்பதால் அதிகமாக அள்ளி வழங்குகிறார். (யோவான் 3:16) மனித குடும்பத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பெற்றோராக இருந்தால், ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு எத்தனை எத்தனை தியாகங்கள் செய்ய வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் செய்யும் தியாகங்களை பல வருடங்களுக்கு உங்கள் பிள்ளை அறியாமலே இருக்கிறது. அவை எல்லாவற்றையும் அவன் ஏனோ தானோவென்று எடுத்துக்கொள்கிறான். ஆனாலும் நீங்கள் தன்னலம் கருதாமல் இப்படி கொடுத்துக்கொண்டே இருக்கையில் அவன் வளருவதைப் பார்த்து நீங்கள் பூரித்துப்போகிறீர்கள். ஏன்? ஏனென்றால் நீங்கள் அவனை மிகவும் நேசிக்கிறீர்கள்.
3. யெகோவாவுக்கும் உடன் விசுவாசிகளுக்கும் சேவை செய்வது ஏன் பேரானந்தமாக உள்ளது?
3 உண்மை வணக்கமும் அதே போலத்தான், அன்பின் அடிப்படையில் கொடுப்பதுதான் அதன் சிறப்பு அம்சம். நாம் யெகோவாவை நேசிக்கிறோம், உடன் விசுவாசிகளை நேசிக்கிறோம், ஆகவே அவர்களுக்கு சேவை செய்து, நம்மையே அவர்களுக்குக் கொடுப்பதே நமக்கு பேரானந்தம். (மத்தேயு 22:37-39) சுயநல நோக்கத்தோடு சேவிப்போருக்கு மகிழ்ச்சி கிடைப்பது அரிது. ஆனால் தன்னலம் கருதாது சேவித்து, என்ன பெற்றுக்கொள்ளலாம் என்பதைவிட என்ன கொடுக்கலாம் என்பதில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் மகிழ்ச்சியை அடைகிறார்கள். நம்முடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட சில வார்த்தைகள் வேதாகமத்தில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ளும்போது இந்த உண்மை புலனாகிறது. இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் மூன்று வார்த்தைகளை நாம் சிந்திப்போம்.
இயேசுவின் பொது சேவை
4. கிறிஸ்தவமண்டலத்தின் “பொது சேவை” எப்படிப்பட்டது?
4 மூல கிரேக்குவில், வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட முக்கியமான ஒரு வார்த்தை லிட்டூர்ஜையா (lei·tour·giʹa). இது புதிய உலக மொழிபெயர்ப்பில் “பொது சேவை” என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவமண்டலத்தார் லிட்டூர்ஜையா என்ற வார்த்தையிலிருந்து பொது வழிபாட்டு முறை (ஆங்கிலத்தில் ‘லிட்டர்ஜி’) என்ற அர்த்தமுடைய வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.a ஆனால் சம்பிரதாயமாக செய்யப்படும் கிறிஸ்தவமண்டலத்தின் பொது வழிபாட்டு முறைகள் உண்மையில் பொது சேவை அல்ல.
5, 6. (அ) இஸ்ரவேலில் செய்யப்பட்ட பொது சேவை என்ன, அதன் நன்மைகள் யாவை? (ஆ) இஸ்ரவேலில் செய்யப்பட்ட பொது சேவையை மாற்றீடு செய்த மேலான சேவை எது, ஏன்?
5 பவுல் அப்போஸ்தலன் இஸ்ரவேலின் ஆசாரியர்களைக் குறிப்பிடும்போது லிட்டூர்ஜையா என்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தையை பயன்படுத்தினார். அவர் இவ்வாறு சொன்னார்: ‘எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை [“பொது சேவை,” NW, ஒருவகை லிட்டூர்ஜையா] செய்கிறவனாயும் ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்துகிறவனாயும் நிற்பான்.’ (எபிரெயர் 10:11) லேவிய ஆசாரியர்கள் இஸ்ரவேலில் மிகவும் பயனுள்ள பொது சேவையை செய்து வந்தனர். அவர்கள் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மக்களுக்கு போதித்து அவர்களுடைய பாவங்களை மூடுவதற்காக பலிகளைச் செலுத்தினர். (2 நாளாகமம் 15:3; மல்கியா 2:7) ஆசாரியர்களும் மக்களும் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டபோது தேசம் சந்தோஷமாயிருந்தது.—உபாகமம் 16:15.
