உபாகமம்
16 பின்பு அவர், “ஆபிப்* மாதத்தை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதத்தில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், ஆபிப் மாதத்தில்தான் ராத்திரியோடு ராத்திரியாக யெகோவா உங்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார்.+ 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்,+ உங்கள் ஆட்டையோ மாட்டையோ+ யெகோவாவுக்கு பஸ்கா பலியாகச் செலுத்த வேண்டும்.+ 3 புளிப்பு சேர்க்கப்பட்ட எதையும் அதனுடன் சாப்பிடக் கூடாது.+ எகிப்திலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்தபோது+ சாப்பிட்டது போலவே, ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளை நீங்கள் சாப்பிட வேண்டும். எகிப்தில் நீங்கள் பட்ட பாடுகளை அந்த ரொட்டிகள் ஞாபகப்படுத்தும். எகிப்திலிருந்து புறப்பட்ட நாளைக் காலமெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்காக நீங்கள் அவற்றைச் சாப்பிட வேண்டும்.+ 4 புளித்த மாவு எதுவுமே ஏழு நாட்களுக்கு உங்கள் எல்லைக்குள் இருக்கக் கூடாது.+ முதல்நாள் சாயங்காலத்தில் பலியாகச் செலுத்திய இறைச்சியை அடுத்த நாள் காலைவரை மீதி வைக்கக் கூடாது.+ 5 உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற ஏதோவொரு நகரத்தில் பஸ்கா பலியைச் செலுத்தக் கூடாது. 6 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில்தான் பலி செலுத்த வேண்டும். நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட அதே நேரத்தில், அதாவது சாயங்காலத்தில் சூரியன் மறைந்தவுடன், பஸ்கா பலியை வெட்ட வேண்டும்.+ 7 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்,+ அதை நெருப்பில் வாட்டி சாப்பிட வேண்டும்.+ காலையில் உங்களுடைய கூடாரத்துக்குத் திரும்பலாம். 8 ஆறு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சாப்பிட வேண்டும். ஏழாம் நாளில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்காக விசேஷ மாநாடு நடக்கும். அன்றைக்கு நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.+
9 விளைந்த கதிர்களை அறுவடை செய்ய ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்து ஏழு வாரங்களை நீங்கள் கணக்கிட வேண்டும்.+ 10 அவற்றின் முடிவில், உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு பலிகளை நீங்களாகவே விருப்பப்பட்டுக் கொண்டுவர வேண்டும்.+ 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்தில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும்,* விதவைகளும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் முன்னிலையில் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 12 நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததை ஞாபகத்தில் வைத்து,+ இந்த எல்லா விதிமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.
13 உங்கள் களத்துமேட்டிலிருந்து தானியங்களையும் செக்கிலிருந்து எண்ணெயையும் ஆலையிலிருந்து திராட்சமதுவையும் சேகரிக்கும்போது ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+ 14 அந்தப் பண்டிகையின்போது நீங்களும், உங்கள் மகன்களும், மகள்களும், உங்களிடம் அடிமையாக இருக்கிற ஆண்களும், பெண்களும், உங்கள் நகரங்களில் வாழ்கிற லேவியர்களும், மற்ற தேசத்து ஜனங்களும், அப்பா இல்லாத பிள்ளைகளும், விதவைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.+ 15 உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில், ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகை கொண்டாட வேண்டும்.+ ஏனென்றால், உங்கள் நிலத்தில் விளைகிற எல்லாவற்றையும் நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+ நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள்.+
16 வருஷத்தில் மூன்று தடவை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை,+ வாரங்களின் பண்டிகை,+ கூடாரப் பண்டிகை+ ஆகிய பண்டிகைகளின்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு ஆண்கள் எல்லாரும் அவர் முன்னால் வர வேண்டும். யாருமே யெகோவாவுக்கு முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது. 17 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை எந்தளவு ஆசீர்வதித்திருக்கிறாரோ அந்தளவு காணிக்கையை ஒவ்வொருவரும் கொண்டுவர வேண்டும்.+
18 ஒவ்வொரு கோத்திரத்துக்கும் உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற நகரங்களில் நியாயாதிபதிகளையும்+ அதிகாரிகளையும் நீங்கள் நியமிக்க வேண்டும். ஜனங்களுக்கு அவர்கள் நீதியோடு தீர்ப்பு சொல்ல வேண்டும். 19 நியாயத்தைப் புரட்டவோ+ பாரபட்சம் காட்டவோ+ லஞ்சம் வாங்கவோ கூடாது. ஏனென்றால், லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்,+ நீதிமான்களைக்கூட உண்மைக்கு மாறாகப் பேச வைத்துவிடும். 20 நீங்கள் நியாயத்தைச் செய்ய வேண்டும், நியாயத்தைச் செய்யவே பாடுபட வேண்டும்.+ அப்போதுதான், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுக்கிற தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு அதில் நீடூழி வாழ்வீர்கள்.
21 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பலிபீடத்துக்குப் பக்கத்தில் எந்த மரத்தையும் பூஜைக் கம்பமாக* நாட்டக் கூடாது.+
22 உங்களுக்காகப் பூஜைத் தூணையும் நிறுத்தக் கூடாது,+ அதை உங்கள் கடவுளாகிய யெகோவா வெறுக்கிறார்” என்றார்.