மத்தேயு எழுதியது
21 அவர்கள் எருசலேமை நெருங்கியபோது, ஒலிவ மலையில்+ இருக்கிற பெத்பகே கிராமத்துக்குப் பக்கத்தில் வந்தார்கள். அப்போது இயேசு தன்னுடைய சீஷர்கள் இரண்டு பேரை அனுப்பி,+ 2 “அதோ! அங்கே தெரிகிற அந்தக் கிராமத்துக்குப் போங்கள்; அங்கே போனவுடன், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டி வைக்கப்பட்டிருப்பதைப் பார்ப்பீர்கள்; அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டுவாருங்கள். 3 யாராவது உங்களிடம் ஏதாவது கேட்டால், ‘அவை எஜமானுக்கு வேண்டும்’ என்று சொல்லுங்கள். உடனே அவற்றை அவர் அனுப்பிவிடுவார்” என்று சொன்னார்.
4 “‘இதோ! உன் ராஜா உன்னிடம் வருகிறார்;+ அவர் சாந்தகுணமுள்ளவர்;+ கழுதைமேல் ஏறி வருகிறார், ஆம், சுமை சுமக்கும் கழுதையின் குட்டிமேல் ஏறி வருகிறார்’+ என சீயோன் மகளுக்குச் சொல்லுங்கள்” என்று 5 தீர்க்கதரிசி மூலம் சொல்லப்பட்டது நிறைவேறும்படியே அப்படி நடந்தது.
6 சீஷர்கள் புறப்பட்டுப் போய் இயேசு தங்களிடம் சொன்னபடியே செய்தார்கள்.+ 7 கழுதையையும் அதன் குட்டியையும் அவர்கள் கொண்டுவந்து அவற்றின்மேல் தங்கள் மேலங்கிகளைப் போட்டார்கள், அவர் ஏறி உட்கார்ந்தார்.+ 8 பெரும்பாலான மக்கள் தங்களுடைய மேலங்கிகளை வழியில் விரித்தார்கள்;+ வேறு சிலர் ஓலைகளை வெட்டி பாதையில் பரப்பினார்கள். 9 அவருக்கு முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்த கூட்டத்தார், “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!*+ யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!+ பரலோகத்தில் இருக்கிறவரே, இவரைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆரவாரம் செய்துகொண்டே இருந்தார்கள்.
10 அவர் எருசலேமுக்குள் போனபோது, நகரத்திலிருந்த எல்லாரும் பரபரப்பாகி, “இவர் யார்?” என்று கேட்டார்கள். 11 அதற்கு அந்தக் கூட்டத்தார், “இவர்தான் முன்னறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசியான இயேசு!+ கலிலேயாவில் உள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்” என்று சொன்னார்கள்.
12 பின்பு இயேசு ஆலயத்துக்குள் போய், அங்கே விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டும் இருந்த எல்லாரையும் வெளியே துரத்தினார்; காசு மாற்றுபவர்களின் மேஜைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.+ 13 பின்பு அவர்களிடம், “‘என் வீடு ஜெப வீடு என்று அழைக்கப்படும்’ என எழுதப்பட்டிருக்கிறது.+ ஆனால் நீங்கள் அதைக் கொள்ளைக்காரர்களின் குகையாக்குகிறீர்கள்”+ என்று சொன்னார். 14 அதன் பின்பு, ஆலயத்திலிருந்த அவரிடம் பார்வை இல்லாதவர்களும் கால் ஊனமானவர்களும் வந்தார்கள், அவர்களை அவர் குணமாக்கினார்.
