யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்
‘கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்புகிறேன்.’—ஏசாயா 61:8.
1, 2 (அ) ‘நியாயம்,’ ‘அநியாயம்’ என்ற வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன? (ஆ) யெகோவாவையும் அவருடைய நியாயம் என்ற குணத்தையும் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
நியாயம் என்பது, பாரபட்சமற்ற தன்மை, எது சரி எது தவறு என்ற ஒழுங்கு, ஒழுக்கத்தில் எது நெறிதவறாததாகவும் சரியாகவும் இருக்கிறதோ அதற்கு இசைய செயல்படுவது என்பதாக விவரிக்கப்படுகிறது. அநியாயம் என்பது, அக்கிரமம், தப்பெண்ணம், தீமை, மற்றவர்களை நியாயமின்றி புண்படுத்துவது ஆகியவற்றை உட்படுத்துகிறது.
2 சுமார் 3,500 வருடங்களுக்கு முன்பு சர்வலோகப் பேரரசரான யெகோவாவைப்பற்றி மோசே இவ்வாறு எழுதினார்: “அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்.” (உபாகமம் 32:4) இதற்குப்பின், ஏழுக்கும் அதிகமான நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்புகிறேன்’ என எழுதும்படி ஏசாயாவை கடவுள் வழிநடத்தினார். (ஏசாயா 61:8) பின்னர் முதல் நூற்றாண்டில் பவுல் இவ்வாறு வியந்துரைத்தார்: “தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.” (ரோமர் 9:14) அதே நூற்றாண்டில் பேதுரு இவ்வாறு அறிவித்தார்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) ஆம், “கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்.”—சங்கீதம் 37:28; மல்கியா 3:6.
அநியாயத்தின் ஆதிக்கம்
3. பூமியில் அநியாயம் எப்படித் தலைதூக்கியது?
3 இன்று நியாயம் ஆதிக்கம் செலுத்துவதில்லை. சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருந்தாலும்சரி அநியாய செயல்களுக்கு நாம் பலியாகலாம். நாம் வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், அதிகாரிகளோடு செயல் தொடர்புகொள்கையில் மட்டுமல்ல இன்னும் வேறு வழிகளிலும் அநியாயத்தை எதிர்ப்படலாம்; குடும்பத்தாரும்கூட நம்மை அநியாயமாய் நடத்தலாம். உண்மையில், இத்தகைய அநியாயங்கள் ஏதோ புதிதாகத் தலைதூக்கியவை அல்ல. இவை, நம்முடைய முதல் பெற்றோர் கலகம் செய்து, சட்டத்தை மீறியபோதே மனித குடும்பத்தில் நுழைந்துவிட்டன; இந்த அநியாயங்களை ஊக்கப்படுத்தியவன், பிசாசாகிய சாத்தானாய் மாறிய கலகக்கார ஆவி சிருஷ்டிதான். தங்களுக்கு யெகோவா கொடுத்திருந்த, சுயமாய் தெரிவுசெய்கிற சுதந்திரம் எனும் அருமையான பரிசை ஆதாமும் ஏவாளும் சாத்தானும் தவறாகப் பயன்படுத்தியது உண்மையிலேயே அநியாயமான செயலாகும். அவர்களுடைய தவறான செயல்கள், மனித குலம் முழுவதும் எண்ணற்ற துன்பங்களையும் மரணத்தையும் அனுபவிக்கச் செய்திருக்கின்றன.—ஆதியாகமம் 3:1-6; ரோமர் 5:12; எபிரெயர் 2:14.
4. எவ்வளவு காலமாய் அநியாயம் மனித சரித்திரத்தின் பாகமாய் இருந்திருக்கிறது?
