வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூன் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எரேமியா 51-52
“யெகோவா சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே நிறைவேறியது”
(எரேமியா 51:11) “அம்புகளைத் தீட்டிப் பளபளப்பாக்குங்கள்; வட்டமான கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவா பாபிலோனை அழிக்க நினைத்திருக்கிறார். அதனால், மேதியர்களின் ராஜாக்களை யெகோவா தூண்டியிருக்கிறார். அவருடைய ஆலயத்துக்காக அவர் பழிவாங்கப்போகிறார்.”
(எரேமியா 51:28) “மேதியாவின் ராஜாக்களையும், ஆளுநர்களையும், துணை அதிகாரிகளையும், அவர்கள் ஆட்சி செய்கிற எல்லா தேசங்களையும் அவளோடு போர் செய்யத் தயாராகச் சொல்லுங்கள்.”
it-2-E பக். 360 பாரா. 2-3
மேதியர்கள், மேதியா
பெர்சியர்களோடு சேர்ந்து பாபிலோனைக் கைப்பற்றியபோது. கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா இந்த வார்த்தைகளைச் சொன்னார்: “நான் மேதியர்களை அவர்களுக்கு [பாபிலோனியர்களுக்கு] எதிராக வரவழைப்பேன். அவர்கள் வெள்ளியைப் பெரிதாக நினைப்பதில்லை. தங்கத்துக்காக ஆசைப்படுவதில்லை. அவர்கள் வில்லுகளால் வாலிபர்களை நொறுக்குவார்கள்.” (ஏசா 13:17-19; 21:2) ‘மேதியர்கள்’ என்று இங்கு சொல்லப்பட்டிருக்கும் வார்த்தை பெர்சியர்களையும் உட்படுத்தும். பூர்வகால கிரேக்க சரித்திராசிரியர்கள், ‘மேதியர்கள்’ என்ற வார்த்தையை மேதியர்களையும் பெர்சியர்களையும் குறிப்பதற்கே பொதுவாக பயன்படுத்தினார்கள். மேதியர்கள் வெள்ளியையும் தங்கத்தையும் வெறுத்தார்கள் என்று சொல்லப்பட்டதிலிருந்து என்ன தெரிகிறது? பாபிலோனின் வளங்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பது மேதியர்களின் குறிக்கோள் கிடையாது. பாபிலோனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவர்களுடைய குறிக்கோள். அதனால், லஞ்சமோ பரிசோ கொடுத்தால்கூட அவர்கள் தங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். பெர்சியர்களைப் போலவே மேதியர்களும் வில்லை தங்கள் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தினார்கள். மரத்தால் செய்யப்பட்ட வில்லின் மீது சிலசமயங்களில் செம்பு அல்லது வெண்கலம் பூசப்பட்டிருந்தது. (சங் 18:34-ஐ ஒப்பிடுங்கள்.) இப்படிப்பட்ட வில்லையும் பளபளப்பாக தீட்டப்பட்ட அம்பையும் பயன்படுத்தி பாபிலோனில் இருந்த ‘வாலிபர்களை நொறுக்கிப்போட்டார்கள்.’ —எரே 51:11.
“மேதியர்களின் ராஜாக்களை” பாபிலோனுக்கு எதிராக யெகோவா தூண்டுவார் என்று எரேமியா சொன்னார். (எரே 51:11, 28) இதிலிருந்து என்ன தெரிகிறது? கோரேசு ராஜாவுக்குக் கீழ் ஒரு துணை ராஜா அல்லது சில ராஜாக்கள் இருந்திருக்கலாம். இது அந்தக் காலத்தில் இருந்த ஒரு வழக்கம். (எரே 25:25-ஐ ஒப்பிடுங்கள்.) இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது மேதியர்கள், பெர்சியர்கள், ஏலாமியர்கள் மற்றும் அவர்களைச் சுற்றியிருந்த கோத்திரங்கள் ஒன்றுசேர்ந்து வந்து பாபிலோனைக் கைப்பற்றினார்கள் என்று தெரிகிறது. பிறகு, பெர்சிய ராஜாவான கோரேசு, மேதிய ராஜாவான தரியுவை “கல்தேயர்களுடைய ராஜ்யத்துக்கு ராஜாவாக” நியமித்தார்.—தானி 5:31; 9:1.