6 நியாயப்பிரமாணத்தின்கீழ் பொது சேவை செய்வது இஸ்ரவேலின் ஆசாரியர்களுக்கு உண்மையில் ஒரு பாக்கியமாக இருந்தது, ஆனால் இஸ்ரவேலர் உண்மையற்றவர்களாய் ஆனதால் அவர்கள் நிராகரிக்கப்பட்டபோது இந்த ஆசாரியர்களின் சேவைக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போனது. (மத்தேயு 21:43) ஆகவே யெகோவா மகத்துவமான ஒருவரின் சேவைக்காக ஏற்பாடு செய்தார், அதாவது மகா பிரதான ஆசாரியரான இயேசுவின் பொது சேவைக்காக ஏற்பாடு செய்தார். அவரை பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். மேலும் தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.”—எபிரெயர் 7:24, 25.
7. இயேசுவின் பொது சேவை எவ்வாறு ஈடிணையில்லாத நன்மைகளை தருகிறது?
7 இயேசு என்றென்றும் ஆசாரியராக இருக்கிறார்; அவரது ஆசாரியத்துவத்திற்கு வாரிசுகள் இல்லை. ஆகவே அவரால் மட்டுமே மக்களை முழுமையாக இரட்சிக்க முடியும். ஈடிணையில்லாத பொது சேவையை அவர் மனிதர் கைகளால் கட்டப்பட்ட ஆலயத்தில் செய்வதில்லை, ஆனால் வணக்கத்திற்காக யெகோவா செய்திருக்கும் பெரிய ஏற்பாடாகிய ஆவிக்குரிய ஆலயத்தில் செய்துவருகிறார். இது பொ.ச. 29-ல் செயல்பட ஆரம்பித்தது. இயேசு இப்போது அந்த ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் சேவை செய்து வருகிறார். “பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரிய”ராக [lei·tour·gosʹ (“பொது சேவகராய்,” NW)] அவர் இருக்கிறார். (எபிரெயர் 8:2; 9:11, 12) இயேசு மிகவும் உன்னதமான பதவியில் இருந்தபோதிலும் அவர் இன்னும் ஒரு “பொது சேவகராகவே” இருக்கிறார். அவர் தன் உயர்ந்த அதிகாரத்தை சேவை செய்யவே பயன்படுத்துவார், சேவையைப் பெற அல்ல. இப்படி அவர் கொடுப்பது அவருக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. பூமியில் அவர் வாழ்ந்த காலமெல்லாம் சகித்திருக்கும்படி அவரை பலப்படுத்தியது ‘அவருக்கு முன் இருந்த இந்த சந்தோஷமே.’—எபிரெயர் 12:2.
8. நியாயப்பிரமாண உடன்படிக்கையை மாற்றீடு செய்ய இயேசு எவ்வாறு பொது சேவை செய்தார்?
8 இயேசுவின் பொது சேவையில் இன்னொரு அம்சமும் இருந்தது. பவுல் அதைக் குறித்து இவ்வாறு எழுதினார்: “இவரோ ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் [“அதிக சிறப்பான பொது சேவையையும்,” NW] பெற்றிருக்கிறார்.” (எபிரெயர் 8:6) யெகோவாவுடன் இஸ்ரவேலருக்கு இருந்த உறவுக்கு அடிப்படையான ஓர் உடன்படிக்கைக்கு மோசே மத்தியஸ்தராக இருந்தார். (யாத்திராகமம் 19:4, 5) இயேசுவோ புதிய உடன்படிக்கையை மத்தியஸ்தம் செய்து வைத்தார், இதனால் ஒரு புதிய தேசம் பிறந்தது, இது ‘தேவனுடைய இஸ்ரவேல்’ எனப்படுகிறது. இதில் பல தேசங்களையும் சேர்ந்த, ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர். (கலாத்தியர் 6:16; எபிரெயர் 8:8, 13; வெளிப்படுத்துதல் 5:9, 10) இது எப்பேர்ப்பட்ட மிகச் சிறந்த பொது சேவை! பொது சேவகரான இயேசுவை அறிந்தவர்களாய், அவர் மூலம் கடவுளுக்கு ஏற்கத்தக்க வணக்கத்தைச் செலுத்துவதில்தான் என்னே மகிழ்ச்சி!—யோவான் 14:6.