4 ஏதேனில் கலகம் நடந்தது முதற்கொண்டு, சுமார் 6,000 வருடங்களாக அநியாயம் மனித சமுதாயத்தின் பாகமாய் இருந்திருக்கிறது. சாத்தான் இந்த உலகின் கடவுளாய் இருப்பதால் இப்படித்தான் இருக்குமென நாம் நிச்சயம் எதிர்பார்க்கலாம். (2 கொரிந்தியர் 4:4) அவன் பொய்யனும் பொய்யுக்குப் பிதாவாகவும் இருக்கிறான்; யெகோவாவைப் பழிதூற்றுகிறவனாகவும் அவரை எதிர்ப்பவனாகவும் இருக்கிறான். (யோவான் 8:44) அவன் எப்போதும் படுமோசமான விதத்தில் அநியாயத்தை நடப்பிக்கிறான். உதாரணத்திற்கு, நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயம் வருவதற்கு முன்பு சாத்தான் ஓரளவு செல்வாக்கு செலுத்தியதால்தான், “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது . . . அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே” என்பதை கடவுள் கவனித்தார். (ஆதியாகமம் 6:5) அதே போன்ற சூழ்நிலையே இயேசுவின் காலத்திலும் ஆதிக்கம் செலுத்தியது. அதனால்தான், “அந்தந்த நாளுக்கு அதினதின் [அதாவது, அன்றன்றுள்ள] பாடு போதும்” என்று அவர் சொன்னார்; அதாவது, அநியாயம் போன்று கவலை தரும் அன்றன்றுள்ள பிரச்சினைகளைப்பற்றிச் சொன்னார். (மத்தேயு 6:34) எனவே, பைபிள் பின்வருமாறு சரியாகவே சொல்கிறது: “இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.”—ரோமர் 8:22.
5. எப்போதையும்விட இப்போது அதிகளவில் அநியாயங்கள் நடப்பதேன்?
5 இவ்வாறு, படுமோசமான அநியாயத்திற்கு வழிநடத்தும் தீய செயல்கள் மனித சரித்திரம் முழுவதிலும் நிகழ்ந்திருக்கின்றன. இன்றோ நிலைமை என்றுமில்லாதளவுக்கு சீர்கெட்டிருக்கிறது. ஏன்? தேவ பயமற்ற தற்போதைய உலகம், பல பத்தாண்டுகளாக “கடைசி நாட்களில்” இருந்து வருவதாலும், இப்போது உச்சக்கட்டத்தை நெருங்கிவிட்டதாலும், “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களை” இது எதிர்ப்படுகிறது. சரித்திரத்தின் இந்தக் காலக்கட்டத்தில் ஜனங்கள், “தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், . . . நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும்” இருப்பார்கள் என்று பைபிள் முன்னுரைத்தது. (2 தீமோத்தேயு 3:1-5; NW) இதுபோன்ற மோசமான குணங்கள் எல்லா விதமான அநியாயங்களுக்கும் வழி திறக்கின்றன.
6, 7. சமீப காலங்களில் என்னென்ன மாபெரும் அநியாயங்கள் மனித குடும்பத்தை வாட்டி வதைக்கின்றன?
6 கடந்த நூறு ஆண்டுகளில் என்றுமில்லாதளவுக்கு அநியாயம் புரையோடிப்போய் உச்சத்தை எட்டியிருக்கிறது. இதற்கு ஒரு காரணம், இந்த வருடங்களில் பெருமளவு போர்கள் நடந்திருக்கின்றன. உதாரணத்திற்கு, சில சரித்திர ஆசிரியர்களின் கணக்குப்படி, இரண்டாம் உலகப் போரில் மட்டும் சுமார் 5 முதல் 6 கோடி பேர் இறந்திருக்கிறார்கள்; இவர்களில் பெரும்பாலோர், போரில் ஈடுபடாத அப்பாவி ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமே. அந்தப் போர் முடிவுற்றது முதற்கொண்டு, பல்வேறு சண்டை சச்சரவுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்; இப்படிப் பலியானோரில் பெரும்பாலோர் அவற்றில் பங்கேற்காத அப்பாவி மக்களே. இத்தகைய அநியாயங்களை சாத்தான் தூண்டிவிடுகிறான். காரணம்? வெகு சீக்கிரத்தில் யெகோவாவின் கைகளில் படுதோல்வியைச் சந்திக்கவிருப்பதை அவன் அறிந்திருப்பதால் கடுங்கோபத்துடன் இருக்கிறான். பைபிள் தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: ‘பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கியிருக்கிறான்.’—வெளிப்படுத்துதல் 12:12.
