வேறே ஆடுகளும் புதிய உடன்படிக்கையும்
‘ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவேன்.’—ஏசாயா 56:6, 7.
1. (அ) யோவானின் தரிசனத்தின்படி, யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் காற்றுகளை பிடித்து வைத்திருக்கையில், என்ன சாதிக்கப்படுகிறது? (ஆ) என்ன குறிப்பிடத்தக்க கூட்டத்தை யோவான் கண்டார்?
‘தேவனுடைய இஸ்ரவேலைச்’ சேர்ந்த எல்லா அங்கத்தினர்களையும் முத்திரைபோடுவது முடிவடையும்வரை யெகோவாவினுடைய நியாயத்தீர்ப்பின் அழிவுண்டாக்கும் காற்றுகளை பிடித்து வைத்திருப்பதை அப்போஸ்தலனாகிய யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் நான்காவது தரிசனத்தில் கண்டார். ஆபிரகாமின் வித்தின் முக்கிய பாகமாக, இயேசுவின் மூலம் முதலாவதாக ஆசீர்வதிக்கப்படுகிறவர்கள் இவர்களே. (கலாத்தியர் 6:16; ஆதியாகமம் 22:18; வெளிப்படுத்துதல் 7:1-4) அதே தரிசனத்தில், யோவான் இதை பார்த்தார்: “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், . . . மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:9, 10) “இரட்சிப்பின் மகிமை . . . ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக” என்று சொல்வதன் மூலம், ஆபிரகாமின் வித்தின் மூலம் தாங்களும்கூட ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை திரள்கூட்டத்தார் காண்பிக்கின்றனர்.
2. திரள்கூட்டம் எப்போது தோன்றியது, அது எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது?
2 இந்தத் திரள்கூட்டத்தார் 1935-ல் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டனர், இன்று அவர்களுடைய எண்ணிக்கை 50 லட்சத்துக்கும் மேல் உள்ளது. மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பதற்கென்று குறியிடப்பட்டிருக்கும் அதன் அங்கத்தினர்கள், ‘செம்மறியாடுகளிலிருந்து’ ‘வெள்ளாடுகளை’ இயேசு பிரிக்கும்போது நித்திய ஜீவனுக்கென்று பிரிக்கப்படுவர். தொழுவங்களைப் பற்றிய இயேசுவின் உவமையில் திரள்கூட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் “வேறே ஆடுகள்” மத்தியில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு பரதீஸிய பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றனர்.—மத்தேயு 25:31-46; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 21:3, 4.
3. புதிய உடன்படிக்கையைக் குறித்ததில் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் எவ்வாறு வித்தியாசப்படுகின்றனர்?
3 1,44,000 பேருக்கு, ஆபிரகாமிய உடன்படிக்கையின் ஆசீர்வாதம் புதிய உடன்படிக்கையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த உடன்படிக்கையில் பங்குகொள்வோராக அவர்கள் ‘தகுதியற்ற தயவின் கீழும்’ ‘கிறிஸ்துவின் பிரமாணத்தின் கீழும்’ வருகின்றனர். (ரோமர் 6:15, NW; 1 கொரிந்தியர் 9:21) எனவே, தேவனுடைய இஸ்ரவேலின் 1,44,000 அங்கத்தினர்கள் மட்டுமே இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பின்போது நினைவுச்சின்னங்களில் சரியாகவே பங்கெடுக்கின்றனர்; அவர்களோடு மட்டுமே இயேசு ஒரு ராஜ்யத்திற்கான உடன்படிக்கை செய்தார். (லூக்கா 22:19, 20, 29, NW) திரள்கூட்டத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள் இந்த புதிய உடன்படிக்கையில் பங்கெடுப்பதில்லை. இருப்பினும், அவர்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவுகொண்டு, அவர்களுடைய ‘தேசத்தில்’ வாழ்கின்றனர். (ஏசாயா 66:8) ஆகையால், அவர்களும்கூட யெகோவாவின் தகுதியற்ற தயவின் கீழும் கிறிஸ்துவின் பிரமாணத்தின் கீழும் வருகின்றனர் என்று சொல்வது நியாயமானது. புதிய உடன்படிக்கையில் பங்குகொள்ளவில்லை என்றாலும், அவர்கள் அதன் பயன்களை அனுபவிக்கிறார்கள்.
