யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்
19 இதற்குப் பின்பு, பரலோகத்தில் திரளான கூட்டத்தார் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதைப் போன்ற சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!*+ மீட்பும் மகிமையும் வல்லமையும் நம்முடைய கடவுளுக்குத்தான் சொந்தம். 2 ஏனென்றால், அவருடைய தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை.+ பாலியல் முறைகேட்டால்* பூமியைக் கெடுத்த பேர்போன அந்த விபச்சாரியை அவர் தண்டித்திருக்கிறார்; தன்னுடைய அடிமைகளின் இரத்தத்துக்காக அவளைப் பழிவாங்கியிருக்கிறார்”+ என்று சொன்னார்கள். 3 உடனே இரண்டாவது தடவையாக, “‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள். “அவள் எரிவதால் உண்டாகிற புகை என்றென்றும் மேலே போய்க்கொண்டிருக்கிறது”+ என்றும் சொன்னார்கள்.
4 அப்போது, 24 மூப்பர்களும்+ நான்கு ஜீவன்களும்+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிற கடவுள் முன்னால் விழுந்து வணங்கி, “ஆமென்!* ‘யா’வைப் புகழுங்கள்!”*+ என்று சொன்னார்கள்.
5 அதோடு, சிம்மாசனத்திலிருந்து வந்த ஒரு குரல், “நம் கடவுளுடைய அடிமைகளே,+ அவருக்குப் பயந்து நடக்கிற சிறியவர்களே, பெரியவர்களே,+ எல்லாரும் அவரைப் புகழ்ந்துகொண்டே இருங்கள்” என்று சொன்னது.
6 அப்போது, திரளான கூட்டத்தாரின் சத்தத்தைப் போலவும், சீறிப்பாய்கிற வெள்ளத்தின் சத்தத்தைப் போலவும், பலத்த இடிமுழக்கத்தைப் போலவும் உண்டான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அவர்கள், “‘யா’வைப் புகழுங்கள்!”*+ ஏனென்றால், சர்வவல்லமையுள்ள நம் கடவுளாகிய யெகோவா,*+ ராஜாவாக ஆட்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.+ 7 நாம் மகிழ்ந்து, சந்தோஷத்தில் துள்ளிக் குதிப்போமாக, அவருக்கு மகிமை சேர்ப்போமாக. ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவரின் திருமணம் வந்துவிட்டது, மணமகளும் மணக்கோலத்தில் தயாராக இருக்கிறாள். 8 பளபளப்பான, சுத்தமான, உயர்தரமான நாரிழை* உடையைப் போட்டுக்கொள்கிற பாக்கியம் அவளுக்குக் கொடுக்கப்பட்டது; உயர்தரமான அந்த நாரிழை உடை பரிசுத்தவான்களுடைய நீதியான செயல்களைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்கள்.
9 அதோடு அவர் என்னிடம், “ஆட்டுக்குட்டியானவரின் திருமண விருந்துக்கு+ அழைக்கப்பட்டவர்கள் சந்தோஷமானவர்கள் என்று எழுது” என்றும், “இவை கடவுளுடைய சத்திய வார்த்தைகள்” என்றும் சொன்னார். 10 அப்போது, அவரை வணங்குவதற்காக அவருடைய காலில் விழுந்தேன். ஆனால் அவர் என்னிடம், “வேண்டாம்! அப்படிச் செய்யாதே!+ உன்னைப் போலவும், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுக்கிற உன் சகோதரர்களைப் போலவும் நானும் ஓர் அடிமைதான்; கடவுளை மட்டும் வணங்கு!+ ஏனென்றால், இயேசுவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதுதான்+ தீர்க்கதரிசனங்களின் நோக்கம்”+ என்று சொன்னார்.
