1 நாளாகமம்
11 பின்பு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் எப்ரோனில்+ இருந்த தாவீதிடம் வந்து, “நாங்கள் உங்களுடைய இரத்த சொந்தம்.*+ 2 சவுல் ராஜாவாக இருந்தபோது, நீங்கள்தான் இஸ்ரவேலின் படைக்குத் தலைமை தாங்கினீர்கள்.+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களிடம், ‘நீதான் என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்கு மேய்ப்பனாக இருப்பாய், என் மக்களாகிய இஸ்ரவேலர்களுக்குத் தலைவனாக இருப்பாய்’ என்று சொல்லியிருக்கிறாரே”+ என்றார்கள். 3 இஸ்ரவேலின் பெரியோர்கள்* எல்லாரும் எப்ரோனில் இருந்த ராஜாவிடம் வந்தார்கள்; தாவீது எப்ரோனில் அவர்களோடு யெகோவா முன்னால் ஒப்பந்தம் செய்தார். சாமுவேல் மூலம் யெகோவா சொன்னபடியே+ அவர்கள் தாவீதை இஸ்ரவேலின் ராஜாவாக அபிஷேகம் செய்தார்கள்.+
4 பின்பு, தாவீதும் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எருசலேம் நகரத்தை, அதாவது எபூசு நகரத்தை,+ கைப்பற்றுவதற்காகப் போனார்கள். அந்தச் சமயத்தில் எபூசியர்கள்+ அங்கே குடியிருந்தார்கள். 5 அவர்கள் தாவீதிடம், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!”+ என்று சொல்லி கேலி செய்தார்கள். ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார்;+ அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது. 6 “எபூசியர்களை யார் முதலில் வெட்டி வீழ்த்துகிறாரோ அவரைப் படைத் தளபதியாக ஆக்குவேன்” என்று தாவீது சொல்லியிருந்தார். செருயாவின் மகன் யோவாப்+ முதலில் சென்று வெட்டி வீழ்த்தியதால், அவர் படைத் தளபதியாக ஆனார். 7 பின்பு, சீயோன் கோட்டையில் தாவீது குடியேறினார். அதனால்தான் அது ‘தாவீதின் நகரம்’ என்று அழைக்கப்பட்டது. 8 மில்லோவை* சுற்றிலும் நகரத்தின் மற்ற இடங்களிலும் மதில்களையும் மற்ற கட்டிடங்களையும் தாவீது கட்டினார்; நகரத்தின் மற்ற பகுதிகளை யோவாப் பழுதுபார்த்தார். 9 தாவீது மேலும் மேலும் வலிமை அடைந்துகொண்டே போனார்.+ பரலோகப் படைகளின் யெகோவா அவருக்குத் துணையாக இருந்தார்.