(எரேமியா 51:30) “பாபிலோனின் வீரர்கள் போர் செய்வதை நிறுத்திவிட்டு, அவர்களுடைய கோட்டைகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய பலமெல்லாம் போய்விட்டது. அவர்கள் பெண்களைப் போல ஆகிவிட்டார்கள். பாபிலோனின் வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அவளுடைய தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டன.”
it-2-E பக். 459 பாரா 4
நபோனிடஸ்
பாபிலோன் தோற்கடிக்கப்பட்ட இரவில் என்ன நடந்தது என்பதைப் பற்றி நபோனிடஸ் செய்திப்பட்டியல் இப்படிச் சொல்கிறது: “போர் செய்யாமலேயே கோரேசின் படை பாபிலோனுக்குள் நுழைந்தது.” இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? ‘பாபிலோனின் வீரர்கள் போர் செய்வதை நிறுத்திவிடுவார்கள்’ என்று எரேமியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபிக்கிறது.—எரே 51:30.
(எரேமியா 51:37) “பாபிலோன் வெறும் கற்குவியலாகும். அது நரிகள் தங்கும் இடமாகும். அதற்குக் கோரமான முடிவு வரும்; அதைப் பார்த்து எல்லாரும் கேலி செய்வார்கள். அங்கு மனுஷ நடமாட்டமே இல்லாமல் போகும்.”
(எரேமியா 51:62) “அதன்பின், ‘யெகோவாவே, இந்த நகரம் அழிக்கப்பட்டு மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி காலமெல்லாம் பாழாய்க் கிடக்கும் என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்களே’ என்று சொல்ல வேண்டும்.”
it-1-E பக். 237 பாரா 1
பாபிலோன்
சரித்திரத்தில் மறக்க முடியாத வருஷமான, கி.மு. 539-லிருந்து பாபிலோனின் பேரும் புகழும் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. பெர்சிய ராஜாவான முதலாம் தரியுவை (ஹிஸ்டாஸ்பிஸ் என்றும் அழைக்கப்படுகிறார்) எதிர்த்து பாபிலோன் நகரத்தில் இருந்தவர்கள் இரண்டு முறை கலகம் செய்தார்கள். இரண்டாவது முறை கலகம் செய்தபோது, அந்த நகரம் அதன் செல்வாக்கை முழுவதுமாக இழந்தது. பிறகு, அந்த நகரம் ஓரளவு திரும்ப எடுத்துக் கட்டப்பட்டது. மீண்டும், முதலாம் சஷ்டாவை எதிர்த்து கலகம் செய்தது. ஆனால், இந்த முறை அந்த நகரம் கொள்ளயடிக்கப்பட்டது. அதன் பிறகு, மகா அலெக்ஸாண்டர் பாபிலோனை தன் தலைநகரமாக்க நினைத்தார். ஆனால், அவரும் கி.மு. 323-ல் திடீரென்று இறந்துவிட்டார். கி.மு. 312-ல் பாபிலோனை நிக்கோட்டர் கைப்பற்றினார். தன்னுடைய புதிய தலைநகரமான செலுக்கியாவைக் கட்ட, பாபிலோனின் வளங்களை டைகிரீஸ் ஆற்றங்கரைக்குக் கொண்டுபோனார். முதல் நூற்றாண்டில், சில யூதர்கள் பாபிலோனில் தங்கியிருந்ததாக தெரிகிறது. எப்படி? அவர்களைப் பார்க்க போனதாக பேதுரு தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தார். (1பே 5:13) பாபிலோனிலிருந்த பேல் தெய்வத்தின் கோயில் கி.பி. 75-ஆம் வருஷம்வரை இருந்ததாக கல்வெட்டுகள் காட்டுகின்றன. கடைசியில், கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்த நகரம் முற்றிலுமாக பாழாகிப்போனது. அப்படியே படிப்படியாக பாபிலோன் ‘வெறும் கற்குவியலாகி’ சுவடு தெரியாமல் போய்விட்டது.—எரே 51:37.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(எரேமியா 51:25) “‘அழிவு உண்டாக்குகிற மலையே, நான் உன்னைத் தண்டிப்பேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘முழு உலகத்தையும் அழிக்கிறவளே, என்னுடைய கையால் உன்னைப் பாறைகளிலிருந்து கீழே உருட்டிவிடுவேன். தீயில் கொளுத்திவிடுவேன்.’”
