அதிகாரம் 44
வெளிப்படுத்துதலும் நீங்களும்
1. (அ) வெளிப்படுத்துதலின் அதிசயமான எல்லா வாக்குகளையுங் குறித்து அந்தத் தூதன் யோவானுக்கு மறுபடியுமான என்ன உறுதியைக் கொடுக்கிறார்? (ஆ) “நான் சீக்கிரமாய் வருகிறேன்,” என்று சொல்பவர் யார், அவர் எப்பொழுது ‘வருகிறார்’?
புதிய எருசலேமைப் பற்றிய இந்த மகிழ்ச்சிநிரம்பிய விவரிப்பை வாசித்தப்பின் பின்வருமாறு கேட்கும்படி நீங்கள் ஒருவேளை தூண்டுவிக்கப்படலாம்: ‘இவ்வளவு அதிசயமான ஒன்று உண்மையில் நடைபெறுமா?’ இந்தக் கேள்விக்கு யோவான், அந்தத் தூதன் அடுத்தபடியாகச் சொல்லும் வார்த்தைகளை அறிவிப்பதன்மூலம் பதிலளிக்கிறார்: “அவன் என்னிடம் சொன்னதாவது: ‘இந்த வார்த்தைகள் உண்மையும் சத்தியமுமானவை; ஆம், தீர்க்கதரிசிகளின் ஏவப்பட்ட வார்த்தைகளின் கடவுளாகிய யெகோவா சீக்கிரத்தில் நடைபெறவேண்டிய காரியங்களைத் தம்முடைய அடிமைகளுக்குக் காட்டும்படி தம்முடைய தூதனை அனுப்பினார். இதோ! நான் சீக்கிரமாய் வருகிறேன். இந்தப் புஸ்தகச்சுருளின் தீர்க்கதரிசன வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எவனும் மகிழ்ச்சியுள்ளவன்.’” (வெளிப்படுத்துதல் 22:6, 7, NW) வெளிப்படுத்துதலின் அதிசயமான இந்த எல்லா வாக்குகளும் மெய்யாக நிறைவேற்றப்படும்! அந்தத் தூதன் இயேசுவின் பெயரில் பேசி, இயேசு விரைவில், “சீக்கிரமாய்” வருகிறாரென அறிவிக்கிறார். இது யெகோவாவின் சத்துருக்களை அழித்து, வெளிப்படுத்துதலின் மகத்தான மற்றும் மகிழ்ச்சியான உச்சக்கட்டத்தைக் கொண்டுவருவதற்கு “திருடனைப்போல்” வரும் இயேசுவின் வருகையாக இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 16:15, 16) ஆகையால், நாம், அந்தச் சமயத்தில் மகிழ்ச்சியுள்ளோராகத் தீர்க்கப்படுவதற்கு “இந்தப் புத்தகச்சுருள்” ஆகிய வெளிப்படுத்துதலின் வார்த்தைகளுக்கு நம்முடைய வாழ்க்கையை ஒத்திசைவிக்க வேண்டும்.
2. (அ) வெளிப்படுத்துதலின் நிறைவுக்கு யோவான் எவ்வாறு பிரதிபலிக்கிறார், தூதன் அவருக்கு என்ன சொல்கிறார்? (ஆ) “வேண்டாம், வேண்டாம்,” “கடவுளையே வணங்கு” என்ற அந்தத் தூதனின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
2 வெளிப்படுத்துதலின் இத்தகைய நிறைவுக்குப் பின், யோவான் மீறிய உணர்ச்சியில் ஆழ்த்தப்பட்டவரானது விளங்கத்தக்கதே: “இவற்றையெல்லாம் கண்டுங் கேட்டும் வந்தவன் யோவானாகிய நானே. நான் கண்டு கேட்டபோது இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அவனோ: வேண்டாம், வேண்டாம்! உன்னோடும் தீர்க்கதரிசிகளாகிய உன் சகோதரரோடும் இந்தப் புத்தகத்தின் [புஸ்தகச்சுருளின், NW] வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரனே; கடவுளையே வணங்கு என்றான்.” (வெளிப்படுத்துதல் 22:8, 9, தி.மொ.; வெளிப்படுத்துதல் 19:10-ஐ ஒத்துப்பாருங்கள்.) தேவதூதர்களை வணங்க வேண்டாமென்று இருமுறை கூறப்பட்ட இந்த எச்சரிக்கை யோவானின் நாளில் சமயோசிதமாக இருந்தது, அப்போது சிலர் அத்தகைய வணக்கத்தைப் பின்பற்றினரென அல்லது தூதர்களிடமிருந்து தனிப்பட்ட வெளிப்படுத்துதல்களைப் பெற்றதாக உரிமைபாராட்டினரெனத் தெரிகிறது. (1 கொரிந்தியர் 13:1; கலாத்தியர் 1:8; கொலோசெயர் 2:18) இன்று, கடவுள் ஒருவரை மாத்திரமே வணங்க வேண்டுமென்ற உண்மையை இது முக்கியப்படுத்திக் காட்டுகிறது. (மத்தேயு 4:10) தூய்மையான வணக்கத்தை வேறு எவரையாயினும் அல்லது எதையாயினும் வணங்கும் வணக்கத்தைக்கொண்டு நாம் அசுத்தப்படுத்தக்கூடாது.—ஏசாயா 42:5, 8.
