1 சாமுவேல்
4 கடவுளுடைய செய்திகளை இஸ்ரவேலர்களுக்கு சாமுவேல் சொல்லிவந்தார்.
ஒருசமயம், பெலிஸ்தியர்களை எதிர்த்துப் போர் செய்ய இஸ்ரவேலர்கள் புறப்பட்டுப் போய், எபெனேசருக்குப் பக்கத்தில் முகாம்போட்டார்கள். பெலிஸ்தியர்களும் ஆப்பெக்கில் முகாம்போட்டிருந்தார்கள். 2 அவர்கள் அணிவகுத்து நின்று இஸ்ரவேலர்களோடு போர் செய்தார்கள். அந்தப் போர் இஸ்ரவேலர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் தோற்கடித்து, சுமார் 4,000 வீரர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்தார்கள். 3 மற்ற வீரர்கள் முகாமுக்குத் திரும்பியபோது இஸ்ரவேல் பெரியோர்கள்* அவர்களிடம், “இன்று யெகோவா ஏன் நம்மை பெலிஸ்தியர்களிடம் தோற்றுப்போக விட்டுவிட்டார்?+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியை சீலோவிலிருந்து எடுத்துவருவோம்,+ அது நமக்குத் துணையாக இருக்கும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றும்” என்று சொன்னார்கள். 4 அதனால், வீரர்கள் சீலோவுக்கு ஆட்களை அனுப்பி, கேருபீன்களுக்கு மேலாக* சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஒப்பந்தப் பெட்டியை அங்கிருந்து தூக்கிக்கொண்டு வந்தார்கள். ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும்+ உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டியோடு இருந்தார்கள்.
5 முகாமுக்குள் யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி வந்தவுடன், இஸ்ரவேலர்கள் எல்லாரும் சந்தோஷமாகக் கோஷம்போட்டார்கள், அதனால் அந்த இடமே அதிர்ந்தது. 6 பெலிஸ்தியர்கள் அந்தக் கோஷத்தைக் கேட்டதும், “எபிரெயர்களுடைய முகாமில் ஏன் இவ்வளவு சத்தம்?” என்று கேட்டார்கள். பின்பு, யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டி அங்கு வந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்கள். 7 “இஸ்ரவேலர்களின் முகாமுக்குள் கடவுள் வந்துவிட்டார்!” என்று சொல்லி பெலிஸ்தியர்கள் பயந்து நடுங்கினார்கள்.+ அதனால், “ஐயோ, ஆபத்து! இதுபோல் ஒருபோதும் நடந்ததில்லை! 8 ஐயோ, ஆபத்து வந்துவிட்டது! மகத்தான இந்தத் தெய்வத்திடமிருந்து யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்? வனாந்தரத்தில் எகிப்தியர்களைக் கொன்று குவித்தது இந்தத் தெய்வம்தான்!+ 9 பெலிஸ்தியர்களே, தைரியமாக இருங்கள். துணிந்து போர் செய்யுங்கள். அப்போதுதான், எபிரெயர்கள் உங்களுக்கு அடிமைகளாக ஆனதுபோல்+ நீங்கள் அவர்களுக்கு அடிமைகளாக ஆகமாட்டீர்கள். வீரத்தோடு போர் செய்யுங்கள்!” என்று சொன்னார்கள். 10 அதன்படியே, பெலிஸ்தியர்கள் போர் செய்து இஸ்ரவேலர்களைத் தோற்கடித்தார்கள்.+ இஸ்ரவேலர்கள் அவரவர் கூடாரத்துக்குத் தப்பியோடினார்கள். ஆனால், ஏராளமான வீரர்கள் பெலிஸ்தியர்களின் வாளுக்குப் பலியானார்கள். காலாட்படை வீரர்களில் 30,000 பேர் செத்து விழுந்தார்கள். 11 கடவுளுடைய பெட்டியும் கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரண்டு மகன்களான ஓப்னியும் பினெகாசும் செத்துப்போனார்கள்.+
