‘பலங்கொண்டு தைரியமாயிருங்கள்!’
“தைரியமாயிருங்கள், நான் உலகத்தை ஜெயித்தேன்.”—யோவான் 16:33, NW.
1. கானானில் இஸ்ரவேலர் வலிமையான எதிரிகளை எதிர்ப்படவிருந்ததால் அவர்கள் என்ன ஊக்கமூட்டும் வார்த்தைகளைப் பெற்றனர்?
இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கால்வைக்க யோர்தான் நதியை கடப்பதற்கு ஆயத்தமாக இருந்த சமயம் அது. அப்போது அவர்களிடம், “நீங்கள் பலங்கொண்டு தைரியமாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உங்கள் தேவனாகிய யெகோவா உங்களோடுகூட வருகிறார்” என்று மோசே சொன்னார். அதற்குப் பின்பு, இஸ்ரவேலரை கானானுக்கு வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த யோசுவாவை மோசே அழைத்து, தைரியமாக இருக்கும்படி மீண்டும் தனிப்பட்ட விதமாக அவருக்கு ஆலோசனை கொடுத்தார். (உபாகமம் 31:6, 7, NW) பிற்பாடு, “பலங்கொண்டு தைரியமாயிரு . . . மிகவும் பலங்கொண்டு தைரியமாயிரு” என யெகோவாவும்கூட யோசுவாவை ஊக்குவித்தார். (யோசுவா 1:6, 7, 9, NW) அவை சூழ்நிலைக்கு ஏற்ற வார்த்தைகள், ஏனெனில் யோர்தானுக்கு அப்புறத்தில் வசித்த வலிமையான எதிரிகளை எதிர்த்து நிற்க இஸ்ரவேலருக்கு தைரியம் தேவைப்படும்.
2. இன்று நம்முடைய சூழ்நிலை என்ன, நமக்கு என்ன தேவைப்படுகிறது?
2 இன்றும், உண்மை கிறிஸ்தவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் விரைவில் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள்; ஆகவே, யோசுவாவைப் போல அவர்களும் தைரியமாக இருப்பது அவசியம். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 7:14) என்றாலும், யோசுவாவின் சூழ்நிலை வேறு, நம்முடைய சூழ்நிலை வேறு. யோசுவா பட்டயங்களோடும் ஈட்டிகளோடும் போரிட்டார். நாமோ இதுபோன்ற சொல்லர்த்தமான போராயுதங்களை பயன்படுத்துவதில்லை, ஏனெனில் நாம் ஆவிக்குரிய போரில் ஈடுபட்டிருக்கிறோம். (ஏசாயா 2:2-4; எபேசியர் 6:11-17) அது மட்டுமல்ல, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்த பின்பும்கூட யோசுவா பயங்கரமான யுத்தங்களில் ஈடுபட வேண்டியிருந்தது. ஆனால் நாமோ புதிய உலகில் காலெடுத்து வைப்பதற்கு முன்பு, அதாவது இப்போதே கடுமையான போராட்டங்களை எதிர்ப்படுகிறோம். ஆகையால், நமக்கு தைரியம் தேவைப்படுகிற சூழ்நிலைகள் சிலவற்றை இப்போது கலந்தாராயலாம்.
நாம் ஏன் போராட வேண்டியுள்ளது?
3. நம்முடைய முதல் எதிரியைப் பற்றி பைபிள் என்ன தெரியப்படுத்துகிறது?
3 “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்” என அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். (1 யோவான் 5:19) விசுவாசத்தைக் காத்துக்கொள்ள கிறிஸ்தவர்கள் ஏன் போராட வேண்டும் என்பதற்கு இந்த வார்த்தைகள் ஓர் அடிப்படை காரணத்தை அளிக்கின்றன. கிறிஸ்தவர் ஒருவர் தன் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் போது, அது பிசாசாகிய சாத்தானுக்கு ஓரளவு தோல்வியைக் குறிக்கிறது. ஆகவேதான், உண்மை கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி விழுங்குவதற்காக “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்” சாத்தான் சுற்றித் திரிகிறான். (1 பேதுரு 5:8) முக்கியமாக, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களோடும் அவர்களுடைய கூட்டாளிகளோடும் யுத்தம் செய்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) தெரிந்தோ தெரியாமலோ பிசாசின் கையாட்களாக இருப்பவர்களை இந்தப் போருக்காக பயன்படுத்துகிறான். ஆகவே, சாத்தானுக்கும் அவனுடைய அடியாட்களுக்கும் எதிராக உறுதியுடன் நிலைத்திருக்க நமக்கு அதிக தைரியம் தேவை.