3, 4. அந்தத் தூதன் தொடர்ந்து யோவானுக்கு என்ன சொல்கிறார், அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் அவருடைய வார்த்தைகளுக்கு எவ்வாறு கீழ்ப்படிந்திருக்கின்றனர்?
3 யோவான் தொடர்ந்து கூறுவதாவது: “பின்னும் அவ[ர்] என்னிடம்: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகளை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபம். அநீதன் இன்னும் அநீதனாகவே இருக்கட்டும்; அசங்கியன் இன்னும் அசங்கியனாகட்டும்; நீதிமான் இன்னும் நீதியையே செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தனாகட்டும் [என்றார்].”—வெளிப்படுத்துதல் 22:10, 11, தி.மொ.
4 அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் இன்று அந்தத் தூதனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள். அந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர்கள் முத்திரை போடவில்லை. சீயோனின் உவாட்ச் டவரும் கிறிஸ்து வந்திருப்பதன் அறிவிப்பும் (ஆங்கிலம்) (ஜூலை 1879) என்பதன் முதல் வெளியீடுதானே வெளிப்படுத்துதலின் பல வசனங்களின்பேரில் விளக்கக் குறிப்புகளைக் கொடுக்கத் தொடங்கியது. நம்முடைய முதல் அதிகாரத்தில் கவனித்தபடி, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்துவந்த ஆண்டுகளினூடே வெளிப்படுத்துதலின்பேரில் அறிவொளியூட்டும் மற்றப் புத்தகங்களை பிரசுரித்திருக்கிறார்கள். இப்பொழுது நாங்கள், சத்தியத்தை நேசிப்போர் யாவரின் கவனத்தையும் வெளிப்படுத்துதலின் வல்லமைவாய்ந்த தீர்க்கதரிசனங்களுக்கும் அவற்றின் நிறைவேற்றத்துக்கும் மறுபடியும் கவனத்தைக் கவர்ந்திழுக்கிறோம்.
