எசேக்கியேல்
40 நாங்கள் சிறையிருப்பிலிருந்த 25-ஆம் வருஷம்,+ அதாவது எருசலேம் நகரம் அழிக்கப்பட்ட பின் 14-ஆம் வருஷம், முதல் மாதம், 10-ஆம் நாளில்,+ நான் யெகோவாவின் சக்தியால் நிரப்பப்பட்டேன்.* அவர் என்னை நகரத்துக்குக் கொண்டுபோனார்.+ 2 தரிசனங்கள் மூலமாக அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய் மிகவும் உயரமான ஒரு மலைமேல் நிற்க வைத்தார்.+ அங்கே தெற்குப் பக்கமாக நகரம் போன்ற ஒன்று இருந்தது.
3 அவர் என்னை அங்கே கொண்டுபோனபோது, ஒரு மனுஷரைப் பார்த்தேன். அவருடைய உடல் செம்பினால் செய்யப்பட்டதைப் போல இருந்தது.+ அவருடைய கையில் ஒரு நாரிழைக் கயிறும் ஒரு அளவுகோலும்* இருந்தன.+ அவர் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தார். 4 அவர் என்னிடம், “மனிதகுமாரனே, உற்றுப் பார், கவனமாகக் கேள், நான் காட்டுகிற எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கவனி. அதற்காகத்தான் உன்னை இங்கே கொண்டுவந்திருக்கிறேன். நீ பார்க்கிற எல்லாவற்றையும் இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல்”+ என்றார்.
5 ஆலயத்தைச் சுற்றி ஒரு மதிலைப் பார்த்தேன். அந்த மனுஷனுடைய கையில் ஆறு முழ நீளத்தில் ஒரு அளவுகோல் இருந்தது. (ஒவ்வொரு முழமும் நம்முடைய கை முழத்தைவிட நான்கு விரலளவு அதிகமானது).* அவர் அந்த மதிலை அளந்தார். அதன் அகலம் ஒரு அளவுகோலாகவும் அதன் உயரம் ஒரு அளவுகோலாகவும் இருந்தது.
6 பின்பு, அவர் கிழக்கு நுழைவாசலுக்கு+ வந்து அதன் படிக்கட்டுகளில் ஏறினார். வாசலறையை அவர் அளந்தபோது அதன் அகலம் ஒரு அளவுகோலாக இருந்தது. அடுத்த வாசலறையின் அகலமும் ஒரு அளவுகோலாக இருந்தது. 7 காவல் அறைகள் ஒவ்வொன்றும் ஒரு அளவுகோல் நீளமாகவும் ஒரு அளவுகோல் அகலமாகவும் இருந்தன. ஒரு காவல் அறைக்கும் இன்னொரு காவல் அறைக்கும் ஐந்து முழ இடைவெளி இருந்தது.+ உள்பக்க நுழைவு மண்டபத்தின் பக்கத்திலுள்ள வாசலறை ஒரு அளவுகோலாக இருந்தது.
8 உள்பக்க நுழைவு மண்டபத்தை அவர் அளந்தார். அது ஒரு அளவுகோலாக இருந்தது. 9 பின்பு, நுழைவு மண்டபத்தை அளந்தார். அது எட்டு முழமாக இருந்தது. அதன் சதுரத் தூண்களை அளந்தார். அவை இரண்டு முழமாக இருந்தன. நுழைவு மண்டபம் உள்பக்கத்தைப் பார்த்தபடி இருந்தது.
10 கிழக்கு வாசலின் இரண்டு பக்கங்களிலும் மும்மூன்று காவல் அறைகள் இருந்தன. அவை ஒரே அளவில் இருந்தன. இரண்டு பக்கங்களில் இருந்த சதுரத் தூண்களும் ஒரே அளவில் இருந்தன.
11 பின்பு அவர் நுழைவாசலின் அகலத்தை அளந்தார். அது 10 முழமாக இருந்தது. வாசலின் நீளம் 13 முழமாக இருந்தது.
