மத்தேயு எழுதியது
23 பின்பு இயேசு, கூட்டத்தாரையும் தன்னுடைய சீஷர்களையும் பார்த்து, 2 “வேத அறிஞர்களும் பரிசேயர்களும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 3 அதனால், அவர்கள் உங்களுக்கு என்னவெல்லாம் சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யுங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்; ஏனென்றால், சொல்வதுபோல் அவர்கள் செய்வதில்லை.+ 4 பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர்களுடைய தோள்களில் வைக்கிறார்கள்,+ ஆனால், தங்களுடைய விரலினால்கூட அவற்றைத் தொடுவதற்கு அவர்கள் விரும்புவதில்லை.+ 5 மனுஷர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள்;+ தாங்கள் கட்டியிருக்கிற வேதாகமத் தாயத்துகளை+ அகலமாக்குகிறார்கள்; தங்களுடைய அங்கிகளின் ஓரங்களைப் பெரிதாக்குகிறார்கள்.+ 6 விருந்துகளில் மிக முக்கியமான இடங்களிலும் ஜெபக்கூடங்களில் முன்வரிசை இருக்கைகளிலும் உட்கார விரும்புகிறார்கள்.+ 7 அதோடு, சந்தைகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் சொல்ல வேண்டுமென்றும், தங்களை ரபீ என்று அழைக்க வேண்டுமென்றும் விரும்புகிறார்கள். 8 ஆனால், நீங்கள் ரபீ என்று அழைக்கப்படாதீர்கள்; ஒரே ஒருவர்தான் உங்கள் போதகர்;+ நீங்கள் எல்லாரும் சகோதரர்கள். 9 அதுமட்டுமல்ல, பூமியில் இருக்கிற யாரையும் தந்தை என்று அழைக்காதீர்கள், பரலோகத்தில் இருக்கிற ஒருவர்தான் உங்கள் தந்தை.+ 10 தலைவர் என்றும் அழைக்கப்படாதீர்கள், கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்.+ 11 உங்களில் யார் மிகவும் உயர்ந்தவராக இருக்கிறாரோ அவர் உங்களுக்குச் சேவை செய்கிறவராக இருக்க வேண்டும்.+ 12 தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்,+ தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.+
13 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! மனுஷர்கள் போக முடியாதபடி பரலோக அரசாங்கத்தின் கதவைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்களும் அதில் போவதில்லை, போக முயற்சி செய்கிறவர்களையும் போக விடுவதில்லை.+ 14 ——
15 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! ஒரு நபரை உங்கள்* மதத்துக்கு மாற்றுவதற்காகக் கடல் வழியாகவும் தரை வழியாகவும் பயணம் செய்கிறீர்கள்; ஆனால், அந்த நபர் உங்களில் ஒருவராகும்போது அவரை உங்களைவிட இரண்டு மடங்கு கெஹென்னாவுக்கு ஆளாக்குகிறீர்கள்.
16 குருட்டு வழிகாட்டிகளே,+ உங்களுக்குக் கேடுதான் வரும்! ‘ஒருவன் ஆலயத்தின் மேல் சத்தியம் செய்தால் ஒன்றுமில்லை, ஆனால் ஆலயத்தில் இருக்கிற தங்கத்தின் மேல் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறான்’+ என்று சொல்கிறீர்கள். 17 முட்டாள்களே! குருடர்களே! எது முக்கியம்? தங்கமா அல்லது அந்தத் தங்கத்தைப் புனிதமாக்கிய ஆலயமா? 18 அதோடு, ‘ஒருவன் பலிபீடத்தின் மேல் சத்தியம் செய்தால்+ ஒன்றுமில்லை, ஆனால் அதன்மேல் இருக்கிற காணிக்கையின் மேல் சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறான்’ என்று சொல்கிறீர்கள். 19 குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையா அல்லது அந்தக் காணிக்கையைப் புனிதமாக்குகிற பலிபீடமா? 20 அதனால், பலிபீடத்தின் மேல் சத்தியம் செய்கிறவன் அதன்மேலும் அதன்மேல் வைக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் மேலும் சத்தியம் செய்கிறான். 21 அதேபோல், ஆலயத்தின் மேல் சத்தியம் செய்கிறவன் அதன்மேலும் அதில் குடிகொண்டிருக்கிறவரின்+ மேலும் சத்தியம் செய்கிறான். 22 பரலோகத்தின் மேல் சத்தியம் செய்கிறவன் கடவுளுடைய சிம்மாசனத்தின் மேலும் அதில் உட்கார்ந்திருக்கிறவரின் மேலும் சத்தியம் செய்கிறான்.+
23 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! புதினாவிலும், சதகுப்பையிலும்,* சீரகத்திலும் பத்திலொரு பாகத்தைக் கொடுக்கிறீர்கள்;+ ஆனால், திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிற நியாயம்,+ இரக்கம்,+ விசுவாசம் ஆகிய மிக முக்கியமான காரியங்களை விட்டுவிட்டீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும், அவற்றையும் விட்டுவிடாமல் இருந்திருக்க வேண்டும்.+ 24 குருட்டு வழிகாட்டிகளே!+ நீங்கள் கொசுவை வடிகட்டிவிட்டு,+ ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!+
25 வெளிவேஷக்காரர்களான வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! கிண்ணத்தையும் பாத்திரத்தையும் வெளிப்புறத்தில் சுத்தம் செய்கிறீர்கள்,+ ஆனால் உட்புறத்தில் அவை பேராசையாலும்*+ கட்டுக்கடங்காத ஆசைகளாலும் நிறைந்திருக்கின்றன.+ 26 குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தையும் பாத்திரத்தையும் முதலாவது உள்ளே சுத்தம் செய், அப்போது அது வெளியிலும் சுத்தமாகும்.
