கொலோசெயருக்குக் கடிதம்
1 கடவுளுடைய விருப்பத்தால்* கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக இருக்கும் பவுல் நம் சகோதரராகிய தீமோத்தேயுவோடு+ சேர்ந்து, 2 கொலோசெ நகரத்தில் கிறிஸ்துவுடன் ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்களும் உண்மையுள்ளவர்களுமான சகோதரர்களுக்கு எழுதுவது:
நம் பரலோகத் தகப்பனாகிய கடவுளிடமிருந்து உங்களுக்கு அளவற்ற கருணையும் சமாதானமும் கிடைக்கட்டும்.
3 உங்களுக்காக நாங்கள் ஜெபம் செய்யும்போதெல்லாம் நம் எஜமான் இயேசு கிறிஸ்துவின் தகப்பனாகிய கடவுளுக்கு நன்றி சொல்கிறோம்; 4 ஏனென்றால், கிறிஸ்து இயேசுமீது நீங்கள் வைத்திருக்கிற விசுவாசத்தையும், பரிசுத்தவான்கள் எல்லார்மீதும் நீங்கள் காட்டுகிற அன்பையும் பற்றிக் கேள்விப்பட்டோம். 5 உங்களுடைய பரலோக நம்பிக்கை நிறைவேறப்போவதைப்+ பற்றி நீங்கள் தெரிந்திருப்பதால் அப்படிப்பட்ட நல்ல மனப்பான்மையைக் காட்டுகிறீர்கள். சத்தியத்தின் செய்தியாகிய நல்ல செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் இந்த நம்பிக்கையைப் பற்றித் தெரிந்துகொண்டீர்கள். 6 உலகம் முழுவதும் பரவி ஏராளமாகப் பலன் தந்து வருகிற அந்த நல்ல செய்தி+ உங்களிடமும் வந்து சேர்ந்தது; கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய உண்மையை நீங்கள் திருத்தமாகக் கேட்டுத் தெரிந்துகொண்ட நாள்முதல் உங்கள் மத்தியிலும் பலன் தந்து வருகிறது. 7 அதைத்தான் நம் அன்பான சக அடிமையாகிய எப்பாப்பிராவிடமிருந்து+ நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். அவர் கிறிஸ்துவின் உண்மையுள்ள ஊழியராக எங்கள் சார்பில் சேவை செய்கிறார். 8 கடவுளுடைய சக்தியால் நிறைந்து நீங்கள் காட்டுகிற அன்பைப் பற்றியும் அவர்தான் எங்களிடம் சொன்னார்.
9 அதனால், உங்களுடைய அன்பையும் விசுவாசத்தையும் நாங்கள் கேள்விப்பட்ட நாள்முதல் உங்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்கிறோம்.+ எல்லா ஞானத்தையும் ஆன்மீக விஷயங்களைப் பற்றிய புரிந்துகொள்ளுதலையும்+ நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கடவுளுடைய விருப்பத்தை* பற்றிய திருத்தமான அறிவால் நிரப்பப்பட வேண்டும்+ என்றும் ஜெபம் செய்கிறோம். 10 அப்போதுதான், கடவுளாகிய யெகோவாவுக்கு* ஏற்ற விதத்தில் நடந்து அவரை முழுமையாகப் பிரியப்படுத்துவீர்கள்; நீங்கள் செய்கிற எல்லா நல்ல செயல்களும் பலன் தரும், அவரைப் பற்றிய திருத்தமான அறிவில்+ மேலும் மேலும் வளருவீர்கள். 11 அதுமட்டுமல்ல, நீங்கள் பொறுமையோடும் சந்தோஷத்தோடும் எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதற்காக, கடவுளுடைய மகா வல்லமையால் நீங்கள் எல்லா வல்லமையையும் பெற்று பலப்படுத்தப்படுவீர்கள்.+ 12 அறிவொளி பெற்ற பரிசுத்தவான்களுடைய ஆஸ்தியில்+ பங்கு பெறுவதற்கு உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கிய பரலோகத் தகப்பனுக்கு நன்றி சொல்வீர்கள்.
