கடவுளை சேவிக்க எது உங்களைத் தூண்டுகிறது?
“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக.”—மாற்கு 12:30.
1, 2. பிரசங்க வேலையின் சம்பந்தமாக என்ன கிளர்ச்சியூட்டும் காரியங்கள் சாதிக்கப்பட்டு வருகின்றன?
ஒரு காரின் உண்மையான மதிப்பு முற்றிலும் அதன் தோற்றத்தால் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஒரு வண்ணப் பூச்சு அதன் வெளிப்புறத்தை மேம்படுத்தலாம், அழகிய உருவமைப்பு அதை வாங்கயிருப்பவரைக் கவரலாம்; ஆனால் இவற்றைக் காட்டிலும் அதிமுக்கியமானவை கண்ணுக்கு வெளிப்படையாய் தெரியாதவை—அவ்வண்டியை இயக்குவிக்கும் எஞ்ஜினும் அதைக் கட்டுப்படுத்தும் மற்றெல்லா கருவிகளும்.
2 ஒரு கிறிஸ்தவன் கடவுளுக்கு செய்யும் சேவையிலும் இதற்கு ஒப்பாகவே இருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடைய வேலையில் செய்வதற்கு மிகுதியானதைக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் நூறு கோடிக்கும் அதிகமான மணிநேரங்கள் செலவிடப்படுகின்றன. மேலுமாக, இலட்சக்கணக்கான பைபிள் படிப்புகள் நடத்தப்படுகின்றன, முழுக்காட்டப்படுபவர்களின் எண்ணிக்கை அநேக லட்சங்களாக இருக்கின்றன. இந்த நற்செய்தியை அறிவிப்போரில் நீங்களும் ஒருவர் என்றால், இக்கிளர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களில் ஒரு பங்கை—அது சிறியதாகத் தோன்றுவதாக இருப்பினும்—நீங்கள் கொண்டிருந்திருக்கிறீர்கள். “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்ல” என்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாயிருக்கலாம்.—எபிரெயர் 6:10.
3. கிரியைகள் மட்டுமன்றி வேறெதுவும் கிறிஸ்தவர்களுக்கு முக்கிய கவனத்துக்குரியதாக இருக்கவேண்டும், ஏன்?
3 ஆயினும், நம் சேவை—அது மொத்தமானதாக இருந்தாலும் அல்லது தனி நபர்களுடையதாக இருந்தாலும்—அதன் உண்மையான மதிப்பு முற்றிலும் எண்களினால் அளவிடப்படுவதில்லை. சாமுவேலுக்குச் சொல்லப்பட்டபடி, “மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) நாம் உள்ளே எத்தகையவர்களாக இருக்கிறோம் என்பதையே கடவுள் கணக்கில் எடுக்கிறார். கிரியைகள் அவசியம் தான். தேவபக்தியுள்ள கிரியைகள் யெகோவாவின் போதனையை அலங்கரித்து சீஷர்களாக ஆகும் சாத்தியமுள்ளோரைக் கவர்ந்திழுக்கின்றன. (மத்தேயு 5:14-16; தீத்து 2:10; 2 பேதுரு 3:11) ஆயினும், நம் கிரியைகள் உண்மைநிலை முழுவதையும் காட்டுவதில்லை. உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவுக்கு எபேசுவிலிருந்த சபையைக் குறித்து—அவர்களுடைய நற்கிரியைகளடங்கிய பதிவு இருந்தபோதிலும்—கவலைப்படுவதற்குக் காரணம் இருந்தது. “உன் கிரியைகளை . . . அறிந்திருக்கிறேன்,” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.”—வெளிப்படுத்துதல் 2:1-4.
4. (அ) நாம் கடவுளுக்கு செய்யும் சேவை எவ்விதம் கடமைக்கு செய்யும் ஒரு சடங்கைப்போல் ஆகிவிடக்கூடும்? (ஆ) ஏன் சுயபரிசோதனை செய்வதற்கான தேவை இருக்கிறது?
