எஸ்தர்
1 இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை* 127 மாகாணங்களை அகாஸ்வேரு* ராஜா ஆட்சி செய்துவந்தார்.+ 2 அவர் சூசான்*+ கோட்டையிலிருந்து* ஆட்சி செய்த காலத்தில், 3 அதாவது அவருடைய ஆட்சியின் மூன்றாம் வருஷத்தில், எல்லா தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஒரு விருந்து வைத்தார். பெர்சிய,+ மேதிய+ படை அதிகாரிகளும் உயர்குடி ஜனங்களும் மாகாணங்களின் தலைவர்களும் அங்கு வந்திருந்தார்கள். 4 அவர்களுக்குத் தன்னுடைய பிரமாண்டமான சாம்ராஜ்யத்தின் செல்வச் செழிப்பையும் தன்னுடைய சிறப்பையும் மேன்மையையும் 180 நாட்களாகக் காட்டிய பின்பு அவர் அந்த விருந்து வைத்தார். 5 அந்த நாட்களுக்குப் பின்பு, சூசான் கோட்டையிலிருந்த பெரியோர்முதல் சிறியோர்வரை எல்லாருக்கும் தன்னுடைய அரண்மனைத் தோட்டத்தில் ஏழு நாட்களுக்கு அவர் விருந்து கொடுத்தார். 6 அங்கே பளிங்குத் தூண்களில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி வளையங்களில், நாரிழையினாலும் உயர்தரமான பருத்தியினாலும் நீல நிற நூலினாலும் நெய்யப்பட்ட திரைகள் தொங்கிக்கொண்டிருந்தன. அவை உயர்தரமான நூலிலும் ஊதா நிற கம்பளி நூலிலும் செய்யப்பட்ட நாடாக்களால் கட்டப்பட்டிருந்தன. அதோடு, கருஞ்சிவப்புக் கற்கள், வெள்ளை பளிங்குக்கற்கள், முத்துச்சிப்பிகள், கறுப்பு பளிங்குக்கற்கள் ஆகியவை பதிக்கப்பட்ட தளத்தின் மேல் தங்கத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட இருக்கைகள்* வைக்கப்பட்டிருந்தன.
7 ராஜாவின் அந்தஸ்துக்கு ஏற்ற முதல்தரமான திராட்சமது ஏராளமாகப் பரிமாறப்பட்டது. அது தங்கக் கிண்ணங்களில் பரிமாறப்பட்டது. அந்தக் கிண்ணங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருந்தன. 8 பொதுவாக, விருந்துகளில் குறிப்பிட்ட அளவுக்குத் திராட்சமது குடிக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆனால், இந்தத் தடவை அந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை. அவரவர் விருப்பப்படி குடிக்கலாம் என்று அரண்மனை அதிகாரிகளிடம் ராஜா கட்டளை கொடுத்திருந்தார்.
9 வஸ்தி ராணியும்+ அகாஸ்வேரு ராஜாவின் அரச மாளிகையில் பெண்களுக்கு விருந்து வைத்தாள்.
10 ஏழாம் நாளில், ராஜா திராட்சமதுவைக் குடித்து குஷியாக இருந்தபோது, தன்னுடைய உதவியாளர்களும் அரண்மனை அதிகாரிகளுமான மெகுமான், பிஸ்தா, அற்போனா,+ பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் ஆகிய ஏழு பேரிடம் 11 வஸ்தி ராணியைக் கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னார். அவள் பேரழகியாக இருந்ததால் ஜனங்களுக்கும் தலைவர்களுக்கும் அவளுடைய அழகைக் காட்டிப் பெருமைப்படுவதற்காக அவளைக் கிரீடம்* சூடி வரச் சொன்னார். 12 அரண்மனை அதிகாரிகள் வஸ்தி ராணியிடம் போய் ராஜாவின் கட்டளையைச் சொன்னபோது, தன்னால் வர முடியாது என்று அவள் பிடிவாதமாகச் சொல்லிவிட்டாள். அதைக் கேள்விப்பட்டதும் ராஜாவுக்குக் கோபமும் ஆத்திரமும் பற்றிக்கொண்டு வந்தது.
13 அதனால், முன்பு நடந்த வழக்குகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த* நிபுணர்களிடம் அவர் கலந்துபேசினார். (இப்படி, சட்டங்களையும் வழக்குகளையும் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருந்த சட்ட வல்லுனர்கள் எல்லாருக்கும் ராஜாவின் பிரச்சினை தெரியவந்தது. 14 அவர்களில் பெர்சிய, மேதிய தலைவர்களான கர்ஷேனா, சேத்தார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் ஆகிய ஏழு பேரும்+ ராஜாவின் அந்தரங்க ஆலோசகர்களாக இருந்தார்கள். அவருடைய சாம்ராஜ்யத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். அதனால், எப்போது வேண்டுமானாலும் ராஜாவைச் சந்திக்க அவர்களுக்கு அனுமதி இருந்தது.) 15 ராஜா அவர்களைப் பார்த்து, “அரண்மனை அதிகாரிகளிடம் இந்த அகாஸ்வேரு ராஜா சொல்லி அனுப்பிய கட்டளைக்குக் கீழ்ப்படியாத வஸ்தி ராணியைச் சட்டப்படி என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
16 அப்போது மெமுகான், ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் முன்னால், “அகாஸ்வேரு ராஜாவுக்கு எதிராக மட்டுமே வஸ்தி ராணி குற்றம் செய்யவில்லை.+ ராஜாவின் மாகாணங்களில் உள்ள எல்லா தலைவர்களுக்கும் ஜனங்களுக்கும் எதிராகக்கூட குற்றம் செய்திருக்கிறாள். 17 ராணி செய்தது எல்லா பெண்களுக்கும் தெரியவரும். அப்போது அவர்கள், ‘அகாஸ்வேரு ராஜா கூப்பிட்டபோது வஸ்தி ராணியே போகவில்லை’ என்று சொல்லி, தங்கள் கணவரை மதிக்க மாட்டார்கள். 18 ராணி செய்த குற்றத்தைப் பற்றிக் கேள்விப்படும் பெர்சிய, மேதிய தலைவர்களின் மனைவிகளும் இன்றைக்கே தங்கள் கணவரிடம் அவளைப் போல பேச ஆரம்பித்துவிடுவார்கள். இதனால், குடும்பத்தில் மதிப்பு மரியாதை ரொம்பவே குறைந்துவிடும், எரிச்சல்தான் அதிகமாகும். 19 அகாஸ்வேரு ராஜாவே, உங்களுக்கு நல்லதாகப் பட்டால், வஸ்தி இனி ஒருபோதும் ராஜாவுக்கு முன்னால் வரக் கூடாதென்று ஆணையிடுங்கள். என்றுமே மாற்ற முடியாத பெர்சிய, மேதிய சட்டங்களோடு+ சேர்த்து இதையும் எழுதி வைக்கும்படி கட்டளை கொடுங்கள். அவளைவிட நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுத்து ராணியாக்குங்கள். 20 ராஜாவின் ஆணையை அவருடைய சாம்ராஜ்யம் முழுவதும் உள்ள ஜனங்கள் கேள்விப்படும்போது, உயர் குடும்பத்துப் பெண்களிலிருந்து சாதாரண குடும்பத்துப் பெண்கள்வரை எல்லாரும் தங்கள் கணவருக்கு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்” என்று சொன்னார்.
21 மெமுகான் சொன்ன ஆலோசனை ராஜாவுக்கும் தலைவர்களுக்கும் பிடித்திருந்தது. அதன்படியே ராஜா செய்தார். 22 “குடும்பத்தில் கணவர்தான் எஜமானாக இருக்க வேண்டும், வீட்டில் அவருடைய தாய்மொழிதான் பேசப்பட வேண்டும்” என்று கடிதம் எழுதி எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பினார்.+ அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அதை எழுதி அனுப்பினார்.
