இளைஞர்களே—பெற்றோரின் இதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறீர்களா, சஞ்சலப்படுத்துகிறீர்களா?
“என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை” என்று வயதுசென்ற அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (3 யோவான் 4) இந்த பைபிள் வசனத்தில் பிள்ளைகள் என்று சொல்லப்பட்டிருப்பது கிறிஸ்தவ சீஷர்களையே குறிக்கிறது; இருந்தாலும், யோவான் சொன்னதன் கருத்தை கடவுள் பயமுள்ள பெற்றோர் எளிதில் புரிந்துகொள்கிறார்கள். ஆம், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்துவதுபோல, பிள்ளைகளும் தங்கள் பெற்றோரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.
பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரின் இதயத்தை எந்தளவு பாதிக்கக்கூடும் என்பதைப்பற்றி இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் அறிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 10:1) எனவே, தங்களுடைய செயல்கள் எவ்வாறெல்லாம் தங்கள் அப்பா அம்மாவைப் பாதிக்கும் என்பதை எல்லா பிள்ளைகளுமே, ஏன் பெரியவர்களும்கூட சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
கடவுள் பயமுள்ள உங்கள் பெற்றோர் உங்களை எப்படியெல்லாம் சீராட்டி பாராட்டி வளர்த்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! நீங்கள் பிறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே உங்கள்மீது அக்கறைகொள்ள ஆரம்பித்தார்கள், உங்களுக்காக ஜெபிக்கவும் ஆரம்பித்தார்கள். நீங்கள் பிறந்த பின்னரோ, உங்களுடன் நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொண்டார்கள். பிள்ளையை வளர்க்கும் அந்த அருமையான அதே சமயத்தில் முக்கியமான வாய்ப்புக்காகவும் பொறுப்புக்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவித்திருப்பார்கள். ஒரு சின்னஞ்சிறு கைக்குழந்தையைக் கவனிக்க வேண்டிய பொறுப்பை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்; யெகோவாவின் வணக்கத்தினராக, அதை முக்கியமானதாக அவர்கள் கருதினார்கள்.
உங்களுடைய பெற்றோர் உண்மை கிறிஸ்தவர்களாய் இருப்பதனால், நம்பகமான வழிநடத்துதலுக்காக பைபிளையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் அலசினார்கள். பிள்ளைகளை வளர்த்த அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அதோடு, தங்கள் கவலைகளை ஜெபத்தில் கடவுளிடம் தெரிவித்துக்கொண்டும் இருந்தார்கள். (நியாயாதிபதிகள் 13:8) நீங்கள் வளர வளர, உங்களுடைய குறைநிறைகளை அறிந்துகொண்டார்கள். (யோபு 1:5) டீனேஜ் பருவத்தில் புதிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். அவ்வப்போது, நீங்கள் அடங்காப்பிடாரியாக நடந்திருக்கலாம்; அப்போது, உங்கள் பரலோக தகப்பனாகிய யெகோவாவை வணங்கும் ஒருவராக நீங்கள் தொடர்ந்து இருப்பதற்கு உங்கள் பெற்றோர் அதிகமதிகமாக ஜெபித்தார்கள், ஆழ்ந்து படித்தார்கள், கருத்தூன்றி சிந்தித்தார்கள்.
ஓர் அப்பா அம்மாவுக்குரிய உணர்வுகள் உங்களுடைய பெற்றோருக்கு எப்போதுமே இருக்கிறது. நீங்கள் வளர்ந்துவிட்ட பிறகும்கூட உங்கள் ஆன்மீக நலனிலும் மனம், உடல், உணர்ச்சி சம்பந்தப்பட்ட நலனிலும் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். என்றாலும், உங்களை வளர்க்கும்போதும்சரி நீங்கள் வளர்ந்துவிட்ட பிறகும்சரி, உங்களுக்கு சுயமாக தெரிவு செய்யும் திறமை இருப்பதை பெற்றோர் எப்போதுமே நினைவில் வைத்திருக்கிறார்கள்; அதோடு உங்களுடைய வாழ்க்கை எப்படிப்பட்டதாக அமையும் என்பதற்கு தாங்கள் உத்தரவாதமுள்ளவர்கள் அல்ல என்பதையும் அறிந்திருக்கிறார்கள். எனவே எந்த வழியைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவாகத் தீர்மானிப்பது உங்களுடைய கையில்தான் இருக்கிறது.
அப்படியானால், தங்கள் பிள்ளைகள் “சத்தியத்திலே நடக்கிறார்கள்” என்று கேள்விப்படும்போது, பெற்றோருக்கு “அதிகமான சந்தோஷம்” கிடைக்கிறது என்பது உண்மை அல்லவா? அதற்கு எதிர்மாறாய் நடப்பது பெற்றோருக்குச் சந்தோஷம் அளிக்காது என்பதும் உண்மை அல்லவா? ஆம், முட்டாள்தனமாக நடக்கிற பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குச் சஞ்சலத்தையே உண்டாக்குகிறார்கள். சாலொமோன் இவ்வாறு குறிப்பிட்டார்: “மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன்.” (நீதிமொழிகள் 17:25) ஒரு பிள்ளை, மெய்க் கடவுளை வணங்குவதை விட்டுவிலகிப் போகும்போது பெற்றோர் எவ்வளவு மனமுடைந்து போகிறார்கள்!
இளைஞராகிய உங்களால் குடும்பத்திலும்சரி வெளியிலும்சரி பெரும் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. உங்களுடைய நடத்தை உங்கள் பெற்றோரின் இதயத்தைச் சந்தோஷப்படுத்தலாம் அல்லது சஞ்சலப்படுத்தலாம். கடவுளையும் அவருடைய நியமங்களையும் நீங்கள் ஒதுக்கித் தள்ளினால், உங்களுடைய பெற்றோர் வேதனைப்படுவார்கள். இதற்கு நேர்மாறாக, நீங்கள் யெகோவாவுக்கு உண்மையுள்ளவராகவும் கட்டுப்பட்டவராகவும் இருந்தால் உங்களுடைய பெற்றோர் மகிழ்வார்கள். உங்கள் பெற்றோரின் இதயத்தைச் சந்தோஷப்படுத்த திடத்தீர்மானமாய் இருங்கள்! உங்களை வளர்த்து, அரவணைத்து, அன்பு பாராட்டி வருகிறவர்களுக்கு அதைவிடச் சிறந்த பரிசை உங்களால் கொடுக்க முடியுமா என்ன?