“சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களை” யெகோவா வெளிப்படுத்துகிறார்
“சீக்கிரத்தில் நடக்கப்போகிற காரியங்களைக் கடவுள் தம்முடைய அடிமைகளுக்குத் தெரியப்படுத்தும் பொருட்டு இயேசு கிறிஸ்துவுக்கு வெளிப்படுத்திய . . . விஷயங்கள்.”—வெளி. 1:1.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
மாபெரும் சிலையின் எந்தப் பாகம் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசைக் குறிக்கிறது?
ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கும் ஐக்கிய நாட்டுச் சங்கத்திற்கும் உள்ள தொடர்பை யோவான் எப்படி விளக்குகிறார்?
மனித ஆட்சிக்கு வரும் முடிவை தானியேலும் யோவானும் எப்படி விவரிக்கிறார்கள்?
1, 2. (அ) தானியேல் மற்றும் யோவானுடைய தீர்க்கதரிசனங்களை ஒப்பிடும்போது நாம் எதைப் புரிந்துகொள்ள முடிகிறது? (ஆ) மூர்க்க மிருகத்தின் முதல் ஆறு தலைகள் எதைக் குறிக்கின்றன?
தா னியேல் மற்றும் யோவான் எழுதிய தீர்க்கதரிசனங்களை ஒப்பிடும்போது இன்று நடக்கிற, எதிர்காலத்தில் நடக்கப்போகிற பல விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. யோவான் கண்ட மூர்க்க மிருகத்தையும்... தானியேல் கண்ட பத்துக் கொம்புகளுள்ள கெடிதான மிருகத்தையும்... மாபெரும் சிலையைப் பற்றி தானியேல் தந்த விளக்கத்தையும்... ஒப்பிட்டுப் பார்த்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்தத் தீர்க்கதரிசனங்களைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் நாம் என்ன செய்யத் தூண்டப்படுவோம்?
2 முதலாவது, யோவான் கண்ட மூர்க்க மிருகத்தைப் பற்றிப் பார்ப்போம். (வெளி., அதி. 13) முந்தின கட்டுரையில் நாம் பார்த்தபடி, மிருகத்தின் முதல் ஆறு தலைகள் எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய வல்லரசுகளைக் குறிக்கின்றன. இவை அனைத்துமே ஸ்திரீயினுடைய வித்துவிடம், அதாவது சந்ததியிடம், பகைமை பாராட்டின. (ஆதி. 3:15) யோவான், தான் கண்ட தரிசனத்தை எழுதி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும்கூட ஆறாம் தலையான ரோம் உலக வல்லரசாகத் திகழ்ந்தது. பிற்பாடு, அதன் இடத்தை ஏழாம் தலை ஏற்கவிருந்தது. அது எந்த உலக வல்லரசு, ஸ்திரீயினுடைய சந்ததியை அது எப்படி நடத்தியது?
பிரிட்டனும் அமெரிக்காவும் உலக வல்லரசாக உயர்ந்தன
3. பத்துக் கொம்புகள் உள்ள கெடிதான மிருகம் எதைக் குறிக்கிறது, பத்துக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன?
3 யோவான் கண்ட தரிசனத்தையும்... பத்துக் கொம்புகளுள்ள கெடிதான மிருகத்தைப் பற்றிய தானியேலின் தரிசனத்தையும்... ஒப்பிட்டு பார்ப்பதன் மூலம் வெளிப்படுத்துதல் 13-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையை நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.a (தானியேல் 7:7, 8, 23, 24-ஐ வாசியுங்கள்.) தானியேல் கண்ட மிருகம் ரோம உலக வல்லரசைக் குறிக்கிறது. (பக்கங்கள் 12-13-ல் உள்ள விளக்கப்படத்தைப் பாருங்கள்.) கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் ரோமப் பேரரசு பிளவுபட ஆரம்பித்தது. கெடிதான அந்த மிருகத்தின் தலையிலிருந்து எழும்பிய பத்துக் கொம்புகள் ரோமப் பேரரசிலிருந்து தோன்றிய ராஜ்யங்களைக் குறிக்கின்றன.
4, 5. (அ) சின்ன கொம்பு என்ன செய்தது? (ஆ) மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை எதைக் குறிக்கிறது?
