ஏசாயா
27 அந்த நாளில், யெகோவா லிவியாதானை* தாக்குவார்.
அதைக் கூர்மையான, பயங்கரமான வாளால் தாக்குவார்.+
வளைந்து நெளிந்து போகும் அந்தப் பாம்பைத் தண்டிப்பார்.
கடலில் வாழும் அந்த ராட்சதப் பிராணியைக் கொன்றுபோடுவார்.
2 அந்த நாளில், அவளை* பார்த்து இப்படிப் பாடுங்கள்:
“திராட்சமதுவை* தரும் திராட்சைத் தோட்டமே!+
3 யெகோவா இப்படிச் சொல்கிறார்: ‘நான் அவளைப் பாதுகாக்கிறேன்.+
தண்ணீர் ஊற்றி ஊற்றி அவளை வளர்க்கிறேன்.+
ராப்பகலாக அவளைக் காவல் காக்கிறேன்.
யாரும் அவள்மேல் கை வைக்காதபடி பார்த்துக்கொள்கிறேன்.+
4 அவள்மேல் எனக்கு இருந்த கோபம் போய்விட்டது.+
முட்செடிகளையும் களைகளையும் அவள் நடுவிலே நடுபவன் யார்?
அவனோடு நான் போர் செய்வேன்.
அவன் நடுவதையெல்லாம் மிதித்துப்போட்டு, கொளுத்திவிடுவேன்.
5 அதனால், என்னோடு அவன் சமாதானமாகட்டும்.
என்னோடு சமாதானம் செய்துகொள்ளட்டும்.
என் கோட்டைக்குள் போய்ப் பாதுகாப்பாக இருக்கட்டும்.’”
6 இனிவரும் நாட்களில் யாக்கோபின் ஜனங்கள் வேர்விட்டு வளருவார்கள்.
இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய மரமாகி பூத்துக் குலுங்குவார்கள்.+
அவர்களுடைய கனிகளால் தேசம் நிறைந்திருக்கும்.+
7 இஸ்ரவேலர்கள் கடுமையாகத் தாக்கப்பட வேண்டுமா?
அவர்கள் வெட்டிச் சாய்க்கப்பட வேண்டுமா?
8 மிரள வைக்கும் சத்தத்தோடு அவர்களிடம் அவர் வழக்காடுவார், அவர்களைத் துரத்தியடிப்பார்.
கிழக்கிலிருந்து வீசும் பலமான காற்றைப் போல மோதித்தள்ளுவார்.+
9 இப்படி, யாக்கோபின் ஜனங்கள் செய்த குற்றத்துக்குப் பாவப் பரிகாரம் செய்யப்படும்.+
அவர்களுடைய பாவம் நீக்கப்படும்போது கிடைக்கும் பலன் இதுதான்:
பலிபீடத்தின் கற்களையெல்லாம் அவர் நொறுக்கிவிடுவார்.
அவை சுண்ணாம்புக் கற்களைப் போலத் தூள் தூளாகும்.
10 மதில்கள் சூழ்ந்த நகரம் வெறுமையாக்கப்படும்.
மேய்ச்சல் நிலங்கள் கைவிடப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத வனாந்தரம்போல் ஆகிவிடும்.+
கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கேயே படுத்துக்கொள்ளும்.
அங்குள்ள இலைதழைகளைத் தின்னும்.+
11 கிளைகள் காய்ந்துபோகும்போது,
பெண்கள் வந்து அவற்றை ஒடித்துக்கொண்டு போய்,
விறகாகப் பயன்படுத்துவார்கள்.
அந்த ஜனங்களைப் படைத்தவர் அவர்கள்மேல் இரக்கம் காட்ட மாட்டார்.
12 பெருக்கெடுத்து ஓடும் ஆறு* தொடங்கி எகிப்தின் பள்ளத்தாக்குவரை*+ சிதறியிருக்கும் இஸ்ரவேல் ஜனங்களே! மரத்திலிருந்து உதிர்த்த பழங்களை ஒருவன் ஒவ்வொன்றாகச் சேகரிப்பதுபோல், அந்நாளில் யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்ப்பார்.+ 13 அந்த நாளில், ஒரு பெரிய ஊதுகொம்பு ஊதப்படும்.+ எகிப்தில் சிதறியிருக்கிறவர்களும்+ அசீரியாவில் தினம்தினம் செத்துப்பிழைக்கிறவர்களும்+ எருசலேமிலுள்ள பரிசுத்தமான மலைக்கு வந்து யெகோவாவை வணங்குவார்கள்.+