2 சாமுவேல்
15 இவற்றுக்குப் பின்பு, குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தை அப்சலோம் வாங்கினான். தன்னுடைய ரதத்துக்கு முன்னால் ஓட 50 ஆட்களை வேலைக்கு வைத்தான்.+ 2 அவன் விடியற்காலையிலேயே எழுந்து நகரவாசலுக்குப்+ போகிற வழியில் நின்றுகொள்வான். ராஜாவிடம் நீதி கேட்க+ யாராவது வந்தால் அவரைக் கூப்பிட்டு, “எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்பான்; அதற்கு அவர், “அடியேன் இஸ்ரவேலில் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன், இந்த ஊரிலிருந்து வருகிறேன்” என்று பதில் சொல்வார். 3 பின்பு அப்சலோம் அவரிடம், “நீங்கள் சொல்வதெல்லாம் நியாயமாக இருக்கிறது, ஆனால் உங்கள் வழக்கை விசாரிக்க ராஜா தரப்பில் ஒரு ஆள்கூட இல்லையே” என்று சொல்வான். 4 அதோடு, “நான் மட்டும் இந்தத் தேசத்துக்கே நீதிபதியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! யாருக்காவது ஏதாவது வழக்கு இருந்தாலோ, ஏதாவது பிரச்சினையைத் தீர்க்க வேண்டியிருந்தாலோ என்னிடம் வந்தால் போதும், நான் அவர்களுக்குக் கண்டிப்பாக நியாயம் வழங்குவேன்” என்று சொல்வான்.
5 அவன் முன்னால் தலைவணங்க யாராவது வந்தால், தன் கையை நீட்டி அவரை அரவணைத்து முத்தம் கொடுப்பான்.+ 6 ராஜாவிடம் நீதி கேட்க வருகிற இஸ்ரவேலர்கள் எல்லாரிடமும் இப்படித்தான் நடந்துகொள்வான். இப்படியே இஸ்ரவேல் ஆண்களைத் தன் பக்கம் ஈர்த்துக்கொண்டான்.*+
7 நான்கு* வருஷங்களுக்குப் பின்பு ராஜாவை அப்சலோம் பார்த்து, “நான் யெகோவாவிடம் நேர்ந்திருக்கிறேன். அதனால் எப்ரோனுக்குப்+ போய் அதைச் செலுத்திவிட்டு வரட்டுமா? 8 எருசலேமுக்குத் திரும்பிவர யெகோவா எனக்கு உதவி செய்தால், யெகோவாவுக்குப் பலி கொடுப்பதாக,* சீரியாவிலுள்ள கேசூரில் தங்கியிருந்தபோது+ நேர்ந்துகொண்டேன்”+ என்று சொன்னான். 9 அதற்கு ராஜா, “சரி, நல்லபடியாகப் போய்விட்டு வா”* என்று சொன்னார். அவன் புறப்பட்டு எப்ரோனுக்குப் போனான்.
10 அப்சலோம் இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களுக்கும் உளவாளிகளை அனுப்பினான். “ஊதுகொம்பின் சத்தத்தைக் கேட்டதும் ‘அப்சலோம் எப்ரோனில்+ ராஜாவாகிவிட்டார்!’ என்று முழங்குங்கள்” என அவர்களிடம் சொல்லியிருந்தான். 11 எருசலேமிலிருந்து 200 ஆண்கள் அப்சலோமுடன் எப்ரோனுக்குப் போயிருந்தார்கள். அப்சலோம்தான் அவர்களைக் கூப்பிட்டிருந்தான். அவர்களும் சந்தேகப்படாமல் போயிருந்தார்கள். அவனுடைய திட்டத்தைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. 12 அவன் பலி கொடுத்தபோது, கீலோ+ நகரத்தைச் சேர்ந்த அகித்தோப்பேல்+ என்பவனை அங்கிருந்து வரவழைத்தான்; அவன் தாவீதின் ஆலோசகன்.+ அப்சலோமின் சதித்திட்டம் தீவிரமடைந்தது; ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது.+