2 அகாஸ்வேரு ராஜாவின்+ ஆத்திரம் அடங்கியபோது, வஸ்தி செய்த குற்றத்தையும்+ அவளுக்குக் கொடுத்த தீர்ப்பையும்+ பற்றி அவர் நினைத்துப் பார்த்தார். 2 அப்போது அவருடைய உதவியாளர்கள், “ராஜாவே, உங்களுக்காக அழகான, இளம் கன்னிப் பெண்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். 3 அதற்காக உங்கள் சாம்ராஜ்யத்தில்+ இருக்கிற எல்லா மாகாணங்களிலும் அதிகாரிகளை நியமியுங்கள். அழகான, இளம் கன்னிப் பெண்கள் எல்லாரையும் சூசான்* கோட்டையின்* அந்தப்புரத்துக்குக் கூட்டிக்கொண்டு வரச் சொல்லுங்கள். ராஜாவின் பணியாளரும்* பெண்களின் பாதுகாவலருமான யேகாயின்+ பொறுப்பில் அவர்களை ஒப்படைக்கச் சொல்லுங்கள். வாசனைத் தைலங்களால் அவர்களுக்கு அழகு சிகிச்சைகள்* செய்யச் சொல்லுங்கள். 4 அதன்பின் ராஜாவே, உங்களுக்கு எந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறதோ அந்தப் பெண்ணையே வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்குங்கள்” என்று சொன்னார்கள். அந்த ஆலோசனை ராஜாவுக்குப் பிடித்திருந்ததால் அப்படியே செய்தார்.
5 பென்யமீன் வம்சத்தைச்+ சேர்ந்த கீஸ் என்பவரின் கொள்ளுப் பேரனும், சீமேயின் பேரனும், யாவீரின் மகனுமான மொர்தெகாய்+ என்ற யூதர் சூசான்+ கோட்டையில் இருந்தார். 6 பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார், யூதாவின் ராஜா எகொனியாவையும்*+ மற்றவர்களையும் எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போனபோது இவரையும்* பிடித்துக்கொண்டு போயிருந்தான். 7 மொர்தெகாய் தன் அப்பாவுடைய சகோதரனின் மகளான அத்சாளை,+ அதாவது எஸ்தரை, தன் சொந்த மகள் போல வளர்த்துவந்தார். ஏனென்றால், அவளுடைய அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள். அவள் ரொம்ப அழகாகவும் லட்சணமாகவும் இருந்தாள். 8 ராஜாவின் ஆணையும் சட்டமும் அறிவிக்கப்பட்டபோது, இளம் பெண்கள் நிறைய பேர் சூசான் கோட்டைக்குக் கொண்டுவரப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டார்கள்.+ அப்போது, எஸ்தரும் ராஜாவின் மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டு, பெண்களின் பாதுகாவலரான யேகாயிடம் ஒப்படைக்கப்பட்டாள்.
9 அவருக்கு எஸ்தரை மிகவும் பிடித்துவிட்டது; அவள் அவரிடம் நல்ல பெயரெடுத்ததால், அவளுக்கு அழகு சிகிச்சைகள்*+ செய்வதற்கும் சத்தான உணவு வகைகளைக் கொடுப்பதற்கும் உடனடியாக ஏற்பாடு செய்தார். அதோடு, ராஜாவின் மாளிகையிலிருந்த இளம் பெண்களில் ஏழு பேரை அவளுடைய பணிப்பெண்களாக நியமித்தார். பின்பு, அவளையும் அந்தப் பணிப்பெண்களையும் அந்தப்புரத்திலிருந்த மிகச் சிறந்த இடத்துக்கு மாற்றினார். 10 எஸ்தர் தன்னுடைய ஜனங்களைப்+ பற்றியோ சொந்தபந்தங்களைப் பற்றியோ யாரிடமும் எதையும் சொல்லவில்லை; ஏனென்றால், அதைப் பற்றி வாயே திறக்கக் கூடாதென்று+ மொர்தெகாய்+ சொல்லி வைத்திருந்தார். 11 எஸ்தர் எப்படி இருக்கிறாள், அவளுக்கு என்ன நடக்கிறது என்றெல்லாம் தெரிந்துகொள்வதற்காக மொர்தெகாய் தினமும் அந்தப்புரத்து முற்றத்தின் வழியாகப் போவதும் வருவதுமாக இருந்தார்.
12 அந்தப்புரத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு, முதல் ஆறு மாதங்கள் வெள்ளைப்போள*+ தைலத்தாலும், அடுத்த ஆறு மாதங்கள் பரிமளத் தைலத்தாலும் விதவிதமான வாசனைத் தைலங்களாலும்+ அழகு சிகிச்சை* செய்யப்படும். அந்த 12 மாதங்களுக்குப் பின்பு ஒவ்வொரு பெண்ணாக அகாஸ்வேரு ராஜாவிடம் கொண்டுபோகப்படுவார்கள். 13 அந்தப்புரத்திலிருந்து ராஜாவின் மாளிகைக்குக் கொண்டுபோகப்படும்போது ஒவ்வொரு பெண்ணும் தான் விரும்பிய எல்லாவற்றையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம். 14 அவள் சாயங்காலம் ராஜாவிடம் கொண்டுபோகப்படுவாள், பின்பு காலையில் மறுமனைவிகளின் அந்தப்புரத்துக்கு* கொண்டுபோகப்படுவாள். அங்கு ராஜாவின் பணியாளரும்+ மறுமனைவிகளின் பாதுகாவலருமான சாஸ்காசிடம் ஒப்படைக்கப்படுவாள். ராஜா அவளை மிகவும் விரும்பி, பெயர் சொல்லி கூப்பிட்டால் மட்டும்தான் அவளால் அவரிடம் மறுபடியும் போக முடியும்.+
15 ராஜாவிடம் கொண்டுபோகப்படுவதற்கு மொர்தெகாயின் அப்பாவுடைய சகோதரரான அபியாயேலின் மகளாகிய எஸ்தரின் முறை வந்தது. மொர்தெகாயின் வளர்ப்பு மகளாகிய அவள்,+ ராஜாவின் பணியாளரும் பெண்களின் பாதுகாவலருமான யேகாய் சிபாரிசு செய்ததைத் தவிர வேறு எதையும் கூடுதலாகக் கேட்கவில்லை. (எஸ்தர் அங்கிருந்த நாளெல்லாம், பார்க்கிற எல்லாருடைய மனதையும் கவர்ந்திருந்தாள்.) 16 அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த ஏழாம் வருஷம்,+ பத்தாம் மாதமாகிய தேபேத்* மாதத்தில் அவருடைய அரச மாளிகைக்கு எஸ்தர் கொண்டுபோகப்பட்டாள். 17 ராஜா மற்ற எல்லா பெண்களையும்விட எஸ்தரையே மிகவும் விரும்பினார். மற்ற எல்லா கன்னிப் பெண்களையும்விட அவள்மேல் அதிக பிரியமும் பாசமும் வைத்தார். அதனால் ராஜா அவளுக்குக் கிரீடம்* சூட்டி, வஸ்திக்குப் பதிலாக+ பட்டத்து ராணியாக்கினார்.+ 18 அவளைக் கௌரவிப்பதற்காகத் தன்னுடைய எல்லா தலைவர்களுக்கும் ஊழியர்களுக்கும் பிரமாண்டமான ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமல்ல, எல்லா மாகாணங்களிலும் பொதுமன்னிப்பு* தருவதாக அறிவித்து, ராஜாவின் அந்தஸ்துக்குத் தகுந்தபடி அன்பளிப்புகளை வாரி வழங்கினார்.
