படிப்புக் கட்டுரை 3
வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டமான மக்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் புகழ்கிறார்கள்!
“சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற எங்கள் கடவுளாலும் ஆட்டுக்குட்டியானவராலும்தான் எங்களுக்கு மீட்பு கிடைக்கும்.”—வெளி. 7:10.
பாட்டு 99 பூமியின் புதிய ராஜாவைப் புகழ்வோம்
இந்தக் கட்டுரையில்...a
1. அமெரிக்காவில் 1935-ல் நடந்த மாநாட்டில் கொடுக்கப்பட்ட பேச்சைக் கேட்ட பிறகு ஓர் இளைஞர் எதைப் புரிந்துகொண்டார்?
1926-ல், 18 வயது இளைஞர் ஒருவர் ஞானஸ்நானம் எடுத்தார். அவருடைய அப்பா அம்மா பைபிள் மாணாக்கர்களாக இருந்தார்கள். (யெகோவாவின் சாட்சிகள் அப்போது இப்படித்தான் அழைக்கப்பட்டார்கள்.) தங்களுடைய மூன்று மகன்களையும் இரண்டு மகள்களையும் கடவுள் பக்தியுள்ள பிள்ளைகளாக வளர்த்தார்கள். அதனால், அவர்களும் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள். இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள். அன்றிருந்த பைபிள் மாணாக்கர்கள் எல்லாரும் நினைவு நாள் நிகழ்ச்சியில் ரொட்டியை சாப்பிட்டார்கள், திராட்சமதுவைக் குடித்தார்கள். இந்த இளைஞரும் அப்படித்தான் செய்துவந்தார். ஆனால், 1935-ல் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பேச்சைக் கேட்டதற்குப் பிறகு, தன்னுடைய எதிர்கால நம்பிக்கையைப் பற்றி முக்கியமான ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார். “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என்பதுதான் அந்தப் பேச்சின் தலைப்பு. அமெரிக்காவில் இருக்கிற வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த ஒரு மாநாட்டில் சகோதரர் ரதர்ஃபர்ட் அந்தப் பேச்சைக் கொடுத்தார். அந்த மாநாட்டில் எந்த விஷயம் தெளிவானது?
2. சகோதரர் ரதர்ஃபர்ட் தன்னுடைய பேச்சில் என்ன சொன்னார்?
2 வெளிப்படுத்துதல் 7:9-ல் சொல்லப்பட்டிருக்கிற “திரளான கூட்டமாகிய ஜனங்கள்”, [தமிழ் O.V (BSI)] அதாவது “திரள் கூட்டமான மக்கள்,” யார் என்பதைத் தன்னுடைய பேச்சில் சகோதரர் ரதர்ஃபர்ட் விளக்கினார். இந்தத் திரள் கூட்டமான மக்கள், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைவிட விசுவாசத்தில் குறைவுபட்டவர்கள் என்றும், இவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள் என்றும், ஆனால் ராஜாக்களாக ஆட்சி செய்கிற வாய்ப்பு இவர்களுக்குக் கிடைக்காது என்றும் பைபிள் மாணாக்கர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு புதிய விளக்கத்தை சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்தார். அதாவது, திரள் கூட்டமான மக்கள் பரலோகத்துக்குப் போவதற்காகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், இவர்கள் கிறிஸ்துவின் வேறே ஆடுகள்b என்றும் வசனங்களைப் பயன்படுத்தி விளக்கினார். அதோடு, இவர்கள் “மிகுந்த உபத்திரவத்திலிருந்து” தப்பித்து பூமியில் முடிவில்லாத வாழ்க்கை வாழ்வார்கள் என்றும் அவர் சொன்னார். (வெளி. 7:14) “இந்தத் தொழுவத்தைச் சேராத வேறே ஆடுகளும் எனக்கு இருக்கின்றன. அவற்றையும் நான் கொண்டுவர வேண்டும், அவை என்னுடைய குரலைக் கேட்கும். அப்போது, அவை ஒரே மேய்ப்பரின் கீழ் ஒரே மந்தையாகும்” என்று இயேசு வாக்கு கொடுத்திருந்தார். (யோவா. 10:16) பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையுள்ள யெகோவாவின் உண்மை ஊழியர்கள்தான் இந்த வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள். (மத். 25:31-33, 46) ரதர்ஃபர்டின் பேச்சைக் கேட்ட பிறகு, இந்த இளைஞர் உட்பட பைபிள் மாணாக்கர்களில் நிறைய பேர் தங்களுக்கு வேறு விதமான எதிர்கால நம்பிக்கை இருப்பதைப் புரிந்துகொண்டார்கள்.—சங். 97:11; நீதி. 4:18.
