வயதானவர்களுக்குக் கிறிஸ்தவ அன்பைக் காண்பித்தல்
சாம்யல் ஜான்ஸன் என்ற 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாசிரியர், ஒரு இளைஞன் தன் நண்பர்களைச் சந்திக்கச் சென்றபோது, தன் தொப்பியை எங்கே வைத்தான் என்பதை மறந்துவிட்ட கதையைச் சொன்னார். இது எந்தவொரு குறிப்பையும் எழுப்பவில்லை. “ஆனால் அதே கவனக்குறைவு ஒரு வயதான மனிதனிடம் காணப்பட்டால், மக்கள் தங்கள் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, ‘அவருடைய ஞாபகசக்தி குறைய தொடங்கிவிட்டது,’ என்று சொல்வார்கள்,” என்பதாக ஜான்ஸன் தொடர்ந்து கூறினார்.
வயதானவர்கள், ஒருவேளை மற்ற சிறுபான்மை தொகுதிகளைப்போல, நியாயமற்றவிதத்தில் சித்தரிக்கப்படுவதற்கு உள்ளாகின்றனர் என்பதை ஜான்ஸனின் கதை விளக்குகிறது. வயதானவர்களின் தேவைகளைக் கவனிப்பது ஒரு சவாலாக இருந்தாலும், அதில் உட்பட்டிருக்கிற எல்லாருக்கும் பலன்கள் வந்துசேர்கின்றன. சவால்களும் பலன்களும் என்னென்ன, மேலும் இந்த விஷயம் ஏன் அதிகமதிகமானோரைப் பாதிக்கிறது?
புள்ளிவிவரங்களின்படி, உலக மக்கள் தொகையில் 6 சதவிகிதமானோர் 65 வயதுள்ளோராக அல்லது அதற்கு மேற்பட்டோராக இருக்கின்றனர்; வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த சதவிகிதம் இன்னும் இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. “வயதான மக்களுக்கும் சந்ததிகளுக்கு இடையில் கூட்டு ஒருமைப்பாட்டுக்குமான ஐரோப்பிய வருடம்” என்பதாக 1993-ஐ குறிப்பிட்டிருந்த ஐரோப்பிய சமுதாயத்தில், 3 பேருக்கு ஒருவர் 50 வயதுக்கு மேற்பட்டவர். அநேக தொழில் மயமாக்கப்பட்ட நாடுகளில் இருப்பதைப்போலவே, அங்கு பிறப்பு விகிதங்களில் குறைவும், ஆயுட்கால எதிர்பார்ப்பில் அதிகரிப்பும், மக்கள் தொகை பரப்பீட்டை நடுத்தர வயதிற்கு மேற்பட்டதாக இருக்கும்படிச் செய்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலைகளின்கீழ், வயதில் முதிர்ந்தவர்களைக் கவனிப்பது தெளிவாக ஒரு பிரமாண்டமான வேலையாக இருக்கிறது. பண்டைய கிழக்கத்தியர் மத்தியில் காரியங்கள் எவ்வளவு வித்தியாசமாக இருந்து வந்தன!
“அறிவு சேகரிப்பாளர்கள்”
ஹான்ட்வோர்டர்பக் டெஸ் பிப்லிஷன் ஆல்டர்ட்யூம்ஸ் ஃபுயர் கெபில்டெடெ பிபெலேஸர் (அறிவுபுகட்டப்பட்ட பைபிள் வாசிப்போருக்கு பைபிள் பழமையைப் பற்றிய கையேடு) இவ்வாறு குறிப்பிடுகிறது; பண்டைய கிழக்கத்தியர் மத்தியில், “ஞானம் மற்றும் உயர் அறிவின் பாரம்பரிய மதிப்புகளின் காப்பாளர்களாக வயதானவர்கள் கருதப்பட்டு, அதன் காரணமாக, அவர்களுடைய கூட்டுறவை நாடவும் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும் இளைஞர் அறிவுறுத்தப்பட்டனர்.” ஸ்மித்ஸ் பைபிள் டிக்ஷனரி இவ்வாறு விளக்குகிறது: “தனிப்பட்ட வாழ்க்கையில் [வயதானவர்கள்] அறிவு சேகரிப்பாளர்களாக நோக்கப்பட்டனர் . . . அவர்களுடைய கருத்தை முதலில் தரும்படி [இளைஞர்] அனுமதித்தனர்.”