4. இயேசு என்ன எச்சரிப்பை கொடுத்தார், ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் என்ன பண்பை காட்டியிருக்கிறார்கள்?
4 சாத்தானும் அவனது ஆட்களும் நற்செய்தியை எதிர்த்துக் கொண்டேதான் இருப்பார்கள் என்பதை இயேசு அறிந்திருந்தார். அதனால்தான், “உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலை செய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்” என அவர் தம் சீஷர்களை எச்சரித்தார். (மத்தேயு 24:9) முதல் நூற்றாண்டில் அந்த வார்த்தைகள் நிஜமாயின, அவை இன்றைய காலத்துக்கும் பொருந்துகின்றன. சொல்லப்போனால், நவீன கால யெகோவாவின் சாட்சிகளில் சிலர் எதிர்ப்பட்டிருக்கிற துன்புறுத்துதலைப் பார்த்தால் சரித்திரத்தில் இதுவரை இப்படியொரு கொடூரமான துன்புறுத்துதலை யாருமே எதிர்ப்பட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், உண்மை கிறிஸ்தவர்கள் அப்படிப்பட்ட கஷ்டங்களின் மத்தியிலும் தைரியத்துடன் பிரகாசிக்கிறார்கள். “மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்” என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பதால் அந்தக் கண்ணிக்குள் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை.—நீதிமொழிகள் 29:25.
5, 6. (அ) எந்தெந்த சூழ்நிலைகளில் நமக்கு தைரியம் தேவைப்படுகிறது? (ஆ) உண்மை கிறிஸ்தவர்களின் தைரியம் பரீட்சிக்கப்படுகையில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்?
5 துன்புறுத்துதல் தவிர வேறு பல போராட்டங்களும் உண்டு, அவற்றை சந்திப்பதற்கும் தைரியம் தேவை. சில பிரஸ்தாபிகள் முன்பின் தெரியாதவர்களிடம் நற்செய்தியைப் பற்றின பேச்சை எடுப்பதற்கே பயந்து நடுங்குகிறார்கள். பள்ளிக்குச் செல்லும் சில பிள்ளைகள் நாட்டுக்கு அல்லது கொடிக்கு பற்றுறுதி காட்டும் உறுதிமொழியை எடுக்கும் கட்டாயத்தில் இருக்கும்போது அவர்களுடைய தைரியம் பரீட்சிக்கப்படுகிறது. அத்தகைய உறுதிமொழி உண்மையில் மத உணர்வை தெரிவிப்பதாக இருப்பதால், கிறிஸ்தவ பிள்ளைகள் கடவுளை பிரியப்படுத்தவே தைரியமாக தீர்மானித்திருக்கிறார்கள்; அவர்களுடைய இந்த சிறந்த போக்கு மனதை நெகிழ வைத்திருக்கிறது.