புது விளக்கமும் பைபிள் மாணாக்கர்களும்
3-4. அமெரிக்காவில் 1935-ல் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் எதைப் புரிந்துகொண்டார்கள், எப்படி அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது?
3 “பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள எல்லாரும் தயவு செய்து எழுந்து நிற்கிறீர்களா?” என்று ரதர்ஃபர்ட் கேட்டபோது, மாநாட்டில் கலந்துகொண்ட எல்லாரும் புல்லரித்துப் போய்விட்டார்கள். கிட்டத்தட்ட 20,000 பேரில், பாதிக்கும் அதிகமானவர்கள் எழுந்து நின்றதாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருவர் சொன்னார். பிறகு, “இதோ இந்தத் திரள் கூட்டத்தைப் பாருங்கள்!” என்று சகோதரர் ரதர்ஃபர்ட் சொன்னார். உடனே அரங்கமே அதிரும் அளவுக்கு எல்லாரும் கை தட்டினார்கள். எழுந்து நின்றவர்கள், தாங்கள் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஏனென்றால், கடவுளுடைய சக்தியால் தாங்கள் அபிஷேகம் செய்யப்படவில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அடுத்த நாள் மாநாட்டில் 840 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள்தான்.
4 அந்தப் பேச்சைக் கேட்ட பிறகு, ஏற்கெனவே பார்த்த அந்த இளைஞரும் ஆயிரக்கணக்கான மற்றவர்களும் நினைவு நாள் நிகழ்ச்சியில் ரொட்டியைச் சாப்பிடவும் இல்லை திராட்சமதுவைக் குடிக்கவும் இல்லை. ஒரு சகோதரர் மனத்தாழ்மையோடு இப்படிச் சொன்னார்: “1935-ல நடந்த நினைவு நாள் நிகழ்ச்சிலதான் நான் கடைசியா ரொட்டிய சாப்பிட்டு திராட்சமதுவ குடிச்சேன். யெகோவா தன்னோட சக்தியின் மூலமா என்னை பரலோகத்துக்கு தேர்ந்தெடுக்கலங்குறத புரிஞ்சிக்கிட்டேன். இந்த பூமியில என்னென்னைக்கும் வாழ்ற வாய்ப்பு எனக்கு இருக்குங்குறதயும், இத பூஞ்சோலையா மாத்துறதுல எனக்கும் ஒரு பங்கு இருக்குங்குறதயும் நான் புரிஞ்சிக்கிட்டேன்.” இந்தச் சகோதரரைப் போல்தான் நிறைய பேர் உணர்ந்தார்கள். (ரோ. 8:16, 17; 2 கொ. 1:21, 22) அன்றுமுதல், திரள் கூட்டமான மக்களுடைய எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் மீதியாக இருப்பவர்களோடு சேர்ந்து இவர்கள் உழைத்து வருகிறார்கள்.
5. ரொட்டியை சாப்பிடுவதையும் திராட்சமதுவைக் குடிப்பதையும் நிறுத்திவிட்டவர்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார்?