லேவியராகமம் 19:32-ல் வயதானவர்களுக்கான மரியாதை மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தில் பிரதிபலிக்கப்பட்டது: ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணு.’ ஆகவே, சமுதாயத்திற்குள் சிலாக்கியமுள்ள ஒரு நிலையை வயதானவர்கள் கொண்டிருந்து, மதிப்புள்ள சொத்துக்களாக நோக்கப்பட்டார்கள். தெளிவாக, மோவாபிய பெண்ணாகிய ரூத் தன் இஸ்ரவேல மாமியாகிய நகோமியை இந்த விதத்திலேயே கருதினாள்.
மோவாபிலிருந்து இஸ்ரவேலுக்கு நகோமியுடன் செல்லும்படி ரூத் உறுதியாகத் தீர்மானித்தாள்; அதன் பின்னர் நகோமியின் ஆலோசனைகளுக்குக் கவனமாகச் செவிகொடுத்தாள். அவர்கள் பெத்லகேமுக்குச் சென்றதும், காரியங்களை வழிநடத்துவது யெகோவாவின் கை என்பதைக் கவனித்தது நகோமியே; பின்னர் அவள்தானே ரூத் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று அறிவுரைகளைக் கொடுத்தாள். (ரூத் 2:20; 3:3, 4, 18) அனுபவமுள்ள நகோமியிடமிருந்து கற்றுக்கொள்கையில், ரூத்தின் வாழ்க்கை தேவாட்சிக்குரிய முறையில் உருவமைக்கப்பட்டது. அவளுடைய மாமி ஒரு அறிவு களஞ்சியமாக நிரூபித்தாள்.
அதேவிதமாகவே, இன்றும் சபையிலுள்ள வயதான பெண்களுடன் கூட்டுறவு கொள்வதன்மூலம் இளம் கிறிஸ்தவ பெண்கள் பயனடையலாம். ஒருவேளை ஒரு சகோதரி திருமணம் செய்வதைக் குறித்து யோசித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது ஒரு கடுமையான தனிப்பட்ட பிரச்சினையுடன் போராடிக்கொண்டு இருக்கலாம். இந்தக் காரியத்தில் அனுபவத்தை உடைய ஒரு வயதான சகோதரியின் ஆலோசனையையும் உதவியையும் நாடுவது எவ்வளவு ஞானமானதாக இருக்கும்!
மேலுமாக, ஒரு மூப்பர் குழு, தங்கள் மத்தியிலுள்ள வயதானவர்களின் அனுபவத்திலிருந்து பயன்பெற்றுக்கொள்ளலாம். லோத்து இவ்வாறு செய்ய தவறியதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். ஆபிரகாம் மற்றும் லோத்தின் மந்தைகளை மேய்ப்பவர்களை உட்படுத்திய ஒரு வாக்குவாதம், எல்லாரையும் பாதிக்கக்கூடிய ஒரு தீர்மானம் எடுக்கப்படுவதை உட்படுத்தியது. லோத்து ஒரு ஞானமற்ற தெரிவைச் செய்தார். முதலில் ஆபிரகாமுடைய ஆலோசனைக்காகக் கேட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! லோத்து முதிர்ச்சி வாய்ந்த வழிநடத்துதலைப் பெற்றிருப்பார்; மேலும் தன்னுடைய அவசர தெரிவின் காரணமாக தன் குடும்பத்திற்கு விளைந்த துயரத்தையும் தவிர்த்திருப்பார். (ஆதியாகமம் 13:7-13; 14:12; 19:4, 5, 9, 26, 29) ஒரு கேள்வியின்பேரில் உங்கள் சொந்த தீர்மானத்தை அடைவதற்குமுன், முதிர்ச்சிவாய்ந்த மூப்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவனமாகச் செவிகொடுக்கிறீர்களா?
