யோவான் எழுதியது
5 இதற்குப் பின்பு யூதர்களின் பண்டிகை ஒன்று வந்தது,+ அப்போது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எருசலேமில் ‘ஆட்டு நுழைவாசலுக்கு’+ பக்கத்தில், எபிரெய மொழியில் பெத்சதா என்று அழைக்கப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன. 3 ஏராளமான நோயாளிகளும் பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் கை கால் சூம்பியவர்களும்* அந்த மண்டபங்களில் படுத்துக்கிடந்தார்கள். 4 *—— 5 அங்கே 38 வருஷங்களாக வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒருவரும் இருந்தார். 6 அவர் அங்கே படுத்திருப்பதை இயேசு பார்த்தார்; அவர் ரொம்பக் காலமாக வியாதிப்பட்டிருப்பதைத் தெரிந்துகொண்டு, “நீங்கள் குணமாக விரும்புகிறீர்களா?”+ என்று கேட்டார். 7 அதற்கு அந்த நோயாளி, “ஐயா, குளத்து நீர் கலங்கும்போது என்னை அதில் இறக்கிவிட யாரும் இல்லை; நான் இறங்குவதற்குள் வேறு யாராவது எனக்கு முன்னால் இறங்கிவிடுகிறார்கள்” என்று சொன்னார். 8 அப்போது இயேசு, “எழுந்து, உங்கள் படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்”+ என்று சொன்னார். 9 உடனே அந்த மனிதர் குணமடைந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்.
அந்த நாள் ஓய்வுநாளாக இருந்தது. 10 அதனால் யூதர்கள், “இது ஓய்வுநாள், நீ படுக்கையைத் தூக்கிக்கொண்டு போவது சரியல்ல”+ என்று குணமடைந்த மனிதரிடம் சொன்னார்கள். 11 அவரோ, “என்னைக் குணமாக்கியவர்தான் ‘படுக்கையை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று என்னிடம் சொன்னார்” என்றார். 12 அதற்கு அவர்கள், “‘இதை எடுத்துக்கொண்டு நடங்கள்’ என்று உனக்குச் சொன்ன அந்த மனுஷன் யார்?” என்று கேட்டார்கள். 13 குணமடைந்த மனிதருக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனென்றால், இயேசு கூட்டத்தோடு கூட்டமாகப் போயிருந்தார்.
14 பின்பு, இயேசு அவரை ஆலயத்தில் பார்த்து, “இதோ, நீங்கள் குணமாகிவிட்டீர்கள். முன்பு இருந்ததைவிட மோசமான எதுவும் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க இனிமேல் பாவம் செய்யாதீர்கள்” என்று சொன்னார். 15 அந்த மனிதர் அங்கிருந்து போய், தன்னைக் குணமாக்கியது இயேசுதான் என்று யூதர்களிடம் சொன்னார். 16 இயேசு ஓய்வுநாளில் இவற்றைச் செய்ததால் யூதர்கள் அவரை எதிர்த்தார்கள். 17 அவரோ, “என் தகப்பன் இதுவரை வேலை செய்துவந்திருக்கிறார், நானும் வேலை செய்துவருகிறேன்”+ என்று அவர்களிடம் சொன்னார். 18 அவர் ஓய்வுநாள் சட்டத்தை மீறியதோடு கடவுளைத் தன்னுடைய சொந்தத் தகப்பன் என்று சொல்லித்+ தன்னைக் கடவுளுக்குச் சமமாக்கிக்கொண்டதாக+ யூதர்கள் நினைத்தார்கள். அதனால், அவரைக் கொலை செய்ய இன்னும் தீவிரமாக முயற்சி செய்தார்கள்.
