திருமணத்தில் கீழ்ப்பட்டிருத்தல் எதை அர்த்தப்படுத்துகிறது?
ஒரு கிறிஸ்தவ பெண் திருமணம் செய்கையில், அவள் அநேக சரிபடுத்தல்களைச் செய்ய வேண்டும். ஒருவேளை இவற்றில் மிகப் பெரியது அவளுடைய சுதந்தரத்தைப் பாதிக்கிறது. வயது வந்த தனி நபராக அவள் தன்னுடைய சொந்த தீர்மானங்கள் பலவற்றை எவரையும் கலந்து பேசாமல் செய்ய சுயாதீனமுள்ளவளாக இருந்திருக்கக்கூடும். ஆனால் இப்பொழுது அவளுக்கு ஒரு கணவன் இருக்க, அவள் வழக்கமாக தானே தீர்மானித்த காரியங்களில் பலவற்றைச் செய்வதற்கு அவருடைய அனுமதியைக் கேட்கவும் அவரிடம் கலந்து பேசவும் கடமைப்பட்டிருக்கிறாள். இது ஏன் இப்படி?
ஏனென்றால் மனித குலத்தின் சிருஷ்டிகர் முதல் மனுஷியை திருமணத்தில் முதல் மனிதனுக்குக் கொடுத்த போது, அவர் அவனுடைய மனைவிக்கும் அவர்களுடைய எதிர்கால பிள்ளைகளுக்கும் தலைவனாக இருக்கும்படி மனிதனை நியமித்தார். இது நியாயமாகவே இருந்தது. எந்த ஒழுங்கமைக்கப்பட்ட ஆட்களின் தொகுதியிலும் எவராவது ஒருவர் தலைமைத்தாங்கி முடிவானத் தீர்மானங்களைச் செய்ய வேண்டும். திருமண விஷயத்தில் “புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்” என்று சிருஷ்டிகர் கட்டளையிட்டார்.—எபேசியர் 5:23.
இதை ஆதரிக்கும் வகையில் தெய்வீக அறிவுரை இவ்விதமாகச் சொல்கிறது: “மனைவிகளே . . . உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.” (எபேசியர் 5:22) ஒரு மனைவி இந்த ஏற்பாட்டினால் எவ்விதமாக பாதிக்கப்படுகிறாள் என்பது இரண்டு காரியங்களைச் சார்ந்திருக்கிறது. முதலாவது, இந்த ஏற்பாட்டுக்கு கீழ்ப்பட்டிருக்க அவள் எவ்வளவு மனமுள்ளவளாக இருக்கிறாள்? இரண்டாவது, அவளுடைய கணவன் எவ்விதமாகத் தன்னுடைய அதிகாரத்தை செலுத்துவான்? உண்மையில் திருமணத் துணைவர்கள் இருவருமே ஏற்பாட்டை முறையாக நோக்குவார்களேயானால் அவர்கள் இது மனைவிக்கும், கணவனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஓர் ஆசீர்வாதமாக இருப்பதை காண்கிறார்கள்.
ஒரு கொடுங்கோலன் அல்ல
ஒரு கணவன் எவ்விதமாக தன்னுடைய அதிகாரத்தை செலுத்த வேண்டும்? கடவுளுடைய குமாரனின் நேர்த்தியான முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம். பைபிள் சொல்கிறது: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:23, 25) இயேசு கிறிஸ்து தலைமைத்துவத்தை செலுத்தியது சபைக்கு ஆசீர்வாதமாக இருந்தது. அவர் ஒரு கொடுங்கோலனாக இருக்கவில்லை. அவர் தம்முடைய சீஷர்களைக் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக அல்லது ஒடுக்கப்பட்டவர்களாக உணரச் செய்யவில்லை. மாறாக, அவர்களை அன்பாகவும் இரக்கத்தோடும் நடத்துவதன் மூலம் அனைவருடைய மரியாதையையும் அவர் சம்பாதித்தார். கணவன்மாருக்குத் தங்கள் மனைவிகளை நடத்துவதில் பின்பற்றுவதற்கு என்னே ஒரு நேர்த்தியான முன்மாதிரி!
ஆனால் இந்த நேர்த்தியான முன்மாதிரியைப் பின்பற்றாத கணவர்மார் இருக்கிறார்கள். கடவுள் கொடுத்துள்ள தலைமைத்துவத்தை அவர்கள் தங்களுடைய மனைவிமாரின் நலனுக்காகப் பயன்படுத்துவற்குப் பதிலாக சுயநலத்துக்காக பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஆணவமான முறையில் தங்கள் மனைவிமார் மீது அதிகாரம் செலுத்தி, முழுமையாக கீழ்ப்பட்டிருப்பதை வற்புறுத்தி அவர்களாகவே எந்தத் தீர்மானத்தையும் செய்ய அனுமதியாதிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கணவன்மாரின் மனைவிமார் அநேகமாக மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை நடத்துவதை, புரிந்து கொள்ள முடிகிறது. இப்படியாக நடந்துகொள்ளும் கணவனும்கூட, தன்னுடைய மனைவியின் அன்பான மரியாதையை சம்பாதிக்க தவறுவதன் காரணமாக துன்பமனுபவிக்கிறான்.