முதல் நூற்றாண்டில் இருந்த சிமியோனும் அன்னாளும் போலவே, எண்ணற்ற வயதானவர்கள் யெகோவாவின் வேலைக்கான நிலையான வைராக்கியத்தைக் கொண்டிருக்கிறார்கள். (லூக்கா 2:25, 36, 37) அப்படிப்பட்ட வயதானவர்களை, அவர்கள் அதிக வயதானபோதும்கூட, அவர்களுடைய பெலன் அனுமதிக்கும் அளவிற்கு சபை நடவடிக்கைகளில் உட்படுத்துவது, அவர்களிடமாக மரியாதையைக் காட்டுவதற்கு அடையாளமாகவும் அவர்களைக் கவனிக்கும் மனநிலையின் ஒரு பிரதிபலிப்பாகவும் இருக்கிறது. தேவராஜ்ய ஊழியப் பள்ளிக்காக ஒரு பேச்சைத் தயாரிக்க ஒரு இளைஞனுக்கு ஒருவேளை உதவி தேவைப்படலாம். சபையிலுள்ள ஒரு வயதான அங்கத்தினரே ஏற்ற அறிவுரையாளராகவும், முதிர் சுவையுடைய ஞானமுள்ளவராகவும், இன்முகமுடையவராகவும், வேண்டியளவு சமயமுடையவராகவும் இருப்பார் என்று ஒரு புத்திக்கூர்மையுள்ள மூப்பர் முடிவுசெய்யக்கூடும்.
என்றபோதிலும், வயதானவர்களுடைய விசேஷித்த தேவைகளைக் கவனிக்க நாடுவது அதிகத்தை உட்படுத்துகிறது. அநேகர் தனிமையாலும், குற்றச்செயலுக்கான பயத்தாலும், பொருளாதார கஷ்டங்களாலும் வருத்தப்படுகிறார்கள். மேலுமாக, வயதானவர்கள் நலிவுறத் தொடங்கியதும், அவர்களுடைய குறைவுபடும் ஆரோக்கியமும் தங்கள் சொந்த பலன் குறைவதால் ஏற்படும் ஏமாற்றமும் இந்தப் பிரச்சினைகளுடன் சேர்ந்துகொள்கின்றன. அப்போது அவர்களுக்கு அதிக கவனிப்பு தேவைப்படுகிறது. தனி நபர்களும் மொத்தமாக சபையும் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
‘தேவபக்தியை அப்பியாசித்தல்’
முதல் நூற்றாண்டின்போது, ஏவுதலால் பவுல் 1 தீமோத்தேயு 5:4, 16-ல் இவ்வாறு எழுதினார்: “விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது.” வயதானவர்களைக் கவனிப்பது ஒரு குடும்ப பொறுப்பாக இருந்தது. சபையிலுள்ள வயதான அங்கத்தினர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டால், அவருடைய குடும்பத்தினர் சாத்தியமான எல்லா உதவியையும் செய்தபிறகு, அந்தப் பொறுப்பு சபையின்மீது இருந்தது. இந்த நியமங்கள் மாறிவிடவில்லை.
தங்களுடைய சொந்த குடும்பத்தில் தேவபக்தியை அப்பியாசிப்பதன்மூலம் வயதானவர்களிடமாக கிறிஸ்தவ அன்பைக் காட்டும்படி கிறிஸ்தவர்களுக்கு உதவியிருப்பது எது? முதிர்ந்த வயதிலிருப்பவர்களைக் கவனிப்பதில் ஏதாவது அனுபவத்தைப் பெற்றிருந்த பல சாட்சிகளுடைய பின்வரும் குறிப்புகளைக் கவனியுங்கள்.