4 ஓர் அபாயம் இருக்கிறது. நாம் கடவுளுக்கு செய்யும் சேவை காலப்போக்கில் கடமைக்குச் செய்யும் ஒரு சடங்கைப் போல் ஆகிவிடக்கூடும். ஒரு கிறிஸ்தவப் பெண் இவ்வாறு விவரித்தார்கள்: “நான் ஊழியத்திற்குச் செல்வேன், கூட்டங்களுக்குச் செல்வேன், படிப்பேன், ஜெபிப்பேன்—ஆனால் இதையெல்லாம் ஓர் இயந்திரத்தைப் போல், எவ்வித உணர்ச்சியுமின்றி செய்தேன்.” நிச்சயமாகவே, ‘கீழே தள்ளப்பட்டதைப்’ போன்று ‘சிறுமைப்பட்டு’ உணருகையிலும் பிரயாசப்பட்டு தங்களை ஈடுபடுத்துகையில் கடவுளுடைய ஊழியர்கள் போற்றப்படவேண்டும். (2 கொரிந்தியர் 4:9; 7:6) இருப்பினும், நம் கிறிஸ்தவ வாழ்க்கை கிரமம் விறுவிறுப்பற்ற நிலைக்கு வந்துவிட்டால், நாம் அடையாள அர்த்தத்தில் உள்ளே எஞ்ஜினை பார்வையிடவேண்டும். மிகச் சிறந்த கார்களுக்கும்கூட பராமரிப்பு தேவை; இவ்விதமே, எல்லா கிறிஸ்தவர்களும் ஒழுங்கான சுயபரிசோதனை செய்யவேண்டும். (2 கொரிந்தியர் 13:5) மற்றவர்கள் நம் கிரியைகளைக் காணமுடியும், ஆனால் நம் செயல்களை எது தூண்டுகிறது என்பதை அவர்களால் காணமுடியாது. எனவே, ‘கடவுளை சேவிக்க என்னைத் தூண்டுவது எது?’ என்ற கேள்வியில் நாம் ஒவ்வொருவரும் அக்கறையுள்ளவர்களாய் இருக்கவேண்டும்.
சரியான தூண்டுதலுக்குத் தடைகள்
5. கட்டளைகளுக்குள் எது முதலாவது என்று இயேசு சொன்னார்?
5 இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்குள் முதலாவது எது என்று கேட்கப்பட்டபோது இயேசு மேற்கோளாகக் குறிப்பிட்ட பின்வரும் கட்டளை வெளிப்புறத் தோற்றத்தின் மீதல்ல உள்ளான தூண்டுதலின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது: “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.” (மாற்கு 12:28-30) கடவுளுடைய சேவையில் எது நம்மை இயக்குவிக்கும் சக்தியாக இருக்கவேண்டும் என்பதை இயேசு இவ்விதம் அடையாளம் காட்டினார், அது—அன்பு.
6, 7. (அ) சாத்தான் எவ்விதத்தில் நயவஞ்சகமாக குடும்பத்தைத் தாக்கயிருக்கிறான், ஏன்? (2 கொரிந்தியர் 2:11) (ஆ) ஒருவர் வளர்க்கப்பட்டவிதம் தெய்வீக அதிகாரத்தின் பேரில் அவருடைய மனப்பான்மையை எவ்விதம் பாதிக்கக்கூடும்?