உண்மைதான், கடவுள் மனைவியிடம், குடும்பத்தின் தலைவனாக தன்னுடைய கணவன் பெற்றிருக்கும் ஸ்தானத்துக்கு மரியாதை காண்பிக்கும்படி தேவைப்படுத்துகிறார். ஆனால் கணவன் தன் மனைவியின் இருதயப்பூர்வமான மரியாதையை ஒரு நபராக அனுபவிக்க விரும்பினால் அதை அவன் சம்பாதிக்க வேண்டும். இதைச் செய்வதற்கு மிகச் சிறந்த வழி பொறுப்புடன் நடந்து கொள்வதும், குடும்பத்தின் தலைவனாக நேர்த்தியான, தெய்வீக குணாதிசயங்களை வளர்த்துக் கொள்வதுமாகும்.
கீழ்ப்பட்டிருப்பது சம்பந்தப்பட்டது
மனைவியின் மீது கணவனின் அதிகாரம் முழுமையானதல்ல. ஒரு சில விதங்களில் மனைவியின் கீழ்ப்படிதலை, உலக ஆட்சியாளருக்கு ஒரு கிறிஸ்தவனின் கீழ்ப்படிதலுக்கு ஒப்பிடப்படலாம். ஒரு கிறிஸ்தவன் “மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படிய” வேண்டும் என்பதாக கடவுள் கட்டளையிடுகிறார். (ரோமர் 13:1) என்றபோதிலும் இந்தக் கீழ்ப்படிதல் எப்போதும் நாம் கடவுளுக்குச் செலுத்த வேண்டியதோடு சமநிலைப்படுத்தப்பட வேண்டும். இயேசு சொன்னார்: “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மாற்கு 12:17) இராயன் (உலக அரசாங்கம்) கடவுளுக்குரியதை அவனுக்குக் கொடுக்கும்படியாக வற்புறுத்துவானாகில் பேதுரு அப்போஸ்தலன், “மனுஷனுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராக தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது,” என்பதாகச் சொன்னதை நாம் நினைவில் வைக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:29, NW.
ஏறக்குறைய அதேவிதமாகவே, ஒரு கிறிஸ்தவ பெண் கிறிஸ்தவ நியமங்களை புரிந்து கொள்ளாத அல்லது மதிக்கத் தவறும் ஒரு மனிதனுக்கு திருமணம் செய்யப்பட்டிருந்தாலும் அவள், அவனுக்கு கீழ்ப்பட்டிருக்க கடமைப்பட்டிருக்கிறாள். கடவுள் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஏற்பாட்டுக்கு எதிராக கலகஞ் செய்வதற்குப் பதிலாக அவள் அவனிடமாக அன்போடும் கரிசனையோடும் நடந்துக்கொண்டு இவ்விதமாக அவனுடைய உறுதியான நம்பிக்கையை சம்பாதிக்க அவள் முயற்சி செய்வது நலமானதாகும். ஒருவேளை இப்படிப்பட்ட நேர்த்தியான நடத்தை அவளுடைய கணவனை மாறச் செய்யலாம்; அவனை சத்தியத்துக்குள்ளும்கூட ஆதாயப்படுத்திக் கொள்ளலாம். (1 பேதுரு 3:1, 2) கடவுள் தடை செய்திருக்கும் ஒரு காரியத்தைச் செய்யும்படியாக அவளுடைய கணவன் உத்தரவிடுவானேயாகில், அவள் கடவுளே தன்னுடைய முதன்மையான அரசர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மனைவியை மாற்றிக்கொள்ளுதல் போன்ற ஒழுக்கமற்ற பால் சம்பந்தப்பட்ட நடத்தையில் அவள் ஈடுபடும்படியாக அவன் அவளை வற்புறுத்துவானாகில், அவள் கீழ்ப்படிய வேண்டிய அவசியம் இல்லை. (1 கொரிந்தியர் 6:9, 10) கணவனுக்குக் கீழ்ப்பட்டிருப்பது, அவளுடைய மனச்சாட்சியினாலும், கடவுளுக்கு அவளுடைய முதன்மையான கீழ்ப்படிதலினாலும் கட்டுப்படுத்தப்பட்டதாய் இருக்கிறது.