19 கன்னிப் பெண்கள்*+ இரண்டாவது தடவை கொண்டுவரப்பட்டபோது, மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தார். 20 மொர்தெகாய் சொல்லியிருந்தபடியே எஸ்தர் தன்னுடைய சொந்தபந்தங்களையும் ஜனங்களையும்+ பற்றி யாரிடமும் வாய் திறக்கவில்லை. அவரிடம் வளர்ந்த காலமெல்லாம் அவருடைய பேச்சைத் தட்டாமல் நடந்துகொண்டது போலவே இப்போதும் நடந்துகொண்டாள்.+
21 மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருந்தபோது, ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவின் மேல் இருந்த கோபத்தில் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள். 22 மொர்தெகாய்க்கு அது தெரியவந்ததும் எஸ்தர் ராணியின் காதில் விஷயத்தைப் போட்டார். எஸ்தரும் மொர்தெகாய் சொல்லச் சொன்னதாக ராஜாவிடம் அதைத் தெரிவித்தாள். 23 உடனே விசாரணை நடத்தப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மைதான் என்பது தெரியவந்தபோது, அந்த ஆட்கள் இரண்டு பேரும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள். இவையெல்லாம் அந்தக் காலத்து சரித்திரப் புத்தகத்தில் ராஜாவுக்கு முன்பாகப் பதிவு+ செய்யப்பட்டன.
3 இதற்குப் பின்பு அகாஸ்வேரு ராஜா, ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமானைக்+ கௌரவித்து, எல்லா அதிகாரிகளையும்விட உயர்ந்த பதவியில் வைத்தார்.+ 2 அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் எல்லாரும், அவருடைய கட்டளைப்படி ஆமானுக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்தார்கள். ஆனால், மொர்தெகாய் அப்படிச் செய்யவில்லை. 3 அதனால், அரண்மனை வாசலில் இருந்த ராஜாவின் ஊழியர்கள் மொர்தெகாயைப் பார்த்து, “ராஜாவுடைய கட்டளையை ஏன் மீறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள். 4 இப்படி ஒவ்வொரு நாளும் அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள், ஆனால் மொர்தெகாய் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால் அவர்கள் ஆமானிடம், “மொர்தெகாய் செய்வது சரிதானா என்று நீங்களே பாருங்கள்” என்றார்கள்.+ தான் ஒரு யூதன்+ என்று மொர்தெகாய் அவர்களிடம் சொல்லியிருந்தார்.
5 மொர்தெகாய் தனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழாததை ஆமான் கவனித்தபோது அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது.+ 6 அதனால், மொர்தெகாயை ஒழித்துக்கட்ட நினைத்தான். ஆனாலும், மொர்தெகாயின் இனத்தாரைப் பற்றி ராஜாவின் ஊழியர்கள் தன்னிடம் சொல்லியிருந்ததால் அவர்களையும் சேர்த்து ஒழித்தால்தான் தனக்குக் கௌரவம் என்று நினைத்தான். அதனால், அகாஸ்வேருவின் சாம்ராஜ்யம் முழுவதும் வாழ்ந்த மொர்தெகாயின் இனத்தாரான யூதர்கள் எல்லாரையும் தீர்த்துக்கட்ட வழிதேடினான்.
7 அது அகாஸ்வேரு ராஜா ஆட்சி செய்த 12-ஆம் வருஷத்தின்+ முதலாம் மாதமான நிசான்* மாதம். யூதர்களை எந்த மாதத்தில் எந்த நாளில் தீர்த்துக்கட்டலாம் என்று தீர்மானிப்பதற்காக ஆமானுக்கு முன்னால் ‘பூர்’+ என்ற குலுக்கல் போடப்பட்டது. 12-ஆம் மாதமான ஆதார்* மாதத்திற்குக்+ குலுக்கல் விழுந்தது. 8 பின்பு அகாஸ்வேரு ராஜாவிடம் ஆமான், “உங்களுடைய சாம்ராஜ்யத்தில் உள்ள+ எல்லா மாகாணங்களிலும் ஒரு இனத்தார் பரவியிருக்கிறார்கள்.+ அவர்களுடைய சட்டங்கள் மற்ற இனத்தாருடைய சட்டங்களிலிருந்து வித்தியாசமாக இருக்கின்றன. அவர்கள் ராஜாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதே இல்லை. அவர்களை இப்படியே விட்டுவைப்பது ராஜாவுக்கு நல்லதல்ல. 9 ராஜாவுக்குச் சரியாகப் பட்டால், அவர்களைத் தீர்த்துக்கட்ட வேண்டுமென்று சாம்ராஜ்யமெங்கும் கட்டளை அனுப்புங்கள். அரண்மனை கஜானாவுக்கு நான் 10,000 வெள்ளி தாலந்தை* அதிகாரிகளிடம் கொடுக்கிறேன்”* என்று சொன்னான்.
10 உடனே ராஜா, தன்னுடைய முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனும் யூதர்களின் எதிரியுமான ஆமானிடம் கொடுத்தார்.+ 11 பின்பு அவனிடம், “அந்த ஜனங்களையும் வெள்ளியையும் உன்னிடமே ஒப்படைக்கிறேன். உன் இஷ்டப்படி செய்” என்று சொன்னார். 12 முதலாம் மாதம் 13-ஆம் நாளில் ராஜாவுடைய செயலாளர்கள்+ வரவழைக்கப்பட்டார்கள். ஆமான் ஆணையிட்ட எல்லாவற்றையும் அதிபதிகளுக்கும் மாகாணங்களின் ஆளுநர்களுக்கும் எல்லா இனத்தாரின் தலைவர்களுக்கும், அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் அவர்கள் எழுதினார்கள்.+ அவை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு, அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்பட்டன.+
13 ராஜாவின் எல்லா மாகாணங்களுக்கும் தூதுவர்கள்* மூலமாக அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. “சிறியவர்கள், பெரியவர்கள், பிள்ளைகள், பெண்கள் என்று பார்க்காமல் யூதர்கள் எல்லாரையும் ஒரே நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார் மாதம்+ 13-ஆம் நாளில், கொன்றுபோடுங்கள். அவர்களை அடியோடு ஒழித்துக்கட்டுங்கள். அவர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்”+ என்று அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தது. 14 அவற்றை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக அமல்படுத்த வேண்டியிருந்தது. அந்த நாளுக்குத் தயாராவதற்காக அந்தச் சட்டத்தை எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது. 15 சூசான்* கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட அந்தச் சட்டம், ராஜாவின் உத்தரவுப்படி தூதுவர்கள் மூலம் வேகமாக அனுப்பப்பட்டது.+ பின்பு, ராஜாவும் ஆமானும் திராட்சமது குடிக்க உட்கார்ந்தார்கள். ஆனால், சூசான்*+ நகரம் குழப்பத்தில் மூழ்கியிருந்தது.
4 நடந்ததையெல்லாம் மொர்தெகாய் கேள்விப்பட்டபோது,+ தன்னுடைய உடையைக் கிழித்துவிட்டு, துக்கத் துணி* உடுத்திக்கொண்டு, தன்மேல் சாம்பலைப் போட்டுக்கொண்டார். பின்பு நகரத்தின் நடுவில் போய், கதறிக் கதறி அழுதார். 2 துக்கத் துணி உடுத்திய யாரும் அரண்மனை வாசலுக்குள் நுழையக் கூடாது என்பதால் அவர் அந்த வாசல்வரைதான் போனார். 3 ராஜாவின் கட்டளை எந்தெந்த மாகாணங்களை+ எட்டியதோ அங்கெல்லாம் இருந்த யூதர்கள் விரதமிருந்து,+ ஓலமிட்டு அழுது, துக்கம் அனுசரித்தார்கள். நிறைய பேர் துக்கத் துணியிலும்* சாம்பலிலும்+ படுத்துக் கிடந்தார்கள். 4 எஸ்தரின் பணிப்பெண்களும் பணியாளர்களும்* அவளிடம் விஷயத்தைச் சொன்னபோது, அவள் பதறிப்போனாள். துக்கத் துணி உடுத்தியிருந்த மொர்தெகாய்க்கு வேறு உடைகளைக் கொடுத்து அனுப்பினாள். ஆனால், அவர் அவற்றை வாங்கிக்கொள்ளவில்லை. 5 அதை எஸ்தர் கேள்விப்பட்டபோது, தனக்குப் பணிவிடை செய்ய ராஜா நியமித்த பணியாளரான ஆத்தாகுவைக் கூப்பிட்டு, என்ன நடந்ததென்று மொர்தெகாயிடம் விசாரித்து வரும்படி கட்டளை கொடுத்தாள்.