it-2-E பக். 444 பாரா 9
மலை
அரசாங்கங்களைக் குறிக்கிறது. ராஜ்யங்களை அல்லது ஆட்சி செய்யும் அரசாங்கங்களைக் குறிப்பதற்காக பைபிளில் சிலசமயம் மலைகள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (தானி 2:35, 44, 45; ஏசா 41:15-ஐ ஒப்பிடுங்கள்; வெளி 17:9-11, 18.) பாபிலோனை ‘அழிவு உண்டாக்குகிற மலை’ என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், பாபிலோனின் படை மற்ற தேசங்களைக் கைப்பற்றி அவற்றை அழித்துப்போட்டிருக்கிறது. (எரே 51:24, 25) போர் வீரர்களுக்கு எதிரான யெகோவாவின் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு சங்கீதக்காரன் இப்படிச் சொன்னார்: “நீங்கள் பிரகாசமாக ஒளிவீசுகிறீர்கள். காட்டு மிருகங்கள் வாழ்கிற மலைகளைவிட கம்பீரமாக இருக்கிறீர்கள்.” (சங் 76:4) ‘காட்டு மிருகங்கள் வாழ்கிற மலைகள்’ கொடூரமாக ஆட்சி செய்யும் அரசாங்கங்களைக் குறிக்கிறது. (நாகூ 2:11-13-ஐ ஒப்பிடுங்கள்.) தாவீதும் யெகோவாவைப் பற்றி இப்படிச் சொன்னார்: ‘என்னை மலைபோல் உறுதியாக நிற்க வைத்தீர்கள்.’ இந்த வார்த்தைகள் எதைக் குறிக்கலாம்? யெகோவா தாவீதின் அரசாங்கத்தை உயர்த்தி அதை உறுதிப்படுத்தியிருக்கிறார். (சங் 30:7; 2சா 5:12-ஐ ஒப்பிடுங்கள்.) மலைகள் என்பது ராஜ்யங்களைக் குறிக்கலாம் என்ற உண்மை, வெளிப்படுத்துதல் 8:8-லுள்ள வார்த்தைகளை நன்றாக புரிந்துகொள்ள உதவுகின்றன. அதில் சொல்லப்பட்ட “தீப்பற்றி எரிகிற பெரிய மலை” எதைக் குறிக்கிறது என்று கவனியுங்கள். நெருப்பு அழிவை உண்டாக்குவது போல இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கும் அரசாங்கமும் அழிவை உண்டாக்கும் என்பதைக் குறிக்கிறது.
(எரேமியா 51:42) “கடல் பொங்கிவந்து பாபிலோனை மூழ்கடித்தது. அதன் அலைகள் திரண்டு வந்து அவளை மூடிவிட்டன.”
it-2-E பக். 882 பாரா 3
கடல்
ஏராளமான படைகள். பாபிலோனைத் தாக்குகிறவர்களின் சத்தம் “கடல் கொந்தளிக்கிற சத்தத்தைப் போல இருக்கிறது” என்று எரேமியா சொன்னார். (எரே 50:42) அதோடு, பாபிலோனை மூழ்கடிக்க ஒரு கடல் பொங்கிவரும் என்றும் சொன்னார். பாபிலோனை தோற்கடிக்கவிருந்த மேதிய பெர்சிய படைகளைக் குறிப்பதற்காகத்தான் “கடல்” என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.—எரே 51:42; தானி 9:26-ஐ ஒப்பிடுங்கள்.
ஜூன் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | புலம்பல் 1-5
“பொறுமையோடு காத்திருப்பது சகித்திருக்க உதவும்”
(புலம்பல் 3:20, 21) “நீங்கள் கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பீர்கள், இறங்கி வந்து எனக்கு உதவுவீர்கள். இதை ஞாபகத்தில் வைத்து, உங்களுக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்.”
