மத்தேயு எழுதியது
4 பின்பு, கடவுளுடைய சக்தி இயேசுவை வனாந்தரத்துக்கு வழிநடத்தியது; அங்கே பிசாசு அவரைச் சோதித்தான்.+ 2 அவர் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருந்த பின்பு, அவருக்குப் பசியெடுத்தது. 3 அப்போது, அந்தச் சோதனைக்காரன்+ அவரிடம் வந்து, “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், இந்தக் கற்களை ரொட்டிகளாகும்படி சொல்” என்றான். 4 அதற்கு இயேசு, “‘உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் மனுஷன் உயிர்வாழ்வான்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
5 பின்பு, பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்துக்குக்+ கொண்டுபோய், ஆலயத்தின் உயரமான இடத்தில் அவரை நிற்க வைத்து,+ 6 “நீ கடவுளுடைய மகனாக இருந்தால், கீழே குதி; ‘அவர் உன்னைக் குறித்து தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளை கொடுப்பார். உன் பாதம் கல்லில் மோதாதபடி அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் சுமந்துகொண்டு போவார்கள்’ என எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னான். 7 அதற்கு இயேசு, “‘உன் கடவுளாகிய யெகோவாவை சோதித்துப் பார்க்கக் கூடாது’ எனவும் எழுதப்பட்டிருக்கிறதே”+ என்று சொன்னார்.
8 மறுபடியும் பிசாசு அவரை மிக மிக உயரமான ஒரு மலைக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காட்டி,+ 9 “நீ ஒரேவொரு தடவை என்முன் விழுந்து என்னை வணங்கினால், இவை எல்லாவற்றையும் உனக்குத் தருவேன்” என்று சொன்னான். 10 அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும்,+ அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார். 11 அப்போது, பிசாசு அவரைவிட்டுப் போனான்;+ பின்பு, தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை* செய்ய+ ஆரம்பித்தார்கள்.
12 யோவான் கைது செய்யப்பட்டதை+ இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் புறப்பட்டுப் போனார்.+ 13 அதன் பின்பு, நாசரேத்தைவிட்டு கப்பர்நகூமுக்குப் போய்+ அங்கே குடியிருந்தார்; அது செபுலோன், நப்தலி பகுதிகளில் இருக்கிற கடலோர நகரம். 14 “செபுலோன் தேசமே, நப்தலி தேசமே! கடலுக்குப் போகும் வழியில் இருக்கிற இடங்களே! யோர்தானுக்கு மேற்கே இருக்கிற பகுதிகளே! மற்ற தேசத்தார் குடியிருக்கிற கலிலேயாவே! 15 இருட்டில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைப் பார்த்தார்கள், மரணத்தின் நிழல் படிந்த பகுதியில் வாழ்கிறவர்கள்மேல் வெளிச்சம்+ பிரகாசித்தது”+ என்று 16 ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது. 17 அந்தச் சமயத்திலிருந்து இயேசு, “மனம் திருந்துங்கள், பரலோக அரசாங்கம் நெருங்கி வந்துவிட்டது” என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்.+
18 கலிலேயா கடலோரமாக அவர் நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும்+ அவருடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+ 19 இயேசு அவர்களிடம், “என் பின்னால் வாருங்கள், உங்களை மனுஷர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்”+ என்று சொன்னார். 20 அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.+ 21 அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்.+ அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களையும் அவர் கூப்பிட்டார்.+ 22 அவர்கள் உடனடியாகப் படகையும் தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்.
23 பின்பு அவர் கலிலேயா முழுவதும் போய்,+ அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார்;+ கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்; அதோடு, மக்களுக்கு இருந்த எல்லா விதமான நோய்களையும் உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.+ 24 அவரைப் பற்றிய பேச்சு சீரியா முழுவதும் பரவியது; பலவிதமான வியாதிகளாலும் வலிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த நோயாளிகளையும்,+ பேய் பிடித்தவர்களையும்,+ காக்காய்வலிப்பால் கஷ்டப்பட்டவர்களையும்,+ பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் அவரிடம் கொண்டுவந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார். 25 அதனால், கலிலேயா, தெக்கப்போலி, எருசலேம், யூதேயா ஆகிய இடங்களிலிருந்தும் யோர்தானுக்குக் கிழக்கிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, அவருக்குப் பின்னால் போனார்கள்.