ஏசாயா
28 எப்பிராயீமின் குடிவெறியர்களுடைய பகட்டான கிரீடமே,*+
செழிப்பான பள்ளத்தாக்குக்கு மேலே இருக்கிற குடிகாரர்களின் அலங்காரக் கிரீடமே,
வாடிப்போகிற வெறும் மலர்க் கிரீடமே,
உனக்கு ஐயோ கேடு!
2 யெகோவா மகா சக்திபடைத்த ஒருவரை அனுப்புவார்.
இடியுடன் பெய்யும் ஆலங்கட்டி* மழையைப் போலவும்,
சேதம் உண்டாக்கும் சூறாவளியைப் போலவும்,
வெள்ளப்பெருக்கை உண்டாக்கும் புயல்மழையைப் போலவும்,
அவர் வந்து உன்னைக் கீழே தள்ளிப்போடுவார்.
4 செழிப்பான பள்ளத்தாக்கின் மேலே இருக்கிற அலங்காரக் கிரீடம்,
வாடிப்போகிற அந்த மலர்க் கிரீடம்,
கோடைக் காலத்துக்குமுன் முதலாவது பழுக்கிற அத்திப் பழம்போல் ஆகிவிடும்.
ஒருவர் அதைப் பறித்தவுடன் வாயில் போட்டுவிடுவார்.
5 அந்த நாளில், பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களுக்கு+ மகிமையான கிரீடமாகவும் அழகான மலர்க் கிரீடமாகவும் ஆவார். 6 நீதிபதிகள் நியாயமான தீர்ப்பு வழங்குவதற்குப் புத்தி கொடுப்பார். நகரவாசலைத் தாக்கும் எதிரிகளோடு போர் செய்கிறவர்களுக்குத் தைரியத்தைக் கொடுப்பார்.+
7 குருமார்களும் தீர்க்கதரிசிகளும்கூட மதுபானத்தினால் வழிதவறிப் போகிறார்கள்.
திராட்சமது குடித்துவிட்டுத் தள்ளாடுகிறார்கள்.
தவறான வழியில் போகிறார்கள்.
திராட்சமது அவர்களைக் குழம்பிப்போகச் செய்கிறது.
மதுபானம் அவர்களைத் தள்ளாட வைக்கிறது.
அவர்கள் பார்க்கும் தரிசனம் அவர்களை வழிதவறிப் போகவைக்கிறது.
தீர்ப்பு வழங்குவதில் அவர்கள் தடுமாறுகிறார்கள்.+
8 அவர்களுடைய மேஜைகளெல்லாம் வாந்தியால் நிறைந்திருக்கிறது.
சுத்தமான இடமே இல்லை.
9 ஜனங்களே, நீங்கள் என்னிடம்,
“நீ யாருக்கு அறிவு புகட்ட நினைக்கிறாய்?
நாங்கள் என்ன சின்னக் குழந்தைகளா?
யாருக்குப் புரிய வைக்கப் பார்க்கிறாய்?
நாங்கள் என்ன ஒன்றும் தெரியாத பிள்ளைகளா?
10 ‘கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;
இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாயே” என்கிறீர்கள்.
11 அதனால், வேறு பாஷையில் திக்கித்திக்கிப் பேசுபவர்களை வைத்தே இந்த ஜனங்களிடம் அவர் பேசுவார்.+ 12 ஒருசமயம் அவர், “இதுதான் ஓய்வெடுப்பதற்கான இடம். களைப்பாக இருக்கிறவர்கள் இங்கே ஓய்வெடுக்கட்டும். இதுதான் புத்துணர்ச்சி தரும் இடம்” என்று சொல்லியும் இவர்கள் கேட்கவில்லை.+ 13 அதனால் யெகோவாவின் வார்த்தை இவர்களுக்கு இப்படி இருக்கும்:
“கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை;
இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம்.”
அதனால், இவர்கள் நடக்கும்போது தடுமாறுவார்கள்.
பின்பக்கமாக விழுவார்கள்.
காயமடைவார்கள், கண்ணியில் சிக்கிப் பிடிபடுவார்கள்.+
14 பெருமைபிடித்தவர்களே, எருசலேம் ஜனங்களை ஆட்சி செய்கிறவர்களே,
யெகோவா சொல்வதைக் கேளுங்கள்.
