விசுவாசம் நம்மை செயல்படும்படி தூண்டுவிக்கிறது!
“விசுவாசம் அவனுடைய [ஆபிரகாமினுடைய] கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.”—யாக்கோபு 2:22.
1, 2. நமக்கு விசுவாசம் இருந்தால் எவ்வாறு செயல்படுவோம்?
கடவுளில் தங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்று பலர் சொல்லுகின்றனர். எனினும், இருப்பதாக வெறுமனே சொல்லிக்கொள்கிற விசுவாசம் ஒரு பிணத்தைப்போல் உயிரற்றதாக இருக்கிறது. “விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்” என்று சீஷனாகிய யாக்கோபு எழுதினார். கடவுள் பயமுள்ளவராக இருந்த ஆபிரகாம், ‘கிரியைகளோடேகூட முயற்சிசெய்த’ விசுவாசத்தை உடையவராக இருந்தார் என்றும் அவர் சொன்னார். (யாக்கோபு 2:17, 22) இத்தகைய வார்த்தைகள் நமக்கு எதை அர்த்தப்படுத்துபவையாய் இருக்கின்றன?
2 நமக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறதெனில், கிறிஸ்தவக் கூட்டங்களில் நாம் கேட்பவற்றை வெறுமனே நம்புகிறவர்களாக மாத்திரமே இருக்க மாட்டோம். யெகோவாவின் செயல்படும் சாட்சிகளாக நாம் இருப்பதால், நம் விசுவாசத்திற்கு அத்தாட்சியை அளிப்போம். ஆம், கடவுளுடைய வார்த்தையை வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்தும்படி விசுவாசம் நம்மைத் தூண்டுவித்து, செயல்படும்படி நம்மை செய்விக்கும்.
பட்சபாதம் விசுவாசத்தின் முரண்பாடு
3, 4. எவ்வாறு விசுவாசம், நாம் மற்றவர்களை நடத்தும் விதத்தை நல்லமுறையில் பாதிக்க வேண்டும்?
3 கடவுளிலும் கிறிஸ்துவிலும் உண்மையான விசுவாசம் நமக்கு இருந்தால், நாம் பட்சபாதம் காட்ட மாட்டோம். (யாக்கோபு 2:1-4) யாக்கோபு யாருக்கு எழுதினாரோ அவர்களில் சிலர், உண்மையான கிறிஸ்தவர்கள் பிரதிபலிக்க வேண்டிய பட்சபாதமற்ற பண்பை காட்டத் தவறினார்கள். (ரோமர் 2:11) ஆகையால், யாக்கோபு சொல்கிறார்: “மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக.” ஐசுவரியமுள்ள ஒரு அவிசுவாசி, பொன் மோதிரங்களையும் மிகச் சிறந்த ஆடைகளையும் அணிந்தவராயும், அதே சமயத்தில் இன்னொரு அவிசுவாசி, ‘கந்தையான வஸ்திரம் தரித்தவராயும்,’ கூட்டத்திற்கு வந்தால், இருவரும் நல்ல முறையில் வரவேற்கப்பட்டிருக்க வேண்டும்; ஆனால் ஐசுவரியவான்களுக்கு தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட்டு வந்தது. அவர்களுக்கு “நல்ல இடத்தில்” இருக்கைகள் கொடுக்கப்பட்டன; தரித்திரரான அவிசுவாசிகளோ, நிற்கும்படி அல்லது ஒருவரின் பாதத்தினருகே தரையில் உட்காரும்படி சொல்லப்பட்டனர்.
4 இயேசு கிறிஸ்துவின் மீட்பின் கிரய பலியை, ஐசுவரியவான்களுக்கும் தரித்திரருக்கும் ஒன்றுபோல் யெகோவா ஏற்பாடு செய்தார். (2 கொரிந்தியர் 5:14) ஆகையால், ஐசுவரியவான்களுக்கு நாம் பட்சபாதம் காண்பித்தால், ‘நாம் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு நம் நிமித்தம் தரித்திரரான,’ கிறிஸ்துவின் விசுவாசத்திலிருந்து விலகிப்போகிறவர்களாக இருப்போம். (2 கொரிந்தியர் 8:9) தன்னல நோக்கத்துடன் மனிதரைக் கனப்படுத்துவதான, இத்தகைய முறையில் ஒருபோதும் மனிதரை எடைபோடாமல் இருப்போமாக. கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல, நாம் பட்சபாதமாய் நடந்துகொண்டிருந்தால், ‘தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாக’ இருப்போம். (யோபு 34:19) கடவுளைப் பிரியப்படுத்தும்படியான ஆவலுடையோராய் இருந்தோமெனில் நாம், பட்சபாதம் காட்டும் அல்லது ‘சுய ஆதாயத்தின் பொருட்டு முகஸ்துதி பேசும்’ சோதனைக்கு நிச்சயமாகவே உட்பட மாட்டோம்.—யூதா 4, 16, தி.மொ.