5 1935-க்குப் பிறகு, நினைவு நாள் நிகழ்ச்சியில் ரொட்டியைச் சாப்பிடுவதையும் திராட்சமதுவைக் குடிப்பதையும் நிறைய பேர் நிறுத்திவிட்டார்கள். இன்று நம்முடைய நாட்களிலும், தாங்கள் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் ரொட்டியை சாப்பிட்டும் திராட்சமதுவைக் குடித்தும் இருக்கிறார்கள். ஆனால், தாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிறகு அப்படிச் செய்வதை நிறுத்தியிருக்கிறார்கள். (1 கொ. 11:28) இவர்கள் எல்லாரைப் பற்றியும் யெகோவா என்ன நினைக்கிறார்? தவறாகப் புரிந்துகொண்டதால் சிலர் இப்படிச் செய்திருக்கிறார்கள். ஆனால், தங்களுடைய தவறை உணர்ந்து ரொட்டியை சாப்பிடுவதையும் திராட்சமது குடிப்பதையும் நிறுத்தினால்... யெகோவாவுக்குத் தொடர்ந்து உண்மையாக சேவை செய்தால்... இவர்களை வேறே ஆடுகளில் ஒருவராக யெகோவா நினைப்பார். ரொட்டியை சாப்பிடுவதையும் திராட்சமதுவைக் குடிப்பதையும் இவர்கள் நிறுத்திவிட்டாலும், நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். ஏனென்றால், யெகோவாவும் இயேசுவும் தங்களுக்கு செய்த எல்லாவற்றுக்கும் இவர்கள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள்.
அருமையான எதிர்கால நம்பிக்கை
6. தேவதூதர்களுக்கு இயேசு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?
6 மிகுந்த உபத்திரவம் வரப்போகிற இந்தச் சமயத்தில், அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் பற்றியும் வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டமான மக்களைப் பற்றியும் வெளிப்படுத்துதல் 7-வது அதிகாரம் என்ன சொல்கிறது என்று யோசித்துப்பார்ப்பது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். பூமியில் இருக்கிற அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு கடைசி முத்திரை போடப்படும்வரை, அதாவது அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று யெகோவாவால் ஏற்றுக்கொள்ளப்படும்வரை, நாசப்படுத்துகிற நான்கு காற்றுகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டிருக்கும்படி தேவதூதர்களுக்கு இயேசு கட்டளை கொடுத்திருக்கிறார். (வெளி. 7:1-4) உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்துவோடு சேர்ந்து ராஜாக்களாகவும் குருமார்களாகவும் பரலோகத்தில் சேவை செய்வார்கள். (வெளி. 20:6) இதைப் பார்க்கும்போது யெகோவாவும் இயேசுவும் தேவதூதர்களும் ரொம்ப சந்தோஷப்படுவார்கள்!
7. வெளிப்படுத்துதல் 7:9, 10-ன்படி யோவான் யாரைப் பார்க்கிறார், அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? (அட்டைப் படம்)
7 ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவை செய்கிற 1,44,000 பேரைப் பற்றி சொன்ன பிறகு, அர்மகெதோனிலிருந்து தப்பிக்கிற ‘திரள் கூட்டமான மக்களையும்’ யோவான் பார்க்கிறார். ஆனால் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் போல், திரள் கூட்டமான மக்களில் குறிப்பிட்ட எண்ணிக்கை கிடையாது. (வெளிப்படுத்துதல் 7:9, 10-ஐ வாசியுங்கள்.) சாத்தானுடைய உலகத்தால் “கறைபடாமல்,” கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உண்மையோடு இருந்ததால், இவர்கள் “வெள்ளை உடைகளை” போட்டுக் கொண்டிருப்பதாக இந்த வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. (யாக். 1:27) யெகோவாவாலும் ஆட்டுக்குட்டியானவரான இயேசுவாலும்தான் தங்களுக்கு மீட்பு கிடைத்தது என்று அவர்கள் உரத்த குரலில் சொல்கிறார்கள். அதோடு, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இயேசுதான் யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜா என்பதை சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வதை இது குறிக்கிறது.—யோவான் 12:12, 13-ஐ ஒப்பிடுங்கள்.