கிறிஸ்தவர்களும் பொது சேவை செய்கிறவர்கள்
9, 10. கிறிஸ்தவர்கள் செய்யும் பொது சேவைகளில் சில யாவை?
9 இயேசு செய்தது போன்ற மிக உயர்ந்த பொது சேவையை எந்த மனிதனும் செய்வதில்லை. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் பரலோக வெகுமதியை பெற்றுக்கொள்ளும்போது, இயேசுவுடன் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் பொது சேவை செய்வார்கள். (வெளிப்படுத்துதல் 20:6; 22:1-5) ஆனாலும், பூமியிலுள்ள கிறிஸ்தவர்களும் பொது சேவை செய்கிறார்கள், அதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். உதாரணமாக, பலஸ்தீனாவில் கடும் பஞ்சம் ஏற்பட்டபோது, ஐரோப்பாவிலிருந்த சகோதரர்கள் கொடுத்த நன்கொடைகளை யூதேயாவிலிருந்த யூத கிறிஸ்தவர்களின் துயர் துடைக்க பவுல் அப்போஸ்தலன் பயன்படுத்தினார். அது ஒரு பொது சேவையாக இருந்தது. (ரோமர் 15:27; 2 கொரிந்தியர் 9:12) இன்று இதே போன்ற சேவையை கிறிஸ்தவர்களும் மகிழ்ச்சியோடு செய்கிறார்கள், துன்பங்களையும் இயற்கை சேதங்களையும் மற்ற கஷ்டங்களையும் அனுபவிக்கும் சகோதரர்களுக்கு உடனடியாக உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.—நீதிமொழிகள் 14:21.
10 பவுல் மற்றொரு பொது சேவையையும் குறிப்பிட்டார்: “உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுபோனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன்.” (பிலிப்பியர் 2:17) பிலிப்பியருக்காக பவுல் கடினமாக உழைத்தது, அன்போடும் உற்சாகத்தோடும் செய்யப்பட்ட ஒரு பொது சேவையாக இருந்தது. இன்று இதே போன்ற ஒரு பொது சேவையை முக்கியமாக அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் செய்துவருகிறார்கள். இவர்கள் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ சேவித்து ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை அளித்து வருகிறார்கள். (மத்தேயு 24:45-47, NW) மேலுமாக, ஒரு தொகுதியாக இவர்கள் “பரிசுத்த ஆசாரியக் கூட்டமாக” இருக்கிறார்கள். இவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலை என்ன? இவர்கள் ‘இயேசு கிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்த’ வேண்டும். அதோடு தங்களை ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்க’ வேண்டும். (1 பேதுரு 2:5, 9) பவுலைப் போலவே தங்கள் பொறுப்புகளை பாக்கியமாக கருதி அதை நிறைவேற்றுவதற்காக ‘வார்க்கப்பட்டுபோகையில்’ இவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். “வேறே ஆடு”களான அவர்களுடைய தோழர்கள் யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் மனிதகுலத்துக்கு சொல்லும் வேலையில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.b (யோவான் 10:16; மத்தேயு 24:14) அது சந்தோஷமளிக்கும் என்னே ஓர் மகத்தான சேவை!—சங்கீதம் 107:21, 22.
பரிசுத்த சேவை செய்யுங்கள்
11. எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தீர்க்கதரிசினி அன்னாள் வைத்திருக்கும் சிறந்த முன்மாதிரி என்ன?