5. ‘விசுவாசத்தில் ஐசுவரியவான்களாக’ இருக்கும்படி கடவுள் யாரைத் தெரிந்துகொண்டார், பொருள் சம்பந்தமாய் ஐசுவரியவான்களாக இருப்போர் அடிக்கடி எவ்வாறு செயல்படுகின்றனர்?
5 உண்மையான ஐசுவரியவான்களை யாக்கோபு அடையாளம்காட்டி, பட்சபாதம் இல்லாமல் எல்லாருக்கும் அன்பு காட்டும்படி ஊக்குவிக்கிறார். (யாக்கோபு 2:5-9) ‘தேவன் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொண்டார்.’ இது ஏனென்றால், பெரும்பாலும் தரித்திரரே நற்செய்திக்கு அதிகமாக செவிசாய்ப்போராய் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 1:26-29) ஒரு வகுப்பாராக, பொருள் சம்பந்தமாய் ஐசுவரியவான்களாக இருப்போர், கடன்கள், சம்பளங்கள், சட்டப்பூர்வ நடவடிக்கைகள் ஆகியவற்றைக் குறித்ததில் மற்றவர்களை ஒடுக்குகிறார்கள். கிறிஸ்துவைப் பற்றி தீங்கானவற்றை அவர்கள் பேசி, அவருடைய பெயரை நாம் தரித்திருப்பதனால் நம்மைத் துன்புறுத்துகிறார்கள். ஆனால், பிறனை நேசிக்கும்படி—ஐசுரியவான்களிடமும் தரித்திரரிடமும் சரிசமமாய் அன்புடன் நடந்துகொள்ளும்படி—கட்டளையிடுகிறபடி, ‘ராஜரிக பிரமாணத்திற்குக்’ கீழ்ப்படிவதே நம்முடைய தீர்மானமாக இருக்கட்டும். (லேவியராகமம் 19:18; மத்தேயு 22:37-40) கடவுள் இதைக் கட்டளையிடுகிறபடியால் பட்சபாதம் காட்டுவது ‘பாவஞ்செய்வதாக’ இருக்கிறது.
‘நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டுகிறது’
6. மற்றவர்களிடம் இரக்கமாய் நடந்துகொள்ளாவிட்டால், நாம் எவ்வாறு சட்டத்தை மீறுவோராக இருப்போம்?
6 இரக்கமில்லாமல் நாம் பட்சபாதமாய் நடந்துகொண்டால், சட்டத்தை மீறுவோராக இருக்கிறோம். (யாக்கோபு 2:10-13) இதைக்குறித்ததில் தவறாக செயல்படுவதன்மூலம், கடவுளுடைய சட்டங்கள் முழுவதையும் மீறுவோராக ஆகிறோம். விபசாரக் குற்றம் செய்யாதவர்களாய் ஆனால் அதேசமயத்தில் திருடர்களாக இருந்தவர்களான இஸ்ரவேலர், மோசேயின் நியாயப்பிரமாணத்தை மீறினவர்களாக ஆனார்கள். கிறிஸ்தவர்களாக நாம், புதிய உடன்படிக்கையில் இருப்போரும் அதன் பிரமாணத்தைத் தங்கள் இருதயங்களில் உடையோருமான ஆவிக்குரிய இஸ்ரவேலராகிய, ‘சுயாதீன ஜனத்தின் பிரமாணத்தினால்’ நியாயந்தீர்க்கப்படுகிறோம்.—எரேமியா 31:31-33.
7. தொடர்ந்து பட்சபாதம் காட்டுவோர் ஏன் கடவுளிடமிருந்து இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது?
7 விசுவாசம் இருக்கிறதென்று நாம் உரிமை பாராட்டிக்கொண்டு, ஆனால் பட்சபாதம் காட்டுவதில் விடாமல் தொடர்ந்துகொண்டு இருப்போமானால், நாம் ஆபத்தில் இருக்கிறோம். அன்பற்றவர்களாயும் இரக்கமில்லாதவர்களாயும் இருக்கிறவர்களுக்கு இரக்கமில்லாமல் நியாயத்தீர்ப்பு கிடைக்கும். (மத்தேயு 7:1, 2) யாக்கோபு சொல்கிறார்: “நியாயத்தீர்ப்புக்கு முன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.” நம்முடைய எல்லா விவகாரங்களிலும் இரக்கம் காண்பிப்பதன் மூலம் யெகோவாவின் பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதலை நாம் ஏற்றால், நாம் நியாயம் தீர்க்கப்படுகையில் கண்டனம் செய்யப்பட மாட்டோம். மாறாக, நாம் இரக்கத்தை அனுபவித்து, கண்டிப்பான நீதி அல்லது கண்டனத் தீர்ப்புக்கு உட்படுத்தப்படாமல் இருப்போம்.
