உண்மையான சந்தோஷத்திற்கு பைபிள் வழிகாட்டுகிறது
பைபிள் ஒரு மருத்துவ நூல் அல்ல, என்றாலும் ஒருவருடைய மன ஆரோக்கியத்தின் மீதும் உடல் ஆரோக்கியத்தின் மீதும் உணர்ச்சிகள்—நேர்மறையான உணர்ச்சிகள் அல்லது எதிர்மறையான உணர்ச்சிகள்—ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி அது சொல்கிறது. “மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்” என பைபிள் சொல்கிறது. மேலும், “ஆபத்துக் காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்றும் சொல்கிறது. (நீதிமொழிகள் 17:22, பொது மொழிபெயர்ப்பு; 24:10) மனச்சோர்வு நம்முடைய சக்தியை உறிஞ்சி, நம்மை பலவீனமாக்கிவிடலாம், மாற வேண்டும் அல்லது உதவிபெற வேண்டும் என்ற ஆசையைக் கெடுத்துவிடலாம்.
சோர்வு ஒருவருடைய ஆன்மீகத்தையும் பாதிக்கலாம். லாயக்கற்றவர்களென உணருகிறவர்கள் தாங்கள் ஒருபோதும் கடவுளுடன் நல்ல உறவை அனுபவிக்க முடியாது என்றும், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற முடியாது என்றும் அடிக்கடி நினைக்கிறார்கள். முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சிமோன், “கடவுள் என்னை ஏற்றுக்கொள்வாரா” என சந்தேகப்பட்டாள். ஆனால், கடவுளுடைய வார்த்தையான பைபிளை நாம் ஆராய்ந்து பார்க்கையில், கடவுளைப் பிரியப்படுத்த கடினமாக முயலுகிறவர்கள்மீது அவர் பிரியம் வைக்கிறார் என்பதை தெரிந்துகொள்கிறோம்.
கடவுள் நிஜமாகவே அக்கறை காட்டுகிறார்
“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என பைபிள் கூறுகிறது. ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை [கடவுள்] புறக்கணிப்பதில்லை,’ ஆனால் ‘பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிப்பதாகவும் நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிப்பதாகவும்’ வாக்குறுதி அளிக்கிறார்.—சங்கீதம் 34:18; 51:17; ஏசாயா 57:15.
கடவுள் தமது ஊழியர்களிடமுள்ள நல்ல குணங்களைப் பார்க்கிறார் என்பதை ஒரு முறை இயேசு தமது சீஷர்களுக்கு விளக்குவதன் அவசியத்தைக் கண்டார். ஓர் உதாரணத்தின் வாயிலாக அவர் அதை விளக்கினார்; அதாவது, ஒரு சிட்டுக்குருவி கீழே விழுவதையும் கடவுள் கவனிக்கிறார் என கூறினார்—மனிதர்களோ இதை துளியும் பொருட்படுத்துவதில்லை. மனிதர்களைப் பற்றிய மிக நுணுக்கமான விவரத்தையும், அதாவது அவர்களுடைய தலைமயிர்களின் எண்ணிக்கையையும், கடவுள் தெரிந்திருப்பதாக கூறினார். கடைசியில் இயேசு, ‘பயப்படாதிருங்கள்; அநேகம் சிட்டுக்குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாய் இருக்கிறீர்கள்’ என்று சொல்லி தமது உதாரணத்தை முடித்தார். (மத்தேயு 10:29-31)a மனிதர்கள் தங்களைப் பற்றி என்ன நினைத்தாலும்சரி, விசுவாசமுள்ளவர்கள் கடவுளுடைய பார்வையில் விலையேறப் பெற்றவர்கள் என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். சொல்லப்போனால், “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும்” அப்போஸ்தலன் பேதுரு நமக்கு நினைப்பூட்டுகிறார்.—அப்போஸ்தலர் 10:34, 35.
சமநிலையான கண்ணோட்டத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
நம்மைப் பற்றி நாம் எப்படி உணருகிறோம் என்பதில் சமநிலையான கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை உந்துவிக்கிறது. ஆவியின் ஏவுதலால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.”—ரோமர் 12:3.
தற்பெருமை கொள்ளும் அளவுக்கு நம்மைப் பற்றி நாம் மிதமிஞ்சி எண்ண விரும்ப மாட்டோம்; அதேபோல், நம்மைப் பற்றி நாம் மிகத் தாழ்வாகவும் எண்ணக் கூடாது. மாறாக, நம்மைப் பற்றி நியாயமான கண்ணோட்டத்தை—நம்முடைய பலங்களையும் பலவீனங்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் கண்ணோட்டத்தை—வளர்த்துக்கொள்வதே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். இதைக் குறித்து கிறிஸ்தவ பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறினார்: “நான் மகா மோசமானவளும் அல்ல, வானத்திலிருந்து குதித்தவளும் அல்ல. என்னிடம் நல்ல குணங்களும் இருக்கின்றன, கெட்ட குணங்களும் இருக்கின்றன, எல்லோரும் அப்படித்தான்.”