6 அதனால், அரண்மனை வாசலுக்கு எதிரில் நகரத்தின் பொது சதுக்கத்தில் இருந்த மொர்தெகாயிடம் ஆத்தாகு போனார். 7 மொர்தெகாய் தனக்கு நடந்ததைப் பற்றியும், யூதர்களைத் தீர்த்துக்கட்ட+ அரண்மனை கஜானாவுக்கு ஆமான் தருவதாகச் சொன்ன தொகையைப்+ பற்றியும் ஆத்தாகுவிடம் சொன்னார். 8 யூதர்களை அழிப்பதற்காக சூசான்*+ கோட்டையில்* பிறப்பிக்கப்பட்ட சட்டத்தின் நகலை ஆத்தாகுவிடம் கொடுத்து, அதை எஸ்தரிடம் காட்டும்படியும் அவளுக்கு எல்லாவற்றையும் விளக்கும்படியும் சொன்னார்.+ அதோடு, ராஜாவை நேரில் போய்ப் பார்த்து அவளுடைய ஜனங்களுக்குக் கருணை காட்டும்படி கெஞ்சிக் கேட்கும்படி சொல்லச் சொன்னார்.
9 ஆத்தாகு திரும்பி வந்து மொர்தெகாய் சொன்ன எல்லாவற்றையும் எஸ்தரிடம் விளக்கினார். 10 உடனே எஸ்தர் ஆத்தாகுவை மொர்தெகாயிடம்+ அனுப்பி, 11 “இந்த 30 நாட்களாக ராஜா என்னைக் கூப்பிடவில்லை. ராஜா கூப்பிடாமல் அரண்மனை உள்முற்றத்துக்குள்+ யாராவது போனால், அவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, மரண தண்டனைதான் கிடைக்கும்! ராஜா தன்னுடைய பொன் செங்கோலை நீட்டினால் மட்டும்தான் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும்.+ இது ராஜாவின் எல்லா ஊழியர்களுக்கும் அவருடைய மாகாணங்களில் வாழ்கிற எல்லா ஜனங்களுக்கும் நன்றாகத் தெரியுமே” என்று சொல்லச் சொன்னாள்.
12 அவரும் எஸ்தர் சொன்னதை மொர்தெகாயிடம் சொன்னார். 13 அப்போது, மொர்தெகாய் அவரைத் திரும்ப எஸ்தரிடம் அனுப்பி, “நீ ராஜாவின் அரண்மனையில் இருப்பதால், மற்ற யூதர்கள் கொல்லப்படும்போது நீ மட்டும் தப்பித்துவிடலாம் என்று நினைக்காதே. 14 நீ இப்போது அமைதியாக இருந்தால், யூதர்களுக்கு உதவியும் விடுதலையும் வேறொரு வழியில் கிடைக்கும்,+ ஆனால் நீயும் உன் அப்பாவின் குடும்பத்தாரும் அழிந்துபோவீர்கள். யாருக்குத் தெரியும், இப்படிப்பட்ட காலத்தில் உதவி செய்வதற்காகவே நீ ராணியாக ஆகியிருக்கலாம்”+ என்று சொல்லச் சொன்னார்.
15 அதைக் கேட்ட எஸ்தர் மறுபடியும் ஆத்தாகுவை மொர்தெகாயிடம் அனுப்பி, 16 “நீங்கள் சூசானில் இருக்கும் யூதர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி எனக்காக விரதமிருங்கள்.+ மூன்று நாட்களுக்கு ராத்திரியும் பகலும் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம்.+ என்னுடைய பணிப்பெண்களோடு சேர்ந்து நானும் விரதமிருக்கிறேன். அதன்பின், சட்டத்தை மீறி ராஜாவிடம் போகிறேன்; என் உயிர் போனால் போகட்டும்” என்று சொல்லச் சொன்னாள். 17 உடனே மொர்தெகாய் கிளம்பிப்போய், எஸ்தர் சொன்ன எல்லாவற்றையும் செய்தார்.
5 மூன்றாம் நாள்,+ ராணிக்குரிய உடையை எஸ்தர் உடுத்திக்கொண்டு ராஜாவுடைய மாளிகையின் உள்முற்றத்தில் போய் நின்றாள். அதற்கு நேராக இருந்த அரச மாளிகையிலே ராஜா சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார். அந்தச் சிம்மாசனம் நுழைவாசலைப் பார்த்தபடி இருந்தது. 2 முற்றத்தில் நின்றுகொண்டிருந்த எஸ்தரைப் பார்த்ததும் ராஜா சந்தோஷப்பட்டார். பின்பு, தன்னுடைய பொன் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினார்.+ அப்போது, எஸ்தர் போய் செங்கோலின் நுனியைத் தொட்டாள்.
3 ராஜா அவளிடம், “என்ன விஷயம், எஸ்தர் ராணியே? உனக்கு என்ன வேண்டும்? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்றார். 4 அதற்கு எஸ்தர், “ராஜாவுக்கு நல்லதாகப் பட்டால், இன்று நான் ஏற்பாடு செய்திருக்கும் விருந்துக்கு நீங்கள் ஆமானைக்+ கூட்டிக்கொண்டு வர வேண்டும்” என்றாள். 5 உடனே ராஜா தன் ஆட்களிடம், “எஸ்தர் கேட்டுக்கொண்டபடி ஆமானைச் சீக்கிரம் வரச் சொல்லுங்கள்” என்றார். பின்பு, ராஜாவும் ஆமானும் எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்குப் போனார்கள்.
6 விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது எஸ்தரைப் பார்த்து ராஜா, “உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்”+ என்றார். 7 அதற்கு எஸ்தர், “எனக்கு என்ன வேண்டுமென்று சொல்கிறேன், ராஜாவே. 8 ராஜாவுக்கு என்மேல் பிரியம் இருந்தால், என் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினால், நாளைக்கு நான் ஏற்பாடு செய்திருக்கிற விருந்துக்கும் ஆமானோடு ராஜா வர வேண்டும். அப்போது, எனக்கு உண்மையில் என்ன வேண்டுமென்று ராஜாவிடம் சொல்கிறேன்” என்றாள்.