தாவீது ராஜாவின் காலத்தில், அபிகாயில் தெய்வீக நியமங்களை மதிக்காதவனும் தாவீதோடும் தாவீதின் மனிதர்களோடும் கடுமையாகவும் அன்பற்ற விதத்திலும் நடந்துகொண்ட ஒரு மனிதனாகிய நாபாலுக்குத் திருமணம் செய்யப்பட்டிருந்தாள். இவர்கள் நாபாலுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் காப்பாற்றியிருந்தனர், ஆனால் தாவீது உணவு கொடுத்து உதவுமாறு கேட்டுக்கொண்ட போது நாபால் எதையும் கொடுக்க மறுத்துவிட்டான்.
தன் கணவனின் கஞ்சத்தனமான மனநிலை குடும்பத்தின் மீது அழிவைக் கொண்டு வர இருந்ததை அறிய வந்தபோது, அபிகாயில் தானே தாவீதுக்கு உணவு எடுத்துச் செல்ல தீர்மானித்தாள். “அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும் இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல் பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதையின் மேல் ஏற்றி தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை.”—1 சாமுவேல் 25:18, 19.
அபிகாயில் அவளுடைய கணவனின் விருப்பத்துக்கு எதிராக செயல்பட்டது தவறா? இந்த விஷயத்தில் அப்படி இல்லை. விசேஷமாக நாபாலின் ஞானமற்ற போக்கு அவனுடைய முழு குடும்பத்தையும் ஆபத்திற்குள்ளாக்கிய காரணத்தால் அபிகாயிலின் கீழ்ப்படிதல், அவளுடைய கணவனைப் போல அன்பற்றவளாக இருப்பதை தேவைப்படுத்தவில்லை. ஆகவே தாவீது அவளிடம் இவ்வாறு சொன்னார்: “உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக.” (1 சாமுவேல் 25:32, 33) அதேவிதமாக, கிறிஸ்தவ மனைவிமாரும் இன்று தங்கள் கணவன்மாரின் தலைமை ஸ்தானத்துக்கு எதிராக கிளர்ச்சியோ அல்லது கலகமோ செய்யக்கூடாது, ஆனால் இவர்கள் கிறிஸ்தவமல்லாத ஒரு போக்கை எடுப்பார்களேயானால், மனைவிமார் இந்த விஷயத்தில் அவர்களைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை.
உண்மைதான், பவுல் எபேசியருக்கு எழுதிய தன்னுடைய கடிதத்தில் இப்படியாகச் சொன்னார்: “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.” (எபேசியர் 5:24) அப்போஸ்தலன் பயன்படுத்தியிருக்கும் “எந்தக் காரியத்திலும்” என்ற சொல், மனைவியின் கீழ்ப்படிதலுக்கு எல்லை எதுவுமில்லை என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. “சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறது போல” என்ற பவுலின் வார்த்தைகள், அவர் எதை மனதில் கொண்டிருந்தார் என்பதைச் சுட்டிக் காண்பிக்கிறது. கிறிஸ்து தம்முடைய சபையைக் கேட்கும் எந்தக் காரியமும் நீதியுள்ளதாக கடவுளுடைய சித்தத்துக்கு இசைவானதாக இருக்கிறது. ஆகவே, சபை அவருக்கு எந்தக் காரியத்திலும் சுலபமாகவும் சந்தோஷமாகவும் கீழ்ப்பட்டிருக்க முடியும். அதேவிதமாகவே, இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்ற உள்ளப்பூர்வமாக முயற்சி செய்யும் ஒரு கிறிஸ்தவ கணவனின் மனைவி எந்தக் காரியத்திலும் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க மகிழ்ச்சியுள்ளவளாய் இருப்பாள். அவன் தன்னுடைய மிகச் சிறந்த அக்கறைகளைக் குறித்து மிகவும் கவலையுள்ளவனாக இருப்பதையும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக இல்லாத ஒரு காரியத்தைத் தெரிந்தே செய்யும்படியாக தன்னை ஒருபோதும் கேட்க மாட்டான் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள்.
தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருக்கும்படி கட்டளையிட்ட தன்னுடைய தலைவராகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீக குணங்களை ஒரு கணவன் பிரதிபலிக்கையில் அவன் தன்னுடைய மனைவியின் அன்பையும் மரியாதையையும் காத்துக் கொள்வான். (யோவான் 13:34) ஒரு கணவன் தவறு செய்யும் இயல்புள்ளவனாகவும், அபூரணமாகவும் இருந்தபோதிலும்கூட, அவன் தன்னுடைய அதிகாரத்தை இயேசு கிறிஸ்துவின் உன்னத தலைமைத்துவத்துக்கு இசைவாக பயன்படுத்துவானாகில் அவனை தலைவனாகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி காண்பதை மனைவிக்கு எளிதாக்குகிறான். (1 கொரிந்தியர் 11:3) ஒரு மனைவி கிறிஸ்தவ குணங்களாகிய அடக்கத்தையும் அன்புள்ள தயவையும் வளர்த்துக்கொள்வாளேயானால், தன் கணவனுக்கு தன்னைக் கீழ்ப்படுத்துவது அவளுக்குக் கடினமாயிராது.
