உங்கள் வியாபாரத்தினால் உங்களுக்கு எவ்வளவு செலவாகும்?
ஒரு தென் அமெரிக்க தேசத்து ஜனாதிபதியின் மனைவி தன் குடும்ப அங்கத்தினர்கள் ஸ்தாபித்து வைத்திருந்த மோசடி செய்யும் வியாபார நிறுவனங்களுக்கு வியாபார ஒப்பந்தங்களாக இலட்சக்கணக்கான டாலர்களை அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்கள். இந்தியாவில் 38-வயது பங்குத் தரகர் ஒருவர், 160 கோடி வங்கி மற்றும் பங்கு மார்க்கெட் ஊழலில் ஈடுபட்டிருந்த குற்றத்தின் காரணமாக கைது செய்யப்பட்டு தன் சொகுசான வீட்டையும் 29 கார்களையும் விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருந்தது. பிலிப்பீன்ஸ் தேசத்தில் உள்ள தீவு ஒன்றில் வசிப்பவர்கள் சட்டத்துக்கு விரோதமாக கைத்துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். வருவாய் மிகுதியாய் கிடைக்கும் இந்த வேலையில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு, அவர்கள் வழக்கமாக அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தலையிடாமல் இருக்கும்படி செய்கின்றனர் என்று அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது.
ஆம், வியாபாரத்தில் நேர்மையின்மையும் ஏமாற்றுதலும் உலகமுழுவதும் பரவலாக உள்ளன. பெரும்பாலும் அதில் உட்பட்டிருந்த ஆட்களுக்கு ஸ்தானம், மதிப்பு அதோடுகூட பணம் ஆகியவை செலவாவதை அது உட்படுத்தியது.
உங்களைப் பற்றியென்ன? நீங்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறீர்களா? அல்லது ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்க நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? அது உங்களுக்கு எவ்வளவு செலவை உட்படுத்தும்? வியாபாரத்தில் செலவு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியாது. இது ஆட்சேபத்துக்குரிய ஒன்றல்ல. இருப்பினும், ஒரு வியாபார முயற்சியில் இறங்குவதற்கு முன் அல்லது ஏற்கெனவே ஸ்தாபித்திருக்கும் ஒரு வியாபாரத்தைக் குறித்து தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் செலவைக் கணக்கிடுவது ஞானமானது. (லூக்கா 14:28, 30) பக்கம் 31-ல் உள்ள பெட்டி நீங்கள் சிந்தித்துப் பார்க்க விரும்பும் சில செலவுகளைக் காண்பிக்கிறது.
வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பது எளிதானதல்ல என்பது தெளிவாயிருக்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு, சிந்தித்துப் பார்ப்பதற்கு ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான கடமைகள் இருக்கின்றன. நீங்கள் செலவுகளை சரிக்கட்டி, ஆவிக்குரிய பிரகாரமாய் சமநிலையோடு நிலைத்திருக்க முடியுமா? குறிப்பிட்ட சில செலவுகள் ஒழுக்க சம்பந்தமாய் நீங்கள் எற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறதா? எந்தச் செலவுகள் ஏற்கத்தகுந்தவை மற்றும் எந்தச் செலவுகள் ஏற்கத்தகாதவை என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு உதவிசெய்யும் சில நியமங்கள் யாவை?
பணத்தை அதன் இடத்தில் வையுங்கள்
ஒரு வியாபாரத்தை நடத்துவதற்குப் பணம் தேவைப்படுகிறது, ஒரு குடும்பத்தைப் பராமரிப்பதற்கு ஒரு வியாபாரம் போதுமான பணத்தைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், பணத்தைப் பற்றிய இலக்குகள் எளிதில் உருமாறிவிடக்கூடும். பேராசை ஒரு காரணமாக ஆகிவிடலாம். அநேக ஆட்களுக்குப் பணம் உட்பட்டிருக்கும் போது மற்ற காரியங்கள் அனைத்தும் இரண்டாவது இடத்தைப் பெறுகின்றன. இருப்பினும், நீதிமொழிகள் என்ற பைபிள் புத்தகத்தின் எழுத்தாளர் ஒருவர், ஆகூர், இவ்வாறு சொன்னபோது சமநிலையான கருத்தைத் தெரிவித்தார்: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. . . . என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.” (நீதிமொழிகள் 30:8, 9) உயிர்வாழ்வதற்குப் போதுமான அளவு இருப்பதைக் குறித்து திருப்தியாய் இருப்பதன் மதிப்பை அவர் உணர்ந்தார்—அவர் பெரும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பவில்லை.