7 உலகெங்கும் ஒவ்வொரு வருடமும் ராணுவத்திற்காக சுமார் ஒரு லட்சம் கோடி டாலர் தற்போது செலவிடப்படுகிறது. கோடானுகோடி பேர் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழ்கிறார்கள். இப்படியிருக்க, இந்தப் பணத்தை எல்லாம் சமாதான காரியங்களுக்குப் பயன்படுத்தினால் எவ்வளவு உதவியாய் இருக்குமென சற்று யோசித்துப் பாருங்கள். ஒருபக்கம் சுமார் நூறு கோடி பேர் வயிறார சாப்பிட வழியின்றி தவிக்கிறார்கள், மறுபக்கம் குறைவு என்ற சொல்லுக்கே இடமில்லாமல் ஜனங்கள் எக்கச்சக்கமாய் வைத்திருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் தரும் தகவல்படி, ஒவ்வொரு வருடமும் சுமார் 50 லட்சம் பிள்ளைகள் பசி தாங்காமல் மாண்டுபோகிறார்கள். இது எப்பேர்ப்பட்ட அநியாயம்! இதுமட்டுமா, கருக்கலைப்பு என்ற பெயரில் பழிபாவம் அறியாத சிசுக்கள் கொல்லப்படுவதையும் சற்று எண்ணிப் பாருங்கள். பல்வேறு கணக்கீடுகளின்படி பார்த்தால், ஒவ்வொரு வருடமும் உலகெங்கும் 4 முதல் 6 கோடி உயிர்கள் இவ்வாறு பரிதாபமாய் அழிகின்றனவாம்! எவ்வளவு பயங்கமான அநியாயம்!
8. மனித குலத்திற்கு உண்மையான நியாயம் எப்படி மட்டுமே கிடைக்கும்?
8 இன்று, மனித குலத்தை ஆட்டிப்படைக்கிற பெருமளவு பிரச்சினைகளுக்கு மனித ஆட்சியாளர்களால் தீர்வு காண முடியவில்லை; அவர்கள் முயற்சி செய்தாலும் சூழ்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாது. நம் நாட்களில், “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என்று கடவுளுடைய வார்த்தை முன்னுரைத்தது. (2 தீமோத்தேயு 3:13) நம் அன்றாட வாழ்க்கையின் கட்டமைப்போடு அநியாயம் அந்தளவு பின்னிப்பிணைந்திருப்பதால் மனிதர்களால் அதை நீக்க முடியவில்லை. நியாயத்தின் கடவுளால் மட்டுமே அதை நீக்க முடியும். சாத்தானையும் பேய்களையும் தீய மனிதரையும் அவர் மட்டுமே நீக்க முடியும்.—எரேமியா 10:23, 24.
‘நியாயத்திற்கான’ நியாயமான ஆசை
9, 10. ஆசாப் ஏன் சோர்ந்துபோனார்?
9 உண்மையான நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக மனித விவகாரங்களில் தலையிட்டு கடவுள் ஏற்கெனவே நடவடிக்கை எடுக்காததைக் குறித்து பூர்வத்தில் பைபிள் எழுத்தாளர்கள் சிலரும்கூட யோசித்தார்கள். உதாரணத்திற்கு, பைபிள் காலங்களில் வாழ்ந்த ஆசாப் என்பவரை எடுத்துக்கொள்வோம். சங்கீதம் 73-ன் தலைப்பில் இவருடைய பெயர் காணப்படுகிறது. இந்தப் பெயர், தாவீது ராஜாவின் ஆட்சி காலத்தில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞரை அல்லது இசைக் கலைஞர்களின் குடும்பத்துக்குத் தலைவராய் இருந்தவரைக் குறிப்பதாய் இருக்கலாம். ஆசாப்பும் அவருடைய சந்ததியாரும் இசையமைத்த பல பாடல்கள், வழிபாட்டுக்கு எல்லாரும் கூடிவந்தபோது பயன்படுத்தப்பட்டன. எனினும், தன் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இந்த 73-வது சங்கீதத்தை இயற்றியவர் கடவுளை வழிபடும் விஷயத்தில் சோர்ந்துபோனார். துன்மார்க்கர் செல்வச் செழிப்பில் திளைப்பதைக் கண்டார்; அவர்கள் எந்த மோசமான விளைவுகளையும் சந்திக்காமல் பெரும்பாலும் திருப்தியாய் வாழ்வதுபோல் அவருக்குத் தெரிந்தது.