‘அந்நியபுத்திரரும்’ “தேவனுடைய இஸ்ரவேலும்”
4, 5. (அ) ஏசாயாவின்படி, எந்தத் தொகுதியினர் யெகோவாவுக்கு ஊழியம் செய்வார்கள்? (ஆ) எவ்வாறு ஏசாயா 56:6, 7 திரள்கூட்டத்தார்மீது நிறைவேற்றமடைகிறது?
4 ஏசாயா தீர்க்கதரிசி பின்வருமாறு எழுதினார்: “கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன். அவர்களுடைய சர்வாங்க தகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.” (ஏசாயா 56:6, 7) இஸ்ரவேலில் “அந்நியபுத்திரர்,” அதாவது இஸ்ரவேலரல்லாதவர்கள், அவருடைய நாமத்தை நேசித்து, நியாயப்பிரமாண உடன்படிக்கையின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து, ஓய்வுநாளைக் கடைப்பிடித்து, ஆலயத்திலே, கடவுளுடைய ‘ஜெபவீட்டிலே’ பலிகளைச் செலுத்தி யெகோவாவை வணங்குவார்கள் என்பதை இது அர்த்தப்படுத்தியது.—மத்தேயு 21:13.
5 நம் நாளில், திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்களே ‘கர்த்தரைச் [“யெகோவாவை,” NW] சேர்ந்துகொள்ளுகிற அந்நியபுத்திரர்.’ இவர்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவுகொண்டு யெகோவாவுக்கு ஊழியம் செய்கின்றனர். (சகரியா 8:23) அவர்கள் தேவனுடைய இஸ்ரவேலைப் போலவே அதே வகையான ஏற்கத்தகுந்த பலிகளைச் செலுத்துகின்றனர். (எபிரெயர் 13:15, 16) அவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்திலே, அவருடைய ‘ஜெபவீட்டிலே’ அவரை வணங்குகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:15-ஐ ஒப்பிடுக.) அவர்கள் வாராந்தர ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கிறார்களா? இதைக் கடைப்பிடிக்கும்படி அபிஷேகம் செய்யப்பட்டவர்களோ வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களோ கட்டளையிடப்படவில்லை. (கொலோசெயர் 2:16, 17) இருப்பினும், அபிஷேகம்செய்யப்பட்ட எபிரெய கிறிஸ்தவர்களிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.” (எபிரெயர் 4:9, 10) அந்த எபிரெயர்கள் ‘தேவ நீதிக்கு’ தங்களை கீழ்ப்படுத்தினபோது இந்த ‘இளைப்பாறுகிற காலத்துக்குள்’ பிரவேசித்தனர்; மேலும், நியாயப்பிரமாண கிரியைகளின் மூலம் தங்களை நேர்மையானவர்கள் என காட்ட முயற்சி செய்வதிலிருந்து ஓய்ந்திருந்தனர். (ரோமர் 10:3, 4) அபிஷேகம்செய்யப்பட்ட புறஜாதி கிறிஸ்தவர்கள் யெகோவாவின் நீதிக்கு தங்களை கீழ்ப்படுத்துவதன் மூலம் அதே ஓய்வை மகிழ்ந்து அனுபவிக்கின்றனர். அந்த ஓய்வில் திரள்கூட்டத்தாரும் அவர்களோடு சேர்ந்துகொள்கின்றனர்.
6. இன்று எவ்வாறு வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் புதிய உடன்படிக்கையை பற்றிக்கொண்டிருக்கின்றனர்?