5. (அ) வெளிப்படுத்துதலின் எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் புறக்கணிக்கவே ஆட்கள் தெரிந்து கொண்டால் என்ன செய்வது? (ஆ) மனத்தாழ்மையும் நீதியுமுள்ளோரின் பிரதிபலிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
5 வெளிப்படுத்துதலின் எச்சரிக்கைகளையும் அறிவுரைகளையும் புறக்கணிக்கவே ஆட்கள் விரும்பினால், அவ்வாறு செய்யட்டும்! “அநீதன் இன்னும் அநீதனாகவே இருக்கட்டும்.” கட்டுப்பாடற்ற இந்தச் சகாப்தத்தின் இழி ஒழுக்கத்தில் புரண்டுகொண்டிருப்போர் அதையே விரும்பித் தெரிந்துகொண்டால் அந்த அசங்கியத்தில் சாகலாம். சீக்கிரத்தில், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள், மகா பாபிலோன் அழிக்கப்படுவதோடு தொடங்கி, முழு முடிவாக நிறைவேற்றப்படும். மனத்தாழ்மையுள்ள ஆட்கள் தீர்க்கதரிசியின் பின்வரும் வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதில் விடாமுயற்சியுடன் இருப்பார்களாக: “அவரைத் [யெகோவாவை] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செப்பனியா 2:3, தி.மொ.) யெகோவாவுக்கு ஏற்கெனவே ஒப்புக்கொடுத்திருப்போரைக் குறித்ததில், “நீதிமான் இன்னும் நீதியையே செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தனாகட்டும்.” பாவத்திலிருந்து வரும் தற்காலிகமான எந்த லாபமும், நீதியையும் பரிசுத்தத்தையும் நாடித்தொடருவோர் அனுபவித்து மகிழவிருக்கிற நிலையான ஆசீர்வாதங்களுக்கு ஒப்பாகாதென ஞானமுள்ளவர்கள் அறிவார்கள். பைபிள் பின்வருமாறு சொல்கிறது: “நீங்கள் விசுவாசத்தில் நிலைக்கிறீர்களோவென்று உங்களை நீங்களே [தொடர்ந்து, NW] சோதித்தறியுங்கள். உங்களையே [தொடர்ந்து, NW] பரீட்சித்துப் பாருங்கள்.” (2 கொரிந்தியர் 13:5, தி.மொ.) நீங்கள் தெரிந்துகொண்டு நிலைத்திருக்கும் போக்கின் அடிப்படையின்பேரில் உங்கள் பலனைப் பெறுவீர்கள்.—சங்கீதம் 19:9-11; 58:10, 11.
6. தீர்க்கதரிசனத்தில் கடைசி தடவையாக வெளிப்படுத்துதலின் வாசகர்களை நோக்கித் தாம் பேசுகையில் யெகோவா என்ன சொல்கிறார்?
6 நித்தியத்தின் ராஜாவாகிய யெகோவா, இந்தத் தீர்க்கதரிசனத்தில் கடைசி தடவையாக வெளிப்படுத்துதலின் வாசகர்களை நோக்கி இப்பொழுது பேசுகிறார்: “இதோ, சீக்கிரம் வருகிறேன், ஒவ்வொருவனுக்கும் அவனவன் செய்கைகளின்படி நான் அளிக்கும் பலன் என்னோடிருக்கிறது. நானே அல்பா ஓமேகா, முதலும் இறுதியுமானவர், ஆதி அந்தம். ஜீவவிருட்சத்து அனுபவ பாத்தியதையுள்ளவர்களாவதற்கும் வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுக்கிறவர்கள் பாக்கியர். வெளியே இருப்பவர்கள் நாய்கள் மாந்திரியக்காரர் விபசாரக்காரர் கொலைபாதகர் விக்கிரகாராதனைக்காரர் பொய்யில் பிரியப்பட்டு அதைச் செய்கிற யாவருமாகிய இவர்களே.”—வெளிப்படுத்துதல் 22:12-15, தி.மொ.
7. (அ) எதற்கு யெகோவா “சீக்கிரம் வருகி”றார்? (ஆ) ஏன் கிறிஸ்தவமண்டல பாதிரிமாருக்குப் புதிய எருசலேமில் எந்தப் பங்கும் இராது?
7 மறுபடியும் ஒருமுறை, யெகோவா தேவன் தம்முடைய நித்திய அரசாட்சியையும் தாம் முதல் நோக்கங்கொள்பவற்றைக் கடைசியாகச் செய்துமுடிப்பாரென்ற உண்மையையும் அறிவுறுத்துகிறார். நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற அவர் “சீக்கிரம் வருகி”றார், உள்ளார்வ ஊக்கத்துடன் அவரைத் தேடுவோருக்குப் பலனளிப்பார். (எபிரெயர் 11:6) யார் பலனளிக்கப்படுவர், யார் தள்ளப்படுவரென்பதை அவருடைய தராதரங்கள் தீர்மானிக்கின்றன. யெகோவா இங்கே விவரிக்கிற கடுங்குற்றங்களைக் கிறிஸ்தவமண்டல பாதிரிமார் கண்டுங்காணாததுபோலிருந்து, ‘ஊமை நாய்களைப்போல்’ நடந்திருக்கின்றனர். (ஏசாயா 56:10-12; மேலும் உபாகமம் 23:18, துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பையும் பாருங்கள்.) நிச்சயமாகவே, அவர்கள் பொய்க் கோட்பாடுகளையும் பிடிவாதக் கொள்கைகளையும் ‘பிரியப்பட்டு செய்து,’ அந்த ஏழு சபைகளுக்கு இயேசு கொடுத்த அறிவுரைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டிருக்கிறார்கள். ஆகையால், புதிய எருசலேமில் அவர்களுக்கு எந்தப் பங்கும் கிடையாது.