6 விரோதிகள் கடவுளுடைய ஊழியர்களைப் பற்றி மோசமான அறிக்கைகளை பரப்ப மீடியாவை பயன்படுத்தும் போதும் சரி, ‘தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்க’ வகைதேடி மெய் வணக்கத்திற்கு அணைபோட முயலும் போதும் சரி, நமக்கு தைரியம் தேவை. (சங்கீதம் 94:20) உதாரணமாக, யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தவறான விஷயங்கள் அல்லது அப்பட்டமான பொய்கள் செய்தித்தாளிலோ ரேடியோவிலோ அல்லது டிவியிலோ வெளிவரும்போது நாம் எப்படி உணர வேண்டும்? அதிர்ச்சியடைய வேண்டுமா? வேண்டியதில்லை. அப்படிப்பட்ட காரியங்களை நாம் எதிர்பார்க்கிறோம். (சங்கீதம் 109:2) பொய் புரட்டுகளைப் பற்றிய அறிக்கைகளை சிலர் நம்புகிறார்கள், அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை; ஏனெனில், “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்.” (நீதிமொழிகள் 14:15) ஆனால், உண்மை கிறிஸ்தவர்களோ தங்கள் சகோதரர்களைப் பற்றி சொல்லப்படும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக நம்பி விடுவதில்லை. தவறான அறிவிப்புகளுக்கு பயந்து, கிறிஸ்தவ கூட்டங்களை தவறவிடுவதில்லை, வெளி ஊழியத்தை குறைத்துக்கொள்வதில்லை, தங்கள் விசுவாசத்தில் ஆட்டம் காண்பதுமில்லை. மாறாக, அவர்கள் தங்களை ‘தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறார்கள். . . . கனத்திலும் கனவீனத்திலும், தவறான அறிக்கையிலும் நல்ல அறிக்கையிலும், [எதிர்க்கிறவர்களுக்கு] ஏமாற்றுகிறவர்களாக தோன்றினாலும் [உண்மையில்] அவர்கள் நிஜஸ்தர்களே.’—2 கொரிந்தியர் 6:4, 8, NW.
7. நம்மையே சோதித்துப் பார்க்க என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
7 தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதுகையில், ‘தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமுள்ள ஆவியை கொடுத்திருக்கிறார். ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக் குறித்து வெட்கப்பட வேண்டாம்’ என்று சொன்னார். (2 தீமோத்தேயு 1:7, 8; மாற்கு 8:38) இந்த வசனங்களை வாசிக்கும்போது நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய நம்பிக்கைகளைக் குறித்துப் பேச நான் வெட்கப்படுகிறேனா, அல்லது தைரியமாக சொல்கிறேனா? வேலை பார்க்கும் இடத்தில் (அல்லது பள்ளியில்) நான் ஒரு யெகோவாவின் சாட்சி என்று சொல்லிக் கொள்கிறேனா, அல்லது உண்மையைச் சொல்ல தயங்குகிறேனா? மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருக்க வெட்கப்படுகிறேனா, அல்லது யெகோவாவுடன் கொண்டுள்ள உறவின் காரணமாக வித்தியாசமாக இருப்பதில் பெருமைப்படுகிறேனா?’ நம்மில் யாரேனும் நற்செய்தியை பிரசங்கிக்க பயந்தாலோ வித்தியாசமான நிலைநிற்கையை எடுக்க தயங்கினாலோ “பலங்கொண்டு தைரியமாயிரு” என யோசுவாவுக்கு யெகோவா கொடுத்த புத்திமதியை நினைவில் கொள்ள வேண்டும். நம்முடன் வேலை செய்பவர்கள் அல்லது பள்ளித் தோழர்களுடைய நோக்குநிலை முக்கியம் அல்ல, ஆனால் யெகோவா மற்றும் இயேசு கிறிஸ்துவின் நோக்குநிலையே முக்கியம் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.—கலாத்தியர் 1:10.
தைரியத்தை வளர்ப்பது எப்படி
8, 9. (அ) ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் தைரியம் ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி பரீட்சிக்கப்பட்டது? (ஆ) பயமுறுத்துதல்களுக்கு பேதுருவும் யோவானும் எப்படி பிரதிபலித்தார்கள், அவர்களும் அவர்களுடைய சகோதரர்களும் எதைப் பெற்றார்கள்?
8 இந்தக் கடினமான காலங்களில் உத்தமத்தை காத்துக் கொள்வதற்கு தேவையான தைரியத்தை நாம் எப்படி வளர்க்கலாம்? ஆரம்பகால கிறிஸ்தவர்கள் தைரியத்தை எப்படி வளர்த்தார்கள்? எருசலேமிலுள்ள பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் இயேசுவின் நாமத்தில் பிரசங்கிக்கக் கூடாது என பேதுருவிடமும் யோவானிடமும் சொன்னபோது என்ன நடந்தது என்பதை கவனியுங்கள். சீஷர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது அவர்களை பயமுறுத்தின பிறகு விடுதலை செய்தார்கள். உடனடியாக, அவர்கள் தங்கள் சகோதரர்களுடன் மீண்டும் ஒன்று சேர்ந்து, ஒருமனப்பட்டு ஜெபம் செய்து, “கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, . . . உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி . . . அநுக்கிரகஞ் செய்தருளும்” என்றார்கள். (அப்போஸ்தலர் 4:13-30) அந்த ஜெபத்திற்கு இசைவாக, யெகோவா தமது பரிசுத்த ஆவியால் அவர்களை பலப்படுத்தினார்; யூத தலைவர்கள் பிற்பாடு சொன்னது போல அவர்கள் ‘எருசலேமை தங்கள் போதகத்தினால் நிரப்பினார்கள்.’—அப்போஸ்தலர் 5:28.
