1 நாளாகமம்
22 பின்பு தாவீது, “உண்மைக் கடவுளாகிய யெகோவாவுக்கு இங்குதான் ஆலயம் கட்ட வேண்டும், இங்கே இருக்கிற பலிபீடத்தில் இஸ்ரவேலர்கள் தகன பலி கொடுக்க வேண்டும்”+ என்று சொன்னார்.
2 இஸ்ரவேலில் குடியிருக்கும் மற்ற தேசத்து மக்களை+ ஒன்றுகூட்டச் சொல்லி தாவீது கட்டளையிட்டார்; பின்பு, உண்மைக் கடவுளின் ஆலயத்துக்குத் தேவையான கற்களை வெட்டிச் செதுக்கும் வேலையை அவர்களுக்குக் கொடுத்தார்.+ 3 ஆலயத்தின் கதவுகளுக்குத் தேவையான ஆணிகளையும் கீல்களையும் செய்ய ஏராளமான இரும்பையும் எடைபோட முடியாதளவு செம்பையும்+ தாவீது சேகரித்தார். 4 அவர் சேர்த்து வைத்த தேவதாரு மரங்களுக்கு+ அளவே இல்லை; அவ்வளவு மரங்களை சீதோனியர்களும்+ தீருவைச் சேர்ந்தவர்களும்+ தாவீதிடம் கொடுத்தார்கள். 5 பின்பு தாவீது, “என்னுடைய மகன் சாலொமோன் சின்னப் பையன், அவனுக்கு அனுபவம் போதாது;*+ யெகோவாவின் ஆலயமோ மிக மிகப் பிரமாண்டமாய் இருக்க வேண்டும்;+ அதன் அழகையும் புகழையும்+ பற்றி உலகமே பேச வேண்டும்.+ அதனால், சாலொமோனுக்காக நான் எல்லாவற்றையும் தயார் செய்து வைப்பேன்” என்று சொன்னார். அதன்படி, தாவீது தன்னுடைய மரணத்துக்கு முன்பே எக்கச்சக்கமான பொருள்களைச் சேர்த்து வைத்தார்.
6 அதோடு, தாவீது தன்னுடைய மகன் சாலொமோனைக் கூப்பிட்டு, இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு ஆலயம் கட்டச் சொன்னார். 7 அவர் சாலொமோனிடம், “என் கடவுளாகிய யெகோவாவின் பெயருக்காக ஒரு ஆலயத்தைக் கட்ட நான் மனதார ஆசைப்பட்டேன்.+ 8 ஆனால் யெகோவா என்னிடம், ‘நீ பல பேரைக் கொன்றுபோட்டிருக்கிறாய்,* நிறைய போர் செய்திருக்கிறாய். இப்படி என் முன்னால் பல பேரைக் கொன்றுபோட்டதால் என் பெயருக்காக நீ ஆலயம் கட்ட வேண்டாம்.+ 9 உனக்கு ஒரு மகன் பிறப்பான்,+ அவன் சமாதானப் பிரியனாய் இருப்பான்; அதனால், அவனுக்கு சாலொமோன்*+ என்று பெயர் வைக்க வேண்டும். சுற்றியிருக்கிற எந்த எதிரியின் தொல்லையும் இல்லாமல் அவனை நிம்மதியாக வாழ வைப்பேன்;+ அவனுடைய ஆட்சிக்காலத்தில் இஸ்ரவேல் எங்கும் சமாதானமும் அமைதியும் இருக்கும்.+ 10 என் பெயருக்காக அவன்தான் ஆலயம் கட்டுவான்.+ அவன் எனக்கு மகனாக இருப்பான், நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன்.+ இஸ்ரவேலில் அவனுடைய ஆட்சியை என்றென்றும் நிலைக்க வைப்பேன்’+ என்று சொன்னார்.
11 என் மகனே, உன் கடவுளாகிய யெகோவா உனக்குத் துணையாக இருப்பார்; அவர் உன்னைப் பற்றிச் சொன்னபடியே உன் கடவுளாகிய யெகோவாவுக்கு நீ வெற்றிகரமாக ஒரு ஆலயத்தைக் கட்டு.+ 12 இஸ்ரவேலை ஆட்சி செய்யும் அதிகாரத்தை யெகோவா உனக்குக் கொடுக்கும்போது, உன் கடவுளாகிய யெகோவாவின் சட்டத்தைக் கடைப்பிடிப்பதற்குத்+ தேவையான விவேகத்தையும் புரிந்துகொள்ளும் திறனையும் அவர் உனக்குத் தருவார்.+ 13 மோசே மூலம் இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கொடுத்த விதிமுறைகளையும் நீதித்தீர்ப்புகளையும்+ அப்படியே கடைப்பிடி. அப்போதுதான், நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்.+ தைரியமாகவும் உறுதியாகவும் இரு; எதற்கும் பயப்படாதே, திகிலடையாதே.+ 14 நான் நிறைய முயற்சியெடுத்து யெகோவாவின் ஆலயத்துக்காக 1,00,000 தாலந்து* தங்கமும், 10,00,000 தாலந்து வெள்ளியும், எடையே போட முடியாத அளவுக்கு செம்பும் இரும்பும் சேர்த்து வைத்திருக்கிறேன்;+ மரங்களையும் கற்களையும்கூட தயாராக வைத்திருக்கிறேன்;+ இவற்றோடு நீயும் பொருள்களைச் சேர்த்து வைக்க வேண்டும். 15 கற்களை வெட்டிச் செதுக்குகிறவர்களும் கொத்தனார்களும்+ தச்சர்களும் எல்லா விதமான வேலைகளையும் திறமையாகச் செய்கிறவர்களும் உன்னுடன் இருக்கிறார்கள்.+ வேலையாட்களுக்குப் பஞ்சமே இல்லை. 16 தங்கமும் வெள்ளியும் செம்பும் இரும்பும் நம்மிடம் குவிந்து கிடக்கின்றன.+ அதனால், உடனே வேலையைத் தொடங்கு, யெகோவா உனக்குத் துணையாக இருப்பார்”+ என்று சொன்னார்.
17 பின்பு, தன்னுடைய மகன் சாலொமோனுக்கு உதவச் சொல்லி இஸ்ரவேல் தலைவர்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டார். 18 அவர்களிடம், “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார், சுற்றியிருக்கிற எதிரிகளுடைய தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ வைத்திருக்கிறார். இந்தத் தேசத்தில் முன்பு குடியிருந்த மக்களைத் தோற்கடிக்க எனக்கு உதவி செய்தார்; இப்போது இந்தத் தேசம் யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் முன்பாக அடிபணிய வைக்கப்பட்டிருக்கிறது. 19 உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் சேவை செய்யத் தீர்மானமாக இருங்கள்;+ யெகோவாவின் பெயருக்காகக் கட்டப்படும் ஆலயத்தில்+ யெகோவாவின் ஒப்பந்தப் பெட்டியையும் பரிசுத்த பொருள்களையும் கொண்டுவந்து வையுங்கள்.+ உண்மைக் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட ஆரம்பியுங்கள்”+ என்று கட்டளையிட்டார்.