8. தேவதூதர்கள் என்ன செய்வதாக வெளிப்படுத்துதல் 7:11, 12 சொல்கிறது?
8 வெளிப்படுத்துதல் 7:11, 12-ஐ வாசியுங்கள். திரள் கூட்டமான மக்களைப் பார்த்தவுடன் தேவதூதர்கள் சந்தோஷ ஆரவாரம் செய்வதையும் கடவுளைப் புகழ்வதையும் ஒரு தரிசனத்தில் யோவான் பார்க்கிறார். மிகுந்த உபத்திரவத்தில் திரள் கூட்டமான மக்கள் தப்பித்து வரும்போது, இதில் சொல்லப்பட்டிருக்கிற சம்பவம் நிறைவேறும்.
9. திரள் கூட்டமான மக்கள் என்ன செய்துவருவதாக வெளிப்படுத்துதல் 7:13-15 சொல்கிறது?
9 வெளிப்படுத்துதல் 7:13-15-ஐ வாசியுங்கள். திரள் கூட்டமான மக்கள், ‘தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கியிருக்கிறார்கள்’ என்று யோவான் சொல்கிறார். அவர்கள் சுத்தமான மனசாட்சியைப் பெற்றுக்கொண்டதையும், யெகோவாவை சந்தோஷப்படுத்துகிற விதத்தில் நடந்துகொண்டதையும் இது குறிக்கிறது. (ஏசா. 1:18) இவர்கள் தங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்த கிறிஸ்தவர்கள். இயேசுவின் மீட்புப் பலியில் அசைக்க முடியாத விசுவாசம் வைத்தவர்கள். யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொண்டவர்கள். (யோவா. 3:36; 1 பே. 3:21) அதனால், கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பு ‘இரவும் பகலும் [இந்தப் பூமியில்] அவருக்குப் பரிசுத்த சேவை’ செய்யும் தகுதியை இவர்கள் பெறுகிறார்கள். இவர்கள் தங்களுடைய விருப்பத்துக்கு முதலிடம் தராமல் கடவுளுடைய சேவைக்கு முதலிடம் தருகிறார்கள். இப்போது நடந்துவருகிற சீஷராக்கும் வேலையின் பெரும்பாலான பாகத்தை இவர்கள் செய்கிறார்கள்.—மத். 6:33; 24:14; 28:19, 20.
10. திரள் கூட்டமான மக்கள் எதில் உறுதியாக இருக்கலாம், எந்த வாக்குறுதி நிறைவேறுவதை அவர்கள் பார்ப்பார்கள்?
10 மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்து வருகிற திரள் கூட்டமான மக்கள், கடவுள் தங்களைக் கவனித்துக்கொள்வார் என்பதில் உறுதியாக இருக்கலாம். ஏனென்றால், “சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர் இவர்களைப் பாதுகாப்பார்” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, வேறே ஆடுகள் ரொம்ப காலமாக எதிர்பார்த்து காத்திருந்த இந்த வாக்குறுதியும் நிறைவேறும்: “அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளி. 21:3, 4.
11-12. (அ) திரள் கூட்டமான மக்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் காத்திருப்பதாக வெளிப்படுத்துதல் 7:16, 17 சொல்கிறது? (ஆ) வேறே ஆடுகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு என்ன செய்கிறார்கள், அப்படிச் செய்ய அவர்களை எது தூண்டுகிறது?