6 கூடுதலாக, பண்டையகால அந்நியபுத்திரர் நியாயப்பிரமாண உடன்படிக்கையை பற்றிக்கொண்டது போல, வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் புதிய உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கின்றனர். எந்த விதத்தில்? அதில் பங்குகொள்வோராக ஆவதன் மூலமல்ல, ஆனால் அதோடு சம்பந்தப்பட்ட சட்டங்களுக்கு கீழ்ப்படிவதன் மூலமும் அதன் ஏற்பாடுகளிலிருந்து பயனடைவதன் மூலமுமே. (எரேமியா 31:33, 34-ஐ ஒப்பிடுக.) அவர்களுடைய அபிஷேகம்செய்யப்பட்ட தோழர்களைப் போலவே, வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தை ‘தங்கள் இருதயங்களில்’ எழுதி வைத்திருக்கின்றனர். அவர்கள் யெகோவாவின் கட்டளைகளையும் நியமங்களையும் மிகவும் ஆழமாய் நேசித்து அவற்றுக்குக் கீழ்ப்படிகின்றனர். (சங்கீதம் 37:31; 119:97) அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் போல் அவர்கள் யெகோவாவை அறிந்திருக்கின்றனர். (யோவான் 17:3) விருத்தசேதனத்தைப் பற்றியென்ன? புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு சுமார் 1,500 வருடங்களுக்கு முன், மோசே இஸ்ரவேலரை இவ்வாறு உற்சாகப்படுத்தினார்: “உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம் பண்ணுங்கள்.” (உபாகமம் 10:16; எரேமியா 4:4) கட்டாயமாய் செய்யவேண்டிய மாம்சத்துக்குரிய விருத்தசேதனம் நியாயப்பிரமாணத்தோடு ஒழிந்துபோனாலும், அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் தங்கள் இருதயங்களை “விருத்தசேதனம்” செய்ய வேண்டும். (கொலோசெயர் 2:11) இறுதியில், வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களின் பாவங்களை இயேசு சிந்திய ‘உடன்படிக்கைக்குரிய இரத்தத்தின்’ அடிப்படையில் யெகோவா மன்னிக்கிறார். (மத்தேயு 26:28; 1 யோவான் 1:9; 2:2) கடவுள், 1,44,000 பேரைப் போல் அவர்களை ஆவிக்குரிய புத்திரராக சுவிகாரம் எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அவர் ஆபிரகாமை கடவுளுடைய நண்பனாக நீதிமானென்று அறிவித்த கருத்தில் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களையும் நீதிமான்களாக அறிவிக்கிறார்.—மத்தேயு 25:46; ரோமர் 4:2, 3; யாக்கோபு 2:23.
7. ஆபிரகாமைப் போல் நீதிமான்களாக அறிவிக்கப்படும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இன்று என்ன எதிர்பார்ப்பு திறக்கப்படுகிறது?
7 1,44,000 பேருக்கு, நீதிமான்களாக அறிவிக்கப்படுவது, பரலோக ராஜ்யத்தில் இயேசுவோடு ஆட்சிசெய்யும் நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் வழியைத் திறந்து வைக்கிறது. (ரோமர் 8:16, 17; கலாத்தியர் 2:15, 16) வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, கடவுளுடைய நண்பர்களாக நீதிமான்களாக அறிவிக்கப்படுவது, பரதீஸிய பூமியில்—திரள்கூட்டத்தாரின் பாகமாக அர்மகெதோனை தப்பிப்பிழைப்பதன் மூலமோ ‘நீதிமான்களின் உயிர்த்தெழுதல்’ மூலமோ—நித்திய ஜீவனை தழுவிக்கொள்ளும் நம்பிக்கையை அளிக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) அப்படிப்பட்ட நம்பிக்கையை பெற்றிருப்பதும், சர்வலோக பேரரசரின் நண்பராக, ‘அவருடைய கூடாரத்தில் தங்குவதும்’ என்னே ஒரு சிலாக்கியம்! (சங்கீதம் 15:1, 2) ஆம், அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் ஆபிரகாமின் வித்தாகிய இயேசுவின் மூலம் ஆச்சரியமான விதத்தில் ஆசீர்வதிக்கப்படுகின்றனர்.