(புலம்பல் 3:24) “‘யெகோவாதான் என்னுடைய பங்கு. அதனால், நான் அவருக்காகப் பொறுமையோடு காத்திருப்பேன்’ என்று சொன்னேன்.”
w12-E 6/1 பக். 14 பாரா. 3-4
“நீங்கள் . . . இறங்கி வந்து எனக்கு உதவுவீர்கள்”
வேதனையாக இருந்தாலும் எரேமியா நம்பிக்கை இழக்கவில்லை. “நீங்கள் கண்டிப்பாக என்னை நினைத்துப் பார்ப்பீர்கள், இறங்கி வந்து எனக்கு உதவுவீர்கள்” (வசனம் 20) என்று யெகோவாவிடம் எரேமியா சொன்னார். தன்னையும் மனம் திருந்திய மக்களையும் யெகோவா மறக்க மாட்டார் என்று எரேமியா உறுதியாக நம்பினார். சர்வவல்லமையுள்ள கடவுள் அப்படித்தானே நடந்துகொள்வார்!—வெளிப்படுத்துதல் 15:3.
மனம் திருந்துகிறவர்களுக்காக யெகோவா “இறங்கி வந்து” உதவுவார் என்பதில் எரேமியா உறுதியாக இருந்தார். இந்த வார்த்தைகளை இன்னொரு மொழிபெயர்ப்பு இப்படிச் சொல்கிறது: “என்னை மறந்துவிடாதீர்கள், குனிந்து என்னைப் பாருங்கள்.” “பூமி முழுவதையும் ஆளுகிற” உன்னதமானவரான யெகோவா என்ன செய்கிறார் என்பதைக் கற்பனை செய்ய இந்த வார்த்தைகள் நமக்கு உதவுகின்றன. தவறு செய்ததால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்ட தன் மக்களை அவர் குனிந்து தூக்கிவிடுகிறார். அதோடு, அவர்களுக்கு தயவு காட்டுகிறார். (சங் 83:18) இந்த நம்பிக்கை எரேமியாவின் காயம்பட்ட இதயத்துக்கு மருந்தாக இருந்தது. மனம் திருந்திய தன் மக்களை யெகோவா சரியான நேரத்தில் காப்பாற்றுவார் என்பதில் எரேமியாவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதனால், அவர் பொறுமையோடு காத்திருந்தார்.—வசனம் 21.
ஜூன் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 1-5
“கடவுளுடைய செய்தியை எசேக்கியேல் சந்தோஷமாக அறிவித்தார்”
(எசேக்கியேல் 2:9–3:2) “அப்போது, ஒரு கை என் முன்னால் ஒரு சுருளை நீட்டியது. அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது. அவர் என் முன்னால் அதை விரித்தபோது, அதன் உள்ளேயும் வெளியேயும் புலம்பல் பாடல்களும், துக்கமும் வேதனையுமான செய்திகளும் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். பின்பு அவர் என்னிடம், ‘மனிதகுமாரனே, உன் முன்னால் இருக்கிற இந்தச் சுருளைச் சாப்பிட்டுவிட்டு, இஸ்ரவேல் ஜனங்களிடம் போய்ப் பேசு’ என்று சொன்னார். அதனால் நான் என் வாயைத் திறந்தேன். அப்போது, அவர் அந்தச் சுருளைச் சாப்பிடக் கொடுத்தார்.”
it-1-E பக். 1214
குடல்
நாம் சாப்பிடும் உணவு குடலில்தான் ஜீரணமாகிறது. ஒரு தரிசனத்தில், எசேக்கியேலுக்கு ஒரு சுருள் கொடுக்கப்பட்டது. அந்தச் சுருளைச் சாப்பிட்டு தன் குடலை (எபிரெய மொழியில், மீயிம்) நிரப்ப சொல்லி அவரிடம் சொல்லப்பட்டது. அந்தச் சுருளில் சொல்லப்பட்ட வார்த்தைகளை, எசேக்கியேல் படித்து தியானித்து மனதில் பதிய வைத்தால் யெகோவாவோடு உள்ள பந்தம் பலமாகும். அதோடு, அந்த வார்த்தைகளை மற்றவர்களிடம் சொல்வதற்கான தைரியமும் அவருக்குக் கிடைக்கும்.—எசே 3:1-6; வெளி 10:8-10-ஐ ஒப்பிடுங்கள்.