பொய் வணக்கத்தை விட்டுவிலகுங்கள்!
‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.’—2 கொரிந்தியர் 6:17.
1. நல்ல உள்ளம் படைத்த அநேகர் எதைப் பற்றி தெரியாதிருக்கிறார்கள்?
நல்ல உள்ளம் படைத்த அநேகருக்கு கடவுளைப் பற்றிய சத்தியமோ மனிதருடைய எதிர்காலத்தைப் பற்றியோ தெரியாது. மிக முக்கியமான இந்த ஆன்மீக விஷயங்களுக்குப் பதில் தெரியாததால், அவர்கள் ஒரே குழப்பத்திலும் எந்தவித நிச்சயமில்லாமலும் இருக்கிறார்கள். கோடிக்கணக்கான மக்கள் படைப்பாளருக்குப் பிடிக்காத மூடநம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். ஒருவேளை உங்களுடைய அக்கம்பக்கத்தாரும் உறவினர்களும்கூட எரிநரகம், திரித்துவம், அழியாத ஆத்துமா போன்ற பொய்ப் போதனைகளை நம்புகிறவர்களாக இருக்கலாம்.
2. மதத் தலைவர்கள் என்ன செய்திருக்கிறார்கள், அதன் விளைவு என்ன?
2 அநேகருக்கு கடவுளைப் பற்றி தெரியாதிருப்பதற்கு காரணம் என்ன? மதம்தான் காரணம்; முக்கியமாக, கடவுளுடைய கருத்துகளுக்கு முரணாக போதித்திருக்கிற மத அமைப்புகளும் மதத் தலைவர்களும்தான் காரணம்; இது ஆச்சரியம் அளிக்கிறது, அல்லவா? (மாற்கு 7:7, 8) அதன் விளைவாக, அநேகர் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்; தாங்கள் உண்மைக் கடவுளையே வணங்குவதாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் உண்மையில் அவரை அவமதிக்கவே செய்கிறார்கள். எனவே, இந்த வருந்தத்தக்க நிலைமைக்கு பொய் மதமே முக்கிய காரணம்.
3. பொய் மதத்தை ஊக்குவிக்கிற பிரதான புள்ளி யார், அவனை பைபிள் எப்படி விவரிக்கிறது?
3 பொய் மதம் எனும் இந்தத் திரைக்குப் பின்னால், மனித கண்களால் காணமுடியாத ஒருவன் இருக்கிறான். அவனைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.’ (2 கொரிந்தியர் 4:4) ‘இப்பிரபஞ்சத்தின் தேவன்’ வேறு யாருமல்ல, பிசாசாகிய சாத்தானே. அவன்தான் பொய் வணக்கத்தை ஊக்குவிக்கிற பிரதான புள்ளி. “சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே” என பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 11:14, 15) சாத்தான் தீய காரியங்களை நல்லவைபோல் தோன்றச் செய்கிறான், அதோடு பொய்களை நம்ப வைத்து மக்களை ஏமாற்றுகிறான்.
4. பூர்வ இஸ்ரவேலருக்கு பொய்த் தீர்க்கதரிசிகளைப் பற்றி கடவுளுடைய நியாயப்பிரமாணம் என்ன சொன்னது?
4 ஆகவே, பொய் மதத்தை பைபிள் கடுமையாகக் கண்டனம் செய்வதில் ஆச்சரியமில்லை! உதாரணமாக, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்கு பொய்த் தீர்க்கதரிசிகளைப் பற்றி நியாயப்பிரமாணத்தில் நேரடியாகவே எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. பொய்ப் போதனைகளையும் பொய்க் கடவுட்களை வணங்குவதையும் ஊக்குவித்த எவரும் ‘யெகோவாவுக்கு விரோதமான துரோகப் பேச்சைப் பேசினதற்காக கொலை செய்யப்பட’ வேண்டியிருந்தது. ‘தீமையை தங்களிடத்திலிருந்து விலக்கும்படி’ இஸ்ரவேலருக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. (உபாகமம் 13:1-5) ஆம், பொய் மதத்தைத் தீமையாகவே யெகோவா கருதுகிறார்.—எசேக்கியேல் 13:3.
5. இன்று நாம் எந்த எச்சரிக்கைகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும்?