11 பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ! ஒரு வெள்ளைக் குதிரை+ இருந்தது. நம்பகமானவர்+ என்றும், உண்மையானவர்+ என்றும் அழைக்கப்படுகிறவர் அதன்மேல் உட்கார்ந்திருந்தார்; அவர் நீதியாக நியாயந்தீர்க்கிறவர், நீதியாகப் போர் செய்கிறவர்.+ 12 அவருடைய கண்கள் தீ ஜுவாலை போல் இருந்தன.+ அவருடைய தலையில் நிறைய மகுடங்கள் இருந்தன. அவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு பெயர் அவர்மேல் எழுதப்பட்டிருந்தது. 13 இரத்தக் கறைபடிந்த* மேலங்கியை அவர் போட்டிருந்தார். அவர் கடவுளுடைய வார்த்தை+ என்று அழைக்கப்படுகிறார். 14 அதோடு, பரலோகப் படைவீரர்கள் வெள்ளைக் குதிரைகளின் மேல் ஏறி, அவருக்குப் பின்னால் போனார்கள். வெண்மையும் சுத்தமுமான உயர்தர நாரிழை உடையை அவர்கள் போட்டிருந்தார்கள். 15 தேசத்தாரை வெட்டிப் போடுவதற்காகக் கூர்மையான நீண்ட வாள்+ ஒன்று அவருடைய வாயிலிருந்து வெளிப்பட்டது. இரும்புக்கோலால் அவர்களை அவர் நொறுக்குவார்.*+ அதோடு, சர்வவல்லமையுள்ள கடவுளுடைய கடும் கோபம் என்ற திராட்சரச ஆலையில் திராட்சைப் பழங்களை மிதிப்பார்.+ 16 ராஜாக்களுக்கெல்லாம் ராஜா, எஜமான்களுக்கெல்லாம் எஜமான்+ என்ற பெயர் அவருடைய மேலங்கியில், அவருடைய தொடைப்பகுதியில், எழுதப்பட்டிருந்தது.
17 பின்பு, ஒரு தேவதூதர் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன். அவர் நடுவானத்தில்* பறக்கிற எல்லா பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில், “இங்கே வாருங்கள், கடவுள் கொடுக்கிற மாபெரும் விருந்துக்குக் கூடிவாருங்கள்.+ 18 ராஜாக்களின் சதையையும், படைத் தளபதிகளின் சதையையும், பலசாலிகளின் சதையையும்,+ குதிரைகளின் சதையையும், அவற்றின் மேல் ஏறியிருக்கிறவர்களின் சதையையும்,+ சுதந்திர மக்கள், அடிமைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லாருடைய சதையையும் சாப்பிட வாருங்கள்” என்று கூப்பிட்டார்.
19 பின்பு, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவரையும் அவருடைய படைவீரர்களையும் எதிர்த்துப் போர் செய்வதற்காக, மூர்க்க மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைவீரர்களும் கூடிவந்ததைப் பார்த்தேன்.+ 20 அந்த மூர்க்க மிருகம் பிடிக்கப்பட்டது. மூர்க்க மிருகத்தின் முன்னால் அற்புதங்கள் செய்த போலித் தீர்க்கதரிசியும்+ பிடிக்கப்பட்டான். இவன்தான் மூர்க்க மிருகத்தின் அடையாளக் குறியைப் பெற்றிருந்தவர்களையும்+ அதன் உருவத்தை வணங்கியவர்களையும்+ தன்னுடைய அற்புதங்களால் ஏமாற்றியவன். கந்தகம் எரிகிற நெருப்பு ஏரியில் அவன் உயிரோடு தள்ளப்பட்டான்,+ அவனோடு மூர்க்க மிருகமும் உயிரோடு தள்ளப்பட்டது. 21 மற்றவர்களோ, குதிரைமேல் உட்கார்ந்திருந்தவருடைய வாயிலிருந்து புறப்பட்ட நீண்ட வாளால் கொல்லப்பட்டார்கள்.+ எல்லா பறவைகளும் அவர்களுடைய சதையைச் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தன.+