11 நம்முடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மற்றொரு கிரேக்க வார்த்தை லேட்ரியா (la·treiʹa). இதை “பரிசுத்த சேவை” என புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிள் மொழிபெயர்க்கிறது. பரிசுத்த சேவை என்பது வணக்க செயல்கள் சம்பந்தப்பட்டது. உதாரணமாக, 84 வயதுடைய விதவையும் தீர்க்கதரிசினியுமான அன்னாள் “தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை [லேட்ரியா என்பதோடு சம்பந்தப்பட்ட கிரேக்க வார்த்தை] செய்துகொண்டிருந்தாள்” என்று விவரிக்கப்பட்டிருக்கிறது. (லூக்கா 2:36, 37) அன்னாள் இடைவிடாமல் யெகோவாவை வணங்கி வந்தாள். சிறியோர் பெரியோர், ஆண்கள் பெண்கள் ஆகிய நம் அனைவருக்கும் அவள் சிறந்த முன்மாதிரி. யெகோவாவிடம் அன்னாள் ஊக்கமாக ஜெபித்து ஆலயத்தில் அவரை தவறாமல் வணங்கி வந்தது போல, நம்முடைய பரிசுத்த சேவையில் ஜெபமும் கூட்டங்களுக்குச் செல்வதும் அடங்கும்.—ரோமர் 12:12; எபிரெயர் 10:24, 25.
12. நம்முடைய பரிசுத்த சேவையின் முக்கியமான அம்சம் எது, இது எப்படி ஒரு பொது சேவையாகவும் இருக்கிறது?
12 அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதியபோது நம்முடைய பரிசுத்த சேவையின் முக்கியமான ஒரு அம்சத்தைக் குறிப்பிடுகிறார்: “நான் ஜெபம் பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறதைக் குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார்.” (ரோமர் 1:9) ஆம், நற்செய்தியை பிரசங்கிப்பது அதைக் கேட்கிறவர்களுக்கு ஒரு பொது சேவையாக இருப்பது மட்டுமல்லாமல், அது யெகோவா தேவனுக்கு செய்யும் ஒரு வணக்கச் செயலாகவும் இருக்கிறது. நாம் சொல்வதை மக்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும், பிரசங்க வேலை யெகோவாவுக்கு செலுத்தப்படும் ஒரு பரிசுத்த சேவையாக இருக்கிறது. நம்முடைய அன்புள்ள பரலோக தகப்பனின் சிறந்த குணங்களையும் அன்பான நோக்கங்களையும் பற்றி மற்றவர்களுக்கு சொல்ல நாம் முயலும்போது நிச்சயமாகவே நமக்கு அதிக மகிழ்ச்சி கிடைக்கிறது.—சங்கீதம் 71:23.
நாம் பரிசுத்த சேவையை எங்கே செய்கிறோம்?
13. யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பரிசுத்த சேவை செய்கிறவர்களின் நம்பிக்கை என்ன, அவர்களோடு சந்தோஷப்படுகிறவர்கள் யார்?
13 அபிஷேகம் பெற்ற கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை [“பரிசுத்த சேவை,” NW] செய்யும்படி கிருபையைப் பெற்றுக்கொள்ளக்கடவோம்.” (எபிரெயர் 12:28) ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளும் நம்பிக்கையான எதிர்பார்ப்போடு, அபிஷேகம் பெற்றவர்கள் மகா உன்னதமானவருக்கு பரிசுத்த சேவை செய்யும்போது அசைக்க முடியாத விசுவாசமுள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்கள் மட்டும்தான் பரிசுத்த ஸ்தலத்திலும் யெகோவாவின் ஆவிக்குரிய ஆலயத்தின் உட்பிரகாரத்திலும் பரிசுத்த சேவை செய்ய முடியும். மகா பரிசுத்த ஸ்தலமாகிய பரலோகத்திலேயே இயேசுவோடு சேவிக்கப்போகும் காலத்தை அவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறே ஆடுகளாகிய அவர்களுடைய தோழர்களும் இந்த மகத்தான நம்பிக்கையைக் குறித்து அவர்களோடு சந்தோஷப்படுகிறார்கள்.—எபிரெயர் 6:19, 20; 10:19-22.