6 இந்த அத்தியாவசிய பண்பாகிய அன்பை வளர்ப்பதற்குரிய நம் திறமையை சாத்தான் தடுக்க விரும்புகிறான். இதைச் சாதிக்க அவன் கடைப்பிடித்திருக்கும் ஒரு முறை குடும்பத்தைத் தாக்குவதாகும். ஏன்? ஏனெனில் இங்குதான் அன்பைப் பற்றி நம்முடைய நீண்டு நிலைத்திருக்கக்கூடிய முதலாவது அபிப்பிராயங்கள் உருவாக்கப்படுகின்றன. பிள்ளைப்பருவத்தில் கற்றுக்கொள்ளப்படுவது வளர்ந்தபருவத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்ற பைபிள் நியமத்தை சாத்தான் நன்கு அறிவான். (நீதிமொழிகள் 22:6) சிறுபிராயத்திலேயே அன்பைப் பற்றிய நம் கருத்தை தாறுமாறாக்க நயவஞ்சகமாக அவன் முயலுகிறான். அன்பின் புகலிடங்களாக இன்றி, கசப்பும் கோபமும் தூஷணமும் நிறைந்த போர்க்களங்களாக உள்ள வீடுகளில் அநேகர் வளரும்போது, “இப்பிரபஞ்சத்தின் தேவனான” சாத்தான் தன் நோக்கங்கள் நன்கு பூர்த்தியாவதைக் காண்கிறான்.—2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 4:31, 32; 6:4, NW, அடிக்குறிப்பு; கொலோசெயர் 3:21.
7 ஒரு தகப்பன் தன் பொறுப்பைக் கையாளும் முறை “பின்னால் தன்னுடைய பிள்ளைகள், மனித மற்றும் தெய்வீக அதிகாரத்தினிடமாகக் காட்டப்போகிற அவர்களுடைய மனப்பான்மையின்பேரில் குறிப்பிடத்தக்க ஒரு பாதிப்பை உண்டாக்கக்கூடும்,” என்று உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகம் கருத்துத் தெரிவித்தது.a அளவுக்குமீறி கண்டிப்பான தகப்பனால் வளர்க்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர் ஒப்புக்கொண்டார்: “யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது எனக்கு எளிது, அவரில் அன்புகூருவதோ மிக அதிக கடினம்.” கீழ்ப்படிவது நிச்சயமாகவே அத்தியாவசியம், ஏனெனில் கடவுளுடைய கண்களில் ‘பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதல் உத்தமம்.’ (1 சாமுவேல் 15:22) வெறுமனே கீழ்ப்படிவதைத் தாண்டி முன்சென்று, யெகோவாவின் பேரில் அன்பை நம் வணக்கத்தில் தூண்டுவிக்கும் சக்தியாக வளர்க்க எது நமக்கு உதவும்?
‘கிறிஸ்துவினுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவுகிறது’
8, 9. இயேசுவின் மீட்கும்பொருள் பலி எவ்விதம் யெகோவாவின்மீது நம் அன்பைத் தூண்டவேண்டும்?
8 யெகோவாவின்மீது இருதயப்பூர்வமான அன்பை வளர்ப்பதற்கு மிகப் பெரிய தூண்டுதல் இயேசு கிறிஸ்துவின் மீட்கும்பொருள் பலியின் பேரிலுள்ள போற்றுதலாகும். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.” (1 யோவான் 4:9) இதைப் புரிந்துகொண்டு, மதித்துணரும்போது இந்த அன்பான செயல் ஒரு அன்பான பிரதிபலிப்பை வெளிப்பட செய்கிறது. “அவர் [யெகோவா] முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.”—1 யோவான் 4:19.