விசுவாசம் நற்கிரியைகளை நடப்பிக்கிறது
8. தனக்கு விசுவாசம் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டு, ஆனால் கிரியைகள் இல்லாமல் இருக்கிற ஒருவரின் நிலை என்னவாக இருக்கிறது?
8 விசுவாசம், நம்மை அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருக்கும்படி செய்விப்பது மட்டுமல்லாமல், மற்ற நற்கிரியைகளையும் செய்விக்கிறது. (யாக்கோபு 2:14-26) கிரியைகள் இல்லாமல், விசுவாசம் இருப்பதாக வெறுமனே சொல்லிக்கொள்வது நம்மை நிச்சயமாகவே இரட்சிக்கப்போவதில்லை. உண்மைதான், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளால் கடவுளிடமாக நீதியுள்ள ஒரு நிலைநிற்கையை நாம் அடைய முடியாது. (ரோமர் 4:2-5) ஒரு சட்ட தொகுப்பினால் அல்ல, விசுவாசத்தினாலும் அன்பினாலும் தூண்டுவிக்கப்படும் கிரியைகளைப் பற்றி யாக்கோபு பேசுகிறார். இத்தகைய பண்புகளால் நாம் தூண்டப்படுகிறோமென்றால், தேவையிலுள்ள ஓர் உடன் வணக்கத்தாரிடம் தயவான வெறும் நல்வார்த்தைகளை பேசுவதோடு மட்டுமே நிறுத்திக்கொள்ள மாட்டோம். உடையில்லாமலோ, பசியாகவோ இருக்கும் சகோதரனுக்கு அல்லது சகோதரிக்கு பொருளாதார உதவியை நாம் அளிப்போம். யாக்கோபு இவ்வாறு கேட்கிறார்: தேவையிலுள்ள சகோதரனிடம்: “நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன?” ஒன்றுமில்லை. (யோபு 31:16-22) இத்தகைய “விசுவாசம்” உயிரற்றது!
9. நமக்கு விசுவாசம் இருக்கிறதென்று எது காட்டுகிறது?
9 நாம் கடவுளுடைய ஜனங்களுடன் ஓரளவு கூட்டுறவு கொள்பவராக இருக்கலாம்; ஆனால், நமக்கு விசுவாசம் இருக்கிறதென்ற நம் உரிமைபாராட்டலை, முழு இருதயத்தோடுகூடிய கிரியைகள் மாத்திரமே ஆதரிக்க முடியும். திரித்துவ கோட்பாட்டை நாம் தள்ளிவிட்டு, உண்மையான ஒரே கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறோம் என்றால் அது சிறந்ததே. எனினும், வெறும் நம்பிக்கை விசுவாசமல்ல. “பிசாசுகளும் விசுவாசித்து [“நம்பி,” NW],” பயத்துடன் “நடுங்குகின்றன,” ஏனெனில் அழிவு அவர்களுக்குக் காத்திருக்கிறது. நமக்கு உண்மையில் விசுவாசம் இருந்தால், நற்செய்தியைப் பிரசங்கிப்பது, தேவையிலிருக்கும் உடன் விசுவாசிகளுக்கு உணவும் உடையும் அளிப்பது போன்ற கிரியைகளை நடப்பிக்கும்படி அது நம்மைத் தூண்டியியக்கும். யாக்கோபு இவ்வாறு கேட்கிறார்: “வீணான [கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவால் நிரப்பப்படாத] மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?” ஆம். விசுவாசம் செயல்படுவதைத் தேவைப்படுத்துகிறது.
10. ஆபிரகாம் ஏன் ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என அழைக்கப்படுகிறார்?
