எசேக்கியேல்
22 யெகோவா மறுபடியும் என்னிடம், 2 “மனிதகுமாரனே, கொலைப்பழியை* சுமக்கிற நகரத்துக்குத்+ தீர்ப்பு சொல்ல நீ தயாரா? அவள் செய்த எல்லா அருவருப்புகளையும் சுட்டிக்காட்ட நீ தயாரா?+ 3 நீ அவளிடம் இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “சொந்த ஜனங்களையே கொலை செய்கிற நகரமே,+ உன்னுடைய நேரம் நெருங்கிவிட்டது.+ நீ அருவருப்பான* சிலைகளைச் செய்து உன்னைத் தீட்டுப்படுத்துகிறாய்.+ 4 நீ கொலைப்பழியைச் சுமக்கிறாய்,+ உன்னுடைய அருவருப்பான சிலைகளால் தீட்டுப்பட்டிருக்கிறாய்.+ உன்னுடைய முடிவை நீயே வேகமாக வர வைத்துவிட்டாய். உன்னுடைய காலம் முடியப்போகிறது. அதனால், உன்னைப் பார்த்து எல்லா தேசத்தாரும் பழித்துப் பேசும்படி செய்வேன். அவர்கள் உன்னைக் கேலி செய்வார்கள்.+ 5 கெட்ட பெயர் எடுத்தவளே, கலவரத்துக்குப் பேர்போனவளே, பக்கத்தில் இருக்கிறவர்களும் தூரத்தில் இருக்கிறவர்களும் உன்னைக் கிண்டல் செய்வார்கள்.+ 6 இதோ, உன் நடுவில் இருக்கிற இஸ்ரவேலின் தலைவர்கள் எல்லாரும் தங்களுடைய அதிகாரத்தை வைத்துக்கொண்டு ஜனங்களைக் கொலை செய்கிறார்கள்.+ 7 ஜனங்கள் யாரும் தங்களுடைய அம்மா அப்பாவை மதிப்பதில்லை.+ அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை மோசடி செய்கிறார்கள். அப்பா இல்லாத பிள்ளைகளையும்* விதவைகளையும் மோசமாக நடத்துகிறார்கள்.”’”+
8 “‘என்னுடைய பரிசுத்தமான இடங்களை நீ மதிக்கவில்லை, என்னுடைய ஓய்வுநாட்களின் புனிதத்தைக் கெடுத்தாய்.+ 9 உயிரைப் பறிக்கும் எண்ணத்தோடு மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்கள்+ உன் நடுவில் இருக்கிறார்கள். மலைகள்மேல் பலிகளைச் சாப்பிடுகிறவர்களும், ஆபாசமாக நடக்கிறவர்களும்,+ 10 அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவர்களும்,+ மாதவிலக்கினால் தீட்டாக இருக்கும் பெண்ணைப் பலாத்காரம் செய்கிறவர்களும்,+ 11 அடுத்தவருடைய மனைவியிடம் படுகேவலமாக நடக்கிறவர்களும்,+ மருமகளையே கெடுத்து தீட்டுப்படுத்துகிறவர்களும்,+ சொந்த அப்பாவுக்குப் பிறந்தவளையே* கற்பழிக்கிறவர்களும்,+ 12 கொலை செய்வதற்காகக் கூலி வாங்குகிறவர்களும் உன் நடுவில் இருக்கிறார்கள்.+ நீ அநியாய வட்டி வாங்குகிறாய்.+ அடுத்தவர்களுடைய பணத்தைப் பறிக்கிறாய்.+ என்னை அடியோடு மறந்துவிட்டாய்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.
13 ‘நீ கொள்ளை லாபம் சம்பாதிப்பதையும் கொலை செய்வதையும் பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது. 14 நான் உன்னைத் தண்டிக்கும்போது நீ தைரியமாகவும் துணிச்சலாகவும் இருக்க முடியுமா? யெகோவாவாகிய நானே இதைச் சொல்கிறேன். நான் கண்டிப்பாக உன்னைத் தண்டிப்பேன்.+ 15 உன் ஜனங்களை மற்ற தேசங்களுக்குச் சிதறிப்போக வைப்பேன்.+ உன்னுடைய அசுத்தத்துக்கு முடிவுகட்டுவேன்.+ 16 மற்ற ஜனங்களுக்குமுன் நீ அவமானப்படுவாய். அப்போது, நான் யெகோவா என்று தெரிந்துகொள்வாய்’”+ என்று சொன்னார்.