9 இயேசு மனிதனின் இரட்சகராக இருக்கும்படி தமக்கு கொடுக்கப்பட்ட நியமிப்பை மனமுவந்து ஏற்றுக்கொண்டார். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 3:16; யோவான் 15:13) இயேசுவின் சுயதியாக அன்பு நம்மில் ஒரு போற்றுதலுள்ள பிரதிபலிப்பை எழுப்பவேண்டும். உதாரணமாக: நீரில் மூழ்கிக்கொண்டிருந்த உங்களை எவரோ காப்பாற்றினார்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் வீட்டுக்குப் போய் ஈரத்தை உலர்த்திக்கொண்டு, நடந்ததை மறந்துவிட முடியுமா? நிச்சயமாகவே முடியாது! உங்களை காப்பாற்றியவருக்குக் கடன்பட்டவராக நீங்கள் உணர்வீர்கள். உங்கள் உயிருக்காக அவரிடம் கடன்பட்டவராக இருக்கிறீர்கள். யெகோவா தேவனிடமும் இயேசு கிறிஸ்துவிடமும் அதைவிட குறைவாக கடன்பட்டிருக்கிறோமா? மீட்கும்பொருள் இல்லாதுபோனால், நாம் ஒவ்வொருவரும் பாவத்திற்குள்ளும் மரணத்திற்குள்ளும் மூழ்கிப்போவதுபோல் உட்பட்டிருப்போம். அதற்கு மாறாக, இந்த அன்பான செயலின் காரணமாக நாம் ஒரு பரதீசான பூமியில் என்றும் வாழும் நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம்.—ரோமர் 5:12, 18; 1 பேதுரு 2:24.
10. (அ) மீட்கும்பொருளை எவ்விதம் நமக்குத் தனிப்பட்ட அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொள்ளக்கூடும்? (ஆ) கிறிஸ்துவின் அன்பு எவ்விதம் நம்மை நெருக்கி ஏவுகிறது?
10 மீட்கும்பொருளின் பேரில் தியானியுங்கள். அதை உங்களுக்குத் தனிப்பட்ட அர்த்தத்தில் பொருத்திப் பாருங்கள், பவுல் செய்ததைப்போல: “நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.” (கலாத்தியர் 2:20) அத்தகைய தியானம் இருதயப்பூர்வமான தூண்டுதலை உண்டுபண்ணும், ஏனெனில் பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், . . . பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) கிறிஸ்துவின் அன்பு “எங்களை உணர்ச்சியில் ஆழ்த்துகிறது” என்று தி ஜெரூசலம் பைபிள் சொல்கிறது. கிறிஸ்துவின் அன்பைக் குறித்து நாம் சிந்திக்கையில், நாம் ஏவப்படுகிறோம், ஆழமாக தூண்டப்படுகிறோம், உணர்ச்சியில் ஆழ்த்தவும்படுகிறோம். அது நம் இருதயத்தைத் தொட்டு நம்மை செயல்பட தூண்டுகிறது. அதை ஜெ. பி. பிலிப்ஸின் மொழிபெயர்ப்பு பொழிப்புரைத்துக்கூறும் வண்ணம், “எங்கள் செயல்களின் ஊற்று கிறிஸ்துவின் அன்பே.” பரிசேயரின் விஷயத்தில் காட்டப்படுகிறபடி, வேறெந்த தூண்டுதலும் நிலையான கனிகளை நம்மில் பிறப்பிக்கமுடியாது.
‘பரிசேயரின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்’
11. மதக் கிரியைகளின் பேரில் பரிசேயரின் மனநிலையை விளக்குங்கள்.
11 பரிசேயர் கடவுளின் வணக்கத்திலிருந்து அதன் முழு உயிர்த்துடிப்பையும் நீக்கிவிட்டனர். கடவுளின்மீதுள்ள அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, கிரியைகளை ஆவிக்குரிய தன்மைக்கு அளவுகோலாக வலியுறுத்திக் கொண்டிருந்தனர். விரிவான சட்டங்களின் பேரில் அவர்கள் கொண்டிருந்த முன்னீடுபாடு வெளிப்பார்வைக்கு அவர்களை நீதிமான்களாக தோன்றச் செய்தது, ஆனால் “உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திரு”ந்தனர்.—மத்தேயு 23:27.
12. இயேசு ஒரு மனிதனை சுகப்படுத்தியபோது, பரிசேயர் எவ்விதம் தாங்கள் இருதயக் கடினமுள்ளோர் என காட்டினர்?