10 தேவபக்தியுள்ள கோத்திரத் தலைவரான ஆபிரகாமின் விசுவாசம், செயல்படும்படி அவரைத் தூண்டுவித்தது. ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பனாக,’ அவர் “தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே . . . நீதிமானாக” அறிவிக்கப்பட்டார். (ரோமர் 4:11, 12; ஆதியாகமம் 22:1-14) ஈசாக்கை கடவுள் உயிர்த்தெழுப்பி, அவன் மூலமாய் வித்து வருவதற்கான தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற விசுவாசம் ஆபிரகாமுக்கு இருந்திராவிட்டால் என்னவாயிருக்கும்? தன் குமாரனை பலியிடுவதற்கு அப்போது ஆபிரகாம் ஒருபோதும் முயற்சி செய்திருக்க மாட்டார். (எபிரெயர் 11:19) ஆபிரகாமின் கீழ்ப்படிதலுள்ள கிரியைகளினாலேயே ‘அவருடைய விசுவாசம் பூரணப்பட்டது,’ அல்லது பூர்த்தியாக்கப்பட்டது. “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் [ஆதியாகமம் 15:6] நிறைவேறிற்று.” ஈசாக்கை பலியிட முன்வந்த ஆபிரகாமின் கிரியைகள், அவர் நீதிமான் என்று கடவுள் முன்னொரு சமயம் சொன்னதை உறுதிப்படுத்தின. விசுவாசத்தின் கிரியைகளால், கடவுளிடமாக தன் அன்பை அவர் வெளிப்படுத்தி, ‘தேவனுடைய [“யெகோவாவின்,” NW] சிநேகிதன்’ என்று அழைக்கப்படலானார்.
11. ராகாபின் காரியத்தில் விசுவாசத்தின் என்ன அத்தாட்சி நமக்கு இருக்கிறது?
11 “மனிதன் கிரியைகளினாலே நீதிமானாக அறிவிக்கப்பட வேண்டும், விசுவாசத்தினால் மாத்திரமல்ல,” என்று ஆபிரகாம் நிரூபித்தார். (NW) எரிகோவில் வேசியாக இருந்த ராகாபைக் குறித்ததிலும் அது உண்மையாக இருந்தது. அவள் “[இஸ்ரவேலரான] தூதர்களை உபசரித்து,” அவர்கள் கானானிய சத்துருக்களால் பிடிபடாமல் தப்பும்படி, அவர்களை “வேறுவழியாய் அனுப்பிவிட்ட” பின்பே “நீதியுள்ளவளாக தீர்க்கப்பட்டாள்.” (தி.மொ.) யெகோவாவே உண்மையான கடவுள் என்று அவள், இஸ்ரவேலின் வேவுகாரர்களைச் சந்திப்பதற்கு முன்பே அறிந்துணர்ந்திருந்தாள். அவள் அடுத்து சொன்ன வார்த்தைகளும், வேசியாயிருந்ததை விட்டொழித்ததும் அவளுடைய விசுவாசத்திற்கு அத்தாட்சியை அளித்தன. (யோசுவா 2:9-11; எபிரெயர் 11:31) கிரியைகளால் காட்டப்பட்ட விசுவாசத்தின் இந்த இரண்டாவது உதாரணத்திற்குப்பின், யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” ஓர் ஆள் செத்துவிடுகையில், இயங்க வைக்கும் சக்தி, அல்லது “ஆவி” அவனில் இல்லாமல் போகிறது, அவன் செயல்படுவதில்லை. விசுவாசம் இருப்பதாக வெறுமனே சொல்லிக்கொள்வது, செத்த ஒரு உடலைப்போலவே உயிரற்றதாகவும் பயனற்றதாகவும் இருக்கிறது. எனினும், நமக்கு உண்மையான விசுவாசம் இருந்தால், தேவபக்தியுள்ள கிரியைக்கு அது நம்மை தூண்டியியக்கும்.
அந்த நாவை அடக்குங்கள்!
12. சபையிலுள்ள மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
12 பேசுவதும் போதிப்பதும்கூட விசுவாசத்தின் அத்தாட்சியை அளிக்கலாம், ஆனால் கட்டுப்பாட்டுக்கான தேவையும் இருக்கிறது. (யாக்கோபு 3:1-4) மூப்பர்கள், சபையின் போதகர்களாக பெரும் பொறுப்புடையவர்களாகவும் கடவுளிடம் கணக்கு ஒப்புவிக்க வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் உள்நோக்கங்களையும் தகுதிகளையும் மனத்தாழ்மையுடன் ஆராய்ந்தறியவேண்டும். அறிவும் திறமையும் மட்டுமேயல்லாமல், கடவுளிடமாகவும் உடன் விசுவாசிகளிடமாகவும் உள்ளார்ந்த அன்பும் இந்த மனிதருக்கு இருக்க வேண்டும். (ரோமர் 12:3, 16; 1 கொரிந்தியர் 13:3, 4) மூப்பர்கள் தங்கள் அறிவுரையை வேதவசனங்களின் அடிப்படையில் கொடுக்கவேண்டும். ஒரு மூப்பரின் போதகம் தவறாக இருந்து, மற்றவர்களுக்குப் பிரச்சினை உண்டாக்குவதில் அது முடிவடைந்தால், கடவுள் கிறிஸ்துவின் மூலமாய் அவரை நியாயம் தீர்ப்பார். ஆகையால், மூப்பர்கள், மனத்தாழ்மையுள்ளோராகவும் அக்கறையோடு படிப்போராகவும் இருந்து, கடவுளுடைய வார்த்தையை உண்மையுடன் கடைப்பிடித்து வரவேண்டும்.