9 அன்று ஆமான் மிகுந்த சந்தோஷத்தோடும் குஷியோடும் அங்கிருந்து கிளம்பினான். ஆனால், அரண்மனை வாசலில் இருந்த மொர்தெகாய் தனக்கு முன்னால் பயபக்தியோடு எழுந்து நிற்காததையும் தனக்கு மரியாதை கொடுக்காததையும் பார்த்தவுடன் அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.+ 10 ஆனாலும், தன்னை அடக்கிக்கொண்டு வீட்டுக்குப் போய்விட்டான். பின்பு, தன்னுடைய நண்பர்களையும் மனைவி சிரேஷையும்+ கூப்பிட்டு, 11 தனக்கு நிறைய சொத்துப்பத்துகளும் மகன்களும்+ இருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான். அதோடு, எல்லா தலைவர்களையும் ஊழியர்களையும்விட உயர்ந்த பதவியை ராஜா தனக்குக் கொடுத்து தன்னைக் கௌரவித்திருப்பதைப் பற்றிப் பெருமையடித்தான்.+
12 பின்பு அவன், “ராஜாவோடு விருந்துக்கு வரும்படி எஸ்தர் ராணி என்னை மட்டும்தான் கூப்பிட்டிருந்தார்!+ அதுமட்டுமல்ல, ராஜாவோடும் தன்னோடும் விருந்து சாப்பிட நாளைக்கும் என்னைக் கூப்பிட்டிருக்கிறார்!+ 13 ஆனாலும் என்ன பிரயோஜனம்? அந்த யூதன் மொர்தெகாய் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கும்வரை எனக்கு நிம்மதியே கிடையாது” என்று சொன்னான். 14 இதைக் கேட்ட அவன் மனைவி சிரேஷும் அவனுடைய நண்பர்களும், “சுமார் 73 அடி* உயரத்துக்கு ஒரு மரக் கம்பத்தை நாட்டுங்கள். அதில் மொர்தெகாயைத் தொங்கவிட வேண்டுமென்று காலையில் ராஜாவிடம் போய்ச் சொல்லுங்கள்.+ அதன் பிறகு, ராஜாவோடு சந்தோஷமாக விருந்துக்குப் போங்கள்” என்று சொன்னார்கள். இந்த ஆலோசனை ஆமானுக்குப் பிடித்திருந்ததால் மரக் கம்பத்தை நாட்ட ஏற்பாடு செய்தான்.
6 அந்த நாள் ராத்திரி ராஜாவுக்குத் தூக்கம் வரவில்லை. அதனால், தன்னுடைய காலத்தின் சரித்திரப் புத்தகத்தை+ எடுத்துவரும்படி சொன்னார். அது அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டது. 2 அதில், ராஜாவின் அரண்மனை அதிகாரிகளாகவும் வாயிற்காவலர்களாகவும் வேலை செய்த பிக்தானாவும் தேரேசும் அகாஸ்வேரு ராஜாவைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதைப் பற்றி மொர்தெகாய் தெரியப்படுத்திய விஷயம் எழுதப்பட்டிருந்தது.+ 3 உடனே ராஜா, “அதற்காக மொர்தெகாயை எப்படிக் கௌரவித்தோம், அவருக்கு என்ன சன்மானம் கொடுத்தோம்?” என்று கேட்டார். அப்போது ராஜாவின் உதவியாளர்கள், “அவருக்கு நாம் ஒன்றுமே செய்யவில்லை” என்று சொன்னார்கள்.
4 அதன்பின் ராஜா, “முற்றத்தில் யாராவது இருக்கிறார்களா?” என்று கேட்டார். அந்தச் சமயம் பார்த்து, ராஜாவுடைய மாளிகையின் வெளிமுற்றத்துக்குள்+ ஆமான் வந்து நின்றுகொண்டிருந்தான். தான் நாட்டியிருந்த மரக் கம்பத்தில் மொர்தெகாயைத் தொங்கவிடுவது பற்றி ராஜாவிடம் பேச அங்கு வந்திருந்தான்.+ 5 ராஜாவின் உதவியாளர்கள், “முற்றத்தில் ஆமான்+ நின்றுகொண்டிருக்கிறார்” என்று சொன்னார்கள். உடனே ராஜா, “அவனை வரச் சொல்லுங்கள்” என்றார்.
6 ஆமான் வந்ததும் ராஜா அவனிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது ஆமான், “என்னைத் தவிர ராஜா யாரைக் கௌரவிக்கப் போகிறார்?” என்று நினைத்தான்.+ 7 அதனால் அவரிடம், “யாரையாவது ராஜா கௌரவிக்க விரும்பினால், 8 அவருக்காக ராஜா உடுத்தும் உடை கொண்டுவரப்பட வேண்டும்.+ ராஜா சவாரி செய்கிற குதிரையும் தலை அலங்காரம் செய்யப்பட்டுக் கொண்டுவரப்பட வேண்டும். 9 அவை ராஜாவின் மதிப்புமிக்க அதிகாரிகளில் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த அதிகாரி, ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவருக்கு அந்த உடையைப் போட்டுவிட்டு, அவரை அந்தக் குதிரைமேல் உட்கார வைத்து, நகரத்தின் பொது சதுக்கத்தில் வலம்வரச் செய்ய வேண்டும். அப்போது, ‘ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவர் இப்படித்தான் கௌரவிக்கப்படுவார்!’ என்று அவருக்கு முன்னால் ஆட்கள் சொல்லிக்கொண்டே போக வேண்டும்” என்று சொன்னான்.+ 10 அதைக் கேட்டதும் ராஜா ஆமானிடம், “சீக்கிரம்! உடையையும் குதிரையையும் கொண்டுபோய், நீ சொன்னதையெல்லாம் அரண்மனை வாசலில் உட்கார்ந்திருக்கும் மொர்தெகாய்க்குச் செய். அதில் ஒன்றைக்கூடச் செய்யாமல் இருந்துவிடாதே” என்று சொன்னார்.
11 அதனால், ஆமான் அந்த உடையைக் கொண்டுபோய் மொர்தெகாய்க்குப்+ போட்டுவிட்டான். அவரை அந்தக் குதிரையின் மேல் உட்கார வைத்து, நகரத்தின் பொது சதுக்கத்தில் வலம்வரச் செய்து, “ராஜா யாரைக் கௌரவிக்க விரும்புகிறாரோ அவர் இப்படித்தான் கௌரவிக்கப்படுவார்!” என்று அவருக்கு முன்னால் சொல்லிக்கொண்டே போனான். 12 அதன்பின், மொர்தெகாய் அரண்மனை வாசலுக்குத் திரும்பினார். ஆனால், ஆமான் துக்கத்தில் முக்காடு போட்டுக்கொண்டு, அவசர அவசரமாகத் தன் வீட்டுக்குப் போனான். 13 நடந்ததையெல்லாம் தன் மனைவி சிரேஷிடமும்+ எல்லா நண்பர்களிடமும் சொன்னான். அதற்கு அவனுடைய ஆலோசகர்களும் மனைவி சிரேஷும், “மொர்தெகாயிடம் நீங்கள் தோற்றுவிட்டீர்கள். அவன் ஒரு யூதனாக இருப்பதால், அவனை உங்களால் ஜெயிக்கவே முடியாது. உங்கள் கதி அவ்வளவுதான்!” என்று சொன்னார்கள்.
14 இப்படி அவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோதே அரண்மனை அதிகாரிகள் வந்து, எஸ்தர் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு ஆமானை அவசரமாகக் கூட்டிக்கொண்டு போனார்கள்.+
7 ராஜாவும் ஆமானும்+ எஸ்தர் ராணி ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்தார்கள். 2 அந்த இரண்டாம் நாள் விருந்தின் முடிவில் திராட்சமது பரிமாறப்பட்டபோது ராஜா மறுபடியும் எஸ்தரிடம், “எஸ்தர் ராணியே, உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். உன் விருப்பம் என்ன? என்னுடைய சாம்ராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சொன்னார்.+ 3 அதற்கு எஸ்தர் ராணி, “ராஜாவுக்கு என்மேல் பிரியம் இருந்தால், ராஜாவுக்கு நல்லதாகப் பட்டால், எனக்கும் என் ஜனங்களுக்கும்+ உயிர்ப்பிச்சை தர வேண்டும். நான் கேட்டுக்கொள்வது இதுதான். என்னுடைய விருப்பமும் இதுதான். 4 நானும் என் ஜனங்களும் கொலை செய்யப்படுவதற்காகவும் அடியோடு அழிக்கப்படுவதற்காகவும் விற்கப்பட்டிருக்கிறோம்.+ நாங்கள் வெறுமனே அடிமைகளாக விற்கப்பட்டிருந்தால்கூட, நான் பேசாமல் இருந்திருப்பேன். ஆனால், ராஜாவுக்கே நஷ்டம் ஏற்படப்போவதால் இந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிடுவது நியாயமாக இருக்காது” என்று சொன்னாள்.