பெரிய பாவநிவாரண நாள்
8. நியாயப்பிரமாணத்தின்கீழ் பாவநிவாரண நாளின் பலிகள் மூலம் எது முன்பாகவே சித்தரித்துக் காட்டப்பட்டது?
8 புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகையில், நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் வருடாந்தர பாவநிவாரண நாளைப் பற்றி பவுல் தன் வாசகருக்கு நினைப்பூட்டினார். அந்த நாளில், ஆசாரியராகிய லேவி கோத்திரத்துக்கு என்று ஒரு பலியும் ஆசாரியரல்லாத 12 கோத்திரங்களுக்கு என்று மற்றொரு பலியும் தனித்தனியாக செலுத்தப்பட்டன. இது பரலோக நம்பிக்கையுடைய 1,44,000 பேருக்கும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய லட்சக்கணக்கானோருக்கும் பயனளிக்கப்போகும் இயேசுவின் பெரிய பலியை முன்பாகவே சித்தரித்துக் காட்டியது என்று நீண்டகாலமாக விளக்கப்பட்டு வருகிறது. a பாவநிவாரண நாளின் நிறைவேற்றத்தில், இயேசுவின் பலியின் நன்மைகள், புதிய உடன்படிக்கையின்கீழ் பெரிய பாவநிவாரண நாளின் மூலம் வழங்கப்படுகின்றன என்பதை பவுல் காண்பித்தார். இயேசு இந்தப் பெரிய நாளின் பிரதான ஆசாரியராக, மானிடருக்கு “நித்திய மீட்பை” அளிப்பதற்காக தம் பரிபூரண ஜீவனை பாவநிவாரண பலியாக கொடுத்தார்.—எபிரெயர் 9:11-24.
9. புதிய உடன்படிக்கையில் இருப்பதால், அபிஷேகம்செய்யப்பட்ட எபிரெய கிறிஸ்தவர்கள் எதை தழுவிக்கொள்ளலாம்?
9 முதல் நூற்றாண்டு எபிரெய கிறிஸ்தவர்கள் பலர் இன்னும் மோசேயின் ‘நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாய்’ இருந்தனர். (அப்போஸ்தலர் 21:20) பொருத்தமாகவே பவுல் அவர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: “முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, [இயேசு] புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார்.” (எபிரெயர் 9:15) புதிய உடன்படிக்கை, தங்கள் பாவத்தை வெளிப்படுத்திய பழைய உடன்படிக்கையிலிருந்து எபிரெய கிறிஸ்தவர்களை விடுவித்தது. புதிய உடன்படிக்கையின் மூலம் அவர்கள் ‘வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய [பரலோக] சுதந்தரத்தை’ தழுவிக்கொள்ளலாம்.
10. அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் எதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கின்றனர்?
10 ‘குமாரனை விசுவாசிக்கிற எவரும்’ கிரயபலியிலிருந்து பயனடைவர். (யோவான் 3:16, 36) பவுல் சொன்னார்: “கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.” (எபிரெயர் 9:28) இன்று, தேவனுடைய இஸ்ரவேலின் உயிரோடிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் நித்திய சுதந்தரத்தையுடைய லட்சக்கணக்கானோர் அடங்கிய திரள்கூட்டத்தாரும் இயேசுவுக்காக மிகவும் ஆர்வத்தோடு காத்துக்கொண்டிருப்போரில் அடங்குவர். இரண்டு வகுப்பாருமே புதிய உடன்படிக்கைக்காகவும் அதோடு சம்பந்தப்பட்டிருக்கும் ஜீவனை அளிக்கும் ஆசீர்வாதங்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கின்றனர்; பெரிய பாவநிவாரண நாளும் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரதான ஆசாரியராகிய இயேசுவின் ஊழியமும் அதில் அடங்கும்.
பரிசுத்த சேவையில் சுறுசுறுப்பாயிருத்தல்
11. இயேசுவின் பலியின் மூலம் தங்கள் மனச்சாட்சிகள் சுத்திகரிக்கப்பட்டவர்களாய், அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் எதை சந்தோஷமாய் செய்கின்றனர்?
