யோசுவா
10 ஆயி நகரத்தை யோசுவா கைப்பற்றி அழித்ததைப் பற்றியும், எரிகோவுக்கும் அதன் ராஜாவுக்கும்+ செய்ததைப் போலவே ஆயி நகரத்துக்கும் அதன் ராஜாவுக்கும் செய்ததைப்+ பற்றியும் எருசலேமின் ராஜா அதோனிசேதேக் கேள்விப்பட்டான். அதோடு, கிபியோனின் ஜனங்கள் இஸ்ரவேலர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து+ அவர்களோடு சேர்ந்துகொண்டதையும் கேள்விப்பட்டான். 2 அவனுக்குக் குலைநடுங்கியது.+ ஏனென்றால், ஓர் அரச நகரத்தைப் போல கிபியோன் மாபெரும் நகரமாக இருந்தது. அது ஆயி நகரத்தைவிட+ பெரியதாக இருந்தது, அங்கிருந்த ஆண்கள் எல்லாரும் போர்வீரர்களாக இருந்தார்கள். 3 அதனால் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக், எப்ரோனின்+ ராஜா ஓகாமுக்கும் யர்மூத்தின் ராஜா பீராமுக்கும் லாகீசின் ராஜா யப்பியாவுக்கும் எக்லோனின் ராஜா தெபீருக்கும்+ செய்தி அனுப்பி, 4 “எனக்கு உதவி செய்யுங்கள், நாம் ஒன்றுசேர்ந்து கிபியோனியர்களைத் தாக்கலாம். அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேலர்களோடும் சமாதான ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்”+ என்று சொன்னான். 5 அப்போது எமோரியர்களின்+ ஐந்து ராஜாக்களும், அதாவது எருசலேமின் ராஜாவும் எப்ரோனின் ராஜாவும் யர்மூத்தின் ராஜாவும் லாகீசின் ராஜாவும் எக்லோனின் ராஜாவும் படைதிரண்டுபோய், முகாம்போட்டு, கிபியோனுக்கு எதிராகப் போர் செய்தார்கள்.
6 அப்போது, கில்காலில் முகாம்போட்டிருந்த+ யோசுவாவுக்கு கிபியோனியர்கள் செய்தி அனுப்பி, “உங்கள் அடிமைகளாகிய எங்களைக் கைவிட்டுவிடாதீர்கள்,+ உடனே வந்து எங்களைக் காப்பாற்றுங்கள்! எங்களுக்கு உதவுங்கள்! மலைப்பகுதியிலுள்ள எமோரிய ராஜாக்கள் எல்லாரும் எங்களுக்கு எதிராகப் படைதிரண்டு வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார்கள். 7 அதனால் யோசுவா பலம்படைத்த எல்லா போர்வீரர்களையும் கூட்டிக்கொண்டு கில்காலிலிருந்து புறப்பட்டுப் போனார்.+
8 அப்போது யெகோவா யோசுவாவிடம், “நான் அவர்களை உன் கையில் கொடுத்துவிட்டேன்,+ அவர்களுக்குப் பயப்படாதே.+ அவர்களில் ஒருவன்கூட உன்னை எதிர்த்து நிற்க முடியாது”+ என்று சொன்னார். 9 யோசுவா ராத்திரி முழுக்க கில்காலிலிருந்து அணிவகுத்து வந்து, அவர்களைத் திடீரென்று தாக்கினார். 10 இஸ்ரவேலர்களுக்கு முன்னால் எதிரிகள் குழம்பிப்போகும்படி யெகோவா செய்தார்.+ அதனால், இஸ்ரவேலர்கள் அவர்களை கிபியோனில் கணக்குவழக்கில்லாமல் கொன்று குவித்தார்கள். பெத்-ஓரோனுக்கு ஏறிப்போகும் பாதையில் அவர்களை விரட்டிக்கொண்டு போனார்கள். அசெக்கா வரையும் மக்கெதா வரையும் போய் அவர்களை வெட்டிப்போட்டார்கள். 11 இஸ்ரவேலர்களின் கையிலிருந்து தப்பித்து, பெத்-ஓரோனிலிருந்து இறங்குகிற பாதையில் ஓடிக்கொண்டிருந்த எதிரிகள்மேல் வானத்திலிருந்து பெரிய ஆலங்கட்டிகளை* யெகோவா விழ வைத்தார். அசெக்காவரை அந்த ஆலங்கட்டிகள் அவர்கள்மேல் விழுந்து அவர்களைக் கொன்றுபோட்டன. சொல்லப்போனால், இஸ்ரவேலர்களின் வாளுக்குப் பலியானவர்களைவிட ஆலங்கட்டி மழைக்குப் பலியானவர்கள்தான் அதிகம்.