5 உடனே அகாஸ்வேரு ராஜா, “இப்படியொரு அக்கிரமத்தைச் செய்யத் துணிந்தவன் யார்? அவன் எங்கே?” என்று கேட்டார். 6 அதற்கு எஸ்தர், “இதோ, இந்தக் கேடுகெட்ட ஆமான்தான் அந்த எதிரி!” என்று சொன்னாள்.
ராஜாவுக்கும் ராணிக்கும் முன்பாக ஆமான் வெலவெலத்துப் போனான். 7 ராஜா பயங்கர கோபத்துடன் விருந்தைவிட்டு எழுந்து அரண்மனைத் தோட்டத்துக்குப் போனார். ஆனால் ஆமான், ராஜா எப்படியும் தன்னைத் தண்டிக்கப்போகிறார் என்பதை உணர்ந்து, தன்னுடைய உயிரைக் காப்பாற்றும்படி எஸ்தர் ராணியிடம் கெஞ்சிக் கேட்க எழுந்து நின்றான். 8 ராஜா அரண்மனைத் தோட்டத்திலிருந்து திராட்சமது பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பி வந்தபோது, எஸ்தர் உட்கார்ந்திருந்த மெத்தையில் ஆமான் விழுந்து கிடப்பதைப் பார்த்தார். உடனே, “இவன் என் அரண்மனையிலேயே என் ராணியைக் கற்பழிக்கக்கூட துணிந்துவிட்டானா?” என்று கத்தினார். உடனே, அங்கிருந்தவர்கள் ஆமானின் முகத்தைத் துணியால் மூடினார்கள். 9 அரண்மனை அதிகாரிகளில் ஒருவரான அற்போனா+ ராஜாவைப் பார்த்து, “ராஜாவின் உயிரைக் காப்பாற்றிய+ மொர்தெகாயைத் தொங்கவிடுவதற்காக ஆமான் ஒரு மரக் கம்பத்தைக்கூட நாட்டி வைத்திருக்கிறான்.+ அது அவனுடைய வீட்டுக்கு வெளியில் சுமார் 73 அடி* உயரத்தில் நிற்கிறது” என்று சொன்னார். அதற்கு ராஜா, “அந்த மரக் கம்பத்திலேயே இவனைத் தொங்கவிடுங்கள்!” என்றார். 10 அதன்படி, மொர்தெகாய்க்காக அவன் நாட்டியிருந்த மரக் கம்பத்திலேயே அவனைத் தொங்கவிட்டார்கள். அப்போதுதான் ராஜாவின் ஆத்திரம் அடங்கியது.
8 அன்று அகாஸ்வேரு ராஜா, யூதர்களின் எதிரியான+ ஆமானுடைய வீட்டை+ எஸ்தர் ராணிக்குக் கொடுத்தார். எஸ்தர் ராணி, தனக்கும் மொர்தெகாய்க்கும் இருந்த உறவுமுறையைப்+ பற்றி ராஜாவிடம் சொல்லியிருந்தாள். அதனால், மொர்தெகாய் ராஜாவின் முன்னால் வந்து நின்றார். 2 அப்போது ராஜா, ஆமானிடமிருந்து திரும்ப வாங்கிக்கொண்ட முத்திரை மோதிரத்தைக்+ கழற்றி மொர்தெகாயிடம் கொடுத்தார். எஸ்தரும், ஆமானின் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை மொர்தெகாய்க்குக் கொடுத்தாள்.+
3 பின்பு, அவள் ராஜாவிடம் மறுபடியும் பேசினாள். அவருடைய பாதத்தில் விழுந்து, கண்ணீர்விட்டு அழுது, ஆகாகியனான ஆமான் யூதர்களுக்கு எதிராகச் செய்த சதியை+ முறியடிக்கச் சொல்லிக் கெஞ்சினாள். 4 அப்போது ராஜா, தன்னுடைய பொன் செங்கோலை எஸ்தரிடம் நீட்டினார்.+ எஸ்தர் எழுந்து ராஜாவுக்கு முன்னால் நின்று, 5 “ராஜாவே, உங்களுக்கு நல்லதாகப் பட்டால், உங்களுக்கு என்மேல் கருணை இருந்தால், உங்களுக்குச் சரியென்று தோன்றினால், நான் உங்களுக்குப் பிரியமானவளாக இருந்தால் நான் கேட்டுக்கொள்கிறபடி செய்ய வேண்டும். எல்லா மாகாணங்களிலும் இருக்கிற யூதர்களை ஒழித்துக்கட்டச் சொல்லி அந்த ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகன் ஆமான் எழுதி அனுப்பினானே, அந்தச் சதிகாரனின் கட்டளைகளை+ ரத்து செய்யும்படி நீங்கள் ஆணையிட்டு எழுத வேண்டும். 6 என் ஜனங்கள் அழிந்துபோவதை என்னால் எப்படிப் பார்த்துக்கொண்டிருக்க முடியும்? என் சொந்தபந்தங்கள் கொல்லப்படுவதை என்னால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்?” என்றாள்.
7 அதனால் அகாஸ்வேரு ராஜா எஸ்தர் ராணியையும் யூதரான மொர்தெகாயையும் பார்த்து, “இதோ! ஆமானின் வீட்டை நான் எஸ்தரிடம் ஒப்படைத்துவிட்டேன்.+ அவன் யூதர்களைத் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதால் அவனை மரக் கம்பத்தில் தொங்கவிட்டேன்.+ 8 இப்போது நீங்கள் யூதர்களின் சார்பாக எதை எழுத விரும்புகிறீர்களோ அதை ராஜாவின் பெயரில் எழுதி அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடுங்கள். ராஜாவின் பெயரில் எழுதப்பட்டு அவருடைய முத்திரை மோதிரத்தால் முத்திரை போடப்படும் எந்த ஆணையையும் யாராலும் மாற்ற முடியாது”+ என்று சொன்னார்.
9 அதனால், மூன்றாம் மாதமாகிய சீவான்* மாதத்தின் 23-ஆம் நாளில், ராஜாவின் செயலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மொர்தெகாய் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் யூதர்களுக்கும் அதிபதிகளுக்கும்+ ஆளுநர்களுக்கும் இந்தியாமுதல் எத்தியோப்பியாவரை உள்ள 127 மாகாணங்களின் தலைவர்களுக்கும்+ எழுதி அனுப்பினார்கள். அந்தந்த மாகாணங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துக்களிலும் அந்தந்த ஜனங்களின் மொழிகளிலும் யூதர்களின் எழுத்துக்களிலும் அவர்களுடைய மொழியிலும் எழுதி அனுப்பினார்கள்.
10 மொர்தெகாய் அந்தக் கடிதங்களை அகாஸ்வேரு ராஜாவின் பெயரில் எழுதி, அவருடைய முத்திரை மோதிரத்தால்+ முத்திரை போட்டு, தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினார். அரசு அஞ்சல் வேலைக்காகவே வளர்க்கப்பட்ட அதிவேக குதிரைகளில் அந்தத் தூதுவர்கள் போனார்கள். 11 எல்லா நகரங்களிலும் யூதர்கள் தங்கள் உயிருக்காக ஒன்றுதிரண்டு போராடுவதற்கு ராஜா அந்தக் கடிதங்களில் அனுமதி தந்திருந்தார். அவர்களைத் தாக்க வருகிறவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களைக் கொன்று போடுவதற்கு அனுமதி கொடுத்திருந்தார். அவர்களுடைய பெண்களையும், பிள்ளைகளையும்கூட விட்டுவைக்காமல் எல்லாரையும் அடியோடு ஒழித்துக்கட்டவும் அவர்களுடைய உடைமைகளைக் கைப்பற்றவும் அனுமதி கொடுத்திருந்தார்.+ 12 ஆதார்* என்ற 12-ஆம் மாதத்தின் 13-ஆம் நாளாகிய+ அந்த ஒரே நாளில், அகாஸ்வேரு ராஜாவின் எல்லா மாகாணங்களிலும் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டியிருந்தது. 13 அந்த நாளில் எதிரிகளைப் பழிதீர்க்க+ அவர்கள் தயாராயிருக்க வேண்டும் என்பதற்காக அந்த ஆணையை எல்லா மாகாணங்களுக்கும் அனுப்பி, ஒரு சட்டமாக எல்லாருக்கும் அறிவிக்க வேண்டியிருந்தது. 14 ராஜாவின் கட்டளைப்படியே, தூதுவர்கள் அரசு அஞ்சல் வேலைக்காகவே பயன்படுத்தப்பட்ட குதிரைகளில் வேகமாகப் போனார்கள். அந்தச் சட்டம் சூசான்*+ கோட்டையிலும்* அறிவிக்கப்பட்டது.
