மத்தேயு
ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 20
கூலியாட்களை அமர்த்த: சில கூலியாட்கள் அறுவடைக் காலம் முழுவதும் வேலை செய்வதற்கு அழைக்கப்பட்டார்கள்; மற்றவர்கள், தேவைக்கு ஏற்றபடி அந்தந்த நாள் மட்டும் அழைக்கப்பட்டார்கள்.
தினாரியு: இது ரோம வெள்ளிக் காசு. அதன் எடை சுமார் 3.85 கிராம். அதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இயேசுவின் காலத்தில், ஒரு நாளுக்கு 12 மணிநேரம் வயலில் வேலை செய்தவர்களுக்குப் பொதுவாக ஒரு தினாரியு கூலி கொடுக்கப்பட்டதை இந்த வசனம் காட்டுகிறது.—சொல் பட்டியலையும் இணைப்பு B14-ஐயும் பாருங்கள்.
சுமார் மூன்றாம் மணிநேரத்தில்: அதாவது, “காலை சுமார் 9 மணிக்கு.” கி.பி. முதல் நூற்றாண்டில், 12 மணிநேர பகல் நேரத்தைக் காலை சுமார் 6 மணியிலிருந்து கணக்கிட்டார்கள். (யோவா 11:9) அதன்படி, மூன்றாம் மணிநேரம் காலை சுமார் 9 மணியையும், ஆறாம் மணிநேரம் நண்பகல் சுமார் 12 மணியையும், ஒன்பதாம் மணிநேரம் பிற்பகல் சுமார் 3 மணியையும் குறித்தது. அன்று மக்களிடம் துல்லியமான கடிகாரங்கள் இல்லாததால், ஒரு சம்பவம் நடந்த தோராயமான நேரம்தான் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டது.—யோவா 1:39; 4:6; 19:14; அப் 10:3, 9.
சுமார் ஆறாம் மணிநேரத்திலும்: அதாவது, “மதியம் சுமார் 12 மணிக்கும்.”—மத் 20:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
ஒன்பதாம் மணிநேரத்திலும்: அதாவது, “பிற்பகல் சுமார் 3 மணிக்கும்.”—மத் 20:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
சுமார் 11-ஆம் மணிநேரத்தில்: அதாவது, “மாலை சுமார் 5 மணிக்கு.”—மத் 20:3-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
பெருந்தன்மையோடு கொடுப்பதை: நே.மொ., “நல்லவனாக இருப்பதை.” வே.வா., “தாராளமாகக் கொடுப்பதை.” இந்த வசனத்தில், நல்லவனாக இருப்பது தாராளமாகக் கொடுப்பதோடு நேரடியாகச் சம்பந்தப்படுத்திப் பேசப்படுகிறது.
நீ பொறாமைப்படுகிறாயா?: நே.மொ., “உன் கண் பொல்லாததாக இருக்கிறதா?” “பொறாமை” என்பதற்கான கிரேக்க வார்த்தையின் நேரடி அர்த்தம், “கெட்ட; பொல்லாத.” (மத் 6:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) இங்கே “கண்” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் ஒருவருடைய நோக்கம், மனப்பான்மை, அல்லது உணர்ச்சிகளைக் குறிக்கிறது.—மாற் 7:22, அடிக்குறிப்பில் இருக்கும் “பொறாமைப் பார்வை” என்ற வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.
எருசலேமுக்குப் போகும்: நே.மொ., “எருசலேமுக்கு ஏறிப்போகும்.” எருசலேம் நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 750 மீ. (2,500 அடி) உயரத்தில் இருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், இயேசுவும் அவருடைய சீஷர்களும் யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து (மத் 19:1-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்) மேலே ஏறிப் போய்க்கொண்டிருந்தார்கள். அது கடல் மட்டத்துக்குச் சுமார் 400 மீ. (1,300 அடி) கீழே இருந்தது. அங்கிருந்து சுமார் 1,000 மீ. (3,330 அடி) உயரத்தில் இருந்த எருசலேமுக்கு அவர்கள் ஏறிப்போக வேண்டியிருந்தது.
போகும் வழியில்: இயேசு எருசலேமுக்கு ‘புறப்பட்டுப் போகவிருந்ததாக’ சில கையெழுத்துப் பிரதிகள் குறிப்பிட்டிருந்தாலும், அவர் ஏற்கெனவே அங்கு போய்க்கொண்டிருந்ததாகப் பெரும்பாலான கையெழுத்துப் பிரதிகள் குறிப்பிடுகின்றன.