4 கெடிதான மிருகத்தின் தலையிலிருக்கும் பத்துக் கொம்புகளில் நான்கு கொம்புகள், அதாவது ராஜ்யங்கள், விசேஷக் கவனத்தைப் பெறுகின்றன. ஒரு “சின்ன கொம்பு” எழும்பி அந்தப் பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கிப்போட்டது. ஒருகாலத்தில் ரோமப் பேரரசின் பாகமாக இருந்த பிரிட்டன் பேரும் புகழும் பெற்று ஜொலித்த சமயத்தில் இது நிறைவேறியது. 17-ஆம் நூற்றாண்டுவரை பிரிட்டன் ஒரு சாதாரண நாடாகவே திகழ்ந்தது. ரோமப் பேரரசின் பாகமாக இருந்த ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்சு ஆகிய மூன்று நாடுகளும் பிரிட்டனைவிட பலம்படைத்தவையாய் இருந்தன. பெரும் செல்வாக்கு படைத்த அந்த நாடுகளை பிரிட்டன் ஒன்றன்பின் ஒன்றாகத் தோற்கடித்து பலமிழக்கச் செய்தது. 18-ஆம் நூற்றாண்டின் மத்திபத்தில் பிரிட்டன் உலக அரங்கில் பலமிக்க நாடாக முன்னேறி வந்துகொண்டிருந்தது. ஆனாலும் இன்னும் அது மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையாக ஆகவில்லை.
5 பலமிக்க நாடாக பிரிட்டன் உருவெடுத்தபோதிலும் வட அமெரிக்காவிலிருந்த அதன் குடியேற்ற நாடுகள் அதிலிருந்து பிரிந்து சென்றுவிட்டன. என்றாலும், அமெரிக்கா வலிமைமிக்க நாடாக உருவாவதை பிரிட்டன் தடுத்து நிறுத்தவில்லை. சொல்லப்போனால், பிரிட்டன் தன் கடற்படையை அனுப்பி அமெரிக்காவைப் பாதுகாத்தது. 1914-ல் எஜமானருடைய நாள் ஆரம்பித்தபோது பிரிட்டன்... மிகப் பிரமாண்டமான பேரரசாக உருவெடுத்து சரித்திரத்தில் முத்திரை பதித்திருந்தது, அமெரிக்கா... உலகிலேயே மாபெரும் வர்த்தக வல்லரசாக வளர்ந்திருந்தது.b முதல் உலகப் போரின்போது, அமெரிக்காவை பிரிட்டன் தன் நெருங்கிய கூட்டாளி ஆக்கிக்கொண்டது. இவ்வாறு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உருவானது. இதுதான் மிருகத்தின் ஏழாம் தலை. இந்தத் தலை ஸ்திரீயினுடைய சந்ததியை எப்படி நடத்தியது?
6. ஏழாம் தலை கடவுளுடைய மக்களை எப்படி நடத்தியிருக்கிறது?
6 எஜமானருடைய நாள் ஆரம்பமான கொஞ்ச நாட்களிலேயே கடவுளுடைய மக்களை, அதாவது இன்னும் பூமியில் இருந்த கிறிஸ்துவின் சகோதரர்களை, ஏழாம் தலை தாக்கியது. (மத். 25:40) தம்முடைய பிரசன்னத்தின்போது ஸ்திரீயினுடைய சந்ததியில் மீந்திருப்பவர்கள் பூமியில் மும்முரமாய் ஊழியம் செய்து வருவார்கள் என இயேசு சொல்லியிருந்தார். (மத். 24:45-47; கலா. 3:26-29) இந்தப் பரிசுத்தவான்களோடு, ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு போர் செய்தது. (வெளி. 13:3, 7) முதல் உலகப் போரின்போது, அது கடவுளுடைய மக்களை எதிர்த்தது... அவர்களுடைய பிரசுரங்கள் சிலவற்றுக்குத் தடைவிதித்தது... உண்மையுள்ள அடிமை வகுப்பாரின் பிரதிநிதிகளைச் சிறையில் தள்ளியது. மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை ஊழியத்தைக் கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டது அல்லது ‘கொன்றே விட்டது.’ இப்படியெல்லாம் நடக்குமென யோவானுக்கு யெகோவா தரிசனத்தில் வெளிப்படுத்தியிருந்தார். ஸ்திரீயின் இரண்டாவது பாகமான அந்தப் பரிசுத்தவான்கள் ‘உயிர்ப் பெற்று’ மீண்டும் ஊழியத்தில் மும்முரமாய் ஈடுபடுவார்கள் என்றும் யோவானிடம் கடவுள் சொல்லியிருந்தார். (வெளி. 11:3, 7-11) இந்தச் சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடந்தேறின என்பதற்கு நவீன நாளைய யெகோவாவின் சாட்சிகளுடைய சரித்திரம் சான்றளிக்கிறது.
ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசும் இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்களும்
7. மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலைக்கும் மாபெரும் சிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?
7 மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலைக்கும் மாபெரும் சிலைக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பிரிட்டனும், சொல்லப்போனால் அமெரிக்காவும்கூட ரோமப் பேரரசிலிருந்துதான் தோன்றின. அப்படியென்றால், அந்தச் சிலையின் பாதங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றில் இரும்பும் களிமண்ணும் கலந்திருப்பதாக விவரிக்கப்படுகிறது. (தானியேல் 2:41-43-ஐ வாசியுங்கள்.) பாதங்களைப் பற்றிய இந்த விவரிப்பு மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலையான ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு தோன்றிய சமயத்தைக் குறிக்கிறது. பொதுவாக இரும்பாலான பொருள் வலுவாக இருக்கும். ஆனால், இரும்பையும் களிமண்ணையும் கலந்து உருவாக்கப்பட்ட பொருள் அந்தளவு வலுவாய் இருக்காது. அதுபோல்தான், ரோமுக்கு இருந்த வலிமை அதிலிருந்து உருவான ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கு இருக்கவில்லை. அது எப்போது வலுவிழந்தது?
8, 9. (அ) ஏழாம் உலக வல்லரசு எப்படி இரும்புபோன்ற வலிமையை வெளிக்காட்டியது? (ஆ) சிலையின் பாதங்களிலுள்ள களிமண் எதைக் குறிக்கிறது?
8 சில சமயங்களில், மிருகத்தின் ஏழாம் தலை இரும்பைப் போன்ற வலிமையை வெளிக்காட்டியிருக்கிறது. உதாரணத்திற்கு, முதல் உலகப் போரில் வெற்றி பெற்றபோது அது தன்னை வலிமைமிக்கதாய் நிரூபித்தது. இரண்டாம் உலகப் போரின்போதும் இரும்பைப்போல் அது வலிமைமிக்கதாய் இருந்தது.c அதற்குப் பிறகும், அந்த ஏழாம் தலை அவ்வப்போது இரும்பைப் போன்ற வலிமையைக் காட்டி வந்தது. என்றாலும், ஆரம்பத்திலிருந்தே அந்த இரும்பில் களிமண்ணும் கலந்திருக்கிறது.
9 சிலையினுடைய பாதங்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் நீண்ட காலமாகவே முயன்று வந்திருக்கிறார்கள். இரும்பும் களிமண்ணும் கலந்த பாதங்கள் பல ராஜ்யங்களை அல்ல, ஒரு ‘ராஜ்யத்தை,’ அதாவது ஓர் அரசாங்கத்தை, மட்டுமே குறிப்பதாக தானியேல் 2:41 சொல்கிறது. எனவே, களிமண் என்பது ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் பாகமாக உள்ள சில அமைப்புகளுக்குப் படமாக இருக்கிறது. இரும்பின் வலிமையுடன் செயல்பட்ட ரோமப் பேரரசைப் போல் செயல்படவிடாமல் இந்த அமைப்புகள் ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசின் வலிமையைக் குறைத்துப்போடுகின்றன. களிமண் ‘மற்ற மனுஷரை,’ சாமானியர்களைக் குறிக்கிறது. (தானி. 2:43) ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசிலுள்ள சாமானியர்கள் சமூக உரிமை இயக்கங்கள், தொழிற்சங்கங்கள், சுதந்திரப் போராட்டங்கள் மூலமாகத் தங்கள் உரிமையை நிலைநாட்ட முயன்றிருக்கிறார்கள். ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இரும்புபோன்ற வலிமையுடன் திறமையாகச் செயல்படாதபடி இவர்கள் அதன் வலிமையைக் குறைத்திருக்கிறார்கள். அதோடு, தெளிவற்ற தேர்தல் முடிவுகள், எதிரும் புதிருமான கருத்துகள் காரணமாகப் பிரபலமான தலைவர்கள்கூட தங்கள் கொள்கைகளைச் செயல்படுத்த முடியாமல் திணறுகிறார்கள். ‘அந்த அரசு ஓரளவு வலிமையுள்ளதாயும் ஓரளவு வலிமையற்றதாயும் இருக்கும்’ என்று தானியேல் அன்றைக்கே சொன்னார்.—தானி. 2:42, பொது மொழிபெயர்ப்பு; 2 தீ. 3:1-3.