15 மொர்தெகாய் பெரிய தங்கக் கிரீடம் சூடிக்கொண்டு, நீலமும் வெள்ளையும் கலந்த ராஜ உடையையும் உயர்தரமான ஊதா நிற கம்பளி சால்வையையும் போட்டுக்கொண்டு,+ ராஜாவிடமிருந்து கிளம்பிப் போனார். சூசான் நகரமெங்கும் சந்தோஷ ஆரவாரம் கேட்டது. 16 யூதர்களுக்குக் கிடைத்த நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் அளவே இல்லை. அவர்களுடைய மதிப்பு மரியாதை கூடியது. 17 ராஜாவின் ஆணையும் சட்டமும் போய்ச் சேர்ந்த எல்லா மாகாணங்களிலும் நகரங்களிலும் இருந்த யூதர்கள் சந்தோஷத்தோடும் குதூகலத்தோடும் விருந்துகளையும் கொண்டாட்டங்களையும் நடத்தினார்கள். அவர்களை நினைத்து மற்ற ஜனங்கள் மிகவும் பயந்தார்கள். அதனால், அவர்களில் நிறைய பேர் யூத மதத்துக்கு மாறினார்கள்.+
9 ராஜாவின் ஆணையையும் சட்டத்தையும் நிறைவேற்ற+ வேண்டிய நாளில், அதாவது 12-ஆம் மாதமாகிய ஆதார்* மாதத்தின் 13-ஆம் நாளில்,+ தங்களை ஒழித்துக்கட்ட நினைத்த எதிரிகளை யூதர்கள் ஒழித்துக்கட்டினார்கள்.+ 2 அகாஸ்வேரு ராஜாவின் மாகாணங்களில்+ வாழ்ந்துவந்த யூதர்கள் தங்களைத் தாக்க வருகிறவர்களை வீழ்த்துவதற்காக அவரவர் ஊர்களில் ஒன்றுதிரண்டார்கள். மற்ற எல்லா ஜனங்களும் அவர்களை நினைத்து மிகவும் பயந்ததால்+ ஒருவரால்கூட அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. 3 மாகாணங்களின் தலைவர்கள், அதிபதிகள்,+ ஆளுநர்கள், ராஜாவின் வேலைகளைக் கவனித்துவந்தவர்கள் என எல்லாரும் மொர்தெகாயை நினைத்துப் பயந்ததால் யூதர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள். 4 ராஜாவின் மாளிகையில் மொர்தெகாயின் செல்வாக்கு அதிகமானது.+ அவருடைய அதிகாரம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதால், எல்லா மாகாணங்களிலும் அவருடைய புகழ் பரவியது.
5 யூதர்கள் தங்களை வெறுத்த ஆட்களை இஷ்டப்படி பழிவாங்கினார்கள். எல்லா எதிரிகளையும் வாளால் வெட்டிக் கொன்றார்கள்.+ 6 சூசான்*+ கோட்டையில்* 500 ஆண்களை அவர்கள் வெட்டி வீழ்த்தினார்கள். 7 அதோடு பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, 8 பொராதா, அதலியா, அரிதாத்தா, 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப் பேரையும் கொன்றார்கள். 10 இவர்கள், யூதர்களின் எதிரியும் அம்மெதாத்தாவின் மகனுமான ஆமானின்+ மகன்கள். யூதர்கள் இவர்களைக் கொன்ற பின்பு இவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை.+
11 அன்று சூசான் கோட்டையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்று ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.
12 அப்போது ராஜா எஸ்தர் ராணியிடம், “சூசான் கோட்டையில் யூதர்கள் 500 ஆண்களையும் ஆமானின் பத்து மகன்களையும் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். அப்படியென்றால், ராஜாவின் மற்ற மாகாணங்களில் எத்தனை பேரைக் கொன்றிருப்பார்கள்?+ இப்போது உனக்கு என்ன வேண்டுமென்று சொல். உனக்காக நான் எதையும் செய்வேன். வேறென்ன வேண்டுமானாலும் கேள். நீ எதைக் கேட்டாலும் தருவேன்” என்று சொன்னார். 13 அதற்கு எஸ்தர், “ராஜாவுக்குச் சரியென்று பட்டால்,+ சூசானில் இருக்கும் யூதர்கள் இன்று செய்தது போலவே+ நாளையும் செய்ய அனுமதி தர வேண்டும். அதோடு, ஆமானின் பத்து மகன்களையும் மரக் கம்பத்தில் தொங்கவிட வேண்டும்”+ என்றாள். 14 அவள் கேட்டுக்கொண்டபடியே செய்ய ராஜா ஆணையிட்டார். அதற்காக சூசானில் ஒரு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆமானின் பத்து மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.
15 சூசானில் இருந்த யூதர்கள் ஆதார் மாதத்தின் 14-ஆம் நாளில்+ மறுபடியும் ஒன்றுதிரண்டு, அங்கிருந்த 300 ஆண்களைக் கொன்றார்கள். ஆனால், அவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை.
16 ராஜாவின் மாகாணங்களில் இருந்த மற்ற யூதர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள+ ஒன்றுதிரண்டு போராடினார்கள். விரோதிகளில் 75,000 பேரை ஒழித்துக்கட்டினார்கள்,+ ஆனால் அவர்களுடைய எந்த உடைமையையும் கைப்பற்றவில்லை. 17 ஆதார் மாதம் 13-ஆம் நாளில் அப்படி நடந்தது. 14-ஆம் நாளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை; அந்த நாளில் விருந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
18 சூசானில் இருந்த யூதர்கள், 13-ஆம் நாளிலும்+ 14-ஆம் நாளிலும்+ ஒன்றுதிரண்டு போராடினார்கள். 15-ஆம் நாளில் அவர்கள் தாக்குதல் நடத்தவில்லை; அந்த நாளில் விருந்து சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தார்கள். 19 சூசான் தலைநகரத்தைச் சுற்றியிருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மற்ற யூதர்கள், சந்தோஷமாக விருந்து சாப்பிட்டுக்கொண்டும் ஒருவருக்கொருவர் பலகாரங்களைக் கொடுத்துக்கொண்டும்+ ஆதார் 14-ஆம் நாளைக் கொண்டாடினார்கள்.+
20 இந்த எல்லா சம்பவங்களையும் மொர்தெகாய்+ பதிவு செய்து, அகாஸ்வேரு ராஜாவின் எல்லா மாகாணங்களிலும் குடியிருந்த யூதர்களுக்கு அதிகாரப்பூர்வமான கடிதங்களை அனுப்பினார். 21 ஒவ்வொரு வருஷமும் ஆதார் மாதம் 14-ஆம் நாளை மட்டுமல்லாமல் 15-ஆம் நாளையும் கொண்டாடும்படி அந்தக் கடிதங்களில் கட்டளை கொடுத்திருந்தார். 22 ஏனென்றால், அந்த நாட்களில்தான் யூதர்களுடைய எதிரிகளின் தொல்லை ஒழிந்தது. அந்த நாட்களில்தான் யூதர்களின் அழுகை+ ஆனந்தமாகவும் கவலை கொண்டாட்டமாகவும் மாறியது. அவர்கள் அந்த நாட்களைப் பண்டிகை நாட்களாகக் கொண்டாடி, சந்தோஷமாக விருந்து சாப்பிட்டு, ஒருவருக்கொருவர் பலகாரங்களைக் கொடுத்து, ஏழைகளுக்குத் தானங்கள் செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.