15 அவர் அற்புதமான செயல்கள் செய்வதை முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் பார்த்தார்கள்; அதோடு, “கடவுளே, தாவீதின் மகனைக் காத்தருளுங்கள்!”+ என்று ஆலயத்தில் சிறுவர்கள் ஆரவாரம் செய்வதையும் பார்த்தார்கள்; அதனால் கோபமடைந்து,+ 16 அவரிடம், “இவர்கள் சொல்வதைக் கேட்கிறாயா?” என்றார்கள். அதற்கு இயேசு, “கேட்கிறேன். ‘பிள்ளைகளின் வாயினாலும் குழந்தைகளின் வாயினாலும் உங்களுக்குப் புகழ் உண்டாகும்படி செய்தீர்கள்’ என்ற வார்த்தைகளை நீங்கள் வாசித்ததே இல்லையா?”+ என்று அவர்களிடம் கேட்டார். 17 பின்பு, அவர்களைவிட்டு விலகி, அந்த நகரத்திலிருந்து புறப்பட்டு பெத்தானியாவுக்குப் போய் அன்று ராத்திரி அங்கே தங்கினார்.+
18 விடியற்காலையில் நகரத்துக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவருக்குப் பசி எடுத்தது.+ 19 பாதையோரமாக இருந்த ஓர் அத்தி மரத்தைப் பார்த்து, அதன் பக்கத்தில் அவர் போனார். ஆனால், அதில் இலைகள் மட்டும்தான் இருந்தன, ஒரு கனிகூட இல்லை.+ அதனால் அந்த மரத்தைப் பார்த்து, “இனி ஒருபோதும் நீ கனிகொடுக்க மாட்டாய்” என்று சொன்னார்.+ உடனே அந்த அத்தி மரம் பட்டுப்போனது. 20 அவருடைய சீஷர்கள் இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, “எப்படி இந்த அத்தி மரம் உடனே பட்டுப்போனது?”+ என்று கேட்டார்கள். 21 அதற்கு இயேசு, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடு இருந்தால், நான் இந்த அத்தி மரத்துக்குச் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அதுமட்டுமல்ல, நீங்கள் இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து போய்க் கடலில் விழு’ என்று சொன்னாலும் அது அப்படியே நடக்கும்.+ 22 விசுவாசத்தோடு ஜெபம் செய்தால், நீங்கள் கேட்கிற எல்லாமே உங்களுக்குக் கிடைக்கும்”+ என்று சொன்னார்.
23 அவர் ஆலயத்துக்குள் போய் அங்கே கற்பித்துக்கொண்டிருந்தார்; அப்போது, முதன்மை குருமார்களும் பெரியோர்களும்* அவரிடம் வந்து, “எந்த அதிகாரத்தால் நீ இதையெல்லாம் செய்கிறாய்? உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?” என்று கேட்டார்கள்.+ 24 அதற்கு இயேசு, “நானும் உங்களிடம் ஒன்றைக் கேட்கிறேன். நீங்கள் பதில் சொன்னால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்கிறேன். 25 ஞானஸ்நானம் கொடுக்கிற அதிகாரத்தை யோவானுக்குக் கொடுத்தது யார்? கடவுளா* மனுஷர்களா?” என்று கேட்டார். அப்போது அவர்கள், “‘கடவுள்’ என்று சொன்னால், ‘பின்பு ஏன் அவரை நம்பவில்லை?’+ என்று கேட்பான்; 26 ‘மனுஷர்கள்’ என்று சொன்னால், ஜனங்களிடம் மாட்டிக்கொள்வோம்; ஏனென்றால், யோவானை ஒரு தீர்க்கதரிசி+ என்று அவர்கள் எல்லாரும் நம்புகிறார்கள்” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 27 அதனால், “எங்களுக்குத் தெரியாது” என்று இயேசுவிடம் சொன்னார்கள். அதற்கு அவர், “அப்படியானால், எந்த அதிகாரத்தால் இதையெல்லாம் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்ல மாட்டேன்” என்றார்.