9 அந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். சீஷர்களை யூத தலைவர்கள் பயமுறுத்திய போது அவர்கள் பிரசங்கிப்பதை நிறுத்திவிட நினைக்கவில்லை. மாறாக, தொடர்ந்து பிரசங்கிக்க தைரியத்திற்காக ஜெபம் செய்தார்கள். பிறகு தாங்கள் செய்த ஜெபத்திற்கு இசைவாக முயற்சி எடுத்தார்கள்; யெகோவாவும் தம் ஆவியால் அவர்களை பலப்படுத்தினார். சில வருடங்களுக்கு பின், “எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” என பவுல் ஒரு சமயத்தில் எழுதினார். இன்று துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கும் இது பொருந்துகிறது என்பதை சீஷர்களுடைய அனுபவம் காட்டுகிறது.—பிலிப்பியர் 4:13, பொது மொழிபெயர்ப்பு.
10. இயல்பாகவே கூச்ச சுபாவமுடையோருக்கு எரேமியாவின் அனுபவம் எப்படி உதவுகிறது?
10 ஒருவேளை இயல்பாகவே கூச்ச சுபாவம் உள்ளவராக ஒருவர் இருந்தால்? எதிர்ப்பின் மத்தியிலும் அவரால் தைரியமாக யெகோவாவை சேவிக்க முடியுமா? நிச்சயமாகவே முடியும்! எரேமியாவை தீர்க்கதரிசியாக யெகோவா நியமித்த போது அவர் என்ன சொன்னார் என்பதை நினைவுகூருங்கள். வாலிபராக இருந்த அவர், “சிறு பிள்ளையாயிருக்கிறேன்” என்று சொன்னார். அவர் தகுதியற்றவராக உணர்ந்தார் என்பது அவருடைய பதிலிலிருந்தே தெரிகிறது. இருந்தாலும், “நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. நீ அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று கூறி யெகோவா அவரை உற்சாகப்படுத்தினார். (எரேமியா 1:6-10) எரேமியாவுக்கு யெகோவா மீது உறுதியான நம்பிக்கை இருந்தது; அதனால் யெகோவா அருளிய பலத்தால் அவர் தனக்கிருந்த கூச்சத்தை மேற்கொண்டு, இஸ்ரவேலில் தைரியத்திற்குப் பேர்பெற்ற ஒரு சாட்சியானார்.
11. எரேமியாவைப் போல் தைரியமாக இருப்பதற்கு இன்று கிறிஸ்தவர்களுக்கு எது உதவுகிறது?
11 எரேமியா செய்த வேலைக்கு ஒத்த வேலை இன்று அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது. இதை ‘வேறே ஆடுகளை’ சேர்ந்த ‘திரள் கூட்டத்தாரின்’ ஆதரவோடு அவர்கள் செய்கிறார்கள், ஜனங்களின் அசட்டை மனப்பான்மை, கேலி, துன்புறுத்துதல் ஆகியவற்றின் மத்தியிலும் அவர்கள் தொடர்ந்து யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய செய்தியை அறிவிக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9; யோவான் 10:16) “பயப்பட வேண்டாம்” என எரேமியாவுக்கு யெகோவா சொன்ன வார்த்தைகள் இவர்களுக்கும் உற்சாகத்தை அளிக்கின்றன. இந்த வேலையை யெகோவா தாமே கொடுத்திருக்கிறார் என்பதை நினைவில் வைத்து அவருடைய செய்தியை பிரசங்கிக்கிறார்கள்.—2 கொரிந்தியர் 2:17.