12 ஒரு சமயம் சூம்பிய கையையுடைய ஒரு மனிதனை இரக்கத்துடன் இயேசு சுகப்படுத்தினார். அவனுக்கு நிச்சயமாகவே அதிக சரீர மற்றும் உணர்ச்சி சம்பந்தமான அசௌகரியத்தைக் கொடுத்திருந்திருக்கக்கூடிய ஒரு அங்ககீனம் நொடிப்பொழுதில் குணப்படுத்தப்பட்டபோது இந்த மனிதன் எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருப்பான்! ஆயினும், பரிசேயர் அவனுடன் சேர்ந்து சந்தோஷப்படவில்லை. மாறாக, ஒரு சட்டநுணுக்கத்தில்—அதாவது, ஓய்வுநாளில் இயேசு உதவிசெய்தார் என்பதில்—அவர்கள் நுட்பப்பிழை பார்த்தனர். நியாயப்பிரமாணத்தை சட்டநுணுக்கத்தோடு விளக்குவதிலேயே முன்னீடுபாடு கொண்டிருந்த பரிசேயர், நியாயப்பிரமாணத்தின் முக்கிய கருத்தைக் காண முற்றிலும் தவறிவிட்டனர். இயேசு “அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் . . . விசனப்ப”ட்டது ஆச்சரியப்படுவதற்கில்லை! (மாற்கு 3:1-5) மேலும், “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,” என்று தம் சீஷர்களை எச்சரித்தார். (மத்தேயு 16:6) நம் நன்மைக்காக அவர்களுடைய செயல்களும் மனப்பான்மைகளும் பைபிளில் வெளியரங்கமாக்கப்பட்டுள்ளன.
13. பரிசேயரின் உதாரணத்தில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது?
13 கிரியைகளைப்பற்றிய நம் கருத்தில் நியாயமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதை பரிசேயர்களின் உதாரணம் நமக்கு கற்பிக்கிறது. உண்மையிலேயே, கிரியைகள் அத்தியாவசியமானவை தான், ஏனெனில் ‘கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது,’ (யாக்கோபு 2:26) ஆயினும், அபூரண மனிதர் மற்றவர்களை அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கொண்டல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கொண்டே நியாயந்தீர்க்கிறார்கள். சில சமயங்களில், நாம் நம்மையேகூட இவ்விதம் மதிப்பிட்டுக்கொள்ளக்கூடும். நம் செயல்நிறைவேற்றமே நம் ஆவிக்குரிய தன்மையின் ஒரே அளவுகோல் என்பதுபோல் அதிலேயே கருத்தூன்றியவர்களாக நாம் ஆகிவிடக்கூடும். நம் உள்நோக்கங்களை ஆராய்வதின் முக்கியத்துவத்தை மறந்துவிடக்கூடும். (2 கொரிந்தியர் 5:12-ஐ ஒப்பிடுக.) நாம் விடாக்கண்டிப்புடன் சட்டநுணுக்கம் பார்ப்பவர்களாக, ‘கொசுகில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக,’ சட்டத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் கீழ்ப்படிந்து அதன் நோக்கத்தை மீறுகிறவர்களாக ஆகிவிடக்கூடும்.—மத்தேயு 23:24.
14. பரிசேயர் எவ்விதம் ஓர் அசுத்தமான கோப்பை அல்லது பாத்திரத்தைப் போன்று இருந்தனர்?
14 பரிசேயர் எதை புரிந்துகொள்ளவில்லையென்றால், ஓர் ஆள் யெகோவாவில் உண்மையாகவே அன்புகூர்ந்தால், தேவபக்தியுள்ள செயல்கள் இயற்கையாகவே அதைப் பின்தொடரும் என்பதை. ஆவிக்குரிய தன்மை உட்புறத்திலிருந்து வெளிப்புறத்திற்கு வருகிறது. இவ்விஷயத்தில் பரிசேயர் கொண்டிருந்த தவறான சிந்தனைக்காக இயேசு அவர்களை கடுமையாக கண்டித்தார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. குருடனான பரிசேயனே! போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.”—மத்தேயு 23:25, 26.