மனத்தாழ்மையும் நியாயமானத்தன்மையும்
சபையிலுள்ள கணவர்மாரும் மனைவிமாரும் யெகோவாவுக்கு முன்பாக சமமான நிலையிலிருக்கும் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாக இருக்கின்றனர். (கலாத்தியர் 3:28 ஒப்பிடவும்.) ஆனால் ஆண்கள் சபையில் மேற்பார்வையை செலுத்த கடவுளால் நியமனம் பெற்றிருக்கிறார்கள். இது எல்லா கீழ்ப்படிதலோடும் நேர்மையான இருதயமுள்ள பெண்களால் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மந்தையை இறுமாப்பாய் ஆளாதிருக்கும்படியாக அது ஆண்கள் மீது வைக்கும் கனத்த பொறுப்பு, சபையிலுள்ள முதிர்ச்சி வாய்ந்த ஆண்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.—1 பேதுரு 5:2, 3.
சபையிலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான உறவு இப்படிப்பட்டதாக இருக்குமானால் ஒரு கிறிஸ்தவ கணவன் தன்னுடைய ஆவிக்குரிய சகோதரியான தன் மனைவியின் மீது ஒரு கொடுங்கோலனாக நடந்துகொள்ளும் அவன் செயலை எவ்விதமாக நியாயப்படுத்த முடியும்? மேலும் மனைவி தன் கணவனோடு தலைமைத்துவத்துக்காக போட்டியிடுவதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? மாறாக, அவர்கள் சபையிலுள்ள எல்லா அங்கத்தினர்களுக்கும் பேதுரு கொடுத்த அறிவுரையின்படி ஒருவரையொருவர் நடத்த வேண்டும்: “நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டடவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதரசிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருங்கள்.” (1 பேதுரு 3:8) பவுல் மேலுமாக அறிவுரை கூறியதாவது: “உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், யெகோவா [NW] உங்களுக்கு மன்னித்தது போல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.”—கொலோசெயர் 3:12, 13.
இப்படிப்பட்ட மனநிலை சபையில் வளர்த்துக்கொள்ளப்பட வேண்டும். அவை விசேஷமாக கிறிஸ்தவ வீட்டில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே வளர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கணவன் தன் மனைவியின் ஆலோசனைகளுக்குச் செவி சாய்ப்பதன் மூலம் தன்னுடைய உருக்கமான பாசத்தையும் சாந்தத்தையும் காண்பிக்கலாம். அவன் குடும்பத்தை பாதிக்கும் ஒரு தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு தன்னுடைய மனைவியின் கருத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மனைவிமார், அறிவற்றவர்கள் அல்ல. சாராள் தன் கணவன் ஆபிரகாமுக்குச் செய்தது போல அவர்கள் தங்கள் கணவன்மாருக்கு மதிப்புள்ள ஆலோசனைகளைக் கொடுக்க முடியும். (ஆதியாகமம் 21:12) மறுபட்சத்தில் ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனை நியாயமில்லாமல் வற்புறுத்துகிறவளாக இருக்கமாட்டாள். அவள் அவனுடைய தலைமையைப் பின்பற்றி, சில சமயங்களில் தன்னுடைய சொந்த விருப்பங்களிலிருந்து வித்தியாசமானதாக இருந்தபோதிலும்கூட அவனுடைய தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலம் அவள் தன் தயவையும் மனத்தாழ்மையையும் காண்பிப்பாள்.
நியாயமான ஒரு கணவன், நியாயமான ஒரு மூப்பரைப் போலவே எளிதில் அணுக முடிகிறவராகவும் தயவாகவும் இருப்பார். அன்புள்ள ஒரு மனைவி அபூரணத்தின் மத்தியிலும் வாழ்க்கையின் அழுத்தங்கள் மத்தியிலும் தன் பொறுப்புகளை நிறைவேற்ற அவர் எடுக்கும் முயற்சிகளை உணர்ந்தவளாய் இரக்கத்தோடும் நீடிய பொறுமையோடும் இருப்பதன் மூலம் பிரதிபலிக்கிறாள். இப்படிப்பட்ட மனநிலைகள் கணவன், மனைவி ஆகிய இருவராலும் வளர்த்துக்கொள்ளப்படும் போது ஒரு விவாகத்தில் கீழ்ப்பட்டிருத்தல் ஒரு பிரச்னையாக இருக்கப் போவதில்லை. மாறாக, அது சந்தோஷம், சமாதானம் மற்றும் நிலையான திருப்திக்கு காரணமாயிருக்கிறது. (w91 12/15)