11 பவுல் எபிரெயருக்கு எழுதின தன் நிருபத்தில், பழைய உடன்படிக்கையின் கீழிருந்த பாவத்திற்கான பலிகளோடு ஒப்பிடுகையில் புதிய உடன்படிக்கை ஏற்பாட்டிலுள்ள இயேசுவின் பலியின் உயர்மதிப்புவாய்ந்த தன்மையை அழுத்திக் காண்பித்தார். (எபிரெயர் 9:13-15, NW) இயேசுவின் மேலான பலி, ‘ஜீவனுள்ள தேவனுக்கு பரிசுத்த சேவை செய்வதற்கு நம் மனச்சாட்சிகளைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிக்கிறது.’ எபிரெய கிறிஸ்தவர்களுக்கு, ‘செத்த கிரியைகளில்,’ ‘முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்கள்’ அடங்கியிருந்தன. இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு, அவை, கடந்தகாலத்தில் செய்த பாவங்களையும் அவற்றின்பேரில் அவர்களுடைய மெய்யான மனந்திரும்புதலையும் அவற்றை கடவுள் மன்னித்திருப்பதையும் உள்ளடக்குகின்றன. (1 கொரிந்தியர் 6:9-11) மனச்சாட்சிகள் சுத்திகரிக்கப்பட்ட நிலையில், அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ‘ஜீவனுள்ள தேவனுக்கு பரிசுத்த சேவை’ செய்கின்றனர். திரள் கூட்டத்தாரும் அவ்வாறே செய்கின்றனர். ‘ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தின்’ மூலம் தங்கள் மனச்சாட்சிகளை சுத்திகரித்தவர்களாய், அவர்கள் கடவுளின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தில் இருந்து, ‘இரவும் பகலும் அவருக்கு பரிசுத்த சேவை செய்கின்றனர்.’—வெளிப்படுத்துதல் 7:14, 15, NW.
12. ‘விசுவாசத்தின் பூரண நிச்சயம்’ நமக்கு இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கிறோம்?
12 கூடுதலாக பவுல் சொன்னார்: “துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும் உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம்.” (எபிரெயர் 10:22) ‘விசுவாசத்தின் பூரண நிச்சயம்’ நமக்கு இருக்கிறது என்பதை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்? பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “நம்முடைய [பரலோக] நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:23-25) நம் விசுவாசம் உயிருள்ளதாய் இருந்தால், நாமும்கூட ‘சபை கூடிவருதலை விட்டுவிடாமல்’ இருப்போம். நாம் நம் சகோதரர்களை தூண்டியெழுப்புவதற்கும், அவர்கள் நம்மை அன்புக்கும் நற்கிரியைக்கும் தூண்டியெழுப்புவதற்கும், நம் நம்பிக்கை பூமிக்குரியதாகவோ பரலோகத்துக்குரியதாகவோ இருந்தாலும் அதை வெளிப்படையாய் அறிவிக்கும் முக்கியமான வேலைக்காக பலப்படுத்தப்படுவதற்கு நாம் சந்தோஷப்படுவோம்.—யோவான் 13:35.
‘நித்திய உடன்படிக்கை’
13, 14. எந்த வழிகளில் புதிய உடன்படிக்கை நித்தியமானது?
13 1,44,000 பேரில் கடைசி நபர் தன் பரலோக நம்பிக்கையை பெறும்போது என்ன நடக்கிறது? புதிய உடன்படிக்கை பொருந்துவது நின்றுவிடுமா? அந்தச் சமயத்தில், தேவனுடைய இஸ்ரவேலின் மீதியான அங்கத்தினர் எவருமே பூமியில் இருக்கமாட்டார்கள். உடன்படிக்கையில் பங்குகொள்வோர் அனைவரும் இயேசுவோடு அவருடைய “பிதாவின் ராஜ்யத்திலே” இருப்பார்கள். (மத்தேயு 26:29) ஆனால், எபிரெயருக்கு எழுதின நிருபத்திலுள்ள பவுலின் வார்த்தைகளை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்: ‘நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரை . . . மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்.’ (எபிரெயர் 13:20; ஏசாயா 55:3) எந்த அர்த்தத்தில் புதிய உடன்படிக்கை நித்தியமானதாய் இருக்கிறது?