15. இயேசு வெளிப்புறத்தோற்றங்களுக்கும் அப்பால் பார்க்கிறார் என்பதற்கு உதாரணங்களைக் குறிப்பிடுங்கள்.
15 ஒரு கோப்பை, ஒரு பாத்திரம் அல்லது ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தோற்றம் எல்லாவற்றையும் காட்டிவிடுவதில்லை. எருசலேம் தேவாலயத்தின் அழகைக் கண்டு இயேசுவின் சீஷர்கள் திகைப்படைந்தார்கள், ஆனால் அதற்குள் நடந்து கொண்டிருந்தவற்றின் நிமித்தம் இயேசு அதைக் “கள்ளர் குகை” என்றழைத்தார். (மாற்கு 11:17; 13:1) அந்த ஆலயத்தின் விஷயத்தில் உண்மையாயிருந்தது கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டும் இலட்சக்கணக்கானோரின் விஷயத்திலும் உண்மையாயிருக்கிறது. இதைக் கிறிஸ்தவமண்டலத்தின் வரலாறு காட்டுகிறது. இயேசு தம்முடைய நாமத்தில் “பலத்த கிரியைகளை” செய்தவர்களை ‘அக்கிரமச் செய்கைக்காரர்’ எனத் தீர்ப்பேன் என்று சொன்னார். (மத்தேயு 7:22, 23, NW) இதற்கு எதிர்மாறாக, அற்பத்தொகையை நன்கொடையாக அளித்த ஒரு விதவை, “காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் . . . இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்” என்று அவர் சொன்னார். (மாற்கு 12:41-44) முரண்படும் தீர்ப்புகளா? இல்லவே இல்லை. இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் இயேசு யெகோவாவின் மனப்பான்மையைப் பிரதிபலித்தார். (யோவான் 8:16) அக்கிரியைகளைத் தூண்டுவித்த உள்நோக்கங்களை இயேசு கண்டு அதற்கேற்றபடி தீர்ப்பளித்தார்.
“அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக”
16. நம்முடைய செயல்களை மற்றொரு கிறிஸ்தவரின் செயல்களோடு ஏன் எப்போதும் நாம் ஒப்பிடவேண்டிய தேவையில்லை?
16 நம் உள்நோக்கங்கள் சரியாக இருந்தால், அடிக்கடி ஒப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை. உதாரணமாக, மற்றொரு கிறிஸ்தவர் ஊழியத்தில் செலவிடும் நேரத்தின் அளவே தானும் செலவிடவேண்டும் என்றோ அல்லது பிரசங்க வேலையில் அவருடைய சாதனைக்குச் சமமாக இருக்கவேண்டும் என்றோ போட்டிபோட்டு முயலுவதால் எந்த நன்மையும் விளைவதில்லை. இயேசு யெகோவாவில் உன்னுடைய—மற்றொருவருடையதல்ல—முழு இருதயத்தோடும், மனதோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும் அன்புகூரவேண்டும் என்று சொன்னார். ஒவ்வொரு நபருடைய திறமைகளும், பலமும், சூழ்நிலைகளும் வித்தியாசப்படுகின்றன. உங்களுடைய சூழ்நிலை அனுமதிக்குமானால், ஊழியத்தில் அதிக நேரம் செலவிடும்படி—ஒருவேளை முழுநேர பயனியர் ஊழியராகவும் சேவிக்க—அன்பு உங்களைத் தூண்டும். ஆனால், நீங்கள் நோயுற்று இருப்பீர்களாகில், ஊழியத்தில் செலவிடும் நேரம் நீங்கள் விரும்புவதைவிட குறைவாகவே இருக்கும். இதனால் உற்சாகமிழந்துவிடாதீர்கள். கடவுளுக்கு உண்மையுடன் இருப்பது மணிநேரத்தால் அளவிடப்படுவதில்லை. சுத்தமான உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதால் சந்தோஷத்துடன் இருக்க உங்களுக்குக் காரணம் இருக்கும். பவுல் எழுதினார்: “அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மை பாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.”—கலாத்தியர் 6:4.