12 அன்று ஒரு பென்யமீனியன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டும், தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்டும்+ போர்க்களத்திலிருந்து சீலோவுக்கு ஓடிவந்தான். 13 அப்போது, ஏலி வழியோரமாக இருந்த ஓர் இருக்கையில் உட்கார்ந்தபடி காத்துக்கொண்டிருந்தார். ஏனென்றால், உண்மைக் கடவுளின் பெட்டியை நினைத்து அவருடைய நெஞ்சம் படபடவென்று அடித்துக்கொண்டிருந்தது.+ அந்த ஆள் நகரத்துக்குள் வந்து செய்தியைச் சொன்னான். நகரத்தார் எல்லாரும் அழுது புலம்ப ஆரம்பித்தார்கள். 14 அழுகுரலைக் கேட்ட ஏலி, “ஏன் ஒரே கூச்சல் குழப்பமாக இருக்கிறது?” என்று கேட்டார். அந்த ஆள் வேகமாக ஓடிவந்து ஏலியிடம் விஷயத்தைச் சொன்னான். 15 அப்போது ஏலிக்கு 98 வயது, அவருக்குக் கண் தெரியவில்லை.+ 16 அந்த ஆள் ஏலியிடம், “நான் போர்க்களத்திலிருந்து வந்திருக்கிறேன். இன்றைக்குத்தான் அங்கிருந்து தப்பித்து வந்திருக்கிறேன்” என்றான். அதற்கு ஏலி, “என் மகனே, என்ன நடந்தது?” என்று கேட்டார். 17 செய்தி கொண்டுவந்த அந்த ஆள் அவரிடம், “இஸ்ரவேலர்கள் படுதோல்வி அடைந்துவிட்டார்கள்.+ பெலிஸ்திய வீரர்களிடமிருந்து பயந்து ஓடிவிட்டார்கள். உங்களுடைய இரண்டு மகன்கள் ஓப்னியும் பினெகாசும் இறந்துவிட்டார்கள்.+ அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுளின் பெட்டியை எதிரிகள் கைப்பற்றிவிட்டார்கள்”+ என்று சொன்னான்.
18 உண்மைக் கடவுளின் பெட்டியைப் பற்றிச் சொன்னதும், நகரவாசலுக்குப் பக்கத்திலிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்த ஏலி அப்படியே மல்லாக்க விழுந்தார். அவர் வயதானவராகவும் தடித்தவராகவும் இருந்ததால், விழுந்ததுமே அவருடைய கழுத்து முறிந்து, இறந்துபோனார். இஸ்ரவேலர்களுக்கு 40 வருஷங்கள் அவர் நியாயாதிபதியாக இருந்தார். 19 அவருடைய மருமகளான பினெகாசின் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். உண்மைக் கடவுளின் பெட்டி கைப்பற்றப்பட்டதைப் பற்றியும், தன்னுடைய மாமனாரும் கணவரும் இறந்துபோனதைப் பற்றியும் கேள்விப்பட்டவுடன், அதிர்ச்சியில் அவளுக்குப் பிரசவ வலி வந்தது. அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குனிந்தாள், அவளுக்குக் குழந்தை பிறந்தது. 20 அவளுடைய உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் நின்ற ஒரு பெண் அவளிடம், “பயப்படாதே, உனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்” என்று சொன்னாள். ஆனால், அவள் அதைக் காதில் வாங்கவும் இல்லை, அதற்குப் பதில் சொல்லவும் இல்லை. 21 ஆனால், உண்மைக் கடவுளின் பெட்டி கைப்பற்றப்பட்டதாலும் தன்னுடைய மாமனாரும் கணவரும் இறந்ததாலும்,+ “இஸ்ரவேலைவிட்டு மகிமை போய்விட்டதே!”+ என்று சொல்லி, அந்தக் குழந்தைக்கு இக்கபோத்*+ என்று பெயர் வைத்தாள். 22 “உண்மைக் கடவுளின் பெட்டி கைப்பற்றப்பட்டதால் இஸ்ரவேலைவிட்டு மகிமை போய்விட்டதே”+ என்று சொன்னாள்.