10 நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.” (சங்கீதம் 73:2-8) எனினும், நாட்கள் உருண்டோடுகையில் அத்தகைய எதிர்மாறான கண்ணோட்டம் தவறானது என்பதை அந்த பைபிள் எழுத்தாளர் மெல்லப் புரிந்துகொண்டார். (சங்கீதம் 73:15, 16) தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள அவர் முயற்சி செய்தார்; ஆனாலும் ஒரு விஷயத்தை அவரால் முழுமையாய் புரிந்துகொள்ள முடியவில்லை; அதாவது, துன்மார்க்கர் தவறு செய்தாலும் தண்டனையைப் பெறாமல் தப்பித்துக்கொள்வதைப் போலவும் நல்லவர்கள் பெரும்பாலும் கஷ்டப்படுவதைப் போலவும் அவருக்குத் தெரிந்தது.
11. எதை சங்கீதக்காரன் புரிந்துகொண்டார்?
11 எனினும், துன்மார்க்கருக்கு வரவிருந்த விளைவை பூர்வத்தில் வாழ்ந்த இந்த உண்மையுள்ள மனிதர் புரிந்துகொண்டார்; அதாவது, கடைசியில் யெகோவா காரியங்களைச் சரிப்படுத்துவார் என்பதைப் புரிந்துகொண்டார். (சங்கீதம் 73:17-19) சங்கீதக்காரனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்.”—சங்கீதம் 37:9, 11, 34.
12. (அ) துன்மார்க்கம், அநியாயம் சம்பந்தமாக யெகோவாவின் நோக்கம் என்ன? (ஆ) அநியாயத்திற்கு வரப்போகிற முடிவைக் குறித்து நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
12 துன்மார்க்கத்தையும் அதற்குத் துணைபோகும் அநியாயங்களையும் இந்த உலகிலிருந்து உரிய நேரத்தில் நீக்கிப்போடுவது யெகோவாவின் நோக்கம்; அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார். இந்த விஷயத்தை, உண்மைத்தன்மையோடு யெகோவாவை சேவித்து வரும் கிறிஸ்தவர்கள்கூட தவறாமல் தங்களுக்கு நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். தம்முடைய சித்தத்திற்கு எதிராகச் செயல்படுகிறவர்களை யெகோவா நீக்கப்போகிறார், அதற்கு இசைவாக வாழ்பவர்களுக்கோ அவர் பலன் அளிக்கப் போகிறார். ‘அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியையும் கந்தகத்தையும் [வருஷிக்கப்பண்ணி] கடுங்கோடைக் கொந்தளிப்பையும் [ஏற்படுத்துவார்] . . . கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்.’—சங்கீதம் 11:4-7.
நியாயம் குடியிருக்கும் புதிய உலகம்
13, 14. புதிய உலகில் நீதியும் நியாயமும் ஏன் எங்கும் நிலவும்?
13 சாத்தானின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த அநியாய உலகை யெகோவா அழிக்கிறபோது சீரும்சிறப்புமிக்க புதிய உலகிற்கு அவர் வழியைத் திறப்பார். இந்தப் புதிய உலகம் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்; இந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படியே தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார். துன்மார்க்கம், அநியாயம் ஆகியவற்றின் இடத்தை நீதியும் நியாயமும் ஏற்கும்; அப்போது, “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என நாம் ஜெபிக்கிற ஜெபத்திற்கு முழு அளவில் பதில் கிடைக்கும்.—மத்தேயு 6:10.
