யோசுவா
11 ஆத்சோரின் ராஜா யாபீன் இவற்றைக் கேள்விப்பட்டான். உடனே, மாதோனின் ராஜா+ யோபாபுக்கும், சிம்ரோனின் ராஜாவுக்கும், அக்சாபின் ராஜாவுக்கும்,+ 2 வடக்கு மலைப்பகுதியில் இருந்த ராஜாக்களுக்கும், கின்னரேத்தின் தெற்கு சமவெளிகளில்* இருந்த ராஜாக்களுக்கும், சேப்பெல்லாவில் இருந்த ராஜாக்களுக்கும், மேற்கே தோரின் மலைச் சரிவுகளில்+ இருந்த ராஜாக்களுக்கும் செய்தி அனுப்பினான். 3 அதோடு, கிழக்கிலும் மேற்கிலும் இருந்த கானானியர்களுக்கும்,+ மலைப்பகுதியில் இருந்த எமோரியர்களுக்கும்,+ ஏத்தியர்களுக்கும், பெரிசியர்களுக்கும், எபூசியர்களுக்கும், மிஸ்பா தேசத்தில் எர்மோன் மலையடிவாரத்தில்+ இருந்த ஏவியர்களுக்கும்கூட+ செய்தி அனுப்பினான். 4 அதனால், அவர்கள் எல்லாரும் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்தார்கள். கடற்கரை மணலைப் போல ஏராளமானவர்கள் கணக்குவழக்கில்லாத குதிரைகளோடும் போர் ரதங்களோடும் திரண்டு வந்தார்கள். 5 அந்த ராஜாக்கள் எல்லாரும் ஓர் இடத்தில் சந்திப்பதற்கு முடிவுசெய்தார்கள். அதன்படியே, இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்ய மேரோமின் நீரோடைக்குப் பக்கத்தில் ஒன்றாக வந்து முகாம்போட்டார்கள்.
6 அப்போது யெகோவா யோசுவாவிடம், “அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்,+ நாளைக்கு இந்த நேரத்தில் அவர்கள் எல்லாரையும் உன் கையில் கொடுப்பேன். அவர்களை உன்னுடைய வாளுக்குப் பலியாக்குவேன். நீ அவர்களுடைய குதிரைகளை நொண்டியாக்கி*+ ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்” என்று சொன்னார். 7 யோசுவாவும் அவரோடு இருந்த படைவீரர்கள் எல்லாரும் மேரோமின் நீரோடைக்குப் பக்கத்தில் அவர்கள்மேல் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். 8 யெகோவா அவர்களை இஸ்ரவேலர்களின் கையில் கொடுத்தார்.+ எதிரிகளை அவர்கள் தோற்கடித்து, பெரிய சீதோன்+ மற்றும் மிஸ்ரபோத்-மாயீம்+ வரைக்கும், கிழக்கே மிஸ்பே பள்ளத்தாக்கு வரைக்கும் விரட்டிக்கொண்டு போனார்கள். ஒருவர் விடாமல் எல்லாரையும் வெட்டி வீழ்த்தினார்கள்.+ 9 அதன்பின், யோசுவாவிடம் யெகோவா சொல்லியிருந்தபடியே, அவர்களுடைய குதிரைகளை அவர் நொண்டியாக்கினார்,* ரதங்களை நெருப்பில் சுட்டெரித்தார்.+
10 பின்பு யோசுவா ஆத்சோர் பக்கம் திரும்பி, அதைக் கைப்பற்றி, அதன் ராஜாவை வாளால் வெட்டிக் கொன்றார்.+ ஏனென்றால், ஆத்சோர்தான் முன்பு இந்த எல்லா ராஜ்யங்களுக்கும் தலைநகரமாக இருந்தது. 11 வீரர்கள் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வாளால் கொன்றார்கள்.+ பின்பு யோசுவா ஆத்சோரைத் தீ வைத்துக் கொளுத்தினார். 12 அந்த ராஜாக்களுடைய நகரங்களையெல்லாம் கைப்பற்றி, அவர்களை வாளால் வீழ்த்தினார்.+ யெகோவாவின் ஊழியராகிய மோசே கட்டளை கொடுத்திருந்தபடியே அவர்களைக் கொன்றார்.+ 13 ஆனாலும் ஆத்சோரைத் தவிர, குன்றின் மேல் அமைந்திருந்த எந்த நகரத்தையும் இஸ்ரவேலர்கள் சுட்டெரிக்கவில்லை. இந்த ஒரு நகரத்தை மட்டும்தான் யோசுவா சுட்டெரித்தார். 14 மற்ற நகரங்களில் இருந்த எல்லா பொருள்களையும் மிருகங்களையும் இஸ்ரவேலர்கள் சூறையாடினார்கள்.+ அங்கிருந்த மனிதர்கள் ஒவ்வொருவரையும் வாளால் வெட்டிப்போட்டார்கள்.+ யாரையுமே உயிரோடு விட்டுவைக்கவில்லை.+ 15 தன்னுடைய ஊழியராகிய மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளை மோசே அப்படியே யோசுவாவுக்குக் கொடுத்திருந்தார்.+ யோசுவா அந்தக் கட்டளைகளுக்கு அப்படியே கீழ்ப்படிந்தார். மோசேக்கு யெகோவா கொடுத்திருந்த கட்டளைகளில் ஒன்றையும் யோசுவா செய்யாமல் விடவில்லை.+
16 யூதாவின் மலைப்பகுதியையும் நெகேபு+ முழுவதையும் கோசேன் பகுதி முழுவதையும் சேப்பெல்லாவையும்+ அரபாவையும்+ இஸ்ரவேலின் மலைப்பகுதியையும் அதன் தாழ்வான பிரதேசத்தையும் யோசுவா கைப்பற்றினார். 17 அதாவது, சேயீருக்கு ஏறிப்போகும் ஆலாக் மலைமுதல் எர்மோன்+ மலையடிவாரத்தில் அமைந்துள்ள லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்-காத்வரை+ எல்லா தேசங்களையும் கைப்பற்றினார். அங்குள்ள ராஜாக்கள் எல்லாரையும் பிடித்து வெட்டிப்போட்டார். 18 அந்த எல்லா ராஜாக்களோடும் யோசுவா ரொம்பக் காலம் போர் செய்தார். 19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+ 20 அங்கிருந்த ஜனங்கள் இரக்கம் பெறுவதற்கோ உயிர்வாழ்வதற்கோ தகுதியில்லாதவர்கள் என்று யெகோவா நினைத்ததால், அவர்களுடைய இதயம் இறுகிப்போவதற்கும் அவர்கள் இஸ்ரவேலர்களை எதிர்த்துப் போர் செய்வதற்கும் அவர் விட்டுவிட்டார்.+ மோசேக்கு யெகோவா கட்டளை கொடுத்திருந்தபடியே, அவர்கள் எல்லாரையும் இஸ்ரவேலர்கள் அழிக்க வேண்டியிருந்தது.+
21 அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+ 22 இஸ்ரவேலர்களின் தேசத்தில் ஏனாக்கியர்கள் ஒருவர்கூட மிஞ்சவில்லை. காசா,+ காத்,+ அஸ்தோத்+ ஆகிய நகரங்களில் மட்டும்தான் அவர்கள் இருந்தார்கள்.+ 23 மோசேக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதியின்படியே,+ எல்லா தேசத்தையும் யோசுவா தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். பின்பு, அதை இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகப் பிரித்துக் கொடுத்தார். அவரவர் கோத்திரத்துக்குச் சேர வேண்டிய பங்கின்படியே பிரித்துக் கொடுத்தார்.+ தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+