10, 11. (அ) ‘பாதங்களுக்கு’ என்ன சம்பவிக்கப் போகிறது? (ஆ) பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கைக்கு எந்த விசேஷ அர்த்தமும் இல்லை என்று எப்படிச் சொல்கிறோம்?
10 இந்த 21-ஆம் நூற்றாண்டிலும்கூட பிரிட்டனும் அமெரிக்காவும் உலக விவகாரங்களில் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்கு அடுத்து இன்னொரு உலக வல்லரசு தோன்றாது என்பதை மாபெரும் சிலை மற்றும் மூர்க்க மிருகத்தைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கடைசி உலக வல்லரசு, இரும்புக் கால்களுக்குப் படமாக இருக்கும் ரோம வல்லரசைவிட வலிமை குறைந்ததாக இருந்தாலும் தானாகவே அழிந்துபோகாது.
11 சிலையின் கால் விரல்களுக்கு ஏதாவது விசேஷ அர்த்தம் இருக்கிறதா? இதைச் சற்றுக் கவனியுங்கள்: மற்ற தரிசனங்களில் தானியேல் திட்டவட்டமான சில எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டார். உதாரணத்திற்கு, பல்வேறு மிருகங்களைப் பற்றிப் பேசுகையில் அவற்றிற்கு எத்தனை கொம்புகள் இருந்தன எனக் குறிப்பாகச் சொன்னார். அந்த எண்ணிக்கைகள் முக்கியமானவை. ஆனால், இந்தச் சிலையை விவரிக்கையில் அதன் பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கையைப் பற்றி தானியேல் எதுவும் குறிப்பிடவில்லை. சிலையின் புயங்கள், கைகள், கைவிரல்கள், கால்கள், பாதங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கைக்கு எந்த விசேஷ அர்த்தமும் இல்லாததால் பாதத்திலுள்ள விரல்களின் எண்ணிக்கைக்கும் எந்த விசேஷ அர்த்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அந்த விரல்களில் இரும்பும் களிமண்ணும் கலந்திருக்கும் என்று தானியேல் குறிப்பாகச் சொன்னார். கடவுளுடைய அரசாங்கத்திற்குப் படமாக இருக்கிற “கல்,” இந்தச் சிலையின் பாதங்களில் மோதும் சமயத்தில் இந்த ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் என்பதை இந்த விவரிப்பிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.—தானி. 2:44.
ஆங்கிலோ-அமெரிக்காவும் இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகமும்
12, 13. இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகம் எதைக் குறிக்கிறது, அது என்ன செய்கிறது?
12 ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு இரும்பும் களிமண்ணும் கலந்த கலவையாக இருந்தாலும், இந்தக் கடைசி நாட்களில் அது முக்கியப் பங்காற்றும் என்பதை யோவானுக்கு இயேசு காண்பித்த தரிசனங்கள் தெரிவிக்கின்றன. எப்படி? ராட்சதப் பாம்பைப் போல் பேசிய இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகத்தை யோவான் பார்த்தார். இந்த விசித்திர மிருகம் எதைக் குறிக்கிறது? அதற்கு இரண்டு கொம்புகள் இருப்பதால் அது இரட்டை ஆட்சியைக் குறிக்கிறது. ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசுக்குப் படமாக இருக்கும் இந்த மூர்க்க மிருகத்தை யோவான் மீண்டும் பார்க்கிறார். ஆனால், இப்போது அது விசேஷமான விதத்தில் செயல்படுவதைப் பார்க்கிறார்.—வெளிப்படுத்துதல் 13:11-15-ஐ வாசியுங்கள்.