15 நீங்கள் பெருமையாக,
வெள்ளம் பெருக்கெடுத்து வந்தாலும்,
எங்கள் பக்கம் வராது.
பொய்தான் எங்களுக்கு அடைக்கலம்.
தந்திரம்தான் எங்களுக்குப் புகலிடம்”+ என்று சொல்கிறீர்களே.
16 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா இப்படிச் சொல்கிறார்:
“நான் சீயோனில் ஒரு அடிக்கல்லை நாட்டுகிறேன்; அது சோதிக்கப்பட்ட கல்.+
அதுவே உறுதியான அஸ்திவாரத்தில்+ நாட்டப்பட்ட விலைமதிப்புள்ள மூலைக்கல்.+
விசுவாசம் காட்டுகிறவர்கள் பயப்பட மாட்டார்கள்.+
பொய் என்கிற அடைக்கலத்தை ஆலங்கட்டி மழை அழிக்கும்.
புகலிடத்தை வெள்ளம் வாரிக்கொண்டு போகும்.
18 மரணத்தோடு நீங்கள் செய்த ஒப்பந்தம் முறிக்கப்படும்.
கல்லறையோடு நீங்கள் செய்த ஒப்பந்தம் ஒழிக்கப்படும்.+
வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது,
நீங்கள் சின்னாபின்னமாவீர்கள்.
19 வெள்ளம் வரும்போதெல்லாம்,
நீங்கள் அடித்துச் செல்லப்படுவீர்கள்.+
அது தினம்தினம் புரண்டு வரும்.
பகலிலும் வரும், ராத்திரியிலும் வரும்.
செய்தியைக் கேட்டு கதிகலங்கும்போதுதான் அவர்களுக்குப் புரியவரும்.*
20 அவர்கள் கால் நீட்டிப் படுக்க கட்டிலின் நீளம் போதாது.
நன்றாகப் போர்த்திப் படுக்க போர்வையின் அகலம் போதாது.
21 யெகோவா வினோதமான செயலைச் செய்யவும்,
அபூர்வமான வேலையை நிறைவேற்றவும்,+
பிராசீம் மலையில் செயல்பட்டது போலச் செயல்படுவார்.
கிபியோனின் பக்கத்திலுள்ள பள்ளத்தாக்கில் கொதித்தெழுந்தது போலக் கொதித்தெழுவார்.+
22 இப்போது கேலி செய்யாதீர்கள்.+
அப்படிச் செய்தால், உங்களைக் கட்டியிருக்கும் கயிறுகள் இன்னும் இறுக்கப்படும்.
தேசம்* முழுவதையும் அழிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
உன்னதப் பேரரசராகிய பரலோகப் படைகளின் யெகோவாவே என்னிடம் இதைச் சொல்லியிருக்கிறார்.+
23 நான் சொல்வதை நன்றாகக் கேளுங்கள்.
என் வார்த்தைகளை உன்னிப்பாகக் கவனியுங்கள்.
24 உழுகிறவன் விதை விதைக்காமல் நாள் முழுக்க உழுதுகொண்டே இருப்பானா?
நாள் முழுக்க மண்கட்டிகளை உடைத்து நிலத்தைச் சமமாக்கிக்கொண்டே இருப்பானா?+
25 நிலத்தைச் சமமாக்கிய பிறகு,
சீரகத்தையும் கருஞ்சீரகத்தையும் தூவ மாட்டானா?
கோதுமையையும் கம்பையும் பார்லியையும் அதனதன் இடத்தில் விதைக்க மாட்டானா?
வண்டியின் உருளையை ஏற்றி சீரகத்தை நொறுக்க மாட்டார்கள்.
கோலால்தான் தட்டியெடுப்பார்கள்.
28 ரொட்டி செய்வதற்காக ஒருவன் தானியத்தைக் களத்துமேட்டில் நொறுக்குவானா?
நாள் முழுக்க அதை அடித்துக்கொண்டே இருப்பானா?+
குதிரை வண்டியை அதன்மேல் ஓட்டி,
அதன் உருளையால் அதை நொறுக்குவானா?+