14 எத்தகைய அரசாட்சியை நாம் எதிர்பார்க்கலாமென பைபிள் நமக்குச் சொல்கிறது; இது, நல்லிதயமுள்ள அனைவரும் இப்போது ஆவலோடு எதிர்பார்த்திருக்கிற அரசாட்சியாகும். அப்போது, சங்கீதம் 145:16 முழுமையான அர்த்தத்தில் நிறைவேற்றமடையும்; அது சொல்வதாவது: “நீர் [யெகோவா தேவன்] உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.” அதோடு, ஏசாயா 32:1 இவ்வாறு சொல்கிறது: “இதோ, ஒரு ராஜா [பரலோகத்திலுள்ள கிறிஸ்து இயேசு] நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் [கிறிஸ்துவின் பூமிக்குரிய பிரதிநிதிகளும்] நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.” ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஏசாயா 9:7 பின்வருமாறு முன்னுரைத்தது: “தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்.” அத்தகைய நியாயமிக்க அரசாட்சியிலிருந்து பயன் அடைபவர்களில் ஒருவராக நீங்களும் இருப்பதை மனக்கண்ணில் காண முடிகிறதா?
15. புதிய உலகில் மனித குலத்திற்கு யெகோவா என்னென்ன செய்யப் போகிறார்?
15 கடவுளுடைய புதிய உலகில், பிரசங்கி 4:1-ல் காணப்படும் வார்த்தைகளைச் சொல்ல நமக்கு அவசியமே இருக்காது: “நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை;ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.” நீதி குடியிருக்கும் அந்தப் புதிய உலகம் எந்தளவு அதிசயிக்க வைப்பதாய் இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க நம் அபூரண மனங்களுக்குக் கடினமாய் இருக்கும் என்பது உண்மைதான். சுவடு தெரியாமல் தீமை நீக்கப்பட்டிருக்கும், ஒவ்வொரு நாளும் எண்ணற்ற நற்செயல்கள் நடக்கும். தீமையான அனைத்தையும் நிச்சயம் யெகோவா சரிசெய்வார்; நம் எதிர்பார்ப்புகளை எல்லாம் மிஞ்சும் விதத்தில் அதை அவர் செய்வார். பின்வருமாறு எழுதும்படி யெகோவா தேவன் அப்போஸ்தலன் பேதுருவை வழிநடத்தியது எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்”!—2 பேதுரு 3:13.
16. எந்த அர்த்தத்தில் ‘புதிய வானங்களும்,’ ‘புதிய பூமியும்’ இன்றே ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லலாம்?
16 ‘புதிய வானங்கள்’ அதாவது, கிறிஸ்து அரசாளுகிற கடவுளுடைய பரலோக அரசாங்கம் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மைதான். ‘புதிய பூமி,’ அதாவது, புதிய உலக சமுதாயத்தின் மையக்கருவாய் இருக்கப்போகும் நல்மனம் படைத்தவர்கள் இந்தக் கடைசி நாட்களில் கூட்டிச் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள், சுமார் 235 நாடுகளில், ஏறக்குறைய 1,00,000 சபைகளில், கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் ஏற்கெனவே இருக்கிறார்கள். இந்த லட்சக்கணக்கானோர் யெகோவாவுடைய நீதியான, நியாயமான வழிகளைக் கற்று வருகிறார்கள்; இதனால், உலகெங்கும் கிறிஸ்தவ அன்பால் பிணைக்கப்பட்ட ஐக்கியத்தை ருசிக்கிறார்கள். அவர்களது ஐக்கியம் உலக சரித்திரத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கதாய் இருக்கிறது, அது இன்றும் நிலைத்திருக்கிறது; இது, சாத்தானின் குடிமக்கள் அனுபவிக்கிற எதைக் காட்டிலும் மேலானது. இத்தகைய அன்பும் ஐக்கியமும், வரவிருக்கிற கடவுளுடைய புதிய உலகில் நீதியும் நியாயமும் நிலவும் பொற்காலத்தின் முற்காட்சியே.—ஏசாயா 2:2-4; யோவான் 13:34, 35; கொலோசெயர் 3:14.
தோல்வியைத் தழுவும் சாத்தானின் தாக்குதல்
17. யெகோவாவுடைய ஜனங்கள் மீதான சாத்தானின் இறுதித் தாக்குதல் ஏன் வெற்றி பெறாது?
