எரேமியா
1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் நகரத்தைச்+ சேர்ந்த குருவாகிய இல்க்கியாவின் மகன் எரேமியா* எழுதுவது. 2 ஆமோனின்+ மகனாகிய யோசியா+ யூதாவை ஆட்சி செய்த 13-ஆம் வருஷத்தில் யெகோவாவிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. 3 யோசியாவின் மகன் யோயாக்கீம்+ யூதாவை ஆட்சி செய்த காலத்திலும் அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது. யூதாவின் ராஜாவும் யோசியாவின் மகனுமான சிதேக்கியாவின்+ 11-ஆம் வருஷத்தின் முடிவு வரையிலும், எருசலேம் ஜனங்கள் சிறைபிடிக்கப்பட்டுப் போன ஐந்தாம் மாதம் வரையிலும்+ அவரிடமிருந்து எனக்குச் செய்தி கிடைத்தது.
4 யெகோவா என்னிடம்,
5 “உன் தாயின் வயிற்றில் உன்னை உருவாக்குவதற்கு முன்பே உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்.+
நீ பிறப்பதற்கு முன்பே ஒரு விசேஷ வேலைக்காக உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.*+
தேசங்களுக்கு உன்னை ஒரு தீர்க்கதரிசியாக நியமித்தேன்” என்று சொன்னார்.
6 ஆனால் நான், “ஐயோ! உன்னதப் பேரரசராகிய யெகோவாவே!
நான் சின்னப் பையன்,+ எனக்குப் பேசத் தெரியாதே!”+ என்று சொன்னேன்.
7 அப்போது யெகோவா என்னிடம்,
“நீ சின்னப் பையன் என்று சொல்லாதே.
யாரிடமெல்லாம் உன்னை அனுப்புகிறேனோ அவர்களிடமெல்லாம் நீ போக வேண்டும்.
எதையெல்லாம் சொல்லச் சொல்கிறேனோ அதையெல்லாம் நீ அவர்களிடம் சொல்ல வேண்டும்.+
8 அவர்களைப் பார்த்துப் பயப்படாதே.+
ஏனென்றால், ‘உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னோடு இருக்கிறேன்’+ என்று யெகோவா சொல்கிறார்” என்றார்.
9 பின்பு, யெகோவா தன்னுடைய கையை நீட்டி என் வாயைத் தொட்டார்.+ யெகோவா என்னிடம், “என் வார்த்தைகளை உன் வாயில் வைக்கிறேன்.+ 10 தேசங்கள்மேலும் ராஜ்யங்கள்மேலும் இன்று உனக்கு அதிகாரம் தருகிறேன். பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உனக்கு அதிகாரம் தருகிறேன்”+ என்றார்.
11 மறுபடியும் யெகோவா என்னிடம், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “வாதுமை மரத்தின்* கிளையைப் பார்க்கிறேன்” என்று சொன்னேன்.
12 அப்போது யெகோவா, “சரியாகச் சொன்னாய்; என் வார்த்தையை நிறைவேற்றி முடிக்கும்வரை நான் ஓய மாட்டேன்”* என்று சொன்னார்.
13 யெகோவா இரண்டாவது தடவை என்னிடம், “நீ என்ன பார்க்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நான், “கொதிக்கிற பானையைப் பார்க்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து தெற்குப் பக்கமாகச் சாய்க்கப்பட்டிருக்கிறது” என்று சொன்னேன். 14 அப்போது யெகோவா என்னிடம்,
“தேசத்தில் இருக்கிற எல்லாருக்கும் எதிராக
வடக்கிலிருந்து அழிவு வரும்.+
15 ஏனென்றால், ‘வடக்கு ராஜ்யங்களில் உள்ள எல்லா கோத்திரங்களையும் நான் அழைத்திருக்கிறேன்’ என்று யெகோவா சொல்கிறார்.+
‘அவர்கள் வருவார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும்
எருசலேமின் வாசல்களில் தங்கள் சிம்மாசனத்தை நிறுத்தி வைப்பார்கள்.+
எருசலேமின் எல்லா மதில்களையும்,
யூதாவின் எல்லா நகரங்களையும் தாக்குவார்கள்.+
16 என் ஜனங்கள் அக்கிரமங்களைச் செய்வதால் நான் அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு கொடுப்பேன்.
அவர்கள் என்னை உதறித்தள்ளிவிட்டு,+
பொய் தெய்வங்களுக்குத் தகன பலி செலுத்துகிறார்கள்.*+
தங்கள் கைகளால் செய்த சிலைகளை வணங்குகிறார்கள்.’+
17 நீ தயாராகிக்கொள்.
எழுந்து நின்று, நான் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் அவர்களிடம் சொல்.
அவர்களைப் பார்த்து நடுங்காதே.+
அப்படி நடுங்கினால், அவர்களுக்கு முன்பாக நான் உன்னை நடுங்க வைப்பேன்.