பொன்னான சந்தர்ப்பம் என்றழைக்கப்படும் அந்த வாய்ப்பு எழும்புகையில், பேராசை ஒருவரை இந்த நியமத்தை மறக்கும்படி செய்யக்கூடும். ஒரு வளரும் நாட்டில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய பிரயாண ஊழியர் ஒருவர் இப்படிப்பட்ட சம்பவம் ஒன்றை அறிக்கை செய்தார். முதலீடு மூலதனம் தேவைப்பட்ட ஒரு குறிப்பிட்ட கம்பெனி, முதலீடு செய்பவர்கள் வெகு விரைவில், ஒருவேளை ஒருசில மாதங்களுக்குள், தங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம் என்ற அபிப்பிராயத்தை உருவாக்கியது. சுலபமாய் பணம் பெறுவதற்கான இந்த வாய்ப்பு அநேகரை முதலீடு செய்யும்படி செய்தது. பயண ஊழியர் சொல்கிறார்: “சிலர் இதில் ஈடுபட அதிக ஆவலாயிருந்தனர். அவர்கள் இவ்விஷயத்தை முழுமையாக விசாரிக்கவில்லை. [முதலீடு செய்வதற்கு] பணத்தைக் கடன்வாங்கினர்.”
இதற்கு மாறாக இரு நபர்கள் முதலீடு செய்வதற்கு முன் இக்கம்பெனியின் அலுவலகத்தை விசாரித்தறிய சென்றனர். கம்பெனியின் உற்பத்தி சாதனங்களைப் பார்ப்பதற்கு அவர்கள் செய்த வேண்டுகோள் மறுக்கப்பட்டது. இது அக்கம்பெனியின் நம்பகத்தன்மையை அவர்கள் சந்தேகிக்கும்படி செய்தது. இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பாக அமைந்தது. ஏனெனில் ஒருசில வாரங்களுக்குள், மோசடியாகத் தோன்றின அவர்களுடைய திட்டம் வெளியாகி சில ஆட்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆரம்பத்தில் விசாரித்தறியாமல் ஈடுபட்டவர்களுக்கு இது எத்தகைய செலவு என்று யோசித்துப் பாருங்கள். அத்திட்டம் தோல்வியுற்றபோது அவர்கள் பணத்தை இழந்தது மட்டுமன்றி, கடன் கொடுத்திருந்த நண்பர்களுக்குப் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாததால் அவர்களை இழந்தனர். பணவிஷயங்களில் நீதிமொழிகள் 22:3-ல் உள்ள நியமத்தைப் பொருத்துவது எவ்வளவு ஞானமானது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப் போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்”!
உங்கள் சொல்லைக் கடைப்பிடியுங்கள்
நீங்கள் எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் கிடைக்கவில்லையென்றால், அப்போது என்ன? அவ்வாறு செய்வது தனக்குச் சாதகமில்லையென்றாலும் தன் ஒப்பந்தங்களைக் கடைப்பிடிக்கும் மனிதனை சங்கீதம் 15:4 மெச்சிப் பேசுகிறது: “ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான்.” வியாபாரம் செழித்தோங்குகையில் ஒருவர் தன் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பது எளிதானது. ஆனால் அவ்விதம் செய்வது ஒருவருக்குப் பண நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றால், அது உத்தமத்தன்மைக்கு ஒரு பரீட்சையாக ஆகிறது.
யோசுவாவின் காலத்திலிருந்த ஒரு பைபிள் உதாரணத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். கிபியோனியர் சூழ்ச்சி செய்து இஸ்ரவேல தலைவர்களோடு உடன்படிக்கை செய்து தங்களை அழித்துப்போடாமல் இருக்கும்படி செய்தனர். உண்மையில், இஸ்ரவேலருக்கு அச்சுறுத்தலாக இருந்த தேசத்தின் பாகமாக அவர்கள் இருந்தனர். அந்தச் சூழ்ச்சி ஏற்பாடு வெளிப்படையாகத் தெரிந்தபோது, “சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை.” (யோசுவா 9:18) இத்தொகுதியினர் விரோதிகளின் பிராந்தியத்திலிருந்து வந்தபோதிலும், அத்தலைவர்கள் தங்கள் வார்த்தையை கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இது யெகோவாவைப் பிரியப்படுத்தியது என்பதை அதற்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.—யோசுவா 10:6-11.