ஆவிக்குரிய தேவைகளுக்கு ஒழுங்கான கவனிப்பு
“தினவசனத்தைச் சேர்ந்து கலந்தாலோசிப்பது ஒரு மதிப்பிடமுடியாத உதவியாக இருந்தது,” என்று ஃபேலிக்ஸ் நினைவுகூருகிறார்; இவர் தன் மனைவி அவளுடைய பெற்றோரைக் கவனிப்பதில் உதவியவர். “சொந்த அனுபவங்களும் விருப்பங்களும் யெகோவாவின் நியமங்களோடு பிணைக்கப்பட்டிருந்தன.” உண்மையில், வயதான உறவினர்களைக் கவனிக்கும்படியான சவாலுக்கு ஈடுகொடுப்பதில், ஒரு முக்கியமான அம்சம் என்னவென்றால், அவர்களுடைய ஆவிக்குரிய மேம்பாட்டிற்குப் போதுமான கவனத்தை அளிப்பதாகும். மத்தேயு 5:3-லுள்ள (NW) இயேசுவின் வார்த்தைகளின் நோக்கில் இது நியாயமானதே: “ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையோர் மகிழ்ச்சியுள்ளவர்கள்.” தினவசனத்தை நிறைவானதாக்க பைபிள் வாசிப்பு திட்டம் ஒன்று, பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களைக் கலந்தாலோசித்தல், ஜெபம் ஆகியவற்றைச் சேர்க்கலாம். “ஓரளவு ஒழுங்கை வயதானவர்கள் விரும்புவதாகத் தோன்றுகிறது,” என்று பேட்டர் குறிப்பிடுகிறார்.
ஆம், ஆவிக்குரிய காரியங்களில் ஒழுங்கான தன்மை அவசியமாக இருக்கிறது. ஆவிக்குரிய காரியங்களில் மட்டுமல்ல, ஆனால் தினசரி வாழ்க்கையிலும் வயதானவர்கள் ஒழுங்கைப் போற்றுகிறார்கள். குறைந்த அளவான உடல்நலக் குறைகளை உடையவர்களைக்கூட, “படுக்கையைவிட்டு எழுந்து தினமும் நல்லபடி உடை உடுத்திக்கொள்வதற்காக” அன்பாக உற்சாகப்படுத்தலாம் என்று உர்ஸூலா குறிப்பிடுகிறாள். நிச்சயமாகவே, வயதானவர்களுக்குக் கட்டளையிடுவது போன்ற ஒரு எண்ணத்தைக் கொடுப்பதை நாம் தவிர்க்க விரும்புகிறோம். டோரிஸ், தன்னுடைய நல்லெண்ணமுள்ள முயற்சிகள் பெரும்பாலும் கவலைக்குரியவிதத்தில் வீணாகப் போனதை ஒத்துக்கொள்கிறாள். “நான் எல்லா வகையான தவறுகளையும் செய்தேன். ஒரு நாள் என் தந்தையிடம், தினசரி அவருடைய சட்டையை மாற்றும்படி சொன்னேன். அப்போது என் தாய் ஞாபகப்படுத்தினார்கள்: ‘அவர் இன்னும் என்னுடைய கணவர்!’”
வயதானவர்கள் ஒரு காலத்தில் இளைஞராய் இருந்தார்கள், ஆனால் இளைஞருக்கு தங்களை வயதானவர்களின் நிலையில் வைத்துப் பார்ப்பது ஒரு கடினமான காரியமாக இருக்கிறது. இருந்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதற்கு அதுவே முக்கியமானதாக இருக்கிறது. வயதில் முதிர்ச்சி அடைவது ஏமாற்றத்தைக் கொண்டுவருகிறது. கேர்ஹார்ட் விவரிக்கிறார்: “என் மாமனாரால் இனிமேலும் காரியங்களைத் தானாகவே செய்யமுடியாத காரணத்தால் தன்னிடம் தானே எரிச்சல்பட்டுக்கொண்டார். நிலைமையை ஏற்றுக்கொள்வது அவருக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவருடைய ஆளுமை மாறியது.”