13 இரண்டு கொம்புகளுள்ள இந்த மூர்க்க மிருகம், ஏழு தலைகளை உடைய மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தை உண்டாக்கும்படி மக்களிடம் சொல்கிறது. மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான இந்த உருவம் தோன்றும், பின்பு இல்லாமல் போகும், ஆனால் மறுபடியும் தோன்றும் என்று யோவான் எழுதினார். அவர் சொன்னபடியே நடந்தது. தேசங்களை ஒன்றுபடுத்துவதற்கும்... உலக அரசாங்கங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும்... பிரிட்டனும் அமெரிக்காவும் சேர்ந்து ஓர் அமைப்பை ஏற்படுத்தின.d அந்த அமைப்பு முதல் உலகப் போருக்குப் பிறகு தோன்றியது, அது சர்வதேச சங்கம் என்று அழைக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் துவங்கியதும் அது இல்லாமல் போனது. வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனத்திற்கு இசைய, அது மறுபடியும் தோன்றும் என்று அந்தப் போரின்போது கடவுளுடைய மக்கள் அறிவித்தார்கள். அவர்கள் சொன்னபடியே அது மறுபடியும் தோன்றியது, ஆனால் ஐக்கிய நாட்டுச் சங்கம் என்ற பெயரில்.—வெளி. 17:8.
14. என்ன காரணத்தினால் மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தை “எட்டாவது ராஜா” என்று யோவான் அழைக்கிறார்?
14 மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவமே “எட்டாவது ராஜா” என்று யோவான் குறிப்பிட்டார். எந்த அர்த்தத்தில்? அது, முதலாவதாகத் தோன்றிய மூர்க்க மிருகத்தின் எட்டாவது தலையாகத் தரிசனத்தில் காட்டப்படவில்லை. அது மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான ஓர் உருவம் மட்டுமே. அதில் அங்கம் வகிக்கும் நாடுகளுடைய ஆதரவால்தான், முக்கியமாக ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசு தரும் ஆதரவால்தான் அது வலிமைமிக்கதாக இருக்கிறது. (வெளி. 17:10, 11) என்றாலும், உலக சரித்திரத்தையே மாற்றிப்போடும் ஒரு காரியத்தை அது செய்யப்போவதால் யோவான் அதை எட்டாவது ராஜா என்று அழைக்கிறார்.
மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவம் விலைமகளை அழிக்கிறது
15, 16. விலைமகள் எதற்கு அடையாளமாக இருக்கிறாள், அவளுக்கு இப்போது எந்தளவு ஆதரவு கிடைக்கிறது?
15 கருஞ்சிவப்பு நிறமுள்ள மூர்க்க மிருகத்தின் மீது [மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்தின் மீது] அடையாள அர்த்தமுள்ள விலைமகள் சவாரி செய்கிறாள், அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறாள் என்று யோவான் எழுதினார். அவள் “மகா பாபிலோன்” என்று அழைக்கப்படுகிறாள். (வெளி. 17:1-6) இந்த விலைமகள் எல்லா பொய் மதங்களையும், முக்கியமாக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளைப் பிரதிநிதித்துவம் செய்கிறாள். மத அமைப்புகள் தங்கள் ஆதரவை மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவத்திற்குக் கொடுத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, அதன்மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்திருக்கின்றன.