13. நாம் ஏன் வார்த்தையில் தவறுகிறோம்?
13 அபூரணத்தின் காரணமாக மிக சிறந்த போதகர்களும்—உண்மையில் நாம் எல்லாருமே—“அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” வார்த்தையில் தவறுவது, மிக அடிக்கடி ஏற்படுவதும், இயல்பாக இன்னல் விளைவிப்பதுமான குறைபாடுகளில் ஒன்றாக உள்ளது. யாக்கோபு இவ்வாறு சொல்கிறார்: “ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக் கூடியவனுமாயிருக்கிறான்.” இயேசு கிறிஸ்துவுக்கு மாறாக நாம், நாவை பூரணமாக அடக்கிவைக்க முடியாதவர்களாக இருக்கிறோம். அதை நம்மால் செய்யமுடிந்தால், நம்முடைய உடலின் மற்ற உறுப்புக்களையும் கட்டுப்படுத்த முடியும். கடிவாளங்களும் வாயிரும்புகளும் குதிரைகளை நாம் ஏவும் திசையில் செல்லும்படி செய்விக்கின்றன. கடுங்காற்றுகளால் அலைக்கழிக்கப்படுகிற ஒரு பெரிய கப்பலையும்கூட, சிறிய ஒரு சுக்கானால் மாலுமியின் விருப்பத்திற்கு இசைவாகத் திருப்பிச் செலுத்த முடியும்.
14. நாவை அடக்குவதற்கு முயற்சி தேவைப்படுவதை யாக்கோபு எவ்வாறு அறிவுறுத்துகிறார்?
14 நாவை அடக்குவதற்கு மெய்யான முயற்சி தேவைப்படுகிறதென்று நாம் எல்லாரும் நேர்மையாகவே ஒப்புக்கொள்ள வேண்டும். (யாக்கோபு 3:5-12) குதிரையோடு ஒப்பிட, ஒரு கடிவாளம் சிறியதாக உள்ளது; அவ்வாறே ஒரு கப்பலோடு ஒப்பிட ஒரு சுக்கானும் உள்ளது. மனித உடலுடன் ஒப்பிடுகையில், நாவு சிறியதாக இருக்கிற போதிலும் ‘பெருமையானவைகளைப் பேசுகிறது.’ பெருமைபேசுவது கடவுளுக்கு வெறுப்புண்டாக்குகிறது என்று வேதவசனங்கள் தெளிவாகக் காட்டுவதால், அதைத் தவிர்ப்பதற்கு நாம் அவருடைய உதவியை நாடுவோமாக. (சங்கீதம் 12:3, 4; 1 கொரிந்தியர் 4:7) கோபமூட்டப்படுகையிலும், ஒரு காட்டைக் கொளுத்துவதற்கு சிறிய நெருப்புப்பொறியே போதுமானது என்பதை நினைவில் வைத்து, நம் நாவைக் கட்டுப்படுத்துவோமாக. யாக்கோபு குறிப்பிட்டு காட்டுகிற பிரகாரம், பெரும் சேதத்தை விளைவிக்கும் வல்லமையுடன் ‘நாவும் நெருப்பாக’ உள்ளது. (நீதிமொழிகள் 18:21) ஏன், கட்டுப்பாடற்ற ஒரு நாவு, “அநீதி நிறைந்த உலகம்” என்பதாக அமைகிறதே! தேவபக்தியற்ற இந்த உலகத்தின் ஒவ்வொரு தீயத் தன்மையும், கட்டுப்படுத்தப்படாத நாவுடனேயே சம்பந்தப்பட்டிருக்கிறது. அவதூறான பேச்சு, பொய்ப் போதகம் போன்ற தீங்குண்டாக்கும் காரியங்களுக்கு அதுவே காரணமாக இருக்கிறது. (லேவியராகமம் 19:16; 2 பேதுரு 2:1) நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம்முடைய நாவை அடக்கி வைப்பதில் கடினமாக உழைக்கும்படி நம்முடைய விசுவாசம் நம்மை தூண்டுவிக்க வேண்டுமல்லவா?