11 வெளிப்படுத்துதல் 7:16, 17-ஐ வாசியுங்கள். பணப் பற்றாக்குறையாலோ உள்நாட்டுக் கலவரத்தாலோ போராலோ யெகோவாவின் சாட்சிகள் சிலருக்குப் போதுமான சாப்பாடு கிடைப்பதில்லை. வேறுசிலர், விசுவாசத்தோடு இருந்ததற்காக சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த உலகத்துக்கு வரப்போகிற அழிவிலிருந்து தப்பித்த பிறகு, சாப்பாட்டுக்கும் சரி யெகோவாவிடமிருந்து கிடைக்கிற அறிவுரைகளுக்கும் சரி, பஞ்சமே இருக்காது என்பது அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். இந்த உலகத்தை யெகோவா அழிக்கும்போது தன்னுடைய கோபம் என்ற ‘உஷ்ணத்தால்’ ஜனங்களைத் தாக்குவார். அப்போது, திரள் கூட்டமான மக்கள் காப்பாற்றப்படுவார்கள். மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பித்த இவர்களை முடிவில்லாத “வாழ்வு தரும் நீரூற்றுகளிடம்” இயேசு வழிநடத்துவார். இதைக் கொஞ்சம் நினைத்துப்பாருங்கள்: இந்தப் பூமியில் இதுவரைக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து இறந்து போயிருக்கிறார்கள். ஆனால், திரள் கூட்டமான மக்களுக்கு சாகாமல் வாழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது!—யோவா. 11:26.
12 வேறே ஆடுகளும் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் கடவுளையும் கிறிஸ்துவையும் புகழ்வதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அதில் ஒரு வழி, நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது! வேறே ஆடுகள் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், இவர்களையும் பரலோகத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களையும் யெகோவா சமமாகத்தான் பார்க்கிறார். யெகோவாவும் இயேசுவும் தங்களுக்குக் கொடுத்திருக்கிற எதிர்கால நம்பிக்கைக்காக வேறே ஆடுகள் ரொம்ப நன்றியோடு இருக்கிறார்கள்.
நினைவு நாள் நிகழ்ச்சியில் யெகோவாவையும் இயேசுவையும் புகழுங்கள்
13-14. நினைவு நாள் நிகழ்ச்சியில் வேறே ஆடுகள் ஏன் கலந்துகொள்கிறார்கள்?
13 சமீப வருஷங்களாக, நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் கிட்டத்தட்ட ஆயிரத்தில் ஒருவர்தான் ரொட்டியை சாப்பிட்டு திராட்சமதுவைக் குடிக்கிறார். பெரும்பாலான சபைகளில், அப்படிப்பட்டவர்கள் யாருமே இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் நிறைய பேருக்குப் பூமியில் வாழும் நம்பிக்கைதான் இருக்கிறது. அப்படியென்றால், இவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்? இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: பொதுவாக, மக்கள் எதற்காக கல்யாணத்துக்குப் போகிறார்கள்? மணமகனுக்கும் மணமகளுக்கும் நம்முடைய அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்காகத்தானே? அதேபோல், நினைவு நாள் நிகழ்ச்சியில் நாம் கலந்துகொள்வது, கிறிஸ்துவுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் நமது அன்பையும் ஆதரவையும் காட்டுவதற்காகத்தான்! அதோடு, இயேசுவின் மீட்புப் பலிக்கு நன்றி காட்டுவதற்காகவும் வேறே ஆடுகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அந்தப் பலியின் மூலம்தான் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை அவர்களுக்குக் கிடைக்கிறது.
14 வேறே ஆடுகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது. உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு இரவு விருந்தை இயேசு ஆரம்பித்துவைத்தபோது, “என் நினைவாக இதைச் செய்துகொண்டிருங்கள்” என்று சொன்னார். (1 கொ. 11:23-26) அதனால், அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் இந்தப் பூமியில் இருக்கும்வரை, வேறே ஆடுகள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அதோடு, இதில் கலந்துகொள்வதற்கு மற்றவர்களையும் அழைப்பார்கள்.
15. நினைவு நாள் நிகழ்ச்சியில் கடவுளையும் கிறிஸ்துவையும் நாம் எப்படிப் புகழலாம்?