நீங்கள் எதிர்பார்த்தவிதமாய் காரியங்கள் நடைபெறாவிட்டாலும்கூட உங்களுடைய வியாபார ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் உறுதியாயிருப்பீர்களா?a நீங்கள் அவ்வாறு செய்வீர்களென்றால், கொடுத்த வாக்கை எப்போதும் நிறைவேற்றும் யெகோவாவைப் போல் அது உங்களை ஆக்கும்.—ஏசாயா 55:11.
நேர்மையாய் இருங்கள்
இன்றைய வியாபார உலகில் நேர்மை என்பது மறைந்துபோன ஒன்றாக இல்லாவிட்டாலும்கூட அது ஆபத்தில் உள்ள ஒன்றாக இருக்கிறது. உங்களைப் போன்று வியாபாரங்களில் உள்ள மற்றவர்கள் நேர்மையற்ற முறைகளை உபயோகித்து தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம். அவர்கள் விளம்பரம் செய்வதில் நேர்மையற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மற்றொரு கம்பெனியின் பெயரைத் திருடி தாங்கள் தயாரிக்கும் பொருட்களில் போட்டுக்கொள்ளலாம். அல்லது தரம் குறைவான பொருளை நல்ல தரமுள்ள பொருளாக அளிக்கலாம். இவையனைத்தும் வித்தியாசமான நேர்மையற்ற முறைகள். அவற்றைச் செய்பவர்கள் ‘துன்மார்க்கரைப்’ போல் இருக்கின்றனர், ஆசாப் சொன்னபடி, பொதுவாக மோசடியாக தோன்றும் வழிகளில் தங்கள் “ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள்.”—சங்கீதம் 73:12.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக கள்ளத்தனமான முறைகளைப் பயன்படுத்துவீர்களா? அல்லது இதைப்போன்ற பைபிள் நியமங்களால் வழிநடத்தப்படுவீர்களா?: “நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை”; “வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாம”லிருந்தோம்; “வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத்தராசு நல்லதல்ல.” (2 கொரிந்தியர் 4:2; 7:2; நீதிமொழிகள் 20:23) நேர்மையற்றத்தன்மையை ஆரம்பித்து வைத்தவன் ‘பொய்க்குப் பிதாவாயிருக்கும்’ பிசாசாகிய சாத்தானேயன்றி வேறொருவனுமில்லை என்பதை நினைவில் வையுங்கள்.—யோவான் 8:44.
சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு சொல்லலாம்: ‘மற்றவர்கள் செய்வது போல் நேர்மையற்ற முறைகளைப் பயன்படுத்தவில்லையென்றால் வியாபாரத்தில் நிலைத்திருப்பது கடினம்.’ இங்குதான் ஒரு கிறிஸ்தவர் யெகோவாவின் பேரில் இருக்கும் தன் விசுவாசத்தை வெளிப்படுத்திக்காட்டலாம். செலவை உட்படுத்தும்போது நேர்மை பரீட்சிக்கப்படுகிறது. நேர்மையற்றவாராக இருந்தால்தான் ஒருவர் வாழ்க்கையை நடத்தமுடியும் என்று சொல்வது, கடவுள் தம்மை நேசிப்பவர்களைக் குறித்து அக்கறையற்றவராய் இருக்கிறார் என்று சொல்வதைப் போல் இருக்கும். கடவுள் தம்முடைய ஊழியர்கள் எந்தத் தேசத்தில் அல்லது எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவார் என்று யெகோவாவின் பேரில் மெய்யான விசுவாசத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபர் அறிந்திருக்கிறார். (எபிரெயர் 13:5) நேர்மையற்றவர்கள் கொண்டிருப்பதைக் காட்டிலும் குறைவான ஊதியத்தையே பெற்று திருப்தியோடு இருக்கவேண்டும் என்பது உண்மைதான், ஆனால் கடவுளுடைய ஆசீர்வாதத்தைக் கொண்டிருப்பதற்கு இவ்வாறு இருப்பது அதிக மதிப்புள்ளதல்லவா?
