கொரிந்தியருக்கு முதலாம் கடிதம்
6 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடு வழக்கு இருந்தால்,+ அதைத் தீர்த்துக்கொள்ள அவன் பரிசுத்தவான்களிடம் போகாமல் நீதிமன்றத்துக்குப் போய் அநீதிமான்கள் முன்னால் நிற்கத் துணிவது ஏன்? 2 பரிசுத்தவான்கள் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ உலகத்தையே நியாயந்தீர்க்கப்போகிற உங்களுக்கு, சின்னச் சின்ன வழக்குகளைத் தீர்த்துக்கொள்ளத் தகுதி இல்லையா? 3 நாம் தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா?+ அப்படியிருக்கும்போது, இந்த வாழ்க்கைக்குரிய வழக்குகளை ஏன் தீர்த்துக்கொள்ள முடியாது? 4 அவற்றைத் தீர்த்துக்கொள்ள+ சபைக்கு வெளியே இருக்கிறவர்களைப்போய் நீதிபதிகளாக வைக்கிறீர்களே! 5 நீங்கள் வெட்கப்படுவதற்காகத்தான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களுக்குள் இருக்கிற வழக்குகளைத் தீர்ப்பதற்கு ஞானமுள்ளவர் ஒருவர்கூட உங்கள் மத்தியில் இல்லையா? 6 சகோதரனுக்கு எதிராகச் சகோதரன் நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறானாமே, அதுவும் உலக மக்களுக்கு முன்னால் அப்படிச் செய்கிறானாமே!
7 உண்மையில், நீங்கள் ஒருவருக்கு எதிராக ஒருவர் வழக்கு போடுவதே நீங்கள் படுதோல்வி அடைந்துவிட்டதைக் காட்டுகிறது. அதனால், உங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை ஏன் பொறுத்துக்கொள்ளக் கூடாது?+ உங்களுக்குச் செய்யப்பட்ட மோசடியை ஏன் சகித்துக்கொள்ளக் கூடாது? 8 அதற்குப் பதிலாக நீங்களே அநியாயமும் மோசடியும் செய்கிறீர்கள், அதுவும் உங்கள் சகோதரர்களுக்கு அப்படிச் செய்கிறீர்கள்.
9 அநீதிமான்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட* மாட்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா?+ ஏமாந்துவிடாதீர்கள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ சிலையை வணங்குகிறவர்கள்,+ மணத்துணைக்குத் துரோகம் செய்கிறவர்கள்,+ ஆண் விபச்சாரக்காரர்கள்,*+ ஆண்களோடு உறவுகொள்ளும் ஆண்கள்,+ 10 திருடர்கள், பேராசைக்காரர்கள்,+ குடிகாரர்கள்,+ சபித்துப் பேசுகிறவர்கள்,* கொள்ளையடிக்கிறவர்கள் ஆகியோர் கடவுளுடைய அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.+ 11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள். ஆனால், நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் பெயராலும் கடவுளுடைய சக்தியாலும் சுத்தமாகக் கழுவப்பட்டீர்கள்,+ பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்,+ நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டீர்கள்.+
12 எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம்* இருக்கிறது; ஆனால், எல்லா காரியங்களும் பிரயோஜனமானவை கிடையாது.+ எல்லா காரியங்களையும் செய்ய எனக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், எந்தக் காரியத்துக்கும் நான் அடிமையாகிவிட மாட்டேன். 13 வயிற்றுக்காகவே உணவு, உணவுக்காகவே வயிறு. ஆனால், இவை இரண்டையும் கடவுள் அழித்துவிடுவார்.+ உடலானது பாலியல் முறைகேட்டுக்காக* அல்ல, நம் எஜமானுக்காக இருக்கிறது;+ நம் எஜமானும் உடலுக்காக இருக்கிறார். 14 கடவுள் தன்னுடைய வல்லமையால்+ நம் எஜமானை உயிரோடு எழுப்பினார்,+ அதேபோல் நம்மையும் உயிரோடு எழுப்புவார்.+
15 உங்களுடைய உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ அப்படியிருக்கும்போது, கிறிஸ்துவின் உறுப்புகளை எடுத்து ஒரு விபச்சாரியின் உறுப்புகளோடு நான் சேர்க்கலாமா? கூடவே கூடாது! 16 விபச்சாரியோடு சேர்ந்திருக்கிறவன் அவளோடு ஒரே உடலாக இருக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், “அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக* இருப்பார்கள்” என்று கடவுள் சொல்லியிருக்கிறார்.+ 17 ஆனால், நம் எஜமானோடு சேர்ந்திருக்கிறவன் அவரோடு ஒரே சிந்தையாக இருக்கிறான்.+ 18 பாலியல் முறைகேட்டிலிருந்து* விலகி ஓடுங்கள்.+ ஒரு மனிதன் செய்கிற வேறெந்தப் பாவமும் உடலோடு நேரடியாகச் சம்பந்தப்படாதது. ஆனால், பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவன் தன் உடலுக்கு எதிராகவே பாவம் செய்கிறான்.+ 19 உங்கள் உடல் கடவுளுடைய சக்தி குடியிருக்கிற+ ஆலயம் என்பது உங்களுக்குத் தெரியாதா?+ நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் கிடையாது.+ 20 ஏனென்றால், நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டீர்கள்.+ அதனால், உங்கள் உடலால்+ கடவுளை மகிமைப்படுத்துங்கள்.+