மனிதகுமாரன்: மத் 8:20-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
மரக் கம்பத்தில் அறைந்து கொலை செய்வார்கள்: இங்கே ஸ்டவ்ரோ என்ற கிரேக்க வினைச்சொல் முதல் தடவையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது; இந்த வினைச்சொல் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மொத்தம் 40 தடவைக்கும் மேலாக வருகிறது. இது, ஸ்டவ்ரஸ் என்ற (‘சித்திரவதைக் கம்பம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள) கிரேக்க பெயர்ச்சொல்லின் வினை வடிவம். (மத் 10:38; 16:24; 27:32-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளையும், சொல் பட்டியலில் “மரக் கம்பம்”; “சித்திரவதைக் கம்பம்” என்ற தலைப்புகளையும் பாருங்கள்.) இந்த வினை வடிவம் செப்டுவஜன்ட்டில் எஸ்தர் 7:9-ல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மரக் கம்பத்தில் ஆமானைத் தொங்கவிடும்படி கட்டளை கொடுக்கப்பட்டதைப் பற்றி அந்த வசனம் சொல்கிறது. அதன் உயரம் 20 மீட்டருக்கும் (65 அடிக்கும்) அதிகம். பழங்கால கிரேக்க மொழியில், அது “மரக்கம்பங்களால் வேலி போடுவதை, கூர்முனைக் கம்பங்களை நாட்டுவதை” குறித்தது.
செபெதேயுவின் மனைவி: அதாவது, “அப்போஸ்தலர்களான யாக்கோபு மற்றும் யோவானின் அம்மா.” யாக்கோபும் யோவானும்தான் இயேசுவிடம் உதவி கேட்டதாக மாற்குவின் பதிவு சொல்கிறது. அந்தப் பதிவையும் இந்தப் பதிவையும் வைத்துப் பார்க்கும்போது, அவர்கள்தான் தங்களுடைய அம்மாவை இயேசுவிடம் அனுப்பி உதவி கேட்கச் சொல்லியிருப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களுடைய அம்மா சலோமே, இயேசுவின் பெரியம்மாவாக அல்லது சித்தியாக இருந்திருக்கலாம்.—மத் 27:55, 56; மாற் 15:40, 41; யோவா 19:25.
மண்டிபோட்டு தலைவணங்கினாள்: வே.வா., “மரியாதையோடு மண்டிபோட்டாள்.”—மத் 8:2; 18:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
ஒருவனை உங்களுடைய வலது பக்கத்திலும் இன்னொருவனை இடது பக்கத்திலும்: மாற் 10:37-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியவில்லை: இயேசு அந்தப் பெண்ணிடம் இதைச் சொல்லவில்லை, அவளுடைய இரண்டு மகன்களிடம்தான் சொன்னார். இந்த வசனத்தின் சூழமைவும், இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வினைச்சொற்களின் பன்மை வடிவமும் இதைக் காட்டுகின்றன.—மாற் 10:35-38.
கிண்ணத்தில் உங்களால் குடிக்க: பைபிளில், “கிண்ணம்” என்பது அடையாள அர்த்தத்தில் கடவுளுடைய சித்தத்தை, அதாவது ஒருவருக்கு “நியமிக்கப்படும் பங்கை,” குறிப்பதற்காக அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘கிண்ணத்தில் குடிப்பது’ என்பது, கடவுளுடைய சித்தத்துக்கு அல்லது விருப்பத்துக்கு அடிபணிவதை இங்கே குறிக்கிறது. இந்த வசனத்தில் ‘கிண்ணம்’ என்பது, இயேசு தெய்வ நிந்தனை செய்ததாகப் பொய்க் குற்றம்சாட்டப்பட்டு துன்புறுத்தப்பட்டதையும் கொல்லப்பட்டதையும் மட்டுமல்லாமல், சாவாமையுள்ள வாழ்க்கையைப் பெற பரலோகத்துக்கு உயிரோடு எழுப்பப்பட்டதையும் குறித்தது.
சேவை செய்கிறவனாக: வே.வா., “வேலையாளாக.” இதற்கான கிரேக்க வார்த்தை, டையக்கொனொஸ். மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் சோர்ந்துபோகாமல் இருப்பவரைக் குறிப்பதற்காக இந்த வார்த்தையை பைபிள் அடிக்கடி பயன்படுத்துகிறது. கிறிஸ்துவுக்கும் (ரோ 15:8), கிறிஸ்துவின் ஊழியர்களுக்கும் (1கொ 3:5-7; கொலோ 1:23), உதவி ஊழியர்களுக்கும் (பிலி 1:1; 1தீ 3:8), வீட்டு வேலைக்காரர்களுக்கும் (யோவா 2:5), அரசாங்க அதிகாரிகளுக்கும் (ரோ 13:4) இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
மற்றவர்களுடைய சேவையைப் பெறுவதற்கு வராமல், மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கும்: மத் 20:26-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
உயிருக்கு: கிரேக்கில், சைக்கீ. சில பைபிள்களில் இது “ஆத்துமா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வசனத்தில் இது உயிரைக் குறிக்கிறது.—சொல் பட்டியலில் “நெஃபெஷ், சைக்கீ” என்ற தலைப்பைப் பாருங்கள்.