17 பின்பு, யெகோவா மறுபடியும் என்னிடம், 18 “மனிதகுமாரனே, இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாத கசடு போல இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் உலையில் இருக்கிற செம்பையும் தகரத்தையும் இரும்பையும் ஈயத்தையும் போல இருக்கிறார்கள். வெள்ளியின் கசடு போல ஆகிவிட்டார்கள்.+
19 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஒன்றுக்கும் உதவாத கசடு+ போல ஆகிவிட்டதால் உங்களை எருசலேமுக்குள் கொண்டுவரப் போகிறேன். 20 வெள்ளியையும் செம்பையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் பற்றியெரிகிற உலையில் எப்படி ஒன்றாகப் போட்டு, ஊதி, உருக்குவார்களோ அப்படியே நான் பற்றியெரிகிற என்னுடைய கோபத்தினால் உங்களை ஒன்றாகக் கொண்டுவந்து, ஊதி, உருக்குவேன்.+ 21 நான் உங்களை ஒன்றுகூட்டி, என்னுடைய ஆக்ரோஷத் தீயை உங்கள்மேல் ஊதுவேன்.+ நீங்கள் நகரத்தில் உருக்கப்படுவீர்கள்.+ 22 வெள்ளி எப்படி உலையில் உருக்கப்படுகிறதோ அப்படியே நீங்கள் நகரத்தில் உருக்கப்படுவீர்கள். அப்போது, யெகோவாவாகிய நான்தான் உங்கள்மேல் கோபத்தைக் கொட்டினேன் என்று தெரிந்துகொள்வீர்கள்’” என்றார்.
23 யெகோவா மறுபடியும் என்னிடம், 24 “மனிதகுமாரனே, நீ அவளைப் பார்த்து இப்படிச் சொல்: ‘கோபத்தின் நாளில் நீ சுத்தம் செய்யப்பட மாட்டாய், உன்மேல் மழை பெய்யாது. 25 உன்னுடைய தீர்க்கதரிசிகள் சதி செய்கிறார்கள்.+ இரையைக் கடித்துக் குதறுகிற கர்ஜிக்கும் சிங்கங்களைப் போல இருக்கிறார்கள்.+ அவர்கள் ஜனங்களைக் கொன்றுபோடுகிறார்கள். சொத்துகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் பிடுங்கிக்கொள்கிறார்கள். நிறைய பெண்களை விதவைகளாக ஆக்குகிறார்கள். 26 உன்னுடைய குருமார்கள் என் சட்டத்தை மீறுகிறார்கள்.+ என்னுடைய பரிசுத்தமான இடங்களைத் தீட்டுப்படுத்துகிறார்கள்.+ பரிசுத்தமான காரியங்களுக்கும் சாதாரணமான காரியங்களுக்கும் அவர்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை.+ சுத்தம் எது, அசுத்தம் எது என்று சொல்லிக்கொடுப்பதில்லை.+ என்னுடைய ஓய்வுநாட்களைக் கடைப்பிடிப்பதில்லை. அவர்களால் என்னுடைய பெயர் கெட்டுப்போகிறது. 27 உன்னுடைய அதிகாரிகள் இரையைக் கடித்துக் குதறுகிற ஓநாய்களைப் போல இருக்கிறார்கள். அநியாயமாய் லாபம் சம்பாதிப்பதற்காக ஜனங்களைத் தாக்கி, கொலை செய்கிறார்கள்.+ 28 உன்னுடைய தீர்க்கதரிசிகள் தங்களுடைய அக்கிரமங்களைப் பூசிமெழுகுகிறார்கள். போலித் தரிசனங்களைப் பார்க்கிறார்கள், பொய்யாகக் குறிசொல்கிறார்கள்.+ யெகோவாவாகிய நான் எதையும் சொல்லாதபோது, “உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்” என்று சொல்கிறார்கள். 29 உன்னுடைய ஜனங்கள் மோசடி செய்கிறார்கள், திருடுகிறார்கள்,+ ஏழை எளியவர்களை மோசமாக நடத்துகிறார்கள், அவர்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களுக்கு நியாயம் செய்யாமல் அவர்களை ஏமாற்றுகிறார்கள்.’
30 ‘நான் தேசத்தை அழித்துவிடாதபடி+ அவர்களில் யாராவது மதிலைப் பழுதுபார்த்து அல்லது அதன் பிளவுக்குப் பக்கத்தில் காவலுக்கு நின்று அதைப் பாதுகாப்பார்களா என்று பார்த்தேன். ஆனால், ஒருவர்கூட இல்லை. 31 அதனால், என் கோபத்தை அவர்கள்மேல் கொட்டுவேன். என்னுடைய ஆக்ரோஷத் தீயினால் அவர்களை அழிப்பேன். அவர்கள் செய்த குற்றங்களுக்கான விளைவுகளை அவர்களே அனுபவிக்கும்படி செய்வேன்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”