12 இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் எமோரியர்களை யெகோவா அடியோடு வீழ்த்திய நாளில், யோசுவா இஸ்ரவேலர்களுக்கு முன்பாக யெகோவாவிடம் ஜெபம் செய்து,
“சூரியனே, கிபியோன்மேல்+ அசையாமல் நில்.+
சந்திரனே, ஆயலோன் பள்ளத்தாக்கின் மேல் அப்படியே நில்!”
என்று சொன்னார்.
13 அதனால், இஸ்ரவேல் தேசத்தார் எதிரிகளைப் பழிவாங்கித் தீர்க்கும்வரை சூரியன் அசையாமல் நின்றது, சந்திரனும் நகரவில்லை. இது யாசேரின் புத்தகத்தில்+ எழுதப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய ஒருநாள் முழுக்க சூரியன் நடுவானத்தில் அசையாமல் நின்றது, அது மறையவே இல்லை. 14 யெகோவா ஒரு மனிதனுடைய வேண்டுதலைக் கேட்டு+ இப்பேர்ப்பட்ட அற்புதத்தைச் செய்த அந்த நாளைப் போல ஒரு நாள் அதற்கு முன்பும் இருந்ததில்லை, அதற்குப் பின்பும் இருந்ததில்லை. யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்தார்.+
15 அதன்பின், யோசுவா இஸ்ரவேல் வீரர்கள் எல்லாருடனும் சேர்ந்து கில்காலிலிருந்த முகாமுக்குத்+ திரும்பினார்.
16 அதற்குள், அந்த ஐந்து ராஜாக்களும் தப்பித்து ஓடி மக்கெதாவில்+ இருந்த குகையில் ஒளிந்துகொண்டார்கள். 17 அப்போது, அந்த ஐந்து ராஜாக்களும் மக்கெதாவில்+ உள்ள குகையில் ஒளிந்துகொண்டிருந்த செய்தி யோசுவாவுக்குச் சொல்லப்பட்டது. 18 அப்போது யோசுவா, “அந்தக் குகை வாசலில் பெரிய கற்களை உருட்டி வையுங்கள். காவலுக்கு ஆட்களை நிறுத்துங்கள். 19 மற்றவர்கள் அங்கே நிற்காமல் எதிரிகளைத் துரத்திக்கொண்டு போய், பின்பக்கத்திலிருந்து தாக்குங்கள்.+ அவர்களை அவர்களுடைய நகரங்களுக்குள்ளே நுழைய விடாதீர்கள். ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுத்திருக்கிறார்” என்று சொன்னார்.
20 எதிரிகளை அடியோடு ஒழித்துக்கட்டும்வரை, யோசுவாவும் இஸ்ரவேலர்களும் அவர்களைக் கணக்குவழக்கில்லாமல் கொன்று குவித்துக்கொண்டே இருந்தார்கள். ஆனால், சிலர் மட்டும் தப்பித்து மதில் சூழ்ந்த நகரங்களுக்குள் புகுந்துவிட்டார்கள். 21 பின்பு, இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் மக்கெதாவில் முகாம்போட்டிருந்த யோசுவாவிடம் பத்திரமாகத் திரும்பி வந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு எதிராக ஒருவனும் ஒரு வார்த்தைகூட பேசத் துணியவில்லை. 22 அதன்பின் யோசுவா, “குகை வாசலைத் திறந்து அந்த ஐந்து ராஜாக்களையும் என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று சொன்னார். 23 அதனால் அந்த ஐந்து ராஜாக்களையும், அதாவது எருசலேமின் ராஜாவையும் எப்ரோனின் ராஜாவையும் யர்மூத்தின் ராஜாவையும் லாகீசின் ராஜாவையும் எக்லோனின் ராஜாவையும்,+ அவரிடம் கொண்டுவந்தார்கள். 24 அப்போது யோசுவா, இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரையும் கூப்பிட்டார். பின்பு, அவரோடு போன படைத் தளபதிகளிடம், “முன்னால் வந்து, இந்த ராஜாக்களின் கழுத்தில்* கால்வையுங்கள்” என்று சொன்னார். அப்படியே அவர்கள் முன்னால் வந்து அந்த ராஜாக்களின் கழுத்தில் கால்வைத்தார்கள்.+ 25 அப்போது யோசுவா அவர்களிடம், “பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இருங்கள். உங்களுடைய எதிரிகள் எல்லாருக்கும் யெகோவா இப்படித்தான் செய்வார்”+ என்று சொன்னார்.