12 இரண்டு பக்கங்களிலும் இருந்த காவல் அறைகளுக்கு முன்னால் கூண்டுபோல் ஒரு பகுதி இருந்தது. அது ஒரு முழமாக இருந்தது. இரண்டு பக்கங்களிலும் இருந்த காவல் அறைகள் ஒவ்வொன்றும் ஆறு முழமாக இருந்தது.
13 பின்பு, வாசலின் அகலத்தை அளந்தார். அது, ஒரு காவல் அறையின் கூரையிலிருந்து* இன்னொரு காவல் அறையின் கூரைவரையாக 25 முழ அகலமாக இருந்தது. ஒரு நுழைவாசல் இன்னொரு நுழைவாசலைப் பார்த்தபடி இருந்தது.+ 14 பின்பு, அவர் சதுரத் தூண்களை அளந்தார். அவை 60 முழ உயரமாக இருந்தன. பிரகாரத்தைச் சுற்றிலும் இருந்த வாசல்களின் சதுரத் தூண்களையும் அளந்தார். 15 நுழைவாசலின் முன்பக்கத்திலிருந்து உள்பக்க நுழைவு மண்டபத்தின் முன்பக்கம்வரை 50 முழமாக இருந்தது.
16 காவல் அறைகளிலும், வாசல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களிலும் குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்கள் இருந்தன.+ நுழைவு மண்டபங்களுடைய உட்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் இருந்தன. சதுரத் தூண்களில் பேரீச்ச மரத்தின் உருவங்கள் இருந்தன.+
17 பின்பு, அவர் என்னை வெளிப்பிரகாரத்துக்குக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே சாப்பாட்டு அறைகள் இருந்தன.+ பிரகாரத்தைச் சுற்றிலும் ஒரு தளம் இருந்தது. அந்தத் தளத்தில் 30 சாப்பாட்டு அறைகள் இருந்தன. 18 வாசல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த தளத்தின் நீளம் அந்த வாசல்களின் நீளத்தைப் போலவே இருந்தது. இதுதான் தாழ்வான தளம்.
19 பின்பு, கீழ்வாசலின் முன்பக்கத்திலிருந்து உட்பிரகாரத்தின் வாசல்வரை இருந்த சுற்றளவை அவர் அளந்தார். அது கிழக்கிலும் வடக்கிலும் 100 முழமாக இருந்தது.
20 வெளிப்பிரகாரத்தில் வடக்கே பார்த்தபடி ஒரு வாசல் இருந்தது. அவர் அதன் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார். 21 அதன் இரண்டு பக்கங்களிலும் மும்மூன்று காவல் அறைகள் இருந்தன. அதன் சதுரத் தூண்களும் நுழைவு மண்டபமும் முதல் வாசலின் அளவுப்படியே இருந்தன. அது 50 முழ நீளமும் 25 முழ அகலமுமாக இருந்தது. 22 அதன் ஜன்னல்களும், நுழைவு மண்டபமும், பேரீச்ச மர உருவங்களும்+ கிழக்கு வாசலில் இருந்த அளவுப்படியே இருந்தன. ஜனங்கள் ஏறிப்போவதற்காக அதற்கு ஏழு படிக்கட்டுகள் இருந்தன. அவற்றுக்கு முன்னால் நுழைவு மண்டபம் இருந்தது.
23 உட்பிரகாரத்திலே வடக்கு வாசலுக்கு எதிரில் ஒரு வாசலும், கிழக்கு வாசலுக்கு எதிரில் இன்னொரு வாசலும் இருந்தன. ஒரு வாசலிலிருந்து இன்னொரு வாசல்வரை அவர் அளந்தார். அது 100 முழமாக இருந்தது.