15. அடக்கப்படாத நாவு என்ன தீங்கை நடப்பிக்கலாம்?
15 அடக்கப்படாத ஒரு நாவு, முற்றிலுமாக ‘நம்மைக் கறைப்படுத்திவிடுகிறது.’ உதாரணமாக, ஓயாமல் பொய் சொல்லுவோராக நாம் கண்டுபிடிக்கப்பட்டால், பொய்யர்களாக ஒருவேளை பேர்பெற்று விடுவோம். அப்படியானால், கட்டுப்படுத்தப்படாத நாவு எவ்வாறு ‘ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறது?’ வாழ்க்கையை ஒரு நச்சு சூழலாக ஆக்குவதன் மூலமேயாகும். அடக்கப்படாத ஒரு நாவினால், முழு சபையின் மன அமைதியுமே குலைக்கப்படலாம். இன்னோம் பள்ளத்தாக்காகிய ‘கெஹென்னாவை’ (NW) யாக்கோபு குறிப்பிடுகிறார். குழந்தைகளைப் பலியிடுவதற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்ட இது, எருசலேமின் குப்பையைத் தீ வைத்துக் கொளுத்தி அழிப்பதற்கான, குப்பை கொட்டுமிடமாகிவிட்டது. (எரேமியா 7:31) ஆகையால் கெஹென்னா நித்திய அழிவுக்கு அடையாளமாக இருக்கிறது. ஒரு கருத்தில், கெஹென்னாவின் அழிக்கும் வல்லமை, கட்டுப்படுத்தப்படாத நாவுக்குப் பொருத்திப் பயன்படுத்தப்படுகிறது. நம்முடைய நாவுக்கு நாம் கடிவாளம் போடாவிட்டால், நாம் மூட்டிவிட்ட நெருப்புக்கு நாமே இரையாகிவிடக்கூடும். (மத்தேயு 5:22) மற்றொருவரை நிந்தித்த குற்றத்திற்காக நாம் ஒருவேளை சபைநீக்கமும் செய்யப்படலாம்.—1 கொரிந்தியர் 5:11-13.
16. கட்டுப்படுத்தப்படாத நாவு செய்யக்கூடிய சேதத்தைக் கருதுகையில், நாம் என்ன செய்ய வேண்டும்?
16 கடவுளுடைய வார்த்தையை வாசித்ததிலிருந்து நீங்கள் பெரும்பாலும் அறிந்திருக்கிறபிரகாரம், மிருக சிருஷ்டிகளைக் கட்டுப்படுத்தி ஆளும்படி யெகோவா மனிதனுக்குக் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 1:28) எல்லா வகை உயிரினங்களும் அடக்கி பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, வேட்டையாடுவதில் பழக்குவிக்கப்பட்ட வல்லூறுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. “ஊரும் பிராணிகள்” என்று யாக்கோபு குறிப்பிடுகிறதில், பாம்பாட்டிகள் கட்டுப்படுத்தும் பாம்புகள் அடங்கியிருக்கலாம். (சங்கீதம் 58:4, 5) திமிங்கிலங்களையும்கூட மனிதன் கட்டுப்படுத்த முடியும், ஆனால் பாவிகளாயிருக்கும் மனிதராகிய நாம், நாவை முழுமையாக அடக்க முடியாது. எனினும், இழித்துரைக்கிற, புண்படுத்துகிற சொற்களை அல்லது பழிதூற்றுகிற பேச்சுகளை நாம் தவிர்க்க வேண்டும். கட்டுப்படுத்தப்படாத ஒரு நாவு, சாவுக்கேதுவான விஷம் நிறைந்த, ஆபத்தான ஒரு கருவியாக இருக்கக்கூடும். (ரோமர் 3:13) வருந்தத்தக்கதாக, பொய்ப் போதகர்களின் நாவுகள், பூர்வ கிறிஸ்தவர்கள் சிலரை கடவுளைவிட்டு விலகும்படி செய்வித்தன. ஆகையால், எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட விசுவாச துரோக விஷச்சொற்கள் நம்மை மேற்கொள்ளப்படும்படி ஒருபோதும் நாம் அனுமதியாமல் இருப்போமாக.—1 தீமோத்தேயு 1:18-20; 2 பேதுரு 2:1-3.
17, 18. யாக்கோபு 3:9-12-ல் என்ன முரண்பாடான தன்மை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது, இதைக் குறித்து நாம் என்ன செய்யவேண்டும்?
