உபாகமம்
23 பின்பு அவர், “விரை நசுக்கப்பட்ட அல்லது ஆணுறுப்பு அறுக்கப்பட்ட எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+
2 முறைகேடாகப் பிறந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவனுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.
3 அம்மோனியனும் மோவாபியனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்க முடியாது.+ அவர்களுடைய வம்சத்தார் யாருமே, அவன் பத்தாம் தலைமுறையைச் சேர்ந்தவனாக இருந்தாலும், யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கவே முடியாது. 4 ஏனென்றால், நீங்கள் எகிப்திலிருந்து வரும் வழியில் அவர்கள் உங்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்து உதவி செய்யவில்லை.+ அதுமட்டுமல்ல, உங்களைச் சபிக்கச் சொல்லி, மெசொப்பொத்தாமியா பகுதியிலுள்ள பெத்தூரைச் சேர்ந்த பெயோரின் மகனாகிய பிலேயாமுக்குக் கூலி கொடுத்தார்கள்.+ 5 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா பிலேயாமின் வேண்டுதலைக் கேட்கவில்லை.+ அதற்குப் பதிலாக, உங்கள் கடவுளாகிய யெகோவா அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாக மாற்றினார்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை நேசித்தார்.+ 6 அவர்களுடைய நிம்மதிக்காகவோ சந்தோஷத்துக்காகவோ நீங்கள் எதையும் எப்போதும் செய்யக் கூடாது.+
7 ஏதோமியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் அவன் உங்களுடைய சகோதரன்.+
எகிப்தியனை நீங்கள் வெறுக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் அவனுடைய தேசத்தில் குடியிருந்தீர்கள்.+ 8 அவர்களுடைய மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த எவனும் யெகோவாவின் சபையில் ஒருவனாக இருக்கலாம்.
9 விரோதிகளுக்கு எதிராகப் போர் செய்ய நீங்கள் முகாம்போட்டிருக்கும் சமயத்தில், எந்த விதத்திலும் தீட்டுப்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.+ 10 ராத்திரியில் விந்து வெளியேறியதால் உங்களில் ஒருவன் தீட்டுப்பட்டிருந்தால்,+ முகாமுக்கு வெளியே அவன் போக வேண்டும், முகாமுக்குள் திரும்பி வரக் கூடாது. 11 ஆனால், அவன் சாயங்காலத்தில் குளித்துவிட்டு, சூரியன் மறைந்தவுடன் முகாமுக்குள் வரலாம்.+ 12 மலஜலம் கழிப்பதற்காக முகாமுக்கு வெளியே ஒரு இடத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு, அங்குதான் நீங்கள் போக வேண்டும். 13 ஆயுதங்களோடு ஒரு சிறிய தடியையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டும். அந்தத் தடியால் குழிதோண்டி மலஜலம் கழித்துவிட்டு மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். 14 உங்களைக் காப்பாற்றுவதற்காகவும் எதிரிகளை உங்கள் கையில் கொடுப்பதற்காகவும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் முகாமுக்குள் நடந்துகொண்டிருக்கிறார்.+ அதனால், உங்கள் முகாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ இல்லாவிட்டால், உங்கள் நடுவில் அருவருப்பான எதையாவது பார்த்து அவர் உங்களைவிட்டு விலகிப் போய்விடுவார்.
15 ஒரு அடிமை தன் எஜமானிடமிருந்து தப்பித்து உங்களிடம் வந்தால், அவனை அந்த எஜமானிடம் ஒப்படைக்கக் கூடாது. 16 உங்களுடைய நகரம் ஒன்றில் அவனுக்குப் பிடித்த இடத்தில் அவன் உங்களுடன் வாழலாம். நீங்கள் அவனைக் கொடுமைப்படுத்தக் கூடாது.+
17 இஸ்ரவேலைச் சேர்ந்த எந்த ஆணும் பெண்ணும் கோயிலில் விபச்சாரம் செய்கிறவர்களாக இருக்கக் கூடாது.+ 18 விபச்சாரம் செய்கிற ஒரு ஆணோ பெண்ணோ தனக்குக் கிடைத்த கூலியை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவரக் கூடாது. தான் நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற அந்தக் கூலியைப் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், அவர்களையும் அவர்களுக்குக் கிடைத்த கூலியையும் உங்கள் கடவுளாகிய யெகோவா அருவருக்கிறார்.
19 உங்கள் சகோதரனிடம் நீங்கள் வட்டி வாங்கக் கூடாது.+ கடனாகக் கொடுத்த பணத்துக்காகவும் உணவுக்காகவும் வேறெந்தப் பொருளுக்காகவும் வட்டி வாங்கக் கூடாது. 20 மற்ற தேசத்தைச் சேர்ந்தவனிடம் நீங்கள் வட்டி வாங்கலாம்,+ ஆனால் உங்கள் சகோதரனிடம் வட்டி வாங்கக் கூடாது.+ அப்போதுதான், நீங்கள் சொந்தமாக்கிக்கொள்கிற தேசத்தில் நீங்கள் செய்வதையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+
21 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு எதையாவது கொடுப்பதாக நேர்ந்துகொண்டால்,+ அதைக் கொடுக்கத் தாமதிக்காதீர்கள்.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா அதை நிச்சயம் உங்களிடம் கேட்பார். நீங்கள் அதை நிறைவேற்றாவிட்டால் பாவம் செய்தவர்களாக இருப்பீர்கள்.+ 22 நீங்கள் எதையும் நேர்ந்துகொள்ளாமல் இருந்தால், உங்களுக்குப் பாவம் இல்லை.+ 23 சொன்ன சொல்லை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.+ உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நீங்களாகவே விருப்பப்பட்டு எதையாவது பலி செலுத்துவதாக நேர்ந்துகொண்டால், அதை நீங்கள் நிறைவேற்ற வேண்டும்.+
24 நீங்கள் மற்றவனின் திராட்சைத் தோட்டத்துக்குள் போனால், ஆசைதீர திராட்சைப் பழங்களைச் சாப்பிடலாம். ஆனால், அதில் ஒன்றைக்கூட உங்கள் கூடையில் எடுத்துக்கொள்ளக் கூடாது.+
25 நீங்கள் இன்னொருவரின் வயலுக்குப் போனால், அங்குள்ள கதிர்களைக் கைகளால் பிடுங்கிச் சாப்பிடலாம். ஆனால், அரிவாளால் வெட்டி எடுத்துக்கொள்ளக் கூடாது”+ என்றார்.