19 அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மகனால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது; தகப்பன் எதைச் செய்வதைப் பார்க்கிறாரோ அதை மட்டுமே அவரால் செய்ய முடியும்.+ தகப்பன் எவற்றையெல்லாம் செய்கிறாரோ அவற்றையெல்லாம் மகனும் அப்படியே செய்கிறார். 20 மகன்மேல் தகப்பன் பாசம் வைத்திருப்பதால்,+ தான் செய்கிற எல்லாவற்றையும் அவருக்குக் காட்டுகிறார்; நீங்கள் ஆச்சரியப்படும்படி, அவற்றைவிட பெரிய செயல்களையும் அவருக்குக் காட்டுவார்.+ 21 இறந்தவர்களைத் தகப்பன் உயிரோடு எழுப்புவது போலவே+ மகனும் தனக்கு விருப்பமானவர்களை உயிரோடு எழுப்புகிறார்.+ 22 தகப்பன் ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை, நியாயந்தீர்க்கிற அதிகாரம் முழுவதையும் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார்.+ 23 எல்லாரும் தகப்பனுக்கு மதிப்புக் கொடுப்பது போலவே மகனுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்திருக்கிறார். மகனுக்கு மதிப்புக் கொடுக்காதவன் அவரை அனுப்பிய தகப்பனுக்கும் மதிப்புக் கொடுப்பதில்லை.+ 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புகிறவனுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்;+ அவன் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாமல் சாவைக் கடந்து வாழ்வைப் பெறுவான்.+
25 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இறந்தவர்கள் கடவுளுடைய மகனின் குரலைக் கேட்கும் நேரம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அதைக் காதுகொடுத்துக் கேட்கிறவர்களுக்கு வாழ்வு கிடைக்கும். 26 உயிர் கொடுக்கும் வல்லமை தகப்பனுக்கு இருக்கிறது,+ அந்த வல்லமையை மகனுக்கும் அவர் கொடுத்திருக்கிறார்.+ 27 அதோடு, அவருடைய மகன் மனிதகுமாரனாக+ இருப்பதால் நியாயந்தீர்க்கும் அதிகாரத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்.+ 28 இதைப் பற்றி ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், நேரம் வருகிறது; அப்போது, நினைவுக் கல்லறைகளில்* இருக்கிற எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.+ 29 நல்லது செய்தவர்கள் வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள், கெட்டதைச் செய்துவந்தவர்கள் நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.+ 30 என்னால் எதையுமே சொந்தமாகச் செய்ய முடியாது. என் தகப்பன் சொல்கிறபடிதான் நான் நியாயந்தீர்க்கிறேன். என்னுடைய தீர்ப்பு நீதியானது,+ ஏனென்றால் நான் என்னுடைய விருப்பத்தை* அல்ல, என்னை அனுப்பியவருடைய விருப்பத்தையே* நாடுகிறேன்.+
31 நான் மட்டுமே என்னைப் பற்றிச் சாட்சி கொடுத்தால், என் சாட்சி உண்மையாக இருக்காது.+ 32 என்னைப் பற்றி வேறொருவர் சாட்சி கொடுக்கிறார், என்னைப் பற்றி அவர் கொடுக்கும் சாட்சி உண்மை என்று எனக்குத் தெரியும்.+ 33 நீங்கள் யோவானிடம் ஆள் அனுப்பினீர்கள், அவர் சத்தியத்தைப் பற்றிச் சாட்சி கொடுத்தார்.+ 34 ஆனாலும், மனுஷனுடைய சாட்சியை நான் சார்ந்திருப்பதில்லை. நீங்கள் மீட்புப் பெற வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றைச் சொல்கிறேன். 35 அவர் பிரகாசமாக எரிகிற விளக்காக இருந்தார். கொஞ்சக் காலம் அவருடைய ஒளியில் சந்தோஷமாக இருக்க விரும்பினீர்கள்.+ 36 ஆனால், யோவானுடைய சாட்சியைவிட முக்கியமான சாட்சி என்னிடம் இருக்கிறது. நான் செய்து முடிப்பதற்காக என் தகப்பன் என்னிடம் ஒப்படைத்த செயல்கள்தான், அதாவது நான் செய்து வருகிற செயல்கள்தான், தகப்பன் என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கின்றன.+ 37 அதோடு, என்னை அனுப்பிய தகப்பனே என்னைப் பற்றிச் சாட்சி கொடுத்திருக்கிறார்.+ நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதில்லை, அவருடைய உருவத்தைப் பார்த்ததுமில்லை.+ 38 அவரால் அனுப்பப்பட்டவரையே நீங்கள் நம்பாததால், அவருடைய வார்த்தை உங்கள் இதயத்தில் நிலைத்து நிற்பதுமில்லை.
39 முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்;+ அவையே என்னைப் பற்றிச் சாட்சி கொடுக்கின்றன.+ 40 அப்படியிருந்தும், வாழ்வு பெறுவதற்கு என்னிடம் வர உங்களுக்கு விருப்பமில்லை.+ 41 மனுஷர்கள் தரும் மகிமையை நான் ஏற்றுக்கொள்வதில்லை. 42 ஆனால், உங்களுக்குக் கடவுள்மேல் அன்பு இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். 43 நான் என்னுடைய தகப்பனின் பெயரில் வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், அவனை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். 44 ஒரே கடவுளிடமிருந்து வரும் மகிமையை நாடாமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு வரும் மகிமையை ஏற்றுக்கொள்கிற நீங்கள் எப்படி என்னை நம்புவீர்கள்?+ 45 என்னுடைய தகப்பனுக்கு முன்னால் நான் உங்களைக் குற்றம்சாட்டுவேன் என்று நினைக்காதீர்கள். உங்களைக் குற்றம்சாட்டுகிற ஒருவர் இருக்கிறார்; நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கிற மோசேதான் அவர்.+ 46 நீங்கள் மோசேயை நம்பினால் என்னையும் நம்புவீர்கள். ஏனென்றால், அவர் என்னைப் பற்றி எழுதியிருக்கிறார்.+ 47 அவர் எழுதியவற்றை நீங்கள் நம்பவில்லை என்றால், நான் சொல்கிறவற்றை எப்படி நம்புவீர்கள்?” என்று கேட்டார்.