நாம் பின்பற்றுவதற்கு தைரியமுள்ள முன்மாதிரிகள்
12. தைரியத்திற்கு இயேசு வைத்த சிறந்த மாதிரி என்ன, தம் சீஷர்களை அவர் எப்படி உற்சாகப்படுத்தினார்?
12 எரேமியாவைப் போல் தைரியமாக செயல்பட்ட சிலருடைய முன்மாதிரிகளை தியானித்தால்தான் நாம் தைரியத்தை வளர்ப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றிபெறும். (சங்கீதம் 77:12) உதாரணமாக, இயேசுவின் ஊழிய காலத்தை ஆராய்கையில், சாத்தான் அவரை சோதித்த போதும், யூத தலைவர்கள் அவரை கடுமையாக எதிர்த்த போதும் அவர் காட்டிய துணிவைக் கண்டு நாம் அசந்து போகிறோம். (லூக்கா 4:1-13; 20:19-47) யெகோவா அருளின பலத்தால் இயேசு தம் நம்பிக்கையில் தடுமாறவில்லை; தம்முடைய மரணத்திற்கு சற்று முன்பு, “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள் [“தைரியமாயிருங்கள்,” NW]; நான் உலகத்தை ஜெயித்தேன்” என்று சீஷர்களிடம் சொன்னார். (யோவான் 16:33; 17:16) இயேசுவின் மாதிரியை சீஷர்கள் பின்பற்றினால், அவர்களும்கூட இவ்வுலகை ஜெயிக்க முடியும். (1 யோவான் 2:6; வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 26) ஆனால் அவர்கள் ‘தைரியமாயிருப்பது’ அவசியம்.
13. பிலிப்பியர்களுக்கு பவுல் என்ன உற்சாகமூட்டுதலை அளித்தார்?
13 இயேசு மரித்து சில வருடங்களுக்குப் பின்பு, பிலிப்பியில் பவுலும் சீலாவும் காவலில் போடப்பட்டனர். பிற்பாடு பவுல், பிலிப்பிய சபையார் ‘ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கும்படி’ உற்சாகப்படுத்தினார். இந்த முயற்சியில் அவர்களை பலப்படுத்துவதற்காக பவுல் இவ்வாறு கூறினார்: கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவது “[துன்புறுத்துகிறவர்கள்] கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.”—பிலிப்பியர் 1:27-29.
14. பவுலின் தைரியம் ரோமிலிருந்த சகோதரர்களை எப்படி உந்துவித்தது?
14 பிலிப்பி சபைக்கு பவுல் இதை எழுதுகையில் ரோமில் மீண்டும் காவலில் போடப்பட்டிருந்தார். ஆனாலும், அவர் தொடர்ந்து தைரியமாக மற்றவர்களுக்கு பிரசங்கித்தார். அதன் விளைவு என்ன? அவர் இவ்வாறு எழுதினார்: “அரமனையெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.”—பிலிப்பியர் 1:13, 14.
15. தைரியமாக இருப்பதற்கான தீர்மானத்தை பலப்படுத்த உதவும் விசுவாசத்தின் சிறந்த முன்மாதிரிகளாக திகழ்ந்தவர்களைப் பற்றி எங்கே பார்க்கலாம்?
15 பவுலின் முன்மாதிரி நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது. நவீன நாளைய கிறிஸ்தவர்களின் சிறந்த மாதிரியும் அதேவிதமாக நமக்கு உற்சாகத்தை அளிக்கிறது; சர்வாதிகார அல்லது குருவர்க்கத்தினரின் ஆட்சியில் துன்புறுத்துதலை சகித்திருக்கிறார்கள். இவர்களில் அநேகருடைய வாழ்க்கை சரிதைகள் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளிலும் யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன. அந்தப் பதிவுகளை நீங்கள் வாசிக்கையில், அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்கள் நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களே என்பதை நினைவில் கொள்ளுங்கள்; ஆனால், மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்ப்பட்ட போது யெகோவா அவர்களுக்கு இயல்புக்கு அப்பாற்பட்ட வல்லமையை அருளியதால் அவர்களால் சகித்திருக்க முடிந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவர் நமக்கும் சக்தி கொடுப்பார் என உறுதியாக இருக்கலாம்.