5 யெகோவாவைப் போல் இயேசு கிறிஸ்துவும் அவரது அப்போஸ்தலர்களும் பொய் மதத்தை வெறுத்தனர். இயேசு தம் சீஷர்களை இவ்வாறு எச்சரித்தார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.” (மத்தேயு 7:15; மாற்கு 13:22, 23) “சத்தியத்தை . . . அடக்கி வைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது” என பவுல் எழுதினார். (ரோமர் 1:18) அப்படியானால், இந்த எச்சரிக்கைகளுக்கு உண்மைக் கிறிஸ்தவர்கள் கவனம் செலுத்துவதும், கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அமுக்கிப்போடுகிற அல்லது பொய்ப் போதனைகளைப் பரப்புகிற எவரிடமிருந்தும் விலகியிருப்பதும் எவ்வளவு முக்கியம்!—1 யோவான் 4:1.
“மகா பாபிலோனை” விட்டு வெளியே வாருங்கள்
6. ‘மகா பாபிலோனை’ பைபிள் எப்படி சித்தரிக்கிறது?
6 பைபிளில் வெளிப்படுத்துதல் புத்தகம் பொய் மதத்தை எப்படி வருணிக்கிறது என்பதைப் பாருங்கள். குடிபோதையிலிருக்கும் ஒரு வேசியாக அதை சித்தரிக்கிறது. பல ராஜ்யங்கள்மீதும் அவற்றின் குடிமக்கள்மீதும் அதற்கு அதிகாரம் இருக்கிறது. அடையாள அர்த்தமுள்ள இந்தப் பெண் பல ராஜாக்களோடு வேசித்தனம் பண்ணுகிறாள், கடவுளுடைய உண்மை வணக்கத்தாருடைய இரத்தத்தைக் குடித்து வெறித்திருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 17:1, 2, 6, 18) அவளுடைய நெற்றியில் ஒரு பெயர் எழுதப்பட்டிருக்கிறது, ஆபாசமும் அருவருப்புமான அவளுடைய நடத்தைக்கு அப்பெயர் பொருத்தமாக இருக்கிறது. “மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய்” என்பதே அப்பெயர்.—வெளிப்படுத்துதல் 17:5.
7, 8. பொய் மதம் எவ்வாறு வேசித்தனம் பண்ணியிருக்கிறது, அதன் விளைவுகள் என்ன?
7 மகா பாபிலோனைப் பற்றிய பைபிளின் விவரிப்பு அனைத்து பொய் மதங்களுக்கும் பொருந்துகிறது. ஆயிரக்கணக்கில் இருக்கும் இந்த மதங்கள் அனைத்தும் ஐக்கியப்பட்ட ஓர் உலக அமைப்பாக இல்லாவிட்டாலும், நோக்கத்திலும் செயலிலும் அவை ஒன்றுபட்டிருக்கின்றன. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் ஒழுக்கங்கெட்ட ஒரு பெண்ணாக வர்ணிக்கப்பட்டுள்ள இந்தப் பொய் மதத்திற்கு அரசாங்கங்கள்மீது பெரும் செல்வாக்கு இருக்கிறது. திருமண உறுதிமொழிகளை மீறி நடக்கும் ஒரு பெண்ணைப் போல, பொய் மதமும் பல அரசாங்கங்களோடு மாறி மாறி கூட்டுச்சேருவதன் மூலம் வேசித்தனம் பண்ணியிருக்கிறது. “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என சீஷனாகிய யாக்கோபு எழுதினார்.—யாக்கோபு 4:4.
8 பொய் மதமும் அரசாங்கங்களும் கூட்டுச்சேர்ந்ததன் விளைவாக மனிதர்கள் அதிக துன்பத்தை அனுபவித்திருக்கிறார்கள். “மதமும் அரசியலும் கைகோர்த்ததால் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டதற்கு அநேக உதாரணங்கள் உலக வரலாற்றில் இருக்கின்றன” என ஆப்பிரிக்க அரசியல் ஆய்வாளர் டாக்டர் ஓனீனா மான்கூ குறிப்பிட்டார். சமீபத்தில் ஒரு செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “மதத்தின் பெயரில்தான் இன்று பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது, படுமோசமான பூசல்களும் நடந்திருக்கிறது.” மதத் தூண்டுதலால் ஏற்பட்ட மோதல்கள் கோடிக்கணக்கானோரை பலிவாங்கியிருக்கிறது. கடவுளுடைய உண்மை ஊழியர்களையும்கூட மகா பாபிலோன் துன்புறுத்தி கொலை செய்துள்ளது, அடையாள அர்த்தத்தில் சொன்னால், அவர்களுடைய இரத்தத்தைக் குடித்து வெறித்திருக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:24.