10 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் தலைவர்களைப் பற்றிய தகவல் இது; தாவீது ராஜாவாக ஆவதற்கு மற்ற இஸ்ரவேலர்கள் எல்லாரோடும் சேர்ந்து இவர்கள் ஆதரவு தந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வாக்குறுதி கொடுத்தபடியே அவரை ராஜாவாக்கினார்கள்.+ 11 தாவீதுடன் இருந்த மாவீரர்களின் பட்டியல் இதுவே: அக்மோனியனின் மகன் யாஷோபியாம்.+ அவர் மூன்று மாவீரர்களில் ஒருவர், அவர்தான் அந்த மாவீரர்களுக்குத் தலைவர்.+ ஒரு சமயம், அவர் தன்னுடைய ஈட்டியால் 300 பேரைக் கொன்றுபோட்டார்.+ 12 அவருக்கு அடுத்த இடத்தில், அகோகியனான+ தோதோவின் மகன் எலெயாசார்+ இருந்தார். மூன்று மாவீரர்களில் அவரும் ஒருவர். 13 பெலிஸ்தியர்கள் போர் செய்வதற்காகத் திரண்டு வந்திருந்தபோது பாஸ்-தம்மீம்+ என்ற இடத்தில் தாவீதுடன் அவர் இருந்தார்; பெலிஸ்தியர்களைப் பார்த்ததும் வீரர்கள் தலைதெறிக்க ஓடிப்போய்விட்டார்கள். அங்கே இருந்த வயலில் பார்லி செழித்து வளர்ந்திருந்தது. 14 அவர் அந்த வயல் நடுவில் நின்று அதைப் பாதுகாத்தார். பெலிஸ்தியர்களை வெட்டி வீழ்த்திக்கொண்டே இருந்தார். அன்று அவர் மூலம் யெகோவா மாபெரும் வெற்றியைத் தந்தார்.+
15 கற்பாறையிலிருந்த, அதாவது அதுல்லாம் குகையிலிருந்த,+ தாவீதிடம் 30 தலைவர்களில் மூன்று பேர் போனார்கள். அந்தச் சமயத்தில், பெலிஸ்தியர்களின் படை ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்+ முகாம்போட்டிருந்தது. 16 அப்போது, தாவீது பாதுகாப்பான ஓர் இடத்தில் இருந்தார். பெலிஸ்தியர்களின் காவல்படை ஒன்று பெத்லகேமில் இருந்தது. 17 அப்போது தாவீது, “பெத்லகேம்+ நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீரைக் குடிக்க ஆசையாக இருக்கிறது” என்று ஏக்கத்தோடு சொன்னார். 18 உடனே அந்த மூன்று பேரும் பெலிஸ்தியர்களோடு சண்டை போட்டுக்கொண்டே அவர்களுடைய முகாமுக்குள் நுழைந்து, பெத்லகேம் நுழைவாசலில் இருக்கும் தண்ணீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் கொண்டுவந்தார்கள். ஆனால் தாவீது அதைக் குடிக்க மறுத்து, யெகோவாவுக்காகக் கீழே ஊற்றிவிட்டார். 19 அப்போது அவர், “நான் கடவுளுக்குப் பயந்து நடப்பவன். அதனால், இப்படிச் செய்வதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது! எனக்காக உயிரையே பணயம் வைத்த என் வீரர்களின் இரத்தத்தை நான் குடிக்க வேண்டுமா? இவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து இதைக் கொண்டுவந்திருக்கிறார்களே!”+ என்று சொன்னார். இப்படி, அந்தத் தண்ணீரைக் குடிக்க மறுத்துவிட்டார். இவையே அந்த மூன்று மாவீரர்கள் செய்த செயல்கள்.
20 யோவாபின்+ சகோதரனாகிய அபிசாய்,+ இன்னும் மூன்று மாவீரர்களுக்குத் தலைவரானார். அவர் தன்னுடைய ஈட்டியால் 300 பேரைக் கொன்றுபோட்டார். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார்.+ 21 மாவீரர்கள் மூன்று பேரில் தனிச்சிறப்பு பெற்றவராகவும் தலைவராகவும் இருந்தாலும், முதல் மூன்று மாவீரர்களுக்கு அவர் சமமாக இல்லை.