17. தாலந்துகளைப் பற்றிய உவமையை உங்கள் சொந்த வார்த்தைகளில் சுருக்கமாக சொல்லுங்கள்.
17 மத்தேயு 25:14-30-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள தாலந்துகளைப்பற்றிய இயேசுவின் உவமையை சிந்தியுங்கள். தூரதேசத்துக்குப் பிரயாணம் செல்ல இருந்த ஒரு மனிதன் தன் அடிமைகளை அழைத்து அவர்களிடம் தன் உடமைகளை ஒப்படைத்தார். “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்”தார். தன் அடிமைகளிடம் கணக்குக்கேட்க அந்த எஜமான் திரும்பி வந்தபோது அவர் கண்டது என்ன? ஐந்து தாலந்தை வாங்கின அடிமை மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்திருந்தான். அதேவிதமாக, இரண்டு தாலந்தை வாங்கின அடிமை மேலும் இரண்டு தாலந்தை சம்பாதித்திருந்தான். ஒரு தாலந்தை வாங்கின அடிமையோ அதை நிலத்தில் புதைத்துப்போட்டான், எஜமானுடைய செல்வத்தை அதிகரிக்க எதையுமே செய்யவில்லை. இந்த நிலைமையைப் பற்றி எஜமானின் அபிப்பிராயம் என்ன?
18, 19. (அ) இரண்டு தாலந்துகளைப் பெற்ற அடிமையை ஐந்து தாலந்துகளைப்பெற்ற அடிமையுடன் எஜமான் ஏன் ஒப்பிடவில்லை? (ஆ) பாராட்டுவது, ஒப்பிடுவது ஆகியவற்றின் சம்பந்தமாக தாலந்துகளைப்பற்றிய உவமை நமக்கு என்ன கற்பிக்கிறது? (இ) மூன்றாவது அடிமை ஏன் சாதகமற்ற தீர்ப்பைப் பெற்றான்?
18 முதலாவதாக, ஐந்து தாலந்துகளையும் இரண்டு தாலந்துகளையும் பெற்ற அடிமைகளைக் கவனிப்போம். இந்த அடிமைகள் ஒவ்வொருவரிடமும் எஜமான் சொன்னார்: “நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே.” ஐந்து தாலந்துகளைப்பெற்ற அடிமை இரண்டு தாலந்துகளையே சம்பாதித்திருந்தால் அவனிடம் அவ்வாறு சொல்லியிருப்பாரா? மாட்டார்! மறுபட்சத்தில், இரண்டு தாலந்து சம்பாதித்தவனிடம்: ‘நீ ஏன் ஐந்து சம்பாதிக்கவில்லை? உன் உடன் அடிமை எனக்கு எவ்வளவு சம்பாதித்திருக்கிறான் என்று பார்!’ எனவும் சொல்லவில்லை. இயேசுவை அடையாளப்படுத்திய அந்த இரக்கமுள்ள எஜமான் ஒருவரோடொருவரை ஒப்பிடவில்லை. தாலந்துகளை “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக” அவர் கொடுத்தார், ஒவ்வொருவரும் கொடுக்கமுடிந்ததற்கு அதிகமாக அவர் எதிர்பார்க்கவில்லை. இரண்டு அடிமைகளும் சமமான பாராட்டுதலைப் பெற்றனர், ஏனெனில் இருவரும் தங்கள் எஜமானுக்காக முழு ஆத்துமாவோடு உழைத்தனர். இதிலிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.