நேர்மையற்றத்தன்மை, தன்னையே திருப்பித்தாக்கும் தடியைப் போல் உள்ளது, அதை எறிந்தால் அது மறுபடியும் அதை எறிந்தவரிடமே திரும்பி வருகிறது. ஒரு வியாபாரி நேர்மையற்றவராக இருந்தால், வாடிக்கைக்காரர்களும் சரக்குகளைக் கொடுப்பவரும் அவரைக் கைவிட்டு விடுவார்கள். அவர்களை ஒருமுறை அவர் ஏமாற்றலாம், ஆனால் அதுவே கடைசி தடவையாக இருக்கலாம். மறுபட்சத்தில், ஒரு நேர்மையான வியாபாரி மற்றவர்களுடைய மரியாதையைப் பெற்றுக்கொள்கிறார். ‘மற்றவர்கள் எல்லாம் செய்கிறார்கள், ஆகையால் பரவாயில்லை,’ என்ற தவறான சிந்தனையினால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி கவனமாயிருங்கள். பைபிள் நியமம் என்னவென்றால், “தீமைசெய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக.”—யாத்திராகமம் 23:2.
நீண்டகாலமாக உங்களோடு வியாபாரம் செய்பவர் உடன்கிறிஸ்தவர் அல்லர் என்றும் எப்போதும் பைபிள் நியமங்களைக் கடைப்பிடிப்பவரல்லர் என்றும் வைத்துக்கொள்வோம். வேதப்பூர்வமற்ற காரியம் ஏதொவொன்று செய்யப்படுகையில், உங்களுடைய சொந்த உத்தரவாதத்திலிருந்து தப்பித்துக்கொள்ள இதை ஒரு சாக்காகப் பயன்படுத்துவது சரியானதாக இருக்குமா? ஆதாம் மற்றும் சவுல் போன்றவர்களின் உதாரணங்களை ஞாபகத்தில் வையுங்கள். பாவத்தைத் தவிர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் மற்றவர்களிடமிருந்து வந்த அழுத்தத்துக்கு இடங்கொடுத்து விட்டு தங்கள் கூட்டாளிகளின் பேரில் பழியைப் போட்டனர். எப்பேர்ப்பட்ட பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தினர்!—ஆதியாகமம் 3:12, 17-19; 1 சாமுவேல் 15:20-26.
உடன்விசுவாசிகளோடு சரியான முறையில் நடந்துகொள்ளுங்கள்
யெகோவாவின் உடன் வணக்கத்தாரோடு வியாபார ஒப்பந்தங்களைச் செய்கையில், சிந்தித்துப் பார்ப்பதற்கு விஷயங்கள் இருக்கின்றனவா? தீர்க்கதரிசியாகிய எரேமியா தன் சொந்த ஊராகிய ஆனதோத்தில் தன்னுடைய பெரிய தகப்பனின் மகனிடமிருந்து ஒரு நிலத்தை வாங்கியபோது, அவர் வெறுமனே பணத்தைக் கொடுத்துவிட்டு கைகளைக் குலுக்கிவிட்டுச் சென்றுவிடவில்லை. மாறாக, அவர் சொன்னார்: “நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்”தேன். (எரேமியா 32:10) இப்படி எழுத்து மூலம் செய்யப்படும் ஒப்பந்தங்கள், பிற்பாடு சூழ்நிலைமைகள் மாறும்போது எழும்பும் பிரச்சினைகளைத் தவிர்க்கக்கூடும்.