8. (அ) யார் மாத்திரமே ‘ஜீவவிருட்சங்களிடம் செல்’கின்றனர், இதன் உட்பொருள் என்ன? (ஆ) திரள் கூட்டத்தார் எவ்வாறு ‘தங்கள் அங்கிகளை . . . தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்,’ அவர்கள் எவ்வாறு சுத்தமான நிலைநிற்கையைக் காத்து வைக்கின்றனர்?
8 யெகோவாவின் கண்களில் சுத்தமாயிருக்கும்படி உண்மையில் “தங்கள் அங்கிகளைத் தோய்த்து வெளுக்கிற” அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மாத்திரமே ‘ஜீவவிருட்சங்களிடம் செல்வதற்கு’ சிலாக்கியமளிக்கப்படுகின்றனர். அதாவது, அவர்கள் தங்கள் பரலோக ஸ்தானத்தில் அழியாமைக்குரிய வாழ்க்கைக்கு உரிமையும் தகுதியும் பெறுகின்றனர். (ஒத்துப்பாருங்கள்: ஆதியாகமம் 3:22-24; வெளிப்படுத்துதல் 2:7; 3:4, 5.) மனிதர்களாக அவர்கள் மரித்தப் பின்பு, உயிர்த்தெழுப்பப்படுவதன்மூலம் புதிய எருசலேமுக்குள் பிரவேசிக்கும்படி அனுமதிக்கப்படுகிறார்கள். அந்த 12 தூதர்களும் அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர், அதேசமயத்தில் பரலோக நம்பிக்கை உடையோராக உரிமைபாராட்டிக்கொள்கிறபோதிலும் பொய்களை அல்லது தூய்மைக்கேட்டைப் பழக்கமாய் நடப்பிக்கிற எவரையும் உட்பிரவேசியாதபடி தடுத்து வெளியில் வைக்கின்றனர். பூமியிலுள்ள திரள் கூட்டத்தாரும் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்,” எனவே தங்கள் சுத்தமான நிலைநிற்கையை காத்து வரவேண்டும். யெகோவா இங்கே எச்சரிக்கை செய்யும் கடுங்குற்றங்களைத் தவிர்ப்பதாலும், இயேசு சபைகளுக்குக் கொடுத்த அவருடைய ஏழு செய்திகளில் அடங்கியுள்ள அறிவுரைகளை இருதயத்தில் ஏற்று நடப்பதன்மூலமும் இதை அவர்களால் செய்ய முடியும்.—வெளிப்படுத்துதல் 7:14; 2 மற்றும் 3 அதிகாரங்கள்.
9. இயேசு என்ன வார்த்தைகளைப் பேசுகிறார், அவருடைய செய்தியும் வெளிப்படுத்துதல் முழுமையும் முக்கியமாய் யார் பொருட்டு கொடுக்கப்பட்டன?
9 யெகோவா பேசினபின்பு இயேசு பேசுகிறார். வெளிப்படுத்துதலை வாசிக்கும் நேர்மையான இருதயமுள்ளோருக்கு ஊக்கமூட்டும் வார்த்தைகளை அவர் பேசி, பின்வருமாறு சொல்லுகிறார்: “சபைகளின்பொருட்டு இவற்றை உங்களுக்குச் சாட்சியமாகக் கூறுவதற்கு இயேசுவாகிய நான் என் தூதனையனுப்பினேன்; நானே தாவீதின் வேரும் சந்ததியுமாம்; பிரகாசமுள்ள விடிவெள்ளியும் நானே.” (வெளிப்படுத்துதல் 22:16, தி.மொ.) ஆம், இந்த வார்த்தைகள் முக்கியமாய் ‘சபைகளின்பொருட்டு’ கொடுக்கப்பட்டன. இது முதன்முதலில், பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபைக்காகக் கொடுக்கப்பட்ட ஒரு செய்தி. வெளிப்படுத்துதலிலுள்ள எல்லாம் புதிய எருசலேமில் வாழப்போகிற, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நோக்கியே முக்கியமாய்ப் பேசப்பட்டது. அந்தச் சபையின் மூலமாக, திரள் கூட்டமும் இந்த மதிப்புவாய்ந்த தீர்க்கதரிசன சத்தியங்களைப் புரிந்துகொள்ளும்படி சிலாக்கியம் பெறுகிறது.—யோவான் 17:18-21.
