மத்தேயு எழுதியது
17 ஆறு நாட்களுக்குப் பின்பு, பேதுருவையும் யாக்கோபையும் யாக்கோபின் சகோதரன் யோவானையும் மட்டும் கூட்டிக்கொண்டு உயரமான ஒரு மலைக்கு இயேசு போனார்.+ 2 அங்கே அவர்கள் முன்னால் அவருடைய தோற்றம் மாறியது; அவருடைய முகம் சூரியனைப் போல் பிரகாசித்தது, அவருடைய மேலங்கி ஒளியைப் போல் பளிச்சிட்டது.*+ 3 அப்போது, மோசேயும் எலியாவும் தோன்றி அவரோடு பேசிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். 4 உடனே பேதுரு, “எஜமானே, இங்கே இருப்பது எங்கள் பாக்கியம். நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஒன்றும், மோசேக்கு ஒன்றும், எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களைப் போடுகிறேன்” என்று இயேசுவிடம் சொன்னார். 5 அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பிரகாசமான ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது; அப்போது, “இவர் என் அன்பு மகன்; நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்;+ இவர் சொல்வதைக் கேளுங்கள்”+ என்று அந்த மேகத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.+ 6 இதைக் கேட்டதும் சீஷர்கள் மிகவும் பயந்துபோய் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். 7 இயேசு அவர்கள் பக்கத்தில் வந்து, அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், பயப்படாதீர்கள்” என்று சொன்னார். 8 அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு யாரையும் காணவில்லை. 9 மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தபோது இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்த்த இந்தத் தரிசனத்தை மனிதகுமாரன் உயிர்த்தெழுப்பப்படும்வரை யாரிடமும் சொல்லக் கூடாது” என்று கட்டளையிட்டார்.+
10 அப்போது சீஷர்கள் அவரிடம், “அப்படியானால், எலியா முதலில் வர வேண்டும் என்று வேத அறிஞர்கள் ஏன் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார்கள். 11 அதற்கு அவர், “எலியா வந்து எல்லாவற்றையும் சரிப்படுத்துவார்+ என்பது உண்மைதான். 12 இருந்தாலும், நான் உங்களுக்குச் சொல்கிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டார்; ஆனால், அவரை அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளாமல் தங்களுடைய இஷ்டப்படியெல்லாம் நடத்தினார்கள்.+ இப்படித்தான் மனிதகுமாரனும் அவர்கள் கையில் பாடுகளை அனுபவிப்பார்”+ என்று சொன்னார். 13 யோவான் ஸ்நானகரை பற்றித்தான் அவர் சொல்கிறார் என்பதைச் சீஷர்கள் அப்போது புரிந்துகொண்டார்கள்.
14 கூட்டத்தாரை+ நோக்கி அவர்கள் போனபோது, ஒருவன் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, 15 “ஐயா, என் மகனுக்கு இரக்கம் காட்டுங்கள்; அவன் காக்காய்வலிப்பினால் அவதிப்படுகிறான்; அவனுடைய நிலைமை மோசமாக இருக்கிறது; அடிக்கடி தண்ணீரிலும் நெருப்பிலும் விழுந்துவிடுகிறான்;+ 16 நான் அவனை உங்கள் சீஷர்களிடம் கூட்டிக்கொண்டு வந்தேன், ஆனால் அவர்களால் குணமாக்க முடியவில்லை” என்று சொன்னான். 17 அப்போது இயேசு, “விசுவாசமில்லாத சீர்கெட்ட* தலைமுறையே,+ நான் இன்னும் எத்தனை காலம்தான் உங்களோடு இருக்க வேண்டுமோ? எத்தனை காலம்தான் உங்களைச் சகித்துக்கொள்ள வேண்டுமோ?” என்று சொல்லிவிட்டு, “அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். 18 பின்பு, அந்தப் பையனைப் பிடித்திருந்த பேயை இயேசு அதட்டினார், அது அவனைவிட்டுப் போனது, அந்த நொடியே அவன் குணமானான்.+ 19 அதன் பின்பு சீஷர்கள் இயேசுவிடம் தனியாக வந்து, “எங்களால் ஏன் அந்தப் பேயை விரட்ட முடியவில்லை?” என்று கேட்டார்கள். 20 அதற்கு அவர், “உங்கள் விசுவாசம் குறைவாக இருப்பதுதான் அதற்குக் காரணம்; உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது”+ என்று சொன்னார். 21 ——
22 அவர்கள் கலிலேயாவில் கூடியிருந்தபோது இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் காட்டிக்கொடுக்கப்பட்டு, மக்களுடைய கையில் ஒப்படைக்கப்படுவார்.+ 23 அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள், ஆனால் மூன்றாம் நாளில் அவர் உயிரோடு எழுப்பப்படுவார்”+ என்று சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் மிகவும் துக்கப்பட்டார்கள்.
24 அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்துசேர்ந்ததும், இரண்டு திராக்மா வரியை வசூலிப்பவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் இரண்டு திராக்மா வரி கட்டுகிறாரா?”+ என்று கேட்டார்கள். 25 அதற்கு அவர், “ஆமாம்” என்று சொன்னார். ஆனாலும், வீட்டுக்குள் போனபோது அவர் பேசுவதற்கு முன்பே இயேசு அவரிடம், “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? இந்த உலகத்தில் இருக்கிற ராஜாக்கள் சுங்கவரியை அல்லது தலைவரியை* யாரிடம் வசூலிக்கிறார்கள்? அவர்களுடைய மகன்களிடமா, மற்றவர்களிடமா?” என்று கேட்டார். 26 அதற்கு பேதுரு, “மற்றவர்களிடம்” என்று சொன்னார்; அப்போது இயேசு, “அப்படியானால், மகன்கள் வரி கட்ட வேண்டியதில்லையே. 27 ஆனால், அவர்கள் நம்மேல் குற்றம் சொல்லாமல் இருப்பதற்காக,+ நீ கடலுக்குப் போய்த் தூண்டில் போட்டு, முதலில் சிக்கும் மீனை எடுத்து அதன் வாயைத் திறந்து பார்; அதில் ஒரு வெள்ளிக் காசு இருக்கும். அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடம் கொடுத்துவிடு” என்று சொன்னார்.