24 பின்பு, அவர் என்னைத் தெற்குப் பக்கமாகக் கொண்டுபோனார். தெற்கில் நான் ஒரு வாசலைப் பார்த்தேன்.+ அதன் சதுரத் தூண்களையும், நுழைவு மண்டபத்தையும் அவர் அளந்தார். அவை மற்றவற்றின் அளவுப்படியே இருந்தன. 25 அதன் இரண்டு பக்கங்களிலும், அதன் நுழைவு மண்டபத்திலும் இருந்த ஜன்னல்கள் மற்ற ஜன்னல்களைப் போலவே இருந்தன. அது 50 முழ நீளமும் 25 முழ அகலமுமாக இருந்தது. 26 அதற்கு ஏழு படிக்கட்டுகள் இருந்தன.+ அவற்றுக்கு முன்னால் நுழைவு மண்டபம் இருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் ஒவ்வொரு சதுரத் தூண் இருந்தது. அந்தத் தூண்களில் பேரீச்ச மர உருவங்கள் இருந்தன.
27 உட்பிரகாரத்தில் தெற்கைப் பார்த்தபடி ஒரு வாசல் இருந்தது. தெற்குப் பக்கமாக ஒரு வாசலிலிருந்து இன்னொரு வாசல்வரை அவர் அளந்தார். அது 100 முழமாக இருந்தது. 28 பின்பு, அவர் என்னைத் தெற்கு வாசல் வழியாக உட்பிரகாரத்துக்குக் கொண்டுவந்தார். தெற்கு வாசலை அவர் அளந்தபோது அது மற்ற வாசல்களின் அளவுப்படியே இருந்தது. 29 அதன் காவல் அறைகளும், சதுரத் தூண்களும், நுழைவு மண்டபமும் மற்றவற்றின் அளவுப்படியே இருந்தன. அதன் இரண்டு பக்கங்களிலும் அதன் நுழைவு மண்டபத்திலும் ஜன்னல்கள் இருந்தன. அது 50 முழ நீளமும் 25 முழ அகலமுமாக இருந்தது.+ 30 உட்பிரகார வாசல்கள் எல்லாவற்றுக்குமே நுழைவு மண்டபங்கள் இருந்தன. அவை 25 முழ நீளமும் 5 முழ அகலமுமாக இருந்தன. 31 அதன் நுழைவு மண்டபம் வெளிப்பிரகாரத்தைப் பார்த்தபடி இருந்தது. அதன் சதுரத் தூண்களில் பேரீச்ச மர உருவங்கள் இருந்தன.+ அதற்கு எட்டுப் படிக்கட்டுகள் இருந்தன.+
32 அவர் என்னைக் கிழக்கிலிருந்து உட்பிரகாரத்துக்குக் கொண்டுபோனார். அந்த வாசலை அவர் அளந்தபோது அது மற்ற வாசல்களின் அளவுப்படியே இருந்தது. 33 அதன் காவல் அறைகளும், சதுரத் தூண்களும், நுழைவு மண்டபமும் மற்றவற்றின் அளவுப்படியே இருந்தன. அதன் இரண்டு பக்கங்களிலும் அதன் நுழைவு மண்டபத்திலும் ஜன்னல்கள் இருந்தன. அது 50 முழ நீளமும் 25 முழ அகலமுமாக இருந்தது. 34 அதன் நுழைவு மண்டபம் வெளிப்பிரகாரத்தைப் பார்த்தபடி இருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களில் பேரீச்ச மர உருவங்கள் இருந்தன. அதற்கு எட்டுப் படிக்கட்டுகள் இருந்தன.
35 பின்பு, அவர் என்னை வடக்கு வாசலுக்குக் கொண்டுபோய்+ அதை அளந்தார். அது மற்ற வாசல்களின் அளவுப்படியே இருந்தது. 36 அதன் காவல் அறைகளும், சதுரத் தூண்களும், நுழைவு மண்டபமும் மற்றவற்றின் அளவுப்படியே இருந்தன. அதன் இரண்டு பக்கங்களிலும் அதன் நுழைவு மண்டபத்திலும் ஜன்னல்கள் இருந்தன. அது 50 முழ நீளமும் 25 முழ அகலமுமாக இருந்தது. 37 அதன் சதுரத் தூண்கள் வெளிப்பிரகாரத்தைப் பார்த்தபடி இருந்தன. அதன் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களில் பேரீச்ச மர உருவங்கள் இருந்தன. அதற்கு எட்டுப் படிக்கட்டுகள் இருந்தன.