10. இயேசு ஏன் தம்மை இவ்வாறு அழைத்தார்: (அ) ‘தாவீதின் வேரும் சந்ததியும்’ ஆனவர்? (ஆ) “பிரகாசமுள்ள விடிவெள்ளி”?
10 வெளிப்படுத்துதலை யோவானுக்கும் அவர்மூலம் சபைக்கும் தெரிவிக்கும்படி இயேசு கிறிஸ்து பொறுப்பளிக்கப்பட்டார். இயேசு ‘தாவீதின் வேரும் சந்ததியுமாக’ இருக்கிறார். மாம்சத்தின்படி அவர் தாவீதின் வம்சாவளியில் தோன்றினார், இவ்வாறு யெகோவாவினுடைய ராஜ்யத்தின் அரசராக இருப்பதற்குத் தகுதிபெற்றிருக்கிறார். அவர் தாவீதின் “நித்திய பிதா”வும் ஆவார், இவ்வாறு தாவீதின் “வேர்” ஆகிறார். (ஏசாயா 9:6; 11:1, 10) அவர் தாவீதின் வம்சாவளியில், அழியாமையுடைய நிலையான அரசராக இருந்து, யெகோவா தாவீதுடன் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுகிறார், மேலும் மோசேயின் நாளில் முன்னறிவிக்கப்பட்ட “பிரகாசமுள்ள விடிவெள்ளி”யாகவும் இருக்கிறார். (எண்ணாகமம் 24:17; சங்கீதம் 89:34-37) பகல் தொடங்கும்படிச் செய்து உதிக்கும் அந்த “விடிவெள்ளி”யாக அவர் இருக்கிறார். (2 பேதுரு 1:19) பெரிய சத்துருவாகிய மகா பாபிலோனின் எல்லா தந்திர சூழ்ச்சிகளும் இந்த மகிமையான உதித்தலைத் தடுக்க முடியாமற்போய்விட்டன.
“வா”! என்பானாக
11. எந்தத் தடையற்ற பொது அழைப்பை இப்பொழுது யோவான் கொடுக்கிறார், யார் இதை ஏற்கலாம்?
11 இப்போது யோவான்தானே பேசுவதற்கான முறை. தான் கண்டும் கேட்டவையுமான எல்லாவற்றிற்காகவும் நன்றிமதித்துணர்வால் பொங்கிவழியும் இருதயத்திலிருந்து, அவர் குரலெழுப்பி பின்வருமாறு கூறுகிறார்: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) மீட்கும் கிரயமான இயேசுவினுடைய பலியின் நன்மைகள் 1,44,000 பேருக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்படா, ஏனெனில் தடையற்ற பொது அழைப்பு இங்கே கொடுக்கப்படுகிறது. யெகோவாவின் உந்துவிக்கும் ஆவி இந்த மணவாட்டி வகுப்பாரின்மூலம் செயல் நடப்பிக்கிறது, ஆகவே: “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்ற இந்தச் செய்தி எல்லாத் தெளிவுடனும் யாவரறிய தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. (இவற்றையும் பாருங்கள்: ஏசாயா 55:1; 59:21.) நீதிக்காகத் தாகங்கொண்டுள்ள எவரும் ‘வர’வும் யெகோவாவின் இலவச தாராள அளிப்பிலிருந்து பெற்றுக்கொள்ளவும் அழைக்கப்படுகிறார்கள். (மத்தேயு 5:3, 6) அபிஷேகஞ்செய்யப்பட்ட யோவான் வகுப்பாரின் இந்த அழைப்புக்குச் செவிகொடுத்து ஏற்கும் எதிர்கால பூமிக்குரிய வகுப்பார் யாவரும் எத்தகைய சிலாக்கியமுள்ளவர்கள்!
