மத்தேயு எழுதியது
24 ஆலயத்தைவிட்டு இயேசு புறப்பட்டுப் போனபோது, அவருடைய சீஷர்கள் அவரிடம் வந்து ஆலயத்தின் கட்டிடங்களைக் காட்டினார்கள். 2 அப்போது அவர், “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்களே, உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இல்லாதபடி எல்லாமே நிச்சயமாகத் தரைமட்டமாக்கப்படும்”+ என்று அவர்களிடம் சொன்னார்.
3 பின்பு, அவர் ஒலிவ மலையில்+ உட்கார்ந்திருந்தார்; சீஷர்கள் அவரிடம் தனியாக வந்து, “இதெல்லாம் எப்போது நடக்கும், உங்களுடைய பிரசன்னத்துக்கும்+ இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும்+ அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.
4 அதற்கு இயேசு, “உங்களை யாரும் ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருங்கள்.+ 5 ஏனென்றால், நிறைய பேர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘நான்தான் கிறிஸ்து’ என்று சொல்லி நிறைய பேரை ஏமாற்றுவார்கள்.+ 6 போர் முழக்கங்களையும் போர்ச் செய்திகளையும் நீங்கள் கேட்பீர்கள்; இருந்தாலும், திகிலடையாதீர்கள். இதெல்லாம் நடக்க வேண்டும், ஆனால் முடிவு அப்போதே வராது.+
7 ஜனத்துக்கு எதிராக ஜனமும் நாட்டுக்கு எதிராக நாடும்* சண்டை போடும்,+ அடுத்தடுத்து பல இடங்களில் பஞ்சங்களும்+ நிலநடுக்கங்களும்+ ஏற்படும். 8 இவையெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 அப்போது மக்கள் உங்களை உபத்திரவப்படுத்துவார்கள்,+ கொலையும் செய்வார்கள்;+ நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால் எல்லா தேசத்து மக்களும் உங்களை வெறுப்பார்கள்.+ 10 அதோடு, பலர் விசுவாசத்தைவிட்டு விலகிவிடுவார்கள், ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பார்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். 11 போலித் தீர்க்கதரிசிகள் பலர் வந்து நிறைய பேரை ஏமாற்றுவார்கள்;+ 12 அக்கிரமம் அதிகமாவதால் பெரும்பாலானவர்களின் அன்பு குறைந்துவிடும்.+ 13 ஆனால், முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்.+ 14 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்;+ பின்பு முடிவு வரும்.
15 அதனால், தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டபடி, பாழாக்கும் அருவருப்பு பரிசுத்தமான இடத்தில் நிற்பதை நீங்கள் பார்க்கும்போது+ (வாசிப்பவர் பகுத்தறிவைப் பயன்படுத்தி இதைப் புரிந்துகொள்ளட்டும்), 16 யூதேயாவில் இருப்பவர்கள் மலைகளுக்குத் தப்பியோட வேண்டும்.+ 17 வீட்டு மாடியில் இருப்பவர் தன் வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டு போவதற்காகக் கீழே இறங்கி வர வேண்டாம். 18 வயலில் இருப்பவர் தன் மேலங்கியை எடுப்பதற்காகத் திரும்பிப் போக வேண்டாம்.+ 19 அந்த நாட்களில் கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஐயோ, ஆபத்து!+ 20 குளிர் காலத்திலோ ஓய்வுநாளிலோ ஓடிப்போக வேண்டிய நிலை உங்களுக்கு வந்துவிடக் கூடாதென்று ஜெபம் செய்துகொண்டிருங்கள். 21 ஏனென்றால், அப்போது மிகுந்த உபத்திரவம்+ உண்டாகும்; அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை.+ 22 சொல்லப்போனால், அந்த நாட்கள் குறைக்கப்படவில்லை என்றால் யாருமே தப்பிப்பிழைக்க மாட்டார்கள்; ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்காக அந்த நாட்கள் குறைக்கப்படும்.+
23 அப்போது யாராவது உங்களிடம், ‘இதோ! கிறிஸ்து இங்கே இருக்கிறார்,’+ ‘அதோ! அங்கே இருக்கிறார்’ என்று சொன்னால் நம்பாதீர்கள்.+ 24 ஏனென்றால், போலிக் கிறிஸ்துக்களும் போலித் தீர்க்கதரிசிகளும்+ வருவார்கள்; முடிந்தால், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக்கூட ஏமாற்றுவதற்குப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.+ 25 இதோ! முன்கூட்டியே உங்களை எச்சரித்துவிட்டேன். 26 அதனால் யாராவது உங்களிடம், ‘அதோ! அவர் வனாந்தரத்தில் இருக்கிறார்’ என்று சொன்னால், புறப்பட்டுப் போகாதீர்கள்; ‘இதோ! அவர் வீட்டின் உள்ளறைக்குள் இருக்கிறார்’ என்று சொன்னால், நம்பாதீர்கள்.+ 27 ஏனென்றால், மின்னல் கிழக்கில் தோன்றி மேற்குவரை மின்னுவதுபோல் மனிதகுமாரனின் பிரசன்னமும் இருக்கும்.+ 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.+