9. பொய் வணக்கத்தை யெகோவா வெறுக்கிறார் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் எவ்வாறு குறிப்பிடுகிறது?
9 மகா பாபிலோனுக்குச் சம்பவிக்கப்போவதாக பைபிள் சொல்வதை வைத்தே பொய் வணக்கத்தை யெகோவா வெறுக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். வெளிப்படுத்துதல் 17:16 இவ்வாறு குறிப்பிடுகிறது: “நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள்.” முதலாவதாக, ஒரு பெரிய மிருகம் அவளைப் பீறிக் கொன்றுபோடுகிறது, பிறகு அவளுடைய மாம்சத்தை தின்கிறது. அதன்பின், எஞ்சியிருப்பவை எல்லாம் முற்றிலும் சுட்டெரித்துப் போடப்படுகிறது. இத்தகைய நடவடிக்கையைத்தான் பொய் மதத்திற்கு எதிராக உலக அரசாங்கங்கள் சீக்கிரத்தில் எடுக்கவிருக்கின்றன. இதைச் செய்வதற்கு கடவுள் அவற்றைத் தூண்டுவார். (வெளிப்படுத்துதல் 17:17) பொய்மத உலக பேரரசான மகா பாபிலோனுக்கு அழிவு நிச்சயம். அவள் ‘இனி ஒருபோதும் காணப்படாமற்போவாள்.’—வெளிப்படுத்துதல் 18:21.
10. மகா பாபிலோன் சம்பந்தமாக உண்மை வணக்கத்தார் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்?
10 மகா பாபிலோன் சம்பந்தமாக உண்மை வணக்கத்தார் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? பைபிள் மிகத் தெளிவாக இவ்வாறு கட்டளையிடுகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” உயிர்பிழைக்க விரும்புகிறவர்கள் காலம் கடந்து போகும்முன் பொய் மதத்தைவிட்டு வெளியே வர வேண்டும். இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, கடைசி நாட்களில் அநேகர் தம்மைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொள்வார்கள் என முன்னறிவித்தார். (மத்தேயு 24:3-5) அப்படிப்பட்டவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்.” (மத்தேயு 7:23) ஆம், இப்போது ராஜாவாக முடிசூட்டப்பட்டிருக்கும் இயேசு கிறிஸ்து, பொய் மதத்தை நிராகரித்துவிட்டார்.
பொய் வணக்கத்தை விட்டுவிலகுதல்—எப்படி?
11. பொய் வணக்கத்தை விட்டுவிலகுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
11 பொய் மதப் போதனைகளை உண்மைக் கிறிஸ்தவர்கள் அறவே விட்டொழிப்பதன் மூலம் பொய் வணக்கத்தை விட்டு முற்றிலும் விலகுகிறார்கள். ரேடியோவிலும் டிவியிலும் ஒலி/ஒளி பரப்பப்படும் ஆன்மீக நிகழ்ச்சிகளை நாம் கவனிக்காதிருப்பதை இது குறிக்கிறது; கடவுளையும் அவரது வார்த்தையையும் பற்றி பொய்களைப் பரப்புகிற மத பிரசுரங்களை நாம் வாசிக்காதிருப்பதையும் குறிக்கிறது. (சங்கீதம் 119:37) பொய் மதத்தோடு தொடர்புடைய எந்தவொரு அமைப்பும் நடத்துகிற பார்ட்டிகளில் அல்லது பொழுதுபோக்குகளில் கலந்துகொள்ளாதிருப்பதும்கூட ஞானமானது. அதுமட்டுமல்ல, பொய் வணக்கத்தை நாம் எந்த விதத்திலும் ஆதரிப்பதில்லை. (1 கொரிந்தியர் 10:21) இப்படி செய்வது, ‘லெளகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் நம்மைக் கொள்ளைகொண்டு போகாதபடி’ நம்மைப் பாதுகாக்கிறது; அவை, “மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.”—கொலோசெயர் 2:8.
12. பொய் மத அமைப்புகளோடு வைத்திருக்கும் தொடர்பை ஒருவர் எப்படி துண்டித்துக்கொள்ளலாம்?