12. வெளிப்படுத்துதல் 22:17-ல் உள்ள இந்த அழைப்புக்குத் திரள் கூட்டத்தார் எவ்வாறு செவிகொடுக்கின்றனர்?
12 1930-ன் பத்தாண்டுகளினுடைய தொடக்கப் பகுதியிலிருந்து, பெருகிக்கொண்டேயிருக்கும் எண்ணிக்கையான இந்தத் திரள் கூட்டத்தார் ‘கேட்கிறவர்களாக’—இந்த அழைப்புக்குக் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அபிஷேகஞ்செய்யப்பட்ட தங்கள் உடன் அடிமைகளைப்போல், இவர்கள் யெகோவாவுக்கு முன்பாக ஒரு சுத்த நிலைநிற்கையை அடைந்திருக்கிறார்கள். மனிதவர்க்கத்துக்கு ஆசீர்வாதங்கள் சென்றெட்டும்படிச் செய்ய புதிய எருசலேம் பரலோகத்திலிருந்து இறங்கப்போகிற அந்தக் காலத்துக்காக அவர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். வெளிப்படுத்துதலின் எழுப்புதலான செய்தியைக் கேட்டதனால், இந்தத் திரள் கூட்டத்தார் ‘வா!’ என்று சொல்வதுமட்டுமல்லாமல் முயற்சியுடன் செயல்பட்டு மற்றவர்களை யெகோவாவின் அமைப்புக்குக் கூட்டிச்சேர்த்து: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்” என்று சொல்லும்படி அவர்களையும் பயிற்றுவிக்கிறார்கள். ஆகவே, 60,00,000-க்கு மேற்பட்ட இந்தத் திரள் கூட்டத்தார், பூமி முழுவதிலும் 235 நாடுகளில்: “ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்” என்ற அழைப்பை, 8,700-க்குக் குறைவுபடும் அபிஷேகஞ்செய்யப்பட்ட மணவாட்டி வகுப்பாரோடு சேர்ந்து கொடுத்து வருகையில், அவர்களுடைய எண்ணிக்கைத் தொடர்ந்து பெருகிக்கொண்டிருக்கிறது.
13. என்ன எச்சரிக்கையை இயேசு கொடுக்கிறார்?
13 அடுத்தபடியாக, இயேசுவே மறுபடியும் பேசி, பின்வருமாறு சொல்கிறார்: “இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார்.”—வெளிப்படுத்துதல் 22:18, 19.
14. வெளிப்படுத்துதலின் ‘இந்தத் தீர்க்கதரிசனத்தை’ யோவான் வகுப்பார் எவ்வாறு கருதுகின்றனர்?
14 யோவான் வகுப்பைச் சேர்ந்தவர்கள் வெளிப்படுத்துதலின் ‘இந்தத் தீர்க்கதரிசனத்துக்குக்’ கவனம் செலுத்த வைக்க வேண்டும். அவர்கள் அதை மறைத்து வைக்கவோ அதோடு கூட்டவோ கூடாது. அதன் செய்தி யாவரறிய, “வீடுகளின்மேல் நின்று” பிரசங்கிக்கப்பட வேண்டும். (மத்தேயு 10:27, தி.மொ.) வெளிப்படுத்துதல் கடவுளால் ஏவப்பட்டிருக்கிறது. கடவுள்தாமே பேசினதும் இப்பொழுது ஆட்சிசெய்யும் அரசரான, இயேசு கிறிஸ்துவின் மூலம் அனுப்பியதுமான இதிலிருந்து ஒரு வார்த்தையையாகிலும் மாற்ற யார் துணிகரங்கொள்வான்? நிச்சயமாகவே, அத்தகைய ஓர் ஆள் ஜீவனை நாடித் தேடுவதில் தோல்வியுற்று இழந்துபோவதற்கும் மகா பாபிலோனின்மீதும் இந்த முழு உலகத்தின்மீதும் வரவேண்டிய வாதைகளை அனுபவிக்கவும் தகுதியுள்ளவனாக இருப்பான்.
15. தாம் “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்” என்றதும் “நான் சீக்கிரமாய் வருகிறேன்” என்றதுமான இயேசுவின் வார்த்தைகளினுடைய உட்கருத்து என்ன?