ஆனால், இப்படிப்பட்ட சமநிலையான கண்ணோட்டத்தைப் பெறுவது சுலபமல்ல. பல ஆண்டுகளாக நம்மைப் பற்றி நமக்கு இருக்கும் மிதமீறிய எதிர்மறையான மனப்பான்மையை ஒழிப்பதற்குப் பெருமுயற்சி தேவைப்படலாம். என்றாலும், கடவுளுடைய உதவியால் நம்முடைய சுபாவத்தையும் வாழ்க்கையைப் பற்றிய நம்முடைய கண்ணோட்டத்தையும் மாற்ற முடியும். சொல்லப்போனால், இதை செய்யும்படித்தான் கடவுளுடைய வார்த்தை நம்மை உந்துவிக்கிறது. “முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை [அதாவது, சுபாவத்தை] நீங்கள் களைந்துபோட்டு, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் [அதாவது, சுபாவத்தை] தரித்துக்கொள்ளுங்கள்.”—எபேசியர் 4:22-24.
‘உள்ளத்தின் ஆவியை,’ அதாவது நம்முடைய மனதை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை, மாற்றுவதற்கு முயற்சி செய்வதன் மூலம், நம்முடைய சுபாவத்தை எதிர்மறையான ஒன்றிலிருந்து நம்பிக்கையூட்டும் ஒன்றாக மாற்ற முடியும். முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்ட லீனா இதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். யாருமே தன்னை நேசிக்க மாட்டார்கள், தனக்கு உதவ மாட்டார்கள் என்ற எண்ணத்தை அவளே விட்டொழித்தால் தவிர, தன்னைப் பற்றிய உணர்ச்சிகளை எதுவுமே மாற்றாது அல்லது மாற்ற முடியாது என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தாள். இத்தகைய மாற்றத்தைச் செய்வதற்கு பைபிள் தரும் என்ன நடைமுறையான ஆலோசனை லீனாவுக்கும் சிமோனுக்கும் மற்றவர்களுக்கும் உதவியது?
சந்தோஷத்தை அதிகரிக்க உதவும் பைபிள் நியமங்கள்
“கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்.” (சங்கீதம் 55:22) மிக முக்கியமாக, உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைய ஜெபம் உதவி செய்யும். சிமோன் கூறுகிறாள்: “நான் சோர்வாக இருக்கும்போதெல்லாம் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபிக்கிறேன். எல்லா சூழ்நிலைகளிலும் அவருடைய பலத்தையும் வழிநடத்துதலையும் நான் அனுபவித்திருக்கிறேன்.” யெகோவாமீது நம்முடைய பாரத்தைப் போட்டுவிடும்படி சங்கீதக்காரன் நம்மை உந்துவிக்கிறபோது, யெகோவா நம்மீது அக்கறை காட்டுகிறார் என்பதை நினைப்பூட்டுகிறார். அதோடு, தனிப்பட்ட நபராக அவருடைய உதவியையும் ஆதரவையும் பெற தகுதியுடையவர்களாக நம்மை கருதுகிறார் என்பதையும் நமக்கு நினைப்பூட்டுகிறார். பொ.ச. 33 பஸ்கா பண்டிகையின் இரவில், இயேசுவின் சீஷர்கள் துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள், ஏனென்றால் அவர்களைவிட்டு தாம் பிரியப்போவதைப் பற்றி இயேசு சொல்லியிருந்தார். பிதாவிடம் ஜெபிக்கும்படி அவர்களை அவர் உற்சாகப்படுத்தினார், அதோடு அவர் இவ்வாறு கூறினார்: “கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.”—யோவான் 16:23, 24.
‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்.’ (அப்போஸ்தலர் 20:35, NW) இயேசு கற்பித்தப்படி, வாழ்க்கையில் உண்மையான சந்தோஷத்தைக் கண்டடைவதற்குக் கொடுப்பதே முக்கியமான வழியாகும். இந்த பைபிள் சத்தியத்தைப் பின்பற்றுவது, நம்முடைய குறைபாட்டின் மீதல்ல, ஆனால் பிறருடைய தேவைகளின் மீதே கவனத்தை ஒருமுகப்படுத்த நமக்கு உதவுகிறது. பிறருக்கு உதவி செய்கையில் அவர்கள் நமக்கு நன்றி தெரிவிப்பதைப் பார்க்கும்போது, நம்மைப் பற்றி நாம் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். பைபிள் தரும் நற்செய்தியை மற்றவர்களுடன் தவறாமல் பகிர்ந்துகொள்வது தனக்கு இரண்டு வழிகளில் உதவி செய்வதாக லீனா உறுதியாக நம்புகிறாள். “முதலாவதாக, இயேசு சொன்ன சந்தோஷத்தையும் திருப்தியையும் அது எனக்குத் தருகிறது. இரண்டாவதாக, மற்றவர்கள் மெச்சிப் பேசும்போது, அது எனக்குச் சந்தோஷத்தைத் தருகிறது” என அவள் கூறுகிறாள். நம்மையே தாராளமாக அளிக்கும்போது, “எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்” என நீதிமொழிகள் 11:25-ல் பதிவு செய்யப்பட்டுள்ள உண்மையை நாம் அனுபவத்தில் தெரிந்துகொள்வோம்.
“சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.” (நீதிமொழிகள் 15:15) நம்மையும் நம்முடைய சூழ்நிலைகளையும் எப்படி கருதுகிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. எல்லாவற்றையும் எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே பார்த்து சோர்ந்தும் போகலாம், அல்லது நம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்த்து ‘மனரம்மியமாகவும்,’ அதாவது விருந்தில் இருப்பது போல் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். சிமோன் இவ்வாறு கூறுகிறாள்: “முடிந்தவரை நம்பிக்கையான மனநிலையுடன் இருப்பதற்கே நான் முயற்சி செய்கிறேன். தனிப்பட்ட படிப்பிலும் ஊழியத்திலும் என்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறேன், தவறாமல் ஜெபிக்கிறேன். அதோடு, எப்போதும் நம்பிக்கையான மனநிலையுடைய ஆட்களோடே இருப்பதற்கு முயற்சி செய்கிறேன். உணர்ச்சி ரீதியில் மற்றவர்களைத் தாங்கவும் உதவி செய்யவுமே முயலுகிறேன்.” இப்படிப்பட்ட மனப்பான்மை உண்மையான மகிழ்ச்சிக்கு வழிநடத்துகிறது; பைபிளும் அதைத்தான் உந்துவிக்கிறது: “நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.”—சங்கீதம் 32:11.
“சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” (நீதிமொழிகள் 17:17) அன்பானவரிடம் அல்லது நம்பகமானவரிடம் நம் மனதிலுள்ளதைக் கொட்டுவது எதிர்மறையான உணர்ச்சிகளைப் போக்க நமக்கு உதவுகிறது, அவை நம்மை திணறடிப்பதற்கு முன்பு அவற்றை விரட்டுவதற்கு உதவுகிறது. மற்றவர்களுடன் பேசுவது காரியங்களை சமநிலையான, நம்பிக்கையான கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு உதவுகிறது. “உணர்ச்சிகளைக் கொட்டி மனம்விட்டுப் பேசுவது மிகவும் பயனுள்ளது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லுங்கள். பிறரிடம் உங்கள் மனதிலுள்ளதை சொன்னாலே போதும்” என சிமோன் கூறுகிறார். அப்படி செய்யும்போது பின்வரும் நீதிமொழி எவ்வளவு உண்மை என்பதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள். “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்” என அது சொல்கிறது.—நீதிமொழிகள் 12:25.
நீங்கள் என்ன செய்யலாம்
பைபிளில் ஏராளமாக காணப்படும் அருமையான நடைமுறை நியமங்களில் சிலவற்றையே நாம் இப்பொழுது சிந்தித்தோம். இவை எதிர்மறையான உணர்ச்சிகளை வென்று உண்மையான மகிழ்ச்சியைக் காண நமக்கு உதவும். லாயக்கற்றவன்(ள்) என்ற உணர்ச்சிகளோடு போராடுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளைக் கூர்ந்து ஆராயும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். உங்களைப் பற்றியும் கடவுளோடுள்ள உங்களுடைய உறவைப் பற்றியும் எதார்த்தமான, சமநிலையான உணர்ச்சியை வளர்த்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய வார்த்தை தரும் வழிநடத்துதலால் நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் மகிழ்ச்சியைக் காண வேண்டும் என்பதே எங்களுடைய உள்ளப்பூர்வமான விருப்பம்.
[அடிக்குறிப்பு]
a 22, 23-ம் பக்கங்களில் இந்த வசனங்கள் விளக்கமாக ஆராயப்படுகின்றன.
[பக்கம் 7-ன் படம்]
பைபிள் நியமங்களின்படி வாழ்வது சந்தோஷத்தைப் பெற உதவுகிறது