12 பொய் மத அமைப்பைச் சேர்ந்த ஒருவர் யெகோவாவின் சாட்சியாக மாற விரும்பினால் என்ன செய்ய வேண்டும்? பொதுவாக, ராஜினாமா கடிதம் எழுதிக்கொடுப்பதன் மூலம் பொய் மதத்தின் அங்கத்தினராக இருக்க விரும்பவில்லை என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறார். பொய் மதத்தின் எந்தவித கறையையும் முற்றிலும் களைவதற்கு உறுதியான நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். பொய் மதத்திற்கும் தனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை அந்த மத அமைப்பும் அவரைப் பார்க்கிற மற்றவர்களும் நன்கு புரிந்துகொள்ளும் அளவுக்கு அவருடைய செயல்கள் இருக்க வேண்டும்.
13. பொய் வணக்கத்தை விட்டுவிலகுவது சம்பந்தமாக பைபிள் என்ன ஆலோசனை கொடுக்கிறது?
13 “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 6:14-17) பொய் வணக்கத்தை விட்டுவிலகுவதன் மூலம் இந்த வார்த்தைகளுக்கு நாம் கீழ்ப்படிகிறோம். பொய் வணக்கத்தாரையும் நாம் விட்டுவிலக வேண்டுமென்று பவுல் சொன்னாரா?
‘ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்’
14. பொய் வணக்கத்தாரை நாம் அறவே ஒதுக்கிவிட வேண்டுமா? விளக்கவும்.
14 பொய் வணக்கத்தாருடன் உண்மை வணக்கத்தார் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளக் கூடாதா? யெகோவாவை வணங்காத ஆட்களிடம் நாம் பழகவே கூடாதா? அப்படியல்ல. மிக முக்கியமான இரண்டு கட்டளைகளில் இரண்டாவது கட்டளை இவ்வாறு குறிப்பிடுகிறது: “உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக.” (மத்தேயு 22:39) ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை பிறரிடம் சொல்லும்போது, நாம் உண்மையில் அவர்களிடம் அன்பு காட்டுகிறோம். அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்தி, பொய் வணக்கத்தை விட்டுவிலகுவதன் அவசியத்தை உணர்த்தும்போதும் நாம் அன்பு காட்டுகிறோம்.
15. ‘உலகத்தின் பாகமாய் இல்லாதிருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?
15 நாம் பிறருக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தாலும், இயேசுவின் சீஷர்களாக நாமும் “இந்த உலகத்தின் பாகமானவர்களல்ல.” (யோவான் 15:19, NW) ‘உலகம்’ என்ற இந்த வார்த்தை கடவுளிடமிருந்து விலகியிருக்கும் மனித சமுதாயத்தைக் குறிக்கிறது. (எபேசியர் 4:17-19; 1 யோவான் 5:19) யெகோவாவை அவமதிக்கிற மனப்பான்மையையும் பேச்சையும் நடத்தையையும் அறவே தவிர்க்கும் அர்த்தத்தில் நாம் இந்த உலகத்திலிருந்து பிரிந்திருக்கிறோம். (1 யோவான் 2:15-17) அதுமட்டுமல்ல, “கெட்ட சகவாசங்கள் நல்ல பழக்கங்களைக் கெடுக்கும்” என்ற நியமத்தின்படி, கிறிஸ்தவ தராதரங்களுக்கு இசைவாக வாழாதவர்களிடம் நெருங்கிப் பழகுவதைத் தவிர்க்கிறோம். (1 கொரிந்தியர் 15:33, NW) உலகத்தின் பாகமாய் இல்லாதிருப்பது என்பது “உலகத்தால் கறைபடாதபடி” நம்மைக் காத்துக்கொள்வதைக் குறிக்கிறது. (யாக்கோபு 1:27) ஆகவே, உலகத்திலிருந்து பிரிந்திருப்பது என்பது மற்றவர்களிடமிருந்து எல்லாக் காரியங்களிலும் முற்றிலும் விலகியிருக்க வேண்டுமென அர்த்தப்படுத்துவதில்லை.—யோவான் 17:15, 16; 1 கொரிந்தியர் 5:9, 10.
16, 17. பைபிள் சத்தியங்களை அறியாதவர்களிடம் கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
16 அப்படியானால், பைபிள் சத்தியங்களை அறியாதவர்களிடம் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? கொலோசெய சபைக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்ல வேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:5, 6) அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் [“ஆழ்ந்த மரியாதையோடும்,” NW] உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.” (1 பேதுரு 3:15) ‘ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கும்படி’ கிறிஸ்தவர்களுக்கு பவுல் ஆலோசனை கொடுத்தார்.—தீத்து 3:2.