15 இயேசு இப்பொழுது ஊக்கமூட்டும் ஒரு கடைசி கூற்றைச் சேர்க்கிறார்: “இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார்.” (வெளிப்படுத்துதல் 22:20அ) இயேசுவே “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி.” (வெளிப்படுத்துதல் 3:14) வெளிப்படுத்துதலின் தரிசனங்களுக்கு அவர் சாட்சி பகர்ந்தால், அவை நிச்சயமாக உண்மையாயிருக்க வேண்டும். அவரும் யெகோவா தேவன்தாமேயும் தாங்கள் “சீக்கிரமாய்,” அல்லது விரைவில் வரவிருக்கிற இந்த உண்மையைத் திரும்பத்திரும்ப அறிவுறுத்துகின்றனர், இங்கே இயேசு ஐந்தாவது தடவையாக அதைச் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 2:16; 3:11; 22:7, 12, 20) இந்த ‘வருகை’ அந்த மகா வேசியின்மீதும், அரசியல் “ராஜாக்கள்”மீதும், “நம்முடைய கர்த்தருக்கும், [யெகோவாவுக்கும், NW] அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யத்தை” எதிர்க்கிற மற்ற எல்லாரின்மீதும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கேயாகும்.—வெளிப்படுத்துதல் 11:15; 16:14, 16; 17:1, 12-14.
16. யெகோவா தேவனும் இயேசுவும் சீக்கிரம் வருகிறார்கள் என்பதை அறிந்து, என்ன திடத்தீர்மானமான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்?
16 யெகோவா தேவனும் இயேசுவும் சீக்கிரமாய் வருகிறார்களென்பதை நீங்கள் அறிவது “யெகோவாவினுடைய நாளின் வந்திருத்தலை மனதில் நெருங்க” வைத்துக்கொண்டிருக்கும்படி உங்களை ஊக்குவிக்க வேண்டும். (2 பேதுரு 3:12, NW) வெளித்தோற்றத்துக்குத் திடநிலையிலிருப்பதாகத் தோன்றும் சாத்தானின் காரிய ஒழுங்குமுறைக்குரிய இந்தப் பூமியிலுள்ள எதுவும் போலித்தோற்ற ஏமாற்றமே. சாத்தான் ஆதிக்கத்தின்கீழுள்ள உலகப்பிரகாரமான அதிபதிகளாலாகிய வானம் பெறக்கூடிய வெளித்தோற்றமான வெற்றி நிலையாது அழிபவையே. இந்தக் காரியங்கள் ஒழிந்துபோகின்றன. (வெளிப்படுத்துதல் 21:1) நிலைபேறான ஒன்றை யெகோவாவிலும், இயேசு கிறிஸ்துவின்கீழுள்ள அவருடைய ராஜ்யத்திலும், அவருடைய வாக்குக்கொடுக்கப்பட்ட புதிய உலகத்திலும் மாத்திரமே காணலாம். இதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்!—1 யோவான் 2:15-17.
17. யெகோவாவின் பரிசுத்தத்தைப் பற்றிய உங்கள் மதித்துணர்வு உங்களை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
17 அவ்வாறெனில், வெளிப்படுத்துதலை நீங்கள் படித்ததிலிருந்து கற்றவை உங்கள் வாழ்க்கையை மிக ஆழ்ந்தமுறையில் பாதிக்கும்படி நீங்கள் அனுமதிப்பீர்களாக. யெகோவாவின் பரலோக சமுகத்துக்குள் நீங்கள் கணநேரம் பார்வைச் செலுத்தினது நம்முடைய சிருஷ்டிகரின் மட்டற்ற உயர் மகிமையும் பரிசுத்தமும் உங்கள் மனதை ஆழமாய்ப் பாதித்ததல்லவா? (வெளிப்படுத்துதல் 4:1–5:14) இத்தகைய கடவுளைச் சேவிப்பது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்! அவருடைய பரிசுத்தத்தை நீங்கள் மதித்துணருவது, அந்த ஏழு சபைகளுக்குக் கொடுத்த இயேசுவின் அறிவுரையை வெகு கருத்துடன் ஏற்கும்படியும் பொருளாசை, விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, குளிரும் அனலுமற்றத்தன்மை, விசுவாசதுரோகக் கட்சி மனப்பான்மை அல்லது உங்கள் சேவையை யெகோவாவுக்கு ஏற்கத்தகாததாக்கக்கூடிய வேறு எதையும் தவிர்க்கும்படியும் உங்களைத் தூண்டுவதாக. (வெளிப்படுத்துதல் 2:1–3:22) யோவான் வகுப்பாருக்குப் பேசப்பட்ட அப்போஸ்தலன் பேதுருவின் பின்வரும் வார்த்தைகள், நியமத்தில் திரள் கூட்டத்தாருக்கும் பொருந்துகின்றன: “உங்களை அழைத்த பரிசுத்தருக்கு ஒத்தபடி நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராகுங்கள்.”—1 பேதுரு 1:15, 16, தி.மொ.