மாறும் சூழ்நிலைகளின்கீழ், ஒரு வயதானவர் ஏமாற்றத்தின் உள்ளக்குமறல்களை, குறிப்பாக தன்னைக் கவனித்துக்கொள்பவர்களைக் குறைகூறுவதன்மூலம் வெளிப்படுத்துவது அசாதாரணமான காரியமல்ல. காரணம் எளியது. அவர்களுடைய அன்பான கவனிப்பு, அவருடைய சொந்த பலம் குன்றுவதை அவருக்கு நினைப்பூட்டுகிறது. இந்த நியாயமற்ற குறைகூறுதல் அல்லது குற்றச்சாட்டிற்கு நீங்கள் எப்படி பிரதிபலிக்கவேண்டும்?
அப்படிப்பட்ட எதிர்மறையான உணர்ச்சிகள், உங்களுடைய முயற்சிகளைப்பற்றிய யெகோவாவின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது நியாயமற்ற குறிப்புகளைக் கேட்டாலும்கூட, தொடர்ந்து நன்மை செய்து, உங்கள் மனச்சாட்சியைச் சுத்தமானதாகக் காத்துக்கொள்ளுங்கள். (1 பேதுரு 2:19-ஐ ஒப்பிடவும்.) உள்ளூர் சபை அதிக ஆதரவை அளிக்க முடியும்.
சபை என்ன செய்ய முடியும்
நம்முடைய அன்பார்ந்த வயதான சகோதர சகோதரிகளுடைய கடந்தகால முயற்சிகளுக்காக ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாய் இருக்க பல சபைகள் காரணத்தைக் கொண்டிருக்கிறார்கள். பல பத்தாண்டுகளுக்கு முன்னர் வெறும் ஒருசில பிரஸ்தாபிகளிலிருந்து சபையைக் கட்டியெழுப்புவதற்காக, சபைக்கு அஸ்திவாரமிட்டவர்கள் அவர்களாகவே ஒருவேளை இருக்கக்கூடும். அவர்களுடைய கடந்தகால வைராக்கிய நடவடிக்கையும், ஒருவேளை தற்போதைய பொருளாதார உதவியும் இல்லாவிட்டால், சபை எங்கே இருக்கும்?
ஒரு வயதான பிரஸ்தாபியைக் குறித்ததில், அதிகப்படியான கவனிப்பு அவசியப்பட்டால், அந்தப் பொறுப்பை உறவினர்கள் தனியாக ஏற்க அவசியமில்லை. எடுபிடி வேலைகள் செய்வது, சமைப்பது, துப்புரவு செய்வது, வயதானவரை உலாவ கொண்டுசெல்வது, கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல பயண ஏற்பாடுகள் செய்வது, அல்லது ராஜ்ய மன்றங்களில் வெறுமனே அவரோடு பேசுவது ஆகியவற்றின்மூலம் மற்றவர்கள் உதவிசெய்யலாம். முயற்சிகள் ஒத்திசைவிக்கப்படும்போது திறனும் ஒழுங்கும் நல்லவிதத்தில் அடையப்படும் என்றாலும், எல்லாருமே சேர்ந்துகொள்ளலாம்.