மீட்புவிலையாக: மீட்புவிலை என்பதற்கான கிரேக்க வார்த்தை, லைட்ரான். (இது, “விடுதலை செய்; விடுவி” என்ற அர்த்தத்தைத் தரும் லையோ என்ற வினைச்சொல்லிலிருந்து வந்திருக்கிறது.) பைபிள் அல்லாத மற்ற புத்தகங்களை எழுதிய கிரேக்க எழுத்தாளர்கள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள். ஒரு ஒப்பந்தத்தின் கீழ் இருப்பவர்களையோ அடிமைகளையோ விடுதலை செய்வதற்காக அல்லது போரில் சிறைபிடிக்கப்பட்ட ஆட்களை மீட்பதற்காகச் செலுத்தப்பட்ட விலையைக் குறிப்பதற்கு இந்த வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினார்கள். (எபி 11:35) கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் இரண்டு தடவை, அதாவது இந்த வசனத்திலும் மாற் 10:45-லும், இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆன்ட்டீலைட்ரான் என்பது இதோடு சம்பந்தப்பட்ட இன்னொரு வார்த்தை; இது 1தீ 2:6-ல் “சரிசமமான மீட்புவிலை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதோடு சம்பந்தப்பட்ட மற்ற கிரேக்க வார்த்தைகள்: (1) “விடுவி; மீட்டுக்கொள்” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் லைட்ரோமாய் (தீத் 2:14; 1பே 1:19); (2) ‘மீட்புவிலையால் விடுதலை’ என்று பெரும்பாலும் மொழிபெயர்க்கப்படும் அப்போலைட்ராசிஸ் (எபே 1:7; கொலோ 1:14; எபி 9:15; ரோ 3:24; 8:23).—சொல் பட்டியலில் “மீட்புவிலை” என்ற தலைப்பைப் பாருங்கள்.
எரிகோவைவிட்டு: யோர்தான் ஆற்றுக்கு மேற்கே இஸ்ரவேலர்கள் கைப்பற்றிய முதல் கானானிய நகரம் இதுதான். (எண் 22:1; யோசு 6:1, 24, 25) இயேசுவின் காலத்தில், அந்தப் பழங்கால நகரத்தின் தெற்கே சுமார் 2 கி.மீ. (ஒரு மைலுக்குச் சற்று அதிக) தூரத்தில் ஒரு புதிய எரிகோ நகரம் கட்டப்பட்டிருந்தது. அதனால்தான், “இயேசு எரிகோவை நெருங்கியபோது” இந்தச் சம்பவம் நடந்ததாக லூ 18:35 சொல்கிறது. ஒருவேளை இயேசு, யூதர்களுடைய அந்தப் பழங்கால நகரத்தைவிட்டுப் போய்க்கொண்டிருந்தபோது, அதாவது ரோமர்களுடைய அந்தப் புதிய நகரத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது இந்த அற்புதத்தைச் செய்திருக்கலாம். அல்லது, அங்கிருந்து இங்கு வந்துகொண்டிருந்த சமயத்தில் இந்த அற்புதத்தைச் செய்திருக்கலாம்.—இணைப்பு B4-ஐயும் B10-ஐயும் பாருங்கள்.
பார்வையில்லாத இரண்டு பேர்: மாற்குவும் லூக்காவும் பார்வையில்லாத ஒருவனைப் பற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். அநேகமாக, பர்திமேயுவைப் பற்றி மட்டும் அவர்கள் பதிவு செய்திருக்கலாம். இவருடைய பெயர் மாற்குவின் பதிவில் இருக்கிறது. (மாற் 10:46; லூ 18:35) மத்தேயுவோ பார்வையில்லாத ஆட்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாகப் பதிவு செய்திருக்கிறார்.
தாவீதின் மகனே: பார்வையில்லாத அந்த இரண்டு பேரும் இயேசுவை இப்படி அழைப்பதன் மூலம், அவர்தான் மேசியா என்பதை வெளிப்படையாக ஒத்துக்கொண்டார்கள்.—மத் 1:1, 6; 15:25-க்கான ஆராய்ச்சிக் குறிப்புகளைப் பாருங்கள்.
மனம் உருகி: வே.வா., “பரிதாபப்பட்டு.”—மத் 9:36-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.