29 அந்த நாட்களின் உபத்திரவத்துக்குப் பின்பு, உடனடியாகச் சூரியன் இருண்டுவிடும்,+ சந்திரன் ஒளி கொடுக்காது, வானத்திலிருந்து நட்சத்திரங்கள் விழும், வான மண்டலங்கள் அசைக்கப்படும்.+ 30 பின்பு, மனிதகுமாரனின் அடையாளம் வானத்தில் தோன்றும். பின்பு, பூமியில் இருக்கிற எல்லா கோத்திரத்தாரும் நெஞ்சில் அடித்துக்கொண்டு புலம்புவார்கள்.+ அதோடு, மனிதகுமாரன்+ வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்* வானத்து மேகங்கள்மேல் வருவதை அவர்கள் பார்ப்பார்கள்.+ 31 எக்காள சத்தம் முழங்க அவர் தன்னுடைய தேவதூதர்களை அனுப்புவார்; கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை, நான்கு திசைகளிலிருந்தும் அவர்கள் கூட்டிச்சேர்ப்பார்கள்.+
32 அத்தி மர உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் இளங்கிளைகள் தோன்றி, இலைகள் துளிர்க்க ஆரம்பித்ததுமே கோடைக் காலம் நெருங்கிவிட்டது என்று தெரிந்துகொள்கிறீர்கள்.+ 33 அப்படியே, இவையெல்லாம் நடப்பதை நீங்கள் பார்க்கும்போது, கதவுக்குப் பக்கத்திலேயே அவர் வந்துவிட்டார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.+ 34 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் நடப்பதற்கு முன்பு இந்தத் தலைமுறை ஒருபோதும் ஒழிந்துபோகாது. 35 வானமும் பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகள் ஒருபோதும் ஒழிந்துபோகாது.+
36 அந்த நாளும் அந்த நேரமும் பரலோகத் தகப்பன் ஒருவரைத் தவிர+ வேறு யாருக்கும் தெரியாது,+ பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களுக்கும் தெரியாது, மகனுக்கும் தெரியாது. 37 நோவாவின் நாட்களில் நடந்தது போலவே+ மனிதகுமாரனின் பிரசன்னத்தின்போதும் நடக்கும்.+ 38 எப்படியென்றால், பெருவெள்ளம் வருவதற்கு முந்தின காலத்தில், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் பெண் எடுத்துக்கொண்டும் பெண் கொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். நோவா பேழைக்குள்* நுழைந்த நாள்வரை அப்படித்தான் இருந்தார்கள்.+ 39 பெருவெள்ளம் வந்து எல்லாரையும் அடித்துக்கொண்டு போகும்வரை அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை;+ மனிதகுமாரனுடைய பிரசன்னத்தின்போதும் அப்படியே நடக்கும். 40 அப்போது, இரண்டு ஆண்கள் வயலில் இருப்பார்கள்; ஒருவன் அழைத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். 41 இரண்டு பெண்கள் கல்லில்* மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி அழைத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள்.+ 42 அதனால், விழிப்புடன் இருங்கள்; ஏனென்றால், உங்கள் எஜமான் எந்த நாளில் வருவார் என்பது உங்களுக்குத் தெரியாது.+
43 ஆனால், ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்: ராத்திரி எந்த நேரத்தில் திருடன் வருவான்+ என்பது வீட்டு எஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவர் விழித்திருந்து, வீட்டுக்குள் திருடன் புகுந்துவிடாமல் பார்த்துக்கொள்வார்.+ 44 அதனால், நீங்களும் தயாராக இருங்கள்;+ ஏனென்றால், நீங்கள் நினைக்காத நேரத்தில் மனிதகுமாரன் வருவார்.
45 ஏற்ற வேளையில் தன்னுடைய வீட்டாருக்கு உணவு கொடுப்பதற்காக எஜமான் நியமித்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?+ 46 எஜமான் வரும்போது அப்படிச் செய்துகொண்டிருக்கிற அடிமையே சந்தோஷமானவன்!+ 47 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவர் தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ள அவனை நியமிப்பார்.
48 ஆனால், அந்த அடிமை பொல்லாதவனாக இருந்து, ‘என்னுடைய எஜமான் வரத் தாமதிக்கிறார்’ என்று தன் இதயத்தில் சொல்லிக்கொண்டு,+ 49 சக அடிமைகளை அடிக்கவும் குடிகாரர்களோடு சேர்ந்து சாப்பிட்டுக் குடிக்கவும் ஆரம்பித்தால் என்ன ஆகும்? 50 அவன் எதிர்பார்க்காத நாளில், அவனுக்குத் தெரியாத நேரத்தில் அவனுடைய எஜமான் வந்து,+ 51 அவனை மிகக் கடுமையாகத் தண்டிப்பார்; வெளிவேஷக்காரர்கள் தள்ளப்படும் இடத்தில் அவனைத் தள்ளிவிடுவார். அங்கே அவன் அழுது அங்கலாய்ப்பான்”+ என்றார்.