22 யோய்தாவின் மகன் பெனாயா+ அஞ்சாநெஞ்சம் உள்ளவர். கப்செயேலில்+ வீரச்செயல்கள் பலவற்றைச் செய்திருந்தார். மோவாபியனான அரியேலின் இரண்டு மகன்களைக் கொன்றுபோட்டார். ஒருநாள், பனி பெய்துகொண்டிருந்தபோது தண்ணீர்த் தொட்டிக்குள் இறங்கி ஒரு சிங்கத்தைக் கொன்றுபோட்டார்.+ 23 அதோடு, மிக மிக உயரமாக இருந்த ஓர் எகிப்தியனையும் கொன்றுபோட்டார். அந்த எகிப்தியனின் உயரம் சுமார் 7.3 அடி.*+ அவன் கையில் இருந்த ஈட்டியின் கம்பு நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது.+ ஆனாலும், பெனாயா ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அவனை எதிர்த்துச் சண்டைபோடப் போனார். அவனுடைய கையிலிருந்த ஈட்டியைப் பிடுங்கி, அந்த ஈட்டியாலேயே அவனைக் குத்திக் கொன்றார்.+ 24 இவையெல்லாம் யோய்தாவின் மகன் பெனாயாவின் செயல்கள். முதல் மூன்று மாவீரர்களைப் போலவே இவரும் புகழ் பெற்றிருந்தார். 25 மாவீரர்கள் 30 பேரைவிட இவர் தனிச்சிறப்பு பெற்றிருந்தார். ஆனால், முதல் மூன்று மாவீரர்களுக்கு இவர் சமமாக இல்லை.+ ஆனாலும், தாவீது இவரைத் தன்னுடைய மெய்க்காவலர்களுக்குத் தலைவராக நியமித்தார்.
26 தாவீதின் படையில் இருந்த மாவீரர்கள்: யோவாபின் சகோதரன் ஆசகேல்,+ பெத்லகேமைச் சேர்ந்த தோதோவின் மகன் எல்க்கானான்,+ 27 ஆரத்தியனான சம்மோத், பெலோனியனான ஏலெஸ், 28 தெக்கோவா ஊரைச் சேர்ந்த இக்கேசின் மகன் ஈரா,+ ஆனதோத்தியனான அபியேசர்,+ 29 உஷாத்தியனான சிபெக்காய்,+ அகோகியனான ஈலாய், 30 நெத்தோபாத்தியனான மகராய்,+ நெத்தோபாத்தியனான பாணாவின் மகன் ஏலேத்,+ 31 பென்யமீன் கோத்திரத்தாருடைய+ கிபியாவைச் சேர்ந்த ரிபாயின் மகன் இத்தாய், பிரத்தோனியனான பெனாயா, 32 காயாஸ்+ பள்ளத்தாக்கை* சேர்ந்த ஊராய், அர்பாத்தியனான அபியேல், 33 பகூரிமியனான அஸ்மாவேத், சால்பீமியனான எலியாபா, 34 கீசோனியனான ஆசேமின் மகன்கள், ஆராரியனான சாகியின் மகன் யோனத்தான், 35 ஆராரியனான சாக்காரின் மகன் அகியாம், ஊரின் மகன் எலிபால், 36 மெகராத்தியனான ஹேப்பேர், பெலோனியனான அகியா, 37 கர்மேல் ஊரைச் சேர்ந்த எஸ்ரோ, எஸ்பாயின் மகன் நாராய், 38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் மகன் மிப்கார், 39 அம்மோனியனான சேலேக், செருயாவின் மகனாகிய யோவாபின் ஆயுதங்களைச் சுமந்த பெரோத்தியனான நகராய், 40 இத்தரியனான ஈரா, இத்தரியனான காரேப், 41 ஏத்தியனான உரியா,+ அக்லாயின் மகன் சாபாத், 42 ரூபன் கோத்திரத்தைச் சேர்ந்தவனும் அதன் தலைவனுமான ஷீஸாவின் மகன் அதினா, அவனோடு இருந்த 30 பேர்; 43 மாக்காவின் மகன் ஆனான், மிதினியனான யொஷபாத், 44 அஸ்தரோத்தியனான உத்சியா, ஆரோவேரியனான ஓத்தாமின் மகன்களான சமாவும் எயியேலும்; 45 ஷிம்ரியின் மகன் யெதியாயேல், அவன் சகோதரன் தித்சியனான யோஹா, 46 மாகாவியனான ஏலியேல், எல்நாமின் மகன்களான எரிபாயும் யொசவியாவும், மோவாபியனான இத்மா; 47 ஏலியேல், ஓபேத், மெசோபாயா ஊரானான யாசீயேல்.