27 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப்+ போல் இருக்கிறீர்கள்; அவை வெளியே அழகாகத் தெரிகின்றன, உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளாலும் எல்லா விதமான அசுத்தங்களாலும் நிறைந்திருக்கின்றன. 28 அதுபோலவே, நீங்கள் மனுஷர்களுக்கு முன்னால் நீதிமான்களாகத் தெரிகிறீர்கள், ஆனால் உங்களுக்குள்ளே போலித்தனமும் அக்கிரமமும்தான் நிறைந்திருக்கின்றன.+
29 வெளிவேஷக்காரர்களான+ வேத அறிஞர்களே, பரிசேயர்களே, உங்களுக்குக் கேடுதான் வரும்! நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.+ 30 ‘நாங்கள் எங்களுடைய முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்ய அவர்களுக்கு உடந்தையாக இருந்திருக்க மாட்டோம்’ என்று சொல்கிறீர்கள். 31 இப்படிச் சொல்வதன் மூலம் நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களுடைய பிள்ளைகள் என்று உங்களுக்கு எதிராகவே சாட்சி சொல்கிறீர்கள்.+ 32 அதனால், உங்கள் முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த காரியங்களை நீங்கள் முடித்துவிடுங்கள்.
33 பாம்புகளே, விரியன் பாம்புக் குட்டிகளே,+ கெஹென்னாவின் தண்டனையிலிருந்து நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?+ 34 இதற்காகத்தான் தீர்க்கதரிசிகளையும்+ ஞானிகளையும் போதகர்களையும்+ உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் கொலை செய்வீர்கள்,+ மரக் கம்பங்களில்* அறைவீர்கள், உங்கள் ஜெபக்கூடங்களில் முள்சாட்டையால் அடிப்பீர்கள்,+ நகரத்துக்கு நகரம் போய்த் துன்புறுத்துவீர்கள்.+ 35 இதனால், நீதிமானாகிய ஆபேலின் இரத்தம்முதல்,+ பரகியாவின் மகனும் பரிசுத்த இடத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலை செய்தவருமான சகரியாவின் இரத்தம்வரை, உலகத்தில் கொல்லப்பட்ட எல்லா நீதிமான்களுடைய கொலைப்பழிக்கும்* நீங்கள் ஆளாவீர்கள்.+ 36 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், இவையெல்லாம் இந்தத் தலைமுறைமேல் நிச்சயம் வரும்.
37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவளே, உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொன்றவளே!+ கோழி தன் குஞ்சுகளை இறக்கைகளின் கீழே கூட்டிச்சேர்ப்பதுபோல் நான் உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்க்க எத்தனையோ தடவை ஆசைப்பட்டேன்! ஆனால் மக்களே, நீங்கள் அதை விரும்பவில்லை.+ 38 இதோ! உங்கள் வீடு ஒதுக்கித்தள்ளப்பட்டு உங்களிடமே விடப்படும்.+ 39 நான் உங்களுக்குச் சொல்கிறேன், ‘யெகோவாவின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!’+ என்று நீங்கள் சொல்லும்வரை இனி ஒருபோதும் என்னைப் பார்க்க மாட்டீர்கள்” என்றார்.