26 பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, அவர்களுடைய உடல்களை ஐந்து மரக் கம்பங்களில்* தொங்கவிட்டார். அவை சாயங்காலம்வரை மரக் கம்பங்களில் தொங்கிக்கொண்டிருந்தன. 27 சூரியன் மறையும் நேரத்தில், அந்த ராஜாக்களின் உடல்களைக் கீழே இறக்கி,+ அவர்கள் ஒளிந்துகொண்டிருந்த குகையில் எறிந்துவிடும்படி யோசுவா கட்டளை கொடுத்தார். அந்தக் குகையின் வாசல் பெரிய கற்களால் அடைத்து வைக்கப்பட்டது, இன்றுவரை அந்தக் கற்கள் அப்படியே இருக்கின்றன.
28 அன்று யோசுவா மக்கெதாவைக்+ கைப்பற்றி, அதன் ராஜாவையும் அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வெட்டிக் கொன்றார்.+ எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே மக்கெதாவின் ராஜாவுக்கும்+ செய்தார்.
29 பின்பு யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் மக்கெதாவிலிருந்து லிப்னாவுக்குப்+ போய் அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 30 அந்த நகரத்தையும் அதன் ராஜாவையும் இஸ்ரவேலர்களின் கையில் யெகோவா கொடுத்தார்.+ அவர்கள் அதைத் தாக்கி, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வாளால் கொன்றுபோட்டார்கள். எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததைப் போலவே+ லிப்னாவின் ராஜாவுக்கும் செய்தார்கள்.
31 அடுத்ததாக யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் லிப்னாவிலிருந்து லாகீசுக்குப்+ போய், முகாம்போட்டு, அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 32 லாகீசை இஸ்ரவேலர்களின் கையில் யெகோவா கொடுத்தார். இரண்டாம் நாளில் அவர்கள் அதைக் கைப்பற்றினார்கள். லிப்னாவைத் தாக்கியது போலவே அவர்கள் அதைத் தாக்கி, அங்கிருந்த எல்லாரையும் வாளால் கொன்றுபோட்டார்கள்.+
33 அப்போது கேசேரின்+ ராஜா ஓராம், லாகீஸ் நகரத்துக்கு உதவி செய்ய வந்தான். ஆனால், யோசுவா அவனையும் அவனுடைய ஜனங்களையும் ஒருவர் விடாமல் கொன்றுபோட்டார்.
34 பின்பு யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் லாகீசிலிருந்து எக்லோனுக்குப்+ போய் முகாம்போட்டு அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 35 அன்று அதைக் கைப்பற்றி, அங்கிருந்தவர்களை வாளால் தாக்கினார்கள். லாகீசில் செய்ததைப் போலவே,+ அங்கிருந்த எல்லாரையும் கொன்றுபோட்டார்கள்.
36 யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் எக்லோனிலிருந்து எப்ரோனுக்குப்+ போய் அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 37 அவர்கள் அந்த நகரத்தையும் அதன் ராஜாவையும் அதன் சிற்றூர்களையும் பிடித்து, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல் வாளால் கொன்றுபோட்டார்கள். அவர் எக்லோனுக்குச் செய்ததைப் போலவே எப்ரோனுக்கும் செய்தார், அந்த நகரத்தையும் அங்கிருந்த எல்லாரையும் அழித்தார்.
38 கடைசியில் யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் தெபீருக்குத்+ திரும்பிப்போய் அதை எதிர்த்துப் போர் செய்தார்கள். 39 அவர்கள் அந்த நகரத்தையும், அதன் ராஜாவையும், சுற்றியிருந்த எல்லா ஊர்களையும் பிடித்தார்கள். பின்பு, அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்+ வாளால் கொன்றுபோட்டார்கள்.+ யோசுவா எப்ரோனுக்கும் லிப்னாவுக்கும் அவற்றின் ராஜாக்களுக்கும் செய்ததைப் போலவே தெபீருக்கும் அதன் ராஜாவுக்கும் செய்தார்.
40 மலைப்பகுதி முழுவதையும் நெகேபையும் சேப்பெல்லாவையும்+ மலைச் சரிவுகளையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா கைப்பற்றினார். இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே,+ அங்கிருந்த எல்லாரையும் ஒருவர் விடாமல்* கொன்றுபோட்டார்.+ 41 காதேஸ்-பர்னேயாமுதல்+ காசாவரை+ இருக்கிற பிரதேசத்தையும், கோசேன் பிரதேசம்+ முழுவதையும், கிபியோன்+ வரையுள்ள பகுதியையும் யோசுவா ஜெயித்தார். 42 அந்தத் தேசங்களையும் அவற்றின் ராஜாக்களையும் யோசுவா ஒரே படையெடுப்பில் கைப்பற்றினார். ஏனென்றால், இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே அவர்களுக்காகப் போர் செய்தார்.+ 43 அதன்பின், யோசுவாவும் இஸ்ரவேல் வீரர்கள் எல்லாரும் கில்காலிலிருந்த முகாமுக்குத்+ திரும்பினார்கள்.