19 நிச்சயமாகவே, மூன்றாவது அடிமை பாராட்டப்படவில்லை. வெளியே இருளில் அவன் தள்ளப்பட்டான். ஒரே ஒரு தாலந்தைப் பெற்றதால் ஐந்து தாலந்தை வைத்திருந்த அடிமை சம்பாதித்த அளவுக்கு அவனிடமும் எதிர்பார்க்கப்பட்டிராது. ஆனால் அவனோ முயற்சியும்கூட செய்யவில்லை! இறுதியில் அவனுக்குக் கொடுக்கப்பட்ட சாதகமற்ற தீர்ப்பு, எஜமானின் பேரில் அவனுக்கு அன்பு இல்லை என்பதைக் காட்டிக்கொடுத்த அவனுடைய ‘பொல்லாத, சோம்பலான’ இருதயநிலையின் காரணமாகவே.
20. நமக்கிருக்கும் தடைகளை யெகோவா எவ்விதம் நோக்குகிறார்?
20 யெகோவா நம் முழு பலத்தோடும் அவரில் அன்புகூரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார், இருப்பினும் “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என்பது இருதயத்தை எவ்வளவு ஊக்குவிப்பதாய் இருக்கிறது! (சங்கீதம் 103:14) “கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார்” [புள்ளிவிவரங்களை அல்ல] என்று நீதிமொழிகள் 21:2 சொல்லுகிறது. நம்மால் கட்டுப்படுத்தமுடியாத தடைகள் இருப்பின், அவை பணம், உடல், உணர்ச்சி அல்லது வேறெது சம்பந்தப்பட்டவையாயினும், அவற்றை அவர் புரிந்துகொள்கிறார். (ஏசாயா 63:9) அதேசமயத்தில், நம்மிடமுள்ள எல்லா வள ஆதாரங்களையும் முழுமையாக பயன்படுத்தும்படி அவர் எதிர்பார்க்கிறார். யெகோவா பரிபூரணமானவர், ஆனால் அவருடைய அபூரணமுள்ள வணக்கத்தாருடன் செயல்தொடர்பு கொள்கையில் அவர்களிடமிருந்து அவர் பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை. அவருடைய செயல்தொடர்புகளில் அவர் நியாயமற்றவராகவும் இல்லை, அவருடைய எதிர்பார்ப்புகளில் உண்மைநிலை அறியாதவராகவும் இல்லை.
21. கடவுளுக்கு செய்யும் நம் சேவை அன்பினால் தூண்டப்பட்டால் என்ன நல்ல விளைவுகள் ஏற்படும்?
21 யெகோவாவினிடத்தில் நம் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் அன்புகூருவது “சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப் பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது.” (மாற்கு 12:33) நாம் அன்பினால் தூண்டப்பட்டால், கடவுளுடைய சேவையில் நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வோம். அன்பு உட்பட கடவுளுடைய மற்ற குணங்களும் “உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது” என்று பேதுரு எழுதினார்.—2 பேதுரு 1:8.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
மறுபார்வையிட
◻ நாம் கடவுளுக்கு செய்யும் சேவையை இயக்குவிக்கும் சக்தி எதுவாக இருக்கவேண்டும்?
◻ யெகோவாவை சேவிக்கும்படி கிறிஸ்துவின் அன்பு எவ்விதம் நம்மை நெருக்கி ஏவுகிறது?
◻ பரிசேயரின் எந்தச் சிந்தையை நாம் தவிர்க்கவேண்டும்?
◻ மற்றொரு கிறிஸ்தவரின் சேவையுடன் நம் சேவையை ஒப்பிட்டுக்கொண்டிருப்பது ஏன் ஞானமற்றது?
[பக்கம் 16-ன் படங்கள்]
ஒவ்வொரு நபருடைய திறமைகளும், பலமும், சூழ்நிலைகளும் வித்தியாசப்படுகின்றன