ஆனால் வியாபாரத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் உங்களை நேர்மையற்றவிதமாய் நடத்தியிருப்பதாக தோன்றினால் என்ன செய்யப்பட வேண்டும்? நீங்கள் அவரை நீதிமன்றத்துக்குக் கூட்டிச்செல்ல வேண்டுமா? பைபிள் இதைக் குறித்து தெளிவாக இருக்கிறது. “உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன?” என்று பவுல் கேட்டார். ஒரு பிரச்சினை உடனடியாக திருப்தியானமுறையில் தீர்க்கப்படவில்லையென்றால் அப்போது என்ன? பவுல் கூடுதலாக சொல்கிறார்: “நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை?” மெய்க் கிறிஸ்தவர்கள் தங்கள் பிணக்கங்களை நீதிமன்றங்களில் தீர்த்துக்கொள்வதை வெளியில் இருப்பவர்கள் கேள்விப்பட்டால் அது எவ்வளவு கெட்ட பெயரைக் கிறிஸ்தவ அமைப்புக்குக் கொண்டுவரும் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்! அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பண ஆசை சகோதரர்கள் பேரில் உள்ள அன்பைக் காட்டிலும் அதிக பலமாக ஆகிவிட்டிருக்கக்கூடுமா? அல்லது ஒருவருடைய மதிப்புக்குக் களங்கம் ஏற்பட்டு, பழிக்குப்பழி வாங்குவதுதான் அவருடைய மனதில் அதிக முக்கியத்துவமுள்ளதாய் இருக்கிறதா? அப்படிப்பட்ட விஷயங்களில் நீதிமன்றத்துக்குப் போவதற்கு பதிலாக இழப்பைப் பொறுத்துக்கொள்வது மேலானது என்று பவுலின் புத்திமதி காண்பிக்கிறது.—1 கொரிந்தியர் 6:1, 7; ரோமர் 12:17-21.
சபைக்குள் அப்படிப்பட்ட பிணக்கங்களைக் கையாளுவதற்கு ஒரு வேதப்பூர்வமான முறை நிச்சயமாகவே உள்ளது. (மத்தேயு 5:37; 18:15-17) அதில் உட்பட்டிருக்கும் சகோதரர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருக்கும் படிகளைப் பின்பற்றச்செய்வதற்கு, கிறிஸ்தவ மூப்பர்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கும் அனைவருக்கும் உதவியளிக்கும் ஆலோசனையைக் கொடுக்கலாம். அப்படிப்பட்ட கலந்தாலோசிப்புகளின்போது பைபிள் நியமங்களை ஏற்றுக்கொள்வது சுலபமானதாகத் தோன்றலாம், ஆனால் அதற்குப் பிறகு கொடுக்கப்பட்ட புத்திமதியைப் பொருத்துவதன் மூலம் நீங்கள் செவிகொடுத்துக் கேட்டீர்கள் என்பதை காண்பிப்பீர்களா? கடவுள் பேரிலும் உடன் கிறிஸ்தவர்கள் பேரிலும் உள்ள அன்பு அவ்வாறு செய்வதற்கு நம்மை உந்துவிக்கும்.
வியாபாரத்தில் இருப்பது உங்களுக்கு ஏதோவொரு செலவை உட்படுத்தும் என்பதைக் குறித்து சந்தேகமேயில்லை. நம்பிக்கையளிக்கும் விதத்தில், நீங்கள் செய்யும் செலவு நியாயமானதாய் இருக்கும். தீர்மானங்களை அல்லது கேள்விக்குரிய சூழ்நிலைமைகளை எதிர்ப்படும்போது, பணத்தைக் காட்டிலும் அதிக மதிப்புவாய்ந்த காரியங்கள் வாழ்க்கையில் இருக்கின்றன என்பதை மனதில் வையுங்கள். பணத்தை அதன் இடத்தில் வைப்பது, கொடுத்த வாக்கினை நிறைவேற்றுவது, நேர்மையாக இருப்பது, வியாபாரக் கூட்டாளிகளைக் கிறிஸ்தவ முறையில் கையாளுவது போன்றவற்றைச் செய்வதன் மூலம், வியாபாரம் தேவைக்கு மேல் கூடுதலான நேரத்தையும் பணத்தையும் எடுத்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள்ளலாம், அதே சமயத்தில் நாம் நட்புகளையும், ஒரு நல்ல மனச்சாட்சியையும், யெகோவாவோடு ஒரு நல்ல உறவையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
[அடிக்குறிப்புகள்]
a வியாபாரத்தில் கொடுத்த வாக்கினைக் காப்பாற்றியதற்கு ஒரு நவீன-நாளைய உதாரணம், விழித்தெழு! மே 8, 1989, பக்கங்கள் 11-13-ல் “என் வார்த்தை என் ஒப்பந்தம்” கட்டுரையைக் காண்க.