15 நினைவு நாள் நிகழ்ச்சியில் பாட்டு பாடி ஜெபம் செய்வதன் மூலம் கடவுளையும் கிறிஸ்துவையும் நாம் புகழ்கிறோம். “கடவுளும் கிறிஸ்துவும் உங்களுக்காகச் செய்த தியாகத்துக்கு நன்றி காட்டுங்கள்!” என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சியில் ஒரு பேச்சு கொடுக்கப்படும். யெகோவாவுக்கும் கிறிஸ்துவுக்கும் இன்னும் அதிக நன்றியைக் காட்ட இந்தப் பேச்சு உதவும். ரொட்டியும் திராட்சமதுவும் கடத்தப்படும்போது, ரொட்டி இயேசுவின் உடலையும் திராட்சமது அவருடைய இரத்தத்தையும் குறிக்கிறது என்ற விஷயம் நம்முடைய ஞாபகத்தில் வந்துபோகும். நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய மகனை யெகோவா தியாகம் செய்தார் என்பதை நாம் நினைத்துப்பார்ப்போம். (மத். 20:28) யெகோவாமேலும் அவருடைய மகன்மேலும் அன்பு வைத்திருக்கிற ஒவ்வொருவரும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள்.
எதிர்கால நம்பிக்கைக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள்
16. அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்கும் என்ன ஒற்றுமைகள் இருக்கின்றன?
16 வேறே ஆடுகளைவிட அபிஷேகம் செய்யப்பட்டவர்களை யெகோவா உயர்வாக நினைக்கிறாரா? இல்லை! இந்த இரண்டு தொகுதிகளைச் சேர்ந்தவர்களையுமே யெகோவா சமமாகத்தான் பார்க்கிறார். இந்த இரண்டு தொகுதிகளுக்குமே யெகோவா ஒரே விலையைத்தான் கொடுத்திருக்கிறார். அதாவது, தன்னுடைய ஒரே மகனை பலியாகக் கொடுத்திருக்கிறார். அப்படியென்றால் இவர்களுக்குள் என்ன வித்தியாசம்? இவர்களுடைய எதிர்கால நம்பிக்கைதான் வித்தியாசம்! அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் வேறே ஆடுகளும் கடைசிவரை கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உண்மையோடு இருக்க வேண்டும். (சங். 31:23) அதோடு, அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு தன்னுடைய சக்தியை யெகோவா அதிகமாகக் கொடுக்கிறார் என்றும் வேறே ஆடுகளுக்குக் குறைவாகக் கொடுக்கிறார் என்றும் நாம் நினைக்கக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிற அளவுக்கு அவர் அதைக் கொடுக்கிறார்.
17. பூமியில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்?
17 அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தாங்கள் பிறந்தபோதே பரலோக நம்பிக்கையோடு பிறக்கவில்லை. கடவுள்தான் அவர்களுடைய மனதில் அந்த நம்பிக்கையை வைத்தார். அந்த நம்பிக்கையைப் பற்றி அவர்கள் ஆழமாக யோசித்துப்பார்க்கிறார்கள், ஜெபம் செய்கிறார்கள், பரலோகத்துக்குப் போவதற்காக ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்குக் கிடைக்கப்போகும் ஆவி உடல் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அவர்களால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. (பிலி. 3:20, 21; 1 யோ. 3:2) இருந்தாலும், யெகோவாவையும் இயேசுவையும் தேவதூதர்களையும் அபிஷேகம் செய்யப்பட்ட மற்றவர்களையும் பார்ப்பதற்கு அவர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறார்கள். பரலோக அரசாங்கத்தில் ஆட்சி செய்வதற்காகவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
18. வேறே ஆடுகள் எதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்?