தைரியமான நிலைநிற்கை யெகோவாவைப் பிரியப்படுத்துகிறது, கனப்படுத்துகிறது
16, 17. இன்று நாம் தைரியத்தை எப்படி வளர்க்கலாம்?
16 உள்ளூர பயம் இருந்தாலும் சத்தியத்தின் சார்பாகவும் நீதியின் சார்பாகவும் நிலைநிற்கை எடுக்கும் ஒரு கிறிஸ்தவர் அதிக தைரியமுள்ளவர்தான். கிறிஸ்தவர்கள் அனைவரும் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தைரியமுள்ளவர்களாக இருக்கலாம். எப்படியெனில், யெகோவாவின் சித்தத்தை செய்வதற்கு உண்மையான விருப்பமிருந்தால், விசுவாசத்தில் நிலைத்திருக்க திடத்தீர்மானமாக இருந்தால், கடவுளையே சார்ந்திருந்தால், தன்னைப் போன்ற பலரை கடந்த காலத்தில் யெகோவா பலப்படுத்தியிருக்கிறார் என்பதை நினைவில் கொண்டால் அவர் தைரியமுள்ளவராய் இருக்கலாம். அதுமட்டுமல்ல, நமது தைரியமான நிலைநிற்கை யெகோவாவை பிரியப்படுத்துகிறது, கனப்படுத்துகிறது என்பதை புரிந்து கொள்ளும்போது நாம் இன்னும் திடத்தீர்மானமாய் இருக்க முடிகிறது. அவரை நாம் மிகவும் நேசிப்பதால், ஏளனத்தையும் மோசமாக நடத்தப்படுவதையும் சகிக்க தயாராக இருக்கிறோம்.—1 யோவான் 2:5; 4:18.
17 ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது, அதாவது விசுவாசத்தின் நிமித்தம் துன்பப்படும் போது, நாம் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று நினைத்துவிடக் கூடாது. (1 பேதுரு 3:17) நாம் யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிப்பதாலும், நல்லதையே செய்வதாலும், உலகத்தின் பாகமாக இல்லாதிருப்பதாலுமே துன்பம் வருகிறது. இதன் சம்பந்தமாக, அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் நன்மை செய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.” பேதுரு இவ்விதமாகவும்கூட சொன்னார்: “தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.” (1 பேதுரு 2:20; 4:19) ஆம், நம் விசுவாசம் அன்புள்ள கடவுளாகிய யெகோவாவை பிரியப்படுத்துகிறது, அவருக்கு கனத்தையும் சேர்க்கிறது. தைரியமாயிருப்பதற்கு எத்தகைய வலிமையான காரணம்!
அதிகாரிகளிடம் பேசுதல்
18, 19. ஒரு நீதிபதிக்கு முன்னால் தைரியமாக நிலைநிற்பதன் மூலம் நாம் உண்மையில் என்ன செய்தியை தெரிவிக்கிறோம்?
18 தம் சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்று இயேசு அவர்களிடம் சொன்னார். அதோடு, “[மனுஷர்] உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்” என்றும் இயேசு அவர்களிடம் சொன்னார். (மத்தேயு 10:17, 18) பொய் குற்றச்சாட்டுகளின் காரணமாக ஒரு நீதிபதிக்கு அல்லது ஆட்சியாளருக்கு முன் ஆஜராக வேண்டுமெனில் அதற்கு தைரியம் வேண்டும். இருந்தாலும், அத்தகைய சந்தர்ப்பங்களில் தைரியமாக சாட்சி கொடுக்கும் போது, அந்தக் கஷ்டமான சூழ்நிலையையும் சாதகமாக பயன்படுத்தி ஒரு முக்கியமான காரியத்தை நம்மால் சாதிக்க முடிகிறது. நம்மை கேள்வி கேட்டு விசாரிப்போரிடம் இரண்டாம் சங்கீதத்திலுள்ள யெகோவாவின் வார்த்தைகளை நாம் தெரிவிக்கிறோம். “இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்” என அது சொல்கிறது. (சங்கீதம் 2:10, 11) நீதிமன்றங்களில் யெகோவாவின் சாட்சிகள் அடிக்கடி தவறாக குற்றம் சாட்டப்பட்ட சமயங்களில் நீதிபதிகள் நம் வணக்க சுயாதீனத்திற்கு ஆதரவு காண்பித்திருக்கிறார்கள்; அதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என்றாலும் நீதிபதிகள் சிலர் விரோதிகளின் செல்வாக்குக்கு அடிபணிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட நீதிபதிகளை “எச்சரிக்கையாயிருங்கள்” என பைபிள் கூறுகிறது.