17 யெகோவாவை வழிபடுபவர்களை முற்றிலும் அழித்துப் போடுவதற்கு சாத்தானும் அவனைச் சேர்ந்தவர்களும் சீக்கிரத்தில் வருவார்கள். (எசேக்கியேல் 38:14-23) அது, “உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம்” என இயேசு குறிப்பிட்ட அந்தச் சமயத்தில் நடக்கும். (மத்தேயு 24:21) சாத்தானின் தாக்குதல் வெற்றி பெறுமா? வெற்றி பெறாது. கடவுளுடைய வார்த்தை பின்வருமாறு நமக்கு உறுதி அளிக்கிறது: “கர்த்தர் [அதாவது, யெகோவா] நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:28, 29.
18. (அ) தம்முடைய ஜனங்கள்மீது சாத்தான் நடத்தவிருக்கிற தாக்குதலின்போது கடவுள் எப்படிப் பிரதிபலிப்பார்? (ஆ) நியாயம் வெற்றி சிறப்பதைப்பற்றி பைபிள் தரும் தகவலைச் சிந்தித்துப் பார்ப்பது உங்களுக்கு ஏன் பயனுள்ளதாய் இருந்திருக்கிறது?
18 யெகோவாவின் ஊழியர்களை சாத்தானும் அவனுடைய கூட்டத்தாரும் தாக்குவது, அவர்களுடைய ஆணவமிக்க இறுதித் தாக்குதலாய் இருக்கும். சகரியாமூலம் யெகோவா இவ்வாறு முன்னுரைத்தார்: “உங்களைத் தொடுகிறவன் அவருடைய [அதாவது, யெகோவாவுடைய] கண்மணியைத் தொடுகிறான்.” (சகரியா 2:8) இது, ஒருவர் யெகோவாவுடைய கண்மணியைத் தொடுவதற்கு தன் விரலை நீட்டுவதைப் போல் உள்ளது. அப்போது அவர் உடனடியாகச் செயல்படுவார், இருந்த இடம் தெரியாதபடி அவர்களை அழித்துவிடுவார். யெகோவாவின் ஊழியர்கள் மட்டுமே பூமியில் மிகுந்த அன்பும், ஐக்கியமும் சமாதானமும் மிக்க ஜனங்களாகவும் சட்டத்திற்கு முழுமையாய் கீழ்ப்படிகிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, இவர்களைத் தாக்குவது துளிகூட சரியில்லை, அநியாயமான செயலாகும். ‘நியாயத்தை விரும்புவதில்’ சிகரமாய் திகழும் யெகோவா இதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார். தம் ஜனத்துக்காக அவர் நடவடிக்கை எடுக்கும்போது, அவர்களுடைய எதிரிகள் நித்திய அழிவைச் சந்திப்பார்கள், நியாயம் வெற்றி சிறக்கும், ஒன்றான மெய் கடவுளை வழிபடுபவர்கள் இரட்சிப்பைப் பெறுவார்கள். வியப்பையும், சிலிர்ப்பையும் ஏற்படுத்தும் எப்பேர்ப்பட்ட சம்பவங்கள் சீக்கிரத்திலேயே அடுத்தடுத்து நிகழவிருக்கின்றன!—நீதிமொழிகள் 2:21, 22.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• அநியாயம் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்துவது ஏன்?
• பூமியில் நிலவும் அநியாயம் எனும் பிரச்சினைக்கு யெகோவா எப்படி முடிவு கட்டுவார்?
• நியாயம் வெற்றி சிறப்பதைப் பற்றிய இந்தப் படிப்புக் கட்டுரையில் எது உங்கள் நெஞ்சைத் தொட்டிருக்கிறது?
[பக்கம் 23-ன் படம்]
ஜலப்பிரளயத்திற்கு முன்பு அக்கிரமம் பெருகியிருந்தது, இந்தக் ‘கடைசி நாட்களிலும்’ மிகுந்திருக்கிறது
[பக்கம் 24, 25-ன் படம்]
கடவுளுடைய புதிய உலகில் துன்மார்க்கத்திற்குப் பதிலாக நியாயமும் நீதியும் நிலவும்