13 பின்பு தூதுவன் ஒருவன் தாவீதிடம் வந்து, “இஸ்ரவேல் ஆண்கள் அப்சலோம் பக்கம் சேர்ந்துவிட்டார்கள்!” என்று சொன்னான். 14 உடனே தாவீது எருசலேமில் தன்னுடன் இருந்த ஊழியர்கள் எல்லாரிடமும், “எழுந்திருங்கள், இங்கிருந்து ஓடிவிடலாம்.+ இல்லாவிட்டால் அப்சலோமிடமிருந்து ஒருவர்கூட தப்பிக்க முடியாது! உடனே கிளம்புங்கள், அவன் சீக்கிரமாக நம்மைத் துரத்திப் பிடித்துக் கொன்றுவிடுவான். நகரத்தில் இருக்கிறவர்களை வெட்டிச் சாய்த்துவிடுவான்!”+ என்று சொன்னார். 15 அதற்கு ராஜாவின் ஊழியர்கள், “எஜமானே, நீங்கள் என்ன சொன்னாலும் செய்யத் தயாராக இருக்கிறோம்”+ என்று சொன்னார்கள். 16 அதனால், ராஜா அங்கிருந்து புறப்பட்டார், அவருடைய வீட்டார் எல்லாரும் அவர் பின்னால் போனார்கள். அரண்மனையைக் கவனித்துக்கொள்வதற்காகத் தன்னுடைய மறுமனைவிகள் 10 பேரை+ மட்டும் விட்டுவிட்டுப் போனார். 17 ராஜாவின் பின்னால் மக்கள் எல்லாரும் போனார்கள். அவர்கள் பெத்-மெராக்கில்* சற்று நின்றார்கள்.
18 ராஜாவுடன் புறப்பட்ட எல்லா ஊழியர்களும் கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ காத் நகரத்திலிருந்து வந்த 600 ஆட்களும்+ அணிவகுத்துப் போனார்கள். ராஜா அவர்களைப் பார்வையிட்டார்.* 19 அப்போது காத் நகரத்தைச் சேர்ந்த ஈத்தாயிடம்,+ “நீயும் ஏன் எங்களுடன் வருகிறாய்? நீ திரும்பிப் போய்ப் புதிய ராஜாவோடு இரு. நீ அன்னிய தேசத்தைச் சேர்ந்தவன், உன்னுடைய ஊரைவிட்டு வேறு ஓடிவந்திருக்கிறாய். 20 நேற்றைக்குத்தான் நீ வந்தாய், இன்றைக்கே உன்னை அங்கும் இங்கும் நான் அலைய வைக்கலாமா? உன் ஆட்களைக் கூட்டிக்கொண்டு திரும்பிப் போ. யெகோவா உனக்கு உண்மையுள்ளவராக இருந்து மாறாத அன்பு காட்டுவார்!”+ என்று சொன்னார். 21 அதற்கு ஈத்தாய், “ராஜாவே, எஜமானே, உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்.* உங்கள் உயிர்மேல் ஆணையாகச் சொல்கிறேன்.* வாழ்வோ சாவோ, நீங்கள் எங்கே இருந்தாலும் அடியேன் உங்களோடுதான் இருப்பேன்!”+ என்று சொன்னார். 22 அதற்கு தாவீது, “சரி, பள்ளத்தாக்கைக் கடந்து போ” என்று சொன்னார். அதனால், காத் நகரத்தைச் சேர்ந்த ஈத்தாய்+ தன்னுடைய எல்லா ஆட்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கூட்டிக்கொண்டு பள்ளத்தாக்கைக் கடந்து போனார்.