23 யூதர்கள் அந்தப் பண்டிகையை அன்றைக்குக் கொண்டாடியது போலவே என்றைக்கும் கொண்டாடவும், மொர்தெகாய் எழுதியிருந்தபடியே செய்யவும் ஒத்துக்கொண்டார்கள். 24 ஏனென்றால், யூதர்களுடைய எதிரியும் ஆகாகியனான+ அம்மெதாத்தாவின் மகனுமான ஆமான்,+ யூதர்களைத் தீர்த்துக்கட்ட+ சதித்திட்டம் தீட்டியிருந்தான். அவர்களைக் கதிகலங்க வைக்கவும் அவர்களை ஒழித்துக்கட்டவும் ‘பூர்’+ என்ற குலுக்கலைப் போட்டிருந்தான். 25 ஆனால் ராஜாவிடம் போய் எஸ்தர் பேசியதும், “யூதர்களுக்கு எதிராக அந்தச் சதிகாரன் தீட்டிய திட்டம்+ அவனுக்கே பலிக்கட்டும்” என்ற ஆணையை ராஜா எழுதிக் கொடுத்தார்.+ அதன்படியே, ஆமானும் அவனுடைய மகன்களும் மரக் கம்பத்தில் தொங்கவிடப்பட்டார்கள்.+ 26 அதனால், ‘பூர்’*+ என்ற பெயரின் அடிப்படையில் அந்த நாட்களை ‘பூரீம்’ என்று யூதர்கள் அழைத்தார்கள். மொர்தெகாய் அனுப்பிய கடிதத்தில் எழுதியிருந்ததையும், தாங்கள் பார்த்ததையும், தங்களுக்கு நடந்ததையும் வைத்து இப்படி உறுதிமொழி எடுத்தார்கள்: 27 “யூதர்களும் அவர்களுடைய வம்சத்தாரும் அவர்களோடு சேர்ந்துகொள்பவர்களும்+ அந்த இரண்டு நாட்களைக் கண்டிப்பாகக் கொண்டாட வேண்டும்; அது சம்பந்தமாக எழுதப்பட்டதை ஒவ்வொரு வருஷமும் அந்தக் குறிப்பிட்ட நாட்களில் பின்பற்ற வேண்டும். 28 எல்லா தலைமுறைகளும் அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு மாகாணத்தையும் நகரத்தையும் குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் அதைக் கொண்டாட வேண்டும். யூதர்கள் பூரீம் பண்டிகையைக் கொண்டாடுவதை நிறுத்தவே கூடாது, அவர்களுடைய வம்சத்தாரும் அந்தப் பண்டிகையை எப்போதும் ஞாபகம் வைத்துக் கொண்டாட வேண்டும்.”
29 பின்பு, பூரீம் பண்டிகையைக் கொண்டாடுவதன் அவசியத்தை உறுதிப்படுத்துவதற்காக, அபியாயேலின் மகளான எஸ்தர் ராணியும் யூதரான மொர்தெகாயும் முழு அதிகாரத்தோடு இன்னொரு கடிதத்தை எழுதினார்கள். 30 அகாஸ்வேரு ராஜாவின் ஆட்சிக்குட்பட்ட 127 மாகாணங்களில்+ வாழ்ந்த யூதர்களுக்கு அந்த அதிகாரப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டது. சமாதான வார்த்தைகளும் உண்மையான வார்த்தைகளும் அதில் எழுதப்பட்டிருந்தன. 31 யூதரான மொர்தெகாயும் எஸ்தர் ராணியும் கட்டளை கொடுத்தபடியே+ யூதர்கள் பூரீம் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்பதை அந்தக் கடிதம் உறுதிப்படுத்தியது. யூதர்கள் தங்களுக்காகவும் தங்கள் வம்சத்தாருக்காகவும் எடுத்த உறுதிமொழியின்படி+ அந்த நாட்களில் அவர்கள் விரதமிருந்து+ கடவுளிடம் மன்றாட+ வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியது. 32 பூரீம்+ பற்றிய இந்த விஷயங்களை எஸ்தரின் கட்டளை உறுதிப்படுத்தியது. அது ஒரு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
10 அகாஸ்வேரு ராஜா தன் தேசத்திலும் தீவுகளிலும் இருந்தவர்களைக் கொத்தடிமைகள் போல வேலை செய்ய வைத்தார்.
2 அவருடைய சாதனைகளும், வீரதீர செயல்களும், அவர் மொர்தெகாய்க்கு+ உயர்ந்த பதவி+ கொடுத்த விவரங்களும் மேதிய பெர்சிய+ ராஜாக்களின் சரித்திரப் புத்தகத்தில்+ பதிவு செய்யப்பட்டுள்ளன. 3 யூதரான மொர்தெகாய் அகாஸ்வேரு ராஜாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தார். அவர் யூதர்களுடைய அபிமானத்தைப் பெற்றார்,* தன் சகோதரர்களுடைய மதிப்பு மரியாதையைச் சம்பாதித்தார். அதோடு, தன் ஜனங்களும் அவர்களுடைய பிள்ளைகள் எல்லாரும் நல்லபடியாக வாழ்வதற்குப் பாடுபட்டார்.
அதாவது, “கூஷ்வரை.”
இவர், மகா தரியுவின் மகனான முதலாம் சஷ்டா எனக் கருதப்படுகிறார்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையிலிருந்து.”
அதாவது, “திவான்கள்.”
வே.வா., “தலைப்பாகை.”
வே.வா., “ஆழமாகப் புரிந்து வைத்திருந்த.”
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையின்.”
நே.மொ., “அண்ணகரும்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மசாஜ்.”
2ரா 24:8-ல் யோயாக்கீன் என்று அழைக்கப்படுகிறார்.
இங்கே ‘இவர்’ என்பது கீசாகவும் இருக்கலாம், மொர்தெகாயாகவும் இருக்கலாம்.
வே.வா., “மசாஜ்.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “மசாஜ்.”
வே.வா., “இரண்டாம் வீட்டுக்கு.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “தலைப்பாகை.”
வரி செலுத்துவதிலிருந்தும் ராணுவ சேவையிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுவதைக்கூட இது உட்படுத்தலாம்.
வே.வா., “இளம் பெண்கள்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
ஒரு தாலந்து என்பது 34.2 கிலோவுக்குச் சமம். இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
அல்லது, “இந்தக் கட்டளையை நிறைவேற்றுபவர்களுக்காக நான் 10,000 வெள்ளி தாலந்தை அரண்மனை கஜானாவுக்குத் தருகிறேன்.”
அதாவது, “விரைவு அஞ்சல்காரர்கள்.”
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
வே.வா., “சூசா.”
சொல் பட்டியலைப் பாருங்கள்.
சொல் பட்டியலைப் பாருங்கள்.
நே.மொ., “அண்ணகர்களும்.” சொல் பட்டியலைப் பாருங்கள்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
நே.மொ., “50 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
நே.மொ., “50 முழ.” இணைப்பு B14-ஐப் பாருங்கள்.
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையிலும்.”
இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “சூசா.”
வே.வா., “அரண்மனையில்.”
அர்த்தம், “குலுக்கல்.” பூர் என்பதன் பன்மை “பூரீம்.” இது எபிரெய காலண்டரின்படி 12-ஆம் மாதத்தில் யூதர்கள் கொண்டாடிய பண்டிகையின் பெயராக ஆனது. இணைப்பு B15-ஐப் பாருங்கள்.
வே.வா., “யூதர்களால் உயர்வாய்க் கருதப்பட்டார்.”