16 என்றாலும், எஜமானருடைய நாளில் தான் உட்கார்ந்திருக்கும் தண்ணீர் வற்றிப் போயிருப்பதை, அதாவது தனக்கிருக்கும் மக்கள் ஆதரவு மளமளவென குறைந்து போயிருப்பதை, மகா பாபிலோன் பார்த்திருக்கிறது. (வெளி. 16:12; 17:15) உதாரணத்திற்கு, மூர்க்க மிருகத்திற்கு ஒப்பான உருவம் முதன்முறையாகத் தோன்றியபோது மகா பாபிலோனின் முக்கிய அங்கமான கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மேற்கத்திய உலகை ஆட்டிப்படைத்தன. ஆனால், சர்ச்சுகளையும் சரி அவற்றின் மத குருமார்களையும் சரி, அநேகர் இன்று மதிப்பதே இல்லை. உலகிலுள்ள பிரச்சினைகளுக்கெல்லாம் மதமே காரணம் என்றும் அநேகர் நினைக்கிறார்கள். எல்லா மதங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென சிலர் வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.
17. பொய் மதத்திற்குச் சீக்கிரத்தில் என்ன ஏற்படும், ஏன்?
17 என்றாலும், பொய் மதம் தானாகவே சுவடு தெரியாமல் அழிந்துவிடாது. விலைமகளை அழிக்கும் எண்ணத்தை ராஜாக்களின் மனதில் கடவுள் விதைக்கும்வரை அவள் தொடர்ந்து அவர்களைத் தன் ஆசைக்கு அடிபணிய வைப்பாள். (வெளிப்படுத்துதல் 17:16, 17-ஐ வாசியுங்கள்.) சீக்கிரத்தில், சாத்தானுடைய உலகிலுள்ள அரசியல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தைப் பயன்படுத்தி பொய் மதங்களை யெகோவா அழித்துவிடுவார். அது அவளுடைய செல்வாக்கையும் செல்வச்செழிப்பையும் பறித்துவிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட சம்பவம் நடக்குமென யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இன்று, கருஞ்சிவப்பு நிறமுள்ள மிருகத்தின் மீது உட்கார்ந்திருக்கும் விலைமகள் தள்ளாடிக்கொண்டிருக்கிறாள். என்றாலும், அதிலிருந்து மெல்ல மெல்ல சரிந்து அவளாகவே விழுந்துவிடமாட்டாள். திடீரென, வெறித்தனமாக அதிலிருந்து தள்ளிவிடப்படுவாள்.—வெளி. 18:7, 8, 15-19.
மிருகங்கள் அழிந்துவிட்டன
18. (அ) மூர்க்க மிருகம் என்ன செய்யும், அதன் விளைவு என்னவாக இருக்கும்? (ஆ) எந்த ராஜ்யங்களைக் கடவுளுடைய அரசாங்கம் அழிக்குமென தானியேல் 2:44 குறிப்பிடுகிறது? (பக்கம் 17-ல் உள்ள பெட்டியைப் பாருங்கள்.)
18 பொய் மதம் அழிக்கப்பட்ட பிறகு, கடவுளுடைய அரசாங்கத்தைத் தாக்கும்படி மூர்க்க மிருகம், அதாவது சாத்தானின் பூமிக்குரிய அரசியல் அமைப்புகள், தூண்டிவிடப்படும். பூமியிலுள்ள ராஜாக்கள் பரலோகத்திலிருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைத் தாக்க முடியாததால் பூமியிலுள்ள அதன் ஆதரவாளர்களிடம் தங்கள் கோபத்தைக் காட்டுவார்கள். விளைவு? போர். கடவுளுக்கு எதிராக அவர்கள் செய்யப் போகும் கடைசிப் போர் அதுவாகத்தான் இருக்கும். (வெளி. 16:13-16; 17:12-14) அந்தப் போர் சம்பந்தமாக தானியேல் ஒரு விஷயத்தைத் தெரியப்படுத்துகிறார். (தானியேல் 2:44-ஐ வாசியுங்கள்.) வெளிப்படுத்துதல் 13:1-ல் குறிப்பிடப்படும் மூர்க்க மிருகம், அதற்கு ஒப்பான உருவம், இரண்டு கொம்புகள் உள்ள மூர்க்க மிருகம் ஆகிய எல்லாமே அழிக்கப்படும்.
19. என்ன நடக்குமென்று நாம் உறுதியாய் நம்பலாம், இது எதற்கான சமயம்?