17 கடவுளில் விசுவாசமும், அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலும் விசுவாச துரோகத்திலிருந்து நம்மைப் பாதுகாத்து வைக்கவும், நாவை முரண்பாடான விதத்தில் பயன்படுத்துவதிலிருந்து நம்மைத் தடுத்து வைக்கவும் முடியும். சிலருடைய முரண்பாடான தன்மையைக் குறிப்பிடுபவராய் யாக்கோபு சொல்கிறார்: “அதினாலே [நாவினாலே] நாம் பிதாவாகிய தேவனைத் [“யெகோவாவை,” NW] துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம்.” (ஆதியாகமம் 1:26) ‘எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறவராக’ யெகோவா நம்முடைய தகப்பனாக இருக்கிறார். (அப்போஸ்தலர் 17:24, 25) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு, ஆவிக்குரிய அர்த்தத்தில் அவர் தகப்பனாக இருக்கிறார். மிருகங்களிலிருந்து நம்மை வேறுபடுத்துகிற, அன்பு, நீதி, ஞானம் உட்பட, மன சம்பந்தமான மற்றும் ஒழுக்க சம்பந்தமான பண்புகளைக் குறித்ததில் நாம் எல்லாரும் ‘கடவுளுடைய சாயலில்’ இருக்கிறோம். ஆகையால், யெகோவாவில் நமக்கு விசுவாசம் இருந்தால், நாம் எவ்வாறு செயல்பட வேண்டும்?
18 மனிதரை நாம் சபித்தால், அவர்கள்மீது தீமை வரும்படி வேண்டிக்கொள்கிறோம் என்று அர்த்தப்படும். எவர்மீதாவது தீமை வரும்படி செய்விப்பதற்கு, கடவுள் அதிகாரமளித்த, தேவாவியால் ஏவப்பட்ட தீர்க்கதரிசிகளாக நாம் இராததனால், அத்தகைய பேச்சு, பகைமையின் அத்தாட்சியாக இருந்து, கடவுளைத் துதிக்கும் நம் உண்மை வணக்கத்தை வீணாக்கிவிடும். “துதித்தலும் சபித்தலும்” ஒரே வாயிலிருந்து வெளிவருவது சரியல்ல. (லூக்கா 6:27, 28; ரோமர் 12:14; 17-21; யூதா 9) கூட்டங்களில் கடவுளுக்குத் துதிகள் பாடுவதும், பின்னால் உடன் விசுவாசிகளைப் பற்றி தீங்கானவற்றை பேசுவதும் எவ்வளவு பாவமாயிருக்கும்! ஒரே நீரூற்றிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்க முடியாது. “அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும்” கொடுக்க முடியாததைப்போல், உப்புத் தண்ணீர் தித்திப்பான தண்ணீரைக் கொடுக்க முடியாது. நல்வார்த்தையைப் பேசவேண்டிய நாம், கசப்பான வார்த்தைகளை விடாது பேசிக்கொண்டிருந்தால் ஆவிக்குரிய பிரகாரமாய் நம்மில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது. இந்தப் பழக்கத்துக்கு நாம் அடிமையாகியிருந்தால், யெகோவாவின் உதவிக்காக நாம் ஜெபித்து, அத்தகைய பேச்சை நிறுத்துவோமாக.—சங்கீதம் 39:1.
மேலிருந்து வரும் ஞானத்துடன் செயல்படுங்கள்
19. பரத்திலிருந்து வருகிற ஞானத்தால் நாம் வழிநடத்தப்பட்டால், மற்றவர்களை நாம் எவ்வாறு நல்லவிதத்தில் பாதிக்கக்கூடும்?
19 விசுவாசமுள்ளவர்களுக்குப் பொருந்தும் காரியங்களைப் பேசவும் செய்யவும் நம்மெல்லாருக்கும் ஞானம் தேவை. (யாக்கோபு 3:13-18) கடவுளிடத்தில் பயபக்தி நமக்கு இருந்தால், பரத்திலிருந்து வரும் ஞானத்தையும், அறிவை சரியான முறையில் பயன்படுத்துவதற்குத் திறமையையும் அவர் நமக்கு அருளுகிறார். (நீதிமொழிகள் 9:10; எபிரெயர் 5:14) ‘ஞானத்திற்குரிய சாந்தத்தை’ காட்டுவது எவ்வாறென அவருடைய வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது. நாம் சாந்தமாக இருப்பதால், சபைக்குரிய சமாதானத்தை முன்னேற்றுவிக்கிறோம். (1 கொரிந்தியர் 8:1, 2) உடன் விசுவாசிகளின் பெரும் போதகராக இருப்பதைப் பற்றி பெருமை பேசுகிற எவரும், தங்களுடைய தற்பெருமையைக் கண்டனம் செய்கிற, கிறிஸ்தவ ‘சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்ச்சொல்வோராக’ இருக்கிறார்கள். (கலாத்தியர் 5:26) அவர்களுடைய “ஞானம்,” ‘லௌகிக சம்பந்தமானது’—கடவுளிடமுள்ள உறவில் வெகுதூரம் விலகியிருக்கும் தொலைவாக்கப்பட்ட பாவிகளான மனிதரின் தன்மை வாய்ந்தது. அது மாம்ச மனச்சாய்வுகளின் விளைவாக இருப்பதனால் ‘ஜென்மசுபாவத்துக்குரியது.’ பொல்லாத ஆவிகள் அகந்தையுடையவையாக இருப்பதால், அது ‘பேய்த்தனத்துக்கடுத்ததாகவும்’ இருக்கிறதே! (1 தீமோத்தேயு 3:6) ஆகையால், அவதூறு, பட்சபாதம் போன்ற ‘துர்க் காரியங்கள்’ தழைத்தோங்குகிற ஒரு சூழ்நிலையை உண்டாக்குவதற்கு ஏதுவான எதையும் நாம் செய்யாதிருக்கும்படி, ஞானத்துடனும் மனத்தாழ்மையுடனும் செயல்படுவோமாக.