18 இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வதற்காக வேறே ஆடுகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். என்றென்றும் வாழ வேண்டும் என்பது மனிதர்களின் இயல்பான ஆசை! (பிர. 3:11) முழு பூமியையும் பூஞ்சோலையாக மாற்றுவதற்காக வேறே ஆடுகள் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறார்கள். தங்களுக்கென்று வீடுகளைக் கட்டவும், தோட்டங்களை அமைக்கவும், பிள்ளைகளோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழவும் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். (ஏசா. 65:21-23) உலகம் முழுவதையும் சுற்றிப் பார்க்கவும், மலைகள்... காடுகள்... கடல்கள்... என யெகோவாவின் அற்புத படைப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் ஆசையாக இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவாவோடு இருக்கிற பந்தம் காலங்கள் போகப் போக பலமாகும் என்பதைத் தெரிந்துகொள்வது அவர்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தருகிறது.
19. நினைவு நாள் நிகழ்ச்சி நமக்கு என்ன வாய்ப்பைத் தருகிறது, இந்த வருஷம் அது எப்போது நடக்கும்?
19 தன்னுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் யெகோவா அருமையான ஓர் எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். (எரே. 29:11) நம் எல்லாருக்கும் முடிவில்லாத வாழ்க்கை கிடைப்பதற்காக யெகோவாவும் இயேசுவும் நிறைய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அதற்கு நன்றி சொல்ல நினைவு நாள் நிகழ்ச்சி ஓர் அருமையான வாய்ப்பாக இருக்கிறது. வருஷத்திலேயே நினைவு நாள் நிகழ்ச்சிதான் நமக்கு ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி. 2021-ம் வருஷத்தில், மார்ச் 27 சனிக்கிழமை சூரியன் மறைவுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி நடக்கும். நம்மில் நிறைய பேர், கட்டுப்பாடுகளோ தடைகளோ இல்லாத நாட்டில் வாழ்கிறோம். ஆனால், சிலருக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. இன்னும் சிலர் சிறையில் இருக்கிறார்கள். இப்படி, எங்கிருந்தாலும் நாம் எல்லாரும் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வோம். யெகோவாவும் இயேசுவும் தேவதூதர்களும் உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் இதைப் பார்த்து சந்தோஷப்படுவார்கள். அதனால், சபையாகவும் தொகுதியாகவும் தனிப்பட்ட ஆட்களாகவும் இந்த வருஷம் நடக்கிற நினைவு நாள் நிகழ்ச்சியில் நாம் சந்தோஷமாகக் கலந்துகொள்ளலாம்.
பாட்டு 133 மீட்படைய தேவனை நாடுங்கள்
a மார்ச் 27, 2021, யெகோவாவின் சாட்சிகளுக்கு விசேஷமான ஒரு நாள்! அன்று சாயங்காலம் கிறிஸ்துவின் நினைவு நாள் நிகழ்ச்சியில் நாம் கலந்துகொள்வோம். இதில் கலந்துகொள்கிற நிறைய பேர், இயேசு சொன்ன ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களாக இருப்பார்கள். வேறே ஆடுகளைப் பற்றிய என்ன புதிய விளக்கம் 1935-ல் கொடுக்கப்பட்டது? மிகுந்த உபத்திரவத்துக்குப் பிறகு இவர்களுக்கு என்ன ஓர் அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது? நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிற வேறே ஆடுகள், கடவுளையும் கிறிஸ்துவையும் எப்படிப் புகழலாம்?
b வார்த்தைகளின் விளக்கம்: கிறிஸ்துவைப் பின்பற்றுகிற, இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ள மக்கள்தான் வேறே ஆடுகள். இதில் சிலர், கடைசி நாட்களில் யெகோவாவை வணங்க ஆரம்பித்திருக்கிறார்கள். மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் கிறிஸ்து நியாயந்தீர்க்கும்போது உயிரோடு இருக்கும் வேறே ஆடுகள்தான் திரள் கூட்டமான மக்கள். இவர்கள் அர்மகெதோனில் தப்பிப்பிழைப்பார்கள்.