17 யெகோவாவின் சாட்சிகளான நாம், பிறரிடத்தில் அநாகரிகமாகவோ அகங்காரமாகவோ நடந்துகொள்வதில்லை. மற்ற மதத்தவரைப் பற்றி உண்மையில் மதிப்புக்குறைவாக பேசுவதில்லை. மாறாக, வீட்டுக்காரரோ, அயலகத்தாரோ, சக ஊழியரோ நம்மிடம் கடுகடுப்பாக அல்லது தரக்குறைவாக பேசினாலும்கூட நாம் சாதுரியமாக நடந்துகொள்கிறோம்.—கொலோசெயர் 4:6; 2 தீமோத்தேயு 2:24.
‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிருங்கள்’
18. மீண்டும் பொய் வணக்கத்திற்கே செல்வோர் ஆன்மீக ரீதியில் எத்தகைய வருந்தத்தக்க நிலையை அனுபவிக்கிறார்கள்?
18 ஒருவர் பைபிள் சத்தியங்களைக் கற்ற பிறகு, மீண்டும் பொய் வணக்கத்திற்கே செல்வது எவ்வளவு வருந்தத்தக்கது! இதனால் ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக் கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். . . . நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.”—2 பேதுரு 2:20-22.
19. நம்முடைய ஆன்மீகத்திற்கு எதுவும் ஆபத்து உண்டாக்காதபடி நாம் ஜாக்கிரதையாக இருப்பது ஏன் அவசியம்?
19 நம்முடைய ஆன்மீகத்திற்கு எதுவும் ஆபத்து உண்டாக்காதபடி நாம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். எப்போதுமே நமக்கு முன் ஆபத்துகள் இருக்கின்றன. ஆகவே, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே . . . சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டுவிலகிப்போவார்கள்.” (1 தீமோத்தேயு 4:1) “பிற்காலங்களிலே” என அவர் குறிப்பிடுகிற காலத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். பொய் வணக்கத்தை விட்டுவிலகாதவர்கள், ‘மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாய்’ இருப்பார்கள்.—எபேசியர் 4:12, 14.
20. பொய் மதத்தின் தீய செல்வாக்கிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
20 பொய் மதத்தின் தீய செல்வாக்கிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்? யெகோவா நமக்கு கொடுத்திருக்கும் எல்லாவற்றையும் நினைத்துப் பாருங்கள். அவருடைய வார்த்தையாகிய பைபிளை அளித்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ வாயிலாக ஆன்மீக உணவையும் ஏராளமாக அளித்திருக்கிறார். (மத்தேயு 24:45) நாம் சத்தியத்தில் முன்னேறி வருகையில், ‘பூரண வயதுள்ளவர்களுக்குரிய பலமான ஆகாரத்திடம்’ ஆர்வம் காட்ட வேண்டும், அல்லவா? ஆன்மீக சத்தியங்கள் கற்பிக்கப்படுகிற இடத்திற்கு கூடிவரும் ஆவலை வளர்க்க வேண்டும், அல்லவா? (எபிரெயர் 5:13, 14; சங்கீதம் 26:8) நாம் கேட்ட ‘ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைத் தொடர்ந்து கைக்கொள்வதற்கு’ யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள திடத்தீர்மானமாயிருப்போமாக. (2 தீமோத்தேயு 1:13) இப்படி செய்தால், பொய் வணக்கத்தை நாம் விட்டுவிலக முடியும்.
என்ன கற்றுக்கொண்டீர்கள்?
• “மகா பாபிலோன்” என்றால் என்ன?
• பொய் மதத்தை விட்டுவிலக என்ன செய்ய வேண்டும்?
• நம் ஆன்மீகத்திற்கு ஆபத்து உண்டாக்குகிற எவற்றைத் தவிர்க்க வேண்டும்?
[பக்கம் 28-ன் படம்]
‘மகா பாபிலோன்’ ஒழுக்கங்கெட்ட பெண்ணாக ஏன் சித்தரிக்கப்பட்டிருக்கிறாள் தெரியுமா?
[பக்கம் 29-ன் படம்]
‘மகா பாபிலோனுக்கு’ அழிவு நிச்சயம்
[பக்கம் 31-ன் படம்]
பிற மதத்தவரிடம் ‘சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்’ நடந்துகொள்கிறோம்