18. எதில் நீங்கள் உங்களால் கூடிய முழு பங்குகொள்ள வேண்டும், இந்த வேலை ஏன் இன்று மிக அவசரமானது?
18 மேலுமாக, “யெகோவாவின் அநுக்கிரக வருஷத்தையும் நமது கடவுள் பழிவாங்கும் நாளையும்” யாவரறிய அறிவிக்கையில் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தால் நீங்கள் தூண்டியியக்கப்படுவீர்களாக. (ஏசாயா 35:4; 61:2, தி.மொ.) நீங்கள் சிறு மந்தையைச் சேர்ந்தவராயினும் அல்லது திரள் கூட்டத்தைச் சேர்ந்தவராயினும், சாத்தான் உலகத்தின்மீது கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளைத் தெரிவிப்பதாகிய, யெகோவாவின் கோபாக்கினையின் ஏழு கலசங்களை ஊற்றுவதை விளம்பரப்படுத்துவதில், உங்களால் கூடிய மிக முழுமையான பங்கை உடையோராக இருப்பீர்களாக. அதே சமயத்தில், யெகோவாவினுடையதும் அவருடைய கிறிஸ்துவினுடையதுமான ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப்பற்றிய இந்த நித்திய நற்செய்தியை யாவரறிய செய்யும் இந்த மகிழ்ச்சிகரமான அறிவிப்புக்கு உங்கள் குரலைப் பயன்படுத்துங்கள். (வெளிப்படுத்துதல் 11:15; 14:6, 7) இந்த வேலையில் அவசரமாக ஈடுபடுங்கள். நாம் கர்த்தருடைய நாளில் இருக்கிறோமென்ற உணர்வு, யெகோவாவை இன்னும் சேவியாதிருக்கும் பலரை, நற்செய்தியை யாவரறிய அறிவிக்கும் வேலையில் சேர்ந்துகொள்ளும்படி தூண்டுவிப்பதாக. மேலும் இவர்கள், முழுக்காட்டுதலைக் கருத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுப்பதை நோக்கிப் படிப்படியாய் முன்னேறுவார்களாக. “குறிக்கப்பட்ட காலம் சமீபமாயுள்ளது” என்பதை நினைவில் வையுங்கள்!—வெளிப்படுத்துதல் 1:3, NW.
19. முதிர்வயதினராயிருந்த அப்போஸ்தலன் யோவானின் முடிவான வார்த்தைகள் யாவை, இவற்றிற்கு நீங்கள் எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்?
19 இவ்வாறு, யோவானுடன் நாம் ஊக்கமாய் ஜெபிக்கிறோம்: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.” முதிர்வயதினராயிருந்த அப்போஸ்தலன் யோவான் மேலும் சொல்கிறார்: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தகுதியற்றத் தயவு பரிசுத்தவான்களோடு இருப்பதாக.” (வெளிப்படுத்துதல் 22:20ஆ, 21, NW) இந்தப் பிரசுரத்தை வாசிக்கும் உங்கள் எல்லாரோடுங்கூட இது இருப்பதாக. உளங்கனிந்த “ஆமென்”! என்பதில் நீங்களும் எங்களைச் சேர்ந்துகொள்ளும்படி, வெளிப்படுத்துதலின் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்திருக்கிறதென்ற விசுவாசம் உங்களுக்கு இருப்பதாக.
[பக்கம் 314-ன் படம்]
“வெளியே இருப்பவர்கள் நாய்கள் . . . ”
[பக்கம் 315-ன் படம்]
‘அதன் வாசல்கள்வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவோர் மகிழ்ச்சியுள்ளோர்’