கொலோசெயருக்குக் கடிதம்
4 எஜமான்களே, உங்களுக்கும் ஒரு எஜமான் பரலோகத்தில் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து, உங்கள் அடிமைகளிடம் நீதியோடும் நியாயத்தோடும் நடந்துகொள்ளுங்கள்.+
2 விழிப்போடும் நன்றியோடும்+ விடாமல் ஜெபம் செய்யுங்கள்.+ 3 அதேசமயம், கிறிஸ்துவைப் பற்றிய பரிசுத்த ரகசியத்தை அறிவிப்பதற்கான வாய்ப்பு என்ற கதவைக் கடவுள் எங்களுக்குத் திறக்க வேண்டும் என்று எங்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள்;+ சொல்லப்போனால், அந்த ரகசியத்தின் காரணமாகத்தான் நான் கைதியாக இருக்கிறேன்.+ 4 நான் அந்த ரகசியத்தைத் தெளிவாக அறிவிக்க வேண்டிய விதத்தில் அறிவிப்பதற்காக ஜெபம் செய்யுங்கள்.
5 சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் ஞானமாக நடந்துகொள்ளுங்கள்; உங்கள் நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.*+ 6 உங்கள் பேச்சு எப்போதும் கனிவாகவும் சுவையாகவும்* இருக்க வேண்டும்.+ அப்போதுதான், ஒவ்வொருவருக்கும் எப்படிப் பதில் சொல்ல வேண்டும்+ என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.
7 என் அன்புச் சகோதரரும் நம் எஜமானுடைய சேவையில் உண்மையுள்ள ஊழியரும் என் சக அடிமையுமான தீகிக்கு+ என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் உங்களிடம் சொல்வார். 8 நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதைப் பற்றி உங்களிடம் சொல்வதற்கும், உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் அளிப்பதற்கும் அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். 9 உங்களில் ஒருவராகவும் நம்பிக்கைக்குரிய அன்புச் சகோதரராகவும் இருக்கிற ஒநேசிமுவையும்+ அவரோடு அனுப்பி வைக்கிறேன்; இங்கே நடக்கிற எல்லாவற்றையும் அவர்கள் உங்களிடம் சொல்வார்கள்.
10 என்னுடைய சக கைதியான அரிஸ்தர்க்கு+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்; பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரராகிய மாற்குவும்+ வாழ்த்துச் சொல்கிறார் (இவர் உங்களிடம் வந்தால் அன்பாக ஏற்றுக்கொள்ளும்படி+ உங்களுக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டது); 11 யுஸ்து என்ற இயேசுவும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்; விருத்தசேதனம் செய்யப்பட்ட இவர்கள் மட்டும்தான் கடவுளுடைய அரசாங்கத்துக்காக உழைக்கிற என் சக வேலையாட்களாக இருக்கிறார்கள்; எனக்கு மிகவும் ஆறுதலாகவும்* இருக்கிறார்கள். 12 உங்களில் ஒருவராகவும் கிறிஸ்து இயேசுவின் அடிமையாகவும் இருக்கிற எப்பாப்பிரா+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார். நீங்கள் முதிர்ச்சி* அடைந்தவர்களாகவும் கடவுளுக்கு விருப்பமான எல்லாவற்றிலும் உறுதியான நம்பிக்கை உள்ளவர்களாகவும் கடைசிவரை நிலைத்து நிற்க வேண்டும் என்று உங்களுக்காக எப்போதும் அவர் ஊக்கமாக ஜெபம் செய்கிறார். 13 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவில் இருக்கிறவர்களுக்காகவும் எராப்போலியில் இருக்கிறவர்களுக்காகவும் இவர் மிகக் கடினமாக உழைக்கிறார்; இதற்கு நானே சாட்சி.
14 அன்பான மருத்துவர் லூக்காவும்,+ அவரோடு சேர்ந்து தேமாவும்+ உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள். 15 லவோதிக்கேயாவில் இருக்கிற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவள் வீட்டில் கூடுகிற சபைக்கும் என் வாழ்த்தைச் சொல்லுங்கள்.+ 16 இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்ட பின்பு, லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படுவதற்கு+ ஏற்பாடு செய்யுங்கள். அதேபோல், லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள். 17 “எஜமானுடைய சீஷனாக நீ பெற்றிருக்கிற ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு எப்போதும் கவனமாக இரு” என்று அர்க்கிப்புவிடம்+ சொல்லுங்கள்.
18 பவுலாகிய நான் என் கைப்பட எழுதி உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறேன்.+ நான் கைதியாக இருக்கிறேன்+ என்பதை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய அளவற்ற கருணை உங்கள்மேல் இருக்கட்டும்.