20. பரத்திலிருந்து வருகிற ஞானத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்?
20 ‘பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளது,’ ஒழுக்க சம்பந்தமாயும் ஆவிக்குரிய பிரகாரமாயும் நம்மைச் சுத்தமாக்குகிறது. (2 கொரிந்தியர் 7:11) அது ‘சமாதானமுள்ளது,’ சமாதானத்தைத் தொடரும்படி நம்மைத் தூண்டுவிக்கிறது. (எபிரெயர் 12:14) பரத்திலிருந்து வருகிற ஞானம் நம்மை ‘இணக்கமுள்ளவர்களாக,’ ஆக்குகிறது. கொள்கைப் பிடிவாதமுள்ளவர்களாகவும் கையாளுவதற்குக் கடினமானவர்களாகவும் அல்ல. (பிலிப்பியர் 4:5, NW) மேலிருந்து வரும் ஞானம், ‘கீழ்ப்படிவதற்கு ஆயத்தமாயும்’ இருக்கிறது. தேவ போதகத்திற்குக் கீழ்ப்படிவதையும் யெகோவாவின் அமைப்புடன் ஒத்துழைப்பதையும் முன்னேற்றுவிக்கிறது. (ரோமர் 6:17) மேலிருந்து வரும் ஞானம் நம்மை இரக்கமுள்ளவர்களாகவும், பரிவுள்ளவர்களாகவும்கூட ஆக்குகிறது. (யூதா 22, 23) ‘நற்கனிகள்’ நிறைந்ததாக இருப்பதால், அது மற்றவர்களிடமாக அக்கறையையும், நற்குணத்திற்கும் நீதிக்கும் சத்தியத்திற்கும் ஒத்திசைவான செயல்களையும் தூண்டுவிக்கிறது. (எபேசியர் 5:9) சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாக, சமாதானமான நிலைமைகளில் செழித்தோங்குகிற ‘நீதியாகிய கனியை’ நாம் அனுபவித்து மகிழுகிறோம்.
21. யாக்கோபு 2:1–3:18-ன்படி கடவுள் மீதுள்ள நம் விசுவாசம் என்ன செயல்களை நடப்பிக்கும்படி நம்மைத் தூண்டியியக்க வேண்டும்?
21 அப்படியானால், தெளிவாகவே, விசுவாசம் நம்மைச் செயல்படும்படி தூண்டுவிக்கிறது. அது நம்மை பட்சபாதமற்றவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், நற்கிரியைகளில் செயல்படுவோராகவும் ஊக்குவிக்கிறது. நாவை அடக்கி, பரலோக ஞானத்துடன் நடக்கும்படி விசுவாசம் நமக்கு உதவி செய்கிறது. ஆனால் இந்தக் கடிதத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது இது மட்டுமே அல்ல. யெகோவாவில் விசுவாசம் வைத்திருப்போருக்கு ஏற்ற முறையில் நடந்துகொள்ள நமக்கு உதவி செய்யும் மேலுமான அறிவுரையை யாக்கோபு வைத்திருக்கிறார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ பட்சபாதம் காண்பிப்பதில் என்ன தவறு இருக்கிறது?
◻ விசுவாசமும் கிரியைகளும் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கின்றன?
◻ நாவை அடக்குவது ஏன் அவ்வளவு முக்கியமாக இருக்கிறது?
◻ பரத்திலிருந்து வரும் ஞானத்தை எவ்வாறு விவரிப்பீர்கள்?