14 முதலாவது, நியாயப்பிரமாண உடன்படிக்கை போல் இல்லாமல் அது ஒருபோதும் மாற்றீடு செய்யப்படாது. இரண்டாவது, அதனுடைய செயல்பாட்டின் விளைவுகள் இயேசு நிரந்தரமாய் ராஜாவாக இருப்பதைப் போலவே நிரந்தரமானவை. (லூக்கா 1:33-ஐ 1 கொரிந்தியர் 15:27, 28-உடன் ஒப்பிடுக.) அந்தப் பரலோக ராஜ்யம் யெகோவாவின் நோக்கங்களில் ஒரு நிரந்தரமான இடத்தை பெற்றுள்ளது. (வெளிப்படுத்துதல் 22:5) மூன்றாவது, வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் புதிய உடன்படிக்கையின் ஏற்பாட்டிலிருந்து தொடர்ந்து பயனடைவர். கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின்போது, உண்மையுள்ள மானிடர்கள் இப்போது செய்வதுபோலவே ‘இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே [யெகோவாவுக்கு] பரிசுத்த சேவையை’ தொடர்ந்து செய்வர். இயேசுவின் ‘உடன்படிக்கைக்குரிய இரத்தத்தின்’ அடிப்படையில் மன்னிக்கப்பட்ட கடந்தகால பாவங்களை யெகோவா மறுபடியும் நினைக்க மாட்டார். அவர்கள் யெகோவாவின் நண்பர்களாக ஒரு நீதியான நிலைநிற்கையை தொடர்ந்து அனுபவிப்பார்கள், அவருடைய நியாயப்பிரமாணம் அவர்களுடைய இருதயங்களில் இன்னும் எழுதப்பட்டிருக்கும்.
15. புதிய உலகில் பூமிக்குரிய வணக்கத்தாரோடு யெகோவாவின் உறவை விவரியுங்கள்.
15 ‘நான் அவர்களுடைய தேவன், அவர்கள் என்னுடைய ஜனங்கள்’ என்று இந்த மானிட ஊழியர்களைக் குறித்து அப்போது யெகோவா சொல்லமுடியுமா? சொல்லமுடியும். ‘அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாய் இருப்பார்கள். தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.’ (வெளிப்படுத்துதல் 21:3) அவர்கள் ‘பரிசுத்தவான்களுடைய பாளயமாகவும்,’ இயேசு கிறிஸ்துவின் பரலோக மணவாட்டியாக இருக்கும் ‘பிரியமான நகரத்தின்’ பூமிக்குரிய பிரதிநிதிகளாகவும் ஆவார்கள். (வெளிப்படுத்துதல் 14:1; 20:9; 21:2) இயேசு சிந்திய ‘உடன்படிக்கைக்குரிய இரத்தத்தின்’ பேரில் அவர்களுடைய விசுவாசத்தின் காரணமாகவும், பூமியிலிருந்தபோது தேவனுடைய இஸ்ரவேலாக இருந்த பரலோக ராஜாக்களுக்கும் ஆசாரியர்களுக்கும் அவர்களுடைய கீழ்ப்படிதலின் காரணமாகவும் இவையனைத்தும் சாத்தியமாகும்.—வெளிப்படுத்துதல் 5:10.
16. (அ) பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவோருக்கு நிகழக்கூடிய என்ன சாத்தியங்கள் காத்திருக்கின்றன? (ஆ) ஆயிர வருடங்களின் முடிவில் என்ன ஆசீர்வாதங்கள் வரும்?