19 மூர்க்க மிருகத்தின் ஏழாம் தலை ஆட்சி செய்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். சீக்கிரத்தில் அழிக்கப்படவிருக்கும் இந்த மிருகத்தில் புதிதாக இனி எந்தத் தலையும் தோன்றாது. பொய் மதம் பூண்டோடு அழிக்கப்படும் சமயத்தில் ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசே உலகை ஆட்சி செய்துகொண்டிருக்கும். தானியேலும் யோவானும் உரைத்த தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நுணுக்க விவரங்கள்வரை துல்லியமாய் நிறைவேறியிருக்கின்றன. எனவே, பொய் மதம் அழிக்கப்படும்... அர்மகெதோன் போர் சீக்கிரத்தில் ஆரம்பிக்கும்... என்று நாம் உறுதியாய் நம்பலாம். இந்த விவரங்களையெல்லாம் யெகோவா ஏற்கெனவே வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தத் தீர்க்கதரிசனங்களில் உள்ள எச்சரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிவோமா? (2 பே. 1:19) இதுவே யெகோவாவையும் அவரது அரசாங்கத்தையும் ஆதரிப்பதற்கான சமயம்.—வெளி. 14:6, 7.
[அடிக்குறிப்புகள்]
a பைபிளில், பத்து என்ற எண் பொதுவாக முழுமையைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடத்தில், ரோமப் பேரரசிலிருந்து எழும்பிய எல்லா ராஜ்யங்களையும் அது குறிக்கிறது.
b 18-ஆம் நூற்றாண்டு முதற்கொண்டே பிரிட்டனும் அமெரிக்காவும் தனித்தனி நாடுகளாக இருந்து வந்தபோதிலும், எஜமானருடைய நாளின் ஆரம்பத்தில்தான் அவை இரண்டும் சேர்ந்து ஒரே உலக வல்லரசாகத் தோன்றும் என்று யோவான் விவரிக்கிறார். சொல்லப்போனால், வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் ‘எஜமானருடைய நாளில்’ நிறைவேறி வருகின்றன. (வெளி. 1:10) முதல் உலகப் போரின்போதுதான் அந்த ஏழாம் தலை, ஓர் உலக வல்லரசாகக் கைகோர்த்துச் செயல்பட ஆரம்பித்தது.
c போரில் இந்த ராஜா பயங்கரமான அழிவை ஏற்படுத்துவார் என்பதை தானியேல் அறிந்திருந்தார். அதனால்தான், ‘அவன் அதிசயமான [அஞ்சத்தக்க] விதமாக அழிம்புண்டாக்குவான்’ என்று எழுதினார். (தானி. 8:24) உதாரணத்திற்கு, இரட்டை உலக வல்லரசின் எதிரியாக இருந்த ஒரு நாட்டின் மீது அமெரிக்க இரண்டு அணுகுண்டுகளைப் போட்டு சரித்திரம் காணாத படுபயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியது.
d வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில் பக்கங்கள் 240, 241, 252, 253 ஆகியவற்றைப் பாருங்கள்.
[பக்கம் 17-ன் பெட்டி]
‘அந்த ராஜ்யங்களெல்லாம்’—எதைக் குறிக்கிறது?
கடவுளுடைய அரசாங்கம் ‘அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கும்’ என்று தானியேல் 2:44-ல் உள்ள தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது. சிலையின் பல்வேறு பாகங்களுக்குப் படமாக இருக்கும் ராஜ்யங்களைப் பற்றி மட்டுமே அந்தத் தீர்க்கதரிசனம் குறிப்பிடுகிறது.
மற்ற ராஜ்யங்களைப் பற்றி என்ன சொல்லலாம்? இதே விஷயத்தைப் பற்றி வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனம் விரிவான விளக்கத்தை அளிக்கிறது. “சர்வ வல்லமையுள்ள கடவுளின் மகா நாளில்,” ‘பூமியெங்கும் உள்ள ராஜாக்கள்’ யெகோவாவுக்கு எதிராகக் கூட்டிச்சேர்க்கப்படுவார்கள் என்று அது சொல்கிறது. (வெளி. 16:14; 19:19-21) எனவே, தானியேல் கண்ட சிலை குறிப்பிடும் ராஜ்யங்கள் மட்டுமல்ல, மற்றெல்லா ராஜ்யங்களும் அர்மகெதோன் போரில் அழிக்கப்படும்.