13 அவர் நம்மை இருளின் அதிகாரத்திலிருந்து காப்பாற்றி,+ தன்னுடைய அன்பான மகனின் அரசாங்கத்துக்குக் கொண்டுவந்தார். 14 அந்த மகனுடைய மீட்புவிலையால் நமக்கு விடுதலை, அதாவது பாவ மன்னிப்பு, கிடைத்திருக்கிறது.+ 15 அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலாகவும்+ படைப்புகளிலேயே முதல் படைப்பாகவும்*+ இருக்கிறார். 16 ஏனென்றால், பரலோகத்தில் இருப்பவை, பூமியில் இருப்பவை, பார்க்க முடிந்தவை, பார்க்க முடியாதவை ஆகிய எல்லாம்+—அவை சிம்மாசனங்களோ தலைமை ஸ்தானங்களோ அரசாங்கங்களோ அதிகாரங்களோ எதுவாக இருந்தாலும்—அவர் மூலம்தான் படைக்கப்பட்டன. எல்லாமே அவர் வழியாகவும் அவருக்காகவும் படைக்கப்பட்டன.+ 17 அவர் எல்லா படைப்புகளுக்கும்* முன்பே இருக்கிறார்;+ அவர் மூலமாகத்தான் எல்லாம் உண்டாக்கப்பட்டன. 18 அவர்தான் சபையாகிய உடலுக்குத் தலையாக இருக்கிறார்,+ அவர்தான் முதலானவராக இருக்கிறார், முதன்முதலில் உயிரோடு எழுப்பப்பட்டவராக இருக்கிறார்;+ இப்படி, எல்லாவற்றிலும் முதன்மையானவராக இருக்கிறார். 19 ஏனென்றால், எல்லாம் அவருக்குள் நிறைவாகக் குடியிருக்க வேண்டும்+ என்று கடவுள் விரும்பினார். 20 அதோடு, சித்திரவதைக் கம்பத்தில்* சிந்தப்பட்ட இரத்தத்தால்+ சமாதானத்தை ஏற்படுத்தி, பூமியிலும் பரலோகத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் அவர் மூலமாகத் தன்னோடு சமரசமாக்க வேண்டுமென்றும் கடவுள் விரும்பினார்.+
21 ஒருகாலத்தில் நீங்கள் கெட்ட விஷயங்களையே நினைத்துக்கொண்டிருந்ததால் கடவுளுக்கு அன்னியர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தீர்கள். 22 ஆனால், இப்போது கடவுள் உங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகவும் களங்கமில்லாதவர்களாகவும் குற்றமில்லாதவர்களாகவும் தனக்கு முன்னால் நிறுத்துவதற்காக,+ மனித உடலில் இருந்தவருடைய மரணத்தின் மூலம் உங்களைத் தன்னோடு சமரசமாக்கியிருக்கிறார். 23 ஆனால், நீங்கள் விசுவாசத்தை விட்டுவிடாதவர்களாகவும்,+ அதன் அஸ்திவாரத்தின்மேல்+ நிலையாய் நிற்கிறவர்களாகவும்,+ உறுதியானவர்களாகவும், நல்ல செய்தியால் பெற்ற நம்பிக்கையைவிட்டு விலகாதவர்களாகவும் இருக்க வேண்டும். அந்த நல்ல செய்தி வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டது;+ அந்த நல்ல செய்தியை அறிவிப்பதற்காகத்தான் பவுலாகிய நான் ஊழியனானேன்.+
24 இப்போது உங்களுக்காகத் துன்பப்படுவதில்+ சந்தோஷப்படுகிறேன்; கிறிஸ்துவின் உடலாகிய சபையைச்+ சேர்ந்த நான் இன்னும் முழுமையாக உபத்திரவங்களை அனுபவிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன்.+ 25 கடவுளுடைய வார்த்தையை உங்களுக்கு முழுமையாய்ப் பிரசங்கிப்பதற்காக அவர் எனக்குக் கொடுத்த நிர்வாகப் பொறுப்பின்படி,+ அந்தச் சபைக்கு நான் ஊழியனானேன். 26 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற பரிசுத்த ரகசியம்+ கடந்த சகாப்தங்களுக்கும்* கடந்த தலைமுறைகளுக்கும் மறைக்கப்பட்டிருந்தது.+ ஆனால், இப்போது கடவுளுடைய பரிசுத்தவான்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.+ 27 மகத்தான ஆசீர்வாதங்கள் நிறைந்த அந்தப் பரிசுத்த ரகசியத்தை+ மற்ற தேசத்து மக்களுக்குச் சொல்வதில் கடவுள் சந்தோஷம் அடைந்திருக்கிறார். கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருப்பதால் அவரோடு மகிமைப்படுவதற்கான+ நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது என்பதுதான் அந்தப் பரிசுத்த ரகசியம். 28 அவரைப் பற்றித்தான் நாங்கள் அறிவித்து வருகிறோம். ஒவ்வொருவரையும் கிறிஸ்துவின் முதிர்ச்சியுள்ள சீஷராகக்+ கடவுள் முன்னால் நிறுத்துவதற்காக ஒவ்வொருவருக்கும் புத்திசொல்லி, எல்லா ஞானத்தோடும் கற்றுக்கொடுத்து வருகிறோம். 29 எனக்குள் வல்லமையோடு செயல்படுகிற அவருடைய பலத்தின் உதவியால்+ கடினமாகவும் தீவிரமாகவும் இதற்காக உழைத்து வருகிறேன்.