16 பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் மரித்தோரைப் பற்றியென்ன? (யோவான் 5:28, 29) அவர்களும்கூட ஆபிரகாமின் வித்தாகிய இயேசுவின் மூலம் ‘ஆசீர்வதிக்கப்படும்படி’ அழைக்கப்படுவர். (ஆதியாகமம் 22:18) அவர்களும்கூட யெகோவாவின் நாமத்தை நேசித்து, அவருக்கு ஊழியம் செய்து, ஏற்கத்தகுந்த பலிகளைச் செலுத்தி, அவருடைய ஜெப வீட்டிலே பரிசுத்த சேவை செய்ய வேண்டும். அவ்வாறு செய்வோர் கடவுளுடைய ஓய்வுக்குள் பிரவேசிப்பர். (ஏசாயா 56:6, 7) ஆயிர வருடங்கள் முடிவடையும்போது, இயேசு கிறிஸ்து மற்றும் அவருடைய 1,44,000 உடன் ஆசாரியர்களுடைய ஊழியத்தின் மூலம் எல்லா உண்மையுள்ள நபர்களும் மானிட பரிபூரணத்தை அடைந்திருப்பர். அவர்கள் நீதிமான்களாய் இருப்பர், வெறுமனே கடவுளுடைய நண்பர்களாய் நீதிமான்களாக அறிவிக்கப்படுவது மட்டுமல்ல. அவர்கள் ஆதாமிலிருந்து சுதந்தரித்த பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் முழுவதுமாய் விடுவிக்கப்பட்டு ‘உயிரடைவார்கள்.’ (வெளிப்படுத்துதல் 20:5; 22:2) அது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதமாய் இருக்கும்! இன்று நமக்குள்ள நோக்குநிலையின்படி, இயேசு மற்றும் 1,44,000 பேரின் ஆசாரிய வேலையும் அப்போது செய்து முடிக்கப்பட்டிருக்கும். பெரிய பாவநிவாரண நாளின் ஆசீர்வாதங்கள் முழுவதுமாக பொருத்தப்பட்டிருக்கும். கூடுதலாக, இயேசு, “தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.” (1 கொரிந்தியர் 15:24) மனிதவர்க்கத்துக்கு ஒரு கடைசி பரீட்சை இருக்கும், பிறகு சாத்தானும் அவனுடைய பேய்களும் என்றென்றுமாக அழிக்கப்படுவர்.—வெளிப்படுத்துதல் 20:7, 10.
17. நமக்கென்று காத்திருக்கும் சந்தோஷத்தின் காரணமாக, நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய தீர்மானமாயிருக்க வேண்டும்?
17 அந்த ஆவலைத் தூண்டுகிற சகாப்தம் அப்போது ஆரம்பமாகையில் “நித்திய உடன்படிக்கை” என்ன பாகத்தை வகிக்கும்? அதைப் பற்றி நாம் சொல்ல முடியாது. யெகோவா இதுவரைக்குமாக வெளிப்படுத்தியிருப்பது இப்போதைக்கு போதுமானது. அது நமக்கு பயபக்தியூட்டுகிறது. சற்று சிந்தித்துப் பாருங்கள்—‘புதிய வானங்களும் புதிய பூமியின்’ பாகமாக நித்திய ஜீவன்! (2 பேதுரு 3:13) அந்த வாக்குறுதியை சுதந்தரித்துக்கொள்வதற்கு நமக்கு இருக்கும் விருப்பத்தை எதுவும் பலவீனப்படுத்தாதிருப்பதாக. உறுதியாய் நிலைத்து நிற்பது சுலபமாய் இல்லாமல் இருக்கலாம். பவுல் சொன்னார்: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரெயர் 10:36) நமக்கென்று காத்திருக்கும் சந்தோஷத்தோடு ஒப்பிடுகையில், மேற்கொள்ள வேண்டிய பிரச்சினை எதுவாக இருந்தாலும், எதிர்த்துச் சமாளிக்க வேண்டிய எதிர்ப்பு எதுவாக இருந்தாலும் அது அற்பமாய் இருக்கிறது. (2 கொரிந்தியர் 4:17) எனவே, நம்மில் எவரும் “கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல்” இருப்போமாக. மாறாக, நாம் “ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய் இருக்கிறோம்” என்பதை நிரூபித்துக் காண்பிப்போமாக. (எபிரெயர் 10:39) நம் ஒவ்வொருவரின் நித்திய ஆசீர்வாதத்துக்காக நாம் அனைவரும் உடன்படிக்கைகளின் கடவுளாகிய யெகோவாவின்மீது முழு நம்பிக்கை வைப்போமாக.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் புதிய பூமிக்குள் தப்பிப்பிழைத்தல் என்ற புத்தகத்தில் அதிகாரம் 13-ஐப் பார்க்கவும்.