38 வாசல்களின் சதுரத் தூண்களுக்குப் பக்கத்தில் ஒரு சாப்பாட்டு அறை இருந்தது. அதற்கு ஒரு நுழைவாசல் இருந்தது. தகன பலிகள் அந்த அறையில்தான் கழுவப்பட்டன.+
39 தகன பலிகளும்+ பாவப் பரிகாரப் பலிகளும்+ குற்றநிவாரண பலிகளும்+ செலுத்துவதற்காக நுழைவு மண்டபத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு மேஜைகள் இருந்தன. 40 வடக்கு வாசலுக்கு வெளியே, படிக்கட்டுகளின் இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு மேஜைகள் இருந்தன. நுழைவு மண்டபத்தின் இன்னொரு பக்கத்திலும் இரண்டு மேஜைகள் இருந்தன. 41 வாசலின் ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு மேஜைகள் என மொத்தம் எட்டு மேஜைகள் இருந்தன. பலிக்கான மிருகங்கள் அவற்றின் மேல் வெட்டப்பட்டன. 42 தகன பலிக்கான நான்கு மேஜைகள் கல்லினால் செய்யப்பட்டிருந்தன. அவை ஒன்றரை முழ நீளமாகவும், ஒன்றரை முழ அகலமாகவும், ஒரு முழ உயரமாகவும் இருந்தன. தகன பலிகளுக்காகவும் மற்ற பலிகளுக்காகவும் கொண்டுவரப்பட்ட மிருகங்களை வெட்டுவதற்கு அவற்றின் மேல் கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. 43 உள்பக்க சுவர்களைச் சுற்றிலும் நான்கு விரலளவு அகலமுள்ள அலமாரிகள் வைக்கப்பட்டிருந்தன. காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பலிகளின் இறைச்சி மேஜைகளின் மேல் வைக்கப்பட்டது.
44 உள்வாசலுக்கு வெளியே பாடகர்களுக்கான சாப்பாட்டு அறைகள் இருந்தன.+ அவை உட்பிரகாரத்தின் வடக்கு வாசலுக்குப் பக்கத்தில் தெற்கே பார்த்தபடி இருந்தன. இன்னொரு சாப்பாட்டு அறை கிழக்கு வாசலுக்குப் பக்கத்தில் வடக்கே பார்த்தபடி இருந்தது.
45 அவர் என்னிடம், “தெற்கே பார்த்தபடி இருக்கிற சாப்பாட்டு அறை ஆலய வேலைகளைச் செய்யும் குருமார்களுடையது.+ 46 வடக்கே பார்த்தபடி இருக்கிற சாப்பாட்டு அறை பலிபீட வேலைகளைச் செய்யும் குருமார்களுடையது.+ அவர்கள் சாதோக்கின் வம்சத்தார்;+ யெகோவாவின் சன்னிதியில் சேவை செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட லேவியர்கள்”+ என்றார்.
47 பின்பு, அவர் உட்பிரகாரத்தை அளந்தார். அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் 100 முழமாகவும் அகலம் 100 முழமாகவும் இருந்தது. பலிபீடம் ஆலயத்தின் முன்னால் இருந்தது.
48 பின்பு, அவர் என்னை நுழைவு மண்டபத்துக்குக்+ கொண்டுபோனார். அங்கே வலது பக்கத்தில் இருந்த தூணையும் இடது பக்கத்தில் இருந்த தூணையும் அளந்தார். ஒவ்வொரு தூணின் அகலமும் ஒரு பக்கத்தில் ஐந்து முழமாகவும் இன்னொரு பக்கத்தில் மூன்று முழமாகவும் இருந்தது.
49 நுழைவு மண்டபத்தின் நீளம் 20 முழமாகவும் அகலம் 11* முழமாகவும் இருந்தது. ஜனங்கள் ஏறிப்போவதற்காக அதற்குப் படிக்கட்டுகள் இருந்தன. அதன் வலது சுவருக்குப் பக்கத்தில் ஒரு தூணும் இடது சுவருக்குப் பக்கத்தில் ஒரு தூணும் இருந்தது.+