14. இயேசுவின் பொது சேவையிலிருந்து திரள் கூட்டத்தார் எவ்வாறு நன்மையடைகிறார்கள்?
14 வேறே ஆடுகள் பரிசுத்த சேவை செய்யும் இடம் எது? அப்போஸ்தலன் யோவான் பார்த்த விதமாகவே, திரளான கூட்டமாகிய ஜனங்கள் இந்தக் கடைசி நாட்களில் தோன்றியிருக்கிறார்கள், இவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:14) அபிஷேகம் பண்ணப்பட்ட தங்கள் உடன் வணக்கத்தாரைப் போலவே இவர்கள் இயேசுவின் பொது சேவையை—அதாவது, மனிதகுலத்துக்காக அவர் பரிபூரண மனித உயிரை செலுத்தியதை—விசுவாசிக்கிறார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் “[யெகோவாவின்] உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற”படியால் அவர்களும் இயேசுவின் பொது சேவையிலிருந்து நன்மையடைகிறார்கள். (ஏசாயா 56:6) அவர்கள் புதிய உடன்படிக்கையில் பங்கு கொள்பவர்கள் அல்ல, ஆனால் அதோடு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதாலும் அதன் ஏற்பாடுகளோடு ஒத்துழைப்பதாலும் அதை அவர்கள் பற்றிக்கொண்டிருக்கிறார்கள் என சொல்லலாம். அவர்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவுகொண்டு அவர்களோடு அதே மேசையில் சாப்பிட்டு, அவர்களோடு சேர்ந்து வேலைசெய்து கடவுளை யாவரும் அறிய துதித்து அவருக்குப் பிரியமான ஆவிக்குரிய பலிகளைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.—எபிரெயர் 13:15.
15. திரள் கூட்டத்தார் எங்கே பரிசுத்த சேவையை செய்கிறார்கள், இந்த ஆசீர்வாதத்தைக் குறித்து எப்படி உணருகிறார்கள்?
15 இதன் காரணமாகவே, திரள் கூட்டத்தார் ‘வெள்ளை அங்கிகளைத் தரித்து சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதாக’ காணப்படுகிறார்கள். மேலுமாக, “இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:9, 15) இஸ்ரவேலில் யூத மதத்திற்கு மாறியவர்கள் சாலொமோனின் ஆலயத்தில் வெளிப் பிரகாரத்தில் வணங்கினார்கள். அதேவிதமாகவே, திரள் கூட்டத்தார் யெகோவாவை அவருடைய ஆவிக்குரிய ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வணங்குகிறார்கள். அங்கே சேவிப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. (சங்கீதம் 122:1) அபிஷேகம் பண்ணப்பட்ட அவர்களுடைய கூட்டாளிகளில் கடைசியானவர் பரலோக சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னரும், திரள் கூட்டத்தார் யெகோவாவுடைய ஜனமாக அவருக்கு தொடர்ந்து பரிசுத்த சேவை செய்துகொண்டிருப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 21:3.
கடவுள் ஏற்றுக்கொள்ளாத பரிசுத்த சேவை
16. பரிசுத்த சேவையைக் குறித்து என்ன எச்சரிப்புகள் கொடுக்கப்படுகின்றன?
16 பண்டைய இஸ்ரவேலரின் நாட்களில், பரிசுத்த சேவையை யெகோவாவின் சட்டங்களுக்கு இசைவாக செய்ய வேண்டியதாக இருந்தது. (யாத்திராகமம் 30:9; லேவியராகமம் 10:1, 2) அதேவிதமாகவே, இன்று நம்முடைய பரிசுத்த சேவையை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் சில கட்டளைகளை கைக்கொள்வது அவசியம். இதன் காரணமாகவே பவுல் கொலோசெயிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு எழுதினார்: “உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும் . . . வேண்டுதல் செய்கிறோம்.” (கொலோசெயர் 1:9, 10) கடவுளை வணங்குவதற்கு சரியான வழி எது என்பதை நாமாகவே தீர்மானிக்க முடியாது. இதற்கு திருத்தமான வேதாகம அறிவு, ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதல், தெய்வீக ஞானம் ஆகியவை தேவை. இல்லையென்றால் மிகவும் மோசமான விளைவு ஏற்படும்.