28 பின்பு அவர், “ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர் தன்னுடைய முதல் மகனிடம் வந்து, ‘மகனே, நீ இன்றைக்குத் திராட்சைத் தோட்டத்துக்குப் போய் வேலை செய்’ என்று சொன்னார். 29 அதற்கு அவன், ‘போக மாட்டேன்’ என்று சொன்னான். ஆனால், அதற்குப் பின்பு மனம் வருந்தி அங்கே போனான். 30 அவர் தன் இரண்டாவது மகனிடம் வந்து அதையே சொன்னார். அதற்கு அவன், ‘போகிறேன், அப்பா’ என்று சொல்லிவிட்டு, போகாமலேயே இருந்துவிட்டான். 31 இந்த இரண்டு பேரில் தங்களுடைய அப்பாவின் விருப்பப்படி நடந்துகொண்டது யார்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “முதல் மகன்தான்” என்று சொன்னார்கள். அப்போது அவர், “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் உங்களுக்கு முன்பே கடவுளுடைய அரசாங்கத்துக்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள்.+ 32 ஏனென்றால், நீதியான வழியைக் காட்ட யோவான் உங்களிடம் வந்தார், நீங்களோ அவரை நம்பவில்லை. ஆனால், வரி வசூலிப்பவர்களும் விலைமகள்களும் அவரை நம்பினார்கள்;+ இதைப் பார்த்த பின்பும்கூட நீங்கள் மனம் வருந்தவில்லை, அவரை நம்பவும் இல்லை.
33 இன்னொரு உவமையைக் கேளுங்கள்: நிலச் சொந்தக்காரர் ஒருவர் திராட்சைத் தோட்டம் போட்டு,+ அதைச் சுற்றிலும் வேலியடைத்தார். அதில் திராட்சரச ஆலை அமைத்து, காவலுக்கு ஒரு கோபுரத்தைக் கட்டினார்.+ அதைத் தோட்டக்காரர்களிடம் குத்தகைக்கு விட்டுவிட்டுத் தூர தேசத்துக்குப் போனார்.+ 34 அறுவடைக் காலம் வந்தபோது, தனக்குச் சேர வேண்டிய பங்கை வாங்கி வரச் சொல்லி தன்னுடைய அடிமைகளை அந்தத் தோட்டக்காரர்களிடம் அனுப்பினார். 35 ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய அடிமைகளைப் பிடித்து, ஒருவனை அடித்தார்கள், மற்றொருவனைக் கொலை செய்தார்கள், இன்னொருவனை கல்லெறிந்து கொன்றார்கள்.+ 36 மறுபடியும் அவர், முதலில் அனுப்பியதைவிட அதிகமான அடிமைகளை அனுப்பினார்; அவர்களுக்கும் அதேபோல் செய்தார்கள்.+ 37 ‘என் மகனுக்கு மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று நினைத்து, கடைசியாக அவர் தன்னுடைய மகனையே அனுப்பினார். 38 ஆனால், அந்தத் தோட்டக்காரர்கள் அவருடைய மகனைப் பார்த்தபோது, ‘இவன்தான் வாரிசு.+ வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, இவனுடைய சொத்தை எடுத்துக்கொள்ளலாம்!’ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். 39 அதன்படியே அவருடைய மகனைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்துக்கு வெளியே தள்ளி, கொலை செய்தார்கள்.+ 40 அதனால், அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரர் வரும்போது, அந்தத் தோட்டக்காரர்களை என்ன செய்வார்?” என்று கேட்டார். 41 அதற்கு அவர்கள், “அந்த அக்கிரமக்காரர்களை அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்; தனக்குச் சேர வேண்டிய பங்கைச் சரியான சமயத்தில் கொடுக்கிற வேறு தோட்டக்காரர்களிடம் திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்” என்று சொன்னார்கள்.
42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின் செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா? 43 அதனால்தான் நான் உங்களுக்குச் சொல்கிறேன், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும். 44 அதோடு, இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் சின்னாபின்னமாவான்.+ இது யார்மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப்போடும்” என்று சொன்னார்.+
45 முதன்மை குருமார்களும் பரிசேயர்களும் இந்த உவமைகளைக் கேட்டபோது, தங்களை மனதில் வைத்துதான் அவர் பேசுகிறார் என்று புரிந்துகொண்டார்கள்.+ 46 அதனால், அவரைப் பிடிக்க* நினைத்தார்கள்; ஆனாலும், அவரை ஒரு தீர்க்கதரிசி என்று மக்கள் நம்பியதால்,+ அவர்களுக்குப் பயந்தார்கள்.