மேய்ப்புச் சந்திப்புகளை ஒழுங்கமைக்கையில், ஒத்திசைவிப்பு என்பது மூப்பர்கள் மனதில் வைக்க வேண்டிய ஒரு காரியமாகும். இந்த விஷயத்தில், சில சபைகள் சிறந்து விளங்குகின்றன; வயதானவர்களிடமும் நலம் குன்றியவர்களிடமும், தங்கள் குடும்பங்களால் நன்கு கவனிக்கப்பட்டவர்களிடமும்கூட ஒழுங்கான மேய்ப்புச் சந்திப்புகள் செய்யப்படுவதை மூப்பர்கள் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். என்றபோதிலும், மற்ற சபைகள், வயதானவர்களிடமான தங்கள் கடமையைக் குறித்து அதிக கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
80-களின் பிற்பட்ட வயதில் இருந்த ஒரு உண்மையுள்ள சகோதரர், தன்னுடைய மகளாலும் மருமகனாலும் கவனிக்கப்பட்டார்; அவ்வாறு கவனிப்பதற்காக அவர்கள் பெத்தேலைவிட்டுச் சென்றார்கள். இருந்தாலும், சபையிலுள்ள மற்ற அங்கத்தினரின் சந்திப்புகள் அவருக்கு இன்னும் முக்கியமானவையாய் இருந்தன. “நோயுற்றிருப்பவர்களைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் நான் அவர்களுடன் ஜெபம் செய்வேன். ஆனால் இதுவரை ஒருவரும் என்னுடன் ஜெபம் செய்யவில்லை,” என்று வருத்தத்துடன் சொன்னார். உறவினர்களின் அன்பான கவனிப்பு, மூப்பர்களை ‘தங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை மேய்க்கும்’ கடமையிலிருந்து விடுவிப்பதில்லை. (1 பேதுரு 5:2) மேலுமாக, வயதானவர்களைக் கவனிப்பவர்கள் தங்கள் நல்ல வேலையைத் தொடருவதற்கு கட்டியெழுப்பப்படுவதும் உற்சாகப்படுத்தப்படுவதும் அவசியம்.
‘முதிர்ந்து பூரண ஆயுசுடன்’
அலெக்ஸாண்டர் வான் ஹும்பால்ட் என்ற 19-ம் நூற்றாண்டு ஜெர்மானிய அறிவியலாளர் ஒருவர் முதிர்ந்த வயதுள்ளவராய் இருந்தார்; அப்போது, அவர் வயதாகிக்கொண்டுபோவதைக் கடினமாகக் காணவில்லையா என்று ஒரு இளம் பெண் அவரிடம் கேட்டாள். “நீ சொல்வது உண்மைதான். ஆனால் அதிக காலம் வாழ்வதற்கு ஒரே வழி அதுதான்,” என்று அந்தப் படித்த மனிதன் பதிலளித்தார். அதேவிதமாகவே, இன்று அநேக சகோதர சகோதரிகள் நீண்ட நாள் வாழ்க்கையை வாழும் கனத்திற்குப் பதிலாக வயோதிபத்தின் இன்னல்களை ஏற்றுக்கொள்ளும் நல்ல முன்மாதிரியை வைக்கின்றனர். ‘முதிர்ந்து பூரண ஆயுசுடன்’ இருந்த ஆபிரகாம், ஈசாக்கு, தாவீது, யோபு ஆகியோரால் காண்பிக்கப்பட்ட மனநிலையைப் பிரதிபலிக்கின்றனர்.—ஆதியாகமம் 25:8; 35:28; 1 நாளாகமம் 23:1; யோபு 42:17.
முதிர்ந்த வயதுள்ளவர்களாக ஆவது, உதவியை இயல்பாக ஏற்றுக்கொண்டு, நேர்மையாக நன்றியைத் தெரிவிக்கும் சவாலைக் கொண்டுவருகிறது. ஒவ்வொருவரும் தன் பலத்தின் வரம்பை உணர்வதை ஞானம் தேவைப்படுத்துகிறது. என்றபோதிலும், அது வயதான ஒருவரை செயலற்ற நிலைக்குரியவராகத் தீர்த்துவிடுவதில்லை. மாரியாவுக்கு வயது 90-க்கும் மேல்; ஆனால் அவர்கள் இன்னும் சபைக் கூட்டங்களுக்குச் சென்று, அங்கு குறிப்புகளும் சொல்கிறார்கள். அவர்கள் அதை எவ்வாறு செய்கிறார்கள்? “என்னால் இனிமேலும் வாசிக்க முடிவதில்லை, ஆனால் நான் காசட்டில் காவற்கோபுரத்தைக் கேட்கிறேன். அவற்றில் கொஞ்சத்தை மறந்தும்விடுகிறேன், ஆனால் பொதுவாக எப்படியாவது ஒரு குறிப்பைச் சொல்லிவிடுகிறேன்.” மாரியாவைப்போல, தங்களைக் கட்டியெழுப்புகிற காரியங்களால் நிரப்பி வைத்தல், ஒருவர் சுறுசுறுப்பாக நிலைத்திருக்கவும், கிறிஸ்தவ ஆளுமையைக் காத்துக்கொள்ளவும் உதவுகிறது.
கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ், வயோதிபம் இருக்காது. இந்த ஒழுங்குமுறையில் வயதானவர்களும் ஒருவேளை மரித்துப்போனவர்களும்கூட அவர்களுக்குக் காண்பிக்கப்பட்ட பராமரிப்பையும் கவனிப்பையும் பற்றி இனிய நினைவுகளை அப்போது கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட வயதானவர்கள் உயிரையும் பெலத்தையும் திரும்பப் பெறும்போது, அவர்கள் நிச்சயமாகவே யெகோவாவுக்கு உள்ளார்ந்த அன்பையும், இந்தப் பழைய ஒழுங்குமுறையில் தங்களுடைய சோதனைகளோடே தங்களோடு இருந்தவர்களிடமாக ஆழ்ந்த நன்றியுணர்வையும் கொண்டிருப்பார்கள்.—லூக்கா 22:28-ஐ ஒப்பிடவும்.
தற்போது வயதானவர்களைக் கவனிப்பவர்களைப் பற்றி என்ன? வெகு சீக்கிரத்தில், ராஜ்யம் பூமியின்மீது முழு அதிகாரத்தையும் எடுத்துக்கொள்ளும்போது, அவர்கள் தங்கள் கடமையிலிருந்து வழிவிலகிச் செல்லாமல் வயதானவர்களுக்குக் கிறிஸ்தவ அன்பைக் காண்பிப்பதன்மூலம் தேவ பக்தியை அப்பியாசித்திருக்கிறார்கள் என்பதை சந்தோஷத்தோடும் நிம்மதியோடும் நினைத்துப் பார்ப்பார்கள்.—1 தீமோத்தேயு 5:4.
[பக்கம் 30-ன் பெட்டி]
வயதானவர்கள் உங்கள் சந்திப்புகளைப் போற்றுவார்கள்
பிரசங்க வேலைக்குப் பின் ஒரு வயதானவரை, ஒருவேளை 15 நிமிடங்கள், சென்று சந்திக்கும்படி திட்டமிடுவதால் அதிக நன்மையை அடையமுடியும். ஆனால், பின்வரும் அனுபவம் காண்பிக்கிறபடி, அப்படிப்பட்ட சந்திப்புகளைத் தற்செயலாய் நிகழும்படி விட்டுவிடாமல் இருப்பது மிகவும் நல்லது.
பிரிஜிட்டியும் ஹானெலோரியும் சேர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருக்கையில், ஒரு வீட்டில் ஒரு வயதானவருடன் பேசிக்கொண்டிருந்தனர். அவரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்றும், அதே சபையின் ஒரு அங்கத்தினர் என்றும் கண்டுபிடிப்பதற்குமுன் அந்தச் சகோதரிகள் அவரிடம் ஐந்து நிமிடங்களுக்குப் பேசினர். எவ்வளவு தர்மசங்கடமான நிலை! ஆனால் அந்த அனுபவம் நல்லபடியாக முடிந்தது. ஹானெலோரி அந்தச் சகோதரரைச் சந்திப்பதற்கும் சபைக் கூட்டங்களுக்குச் செல்ல அவருக்கு உதவுவதற்கும் உடனடியான திட்டங்களைச் செய்தாள்.
நீங்கள் பிரசங்கிக்கும் பிராந்தியத்திலிருக்கும் ஒவ்வொரு வயதான பிரஸ்தாபியின் பெயரும் விலாசமும் உங்களுக்குத் தெரியுமா? சிறிது நேரம் அவர்களைச் சந்திக்கும்படி நீங்கள் ஏற்பாடு செய்ய முடியுமா? அது பெரும்பாலும் மிகவும் போற்றப்படும்.