17. (அ) மோசேயின் நாட்களில் பரிசுத்த சேவை எவ்வாறு தவறாக செய்யப்பட்டது? (ஆ) பரிசுத்த சேவை எவ்வாறு இன்று தவறாக செய்யப்படலாம்?
17 மோசேயின் நாட்களில் இஸ்ரவேலருக்கு என்ன நடந்தது என்பதை எண்ணிப்பாருங்கள். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்பொழுது தேவன் அவர்களைவிட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனை செய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார்.” (அப்போஸ்தலர் 7:42) இந்த இஸ்ரவேலர்கள் யெகோவா தங்களுக்காக செய்திருந்த வல்லமையான செய்கைகளை கண்கூடாக பார்த்திருந்தார்கள். ஆனால் தங்களுக்கு அனுகூலமாக இருக்கும் என நினைத்து மற்ற கடவுட்களிடம் திரும்பினார்கள். அவர்கள் யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நடக்கவில்லை, நம்முடைய பரிசுத்த சேவை கடவுளுக்குப் பிரியமாயிருக்க வேண்டுமென்றால் உண்மைப் பற்றுறுதியுடன் இருப்பது மிக அவசியம். (சங்கீதம் 18:25) உண்மைதான், நட்சத்திரங்களையோ பொன் கன்றுகுட்டியையோ வணங்குவதற்காக அநேகர் யெகோவாவின் வணக்கத்தைவிட்டு விலகிச் செல்லமாட்டார்கள்; ஆனால் இன்று வேறு விதமான விக்கிரகாராதனைகள் இருக்கின்றன. ‘உலகப்பொருளுக்காக’ ஊழியம் செய்வதைப் பற்றி இயேசு எச்சரித்திருக்கிறார். பவுல் பொருளாசையை விக்கிரகாராதனை என்று அழைக்கிறார். (மத்தேயு 6:24; கொலோசெயர் 3:5) தன்னையே கடவுளாக்கிக் கொள்வதில் சாத்தான் மும்முரமாக இருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4) இப்படிப்பட்ட விக்கிரகாராதனைகள் எங்கும் காணப்படுகின்றன, இவை கண்ணியாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இயேசுவைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்ளும் ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் அவருடைய உண்மையான குறிக்கோள் பணக்காரனாக வேண்டும் என்றிருந்தால் அல்லது அவர் தன்னையும் தன் சொந்த எண்ணங்களையுமே நம்பிக்கொண்டிருந்தால், அவர் யாரை சேவித்துக் கொண்டிருக்கிறார்? யெகோவாவின் பெயரில் ஆணையிட்டு, ஆனால் அவர் செய்த செயல்களை விக்கிரகங்கள் செய்ததென சொல்லிய ஏசாயாவின் நாளிலிருந்த யூதர்களைவிட இவர் என்ன விதத்தில் வித்தியாசமாக இருக்கிறார்?—ஏசாயா 48:1, 5.
18. பரிசுத்த சேவை அன்று எவ்வாறு தவறாக செய்யப்பட்டது, இன்று எவ்வாறு தவறாக செய்யப்படுகிறது?
18 இயேசுவும் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “உங்களைக் கொலை செய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டு செய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்.” (யோவான் 16:2) அப்போஸ்தலன் பவுலாக மாறிய சவுல், ‘ஸ்தேவானை கொலை செய்கிறதற்குச் சம்மதித்தபோதும்,’ ‘கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி சீறியபோதும்’ தான் கடவுளுக்கு சேவை செய்து கொண்டிருந்ததாக நினைத்தார் என்பது தெளிவாக உள்ளது. (அப்போஸ்தலர் 8:1; 9:1) இன்று, இனப் படுகொலை செய்யவும், ஒரு இனத்தை பூண்டோடு அழிக்கவும் போராடும் சிலரும்கூட கடவுளை சேவிப்பதாகத்தான் உரிமை பாராட்டிக்கொள்கிறார்கள். கடவுளை வணங்குவதாக சொல்லிக்கொண்டு அநேகர் உண்மையில் தங்களையோ தேசப்பற்று, குலப்பற்று, செல்வம் போன்ற கடவுட்களையோ, அல்லது வேறு ஏதாவது ஒரு கடவுளையோ வணங்கி வருகிறார்கள்.