உங்களுக்குப் புரிந்ததா?
◻ அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், ஆபிரகாமின் வித்தின் மூலம் யாரும்கூட ஆசீர்வதிக்கப்படுகின்றனர்?
◻ புதிய உடன்படிக்கையின் மூலம் ஆசீர்வதிக்கப்படுவதால், பழைய உடன்படிக்கையின்கீழ் யூத மதத்துக்கு மாறியவர்களைப் போல் எவ்வாறு வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர்?
◻ பெரிய பாவநிவாரண நாள் ஏற்பாட்டின் மூலம் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு ஆசீர்வதிக்கப்படுகின்றனர்?
◻ புதிய உடன்படிக்கையை “நித்திய உடன்படிக்கை” என்று பவுல் ஏன் அழைத்தார்?
[பக்கம் 23-ன் பெட்டி]
ஆலயத்தில் பரிசுத்த சேவை
யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் திரள் கூட்டத்தார் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வணங்குகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:14, 15; 11:2) அவர்கள் புறஜாதியாருக்கென்று தனியாக உள்ள பிரகாரத்திலே இருக்கின்றனர் என்ற முடிவுக்குவர எந்தக் காரணமுமில்லை. இயேசு பூமியில் இருக்கையில், ஆலயத்திலே புறஜாதியாருக்கென்று ஒரு பிரகாரம் இருந்தது. இருந்தபோதிலும், சாலொமோன் மற்றும் எசேக்கியேலின் ஆலயங்களுக்கென்று கடவுளால் ஏவப்பட்ட திட்ட வரைபடங்களில் புறஜாதியாரின் பிரகாரத்திற்கென்று ஏற்பாடு எதுவுமில்லை. சாலொமோனின் ஆலயத்தில், வெளிப்பிரகாரம் ஒன்று இருந்தது, அங்கு இஸ்ரவேலரும் யூத மதத்துக்கு மாறியவர்களும், ஆண்களும் பெண்களும் ஒன்றுசேர்ந்து வணங்கினர். இதுவே ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தின் தீர்க்கதரிசன மாதிரிப்படிவமாக உள்ளது. அங்கு திரள்கூட்டத்தார் பரிசுத்த சேவை செய்வதை யோவான் பார்த்தார்.
இருப்பினும், ஆசாரியர்களும் லேவியர்களும் மட்டுமே பெரிய பலிபீடம் அமைந்துள்ள உட்பிரகாரத்திற்குள் பிரவேசிக்கமுடியும்; ஆசாரியர்கள் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கமுடியும்; பிரதான ஆசாரியர் மட்டுமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கமுடியும். பூமியிலிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தனிச்சிறப்புவாய்ந்த ஆவிக்குரிய நிலைமைக்கு உட்பிரகாரமும் பரிசுத்த ஸ்தலமும் முன்நிழலாய் இருப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. மகா பரிசுத்த ஸ்தலம், அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்கள் பரலோக பிரதான ஆசாரியரோடு அழியாமையுள்ள ஜீவனைப் பெறும் பரலோகத்திற்கே படமாக உள்ளது.—எபிரெயர் 10:19, 20.
[பக்கம் 23-ன் படம்]
நமக்கென்று காத்திருக்கும் சந்தோஷத்தின் காரணமாக, நாம் ‘ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாய்’ இருப்போமாக