[பக்கம் 31-ன் பெட்டி]
உங்கள் வியாபாரம் உங்களுக்கு ஏற்படுத்தக்கூடிய செலவுகள்
நேரம்: ஒருவர் தன் சொந்த வியாபாரத்தை நடத்தும்போது, ஒரு கம்பெனியில் வேலை செய்பவரைக்காட்டிலும் அதிக நேரத்தை செலவழிக்கிறார். இது உங்களுடைய அட்டவணையோடு குறுக்கிட்டு, முக்கியமான ஆவிக்குரிய வேலைகளுக்குக் குறைவான நேரத்தை விட்டு வைக்குமா? உடன்பாடானவிதத்தில் எடுத்துக்கொள்வோமென்றால், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதற்கென்று கூடுதலான நேரத்தை செலவழிக்க உங்கள் விவகாரங்களை ஒழுங்குபடுத்த உங்களால் முடியுமா? அப்படி செய்யமுடியுமென்றால், அது நல்லது. ஆனால் கவனமாயிருங்கள்! இது செய்வதைக்காட்டிலும் சொல்வது எளிது.
பணம்: பணத்தைப் பெருக்குவதற்குப் பணம் தேவைப்படுகிறது. உங்களுடைய வியாபாரத்துக்கு என்ன முதலீடு தேவைப்படுகிறது? உங்களிடம் பணம் இருக்கிறதா? அல்லது நீங்கள் பணம் கடன்வாங்க வேண்டுமா? கொஞ்சம் பணத்தை இழக்க உங்களால் முடியுமா? நீங்கள் எதிர்பார்த்தபடி காரியங்கள் நடைபெறவில்லையென்றால், கூடுதலான செலவை நீங்கள் தாங்கிக்கொள்ள முடியுமா?
நண்பர்கள்: அனுதின வேலைகளில் எழும்பும் பிரச்சினைகளின் காரணமாக, அநேக நிர்வாகிகள் தங்கள் நண்பர்களை இழந்துபோகின்றனர். நண்பர்களை ஏற்படுத்திக்கொள்வதற்கு சாத்தியம் இருந்தபோதிலும்கூட, உறவுகள் முறிந்துபோவது நிகழக்கூடியதாயிருக்கிறது. இந்த நண்பர்கள் நம்முடைய கிறிஸ்தவ சகோதரர்களாய் இருந்தால் அப்போது என்ன?
ஒரு நல்ல மனச்சாட்சி: இன்றைய உலகில் வியாபாரம் செய்வதற்குப் பொதுவான அணுகுமுறை, இரக்கமற்ற போட்டி அல்லது “நான் எவ்வாறு இலாபம் பெறலாம்?” என்பதாகும். வியாபார வாழ்க்கையில் நன்னெறிகளுக்கு இடமே இல்லை என்று ஒரு ஐரோப்பிய ஆய்வில் 70 சதவீதத்திற்கும் மேலான மாணவர்கள் உறுதியாகக் கூறினர். மோசடி, நேர்மையற்றத்தன்மை, கேள்விக்குரிய வியாபார பழக்கவழக்கங்கள் போன்றவை சர்வசாதாரணமாய் ஆகிவிட்டிருப்பது ஆச்சரியமாயில்லை. நீங்களும் மற்றவர்களைப் போலவே செய்வதற்குத் தூண்டப்படுவீர்களா?
யெகோவாவோடு நீங்கள் கொண்டிருக்கும் உறவு: வியாபாரத்தில் கடவுளுடைய சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் எதிராக இருக்கும் எந்தவொரு செயலும், அவை வியாபார விவகாரங்களில் சர்வ சாதாரணமானதாக இருந்தாலும், ஒரு நபர் தன் படைப்பாளரிடமாகக் கொண்டிருக்கும் உறவை அது கெடுத்துவிடும். அவர் தன் நித்திய ஜீவ எதிர்பார்ப்பை இழக்கும்படி இது செய்யக்கூடும். பொருளாதார நன்மை எவ்வளவு இருந்தாலும், ஒரு உண்மையுள்ள கிறிஸ்தவன் இழந்துவிடுவதற்கு இது அதிக மதிப்புள்ள ஒன்றாக இருக்குமல்லவா?
[பக்கம் 31-ன் படங்கள்]
பிற்காலத்தில் பிணக்கங்களைத் தவிர்க்க எது உதவும்? வெறுமனே கைகளைக் குலுக்குவதா அல்லது எழுத்து மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தமா?