19. (அ) நம்முடைய பரிசுத்த சேவையை எவ்வாறு கருதுகிறோம்? (ஆ) என்ன விதமான பரிசுத்த சேவை நமக்கு சந்தோஷத்தைத் தரும்?
19 இயேசு இவ்வாறு சொன்னார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.” (மத்தேயு 4:10) சாத்தானிடம் சொன்ன இந்த வார்த்தைகளுக்கு நாமனைவரும் கீழ்ப்படிவது எவ்வளவு அவசியம்! சர்வலோக பேரரசருக்கு பரிசுத்த சேவை செய்வது பக்தி பரவசமூட்டும் மிக உன்னதமான பாக்கியமாகும். மேலும் நம்முடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட பொது சேவையைக் குறித்து என்ன சொல்லலாம்? நம்முடைய சக மனிதருக்காக இதைச் செய்வது ஒரு சந்தோஷமான வேலை, இது நமக்கு அதிக மகிழ்ச்சியை தருகிறது. (சங்கீதம் 41:1, 2; 59:16) ஆனால் இந்தச் சேவையை முழு இருதயத்தோடும், சரியான விதத்திலும் செய்தால் மட்டுமே உண்மையான மகிழ்ச்சி கிட்டும். கடவுளை உண்மையில் யார் சரியான முறையில் வணங்கி வருகிறார்கள்? யாருடைய பரிசுத்த சேவையை யெகோவா ஏற்றுக்கொள்கிறார்? நம்முடைய வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மூன்றாவது பைபிள் வார்த்தையை ஆராய்ந்தால் இந்தக் கேள்விகளுக்கு நமக்கு விடை கிடைக்கும். பின்வரும் கட்டுரையில் இதை நாம் ஆராய்வோம்.
[அடிக்குறிப்புகள்]
a கிறிஸ்தவமண்டலத்தின் பொது வழிபாட்டு முறைகள் ஆராதனையாக அல்லது சடங்குகளாக இருக்கின்றன. இதற்கு ஓர் உதாரணம், ரோமன் கத்தோலிக்க சர்ச் அனுசரிக்கும் இயேசுவின் இறுதி விருந்து சடங்கு.
b அப்போஸ்தலர் 13:2-ல் அந்தியோகியாவில் இருந்த தீர்க்கதரிசிகளும் போதகர்களும் யெகோவாவுக்கு “ஆராதனை செய்துகொண்டிருந்தார்கள்” [“பகிரங்கமாக சேவைசெய்து கொண்டிருந்தார்கள்,” NW] (லிட்டூர்ஜையா என்பதோடு சம்பந்தப்பட்ட ஒரு கிரேக்க வார்த்தை இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொது சேவை என்பது பொது மக்களுக்கு பிரசங்கிப்பதை உட்படுத்தியிருக்க வேண்டும்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• இயேசு செய்த மகத்தான பொது சேவை என்ன?
• கிறிஸ்தவர்கள் செய்யும் பொது சேவை என்ன?
• கிறிஸ்தவ பரிசுத்த சேவை என்பது என்ன, அது எங்கே செய்யப்படுகிறது?
• நம்முடைய பரிசுத்த சேவை கடவுளைப் பிரியப்படுத்த நாம் எதை பெற்றுக்கொள்ள வேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
கொடுப்பதில் பெற்றோர் சந்தோஷமடைகின்றனர்
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு உதவும்போதும் நற்செய்தியை அறிவிக்கும்போதும் பொது சேவை செய்கிறார்கள்
[பக்கம் 14-ன் படம்]
நம்முடைய பரிசுத்த சேவை கடவுளுக்கு ஏற்கத்தகுந்ததாக இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள நமக்கு திருத்தமான அறிவும் புரிந்துகொள்ளுதலும் தேவை