19 யெகோவாவின் சட்டங்களே மிகவுயர்ந்த சட்டங்கள் என்பதை நீதிபதிகள் உணர வேண்டும். நீதிபதிகள் உட்பட மனிதர் யாவருமே யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் என்பதையும் அவர்கள் மறந்துவிடக் கூடாது. (ரோமர் 14:10) நம்மைப் பொறுத்தவரை, மனித நீதிபதியிடமிருந்து நியாயம் கிடைத்தாலும் சரி கிடைக்காவிட்டாலும் சரி, நாம் தைரியமாயிருக்க முடியும்; ஏனெனில் யெகோவா நமக்கு பக்கத்துணையாக இருக்கிறார். “அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]” என பைபிள் கூறுகிறது.—சங்கீதம் 2:12.
20. துன்புறுத்துதலையும் அவதூறையும் சகிக்க நேர்ந்தாலும் நாம் ஏன் சந்தோஷமுள்ளவர்களாக இருக்கலாம்?
20 “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் [“சந்தோஷமுள்ளவர்களாயிருப்பீர்கள்,” NW]; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே” என இயேசு தம் மலைப் பிரசங்கத்தில் கூறினார். (மத்தேயு 5:11, 12) துன்புறுத்துதல் இனிமையாக இருப்பதில்லை என்பது உண்மைதான், ஆனால் மீடியாவில் அவதூறான செய்திகளை பரப்புவது உட்பட பல விதமான துன்புறுத்துதல்களின் மத்தியிலும் உறுதியாக நிலைநிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் உறுதியாக நிலைநிற்கிறோம் என்றால் யெகோவாவைப் பிரியப்படுத்துகிறோம் என்று அர்த்தம்; அதற்கான பலனையும் நாம் பெறுவோம். தைரியமாக நிலைநிற்பது, நமக்கு உண்மையான விசுவாசம் இருப்பதைக் காட்டுகிறது; கடவுளுடைய அங்கீகாரம் இருப்பதையும் உறுதிப்படுத்துகிறது. சொல்லப்போனால் யெகோவாவை முழுமையாக நம்புவதையே காட்டுகிறது. அத்தகைய நம்பிக்கை ஒரு கிறிஸ்தவருக்கு அதிமுக்கியம். இதைத்தான் அடுத்த கட்டுரை கலந்தாராய்கிறது.
நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• தைரியத்தை தேவைப்படுத்தும் என்ன சூழ்நிலைகள் இன்று இருக்கின்றன?
• தைரியத்தை நாம் எப்படி வளர்க்கலாம்?
• தைரியத்திற்கு சிறந்த முன்மாதிரிகளாக திகழ்ந்த சிலர் யாவர்?
• தைரியமாக செயல்பட நாம் ஏன் விரும்புகிறோம்?
[பக்கம் 9-ன் படங்கள்]
சீமோன் அர்னால்ட் (இப்போது லீப்ஸ்டர்), ஜெர்மனி; விட்டஸ் மடானா, மலாவி; லிடியா மற்றும் ஆலக்ஸி குர்டாஸ், உக்ரைன்—இவர்கள் யாவரும் தைரியத்தோடு பொல்லாங்கனை எதிர்த்தவர்கள்
[பக்கம் 10-ன் படங்கள்]
நற்செய்தியைக் குறித்து நாம் வெட்கப்படுவதில்லை
[பக்கம் 11-ன் படம்]
காவலிலும் பவுல் காண்பித்த தைரியம் நற்செய்தியை இன்னும் அதிகமாக அறிவிக்க உதவியது
[பக்கம் 12-ன் படம்]
நம்முடைய வேதப்பூர்வ நிலைநிற்கையை ஒரு நீதிபதியிடம் தைரியமாக சொல்வது நாம் முக்கியமான ஒரு செய்தியை அறிவிப்பதைக் குறிக்கிறது