23 ராஜாவும் அவருடைய ஆட்களும் போனபோது, எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் வாழ்ந்த மக்கள் கதறி அழுதார்கள். கீதரோன் பள்ளத்தாக்கின்+ பக்கத்தில் ராஜா நின்றுகொண்டிருந்தார்; அவருடன் வந்தவர்கள் எல்லாரும் வனாந்தரத்துக்குப் போகும் பாதையில் போவதற்காகப் பள்ளத்தாக்கைக் கடந்துகொண்டிருந்தார்கள். 24 சாதோக்கும்கூட+ அங்கே இருந்தார். உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியைச் சுமந்துகொண்டு+ லேவியர்கள்+ எல்லாரும் அவருடன் வந்திருந்தார்கள்; அவர்கள் உண்மைக் கடவுளின் பெட்டியைக் கீழே வைத்தார்கள். அபியத்தாரும்+ அங்கே வந்திருந்தார். அந்தச் சமயத்தில் தாவீதுடன் வந்தவர்கள் எல்லாரும் நகரத்திலிருந்து வெளியேறி பள்ளத்தாக்கைக் கடந்துவிட்டார்கள். 25 ஆனால் சாதோக்கிடம் ராஜா, “உண்மைக் கடவுளின் பெட்டியை நகரத்துக்குக் கொண்டுபோங்கள்.+ யெகோவாவுக்கு என்மேல் கருணை இருந்தால், அவர் என்னைத் திரும்பக் கூட்டிக்கொண்டு வருவார். அப்போது நான் இந்தப் பெட்டியையும் இதன் கூடாரத்தையும் பார்ப்பேன்.+ 26 அவருக்கு என்னைப் பிடிக்காவிட்டால், அவருக்கு எது சரியென்று படுகிறதோ அதையே செய்யட்டும்” என்று சொன்னார். 27 அதோடு குருவாகிய சாதோக்கைப் பார்த்து, “நீங்கள் இறைவாக்கு சொல்பவர்,+ இல்லையா? நிம்மதியாக எருசலேமுக்குத் திரும்பிப் போங்கள். உங்கள் மகன் அகிமாசையும் அபியத்தாரின் மகன் யோனத்தானையும்+ உங்களுடன் கூட்டிக்கொண்டு போங்கள். 28 உங்களிடமிருந்து தகவல் வரும்வரை நான் வனாந்தரத்திலுள்ள ஆற்றுத்துறைகளில்* காத்திருப்பேன்”+ என்று சொன்னார். 29 அதனால், சாதோக்கும் அபியத்தாரும் உண்மைக் கடவுளின் பெட்டியை எடுத்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிப்போய், அங்கேயே இருந்தார்கள்.
30 தாவீது அழுதுகொண்டே ஒலிவமலையில்+ ஏறினார்; தலையில் முக்காடு போட்டுக்கொண்டு வெறுங்காலில் ஏறினார். அவருடன் போன மக்கள் எல்லாரும்கூட தலையில் முக்காடு போட்டுக்கொண்டு அழுதபடியே ஏறினார்கள். 31 “இந்தச் சதியில் அப்சலோமுடன்+ அகித்தோப்பேலும் சேர்ந்துகொண்டார்”+ என்ற செய்தி தாவீதுக்கு வந்தது. உடனே தாவீது, “யெகோவாவே, தயவுசெய்து அகித்தோப்பேலின் ஆலோசனையை முட்டாள்களின் ஆலோசனைபோல் ஆக்கிவிடுங்கள்”+ என்று சொல்லி மன்றாடினார்.+
32 மக்கள் எல்லாரும் கடவுளை வழிபட்டுவந்த மலை உச்சிக்கு தாவீது வந்துசேர்ந்தபோது, அற்கியனான+ ஊசாய்+ அவரைச் சந்திக்க வந்தார்; அவர் தன்னுடைய அங்கியைக் கிழித்து, தலையில் மண்ணை வாரிப்போட்டிருந்தார். 33 தாவீது அவரிடம், “நீ என்னோடு வந்தால் எனக்குப் பாரமாகத்தானே இருப்பாய். 34 அதனால் நகரத்துக்கே திரும்பி போ. அப்சலோமிடம் போய், ‘ராஜாவே, நான் உங்கள் ஊழியன். இதுவரை உங்கள் அப்பாவுக்கு ஊழியம் செய்தேன், இனி உங்களுக்கு ஊழியம் செய்வேன்’+ என்று சொல். அப்போதுதான் அகித்தோப்பேலின் ஆலோசனையை உன்னால் ஒன்றுமில்லாமல் ஆக்க முடியும்.+ 35 குருமார்களான சாதோக்கும் அபியத்தாரும் உனக்குத் துணையாக இருப்பார்கள். அரண்மனையில் உனக்கு என்ன தகவல் தெரிந்தாலும் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்து.+ 36 சாதோக்கின் மகன் அகிமாசும்+ அபியத்தாரின் மகன் யோனத்தானும்+ அவர்களுடன்தான் இருக்கிறார்கள். உன் காதுக்கு வருகிற விஷயங்களையெல்லாம் அவர்கள் மூலம் எனக்குச் சொல்லி அனுப்பு” என்று சொன்னார். 37 அதனால், தாவீதின் நண்பர்* ஊசாய்+ நகரத்துக்குள் போனார். அதேசமயத்தில், அப்சலோமும் எருசலேமுக்குள் நுழைந்தான்.